காதலைத் தவிர வேறொன்றுமில்லை - சினிமா விமர்சனம்

09-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்னாச்சு இயக்குநர் செல்வபாரதிக்கு..? ‘வசீகரா’, ‘பிரியமானவளே’, ‘நினைத்தேன் வந்தாய்’ போன்ற  படங்களை இயக்கியவர் இப்படியொரு சறுக்கலை கொடுத்திருக்கிறாரே..? அதிர்ச்சியாக இருக்கிறது..!

தன்னுடைய சொந்த அக்காளின் காதலால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள.. சிறு வயதிலேயே தனித்துவிடப்படுகிறார் ஹீரோ யுவன். இதனாலேயே காதல் மீதும், காதலர்கள் மீதும் கடும் வெறுப்பு யுவனுக்கு. இப்போது ஒரு பத்திரிகையில் புகைப்படக்காரராக இருக்கும் யுவன் ஒரு நாள் கடற்கரைக்கு வந்திருந்த காதலர்களையும், கள்ளக் காதலர்களையும் புகைப்படமெடுத்து இணையத்திலும், பத்திரிகைகளிலும் போட்டுவிட.. அது தீயாய் பரவுகிறது..
பாதிக்கப்பட்டவர்கள் யுவன் மீது கோபப்படுகிறார்கள்.. வீட்டு ஓனரும் தனது மகனின் காதலை ஊரறிய வைத்துவிட்டார்களே என்கிற கோபத்தில் யுவனையும், அவனது நண்பனையும் வீட்டில் இருந்து துரத்துகிறார். தனது உறவினரான லாரன்ஸ் என்னும் இமான் அண்ணாச்சியின் வீட்டில் வந்து தங்குகிறார் யுவன்.
இமான் அண்ணாச்சி டியூஷன் சென்டர் நடத்துகிறார். பக்கத்திலேயே குழந்தைகள் காப்பகம் இருக்கிறது. அதனைக் கவனித்துக் கொள்கிறார் ஹீரோயின் சரண்யா மோகன். யுவனது புகைப்பட வெளியீட்டால் பாதிக்கப்பட்டு ஒரு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறாள். அந்தப் பெண்ணின் தோழி லாரன்ஸின் டியூஷன் சென்டரில் படிக்கிறாள். வேண்டுமேன்றே யுவனை மாட்டிவிட நினைத்து யுவன் தனக்கு செல்போனில் ஈவ்டீஸிங் தொல்லை தருவதாக போலீஸில் புகார் தருகிறார். இப்போது போலீஸ் வந்து விசாரிக்க தனக்கு காதல் என்றால் ஏன் வேப்பங்காயாக கசக்குகிறது என்பதை விளக்குகிறாள் ஹீரோ. உடனேயே ஹீரோயின் சரண்யாவுக்குள் காதல் பிறக்கிறது. காதல் தூதுவிட.. யுவன் அதை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதுதான் மிச்சக் கதை..
இதையொரு கதையென்றே யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. கதையை விடுங்கள்.. எடுத்த விதம்.. அக்மார்க் அமெச்சூர்த்தனமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். தரம் குறைந்த கேமிரா.. ஒளிப்பதிவு டல்லு.. இயக்கமே இல்லை.. படத்தொகுப்பாளரே இல்லாமல் இயக்குநரே இணைத்திருக்கிறார் போலும்.. பல ஷாட்டுகள் சம்பந்தமில்லாமல் வந்து போகின்றன.. நீண்ட, நெடுங்காலம் சினிமாவில் இருக்கும் இயக்குநர் நிச்சயமாக இதனை இயக்கியிருக்க முடியாது என்று பந்தயம் கட்டும் அளவுக்கு இருக்கிறது இத்திரைப்படத்தின் இயக்கம்.
‘சாட்டை’யில் ரசித்த அளவில் ஒரு சதவிகிதம்கூட இதில் யுவனின் நடிப்பை நம்மால் காணவே முடியவில்லை. ஹீரோயின் சரண்யாவே பள்ளி சிறுமியை போல இருக்கிறார். இவருக்குள் லவ்வா..? முடியல சாமி..!
சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் என்று அனைவரும் ஆளாளுக்கு பிரேம் டூ பிரேம் பேசுகிறார்கள்.. பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.. எல்லாம் வயதுக்கு மீறிய பேச்சு.. இவர்களையும் தாண்டி பேசியிருக்கிறார் இமான் அண்ணாச்சி.. இவரே வலிய போய் பிரச்சினையை கிளப்பி.. மேலும் மேலும் பேசுவதில் எரிச்சல் மேல் எரிச்சல்தான் வருகிறது..! அதிலும் இவரது சொந்த காமெடிகளும் சகிக்கவில்லை..
20 வருடமாக தேடி வரும் அக்காள் கணவரை ஒரே தடவையில் ரோட்டில் நடந்துபோகும்போதே பெயரை வைத்தே கண்டு பிடிக்கிறாராம் ஹீரோ.. என்னவொரு பிரில்லியண்ட் ஸ்கிரீன்பிளே..? அதிலும் அக்காவுக்கு இப்போது புத்தி பேதலித்து போயிருக்க.. அந்த 20 வருட புத்தி பேதலிப்பை மறுபடியும் சின்ன வயசு சாக்லெட் கதையை வைத்து உடனேயே சரி செய்கிறார்களாம்..! கொடுமை..!
ஒரேயொரு காட்சி மட்டுமே ஆறுதல்.. அது ஹிந்தி டீச்சரை கத்தியால் குத்திவிட்டு ஒரு சிறுவன் இன்ஸ்பெக்டரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் காட்சி.. இது ஒன்று மட்டும் போதுமா..?
இயக்குநர் செல்வபாரதியே ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கிறார். அந்த பிளாஷ்பேக் காட்சிகளும் ரசிக்கும்படி இல்லை.. பிறகெப்படி மனதில் உட்காரும்..? இதுவே இப்படியெனில் இசை..? ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் கானா பாலா பாடியிருக்கும் ‘நோக்கியா பொண்ணு.. சாம்சங் பையன்’ பாடல் மட்டுமே கேட்கும் ரகம்.. மற்றவையெல்லாம் எப்படா முடிப்பீங்கன்னு சொல்வதுபோல இருக்கிறது..!
சொதப்பலான இயக்கம்.. அதைவிட சொதப்பலான நடிப்பு.. தெளிவில்லாத காட்சிகள்.. சுவாரஸ்யமில்லாத கதை.. ரசனையில்லாத திரைக்கதை.. நாடகத்தனமான பின்னணி இசை.. எல்லாமும் சேர்ந்து இந்தப் படத்தை எப்படி எடுத்தார்கள் என்கிற கேள்வியை முன் வைத்திருக்கிறது..!


என்னதான் ஆச்சு இயக்குநர் செல்வபாரதிக்கு..?

0 comments: