நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - கண்டுபிடிங்க..!

16-07-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கதைக்காகவும், திரைக்கதைக்காகவும்கூட இத்தனை யோசிக்க மாட்டார்கள் நமது தமிழ்ச் சினிமா இயக்குநர்கள். நல்ல தலைப்பு கிடைக்க அல்ல்லோகப்படுகிறார்கள். பழைய புத்தகக் கடைகளில் இருந்து பழைய புத்தகங்களை எடைக்கு எடை போட்டு வாங்கி வந்து புரட்டு புரட்டு என்று புரட்டி ஆளுக்கு பத்து தலைப்பு சொல்லணும் என்பதெல்லாம் பல இயக்குநர்கள் தங்களது உதவி இயக்குநர்களுக்கு சொல்லியிருக்கும் உத்தரவு..!

சில சமயங்களில் நல்ல தலைப்பு கிடைக்காவிட்டால்கூட அதை கடைசியா பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு ஷூட்டிங்கை நடத்தியவர்களும் உண்டு..! பல நேரங்களில் இந்தத் தலைப்புதான்யா நல்ல சினிமாவுக்கும், கெட்ட சினிமாவுக்கும் அடையாளமா இருந்து தொலையுது.. ‘இன்பநிலா’ என்ற டைட்டிலை வைச்சா கேட்டவுடனேயே இது மஜா படம்னு வீட்ல இருக்குற பொம்பளைங்களே சொல்லிருவாங்க.. ‘வழக்கு எண் 18/9’ என்றவுடன் ஏதோ படத்துல இருக்கு போல என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கவும் செய்யும்..!

வித்தியாசமாக யோசிப்பதாக நினைத்து............. 

அட்டக்கத்தி
என் புகைப்படம்
ஏதோ செய்தாய் என்னை
கண்டுபிடிச்சிட்டேன்
கள்ளச் சிரிப்பழகா
கோயம்பேடு பேருந்து நிலையம்
செம்பட்டை
தேன்மொழி தஞ்சாவூர்
நானே உன் உபகாரி
நீ எனக்காக மட்டும்
படம் பார்த்து கதை சொல்
மதுபானக் கடை
ரதினா-நான் சுப்ரமணியம் பேசுறேன்
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்
வவ்வால் பசங்க” 

- இப்படியெல்லாம் தலைப்புகளை வைச்சு கொளுத்தியிருக்காங்க..!


இதுல இன்னொரு லேட்டஸ்ட் வரவு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’. சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் கல்வி படித்த பாலாஜி தரணிதரனி முதல் படம் இது. இவர் ஏற்கெனவே ‘வர்ணம்’, ‘ஏன் இப்படி மயக்கினாய்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இதில் ஹீரோவா நடிக்கிறது ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி. பெங்களூர் பொண்ணு காயத்ரிதான் ஹீரோயின். எல்லாரையும் அண்ணன்னு கூப்பிட்டு நோகடிச்சிருச்சு. என்னையும் சேர்த்துதான்..!

இந்தப் படத்துக்காக ஸ்கிரிப்ட் எழுத, படிக்க, திருத்தம் செய்ய, ரிகர்சல் செய்ய ஒரு வருஷம் டிரெயினிங் எடுத்திட்டு, அப்புறமாத்தான் கேமிரா முன்னாடி வந்திருக்காங்க. பசங்க படத்தோட ஒளிப்பதிவாளர் பிரேம்குமார்தான் இந்தப் படத்தையும் ஒளிப்பதிவு செஞ்சிருக்காரு.  

இந்தப் படத்துக்கு நிகில் முருகன்தான் பி.ஆர்.ஓ.  என்பதால் உலக நாயகன் கமல்ஹாசனை இந்தக் குழு சந்தித்து அவர் கையாலேயே ஆடியோவை ரிலீஸ் செய்ய வைத்துவிட்டார்கள். கமலும் டிரெயிலரை பார்த்துவிட்டு படத்துல என்னவோ இருக்குன்னு பாராட்டிப் பேசியிருக்காரு..!


டிரெயிலர் காட்டுனாங்க.. முதல் ஷாட்டிலேயே “என்ன இது” என்கிறார் ஹீரோ புரியாமல். சுற்றியிருந்தவர்கள் முழிக்க.. டிரெயிலர் முழுவதையும் பார்த்த பின்பு ஹீரோ ஏதோவொரு விபத்தில் அடிபட்டு செலக்டிவ் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டு அதன் விளைவுகள்தான் படத்தின் கதையாக இருக்கும் என்பது எனது அனுமானம்..!

“நல்லா போய்க்கிட்டிருக்கிற வாழ்க்கைல திடீர்ன்னு, நீங்க கடந்து வந்த 10 வருஷம் மட்டும் உங்களுக்கு ஞாபகமில்லைன்னா அதுனால என்னென்ன பாதிப்புகள் வரும்..? அதுதான் ஸார் கதை..”ன்னு ரொம்ப நோண்டி நோண்டி கேட்ட பின்னாடிதான் இயக்குநர் சொன்னாரு.. ஸோ.. இந்த செலக்டிவ் அம்னீஷியா சப்ஜெக்ட் நமக்கு புதுசுன்னு நினைக்கிறேன். பட்.. மத்த மொழிகளுக்கு நிச்சயமா இருக்காது..! 

இந்த நேரத்துல சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பிலிம் பெஸ்டிவலில் பைலட் தியேட்டரில் பார்த்த ஒரு படம் இப்போ ஞாபகத்துக்கு வருது..! ஏதோ ஒரு தென் அமெரிக்கா நாட்டு படம். கியூபான்னு நினைக்கிறேன்.  


படத்தின் துவக்கக் காட்சியே மருத்துவனையில் ஆரம்பிக்கும். ஹீரோ ஆக்சிடெண்ட்டாகி சிகிச்சையில் இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், லவ்வரான ஹீரோயின், இவளுடைய பெற்றோர் என்று பெரும் கூட்டமே திரண்டிருக்கும்.. அன்றைக்குத்தான் கண் விழித்திருக்கிறான் ஹீரோ. 

அம்மா, அப்பா, நண்பர்கள் அனைவரையும் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்பவன், ஹீரோயினை மட்டும் “யார் இந்தப் பொண்ணு..?” என்கிறான். ஹீரோயினுக்கு பக்கென்றாகிறது. “இவ உன் லவ்வர். உனக்கும் இவளுக்கும் நிச்சயத்தார்த்தமெல்லாம் நடந்திருச்சு...” என்கிறார்கள். “அப்படியா..? எப்போ? எனக்குத் தெரியாதே..?” என்கிறான் ஹீரோ. ஹீரோயின் மயக்கம போட்டு விழுக.. அவளைத் தூக்கி அடுத்த பெட்டில் படுக்க வைத்து ஆசுவாசப்படுத்துகிறார்கள்.

மருத்துவர்கள் ஓடோடி வந்து ஹீரோவை செக்கப் செய்ய.. “அவன் செலக்டிவ் அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளான்..” என்கிறார் டாக்டர். “கல்லூரியில் இருந்து வெளியில் வந்த வருடம் வரையிலும்தான் அவனுக்கு நினைவுகள் இருக்கு. அதுக்குப் பின்னாடி நடந்த்தெல்லாம் அவன் நினைவில் இல்லை” என்கிறார் டாக்டர். ஹீரோயினுக்கு மீண்டும் மயக்கம். 

ஹீரோவை வீட்டுக்கு அழைத்துச் சென்று மன நல சிகிச்சை அளிக்கச் சொல்கிறார்கள். ஹீரோயினை முதன் முதலில் சந்தித்த இடம்.. வாங்கிக் கொடுத்த பரிசுப் பொருட்கள்.. கட்டிலில் கட்டிப் புரண்ட மாதிரியான புகைப்படங்கள் என்று எல்லாத்தையும் பார்த்த பின்பும் ஹீரோவுக்கு மனசில்லை.. “உன்னை எனக்குப் பிடிக்கலை” என்று ஹீரோயினிடம் சொல்லிவிடுகிறான்.

நெருங்கிய நண்பர்களை “அட்டுகளா இருக்கீங்க.. ஒருத்தனுக்குக்கூட டீஸண்ஸி தெரியலை.. உங்க்கூடவெல்லாம் நான் சகவாசம் வைச்சுக்க முடியாது”ன்னு சொல்லி கட் பண்றான். இந்த நேரத்துலதான் ஒரு வில்லன் இடைல புகுர்றாரு.. அந்த ஊர்லேயே பிரபலமான போதை மருந்து கடத்தல்காரனான அவன், ஹீரோ வீட்டுக்கு வந்து அவனை பத்தி விசாரித்து அவனுக்கான மருத்துவச் செலவுக்குரிய பணத்தையும் கொடுக்குறாரு..! இதை அந்த ஊர் ரகசிய போலீஸ் ஒருத்தர் பார்த்து தனது மேலதிகாரிகளுக்கு தகவலை பாஸ் செய்ய.. காரணம் இல்லாம நம்மூர் டான் தெருவுல கால் வைக்க மாட்டான். ஹீரோவையும் வாட்ச் பண்ணுங்கன்னு சொல்ல.. வீட்டைச் சுற்றிலும் போலீஸ்.. வீட்டு உறுப்பினர்கள் எங்கே போனாலும் போலீஸ் பின் தொடர்கிறது..!

இந்த நேரத்துல திடீர்ன்னு ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு ஹீரோவை வரச் சொன்ன வில்லன், அங்கேயிருந்து ஹீரோவை கடத்துறான். போலீஸும் துரத்துது. ஆனா பிடிக்க முடியலை. இப்போ போலீஸுக்கு ஒரு க்ளூ கிடைக்குது.. பக்கத்து ஊர்ல நடந்த ஒரு பெஸ்டிவல் சமயத்துல அங்க பிரபலமான 2 போதை மருந்து ஏஜெண்ட்டுகள் யாராலோயோ கொல்லப்பட்டுட்டாங்க. அந்த நேரத்துல அந்த ஊர்ல வில்லனும் இருந்திருக்காரு. அதேபோல ஹீரோவும், அவன் லவ்வரும்கூட அதே ஹோட்டல்ல தங்கியிருந்திருக்காங்கன்றதை போலீஸ் கண்டுபிடிச்சிர்றாங்க.

இப்போ போலீஸ் டைரக்டா ஹீரோ வீட்டுக்குள்ள வந்து சர்ச் பண்றாங்க. போதை மருந்து எதையும் கண்டுபிடிக்க முடியலை. ஆனா ஒரு வீடியோ கேஸட் மட்டும் சிக்குது..! அதை எடுத்துப் பார்த்தா அது ஒரு மலை உச்சில ஹீரோவும், ஹீரோயினும் ரொமான்ஸ் செய்யும்போது எடுத்தது..! எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு நல்ல போலீஸ் அதை எடுத்திட்டுப் போயிடறாரு..!

இன்னொரு பக்கம் வில்லன், ஹீரோகிட்ட போனை கொடுத்து ஹீரோயின்கிட்ட அன்பா பேசி “அவளை நம்ம பக்கம் வரச் சொல்லு..” என்கிறான். ஹீரோ ஏன் எதுக்குன்னு நூறு கேள்வி கேக்குறான். சொன்னதை செய்யுன்னு அவன் தலைல நாலு தட்டு தட்ட.. ஹீரோயினுக்கு போனை போட்டு வரச் சொல்றான் ஹீரோ. இதையும் போலீஸ் மோப்பம் புடிச்சு.. ஹீரோயினை பாதி வழிலேயே அவங்க கடத்திர்றாங்க.. “இனிமே நாங்க சொல்ற மாதிரி நடந்தா ஹீரோவை நாங்க காப்பாத்தி தர்றோம்”னு ஹீரோயின்கிட்ட போலீஸ் சொல்லுது. ஹீரோயின் ஒத்துக்குறா..

ஹீரோவும், ஹீரோயினும் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்ல சந்திக்கிறாங்க.  சுத்தி போலீஸ். இன்னொரு பக்கம் வில்லன் ஆளுங்க.. ஹீரோயின் தாங்கள் கில்மா செஞ்ச வீடியோ கேஸட்டை, ஹீரோகிட்ட கொடுத்து “இதைப் பார்த்திட்டாவது என்னைப் புரிஞ்சுக்க”ன்னு சொல்றா.. ஹீரோ அந்த கேஸட்டை வாங்கிக்கிட்டு அவளையும் கூப்பிட்டுக்கிட்டு போலீஸ்கிட்டேயிருந்து தப்பிச்சு வில்லன் வீட்டுக்கு வர்றாரு..

அங்க அந்த வீடியோ கேஸட்டை போட்டுப் பார்த்தால் கடைசி சில வினாடிகள்ல அந்த மலைக்கு கீழ 2 பேரை 6 பேர் கொண்ட கும்பல் ஒண்ணு அடிச்சு உதைக்குறது பதிவாகியிருக்கு.. அதுல ஒருத்தன் தன்னோட துப்பாக்கியால ரெண்டு பேரையும் சுட்டுக் கொல்றான். இதுவும் கேஸட்ல பதிவாகியிருக்கு. அதை ஜூம் பண்ணிப் பார்த்தா அது வில்லன். இதைப் பார்த்து ஹீரோவும், ஹீரோயினும் ஷாக்காக.. இப்போ வில்லன் சிரிக்கிறாரு.. “இதுக்காகத்தான் இத்தனை கஷ்டமும்..! என் ஏஜெண்டுகதான் அவனுக.. கமிஷன் கூட வேணும்னு கேட்டு தகராறு செஞ்சானுக.. அதான் போட்டுத் தள்ளிட்டேன். அதை நீங்க ரெண்டு பேரும்தான் அதைப் பார்த்துட்டீங்க. உங்களைத் தேடுறதுக்கே எனக்கு இத்தனை நாளாயிருச்சு.. இப்போ உங்களையும் மேல அனுப்பப் போறேன்”னு சொல்றான். 

வீடியோவை பார்த்த ஷாக்குல ஹீரோவுக்கு திடீர் ஞானோதயம் பிறக்குது. எத்தனை காதலோட இவளோட படுத்து உருண்டிருக்கோம்னு நினைச்சவன், வில்லனை தாக்கிட்டு ஹீரோயினைக் கூட்டிக்கிட்டு தப்பிச்சிர்றாரு. அந்த அவசரத்துல அந்த வீடியோ கேஸட்டை எடுக்க மறந்திர்றாங்க..  தன் வீட்டுக்கு போன் செஞ்சு தான் பக்கத்து ஊருக்கு போறேன்னு ஹீரோ சொல்ல.. இதை போலீஸ் ஒட்டுக் கேட்டு அவர்களை விரட்டுது.. இன்னொரு பக்கம் வில்லனும் அவன் கோஷ்டியோட விரட்டுறான்..  

ஒரு கரும்புக் காடு. ஒரு பக்கம் போலீஸ் வருது.. இன்னொரு பக்கம் வில்லன் கோஷ்டி வருது.. கரும்புத் தோட்டத்துக்குள்ள ஹீரோவும், ஹீரோயினும் நுழைஞ்சு பதுங்குறாங்க. போலீஸ் சுத்தி வளைக்குது.  போலீஸுக்கு ஹீரோ மேல சந்தேகம்.. ஹீரோயினை கடத்திட்டுப் போறான்னு நினைக்கிறாங்க. வில்லனுக்கோ ஹீரோ, ஹீரோயினோட போலீஸ்ல சரண்டராகப் போறான்.. அதுக்குள்ள அவனை போட்டுத் தள்ளிரணும்னு நினைக்குறாங்க.. ரெண்டு பக்கமும் புல்லட்டுக தாறுமாறா பறக்குதுக.. இடைல இந்த 2 பேரும் மாறி மாறி ஓடி, ஓடி தப்பிக்கிறாங்க.. கடைசீல வில்லன் கோஷ்டிகிட்ட ஹீரோயினும், போலீஸ்கிட்ட ஹீரோவும் மாட்டிக்கிறாங்க. 

இப்போ நேருக்கு நேர் பஞ்சாயத்து நடக்குது.. ரெண்டு தரப்பும் துப்பாக்கியை கீழ போட்டுட்டு நாட்டாமை பட பாணில பஞ்சாயத்து பேசுறாங்க..! ஹீரோவை கொடுத்திட்டா ஹீரோயினை கொடுக்கிறதா வில்லன் சொல்றான். எப்படியாவது தப்பிக்கணும்னு நினைக்கணும்னு நினைச்ச ஹீரோ தானே வில்லன்கிட்ட சரண்டராகுற மாதிரி பாவ்லா பண்றான்.. ஹீரோயினும், ஹீரோவும் நேருக்கு நேரா வர்றாங்க. சுத்தி போலீஸும், வில்லன் ஆட்களும் கைல துப்பாக்கி இல்லாம..! 

ஹீரோ, ஹீரோயின் பக்கத்துல வந்ததும் கையைப் பிடிச்சிட்டு வேற பக்கம் ஓட ஆரம்பிக்கிறாங்க. போலீஸும், வில்லன் கோஷ்டியும் துப்பாக்கியை எடுத்திட்டு துரத்த ஆரம்பிக்க.. அதுக்குள்ள ஒரு துப்பாக்கியை எடுத்த ஹீரோ, வில்லன் கால்ல சுட்டுர்றாரு.. வில்லன் கீழே விழுக.. வில்லன் ஆட்கள் போலீஸை சுட ஆரம்பிக்கிறாங்க. போலீஸ், வில்லன் ஆட்களை சுட துவங்க.. ஹீரோவும், ஹீரோயினும் கரும்புக் காட்டுக்குள்ள ஓடி எஸ்கேப்பாகுறாங்க..!

ஒரு வழியா துப்பாக்கி சண்டை ஓய்ஞ்சு வில்லன் கோஷ்டி மொத்தத்தையும் போலீஸ் போட்டுத் தள்ளிட்டு ரோட்டுக்கு வர.. அங்கே நடுரோட்டுல நின்னு கிஸ் அடிச்சிட்டிருக்காங்க ஹீரோவும், ஹீரோயினும்.. போலீஸ் அவங்களை சுத்தி வளைச்சு துப்பாக்கியை நீட்ட.. இனிமேல் என்ன இருக்கு என்பதை போல் அவர்கள் பார்க்க.. அடுத்தக் காட்சியில் அவர்களுடைய கில்மா கேஸட் போலீஸ் தலைமையக கான்பரன்ஸ் ரூம் ஸ்கிரீன்ல ஓடிக்கிட்டிருக்கு.  அத்தனை போலீஸும் ஜொள்ளுவிட்டு பார்த்துக் கொண்டிருக்க.. ஹீரோவும், ஹீரோயினும் மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! கேமிரா அப்படியே பேக் ஜூம்மாகி ஜன்னலுக்கு வந்து அப்படியே தரையிரங்க.. படமும் முடிஞ்சிருச்சு..!

முதல் 20 நிமிடங்கள் மட்டும்தான் படம் ஸ்லோ.. அதுக்கப்புறம்  திரைக்கதைல அவ்வளவு ஸ்பீடு..! என்னால் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று.. இதனை வாசிக்கும் அன்பர்கள், யாரேனும் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் கொஞ்சம் படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.. புண்ணியமா போவும்..!

அதுக்காக, இந்தப் படத்தோட காப்பிதான் வரப் போற நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படம்னு நான் சொல்ல வரலை..! இந்தக் கதையை கேட்கும்போது நான் பார்த்த இந்தப் படம் நியாபகத்துக்கு வந்துச்சுன்னுதான் சொல்ல வந்தேன். அம்புட்டுத்தான்..!

10 comments:

ராம்ஜி_யாஹூ said...

ஒரு காலத்தில் கிளாமர் என்ற தமிழ் பத்திரிகையில்
நடுப் பக்கங்களில் பபிதா, பாபிலோனா இரண்டு பக்கங்கள் ப்ளோ அப்
படங்கள் இருக்கும்
அப்போது நடுப் பக்கங்களைக் கிழித்து பத்திரப் படுத்தி வைப்போம்

வவ்வால் said...

ஓய் அது என்ன நடுவில வவ்வால் பசங்கன்னு ஒரு பேர போட்டு இருக்கீர், அது நீரே செய்த தில்லாலங்கடியா?

என்ன வச்சு காமெடி கீமெடி செய்யிற ஐடியா இருந்தா தலை முழுகிடும், அப்பாலிக்கா நான் பொங்கினா பொங்கல் வச்சுடுவேன் :-))

//இந்த செலக்டிவ் அம்னீஷியா சப்ஜெக்ட் நமக்கு புதுசுன்னு நினைக்கிறேன். பட்.. மத்த மொழிகளுக்கு நிச்சயமா இருக்காது..!

//
ஒரு கல்லூரியின் கதைனு ஆர்யா,நந்தா பெரியசாமி இயக்கத்தில் இப்படியான அம்னீஷியா படம் வந்தது உமக்கு செலெக்டிவ் அம்னீஷியாவில் மறந்து போச்சு போல :-))

தீபாவளினு ஒரு மொக்கை படம் மூன்றாம் பிறையின் பாதிப்பில் வந்தது,

சினேகன்அசோக் said...

அப்படத்தின் பெயர் ஜாபகம் இல்லை ஆனால் உங்களுடைய பதிவு அந்த ஆங்கிலப் படத்தப் TVல் பார்த்துக்கிட்டு இருப்பதுப் போல் தெறிகிறது. அருமையான பதிவு.

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

ஒரு காலத்தில் கிளாமர் என்ற தமிழ் பத்திரிகையில் நடுப் பக்கங்களில் பபிதா, பாபிலோனா இரண்டு பக்கங்கள் ப்ளோ அப் படங்கள் இருக்கும். அப்போது நடுப் பக்கங்களைக் கிழித்து பத்திரப்படுத்தி வைப்போம்.]]]

அண்ணே.. அதையெல்லாம் வாங்கின காசுக்கு தின்னாவது தீர்த்திருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

ஓய் அது என்ன நடுவில வவ்வால் பசங்கன்னு ஒரு பேர போட்டு இருக்கீர், அது நீரே செய்த தில்லாலங்கடியா?
என்ன வச்சு காமெடி கீமெடி செய்யிற ஐடியா இருந்தா தலை முழுகிடும், அப்பாலிக்கா நான் பொங்கினா பொங்கல் வச்சுடுவேன் :-))]]]

படம் எடுத்து முடிச்சு சென்சாரும் ஆயாச்சு பிரதர்.. இன்னமும் ரிலீஸ் ஆகுற வழியைக் காணோம். வவ்வால்ன்னு பேரு வைச்சாலே ரப்சர்தான் போல..!

//இந்த செலக்டிவ் அம்னீஷியா சப்ஜெக்ட் நமக்கு புதுசுன்னு நினைக்கிறேன். பட்.. மத்த மொழிகளுக்கு நிச்சயமா இருக்காது..!

//ஒரு கல்லூரியின் கதைனு ஆர்யா, நந்தா பெரியசாமி இயக்கத்தில் இப்படியான அம்னீஷியா படம் வந்தது உமக்கு செலெக்டிவ் அம்னீஷியாவில் மறந்து போச்சு போல :-)) தீபாவளினு ஒரு மொக்கை படம் மூன்றாம் பிறையின் பாதிப்பில் வந்தது,]]]

செலக்டிவ் அம்னீஷியாங்குறது சில விஷயங்கள் நினைவில் இருந்து பல விஷயங்கள் காணாமல் போவதுதானே..? ஒரு கல்லூரியின் கதை இப்படியா..?

உண்மைத்தமிழன் said...

[[[SNEHANASHOK said...

அப்படத்தின் பெயர் ஜாபகம் இல்லை. ஆனால் உங்களுடைய பதிவு அந்த ஆங்கிலப் படத்தப் TV-ல் பார்த்துக்கிட்டு இருப்பது போல் தெறிகிறது. அருமையான பதிவு.]]]

நன்றி அசோக்ஜி..!

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவை படித்தப் பின், ஒரு படத்தைப் பார்த்த அனுபவம் கிடைத்தது... வாழ்த்துக்கள்...
தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 5)

உண்மைத்தமிழன் said...

[[[திண்டுக்கல் தனபாலன் said...

பதிவை படித்தப் பின், ஒரு படத்தைப் பார்த்த அனுபவம் கிடைத்தது.. வாழ்த்துக்கள். தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி... (த.ம. 5)]]]

வருகைக்கு நன்றிகள்ண்ணே..!

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஒரு திரைப்படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

அருமையான ஒரு திரைப்படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!]]]

நன்றிகள் ஸார்..! படத்தின் பெயர்தான் இன்னமும் சிக்கவில்லை..!