சபரிமலை விபத்து - இனியாவது நடவடிக்கை எடுக்கட்டும்...!

15-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பொங்கலுக்காக வாழ்த்துச் சொல்லிப் பதிவிடலாம் என்று நேற்று இரவு முனைந்தபோது சபரிமலை பக்தர்களில் 100 பேருக்கும் மேல் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த செய்தி கண்களுக்கும், காதுகளுக்கும் எட்டியபோது வெறுப்பாகிவிட்டது.

தெய்வத்தைத் தரிசனம் செய்யச் சென்றவர்கள் அப்படியே தெய்வத்திடமே சென்றுவிட்ட கொடுமையைக் கேட்கும்போது ஒரு கணம் மிகுந்த கோபம் அய்யப்பன் மீது..! தன்னை நாடி வந்தவர்களுக்கு இப்படியா சோதனையைக் கொடுப்பது..?


நேற்று ஜனவரி 14-ம் தேதி சபரிமலை பொன்னம்பல மேட்டில் நடந்த மகர ஜோதி பெருவிழாவை ஆயிரக்கணக்கான  பக்தர்கள் புல்மேடு, உப்புப்பாறை பகுதியில் இருந்தும் கண்டுகளித்துள்ளார்கள். இவர்களில் கோவிலுக்கு மாலை போடாத கேரளத்து பக்தர்களும் அடக்கம்.. நேற்று இரவு ஜோதியைத் தரிசித்துவிட்டு பக்தர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்த இடம் தமிழக எல்லையோர ஊரான குமுளியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

புல்மேடு, உப்புப்பாறை பகுதியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பிய ஜீப் ஒன்றில், பக்தர்கள் அதிக அளவு ஏறியுள்ளனர். ஜீப் "செல்ப்' எடுக்காததால், பலர் இறங்கி ஜீப்பை தள்ளினர். திடீரென ஜீப் கிளம்பிய வேகத்தில் அது தனது கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்திருக்கிறது.

நடந்து சென்று கொண்டிருந்த, நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதிய ஜீப் அவர்களையும் தாண்டிச் சென்று அந்தப் பகுதியில் இருந்த 60 அடி பள்ளத்தில் விழுந்திருக்கிறது. இந்தக் களேபரத்தில் பக்தர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடும்போது கீழே விழுந்துள்ளனர். வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிப்பட்டு, மூச்சுத் திணறி இறந்துள்ளனர். தற்போதுவரையிலும் மொத்தம் 109 பேர் மரணமடைந்துள்ளனர்.
 


பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

 

இன்று காலைக்குள்ளாக அனைத்து உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். காயமடைந்த பக்தர்கள் தேனி மற்றும் குமுளி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூரமான விபத்தை தேசிய பேரிடர் நிகழ்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மத்திய அரசும் இணைந்து மேற்கொள்ளும். விபத்து நடத்த இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பியுள்ள மத்திய அரசு, சம்பவம் குறித்து கேரள மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கேரள அரசிற்கு தமிழக மற்றும் கர்நாடக அரசுகளும் உதவுவதாக அறிவித்துள்ளன.
 
இந்த துயரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சமும், காயமுற்றவருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கி‌ட பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து நடந்த பகுதிக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேரில் வந்து விசாரித்துள்ளார். முன்னதாக நிருபர்களிடம் பேசிய அச்சுதானந்தன், “விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும்.. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்..” என்று கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த அச்சுதானந்தன், உயிரிழந்த குடும்பத்திருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்படுமென்றும், கேரள அரசு இந்தக் கொடூரத்திற்காக 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பதாகவும் கூறியுள்ளார்.


ஜோதி பார்த்து திரும்பும் பக்தர்கள் வனப்பகுதியில் இருந்து ஆட்களை ஜீப்பில் ஏற்றி‌ச் செல்வது வழக்கம். ஒருவருக்கு ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படுமாம். இந்த ஜீப்பில் ஏறும் கூட்டம் அதிகரித்ததும் ஜீப் நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. இதனை கண்டு பக்தர்கள் ஓடத் துவங்கி இருக்கின்றனர். இதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என காயம்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி, உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு ரூ. ஒரு லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே அதிக அளவு பக்தர்கள் வரும் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கும் சபரிமலை கோவிலுக்குச் செல்லும் பாதைகள் சரிவரப் பேணப்படவில்லை என்பது இதுநாள்வரையில் கேரள அரசுகள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள்..!

 

கேரள அரசோ பாதைகள் அனைத்தும் மலைப் பாங்கான பகுதிகளில் இருப்பதால்தான் சாலை வசதிகளை முழுமையாகச் செய்ய முடியவில்லை என்கிறது. ஆனால் இதே போலத்தான் திருப்பதி மலையும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அங்கே நாற்சக்கர சாலைகளைப் போன்ற வசதியும், பக்தர்களுக்கு கணக்கற்ற வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கிறதே என்று குறிப்பிடுகிறார்கள் ஐயப்பனின் பக்தர்கள்.

குமுளியில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பாதை முழுக்கவே மலைப் பாதைதான். வரும் காலங்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும் சாத்தியங்கள்தான் அதிகம். இதைவிட அதிக மடங்கு பக்தர்கள் அதே பாதையைப் பயன்படுத்தப் போகும் சூழலில் பாதைகளை மேம்படுத்த வேண்டியது இரு மாநில அரசுகளின் தலையாய பணியாக இருக்கட்டும்..

ஏற்கெனவே 1999-ல் நடந்த கூட்ட நெரிசலில் 50 பேர் மரணமடைந்தவுடன் கோவிலின் அருகே பதினெட்டு படியில் பலவித மாற்றங்களைச் செய்தது கேரள அரசு. இப்போதும் அது போன்று பாதைகளை சீர்ப்படுத்தி பக்தர்களுக்கான வசதிகளைச் செய்து தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இப்படி பல உயிர்களைப் பறித்த பின்புதான் பாதைகள் அமைக்கும் பணியில் ஈடுபடுவோம் என்ற எண்ணமே அரசுக்கு வருகிறது என்றால் என்னவென்று சொல்ல..?

“கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை.. சாமியே ஐயப்பா.. ஐயப்பா சாமியே..” என்ற பாடல்கூட பக்தன் தன்னை வருத்திக் கொண்டு தனது ஐயனைத் தரிசிக்கச் செல்கிறான் என்ற ரீதியிலேயே பாடப்பட்டதாக பல ஆண்டுகளாக நினைத்திருந்தேன். பின்பு விவரம் தெரிந்த வயதில்தான் அந்த வரிகளுக்கான அர்த்தமே புரிந்தது. நிலைமை இப்போதும் அப்படியேதான் இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்..! இந்த வார்த்தைகள் வரும் காலங்களில் மாற்றமடைந்தால் பக்தர்கள் நிச்சயம் மகிழ்வார்கள்..

விபத்தில் இறந்து போன அத்தனை பக்தர்களுக்கும் எனது அஞ்சலிகள்..!

21 comments:

மழைக்காகிதம் said...

எவ்வளவு பணம் வருது அண்ணே, அந்த பணத்தின் பாதியை செலவு செய்தால் பக்தர்களுக்கு இருக்க இடம், தரமான சாலைகள் மற்றும் கழிப்பிட வசதிகளை நன்றாக செய்து கொடுக்கலாம்.. எவன் பணத்தை எல்லாம் எடுக்குரானு தெரியலை

Unknown said...

இப்போதெல்லாம் உண்மையான பக்தர்கள், வெகு கூட்டமாக இருக்கும் நேரங்களில் கோவிலுக்கு வருவதையே தவிர்ப்பது இதனால் தானோ?

Unknown said...

//விபத்தில் இறந்து போன அத்தனை பக்தர்களுக்கும் எனது அஞ்சலிகள்..//
me too..

வால்பையன் said...

//விபத்தில் இறந்து போன அத்தனை பக்தர்களுக்கும் எனது அஞ்சலிகள்..//

விபத்தில் இறந்து போன அத்தனை மனிதர்களுக்கும் எனது அஞ்சலிகள்..

இனியாவது கடவுள் என்ற மண்ணாங்கட்டி இல்லை என்று மக்கள் புரிந்து கொள்ளட்டும்!

Indian Share Market said...

ஐயப்பா, இது என்ன சோதனை? பொங்கலும் அதுவுமா இப்படி ஒரு சோதனையா?பாவப்பட்ட பக்தர்கள் என்ன பாவம் செய்தார்கள்?தமிழகத்தை ஒட்டிய இந்த பகுதியிலிருந்து, பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு செல்லும் பாதையில்,இந்த துயரம் நடந்துள்ளது. இனியாவது கேரளா அரசு விழித்துக்கொண்டு இங்கே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அல்லது பக்தர்கள் இந்த புல்மேடு பாதையை ,பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பக்தர்களும் சற்று எசசரிக்கையாக் இருக்க வேண்டிய தருணம் இது.

Unknown said...

இது போல விபத்துகள் நடக்கும் போதெல்லாம் இரக்கமே இன்றி சொல்லப் படுவது "பார்த்தாயா இப்போதாவது கடவுள் இல்லை என்று புரிந்து கொள்" என்று விடுதலை பத்திரிக்கை துவங்கி பகுத்தறிவுகள் கூவுவார்கள். இது எவ்வளவு அபத்தம்... "இறப்பு என்பது பிறந்த அனைத்தின் இயல்பு, ஆத்மா அழிவின்றே வேறொரு உடலை எடுத்துக்கொள்ள போய்விட்டது" என்று தான் ஆறுதல் அடைய முடியும். இந்த மரணங்களுக்கு கடவுளை விட மனிதர்களே காரணம். கோடி கோடியாக பணம் குவிந்தும் சரியான ஏற்பாடுகள் செய்யாமல் அக்கறை இன்றி இருந்த மனிதர்களே பொறுப்பேற்க வேண்டும்.

மு.சரவணக்குமார் said...

வருத்தமான நிகழ்வு, தவிர்க்கப் பட்டிருக்க கூடிய நிகழ்வு...

இப்போது யாரையும் குற்றம் சொல்லி எதுவும் ஆகப் போவதில்லை.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவிக்கிறேன்.

Sivakumar said...

இவ்வருடத்தின் தொடக்கமே இப்படி நிகழ்ந்து விட்டது. சுனாமியை தேசிய பேரழிவாக அறிவிக்க மட்டும் மத்திய அரசு ஏன் அவ்வளவு யோசித்தது???? பட்டபின்புதான் நம் அரசுக்கு ஞானம் வரும். அயல்நாடுகளைப்போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருப்பின் பல லட்சம் உயிர்கள் நம் நாட்டில் காப்பாற்றப்பட்டிருக்கும். பிரதமர் வாகனம் வரும் வழியில் பொது மக்களின் வாகனத்தை நிறுத்தி..(அது ஆம்புலன்ஸ் என்றாலும்) எத்தனை பேர் இறந்து வருகின்றனர். “இப்பயாவது திருந்துங்கடா டேய்” என்றுதான் சொல்லத்தோன்றுகிறது..ஆனால் எருமை மாட்டின் மீதி மழை பெய்தது போல் நிற்பவர்களிடம் என்ன சொல்ல..சார்?????

சும்மா.. டைம் பாஸ் said...

first of all RIP of all the souls who died in this incident. But it rises some questions the death statistic shows 36 percent Tamils, 25% from karnataka (may be some more Tamils in this list from karnataka)20% from Andhra only 3 percent from Kerala. why people from the origin state is very less? which means Malayalis only run this Temple, not many malu people are going there? it is just a question about why own people are not participating much not about the religion or faith. since i did not see any Temples in Tamilnadu to which only other state people going much?

உண்மைத்தமிழன் said...

[[[Raja said...
எவ்வளவு பணம் வருது அண்ணே, அந்த பணத்தின் பாதியை செலவு செய்தால் பக்தர்களுக்கு இருக்க இடம், தரமான சாலைகள் மற்றும் கழிப்பிட வசதிகளை நன்றாக செய்து கொடுக்கலாம். எவன் பணத்தை எல்லாம் எடுக்குரானு தெரியலை.]]]

அதான் தெரியலை.. இத்தனைக்கும் இந்தியாவிலேயே இரண்டாவது பணக்கார சாமி ஐயப்பன்தான்.. ஆட்சியாளர்கள் பணத்தை வசூல் செய்வதில் காட்டும் வேகத்தை பக்தர்கள் பக்கமும் காட்டலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பாரத்... பாரதி... said...
இப்போதெல்லாம் உண்மையான பக்தர்கள், வெகு கூட்டமாக இருக்கும் நேரங்களில் கோவிலுக்கு வருவதையே தவிர்ப்பது இதனால்தானோ?]]]

வயதானவர்கள்.. கூட்ட நெரிசலைக் கண்டு பயப்படுபவர்கள் செல்ல மாட்டார்கள்..! அத்தோடு எப்பவோ ஒரு முறைதானே இது நடக்கிறது. இதனாலேயும் கூட்டம் தொடர்ந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது.. இதில் அடிப்படையானது பக்தி.. அதனை உடைக்க முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...

//விபத்தில் இறந்து போன அத்தனை பக்தர்களுக்கும் எனது அஞ்சலிகள்..//

விபத்தில் இறந்து போன அத்தனை மனிதர்களுக்கும் எனது அஞ்சலிகள்..
இனியாவது கடவுள் என்ற மண்ணாங்கட்டி இல்லை என்று மக்கள் புரிந்து கொள்ளட்டும்!]]]

வாலு.. இதுதான் சாக்குன்னு உன் கொள்கையைத் தூக்கிக்கிட்டு ஓடி வராத..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

ஐயப்பா, இது என்ன சோதனை? பொங்கலும் அதுவுமா இப்படி ஒரு சோதனையா? பாவப்பட்ட பக்தர்கள் என்ன பாவம் செய்தார்கள்? தமிழகத்தை ஒட்டிய இந்த பகுதியிலிருந்து, பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு செல்லும் பாதையில், இந்த துயரம் நடந்துள்ளது. இனியாவது கேரளா அரசு விழித்துக் கொண்டு இங்கே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அல்லது பக்தர்கள் இந்த புல்மேடு பாதையை, பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பக்தர்களும் சற்று எசசரிக்கையாக் இருக்க வேண்டிய தருணம் இது.]]]

அந்தப் பாதை தடை செய்யப்பட்டதுதான்.. ஆனால் சுருக்கமான வழி இதைவிட்டால் பக்தர்களுக்கு வேறு இல்லை என்பதாலும்தான் இதனைப் பயன்படுத்தினார்களாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Krishna said...
இதுபோல விபத்துகள் நடக்கும்போதெல்லாம் இரக்கமே இன்றி சொல்லப்படுவது "பார்த்தாயா இப்போதாவது கடவுள் இல்லை என்று புரிந்து கொள்" என்று விடுதலை பத்திரிக்கை துவங்கி பகுத்தறிவுகள் கூவுவார்கள். இது எவ்வளவு அபத்தம்... "இறப்பு என்பது பிறந்த அனைத்தின் இயல்பு, ஆத்மா அழிவின்றே வேறொரு உடலை எடுத்துக் கொள்ள போய்விட்டது" என்றுதான் ஆறுதல் அடைய முடியும். இந்த மரணங்களுக்கு கடவுளைவிட மனிதர்களே காரணம். கோடி கோடியாக பணம் குவிந்தும் சரியான ஏற்பாடுகள் செய்யாமல் அக்கறை இன்றி இருந்த மனிதர்களே பொறுப்பேற்க வேண்டும்.]]]

வாய்ப்புக் கிடைக்கும்போது கோல் போடுறதுதானே சந்தர்ப்பவாதிகளின் செயல்..

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...
வருத்தமான நிகழ்வு, தவிர்க்கப்பட்டிருக்க கூடிய நிகழ்வு...
இப்போது யாரையும் குற்றம் சொல்லி எதுவும் ஆகப் போவதில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவிக்கிறேன்.]]]

அரசுகள் நினைத்தால் வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் தடுக்க முடியும்..! நன்றி சரவணக்குமார்..

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...
இவ்வருடத்தின் தொடக்கமே இப்படி நிகழ்ந்து விட்டது. சுனாமியை தேசிய பேரழிவாக அறிவிக்க மட்டும் மத்திய அரசு ஏன் அவ்வளவு யோசித்தது???? பட்ட பின்புதான் நம் அரசுக்கு ஞானம் வரும். அயல்நாடுகளைப்போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருப்பின் பல லட்சம் உயிர்கள் நம் நாட்டில் காப்பாற்றப்பட்டிருக்கும். பிரதமர் வாகனம் வரும் வழியில் பொது மக்களின் வாகனத்தை நிறுத்தி (அது ஆம்புலன்ஸ் என்றாலும்) எத்தனை பேர் இறந்து வருகின்றனர். “இப்பயாவது திருந்துங்கடா டேய்” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் எருமை மாட்டின் மீதி மழை பெய்தது போல் நிற்பவர்களிடம் என்ன சொல்ல சார்?????]]]

ம்.. சோக நேரத்தில் வைய வேண்டாமே என்று நினைத்துதான் அடக்கமாக எழுதினேன்.. உங்களது கருத்தில் எனக்கும் உடன்பாடே..!

உண்மைத்தமிழன் said...

[[[சும்மா.. டைம் பாஸ் said...
first of all RIP of all the souls who died in this incident. But it rises some questions the death statistic shows 36 percent Tamils, 25% from karnataka (may be some more Tamils in this list from karnataka)20% from Andhra only 3 percent from Kerala. why people from the origin state is very less? which means Malayalis only run this Temple, not many malu people are going there? it is just a question about why own people are not participating much not about the religion or faith. since i did not see any Temples in Tamilnadu to which only other state people going much?]]]

இதுதான் ஐயப்பனின் மகிமை. அந்த மாநிலத்திலேயே அமர்ந்திருப்பதால் அந்த ஊர் மக்கள் நம்ம சாமிதானே என்று நேரம் கிடைக்கும்போது நேரில் சந்தித்துவிடுகிறார்கள். மற்ற மாநில மக்கள் வருடத்தில் இந்த மாதம் மட்டுமே அங்கு செல்வதால்தான் இந்த பெர்சண்டேஜ் கணக்கில் மலையாளிகள் குறைவாக இருக்கிறார்கள்..!

PREM SURYA said...

kallum mullum kalukku metthai sarana kosathirku veru ou artham ulathaga sonningale anne? athu enna ? nan ithu varaikum neenga first sonna mathri than ninaichutu irukken!!

உண்மைத்தமிழன் said...

[[[PREM SURYA said...
kallum mullum kalukku metthai sarana kosathirku veru ou artham ulathaga sonningale anne? athu enna ? nan ithu varaikum neenga first sonna mathrithan ninaichutu irukken!!]]]

கல்லில் அடிபட்டு, முற்கள் குத்தப்பட்டு கஷ்டமான சூழலிலும் ஐயனை தரிசிக்க வருகிறார்கள் என்ற அர்த்தத்தில்தான் பாடல் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் நான் நினைத்தது சுவாமியை சந்திக்க நடந்து செல்லும்போது எந்த இடர்ப்பாடுகள் இருப்பினும் அதனை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம் என்ற உயர்வான பக்தியில் எழுதியிருப்பதாக..!

J.P Josephine Baba said...

http://josephinetalks.blogspot.com/

உண்மைத்தமிழன் said...

[[[J.P Josephine Baba said...
http://josephinetalks.blogspot.com/]]]

தங்களுடைய முதல் வருகைக்கு மிக்க நன்றிகள்..!