இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்

17-02-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நெற்றியில் சந்தனம், கழுத்தில் அனுமார் டாலர், கையில் அனுமார் காப்பு என்று பக்காவான அனுமார் பக்தனாக இருக்கும் ஹீரோவுக்கு அப்சரஸ் மாதிரியான ஒரு பெண்ணை பார்த்தவுடன் அனுமார் மறந்து போய் கிருஷ்ணன் பிடித்த சாமியாகிவிட.. அந்தப் பெண்ணை எப்படி மடக்கி.. வரும் எதிர்ப்புகளை எப்படியெல்லாம் சமாளித்து காதலில் வெற்றியடைகிறார் என்பதுதான் கதை.

‘சுந்தரபாண்டியன்’ என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் பிரபாகரனும், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற சூப்பர் ஹிட்டை கொடுத்த உதயநிதியும் இணைந்து வழங்கியிருக்கிறார்கள்.. எந்தவொரு இயக்குநருக்கும் முதல் படம்கூட டென்ஷன் இருக்காது. ‘போனால் முடி.. வந்தால் தலை’ என்ற நினைப்பில் இருப்பார்கள். ஆனால் முதலில் ஒரு ஹிட்டை கொடுத்துவிட்டு, அடுத்த்தும் ஹிட் தரவில்லையெனில் கோடம்பாக்கம் தன்னை எப்படி பார்க்கும் என்பது அவர்களுக்கே தெரியும். இந்த ரிசல்ட்டுக்குத்தான் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார்கள். பிரபாகரனுக்கு கிடைத்திருக்கும் செய்திகள் அவ்வளவு சுவையாக இருக்காது என்றே நினைக்கிறேன்..!

நிறைய படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், ட்ரீட்மெண்ட் வித்தியாசமாக கொடுத்தால் நிச்சயம் ஜெயிக்கும் என்பார்கள். இதில் ட்ரீட்மெண்ட் வித்தியாசம் என்னவென்று கண்டறியவே முடியவில்லை.. முற்பாதி முழுவதும் கொஞ்சம் சிரிக்க வைக்காமல் டயலாக் பேசியபடியே கடந்து போகிறார்கள். பிற்பாதியில்தான் சந்தானத்தின் உதவியால் கதை களைகட்டியிருக்கிறது..!

காதலை எதிர்க்கும் ஊர்.. அந்த ஊரின் பஞ்சாயத்துக்காரரின் மகளே காதலிக்க.. தண்டனையாக தானே ஊரைவிட்டு வெளியே தோப்புக்குள் வந்து குடியிருக்கிறார்.. காதலித்து சென்ற மகள் வீட்டுக்கார்ருடன் மனஸ்தாப்ப்பட்டு வீடு திரும்ப.. அக்காவை சேர்த்து வைக்க தம்பி உதயநிதி கோவைக்கு பயணமாகிறார்.

கோவையில் அக்காவின் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கிறார் நயன்தாரா. அவளைப் பார்க்காத.. பார்த்தாலும் சைட் அடிக்காத.. சைட் அடிச்சாலும் லவ் பண்றேன்னு சொல்லிராத.. அவங்க குடும்பத்துக்கும் நம்ம மாமா குடும்பத்துக்கும் பெரிய சண்டை.. ஒத்து வராது.. அப்புறம் பெரிய பிரச்சினையாயிரும் என்று அக்கா திருப்பித் திருப்பிப் போனில் சொல்ல.. அப்படி என்ன பெரிய அழகியா என்று உதயநிதி ஆர்வத்தில் நயன்ஸை பார்த்துவிட்டு பின்பு டிராக் மாறுகிறார். அனுமார் போய் கிருஷ்ணர் வர.. படம் கதை நகரத் துவங்குகிறது..! நயன்ஸை முதல்ல காதல் வலையில் விழ வைச்சு.. அப்புறமா இரு வீட்டுப் பிரச்சினையை தீர்த்து வைச்சு.. கடைசீல தன்னோட அப்பாவை சமாதானப்படுத்தி.. எப்படி தன்னோட காதல்ல கதிர்வேலன் ஜெயிச்சான்றதுதான் மிச்சப் படம்..!

நயன்ஸ்.. நயன்ஸ்.. நயன்ஸ்.. படம் முழுக்க தனது அழகால் ஸ்கிரீனை வியாபித்திருக்கிறார் நயன்தாரா. வருடம் கூட கூட அவருடைய அழகும் கூடிக் கொண்டேயிருக்கிறது.. என்ன.. உதயநிதியை பக்கத்தில் வைத்துப் பார்க்க ஒருவிதத்தில் அக்கா-தம்பி போலவும் இருக்கிறது..! அதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது..! தேவதைகள் எது பேசினாலும் அது ரம்மியமாகத்தான் இருக்கும்.. இருந்தது.. பாடல் காட்சிகளில் எப்போதும்போல முகத்தில் காட்டிய எக்ஸிபிரஸன்களில் கொடுத்த காசு செரிச்சுப் போச்சுன்ற பீலிங்கும் வந்திருச்சு..! நயன்ஸின் காஸ்ட்யூமரை எத்தனை பாராட்டினாலும் தகும்.. பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவுக்கேற்ப.. பார்த்தவுடனேயே பிடித்துவிடுவதை போல டிரெஸ்ஸிங் மேட்ச்.. கேட்ச்சிங்காக இருந்தது.. படம் முழுக்க ஒருவித பிரெஸ்னஸ் தெரிந்ததற்கு ஒளிப்பதிவும், நயன்ஸும் ஒரு காரணம்..!

உதயநிதி முந்தைய படத்தைவிட கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்கிறார். நடிப்பிலும், நடனத்திலும்.. இன்னமும் சண்டை காட்சிகளில் நடிக்கவில்லை என்பதால் அதையும் பார்த்த பின்புதான் மொத்தமாகச் சொல்ல முடியும்.. டைமிங்சென்ஸில் சந்தானத்திற்கு மிகவும் ஈடு கொடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நல்ல இயக்குநரின் கைகளில் கிடைத்தால்.. மோல்டிங் ஆகலாம்..!

சந்தானம் இதிலும் 2 வரி பன்ச்சுகளை வைத்தே கதையை ஓட்டியிருக்கிறார்.. படத்தை பிற்பாதியில் முழுமையாகத் தாங்கியிருப்பது அவர்தான்.. அவர் கொடுக்கின்ற ஐடியாவில் கதை நகர்ந்து.. நின்று.. பின்பு மீண்டும் இவரே நகர்த்தி.. அனைத்தையும் இவர் தலையிலேயே கட்டியிருப்பதால் சந்தானம் இல்லையேல் இந்தப் படமும் இல்லையென்றாகிவிட்டது.. மயில்சாமியின் இடைச்செருகலால் விளையும் பயனும், அந்தக் காட்சி பயன்படுத்தப்பட்டவிதமும் இயக்குநரின் திறமைக்கு ஒரு சான்று..!

ஒரு சப்பை மேட்டருக்காக போய் சித்தப்பனும், மகனும் 20 வருஷமா பேசாம இருக்காங்கன்னு சொல்லிக் காட்டி அதை முடித்து வைப்பதும்.. கதை பட்டென்று நகர்ந்து மதுரைக்குச் சென்று உதயநிதியின் வீட்டில் நிற்பதும் ரன் பாஸ்ட்.. இடையிடையே படத்தை நிறுத்துவது பாடல் காட்சிகள்தான்.. அதுவும் இல்லைன்னா நயன்ஸை அப்புறம் எப்படித்தான் ரசிப்பது..?

ஹாரிஸ் ஜெயராஜ் இசை.. வெளிநாட்டு லொகேஷன்களுக்கு ஏற்ற பாடல்கள்.. பாடல்களுக்கேற்ற நடனம்.. அதுக்கேற்ற ஒளிப்பதிவு.. ‘சரசர’ பாடலில் நயன்ஸ் கொடுத்திருக்கும் பெர்பார்மென்ஸ் ஓஹோ..! அதிலும் தாவணி ஒதுங்கி தொப்புள் தெரிந்துவிடக் கூடாதுன்னு பின் போட்டு டைட் செய்தவர் மாராப்பை மட்டும் விட்டுவிட்டது ஏனோ.. அதுதான் கவர்ச்சி போலும்.. இன்னொரு பாட்டில் தொடையழகி ரம்பாவைத் தோற்கடிக்கும்விதமாக துணியின் அளவை குறைத்து அணிந்துகொண்டு அவர் போட்டிருக்கும் ஒரு ஸ்டெப் பகீரென்றது.. கேமிரா கொஞ்சம் முன்னாடி நகர்ந்திருந்தால் போச்சு போச்சு..!? நம்மளைவிட இயக்குநர் நயன்ஸின் பெரும் ரசிகராக இருப்பார் போலிருக்கிறது..!

வழக்கமான அம்மாவாக சரண்யா.. கண்டிப்பான அப்பாவாக நரேன்.. அழகு அக்காவாக பழைய ஹீரோயின் சாயாசிங்.. அது யாரு.. நயன்ஸின் மலையாளத் தோழி.. நச்சென்று கலராக இருக்கிறார்.. சந்தானத்திற்கு மணமுடித்தது சாலப்பொருத்தம்.. சின்ன கேரக்டரில் ஜெயபிரகாஷ். இவரது மனைவியாக வனிதா.. சாயாசிங்கின் கணவராக நடித்தவருக்கு நல்ல ஸ்கோப் இருக்கிறது.. புதுமுகமாக இருந்தாலும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். வெல்டன் ஸார்..!

முற்பாதியில் தேய்த்து தேய்த்து கொண்டுபோன டயரை போல செல்லும் கதை.. பிற்பாதியில் சந்தானத்தின் துணையுடன் சிரிப்புத் தோரணத்துடன் கதையைக் கடக்கிறது.. இன்னும் கொஞ்சம் திரைக்கதையை செப்பனிட்டு செய்திருந்தால், பார்த்தே ஆக வேண்டிய படமென்று சொல்லியிருப்போம்..!

ஜஸ்ட் மிஸ்ஸிங்..!

6 comments:

சுபா said...

Boss. Sayasingh purushan, 'unnai pol oruvan' padathula police character pannirupparu. puthumugam kidayathu.

Nondavan said...

தகராறு’ படத்திற்கு ஆயிரம் மடங்கு பெட்டர் :)

Nondavan said...

உதயநிதிக்கு expression என்றால், எத்தனை கிலோ என்று கேட்பார் போல.. ஆனாலும், ஓகே ஓகே’வில் ஜீவாவை அப்பட்டமா காப்பி அடித்தது போல இருக்கும்.. இதில் அவ்வாறு இல்லை... கிளைமாக்ஸ்ல எந்த வித மாடுலேஷனும் இல்லாம, தேமே என்று சொல்கிறார்.. செண்டிமண்ட் காட்சி செத்து போச்சு

Nondavan said...

உதயநிதிக்கு expression என்றால், எத்தனை கிலோ என்று கேட்பார் போல.. ஆனாலும், ஓகே ஓகே’வில் ஜீவாவை அப்பட்டமா காப்பி அடித்தது போல இருக்கும்.. இதில் அவ்வாறு இல்லை... கிளைமாக்ஸ்ல எந்த வித மாடுலேஷனும் இல்லாம, தேமே என்று சொல்கிறார்.. செண்டிமண்ட் காட்சி செத்து போச்சு

Nondavan said...

சந்தானமே’ கண்ணாடி போட்டு முகத்தை மறை. இந்த முகத்துல expression எதிர்பாக்கிறது தப்பு தான் என்று ஓட்டுகிறார்.. செம்ம கலகல :)

Unknown said...

படம் இருந்தது அந்த கடைசி செண்டிமெண்ட் காட்சி தவிர...