25-08-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மூணு தலைமுறை தாண்டிய பரம்பரை பகையை முடிவுக்குக் கொண்டு வர எதிரி வீட்டுப் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்ய நினைக்கிறாரு ஹீரோ. கல்யாணத்தப்போ நடக்குற கசமுசால பொண்ணோட அப்பன் கொல்லப்பட.. ஹீரோயின், ஹீரோவை தந்திரமா கொல்லப் பார்க்குறா.. பொண்டாட்டி மனசை மாத்தி புருஷனான ஹீரோ உயிரோட இருக்கானா இல்லையான்றதை நீங்க தியேட்டருக்கு போய் படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்குங்க..!
ஹீரோ இதயக்கனியாக விமல்.. மற்ற படங்களைவிடவும் இதில் ஓரளவு நடிக்கவும் செய்திருக்கிறார். காரணம் இயக்குநராகவும் இருக்கலாம்..! காமெடி படங்களிலேயே நடித்து வருவதால் இதற்கு மேம்பட்ட நடிப்பைக் காட்ட இவருக்கு வாய்ப்புகள் இல்லை என்பதாலும் மனிதர் தப்பித்தே வருகிறார்.. ஆனால் இந்தப் படத்தில் நடனத்திலும் கொஞ்சம் அசத்தியிருக்கிறார்.. ஒரு பாடலின்போது கட்டைகளுக்கு நடுவில் தாளம் தப்பாமல் தொடர்ச்சியாக ஆடியிருப்பதை பார்த்தவுடன் விமல் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடியிருக்கிறது..! இதையே மெயின்டெயின் செய்வார் என்றே எதிர்பார்க்கிறேன்..!
ஹீரோயின் தாமரையாக பிந்துமாதவி. பொண்ணுக்கு கண்ணுதான் பெரிசு.. எப்பவும் முதுகுப் புறத்தை ஓப்பன் பேஜாக வைத்த ஜாக்கெட்டையே அணிந்திருக்கும் பிந்துவுக்கு காமெடிதான் வரலை. ஆனா நடிப்பு வருது. பெரிய அளவுக்கு நடிப்பைக் கொட்டிக் காட்ட இதில் திரைக்கதை இல்லாததாலும், எப்பவும் முதுகை காட்டிக்கிட்டே இருப்பதாலும் நடிப்பை எதிர்பார்க்கும் அளவுக்கு தமிழகத்து ரசிகர்கள் முட்டாள்களில்லை.. நானும்தான்..!
இவர்கள் இருவரின் நடிப்புப் பற்றாக்குறையை போக்கியிருக்கிறார்கள் சூரியும், சிங்கம்புலியும்.. சாம்ஸும்.. ரவி மரியாவும்..! முறைப் பொண்ணு தாமரை தனக்குத்தான்னு தெனாவெட்டா பேசி அது புஸ்ஸாகிப் போன பின்பும் அந்த வீட்டுக்குப் பந்தோபஸ்துக்கு போறேன்னு சொல்லிட்டு வரும் சூரி அண்ட் கோ செய்யும் கலாட்டாவும்.. விமலை தீர்த்துக் கட்ட செய்யும் திட்டம் பணாலாகும் காட்சிகளும் வயிற்றை பதம் பார்க்கின்றன..!
அவ்வப்போது ரவி மரியாவிடம் திட்டங்களைத் தீட்டி கதை சொல்லிவிட்டு பின்பு அது பொசுக்கென்று போன பின்பு ரவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு பரிதாபமாக நிற்கும் அந்த சில காட்சிகளில் சூரி நம்மிடம் நெருங்கி வருகிறார்.. ஈகோ பார்க்காமல் இது போன்று தொடர்ந்தால் நமக்கும் நல்லதுதான்..!
ரொம்ப நாள் கழித்து வினுசக்கரவர்த்தியை திரையில் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.. உடல் நலக் குறைவையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் எழிலுக்கு எனது பாராட்டுக்கள்..!
ரவி மரியாவின் நடிப்பு கேரியரில் மிக முக்கியமான படமாக இது மாறிவிட்டது. நிச்சயம் அவரால் மறக்க முடியாது.. அந்த காமெடி கிளைமாக்ஸ் அசத்தல்.. மருதமலை மாமணியே என்று ஆரம்பிக்கும் படம் சியர்ஸ் கேர்ள் ஆட்டத்தோடு முடிவடைகிறது..! ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் அயிட்டம் கேர்ள்ஸ்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்கும் உத்தியை ரொம்பவே பாராட்ட வேண்டும்..!
படம் முழுவதுமே ஆங்காங்கே தெளித்துவிடப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள்தான் படத்தை காப்பாற்றி இறுதிவரையிலும் பார்க்க வைக்கின்றன..! முதல் டிவிஸ்ட் முதல் ரீலிலேயே ஆரம்பிக்கிறது..! அடுத்த ரீலில் இன்னொரு டிவிஸ்ட்.. எதிரியின் மகள்தான் தாமரை என்பது தெரியாமலேயே காதலிக்கத் துவங்குகிறார்.. இப்படி அடுத்தடுத்த ரீல்களிலேயே டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக நகைச்சுவையுடன் கொண்டு போய் இடைவேளையில் மாமனாரை கொன்றுவிட்டு நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர்..!
இடைவேளைக்கு பின்பு.. பழி வாங்கும் போக்கு.. முதல் இரவு நடக்காமல் போவது.. அதையொட்டிய நகைச்சுவைகள்.. சூரி அண்ட் கோவின் தாக்குதலுக்கு பதிலடி சிங்கமுத்து தரும் கவுண்ட்டர்.. என்று பெரிதாக லாஜிக்கை யோசிக்கவேவிடாத அளவுக்கு திரைக்கதையை காமெடியாக்கி கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.
சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும், நண்பர் கோபிகிருஷ்ணாவின் எடிட்டிங்கும் கச்சிதம்.. ஆனாலும் ஒரேயொரு காட்சியில் இணை இயக்குநர்களின் அலட்சியம் தெரிந்தது.. ஒரு காட்சியில் விமலின் சட்டையில் மாட்டியிருந்த கூலிங்கிளாஸின் ஒரு லென்ஸ் மட்டும் தவறி கீழே விழுவது அப்பட்டமாகத் தெரிகிறது.. மீண்டும் அடுத்த ஷாட்டில் அந்த லென்ஸை எடுத்து சரியாக மாட்டியிருக்கிறார்கள். அப்போ முன்னாடி எடுத்த ஷாட்டில் தவறு இருக்குன்னு தெரிஞ்சு மறுபடியும் அதை ரீஷூட் செஞ்சிருக்க வேண்டாமா..? என்ன புள்ளைகப்பா இவுங்க..? அந்தக் காட்சியின் வேற ஷாட்டுகள் எடுக்காததால் எடிட்டரால் வேறு ஒன்றும் செய்ய முடியாமல் போயிருக்கிறது..!
இமானின் இசையில் அம்மாடி அம்மாடி பாடலும் நெலாவட்டம் நெத்தியிலே பாடலும் ஓகேதான்.. அந்த போம் போம் போம் பாடலை நடுவில் இடம் பெற்றிருக்க வேண்டியது.. திரைக்கதையின் வேகத்தைக் குறைப்பதாக படம் பார்த்த பல இயக்குநர்களும் சொன்னதால் அதனை புரோமா ஸாங்காக மாற்றிவிட்டதாகக் கூறினார் இயக்குநர் எழில். ஆனாலும் அதுவும் ரசனையாகத்தான் இருக்கிறது..!
மனம் கொத்திப் பறவையில் என்ன பாடம் கற்றுக் கொண்டாரோ அதையே இதிலும் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் எழில். நிச்சயம் படம் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் தோல்வியைத் தராது என்றே நம்புகிறேன்..!
ஒரு முறை நிச்சயமாக பார்க்கலாம்..!
டிஸ்கி :
ரொம்ப வருஷத்துக்கப்புறம் மரத்தடி பஞ்சாயத்து இதுலதான் வருது. விமல், தாமரையை தன்னோட சேர்த்து வைக்கச் சொல்லி பிராது கொடுக்குறாரு. அதை விசாரிச்சு பொண்டாட்டியோ வார்த்தைதான் முக்கியம்ன்னு சொல்லி பிந்துவோட விருப்பப்படியே விமலோட அனுப்பி வைக்குறாங்க பஞ்சாயத்துக்காரங்க. அதுல பஞ்சாயத்து பண்ற ரெண்டு நாட்டாமைகளும் நல்லாவே தீர்ப்பு சொல்லி நடிச்சிருக்காங்கப்பா.. எனக்கு இருக்குற ஒரு டவுட்டு.. இவுங்க ஏன் விஜய்க்கும், ஆத்தாவுக்கும் நடுவுல போயி பஞ்சாயத்து பண்ணி வைச்சிருக்கக் கூடாது..? இனிமே வர்ற எல்லா சினிமா பஞ்சாயத்துக்கும் இதே பாணில இவுகளையே உக்கார வைச்சு பஞ்சாயத்து நடத்தினா என்ன..? யோசிங்கப்பா.. யோசிங்க..!
|
Tweet |