அம்மா திரையரங்கம் சாத்தியம்தானா..? - ஒரு அலசல்..!

20-02-2014


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை போல இப்போது பெருநகரங்களில் ஆட்சி நடத்தும் மாநகராட்சிகளின் பட்ஜெட்டும் கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று சென்னை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட 2014-2015-ம் ஆண்டுக்குரிய பட்ஜெட்டில் சென்னையில் ‘அம்மா திரையங்குகள்’ அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஏழை-நடுத்தர வசதி கொண்டோரின் பொழுதுபோக்கு அம்சத்தை பூர்த்தி செய்திட சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து அவ்விடங்களில் தேவைக்கேற்ப எண்ணிக்கையில் குறைந்த டிக்கெட் கட்டணத்தில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும்..” – இப்படி சொல்லியிருக்கிறது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் வாசகங்கள்..


ரொம்ப நாளாக பலரும் சொல்லி வருவது இதைத்தான்.. ஆனால் இது சாத்தியம்தானா என்று முதலில் யோசிக்க வேண்டும்..!

சின்ன தியேட்டர்கள் என்றால் குறைந்தபட்சம் 100 பேர் அமரும் அளவுக்காவது இருக்க வேண்டும்.  குறைந்த கட்டணம் என்றால் நிச்சயமாக ‘அம்மா மெஸ்’ மாதிரியே கூட்டம் அள்ளும். புதிய திரைப்படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். ரசிகர் மன்றக் குஞ்சுகள் இங்குதான் படையெடுப்பார்கள். அவர்கள் வருகைக்கேற்றவாறு அந்த தியேட்டரின் பரப்பளவு இருக்க வேண்டும். இதைப் பார்த்துவிட்டு சில நேரங்களில் கார்களில்கூட ரசிகர்கள் வருகை தந்தால் அவற்றை நிறுத்துவதற்குக்கூட இடம் வேண்டும்.. முறையான பராமரிப்பு.. காற்றோட்ட வசதி.. கழிப்பிட வசதிகள் என்று பலவற்றையும் முறைப்படி செய்ய வேண்டும்..

இதனை கட்டுவதற்கு ஆகும் செலவு பற்றி முதலில் யோசிக்க வேண்டும்.. இப்போதைய சூழலில் ஒரு திரையரங்கம் அமைப்பதற்கு கட்டிடத்திற்கே 3 கோடி ரூபாயாவது வேண்டும்.. இதில் குளிர்சாதன வசதி செய்யப்படுமா என்று தெரியவில்லை. அதுவும் இருந்தால் கூடுதலாக ஒரு திரையரங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் செலவாக வாய்ப்புண்டு.. பின்பு திரையிடும் டிஜிட்டல் புரொஜெக்சன் முறைகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு மொத்தமாக சில லட்சங்களை செலவு செய்தாக வேண்டும்..! மொத்தமாக பார்த்தால் 10 திரையரங்கங்கள் அமைத்தால்கூட 40 கோடிகளை முழுங்கிவிடும்..!

இதற்குப் பிறகு எந்தெந்த படங்களை திரையிட வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்..! இதனை யார் முடிவு செய்வது..? முடிவு செய்பவருக்கு சினிமா தொழில் பற்றிய அறிவு இருக்குமா..? அப்படிப்பட்டவரை மாநகராட்சி ஊழியர்களாக மாநகராட்சிகள் வேலைக்கு எடுக்குமா..?

சென்னையில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வாடகை முறையில் மட்டும்தான் ஓட்டப்படுகின்றன.. படத்தின் தயாரிப்பாளர் திரையரங்கு உரிமையாளர் ஒத்துக் கொண்டால், வாடகையைக் கட்டிவிட்டு படத்தை ஓட்டிக் கொள்ளலாம். இதுதான் இப்போதும் நடக்கிறது.. அம்மா திரையங்கம் இதைத்தான் பின்பற்ற முடியும்..!

இது போன்ற சின்ன தியேட்டர்களில் பெரிய பட்ஜெட் படங்களை ஒருபோதும் கொடுக்கவே மாட்டார்கள்..! ‘வீரம்’, ‘ஜில்லா’ படத்தை வாங்கிய முதல்நிலை விநியோகஸ்தர்கள் அதில் கொஞ்சம் கூடுதல் விலை வைத்து அடுத்த விநியோகஸ்தரிடம் தள்ளிவிட.. அவர் தியேட்டர் உரிமையாளர்களிடத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் விலை வைத்து கொடுக்க.. கடைசியில் இந்த இரு படங்களுமே தியேட்டர்களுக்கு வரும்போது படத்தின் பட்ஜெட்டைவிட 50 சதவிகிதம் அதிகமாகவே விலைக்கு போயிருக்கிறது. ஆனால் தியேட்டர் கட்டணத்தின் மூலம் வந்த பணத்தை கணக்குப் பார்த்ததில் இரண்டாம் நிலை விநியோகஸ்தர்களுக்கும், வாங்கி வெளியிட்ட தியேட்டர்காரர்களுக்கும் பெரும் நஷ்டம்..

இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் 100, 200  சீட்டுகள் மட்டுமே கொண்ட தியேட்டர்களில் 10, 20, 30 கட்டணத்தில் படத்தை ரிலீஸ் செய்ய எந்த பெரிய பட்ஜெட் தயாரிப்பாளருக்கு மனசு வரும்..? இந்தத் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள்தானே 100, 120, 150 கட்டணம் கொண்ட பெரிய தியேட்டர்களுக்கு ஓடி வருபவர்கள்.. 30 ரூபாயில் பார்த்துவிடலாம் என்று நினைத்து இங்கேயே வந்துவிட்டால், பெரிய தியேட்டர்களுக்கு கூட்டம் வராதே.. அங்கே கூட்டம் வரவில்லையெனில் கலெக்சன் வராதே..? கோடிகளில் சுருட்ட நினைக்கும் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு இது எப்படி சாத்தியமாகும்..? அவர்கள் சுலபத்தில் ஒத்துக் கொள்வார்களா..?

சரி விடுங்க.. சின்ன பட்ஜெட் படங்களை பார்ப்போம். தியேட்டர் வாடகையைக் கட்டிவிட்டு ஓட்டுகிறார் தயாரிப்பாளர்.. வாடகைக்கு மேல் வசூலாகும் தொகையில் மாநகராட்சியும், தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர்கள் இருவரும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் பணத்தை பிரித்துக் கொள்ளலாம். வசூலானால் நல்லதுதான்.. வசூலாகவில்லையெனில்.. நஷ்டம் முழுவதும் தயாரிப்பாளருக்கு.. மாநகராட்சிக்கு வாடகை பணம் வந்துவிடும்.

இந்த வாடகை பணம், அந்தத் தியேட்டரை தொடர்ந்து நடத்துவதற்கு மாநகராட்சிக்கு போதுமானதாக இருக்குமா..? ஏனெனில் அது பொதுமக்களின் வரிப் பணம்..! திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் பணமல்ல.. அவர்களையும் உள்ளடக்கிய சென்னைவாழ் மக்களின் பணம்.. அதனால் கூடுதலாகத்தான் வாடகை வைக்க வேண்டும் என்றால் அது சின்ன பட்ஜெட் படங்களுக்கு தாங்குமா..?

அரங்கத்தின் மொத்த சீட்டுகள் 100 என்றால் இதில் 33 x 10, 33 x 20, 33 x 30 என்று டிக்கெட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும். 330-660-990 என்று ஒரு காட்சியில் ஹவுஸ்புல்லானால் கிடைக்கும் மொத்தத் தொகை 1,980 ரூபாய். ஒரு நாளில் நடக்கும் 4 காட்சிகளில் கிடைக்கும் தொகை 7,920 ரூபாய். ஒரு வெள்ளியில் இருந்து அடுத்த வியாழக்கிழமை வரையிலான 7 நாட்களில் கிடைக்கும் தொகை 55,440 ரூபாய். மாதத்திற்கு 2,21,760 ரூபாய். இது ஒரு மாதத்தில் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல்லானால் கிடைக்கும் தொகை. இதில் பாதியாவது வருவது உறுதியென்று நம்பலாம். அதாவது 1, 10,880 ரூபாய்.

இதுவே 200 சீட்டுக்கள் என்றால் ஒரு காட்சிக்கு 3,960 ரூபாயும், 4 காட்சிகளுக்கு 15,840 ரூபாயும் கிடைக்கலாம்.. ஒரு வாரத்திற்கு 1,07,880 ரூபாய்.  ஒரு மாதத்திற்கு 4,31,520 ரூபாய்.  இதில் பாதி கிடைக்கும் என்றால், 2,15,760 ரூபாய் வசூலாக வாய்ப்புண்டு..

ஒரு திரையரங்கில் குறைந்தபட்சம் ஊழியர்களாக 10 பேராவது இருக்க வேண்டும். இவர்களுக்கு மாநகராட்சி நிர்ணயித்திருக்கும் சம்பளம் தர வேண்டும். தோராயமாக 5000 என்று வைத்துக் கொண்டாலும், மாதம் 50000 ரூபாய் இவர்களுக்கு சம்பளமாகவே தேவை. பிறகு மின் கட்டணம்.. இதரச் செலவுகள் என்று பார்த்தால் அவைகளும் இன்னொரு 50000 ரூபாயாவது வரும்.. இதில் திரையரங்குகள் குளிர்சாதன வசதி செய்யப்படுமா என்று தெரியவில்லை. அது இருந்தால், மின்சாரக் கட்டணம் முழுங்கிவிடும்.. எப்படியிருந்தாலும் இதுவொரு இடியாப்பச் சிக்கல்..!

சின்ன பட்ஜெட் படங்களெல்லாம் இப்போது சென்னையில் மட்டும் பெரிய திரையரங்குகளில் ஏதாவது ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்டு வருகின்றன. மீடியம் பட்ஜெட் படங்களும் கிடைக்கின்றன என்றாலும் அவைகளும் காலை காட்சி மட்டும் என்றுதான் திரையிடப்படுகின்றன.!

உதாரணமாக சென்ற வாரம் வெளியான ‘காதலில் யாரடி’ என்ற படம் சென்னையில் தேவி காம்ப்ளக்ஸில் செகண்ட் ஷோ மட்டுமே ஓடியது.. ஒரேயொரு ஷோதான். இப்படித்தான் படங்கள் வந்து வாய்க்கின்றன. அதிலும் ஷோவுக்கு 10 பேர் வந்தால் மட்டும்தான் சில தியேட்டர்கள் படங்களை ஓட்டுவார்கள். இல்லையேல் கேன்சல்தான்.. 

சின்ன பட்ஜெட் படங்களை திரையிட்டு கூட்டம் வந்தாலும், வராவிட்டாலும் தயாரிப்பாளரிடமிருந்து வாடகைப் பணத்தை வாங்கித்தான் இந்த அம்மா திரையரங்குகளை நடத்த முடியும்.. பெரிய பட்ஜெட் படங்கள் இங்கே கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.. 

இது போன்ற சித்து விளையாட்டுக்கள் நிரம்பியிருக்கும் தமிழ்த் திரைத்துறையில் இதையெல்லாம் தெரிந்து வைத்திருந்து தமிழக அரசுக்கு ஆலோசகராகவும், படங்களை வாங்கிக் கொடுக்கும் உண்மையான ஊழியராகவும் பணியாற்ற யார் வரப் போகிறார்கள். இவர்களுக்கும் தனி சம்பளம் தரணுமே..? ஏனெனில் இது பொது மக்களின் வரிப்பணம்..!

இவ்வளவு பயப்படுவதற்கு காரணம் இருக்கிறது.. அரசு, மாநகராட்சிகளின் செயல்பாடுகளின் லட்சணம்தான் நமக்கே தெரியுமே..? இப்போது மாநகராட்சியின் கக்கூஸ், பாத்ரூம்களில் நுழைவுக் கட்டணமே கிடையாது என்று சொல்லியும், அவற்றின் வாசலில் லோக்கலில் இருக்கும் ஆளும் கட்சியினர் டேபிள், சேர் போட்டு உட்கார்ந்து வசூல் செய்து கொண்டுதான் இருக்கின்றன. யார் கேட்பது..? அப்புறம் எதற்கு ‘இலவசம்’ என்ற அரசு ஆணை..! அந்த ஆணையை அவர்களது கட்சிக்காரர்களே மீறுகிறார்கள் என்றால் அதற்கு முதல் காரணம் அது அரசின் சொத்து.. அரசின் சொத்து என்பதே ஆளும் கட்சியின் சொத்து என்பதுதான்..!

இந்த லட்சணத்தில் இந்த ‘அம்மா திரையரங்கு’ளை பொதுமக்களின் வரிப் பணத்தில் அமைத்தால் ஆளும் கட்சிக்காரர்கள் சம்பாதிப்பதற்கு இதுவும் ஒரு வழியாகத்தான் இருக்கும்..!  இந்த ஆட்சி போய் அடுத்து வேறொரு ஆட்சி வரும்போது “இவைகள் நஷ்டத்தில் ஓடுகின்றன அதனால் நடத்த இயலவில்லை..” என்று மூடிவிட்டுப் போக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..? அப்போது இதைக் கட்டுவதற்கும், நடத்துவதற்கும் ஆன செலவுகளை யார் ஈடுகட்டுவது..? எப்போதும் இளிச்சவாயர்கள் பொதுமக்கள்தானா..? 

அரசுகள் இது போன்ற கேளிக்கை வரி வசூலிக்கும் துறைகளில் நேரடியாக ஈடுபட்டால் அது ஊழலுக்கும், நிதி துஷ்பிரோயகத்திற்கும்தான் வழி வகுக்கும்.. இதற்குப் பதிலாக மாநகராட்சியின் இடத்தை தியேட்டர்களை கட்ட விரும்பும் தனியார்களுக்கு மிகக் குறைந்த விலைக்கோ.. அல்லது குத்தகைக்கோ கொடுத்துவிட்டு.. அவர்களை திரையரங்குகளை கட்டி நடத்தச் சொல்லலாம்.

தமிழ்த் திரையுலகின் நெளிவு, சுழிவுகளை தெரிந்தவர்கள் என்றால் சின்ன பட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, விநியோகம் செய்வதில் தங்களது திறமையைக் காட்டி முடிந்த அளவுக்கு லாபகரமாகவே நடத்துவார்கள்..

அரசு அவர்களது திரையரங்கிற்கு ஒரு குறிப்பட்ட குறைந்த கட்டணத்தை நிர்ணயித்து.. அதனை அவ்வப்போது கண்காணித்து, வசதிகளையும் வசதிக் குறைவுகளையும் பேலன்ஸ் செய்து இதனை நடத்தினால் நிச்சயம் இது அனைவருக்குமே பலனளிக்கும்..

அரசுகளும், மாநகராட்சிகளும் நேரடியாக இத்தொழிலில் இறங்கினால் அது கட்டும்போதே ஊழலில் துவங்கி கடைசியாக ஆளும் கட்சிக்காரர்களின் பாக்கெட்டுக்குத்தான் போய்ச் சேரும்..!

திரையுலகம் மட்டுமே தமிழகம் அல்ல.. அதையும் தாண்டிய உலகமும் இருக்கிறது.. அவர்களது பணத்தை நாம் சுரண்டக் கூடாது. ஏனெனில் நம்முடைய பிள்ளைகள் நாளைய காலங்களில் ‘திரையுலகம் தாண்டிய பொதுமக்களாக’ மாறிவிடுவார்கள்.. அப்போது வருத்தப்படப் போவதும் நமது வாரிசுகளாகத்தான் இருக்கும்..!

நன்றி : www.tamilcinetalk.com 

9 comments:

Kali Kabali said...

வேலைக்காத திட்டம், அதெல்லாம் நடைமுறைக்கு வராது வெறும் அறிவிப்போடு நின்று விடும்.
அம்மா திரைஅரங்கம் கட்டுவதைவிட ஆந்திராவில் உள்ளது போல நுழைவு கட்டணம் ரூபாய் 30, 50 மற்றும் ரூபாய் 60/- என்று கண்டிபுடன் நடைமுறை படுத்தினால் நிச்சியம் ரசிகர்கள் வாழ்த்துவார்கள்

உலக சினிமா ரசிகன் said...

பிள்ளை பிறக்கும் முன்பே ஏன் பேன் பார்க்கிறீர்கள்?

கேரளாவில், அரசே தியேட்டரை வெற்றிகரமாக நிறுவி நடத்தி வருகிறது.
தேவைப்பட்டால் அங்கிருந்து ஆலோசனை பெறலாம்.

‘அம்மா நினைத்தால்’ எதுவும் நடக்கும்.
புதிய திரைப்படம் அம்மா தியேட்டருக்கு தரமாட்டோம் எனச்சொல்ல ஆண்மையுள்ள ஒரு தயாரிப்பாளரை காட்ட முடியுமா?

அம்மா தியேட்டர் மிடில் கிளாசுக்கு வரமாகவே இருக்கும்.
நீங்கள் ஏன் சாபம் போல் சித்தரிக்க விரும்புகிறீர்கள்?

வருண் said...

ஏன் "அம்மா கழிவறை" மட்டும் இல்லை. அதைக் கொஞ்சம் குறைந்த பட்சத்தில் செய்தால் நாட்டுக்கு நல்லது.

என்னடா முறைக்கிறீங்க?

உருப்படியா ஒரு ஐடியா சொல்ல விடமாட்டீங்களே!

ஜப்பானில் சுனாமியில் பாதிக்கப்பட்ட ரேடியேஷன்களை இன்னும் நிருத்த முடியவில்லை. இருண்ட தமிழ்நாட்டில் கூடங்குளத்துல இன்னொரு எழவை ஆரம்பிக்கிறானுக. அதுக்கும் ஆத்தா அணுமின்னு பேரு வைக்க வெண்டியதுதானே?

அம்மா திரயரங்கமாம்! இந்த ஓட்டுப்பொட்ட திராவிட நாய்களை செருப்பால அடிக்கணும். 5 கோடிப் பேரு இருக்காணுக, இவனுகள்ல தமிழ்நாட்டை ஆள குஞ்சுள்ள ஒரு ஆள் இல்லை .

அம்மா திரையரகமோ, கழிவரரையோ இல்லை பொதைகுழியோ, சும்மா வாழ்கனு சொல்லீட்டுப் போகாம அறிவுரை வேற சொல்ல வந்துட்டாரு இவரு.

Vetrivendan said...

ஓஹோ ! அப்போ ஆள்வதற்கு அது மட்டுமே போதும் என்கிறாரா வருண் ?

Vetrivendan said...

ஓஹோ ! அப்போ ஆள்வதற்கு அது மட்டுமே போதும் என்கிறாரா வருண் ?

Vetrivendan said...

ஓஹோ ! அப்போ ஆள்வதற்கு அது மட்டுமே போதும் என்கிறாரா வருண் ?

வவ்வால் said...

அண்ணாச்சி,

உங்க பதிவே சம காமெடி :-))

//திரையுலகம் மட்டுமே தமிழகம் அல்ல.. அதையும் தாண்டிய உலகமும் இருக்கிறது.. அவர்களது பணத்தை நாம் சுரண்டக் கூடாது.
//

அதை விட இது சமக்காமடி, தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற பெயரில் மக்களுக்கு பயனே இல்லாமல் அரசுக்கு வர வேண்டிய வருவாய் வீணாப்போகுதே ,எனவே அந்த வரி விலக்கை நீக்கலாமே?

திரையுலகம் மட்டும் தமிழகமல்ல,அதையும் தாண்டி இருக்கு தானே அவ்வ்!

அரசாங்கமே திரையரங்கம் ,நடத்தலாம்,ஆனால் பேரு எல்லாம் அம்மானு வச்சுக்கணுமா?

எம்ஜிஆர்,சிவாஜி,என்.எஸ்.கிருஷ்ணன், இப்படி திரையுலக ஜாம்பவான்கள் பெயரை ஒவ்வொரு தியேட்டருக்கும் வைக்கலாம்.

தியேட்டர் காரங்க அடிக்கிற கொள்ளைக்கு ஒரு முடிவாச்சும் வரும்.

Unknown said...

EN-ADA' POI-TAMILAN 'kalager' 'atchi -IRR-UNTH'APPA ENNEA ENNA -ELAZANA ippa- eanda- pammpureee'

k.rahman said...

அப்பாடா , நானும் என்னவோ நெனச்சேன். ஆளும் அம்மா கட்சிக்கு ஜால்ரா அடிக்க ஒரு அளவு இல்லையா? கழிவறை கட்டி முதல அதுக்கு அம்மா பொது கழிவறைன்னு பேர் வையுங்க. கேப்டன் வெற்றிக்கு காரணம் அவருடைய ஆளுமை திறைமையா, நிர்வாக திறமையா ன்னு ஒரு பட்டி மன்றம் வச்சாங்களாம். அது மாதிரி இருக்கு உங்க பதிவ பாக்கும் போது.