என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு சிறுகதைக்கே உரித்தான அத்தனை இலக்கணங்களையும் தனக்குள் கொண்டிருக்கும் திரைப்படம் இது..!
'பருத்தி வீரன்' டைப் கதைதான்.. ஆனால் அதில் இருந்த அளவுக்கான உருக்கமான காட்சியமைப்புகளும், இயக்கமும் இதில் இல்லாததால் மனதை வருடச் செய்கிறதே தவிர.. 'பருத்தி வீரனைப்' போல் உட்புகவில்லை.
“நீ ஆடுறவரைக்கும் ஆடு.. ஆண்டவன் தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பான்.. ஆனா நீ என்னிக்கு ஆட்டத்தை நிறுத்திட்டு இனிமே நல்லா வாழணும்னு நினைக்கிறியோ.. அன்னிக்கு நீ ஆடுன ஆட்டத்துக்கெல்லாம் பதிலடியை ஆண்டவன் திருப்பிக் கொடுப்பான்..” - இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல் வாக்கியம்.. இதற்கொரு உதாரணம் இத்திரைப்படம்..
பால்ய வயதில் ஏற்பட்ட மோதலின் வடு வளர்ந்தும் மறையாமல் இருக்கும் இரண்டு இளைஞர்களுக்குள் நடைபெறும் மோதலில் ஒரு அப்பாவிப் பெண் பலியாகும் கதை..
ரஜினி ரசிகன் தனது நீண்ட கால எதிரியான கமல் ரசிகனை எப்படி பழிக்குப் பழி வாங்கினான் என்ற கதை..
வாலிப வயதுக்கேரிய அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண் சூழ்நிலையில் தன்னைத்தானே பலியாக்கிக் கொள்ளும் கதை..
குடி குடியைக் கெடுக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் கதை..
எத்தனையோ காதல்களை பெரியவர்களுக்குள் இருக்கும் வீம்பான ஈகோ மோதலே கெடுத்துவிடுகிறது என்பதைச் சொல்லியிருக்கும் கதை..
இப்படி ஒவ்வொரு கோணத்தில் இருந்து இத்திரைப்படத்தைப் பார்த்தாலும் அது ஒரு தனிக்கதையைச் சொல்வதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பு..
இது எதையுமே இத்திரைப்படம் முழுமையாகவும், அழுத்தமாகவும் சொல்ல முற்படாததால் காலச்சக்கரத்தில் சிக்கிய ஒரு இளைஞனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லிய நிலையில் இத்திரைப்படம் முடிக்கப்பட்டுவிட்டது.
வேலு என்கிற அந்தச் சிறுவனுக்கு சிறு வயதில் இருந்தே படிப்பு ஏறவில்லை. ஆனால் தானைத் தலைவர் ரஜினி மட்டுமே அவனுக்குக் கடவுளாகத் தெரிகிறார். அவருடைய திரைப்படங்களே வேலுவுக்கு பாடங்களாகத் தெரிகிறது..
பள்ளியை கட் அடித்துவிட்டு சினிமாவுக்குச் செல்லும் பழக்கம், காசு வேண்டி பள்ளியை முற்றிலுமாகத் துறந்துவிட்டு செங்கல் சுமக்கும் வேலைக்குப் போக வைக்கிறது. அந்தத் தொழிலைக் கச்சிதமாகக் கற்றுக் கொள்கிறான். கண்டிக்கவோ, தண்டிக்கவோ, திசை மாற்றவோ, அறிவுரை சொல்லவோ ஆள் இல்லாத காரணத்தினால் வாழ்க்கை திசை மாறுகிறது..
கற்கக் கூடாததையெல்லாம் அந்த வயதிலேயே கற்றுத் தெளிந்து கொள்கிறான். பெண் மோகமும், ரவுடித்தனமும், குடிப் பழக்கமும் அவனைத் தொற்றிக் கொள்கிறது.
சிறு வயதில் இருந்தே அவனை நேசித்து வரும் ஹீரோயினின் அன்பு அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அடைய முடியாததை அடைந்துவிடும் அந்த வெறி மட்டுமே அவனுக்குள் இருக்கிறது. தனது வருங்காலக் கணவன்தானே என்று நினைத்து ஹீரோயின் தன்னை அவனிடம் ஒப்படைக்க.. அவனோ இதுவும் ஒரு கேஸ் போலத்தான் என்றெண்ணி பணத்தை அவளிடம் விட்டெறிந்துவிட்டுப் போகிறான்.
சுக்குநூறாகிப் போன மனதுடன் இருக்கும் ஹீரோயினை அதே கோலத்திலேயே கண்டுபிடிக்கிறான் அப்பன்காரன். காதும் காதும் வைத்தாற்போல் முடிக்க வேண்டியதை ஊருக்கே ஒப்பாரி வைத்துச் சொல்லி சூட்டைக் கிளப்ப.. அதுவரையில் ஹீரோயினின் அப்பா மீது கடும்கோபத்தில் இருக்கும் வேலுவின் தந்தை திருமணத்திற்கு மறுக்கிறார்.
வேறு வழியில்லாத நிலையில் ஊரில் இருந்தால் நாலு பேர் வாயில் விழுந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதால் வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறாள் ஹீரோயின்.
தன் உடல் சூட்டைத் தணிக்க வந்த இடத்தில் இருந்த காமக்கிழத்தி ஒருவள், அவனுக்கு அறிவுரை சொல்லி ஹீரோயினின் காதலைப் பற்றி அவனிடம் சொல்ல இப்போதுதான் அவனுக்கு உறைக்கிறது. திருமணத்திற்கு சம்மதிக்கிறான். இது தெரிந்த வேலுவின் அப்பா அன்றைக்கு பார்த்து விஷத்தைக் குடித்துவிட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட்டாக.. சரியான நேரத்துக்கு தனது திருமணத்திற்காக கோவிலுக்குப் போக முடியாத சூழல் வேலுவுக்கு..
வேலு இந்த முறையும் ஏமாற்றிவிட்டான் என்று தவறாக நினைத்த ஹீரோயினின் தந்தை, தனது மகளை எப்போதும் பிச்சையெடுத்தே குடிக்கும் பழக்கமுள்ள பெரும் குடிகாரன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தன்னை வழி மறித்ததால் தன்னால் அதனை மீற முடியவில்லை என்பதை வேலுவால் வெளியில் சொல்ல முடியவில்லை..
பிச்சைக்கார கணவனால் தன்னை நேசித்த, தன்னால் கெடுக்கப்பட்ட ஹீரோயின் விபச்சாரியாக உருமாற்றப்பட்டிருப்பதை அறிந்த சோகத்துடன் இருக்கும் வேலுவுக்கு விதி, அவளது அண்ணி ரூபத்தில் வந்து விளையாடுகிறது.
வேலுவின் பால்ய எதிரியோடு அண்ணி தொடுப்பு வைத்துக் கொள்ள இதை வேலு பார்த்து அவனுடன் சண்டையிட.. அண்ணியோ தன்னை அவன்தான் கரும்புக் காட்டுக்குள் வைத்து கெடுத்துவிட்டதாக ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்துத் தொலைக்கிறாள்.
இப்படியொரு சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தாற்போல் ஊரும், சுற்றமும் அவனைத் திட்டித் தீர்க்க.. தனது தாயே தன்னை மோக வெறி பிடித்தவனாக பார்ப்பதை உணர்ந்தவன் இறுதியில் தன்னை புரிந்து கொள்ளாத இந்த உலகத்தில் இருந்து பயனில்லை என்பதால் தற்கொலைக்கு முயல்கிறான். ஆனால் அவன் இறந்துவிட்டானா..? அல்லது உயிருடன் இருக்கிறானா..? என்பதை நமக்குச் சொல்லாமலேயே முடித்திருக்கிறார் இயக்குநர்.
படத்தில் முதலில் பாராட்டுக்குரியவர்கள் அத்தனை நடிகர்களும்தான். லோக்கல் முகங்களையே தேடிப் பிடித்து நடிக்க வைத்திருக்கிறார்.. அத்தனை நேட்டிவிட்டி. ஹீரோயினின் தந்தையும், ஹீரோவின் தந்தையும் உருக்கியிருக்கிறார்கள்.
அதிலும் ஹீரோயினின் தந்தை குடி போதையில் தனது மகளின் நிலைமையை எண்ணி புலம்புகின்ற காட்சியும், பஞ்சாயத்தார் முன்னிலையில் தலை குனிந்து நின்று அமைதிப் பார்வை பார்க்கின்றபோதும், தனது மகளுக்காக தனது அக்கா வீட்டுக்குப் போய் பெண்ணை எடுத்துக்க என்று கெஞ்சுகின்ற காட்சியிலும், ஹீரோவை மருமகனாக்க ஒப்புக் கொண்டு அவனுக்காக சாராய பாட்டிலை வாங்கி உபசரிக்கும் இடத்திலும் வெகு இயல்பான நடிப்பு..
இதேபோல் ஹீரோ வேலுவின் குடும்பத்தினர்.. அவனது அப்பா, அம்மாவோடு அண்ணியாக நடித்த மீனாளும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.. அந்த நடுவீதி ஒப்பாரி பாட்டு ஒன்றே போதும்.. கிராமத்து மண்ணில் அறிவார்ந்த அறிவுரைகளும், ஆலோசனைகளும் எப்போதுமே ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அத்தனையும் உணர்ச்சி வேகத்தில் செய்யப்படுபவையாகத்தான் இருக்கும்.. இதற்கு நல்லதொரு உதாரணம் இந்தக் காட்சி..
ஒருவன் குடிகாரனாகவே இருந்து தொலைந்துவிட்டால் அவன் செய்யாத தவறுகளெல்லாம் அவன் செய்தது போலவே இந்த உலகத்தில் கற்பிக்கப்படும். இந்தக் கொடுமையைச் சுமக்கும் அப்பாவி கேரக்டர் வேலுவுக்கு.. புதுமுகம் என்றாலும் கொடுத்த பணியைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். பாராட்டுக்கள் உரித்தாகுக..
அடுத்த அதிர்ச்சி பிளஸ் ஆச்சரியம். ஹீரோயின்.. சின்ன வயது.. கேரக்டருக்கு ஏற்ற தோற்றம்தான்.. வயதுக்கு வந்த விழாவில் ஊரே திரண்டு தனக்கு மஞ்சத்தண்ணி ஊற்றியதையும், இப்போது தான் கெட்டுப் போனவள் என்பது தெரிந்தவுடன் ஊரே திரும்பிப் பார்க்காமல் போவதையும் தனது கண்களாலேயே சொல்லிவிடும் அந்தக் காட்சி நினைத்துப் பார்க்க வைக்கிறது. ஹீரோவிடமிருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்க நினைத்து முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் இயக்கம் அருமை.
ஒவ்வொரு காட்சியும் அதன் இயல்புத் தன்மையோடுதான் இருக்கிறது என்றாலும் மிகக் குறைவான கால நேரங்களே கொடுக்கப்பட்டிருப்பதால் மனதை டச் செய்ய மறுக்கின்றன. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் கச்சிதமாக இருந்திருக்கும்..
ஹீரோயினின் அப்பாவுக்கும், சித்தாளுக்கும் இடையில் ஏற்படும் நெருக்கத்தை எந்தவித விரசமும் இல்லாமல் வெறும் ஈர்ப்பாகக் காட்டியிருப்பதற்கு இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும்.
பருத்திவீரனை விடவும் விரசக் காட்சிகள் குறைவாகவே இருந்தாலும் அதற்கான முனைப்புகள் இதில் சீரியஸாக இருப்பதால் அது போன்ற திரைப்படமோ என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்துவிட்டது. ஆனாலும் நெருக்கமான காட்சிகளில்கூட விரசமில்லாமல் எடுத்துக் காண்பித்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கு ஒரு நன்றி..
ஊரில் அக்மார்க் முத்திரையுடன் இருக்கும் மல்லிகா என்ற விபச்சாரப் பெண் தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகச் சொல்கிற காட்சியில் வேண்டுமென்றே ஒரு பாடல் காட்சியைத் திணிக்க அந்தச் சூழலில் ஸ்பீடாக போய்க் கொண்டிருந்த திரைக்கதையின் டெம்போ குறைந்துவிட்டதாக எனக்குத் தோன்றியது. அந்தப் பாடல் காட்சியை தூக்கியிருக்கலாம்.
மகனது திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கும் தந்தைகளும், தாய்களும் கையாளுகின்ற அதே விஷம் குடித்தல் என்கிற விஷயத்தை அவனது தந்தை பயன்படுத்துவதையும், ஹீரோ அதனால் தடுக்கப்பட்டு பாதிக்கப்படுவதையும் காட்சிகளாக அழகுபடுத்தியிருக்கிறார்கள். ஆனால் கூடவே நம்மை டென்ஷனாக்கும் அந்த ரீரெக்கார்டிங் என்னும் வாஸ்து இந்த இடத்தில் சுத்தமாக படுத்துவிட்டதால் நமக்கு ஒன்றும் தோன்றவில்லை..
கமல் ரசிகனான ஹீரோயினின் முறைப் பையனை அசிங்கப்படுத்தத்தான் ஹீரோயினை தான் மடக்கியதாக வேலு சொல்லியிருந்தால் கதையின் போக்கு மாறியிருக்கும்.. இப்படி இந்தக் கதையின் போக்கு மாறும் சூழல் படத்தில் பல இடங்களில் இருந்தாலும் இயக்குநர் அனைத்திற்கும் தொடர்பளிக்காமல் போனது ஏன் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. ஒரு சிறுகதையாக புத்தகத்தில் படிப்பதற்கு இது தோதான கதை. ஆனால் நமது திரைப்படங்களின் தற்போதைய போக்கில் கதைக்கருவும், கதை எதைப் பற்றியது என்பதைச் சொல்லியாக வேண்டிய கட்டாயமும் இருப்பதால் இந்தப் படத்தில் அந்தக் குழப்பம்தான் ஏற்பட்டிருக்கிறது.
சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் எப்படி ஒரு இளைஞனின் கதையை முடித்திருக்கின்றன என்பதற்கு இந்தப் படமும் சாட்சியம் அளித்திருக்கிறது.
என்னளவில் இதுவொரு சிறந்த திரைப்படம்தான்.. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமும்கூட.!!!
புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com
|
Tweet |