தலைவா - சினிமா விமர்சனம்

23-08-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதியே ஆகணுமான்னு யோசிச்சேன். அதான் எல்லாரும் ஏற்கெனவே கொத்துக் கறி போட்டாச்சே.. நாம வேற அதை செய்யணுமான்னு ரொம்பவே யோசிச்சிங்கு.. ஆனா கடைசீல எழுதி வைச்சுத் தொலைஞ்சா.. நாளைக்கு எனக்கு பின்னாடி வர்ற சந்ததிகளுக்கு பெரிய உதவியா இருக்குமேன்ற பரந்த எண்ணம் என் மனசுல எழுந்ததால இதை எழுதி வைக்கிறேன்..!


எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் செவ்வாய்கிழமை மாலை 7.15 மணி காட்சியே 8.15  மணிக்குத்தான் துவங்கியது.. கட்டுக்கடங்காத வாலிபப் பசங்களின் கூட்டம்.. இதில்  காத்திருந்த நேரத்திலெல்லாம் விஜய்யின் நற்பணி இயக்கத்தினர் முன் கேட்டில் கட்டியிருந்த பேனரில் ஏறி, ஆவின் பால் பாக்கெட்டை கிழித்து தலைவனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.. ரசிகர்களின் கரகோஷம் பக்கத்தில் இருந்த ஐயப்பன் கோவில் மணியையெல்லாம் அமுக்கிவிட்டது..! 

டிக்கெட் விலை 100 ரூபாதான்.. ஒரே விலைதான்.. வேறு எதுவும் இல்லை. அயோக்கியத்தனம்.. இதை எந்தத் தலைவனும் தட்டிக் கேட்க வரலைன்றதை இங்க பதிவு செஞ்சாகணும்.. அன்னிக்குக் காலை ஷோவே லேட்டா போட்டதால ஒரு மணி நேரம் கூடிப் போயிட்டதா தியேட்டர்காரங்க சொல்லிக்கிட்டிருந்தாங்க.. 

வடபழனி ஸ்டேஷன்ல இருந்து வந்திருந்த போலீஸார் எதிரில் இருந்த புதிய ஏஸி ஹோட்டலில் வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு உள்ளே போய் படத்தை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு “இன்னும் 20 நிமிஷம்தானாம்..” என்று வெளியில் வந்து எங்களுக்கே ஜோஸியம் சொன்னார்கள்..

சர்ரென்று ஒரு ஜீப்பில் வந்திறங்கிய இன்ஸ்பெக்ட்டரு, நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்து இப்படியே போனா செகண்ட் ஷோ ராத்திரி 12 மணிக்குள்ள போடுவாங்க.. அது முடிய 3 மணி ஆயிருமே.. அதுவரைக்கும் நாம காவல் காக்கணுமா..? நமக்கென்ன வேலை வெட்டியில்லையா..? என்று ஓவராக சிடுசிடுத்தார்.. இந்தக் கோவம் தியேட்டரின் உள்ளே பாஸ் செய்யப்பட இன்ஸ்பெக்டர் மட்டுமே உள்ளே அழைக்கப்பட்டார். 5 நிமிடம் கழித்து கையில் இருந்த வாக்கிடாக்கியில் எதையோ பேசியபடியே சப் இன்ஸ்பெக்டர்களிடத்தில் வந்து தனது இடது கையால் தனது இடது பாக்கெட்டில் இருந்து ஒரு வெள்ளை கவரை எடுத்து அவர்கள் கையில் கமுக்கமாக கொடுத்துவிட்டு வீரமாக நடந்து சென்று ஜீப்பில் ஏறி பறந்தே போனார்.. ராத்திரி 3 மணிவரைக்கும் இருந்தாகணும்னு தியேட்டர்காரங்க “அன்பா” சொல்லிட்டாங்க போலிருக்கு..! நாடுன்னா இப்படீல்ல இருக்கணும்..!

5 மணி ஷோ முடிஞ்சு கூட்டம் வெளியே வர்றதுக்குள்ள நின்ன கூட்டம் உள்ளாற பூந்திருச்சு.. டிக்கெட்டே கிழிக்காம அப்படியே எல்லாரையும் உள்ளார விட்டுட்டாங்க.. ஓடின கூட்டம் கிடைச்ச இடத்துல எல்லாம் உக்காந்திருச்சு.. படம் துவங்குறவரைக்கும் ஒவ்வொரு வரிசைல இருந்து விட்டவிட்டு விசில் சப்தமும், கை தட்டலும், தலைவா குரலும் ஓங்கி ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு..!

3 விளம்பரம் போட்டு கடைசியா சென்சார் சர்டிபிகேட் காட்டியவுடன் என் காது மிஷினை கழட்டி பாக்கெட்டில் வைத்துவிட்டேன்.. இரண்டு பக்கத்திலும், முன், பின் பக்கத்திலும் எழுந்த கூச்சலில் 5 டெசிபலாச்சும் காணாமல் போயிருக்கும்.. இப்பவும் ஒய்யுன்னு சவுண்டு வந்துக்கிட்டேயிருக்கு..! இளைய தளபதி டைட்டிலை பார்த்ததும் ஒரு கத்து.. முதுகை காட்டும் அந்த போட்டோவை காட்டியவுடன் ஒரு கத்து.. கூச்சல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்க என்னைப் போன்ற அப்பாவிகளின் கதறல்களை கேட்க அங்கே ஆட்களே இல்லை..!  விஜய்யின் அறிமுகக் காட்சி வந்தவுடன் தியேட்டரே ஒரு கணம் ஆடிப் போனது.. தலைக்கு மேலே பேப்பர், பேப்பர்களாக பறந்து ஸ்கிரீன் முழுவதும் பேப்பர்களே தெரிந்தன.. அந்த பாடல் காட்சி முழுவதையும் கேக்கவே விடலை.. அப்பாடான்னு கொஞ்சம் வசனம் பேச ஆரம்பிச்சவுடனேயே மறுபடியும் தலைவா.. தலைவான்னு கூப்பாடு..! 

இப்படியே ஆரம்பிச்சு முடிவுவரையிலும் இந்த ரசிகர்களின் அக்கப்போரினால் வசனங்களும் காதில் விழுகாமல், ஏற்கெனவே அடுத்த வரும் சீனை சின்னப் பையனுகளே சொல்லிர்ற மாதிரியிருக்குற திரைக்கதையும் இருந்து தொலைத்ததால்.. என்னமோ விமர்சனம் எழுதற கடமைக்காக உக்காந்து சீட்டைத் தேய்ச்சுட்டு வந்திருக்கேன்..!

கதையென்ன..? அவசியம் சொல்லணுமா..? எல்லாம் நீங்க பார்த்து பார்த்து சலிச்சுப் போன கதைதான்..! மும்பை.. தாராவி.. தமிழர்களுக்கெல்லாம் தலைவன்.. தாராவியை இடிச்சு பிளாட் கட்ட நினைக்கும் கும்பல்.. தடுக்கும் தலைவன்.. தலைவனுக்கு எதிரா அரசியல் சூழ்ச்சி.. தலைவனை பிடிக்க போலீஸ் படை.. தடுக்கும் மக்கள்.. தப்பிக்கும் தலைவன்.. மகனை வைத்து தலைவனை பிடிக்க மகாராஷ்டிராவின் சூப்பர் போலீஸ் பிளான்.. மகன் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு ஹீரோயின் அமலாபாலையும், சுரேஷையும் அனுப்பி தந்திரமா மகனை மும்பைக்கு இழுத்திட்டு வந்து அப்பனை பார்க்க வைக்குறாங்க.. அதே நேரம் அப்பனையும் பிடிச்சர்றாங்க.. (புதிய பறவைக்கு திரைக்கதை, வசனம் எழுதின ஆரூர்தாஸ் இப்பவும் உசிரோடத்தான் இருக்காரு.. ஒரு கேஸ் போடச் சொல்லுவோம்.. ஏதோ நம்மளால முடிஞ்சது..!) இப்பத்தான் டிவிஸ்ட்டு.. அப்பன் குண்டு வெடிப்பில் சாவ.. மகன் திரைக்கதையின் கட்டாயத்தில் தலைவனாகிறான்..

அப்பன் தனது இளைய வயதில் செய்த கொலைக்காக கொலையுண்ட எதிரியின் மகன் வளர்ந்து இந்த அப்பன் தலைவனையும் கொலை செய்யத் துடிக்கிறான். இவன்தான் குண்டு வைத்து அப்பனை கொலை செய்ததாக மகன் தலைவனுக்கும் தெரிய வர.. இவர்களுக்கிடையில் பெரிய சண்டையாம்.. யார் ஜெயிப்பாங்கன்னு எதிரில் டீக்கடை வைச்சிருக்கிறவனுக்குக்கூட தெரியும்.. ஸோ.. இத்தோட போதும்.. நிறுத்திக்குவோம்..!

அப்பன் தலைவனாக சத்யராஜ்.. எகத்தாளமில்லாமல், அடக்கமாக, பாந்தமாக, சாந்தமாக சர்க்கார் பட அமிதாப் வேடத்தில் கச்சிதமாக நாப்பது வார்த்தைகள் டயலாக் பேசி பரிதாபமாக செத்துப் போகிறார்..!  இயக்குநர் விஜய்யின் அனைத்து படங்களிலுமே தவறாமல் இடம் பிடிக்கும் நாசர் இந்தப் படத்திலும் எஸ்.ஏ.சி.யின் பலத்த எதிர்ப்பையும் மீறி இடம் பிடித்திருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சி.யின் எதிரணியில் முக்கிய நபராக நாசரின் மனைவி கமீலாதான் இருக்கிறார். அவர் எப்படி நம்ம படத்தில் நடிக்க முடியும் என்று ஒரு நாள் கத்தி ஷூட்டிங்கை நிறுத்தி வைத்திருக்கிறார் எஸ்.ஏ.சி. ஆனாலும் இயக்குநர் விஜய்யின் விடாத கெஞ்சலினால் மனமிறங்கிய நடிகர் விஜய் இதற்கு பச்சைக் கொடி அந்த சின்ன கேரக்டரில் நடித்துக் கொடுத்திருக்கிறார் நாசர். அந்த எதிர்ப்பு கூட இல்லையெனில் படம் முழுக்க வரும் துணை கமிஷனர் சுரேஷின் கேரக்டர் நாசருக்குத்தானாம்..!

விஜய்.. சொல்லவே வேண்டியதில்லை. எந்திரிச்சா கத்துறாங்க.. உக்காந்தா கத்துறாங்க.. டான்ஸ் ஆடினாலும் கத்துறாங்க.. வாயைத் தொறந்து டயலாக் பேசினால்கூட கத்துறாங்கன்னா பார்த்துக்குங்களேன்..! கடைசி பாடலின்போது என் பக்கத்தில் குடும்பத்துடன் வந்து உட்கார்ந்திருந்த ஒரு ஆள் திடீரென்று எழுந்து சென்று ஸ்கீரின் அருகில் ஆட்டம் போடத் துவங்க.. அவருடைய மனைவி பரிதாபமாக எங்களை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்ததை நினைத்தால் பாவமாக இருந்தது..!

விஜய் ரொம்பவே தேறிவிட்டார்.. டயலாக்கை நடிப்போடு சேர்த்தே கொடுக்கிறார்.. சிறப்பாக டான்ஸ் ஆடுகிறார்.. டான்ஸில் இவரை மிஞ்ச இவர் வரிசை நடிகர்கள் வேறு யாருமில்லைதான்.. நடிகர்களில் சிம்ரன் இவர்தான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்..!

அளவெடுத்து தைத்தாற்போன்ற வெள்ளை சட்டை காஸ்ட்யூமில் பார்க்கவே சின்னப் புள்ளை மாதிரியிருக்காரு.. ஆனாலும் சதக்.. சதக்.. டுமீல்.. டுமீல் கொலைகளையெல்லாம் சர்வ சாதாரணமாகச் செய்கிறார்.. பட்டப் பகல்ல ஷூட்டிங் நடக்கும்போது ஒரு கொலை.. அப்புறம் ஆங்காங்கே போட்டுத் தள்ளிக் கொண்டே போகிறார்..! மும்பை போலீஸ் நம்ம தமிழ்நாட்டு போலீஸைவிட கேவலமா இருக்குன்னு இயக்குநர் விஜய் இது மூலமா தெளிவா சுட்டிக் காட்டியிருக்காரு..!

ஒரு காட்சில பாருங்க.. மராத்தியர்களைத் தவிர மத்தவங்க இருக்கக் கூடாது.. வெளியேறணும்னு சொல்லி ஒரு கூட்டம் கலாட்டாவை ஆரம்பிக்குது.. எங்கிருந்தோ ஓடி வரும் விஜய் கலாட்டா செய்பவர்களை அடித்து உதைத்துவிட்டு ஆசுவாசப்படும்வரையிலும் அவருடைய மூக்குக் கண்ணாடி கீழே விழுகவே இல்லை என்பதை பார்க்கும்போது இயக்குநர் எந்த அளவுக்கு சிரத்தையெடுத்து டைரக்சன் பண்ணியிருக்காருன்னு நினைச்சுப் பாருங்க.. வெல்டன் ஸார்..!

சந்தானம் ஆஸ்திரேலியால இருக்கும்போது வழக்கமான காமெடியன் மாதிரி ஹீரோயினை ஒன் சைடு லவ்வா லவ்வுறார்.. உண்மை தெரிஞ்சதும் விட்டுக் கொடுக்குறார்.. அவ்வப்போது கொஞ்சூண்டு சிரிக்க வைக்குறார். அவ்ளோதான்.. அதுக்காக அமலாபாலை போலீஸ் டிரெஸ்ஸில் பார்த்து விஜயசாந்தி மாதிரின்னு சொல்றதெல்லாம் காமெடி வறட்சியாகிகிட்டே போகுதுன்றதை காட்டுது..!

அமலாபால்.. இந்தப் படத்துக்கு எதுக்கு ஹீரோயின்னு தெரியலை.. சரோஜாதேவிகிட்ட கடைசியா சிவாஜி கேப்பாரு.. “நான் செஞ்ச தப்பை கண்டுபிடிக்க..  உனக்கு காதல்ன்ற புனிதமான விஷயம்தான் கிடைச்சதா..? வேற எதுவும் கிடைக்கலையா..?”ன்னு.. இதுல விஜய் அதையெல்லாம் கேக்கலை.. ஆனா அமலாபாலே வாலண்டியரா வந்து அப்பப்போ விஜய்யை காப்பாத்துறாங்க. கட்டக் கடைசீல அத்தனை அரிவாள் வெட்டுக்களையும் தாங்கி செத்துக் கிடக்குறவங்களை தன் துப்பாக்கியால சுட்டுட்டு தானே சுட்டுக் கொன்னதா சொல்லி விஜய்யை காப்பாத்துறாங்க.. (ஏன் தாயி.. போஸ்ட் மார்ட்டத்துல இந்த அரிவாள் வெட்டு, கத்தி சொருவெல்லாம் கண்டுபிடிக்க மாட்டாங்களா..? அப்போ அதையும் நானே செஞ்சேன்னு சொல்லிருவீங்களா..?) 

சரி விடுங்க.. கதையே 5 படத்துல இருந்து உருவலு.. இந்த ஒரு காட்சி எப்படியிருந்தா நமக்கென்ன..? இசை ஜி.வி.பிரகாஷ்.. தலைவா தலைவா பாடலும், வணக்கம்ண்ணா பாடலும் கேட்கும்படி இருந்தது.. அதையும் பார்க்குற மாதிரி எடுத்திருக்காங்க.. இட்ஸ் ஓகே..!

ஒளிப்பதிவு நீரவ்ஷா.. ஆஸ்திரேலியா மாதிரியான நாட்டு இறக்கிவிட்டா எல்லா ஒளிப்பதிவாளரும் இதைத்தான் செய்வாங்க.. மும்பைக்கு கடலு இருக்கும்போது நமக்கென்ன கவலை..? ராத்திரி எபெக்ட் அதிகம் இல்லாததால வித்தையெல்லாம் காட்டலை.. கொடுத்த சம்பளத்துக்கு ஓகேதான்..!

கிளைமாக்ஸ்ல சத்யராஜோட சால்வையை போர்த்திக்கிட்டு விஜய் நிக்குற சீன்ல மெய் மறந்து போயிட்டாங்க ரசிகர்கள். இனி இந்த சால்வை எப்பவும் விஜய் உடம்புல இருக்கணும்னு அவரோட ரசிகர்கள் நினைப்பாங்க. அவரை வைச்சு அடுத்தடுத்து படம் பண்ணப் போற இயக்குநர்கள்தான் பாவம்.. செத்து சுண்ணாம்பா ஆகப் போறாங்க..!

படத்துல ஒரு சின்ன டயலாக்.. “நாம தப்ப தட்டிக் கேட்க வரலை.. தண்டிக்க வந்திருக்கோம்”ன்னு.. எல்லாரும  கை தட்டுனாங்க.. எனக்கு சிரிப்புதான் வந்துச்சு.. இனிமேலும் எல்லா காலத்திலும் அப்படித்தான் வரும்.. பாவம் விஜய்..! 

படம் விடும்போது மணி ராத்திரி 11.40. செகண்ட் ஷோவுக்கும் அம்புட்டு கூட்டம் நிக்குது..! எப்படியும் 3 மணிக்குத்தான் முடிஞ்சிருக்கும்..! அந்த நேரத்திலும் ஒரு குடிகார ரசிகர் கேட் மீது ஏறி பால் அபிஷேகம் செய்தார்.. இத்தனை ரசிகர்கள் எங்கிருந்துதான் வந்தார்கள்.. எப்படித்தான் உருவாகினார்களோ தெரியவில்லை.. விஜய் தனது இந்தப் படையை நல்லவிதமாக, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவருக்கும் நல்லது.. அவருடைய சினிமா கேரியருக்கும் நல்லது..! 

22 comments:

ராம்ஜி_யாஹூ said...

இனி இந்த சால்வை எப்பவும் விஜய் உடம்புல இருக்கணும்னு அவரோட ரசிகர்கள் நினைப்பாங்க.
பஞ்ச் டயலாக்

வருண் said...

இந்த முதுகெலும்பில்லாமல் இன்னும் "ஆத்தா வாழ்க" சொல்லுற விசையும் அவரு அப்பாரும் உங்களுக்கு ஏதோ சூனியம் வச்சுப்புட்டா போலண்ணா. இந்த குப்பை விமர்சனத்துலயும் விஜய் மேலே உள்ள உங்க "அம்பு" தான் வெளிப்படுது.

இம்பூட்டு ரசிகர்கள் எங்கே இருந்து உருவானாங்கனு தேடுறீங்களே?? உங்களை நீங்களே தேடுறமாரி இருக்குண்ணா..உங்கள மாரித்தான் உருவாகி இருக்காணுக..

படம் ஏன் தடை செய்யப்பட்டதுணு ஒண்ணுமே சொல்லக்காணோம். என்னப்பா ஆத்தா ஆட்சியிலே எல்லாரும் பொட்டிப்பாம்பா அடஙங்கிட்டீங்க!!

இதே சூழ்நிலை மு க ஆட்சியிலே நடந்து இருந்தா..நீங்களும் நாலு பதிவுலக வெத்துவேட்டுக்களும் என்னமா பேசி இருப்பீங்க!!

ஸ்ரீராம். said...

புதிய பறவை கதை கூட அப்போது வந்த ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல்தானே... இந்தப் படம் வெளிவர ஆன தாமதத்துக்கு எஸ் ஏ சி யும் ஒரு காரணம் என்பது உண்மையா?
வாங்கன்ன வணக்கம் பாடலில் பல பாடல்களின் சாயல் இருப்பதைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்!

Unknown said...

படம் அவ்வளவு மொக்கை இல்ல, பார்க்கும் படியே இருந்தது.

King Viswa said...

அண்ணா (?!?!?!?!?!)

நீங்கள் வெளியிட்டுள்ள போட்டோவில் Time To Lead என்கிற தமிழக உள்துறைக்கு எதிரான வாசகம் உள்ளது.

உடனடியாக அந்த வாசகம் உள்ள போட்டோவை நீக்கிவிட்டு வேறொரு போட்டோவை வெளியிடுதல் நலம்.

ravikumar said...

Always your Review is good with some real incidents linked with that movie. Good

ஒரு வாசகன் said...

விகடனில் தலைவாவிற்க்கும் 42 ஆதலினால் காதல் செய்வீருக்கும் 42?????

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

இனி இந்த சால்வை எப்பவும் விஜய் உடம்புல இருக்கணும்னு அவரோட ரசிகர்கள் நினைப்பாங்க.

பஞ்ச் டயலாக்]]]

உண்மையைத்தான சொல்றேன்.. இப்பவே ஊர், ஊருக்கு புலம்பலை ஆரம்பிச்சிட்டாங்க. நாம எப்போ கட்சி ஆரம்பிச்சு பதவி வாங்கி தேர்தல்ல நின்னு ஆட்சியைப் பிடிக்கிறதுன்னு..!?

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

இந்த முதுகெலும்பில்லாமல் இன்னும் "ஆத்தா வாழ்க" சொல்லுற விசையும் அவரு அப்பாரும் உங்களுக்கு ஏதோ சூனியம் வச்சுப்புட்டா போலண்ணா. இந்த குப்பை விமர்சனத்துலயும் விஜய் மேலே உள்ள உங்க "அம்பு"தான் வெளிப்படுது.]]]

நான் படம் பற்றித்தான் எழுதியிருக்கிறேன்..!

[[[இம்பூட்டு ரசிகர்கள் எங்கே இருந்து உருவானாங்கனு தேடுறீங்களே?? உங்களை நீங்களே தேடுறமாரி இருக்குண்ணா.. உங்கள மாரித்தான் உருவாகி இருக்காணுக..]]]

நாங்களெல்லாம் இப்படி இருந்ததில்லையே..?

[[[படம் ஏன் தடை செய்யப்பட்டதுணு ஒண்ணுமே சொல்லக் காணோம். என்னப்பா ஆத்தா ஆட்சியிலே எல்லாரும் பொட்டிப் பாம்பா அடஙங்கிட்டீங்க!!]]]

எங்க ஸ்டேட்டஸையெல்லாம் தொடர்ச்சியா படிக்கிறதே இல்லை போலிருக்கு..!

[[[இதே சூழ்நிலை மு க ஆட்சியிலே நடந்து இருந்தா.. நீங்களும் நாலு பதிவுலக வெத்துவேட்டுக்களும் என்னமா பேசி இருப்பீங்க!!]]]

இதையேதான் பேசியிருப்போம். பேரு மட்டும் மாறியிருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

புதிய பறவை கதை கூட அப்போது வந்த ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல்தானே...]]]

ஆமாம்.. உண்மைதான்..!

[[[இந்தப் படம் வெளிவர ஆன தாமதத்துக்கு எஸ் ஏ சி யும் ஒரு காரணம் என்பது உண்மையா?]]]

ஒரு காரணமில்லை. முழு காரணமும் அவர்தான்..!

[[[வாங்கன்ன வணக்கம் பாடலில் பல பாடல்களின் சாயல் இருப்பதைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்!]]]

எனக்குத் தோணலை. நீங்களாச்சும் சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Unknown said...

படம் அவ்வளவு மொக்கை இல்ல, பார்க்கும்படியே இருந்தது.]]]

ஓகே.. அவரவர் ரசனை அவரவர்க்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[King Viswa said...

அண்ணா (?!?!?!?!?!)

நீங்கள் வெளியிட்டுள்ள போட்டோவில் Time To Lead என்கிற தமிழக உள்துறைக்கு எதிரான வாசகம் உள்ளது. உடனடியாக அந்த வாசகம் உள்ள போட்டோவை நீக்கிவிட்டு வேறொரு போட்டோவை வெளியிடுதல் நலம்.]]]

முடியாது.. என்ன வேண்ணாலும் செஞ்சுக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ravikumar said...

Always your Review is good with some real incidents linked with that movie. Good.]]]

ச்சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான் மாத்தி எழுதினேன்..! உண்மைச் சம்பவங்கள்தான் நாயகன்னு சொன்னாங்க. அதேதான் இதுவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

விகடனில் தலைவாவிற்க்கும் 42 ஆதலினால் காதல் செய்வீருக்கும் 42????? ]]]

அப்புறம் விஜய்யோட பேட்டி நாளைப் பொழுதுக்கு வேணாமா..? எதுக்கு வம்பை விலைக்கு வாங்கணும்..? அதுக்காகத்தான்..!

ஸ்ரீராம். said...


//எனக்குத் தோணலை. நீங்களாச்சும் சொல்லுங்க..!//

'அட வேணாண்ணா...' என்று வரும்போது "சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்" என்று மின்சாரக் கனவுகள் பாடலும்,
"அட மாயாண்டி... முனியாண்டி.." என்று எஜமான் பாடலும்,
சரணம் தொடங்கும்போது "கண்பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை" பாடலும் நினைவுக்கு வருகின்றன.

AAR said...

1. 100rs is much cheaper. In my home town Tirunelveli, all tickets are 200rs in theatre. They release in Minimum Guarantee system.

2. Your feelings against Vijay fan mania is understandable.

My Grand dad talks bad about Shivaji/MGR mania. However my Dad is a fan of Shivaji but he hates Rajini and Kamal mania.

Same way you talk very high about Rajini, Kamal generation artists but talk bad about Vijay mania. Its always like that.
Younger generation who grew up on an artist movies will like them. But they hate the next generation artists.

(PS: I hate all kuuthaadis.)

3. Moving body and limbs faster is not good dance. Dance should be done gracefully with passion - Mojo is the key. I have seen beautiful dancers in the bars of Brazil, Mexico and Colombia.

Only person who does that in Indian movies is Madhuri Dixit, in Tamil, Shobana comes closer.

வருண் said...

****[[[படம் ஏன் தடை செய்யப்பட்டதுணு ஒண்ணுமே சொல்லக் காணோம். என்னப்பா ஆத்தா ஆட்சியிலே எல்லாரும் பொட்டிப் பாம்பா அடஙங்கிட்டீங்க!!]]]

எங்க ஸ்டேட்டஸையெல்லாம் தொடர்ச்சியா படிக்கிறதே இல்லை போலிருக்கு..!****

ஓ அப்படியா? அடுத்த முறை உங்க பர்சனல் நாட்குறிப்புல ரெகுலரா அப்டேட் பண்ணுங்க!!! :-)

***[[[இதே சூழ்நிலை மு க ஆட்சியிலே நடந்து இருந்தா.. நீங்களும் நாலு பதிவுலக வெத்துவேட்டுக்களும் என்னமா பேசி இருப்பீங்க!!]]]

இதையேதான் பேசியிருப்போம். பேரு மட்டும் மாறியிருக்கும்..!***

கருணாநிதி, டாஸ்மாக் கை திறந்துவிட்டு எல்லாரு வாயிலையும் சாராயத்தை ஊத்திவிடுவதால்தான் டாஸ்மாக் யாவாரம் அமோகமா நடக்குதுனு ஒப்பாரி வச்சேள்?

இப்போஎன்ன நடக்குது? அதே எழவுதான? டாஸ்மாக் யாவாரம் எல்ல்லாம் ஜோரா நடக்குது!! இப்போ க்ரிடிட் யாருக்கு? ஆத்தாவுக்கா? இல்லைனா ஊருப்பயளுகளுக்கா?

நான் யோக்கியன் நான் நாயஸ்தன்னு நீங்களே சொல்லிக்கிட்டு அலைய வேண்டியதுதான்..

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

//எனக்குத் தோணலை. நீங்களாச்சும் சொல்லுங்க..!//

'அட வேணாண்ணா...' என்று வரும்போது "சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்" என்று மின்சாரக் கனவுகள் பாடலும்,
"அட மாயாண்டி... முனியாண்டி.." என்று எஜமான் பாடலும்,
சரணம் தொடங்கும்போது "கண்பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை" பாடலும் நினைவுக்கு வருகின்றன.]]]

இவ்வளவு இருக்கா..? தகவலுக்கு நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

1. 100rs is much cheaper. In my home town Tirunelveli, all tickets are 200 rs in theatre. They release in Minimum Guarantee system.]]]

அப்போ உயர்த்தத்தான் செய்வார்கள்..! பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்.. அப்போதுதான் திருந்துவார்கள்..!

[[[2. Your feelings against Vijay fan mania is understandable. My Grand dad talks bad about Shivaji/MGR mania. However my Dad is a fan of Shivaji but he hates Rajini and Kamal mania. Same way you talk very high about Rajini, Kamal generation artists but talk bad about Vijay mania. Its always like that. Younger generation who grew up on an artist movies will like them. But they hate the next generation artists. (PS: I hate all kuuthaadis.)]]]

நானும் எனது பால்ய பருவத்தில் ரஜினி, கமல் இருவரின் ரசிகனாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்குத் தீவிரமாக இல்லை..!

[[[3. Moving body and limbs faster is not good dance. Dance should be done gracefully with passion - Mojo is the key. I have seen beautiful dancers in the bars of Brazil, Mexico and Colombia. Only person who does that in Indian movies is Madhuri Dixit, in Tamil, Shobana comes closer.]]]

பானுபிரியாவை விட்டுட்டீங்களே..?

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

****[[[படம் ஏன் தடை செய்யப்பட்டதுணு ஒண்ணுமே சொல்லக் காணோம். என்னப்பா ஆத்தா ஆட்சியிலே எல்லாரும் பொட்டிப் பாம்பா அடஙங்கிட்டீங்க!!]]]

எங்க ஸ்டேட்டஸையெல்லாம் தொடர்ச்சியா படிக்கிறதே இல்லை போலிருக்கு..!****

ஓ அப்படியா? அடுத்த முறை உங்க பர்சனல் நாட்குறிப்புல ரெகுலரா அப்டேட் பண்ணுங்க!!! :-)]]]

அப்படித்தான் நடக்கப் போவுது..! உங்களுக்கு எங்களுடைய கருத்துகள் தேவையெனில்.. தெரிந்து கொள்ள வேண்டுமெனில் எங்களை எப்படியாகினும் பாலோ செய்துதான் தீர வேண்டும். இல்லாட்டி விட்ருங்களேன்.. ஏன் இவ்ளோ கஷ்டப்படுறீங்க..?

[[[இதே சூழ்நிலை மு க ஆட்சியிலே நடந்து இருந்தா.. நீங்களும் நாலு பதிவுலக வெத்துவேட்டுக்களும் என்னமா பேசி இருப்பீங்க!!]

இதையேதான் பேசியிருப்போம். பேரு மட்டும் மாறியிருக்கும்..!***

கருணாநிதி, டாஸ்மாக்கை திறந்துவிட்டு எல்லாரு வாயிலையும் சாராயத்தை ஊத்தி விடுவதால்தான் டாஸ்மாக் யாவாரம் அமோகமா நடக்குதுனு ஒப்பாரி வச்சேள்?
இப்போ என்ன நடக்குது? அதே எழவுதான? டாஸ்மாக் யாவாரம் எல்ல்லாம் ஜோரா நடக்குது!! இப்போ க்ரிடிட் யாருக்கு? ஆத்தாவுக்கா? இல்லைனா ஊருப்பயளுகளுக்கா?
நான் யோக்கியன் நான் நாயஸ்தன்னு நீங்களே சொல்லிக்கிட்டு அலைய வேண்டியதுதான்.]]]

நான் யோக்கியன், நாயஸ்தன்னு எங்க.. யார்கிட்ட சொன்னேன்.. உங்ககிட்டயா..? எப்போ..? இப்போ உங்களுக்கு என்னாச்சு பிரதர்..?

SANKAR said...

தாராவியை பிளாட போட நாயகன் காலத்துலே இருந்து முயற்சி பண்ணியும் இன்னும் போடா முடியலையே? ஏன்?

உண்மைத்தமிழன் said...

[[[SANKAR said...

தாராவியை பிளாட போட நாயகன் காலத்துலே இருந்து முயற்சி பண்ணியும் இன்னும் போடா முடியலையே? ஏன்?]]]

ஓட்டு ஸார்.. ஓட்டு.. அதை இழக்க முடியுமா..? அரசியல்வாதிகளின் பயத்தினால் அந்தப் பகுதி மக்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இதுதான்..!