உ - சினிமா விமர்சனம்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



புதிய இயக்குநர்களை உற்சாகமூட்டி வரவேற்கும் அதே நேரத்தில், அவர்களுடைய படைப்புகளையும் எந்தப் பாகுபாடுமில்லாமல் விமர்சிக்கத்தான் வேண்டும்.. இந்தப் படம் வித்தியாசமான களத்துடன்.. சின்ன பட்ஜெட்டில் புதிய முயற்சியையும் எடுத்துக் காட்டுகிறது. அந்த வகையில் இது பாராட்டுக் கூடிய விஷயம்..!

சினிமா. சினிமா.. சினிமா என்று சினிமாவில் இயக்குநராவதையே லட்சியமாக்க் கொண்டு அலைந்து, திரியும் நடுத்தர வயது தம்பி ராமையாவுக்கு ஒரு புதிய தயாரிப்பாளர் கிடைக்கிறார். தன்னுடன் இணைந்து பணியாற்றும்படி தனது அறை தோழர்களை கேட்கிறார் ராமையா. அவர்களோ இவருக்கு மட்டும் படம் கிடைத்துவிட்டதே என்கிற பொறாமையில் இவரைப் பற்றி மட்டமாகவே பேசித் தொலைக்கிறார்கள். உள்ளே இறங்கிய சரக்கும் கூடுதலாக வேலை செய்ய.. அப்போதே சபதம் போட்டு அவர்களைவிட்டு பிரிகிறார்.

சரக்கடித்துவிட்டு நடுரோட்டில் மட்டையானதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போகிறார்கள். அங்கே அவரைப் போலவே வேறு வேறு வகைகளில் பிட்டு கேஸ்களில் வரும் 4 இளைஞர்களை பார்க்கிறார்.. அவர்களிடத்தில் சினிமா பற்றி ஏதோ தேடல் ஒன்று இருப்பதை உணர்ந்து அவர்களை அரவணைக்கிறார்.. புதிய படத்தின் டிஸ்கஷனை அவர்களுடனேயே துவக்குகிறார். இதனையறிந்த பழைய தோழர்கள் இதனை உடைக்க நினைக்கிறார்கள். இதையும் தாண்டி ராமையா தனது முதல் படத்தை எப்படி எடுத்து முடிக்கிறார் என்பதுதான் படமே..!

சந்தேகமே இல்லாமல் இது தம்பி ராமையாவின் படமேதான்.. அவருடைய டயலாக் டெலிவரி இயக்குநருக்கு மிகப் பெரிய அளவுக்கு உதவிகளைச் செய்திருக்கிறது.. கணேஷ் என்கிற அந்த கேரக்டரில் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தையெல்லாம் சேர்த்து வைத்து வெளுத்துக் கட்டியிருக்கிறார் ராமையா. அந்த 4 நண்பர்கள் நல்ல தேர்வு.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச்.. இதுதான் படத்தின் பலம்.. அவரவரும் தங்களது பார்வையில் ஒரு கதையே நகர்த்திச் செல்ல.. அந்தக் கதையை டைரக்டர் தயாரிப்பாளரிடம் தன் பாணியில் திருப்பிச் சொல்லி ஓகே வாங்குவதெல்லாம் காமெடி கலந்த உண்மைச் சம்பவங்கள்..

உண்மையாகவே இன்றைய கோடம்பாக்கத்தின் சந்து பொந்துகளில் இருக்கும் உதவி, துணை, இணை இயக்குநர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் சென்று பாருங்கள்.. தினம் தோறும் ஏதாவது ஒரு கதையின் டிஸ்கஷன் நடந்து கொண்டேதான் இருக்கும்.. அறைத் தோழர்கள் ஒவ்வொருத்தரும் கதையை ஒவ்வொரு பக்கமாக டெவலப் செஞ்சுக்கிட்டே போயி.. இது இப்படியிருந்தா நல்லாயிருக்கும்.. இந்த இடத்துல பாட்டு இருந்தா நல்லாயிருக்கும் என்று பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.. அவர்களது சிந்தனை திறன் கதை என்று வந்தவுடன் ராக்கெட் வேகத்தில் செயல்படும். இதில் கதை பண்ணத் தெரிந்தவர்களுக்கு அதிகமாக இயக்கம் வராது.. இயக்கம் நன்கு தெரிந்தவர்களுக்கு கதை பண்ணத் தெரியாது. இந்த இரண்டையும் புரிந்து கொண்டு தங்களுக்கு துணையானவர்களை வைத்துக் கொண்டு ஜெயித்தவர்கள்தான் தமிழ்ச் சினிமாவின் அனைத்து சாதனையாளர்களும். யாரும் இங்கே விதிவிலக்கில்லை..!

“பக்கத்து ஊர்ல ஒருத்தன் ஜெயிச்சா தலைல தூக்கி வைச்சு கொண்டாடுறீங்க.. ஆனா உங்க கூடவே இருக்கிறவன் ஜெயிச்சா மட்டும் ஏண்டா உங்களால தாங்கிக்க முடியலை..” என்று மனம் வெறுத்துப் போய் கேட்கிறார் தம்பி ராமையா.. இது சினிமாவுலகில் முக்கால்வாசி உதவி, துணை, இணை இயக்குநர்களுக்கும் பொருந்தும். இந்த வசனம் என்றில்லை.. படம் முழுக்கவே வசனங்கள் அனைத்துமே டைமிங்குதான்.. அத்தனையையும் பஞ்ச் டயலாக்காகவும் வைத்துக் கொள்ளுமளவுக்கு எழுதித் தள்ளியிருக்கிறார் இயக்குநர்.. கூடவே டபுள் மீனிங் டயலாக்குகளும் வருகின்றன.. அவற்றை நீக்கியிருக்கலாம்.. ஏனோ விட்டுவிட்டார் இயக்குநர். இது ஒன்றுதான் இப்படத்தில் எனக்குப் பிடிக்காத விஷயம்..!

‘பக்குலன் பிலிம்ஸ்’ என்று வாயில் நுழையாத படத் தயாரிப்பு நிறுவனம்.. உள்ளே இடிச்சப்புளியாக அமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் பயில்வான் ரங்கநாதன்.. ‘கேஸ் லீக்’ வியாதியில் சிக்கியிருக்கும் அவர் அவ்வப்போதுபோடும் ‘குண்டுகள்’ மட்டுமே பிடித்தமில்லாதவை. மற்றபடி சினிமாவைப் பற்றி துளியும் தெரிந்து கொள்ளாத ஒரு தயாரிப்பாளரின் அடையாளத்தை, பயில்வான் மூலமாக திரையில் வெற்றிகரமாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்..!

தமிழ்த் திரையுலகின் இன்றைய நிகழ்வுகளை அப்படியே கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். வயதாகிப் போன நிலையிலும் மனம் தளராமல் இயக்குதலுக்காக போராடும் தம்பி ராமையா.. கூடவே செவ்வாழைகளாக இருக்கும் தோழர்கள்.. அவர்களது பொறாமை.. தயாரிப்பாளரின் அருகிலேயே இருப்பதால் பூசாரியாக தன்னை நினைத்துக் கொள்ளும் மேனேஜர்.. பியூன் வேலை பார்ப்பவனிடம்கூட பணிவாக பேச வேண்டிய சூழலில் இருக்கும் புதுமுக இயக்குநர்.. மேனேஜரின் மிரட்டலுக்கு பயந்து பயந்து பேசும் இயக்குநர்.. டிஸ்கஷனில் இருக்கும் உதவியாளர்களிடம் கொஞ்சம் நைச்சியமாக பேசுவது.. பின்பு மிரட்டுவது.. பின்பு கெஞ்சுவது.. சில நாட்கள் ஆனவுடன் மடியில் படுத்து காலை பிடித்துவிடச் சொல்வது.. பின்பு “சாப்பிட்டீங்கள்ல.. கதையைச் சொல்லுங்கடா”ன்னு என்று அங்கலாய்ப்பது.. தயாரிப்பாளரிடம் மட்டும் கையைக் கட்டிக் கொண்டு நிற்பது.. மைண்ட் வாய்ஸில் “இந்தப் படம் ஜெயிக்கட்டும் அப்புறம் பாருங்கடா…” என்று தனது ஆத்திரத்தைக் காட்டுவது.. என்று ஒரு வளரும் இயக்குநர் என்ன செய்வாரோ அதை அப்படியே த்த்ரூபமாகச் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர்..!

தனக்கு மட்டும் கதை பிடித்தால் போதாது.. தனக்கு பைனான்ஸ் கொடுக்கும் பைனான்ஸியருக்கும் பிடிக்கணும். அவர்கிட்டேயும் போய்ச் சொல்லுங்க என்று ராமையாவை அனுப்பி வைக்கின்ற காட்சியை ரசிகர்கள் பார்த்து கோடம்பாக்கத்தின் உண்மையான உண்மையை தெரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.. தமிழ்ச் சினிமாவில் இது எப்போதும் நடப்பதுதான்.. பல மீடியம் பட்ஜெட், சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களின் கதி இதுதான்.. “வட்டியை கரெக்ட்டா கொடுத்திருவீல்ல.. அப்போ நீதான் தயாரிப்பாளர். கதையை மட்டும் நான் கேட்டு பிக்ஸ் பண்ணிக்கிறேன்…” என்று சொல்லி மறைமுகமாக தயாரிப்பாளரை தன் கன்ட்ரோலில் வைத்துக் கொண்டு ஆட்டிப் படைத்த.. படைக்கும் பைனான்ஸ் முதலைகள் நிறைய பேர் இப்பவும் கோடம்பாக்கத்திற்குள் இருக்கத்தான் செய்கிறார்கள்..!

நண்பர்கள் செய்யும் கதையில் இடம் பெற்றிருக்கும் அந்த உள் கதையே இன்னொரு சினிமாவாக எடுக்கப்பட வேண்டிய கதை.. அதில் இடம் பெற்றிருக்கும் நடிகர், நடிகைகளை மிகவும் பாராட்ட வேண்டும்.. அதிலும் நான் ஸ்டாப்பாக பேசும் ஒருவரின் முக பாவனை.. டயலாக் டெலிவரியும் பிய்ச்சு எடுத்திருக்காரு.. அந்தச் சின்னப் பையனும், பொண்ணும் சரியான செலக்சன்.. அந்தக் கதையின் ஊடாகவே இவர்களது கதையையும் கொஞ்சம், கொஞ்சமாக நகர்த்தியிருக்கும்விதம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகமாகவே தூண்டியிருக்கிறது..

அபிஜித் ராமசாமின் இசையில் முருகன் மந்திரத்தின் ‘ஆகா இது சினிமா’ பாடல் ஏற்கெனவே இணையத்தளங்களில் பிரபலமாகிவிட்டது.. சிறந்த மான்டேஜ் காட்சிகளை வைத்து மிக அழகாக ஷூட் செய்திருக்கிறார்கள்.. மிக எளிமையான பாடலாக தம்பி ராமையா டீம் பாடும் சோகப் பாடல். ஒலிக்கிறது. முருகன்மந்திரம் இன்னும் மேலே உயர்வார் என்றே நம்புகிறேன்.. அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. இந்தப் படத்தில் கூடுதல் தயாரிப்பாளராகவும் இருந்து ஜெயித்திருக்கிறார்..

முதல் பாதி ரன் வேகத்தில் பறக்கிறது.. பிற்பாதியில் கொஞ்சம், கொஞ்சம் போரடித்தாலும் மறுபடியும் யோகி தேவராஜை சந்தித்தவுடன் பறக்கத் துவங்குகிறது.. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளிகளுக்கு ‘அமலாபால்’, ‘அஞ்சலி’ என்று பெயர் வைத்து அழைக்கும் பைனான்ஸியரின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்குள் இருக்கும் உள்குத்தை யோகி தேவராஜே அறிவார்.. வாழ்க..

மாற்று முயற்சியாக எதையாவது புதிதாக செய்து ஜெயித்தாக வேண்டும் என்ற நிலையில் புதிய சிந்தனையோடு, புதிய கோணங்களோடு இந்தப் படத்தை படைத்திருக்கிறார் இயக்குநர் ஆஷிக். சிறந்த திறமைசாலிகளை ஊக்குவிப்பதை நாமும் வளர்த்துக் கொண்டால் நமது வாரிசுகளுக்கு நல்ல படங்கள் நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் இந்த டீமுக்கு ஒரு பாராட்டுப் பத்திரத்தையே தருகிறேன்.. அடுத்த முறை இப்போதிருக்கும் சில குறைகளைக்கூட இல்லாமல் செய்து ஜெயிக்கும்படி வாழ்த்துகிறேன்..!

கடைசியாக ஒன்று.. ‘உ’ என்று பிள்ளையார் சுழி போட்டு தனக்கும் ஒரு புதிய வாழ்க்கையைத் துவக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ஆஷிக். ஆனால் படத்தின் இறுதியில் ஒலிக்கும் தத்துவப் பாடலை, ஆஷிக்கிற்கு சுட்டிக் காட்ட வேண்டிய சூழல், எப்போதும் வரவே கூடாது என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

0 comments: