02-08-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தோழர் பத்ரியின் இந்தப் பதிவை படித்தபோது நானெல்லாம் ஏழ்மையாக இருக்கின்றேனா அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்றேனா என்கிற சந்தேகமும், வினாவும் எனக்குள்ளேயே எழுகிறது..!
ஓட்ஸ் கஞ்சி குடிப்பதாலேயே தன்னுடைய ஒரு நாள் உணவுத் தேவையை குறைந்தபட்சம் 50-ல் இருந்து அதிகப்பட்சம் 120 ரூபாய்க்குள் முடித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.. இது அவரைப் பொறுத்தவரையில் சரிதான். ஏனெனில் அவர்தான் மூன்று வேளையும் ஓட்ஸ் கஞ்சியே குடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரே..!? ஆனால் நாமெல்லாம் அப்படியா..?
எனக்கு ஒரு நாளைக்கு எனக்கு ஆகக் கூடிய உணவுக்கான செலவுகளை பாருங்கள்..!
பேச்சிலர் என்பதால் அதிகம் சமைப்பதில்லை. லீவு நாட்களில் மட்டும் அவ்வப்போது சமையல் உண்டு. எலெக்ட்ரிக் குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிடுவேன்..! பருப்பு பொடி பாக்கெட் வாங்கி வைத்திருக்கிறேன். நல்லெண்ணெய் உண்டு.. இதனை மிக்ஸ் செய்து முதல் தவணை சோற்றை உள்ளே தள்ளிவிடுவேன். அடுத்த ரவுண்டுக்கு பக்கத்து வீட்டில், கீழ் வீட்டில் டீசண்டான முறையில் பிச்சையெடுத்து வாங்கும் கொஞ்சூண்டு ரசம். ஒருவேளை ரசம் இல்லையெனில் தயிர் பாக்கெட்..! இதுதான் அந்த லீவு நாளின் மூணு வேளைக்கும்..!
ஒரு பாக்கெட் பருப்புப் பொடியின் விலை 18 ரூபாய். அரிசி ஒரு கிலோ 45 ரூபாய். ஏதோ கலரா இருக்கு. நீங்களே பார்த்துக் கொடுங்கன்னு கேட்டுக்குவேன். நமக்கு அரிசில கல்லு பொறுக்கக் கூடத் தெரியாது..! அப்புறம் தயிர் பாக்கெட். 8 ரூபாய். ஒரு பாக்கெட் பருப்புப் பொடி பயன்படுத்துவதைப் பொறுத்து ஒரு வாரத்திற்கும் வரும்.. ஒரு மாதத்திற்கும் வரும்.. தயிர் பாக்கெட் அதிகப்பட்சம் 6 முறைகள் என்றால் 48 ரூபாய்.. ஆக மொத்தம் வீட்டில் சமைத்துச் சாப்பிடும் அதிகப்பட்சம் 6 நாட்களுக்கு மட்டுமே மொத்தம் 119 ரூபாய்.
இனி வெளியில் தின்னு தீர்ப்பதை கணக்கு பார்ப்போம்.. காலையில் ஹோட்டலில் சாப்பிடுவது 2 இட்லி, ஒரு தோசை, ஒரு காபி.. அதிகப்பட்சம் 50 ரூபாய். மதியம் ஐ.டி. ஏழைகள் அதிகமிருக்கும் தரமணி ஏரியாவில் இருக்கும் ஆந்திரா மெஸ் சாப்பாடு.. மதியம் கண்டிப்பாக ஆம்லெட் உண்டு. ஆக அதோடு சேர்த்து 60 ரூபாய். இரவு 3 புரோட்டா 1 ஆம்லெட். அல்லது 3 கல்தோசை 1 ஆம்லெட்.. இதுவும் 50 ரூபாய் வந்துவிடும்.. ஆக.. கடையில் சாப்பிடும் எனது ஒரு நாள் செலவு 160 ரூபாய். 31 நாளில் வீட்டில் சாப்பிடும் 6 நாட்களைக் கழித்து மிச்சமிருக்கும் 25 நாட்களுக்கு இந்தச் செலவு என்றால் ஒரு மாதத்திற்கு கொட்டிக்கிறதுக்காக மட்டுமே நான் செலவழிக்கும் தொகை 4000 ரூபாய். இதில் வீட்டில் சாப்பிடுவதற்கான தொகையையும் சேர்த்தால் 4119. இதன் மூலமாக ஒரு நாளின் எனது தின்னும் செலவு தோராயமாக 132 ரூபாய் வருகிறது..!
பத்ரி சொன்னதுபோல ஓட்ஸ் கஞ்சி உடலுக்கு நல்லது என்றாலும் அதனை செய்து தருவதற்கு அவருக்கு மனைவி இருக்கிறார்.. குடும்பச் சூழல் இருக்கிறது.. அதனால் அவரால் சுருக்கமாக வைத்துக் கொண்டு அனுபவிக்க முடிகிறது.. என்னை போன்ற பேச்சுலர்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி பிடிக்காமல் மற்றவைகளை சாப்பிட நினைப்பவர்களின் கதி என்னாவது..? நாங்களெல்லாம் நாட்டில் இருக்கவே கூடாதா என்ன..?
அரசுகளை நடத்தும் கூமுட்டைகள் என்றைக்காவது சொந்தக் காசில் சாப்பிட்டிருப்பார்களா..? இது போன்ற அரைவேக்காட்டுத்தனமாக ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்குள் சாப்பிட முடியும் என்று சொல்லும் அறிவாளிகள், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வந்து எங்களைப் போன்றவர்களுடன் இருந்து சாப்பிட்டுப் பார்க்கலாமே..?
அரசியலுக்கு வந்ததில் இருந்து கடைசியாக கட்டையில்போய் சுடுகாட்டில் எரியும்வரையில் அரசு செலவிலேயே தின்னுக் கொழுத்த திமிர் பிடித்தவர்கள்தான்... தம் மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டு நாட்டு மக்களைப் பற்றியே கவலைப்படாமல் எழுதுவதும், பேசுவதுமாக இருக்கிறார்கள்.
6 நாட்களுக்கு 119 ரூபாயில் சாப்பிட முடியுமென்றால் நான் காலம் முழுக்க வெறும் பருப்பு சாதம், தயிர் சாதமே சாப்பிட்டுவிட்டு சாக வேண்டியதுதானே..? குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டு சாப்பிடு.. இன்னமும் குறையும் என்பார்கள்.. குறையவில்லை. ஆனால் குறைத்துக் கொள்கிறார்கள் மக்கள். இதுதான் உண்மை..!
தனி நபர் வருமானம் குறையும்போது ஒவ்வொரு தனி மனிதனும் முதலில் செய்யும் சிக்கன நடவடிக்கையே வெளியில் சாப்பிடுவதை நிறுத்துவது.. காபி குடிப்பதை நிறுத்தவது.. மாலை சிற்றுண்டியை நிறுத்துவதுதான்.. இப்படி தனது சாப்பாட்டு ஆசையைக்கூட நிராசை செய்துவிட்டு சிக்கனம் பிடிக்கிறான் என்பது இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் ஓசியில் தின்னே கொழுத்து போயிருக்கும் அரசியல் அயோக்கியர்களுக்கு புரியாது.. தெரியாது..!
ஒரு வேளைக்கே வெறும் 30 ரூபாயில் சாப்பிட முடியுமென்றால் அனைத்து மக்களும் இப்போது கையேந்தி பவனில்தான் சாப்பிட வேண்டும்.. இப்போதே சரவணபவனில் ஒரு காபி 35 ரூபாய் என்கிறார்கள். ஒரு தோசை 60 ரூபாய் என்கிறார்கள். இதெல்லாம் எதற்காக தெரியுமா..? கொஞ்சம் விலையைக் குறைத்தால் அழுக்கு உடைகளுடன், குளிக்காத உடலுடன், உழைத்த களைப்புடன் உண்மையாகவே மனிதர்களாக வாழும் ஒரு தொழிலாளர் கூட்டமும் சரவண பவனுக்குள் வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் காசைப் பற்றியே கவலைப்படாமல் பச்சைத் தண்ணிக்குக்கூட கடன் அட்டையை எடுத்து வீசும் ஒரு பணக்காரக் கூட்டம் அசூயைபடும். அதன் பிறகு அவர்கள் சரவண பவனுக்குள் வர மாட்டார்கள். சங்கோஜப்படுவார்கள் என்பதால்தான் பைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு அந்த ஹோட்டலில் விலைகள் கூடிக் கொண்டே போகின்றன..
மிடில் கிளாஸ் அம்பிகளும், அண்ணாச்சிகளும் அங்கே போய் தின்பதையே ஒரு கவுரமாக நினைத்து பணத்தைக் கொட்டுகிறார்கள். இது அவர்களைவிட ஏழ்மை நிலையில் இருக்கும் மற்ற மக்களுக்கு அவர்கள் செய்யும் பச்சைத் துரோகம் என்பது மட்டும் அவர்களுக்குப் புரியவில்லை..! அவர்களுக்கு இது ஸ்டேட்டஸ் பிரச்சினை..! ஆனால் இதே பணக்காரக் கூட்டம் செத்துப் போன பிணமாய் சென்னையைச் சுற்றியிருக்கும் எந்தவொரு சுடுகாட்டிற்கு போனாலும், முன்பு எரியூட்டப்பட்ட ஒரு பிச்சைக்காரனின் சாம்பல் ஒட்டியிருக்கும் அதே தகரப் பெட்டியில்தான், இவர்களது சாம்பலும் ஓட்டித்தான் கிடைக்கப் போகிறது என்பதையும் உணர்ந்தவர்களில்லை..!
எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போகுது மேட்டர்.. ரிட்டர்ன் டூ மேட்டர்..!
ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்கு என்ன சாப்பிட முடியுமாம்..? அரிசி விக்கிற விலைல.. பருப்பு விக்குற விலைல.. எண்ணெய் விக்குற விலைல.. அட.. கிராமப்புறங்களில் அடுப்பூதி சமைக்கும் வீடுகளில்கூட.. ஒரு வீட்டுக்கு 4 பேர் என்று வைத்து கொண்டால்கூட.. மூணு வேளையும் கஞ்சிதான் குடிக்க முடியும்.. இப்போது அரசாங்கமும் இதனைத்தான் சொல்கிறது..!
வெறும் கஞ்சி குடிச்சாவது வாழுடா.. அது உன் தலைவிதி.. உனக்காச்சும் கஞ்சி கிடைக்குது.. இந்தக் கஞ்சியும் கிடைக்காதவன் நாட்டுல நிறைய பேரு இருக்கான். அவன்தான் எங்களைப் பொறுத்தவரையிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவன் என்கிறார்கள்.. இந்த வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் சத்தியமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்கள்தான் எல்லா ஊரிலும் பிச்சையெடுக்கிறார்கள்.. கோவில் வாசலில் அமர்ந்திருக்கிறார்கள். நடு ரோட்டில் சிக்னல்களில் கைக்குழந்தையோடு வந்து பசிக்குது என்கிறார்கள்..! நடக்க முடியாமல் குண்டி தேய கைகளில் குஷ்டத்துடன் வந்து காசு கொடு என்கிறார்கள்.. இந்த பாவப்பட்டவர்கள்தான் நிசமாகவே கஞ்சிக்கும் வழியில்லாமல் சாகிறார்கள்.. இவர்களுக்குத்தான் இந்த அரசுகள் இப்போது மானியம் வழங்கி அவர்களைக் காப்பாற்றப் போகிறது போலிருக்கு..! மொதல்ல அந்த கஞ்சிக்கு செத்தவங்களுக்கு அடையாள அட்டையைக் கொடுத்திட்டு அப்புறமா அவங்களுக்கான காசை கொடுங்கப்பா.. இல்லைன்னா உங்க அரசியல் கூட்டாளி நாய்களே இதுலேயும் புகுந்து ஆட்டையைப் போட்டுட்டு போயிருவானுக..!
இந்த நாடும், ஆள்பவர்களும் நாசமாப் போய்த் தொலையட்டும்..!
|
Tweet |
12 comments:
செமையான சவுக்கடி அண்ணே....!
நம்மைப்போல பேச்சுலராக அவர்களும் வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும், நல்ல நாண்டுகிட்டு நின்னு தின்னுட்டு ஏசி ல உக்காந்து வியாக்கியானம் பெசுரவனுக்கு மக்களைப் பற்றி என்ன தெரியப் போகுது இல்லையா ?
//இந்த நாடும், ஆள்பவர்களும் நாசமாப் போய்த் தொலையட்டும்..!//
தவறு. இந்த நாட்டில் இருக்கும் ஊழல்வாதிகள் குடும்பத்துடன் நாசமாய் போகட்டும்
முருக பக்தர்லாம் இப்படி ஆவேசபடக்கூடாது. அடுத்தவனுக்கு இப்படி கேட்டது நினசுகிட்டு நீர் கோடி தடவை ஆரோஹரா போட்டா புண்ணியம் சேராது, பதிலா உங்கப்பன் முருகன் அருள் குடுக்குறதுக்கு பதிலா அல்வா தான் குடுப்பாரு
உ த,
பத்ரி சொல்வது சாப்பாட்டுக்கு ஆகும் செலவு வீடு மற்றும் பிற தேவைகளுக்கான செலவை விட மிக மிக குறைவு என்பதே. அதற்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் கருத்தாக பதிவு செய்துள்ளார். கட்டுரையின் முக்கிய கருத்தை விட்டுவிட்டு வாதம் செய்வது சரியல்ல.
நல்ல பதிவு, அருமையான கருத்துகள். நன்றி
உங்கள் பதிவு நிதர்சனமான உண்மை..
பத்ரி எழுதியிருப்பது நிச்சயம் மூடத்தனமானது! சமையல் பொருட்களும், காஸ் சிலின்டர் இருந்தால் சமைத்து விடமுடியுமா ?
சுத்தமான இடம், சமையல் பாத்திரங்கள் வேண்டாமா? இவற்றிற்கும் செலவு உண்டு...அதையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்.
விலையைக் குறைத்தால் அழுக்கு உடைகளுடன், குளிக்காத உடலுடன், உழைத்த களைப்புடன் உண்மையாகவே மனிதர்களாக வாழும் ஒரு தொழிலாளர் கூட்டமும் சரவண பவனுக்குள் வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் காசைப் பற்றியே கவலைப்படாமல் பச்சைத் தண்ணிக்குக்கூட கடன் அட்டையை எடுத்து வீசும் ஒரு பணக்காரக் கூட்டம் அசூயைபடும்
விலையைக் கேட்டு வந்த பசி மாயமாய் பறந்து போனது.
கஞ்சி தொட்டிய அவனவன் வீட்டுலே தொறங்கடாங்குது அரசாங்கம்.
என்னா தல இதுகூட புரியல உனக்கு ...
(ஹ்ம்.ஒரு ரூவான்னா....இவனுகளுக்கு அர்த்தம் புரிலியே.... தெரியாம எங்க மொழில பேசிக்கிற ஒரு ரூவாய சொல்லிட்டோம்)- அரசியல்வாதிகள்.
1. I think Badri article was a sarcastic comment. More about making fun of Planning Commission.
2. I agree price are high in Saravana Bhavan or Sangeetha Hotel or Adyar Anantha Bhavan. But what alternative is there - most of the other small hotels the cleanliness and hygiene is missing. And they employ North East Indians who are not trained properly in cleanliness.
Please suggest me a hotel with normal price and good hygiene.
Wait and see what happens in Amma hotel after some days.
3. First, Govt should get rid of corruption, only then it can control private sector absurd profits. With Corruption problem is everywhere - High Real Estate price, High Food price, High Education cost, High Medical expense....etc.,
அண்ணாச்சி சௌக்கியமா...??? எப்படி இருக்கீங்க?
கூல் டவுன்.. கூல் டவுன்...கூல் டவுன்...!!!
நீஙக் சொல்வது தான் நிதர்சன உண்மை. அவர் பேச்சின் படியே வைத்துக்கொண்டாலும், எத்தனை நாளுக்கு தான் கஞ்சியே குடிக்க முடியும்??? அது ஒரு ஜெயில் வாழ்க்கையாகிடாது...!!! நம்மாள முடியாது சாமியோவ்....
Its pathetic. How can a person live by just taking Oats. May be he get used to that and have some disease. Doesn't mean rest of the world has to survive with that disease and take only Oats. Instead he can use 'Amma' Water and just complete entire day's meal with just 30Rs. (1 bottle water / meal). Does it sounds good?
அண்ணே நான் ஒரு நாளைக்கு முப்பது பேர் கிட்டே பிச்சை வாங்கிட்டா நானும் பணக்காரன் தான்.
நாலணா எட்டணா செல்லாது அதனாலே ஒரு ஆள்கிட்டே ஒரு ரூபாய் கன்பார்மு. முப்பது ஆள்கிட்டே முப்பது ரூபா கண்பார்மு.
Post a Comment