ஊழலை தொடர்ந்து, வாங்கிய கடனும் லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது..!

02-02-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இந்தக் கட்டுரை இன்றைய 'தினமலர்' பத்திரிகையில் வெளிவந்திருக்கும் ஒரு செய்தி..!


காலையில் விடிந்ததும் இதுதான் கண்ணில் பட வேண்டுமா..? டீத்தண்ணியைக் குடிப்பதற்கு முன்பாகவே மனம் டீயாய் கொதித்துவிட்டது..


முதலில் கட்டுரையைப் படியுங்கள்..!


தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.


தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31-வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.


மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது. ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களுக்கு செலவிடாமல், இலவசத் திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.


மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம் கிடைக்கும் 6,000 கோடி ரூபாய் உட்பட வணிக வரியின் மொத்த வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என மாநிலத்தின் மொத்த வரி வருவாய் 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.


இது தவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு தன்னிடமிருந்து பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படியும் தமிழக அரசுக்கு 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும். இது தவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய். ஆக மொத்தம் ஒரு ஆண்டில் தமிழக அரசுக்கு தோராயமாக கிடைக்கும் மொய் தொகை 63 ஆயிரத்து 90 கோடி ரூபாய்.


மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.


இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம்வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது. தமிழக அரசின் மாநில திட்டக் குழு வகுத்துள்ள, 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.


மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில் துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.
--------------------------------------
அவ்வளவுதான். படிச்சு முடிச்சிட்டீங்களா..? இதுக்கு மேலேயும் நான் என்ன சொல்றது..?


நான் இப்போது சொல்ல நினைப்பதையெல்லாம் சென்ற வருடமே இந்தக் கடன்களை யார் அடைப்பது..? நமது வாரிசுகளா..? ஆட்சியாளர்களின் வாரிசுகளா..?  என்ற இந்தப் பதிவுல விரிவா, ஆழமா, விளக்கமாச் சொல்லித் தொலைஞ்சிருக்கேன்.


தயவு செய்து படிச்சுப் பாருங்க..!


அதையே இப்பவும் சொல்றதா நினைச்சுக்குங்க.. அம்புட்டுத்தான்..!

14 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விடுங்க பாஸ். அடுத்து அவங்களோட புது படம் எப்போ ரிலீஸ்?

Anonymous said...

>>> ஒரு பக்கம் ஏழை இல்லா மாநிலம் அமைப்பதே லட்சியம் அப்டின்னு சிலர் சொல்றாங்க. மறுபுறம் ஏழைகள் உள்ள வரை இலவசம் தொடரும்னு சொல்றாங்க. ஒரே குஷ்டமப்பா!!

Sankar Gurusamy said...

VEry SAD to read this news.This Govt has no capability to improve the state in any form. It has gone from low to least.

Let us pray for some solace from GOD. HE alone can save us from this.

http://anubhudhi.blogspot.com/

Madurai pandi said...

என்னண்ணே ரொம்ப தீவிரமா இறங்கிட்டீங்க போல... நம்ம ராசா கைதாமே !!! அடுத்த உங்க பதிவு இதை பத்தி தானே?

துளசி கோபால் said...

அந்த ஒருலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி இருக்குதேங்க.

எப்படியும் 76000 கோடி பாக்கி இருக்குல்லே? அதை என்ன செய்யலாமுன்னு சொல்லுங்க:-)

settaikkaran said...

செல்லாது செல்லாது! உடனே ராஜா கைது பத்தி ஒரு இடுகை எழுதுங்கண்ணே! அதுலே நிறைய உள்குத்து, வெளிக்குத்து, நடுக்குத்தெல்லாம் இருக்குதுண்ணு பேசிக்கிறாய்ங்க!

Samy said...

Ada poonga sir,head is rounding.Samy

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விடுங்க பாஸ். அடுத்து அவங்களோட புது படம் எப்போ ரிலீஸ்?]]]

தேர்தலுக்குள்ள வந்திரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...
>>> ஒரு பக்கம் ஏழை இல்லா மாநிலம் அமைப்பதே லட்சியம் அப்டின்னு சிலர் சொல்றாங்க. மறுபுறம் ஏழைகள் உள்ளவரை இலவசம் தொடரும்னு சொல்றாங்க. ஒரே குஷ்டமப்பா!!]]]

முன்னது வாய்ஜாலம்..

ரெண்டாவது ஏழைகள் இருந்தால்தானே இவர்களது பிழைப்பு ஓடும்.. அதுனால அப்படியேதான் வைச்சிருக்கணும்னு நினைக்குறாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[சங்கர் குருசாமி said...
VEry SAD to read this news. This Govt has no capability to improve the state in any form. It has gone from low to least. Let us pray for some solace from GOD. HE alone can save us from this.

http://anubhudhi.blogspot.com/]]]

இவுங்க பாட்டுக்கு கடனை வாங்கி வைச்சுட்டு போயிருவாங்க.. பின்னாடி கட்டுறது யாருங்க.. இவங்க குடும்பமா வந்து கட்டப் போவுது..?

உண்மைத்தமிழன் said...

[[[Madurai pandi said...
என்னண்ணே ரொம்ப தீவிரமா இறங்கிட்டீங்க போல... நம்ம ராசா கைதாமே !!! அடுத்த உங்க பதிவு இதை பத்திதானே?]]]

போடுவோம்.. போட்டுத்தானே ஆகணும்.. நம்ம தலையெழுத்தே இதுதானே..?

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...
அந்த ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி இருக்குதேங்க.
எப்படியும் 76000 கோடி பாக்கி இருக்குல்லே? அதை என்ன செய்யலாமுன்னு சொல்லுங்க:-)]]]

ஒரு லட்சம் கோடியை முதல்ல இவங்ககிட்டேயிருந்து கறக்கணும்.. அப்புறம்தான் அந்த 76 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்குற வேலையைப் பார்க்கோணும்..!

டீச்சர்.. எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...
செல்லாது செல்லாது! உடனே ராஜா கைது பத்தி ஒரு இடுகை எழுதுங்கண்ணே! அதுலே நிறைய உள்குத்து, வெளிக்குத்து, நடுக்குத்தெல்லாம் இருக்குதுண்ணு பேசிக்கிறாய்ங்க!]]]

எல்லாக் குத்தும் அதுல இருக்கு..! கொஞ்சம் பொறுங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Samy said...
Ada poonga sir, head is rounding. Samy]]]

இதுக்கே இப்படின்னா நாளைக்கு உங்களுக்கெல்லாம் கடனை கட்டச் சொல்லி நோட்டீஸ் கிடைச்சா என்ன செய்யப் போறீங்களோ..?