Showing posts with label கோட்டா சீனிவாசராவ். Show all posts
Showing posts with label கோட்டா சீனிவாசராவ். Show all posts

நோகடித்த பவானி ஐ.பி.எஸ்.

19-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
1991-ம் ஆண்டு 'கார்த்தவ்யம்' என்கிற பெயரில் தெலுங்கில் வெளிவந்து பட்டையைக் கிளப்பிய தமிழ் வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தை தூசி தட்டியெடுத்து மீண்டும் நேரடி தமிழாக்கியிருக்கிறார்கள்.. இல்லை.. படுத்தியெடுத்திருக்கிறார்கள். இதற்கு சும்மாவே இருந்திருக்கலாம்..!

 
கதையெல்லாம் எதுக்கு..? அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமே..? விஜயசாந்தி அளவுக்கு கோபத்தைக் காட்ட முடியாத புன்னகை இளவரசி சினேகாவை இந்தக் கதைக்குத் தேர்வு செய்ததே முதல் தவறு.. எவ்வளவு முயன்றும் அம்மணியால் ஒரு சதவிகிதம்கூட புகையைக் கிளப்ப முடியவில்லை..! அப்புறம் எப்படி படம் நிக்குறது..?

சமீப காலங்களில் இது போன்ற கேவலமான சண்டைக் காட்சிகளை வேறெந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை.. (இதற்கடுத்த நிலையில் இருக்கும் படத்தையும் நேற்று பார்த்துத் தொலைத்துவிட்டேன்) ரோப் கட்டித் தொங்கவிடுவதுகூட தெளிவாகத் தெரிகின்ற அளவுக்கா சண்டைக் காட்சிகளை பதிவு செய்வார்கள்..? அட தேவுடா.. இத்தனைக்கும் அனுபவமிக்க தளபதி தினேஷ்தான் சண்டைப் பயிற்சியாளர்..!

வைஜெயந்தியில் விஜயசாந்தியின் சண்டைப் பயிற்சிக்கே அந்தக்கா மூணு மாசம் தனியா டிரெயினிங் எடுத்திட்டு அப்புறமா வந்து பறந்து பறந்து அடிச்சிருக்கு..! என்னதான் சொல்லுங்க.. தெலுங்கு.. தெலுங்குதான்..!

அதே கதைதான் என்றாலும் கொஞ்சம் கொஞ்சம் லேசுபாசாக மாற்றி தமிழுக்காக படுத்தியிருக்கிறார்கள். ம்ஹூம்.. அதுவும் தேறவில்லை. இயக்குநர் கிச்சா இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்..! இது புதிய கதையாக இருந்திருந்தால்கூட ஏதோ ஒரு படம் என்ற நினைப்பில் விட்டுத் தொலைந்திருக்கலாம்..

சினேகா பேசாமல் கோல்கேட் விளம்பரம் தரும்படியான படங்களிலேயே நடித்துவிட்டுப் போகலாம். எதற்கு இந்த பொங்கியெழும் புதுமைப் பெண் வேடம்.. ஸாரி சினேகா மேடம்..! கோச்சுக்காதீங்கோ..! முடியலைன்னா விட்ரலாமே..! ஆனால் இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அதற்காக பாராட்டுக்கள்..!

 
போலீஸ் டிரெஸ்ஸை போட்டு மிடுக்கா காட்டுறதுக்கே ஒரு இடுப்பு வேணும். அது உங்களுக்கு மிஸ்ஸிங்.. லூஸ் மோகன் மாதிரி டிரெஸ்ஸை போட்டு நீங்க நடந்து வர்றதை பார்த்தா பயம் வர்றதுக்குப் பதிலா சிரிப்புதான் வந்துச்சு..! பொம்பளை போலீஸ்னா மலையாளத்துல வாணி விஸ்வநாத்துன்னு ஒரு அக்கா அப்படியொரு கேரக்டராவே வாழ்ந்து காட்டியிருக்காங்க. அவங்க போலீஸா நடிச்ச படத்தையெல்லாம் பாருங்க.. ஆம்பளை போலீஸ்கூட அப்படி சிக்குன்னு நிக்க முடியாது. அப்படியிருப்பாங்க..!

வைஜெயந்தில சரண்ராஜை முதன்முதல்லா பார்க்கும்போது கொஞ்ச நேரம் பேசவிட்டுட்டு அப்புறமா ஆட்காட்டி விரலை காட்டி ஒரு மிரட்டு மிரட்டுவாங்க பாருங்க.. அப்பத்தான் ரசிகனுக்கே தோணுச்சா.. ஆத்தாடி.. இந்தப் பொண்ணு என்னமோ பெரிசா பண்ணப் போகுதுன்னு..! ஆனா நீங்க இன்னா செஞ்சிரு்ககீங்க..?

சரி வேணாம் விட்ருவோம்..! டைரக்டர் சொன்னாரு. நீங்க நடிச்சிருக்கீங்க.. அவ்ளோதான்.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம வந்த நடிப்பை வஞ்சகமில்லான கொட்டிட்டுப் போயிட்டீங்க..! உங்க கேரியர்ல ஒரு படம் அவ்ளோதான்..!

 
படத்துல ஒரேயொரு நல்ல காரியம் மட்டும் செஞ்சிருக்காரு டைரக்டர். அது கோட்டா சீனிவாசராவை வில்லனா நடிக்க வைச்சதுதான்..! ஏதோ அவர் அளவுக்குக் கொஞ்சம் தேத்திக் கொடுத்திருக்காரு..! வில்லனும் சொதப்பலாயிருந்தா அவ்ளோதான்..! இந்த அளவுக்கு பேருகூட கிடைச்சிருக்காது..!

லோக்கல் சினிமாக்களில் இன்னமும் மறக்க முடியாத வில்லத்தனங்களில் வைஜெயந்தியில் மீனாவை ரேப் செய்யும் வில்லனாக நடித்த உதய்பிரகாஷ் கேரக்டரும் ஒன்று. தன் தலை மொட்டையடித்த நிலையில் கண்ணாடி முன் நின்று பார்த்து கத்தும் அந்தக் காட்சி இன்னமும் மறக்க முடியாதது..! இங்கே அதுவும் சொதப்பலாகி, வில்லத்தனமும் போலியாகிவிட்டது.

வைஜெயந்தியில் வினோத்தின் கேரக்டரை இதில் சம்பத் செய்திருக்கிறார். விஜயசாந்தியின் அதிரடிகளின்போதெல்லாம் தப்பெடுத்து ஆட்டம் ஆடிய வினோத்தின் அந்த கேரக்டர் இதில் சுத்தமாக கட்..! துவக்கத்தில் ஒரு பாட்டு பாடியதோடு சரி..! சம்பத்தின் சோகக் கதை மட்டுமே நமக்கு ஆறுதல்..!

எல்லாம் எடுத்து முடித்த பிறகு இப்படியே போனால் தேறாது என்று நினைத்து விவேக்கின் காமெடி காட்சிகளை தனியே எடுத்து ஒட்டியிருக்கிறார்கள். ஹெல்மெட் போடாததாலதாண்டா புள்ளையே பொறந்திருக்கு என்று அக்மார்க் விவேக்கின் குசும்பே குசும்பு..! அவரும் செந்திலும் அடிக்கிற மூன்று லூட்டிகள் தனி டிராக்கில் போவதால் கதையோடு ஒட்டவில்லை..!

ம்ஹும்.. அரசியல் அக்கப்போரில் இருந்து தப்பிச்சு கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கலாம்னு நினைச்சுத்தான் இந்தப் படத்துக்குப் போனேன்.. கடைசீல ஏண்டா போனோம்னு ஆயிப் போச்சு..!

இது போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களை மீண்டும் படமாக்கும்போது முந்தையதைவிடவும் மிக அற்புதமாகத் தரப்பட வேண்டும் என்கிற வெறியோடும், அறிவோடும் உழைத்திருக்க வேண்டும். ஆனால் இதில் ஏதோ ஒரு படத்தை எடுத்துச் சுருட்டிக் கொடுப்போம் என்கிற மாதச் சம்பளக்காரனின் மனநிலையோடு எடுத்திருக்கிறார் இயக்குநர் கிச்சா..!

வைஜெயந்தி ஐ.பி.எஸ். என்கிற மறக்க முடியாத படத்தின் ரீமேக் என்பதால் அதே மனநிலையோடு போய் உட்கார்ந்து, கிடைத்த ஏமாற்றத்தினால் இயக்குநர் மேல்தான் கோபம் பொத்துக் கொண்டு வந்தது..!

 
வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தை ஒரு மதிய ஷோவில் பார்த்துவிட்டு வெளியே வந்தபோதே பிளாக்கில் டிக்கெட் விற்ற அந்த ஆள் சிக்கினால் நாலு சாத்து சாத்திவிட வேண்டும் என்கிற வெறிதான் மனதில் இருந்தது. அந்த அளவுக்கு அந்தப் படத்தின் தாக்கம் ரசிகர்களின் மனதில் மேலோங்கி இருந்தது..! ஆனால் இதில் படத்தின் இயக்குநரை நாலு சாத்து சாத்தினால் என்ன என்றுதான் தோன்றியது..!

போகணும்னா போயிக்குங்க..!

கோட்டா சீனிவாசராவுக்கு எனது ஆறுதலும், வருத்தங்களும்..!

21-06-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று மாலை அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது சட்டென ஒரு நிமிடம் எனக்குள் தூக்கிவாரிப் போட்டது, “ஏண்டா முருகா.. அவருக்கு ஏன் இந்தக் கொடுமை..?” என்று..

அவ்வளவுதான்.. அடுத்த நிமிடத்தில் நாட்டில் தினம்தோறும் நடக்கின்ற சாலை விபத்துக்களில் அதுவும் ஒன்றாகி மனம் தன்னைத்தானே சமாதானமாக்கிக் கொள்ள, மனமும் வேறு வேலைகளில் ஈடுபட்டாகிவிட்டது.

ஆனால் நேற்றைய இரவில் ஜெமினி தொலைக்காட்சியில் உடைந்து போய் சுக்குச் சுக்கலான நிலையில் இருந்த எனது அபிமானத்துக்குரிய அந்த மனிதரைப் பார்த்தவுடனேயே இடம் மாறிய எனது மனம் இந்த நிமிடம்வரையிலும் அந்த நிகழ்வில் இருந்து வெளியில் வர மறுக்கிறது..

கோட்டா சீனிவாசராவ் என்கிற பெயரை தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து போய்விட முடியாது.. கம்பீரமான தோற்றம்.. கள்ளச் சிரிப்பு.. நொடிக்கொரு முறை மாறும் முக பாவனை.. வில்லனா.. நல்லவனா என்பதே தெரியாத வகையிலான நடிப்பு.. வில்லத்தனத்திலேயே நகைச்சுவையை கலந்து கொடுக்கும் சாமர்த்தியம்.. இப்படி எல்லாவற்றுக்கும் ஒரே நடிகராக அக்மார்க் முத்திரை குத்தப்பட்டு தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார்.


இவருடைய ஒரே மகன் கோட்டா பிரசாத். வயது 39. திருமணமாகி இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். நேற்று தற்செயலாக மதிய விருந்துக்கு ஹோட்டலில் போய் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து குடும்பத்துடன் கிளம்பியிருக்கிறார். மனைவி மற்றும் பிள்ளைகள் காரில் பின்னால் வர.. பிரசாத் தனக்கு மிகவும் பிடித்தமான தனது வெளிநாட்டு பைக்கை ஓட்டிச் சென்றிருக்கிறார்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நரசிங்கி என்னும் இடத்திற்கு வரும்போது எமன் ஒரு லாரி உருவத்தில் வந்து பிரசாத்தின் பைக்கை தாக்கியிருக்கிறான். மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் புண்ணியமில்லை.. உயிரற்ற உடலாகத்தான் பிரசாத்தை வெளியில் கொண்டு வர முடிந்திருக்கிறது.


ஷூட்டிங்கிற்காக பெங்களூர் சென்றிருந்த கோட்டா சீனிவாசராவ் ஹைதராபாத்துக்கு அவசரமாக ஓடி வந்தும் உயிரற்ற தனது மகனைத்தான் பார்க்க முடிந்திருக்கிறது..


எத்தனையோ சினிமாக்களில் அவரும் நல்ல, பாசமான, உண்மையான அப்பாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். படம் பார்த்த ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார். இன்றைக்கு தாங்க முடியாத ஒரு சோதனையை அவர் வெளிப்படுத்தியவிதம் அவர் மீது விவரிக்க முடியாத ஒரு ஈர்ப்பை வைத்திருந்த என்னை மாதிரியான சினிமா ரசிகர்களால் சட்டென்று ஜீரணிக்க முடியவில்லை.


1978-ல் இருந்து நடித்து வரும் கோட்டா சீனிவாசராவை எனது பால்ய வயதில் இருந்தோ அல்லது எப்போது தெலுங்குத் திரைப்படங்களை விரும்பி பார்க்கத் துவங்கினேனோ அப்போதிலிருந்தே ரசிக்கத் துவங்கிவிட்டேன். முப்பத்தைந்து வருடங்களாக இன்றுவரையிலும் அவரைப் பற்றிய ஒரு பிம்பம் என் மனதில் இருக்க.. இன்றைக்கு அந்த பிம்பம் உடைந்து போன சூழலில் என்னாலும் இதனை வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை..

கோட்டா பிரசாத் தற்போதுதான் தனது தந்தை வழியில் நடிக்க வந்திருக்கிறார். சித்தம் என்கிற தெலுங்கு திரைப்படத்தில் ஜே.டி.சக்கரவர்த்தியின் இயக்கத்தில் ஜெகபதிபாபுவிற்கு வில்லனாக நடித்து தனது நடிப்பு கேரியரைத் துவக்கியிருக்கிறார். பின்பு தனது தந்தையுடனேயே ஒரு படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தற்போது கைவசம் மூன்று திரைப்படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுநாள் வரையிலும் திரையுலகத்திற்குள் கால் வைக்காமல் தான் உண்டு, தனது கிரானைட் பிஸினஸ் உண்டு என்று இருந்தவர், கோட்டா சீனிவாசராவ் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது திரையுலக லைம் லைட்டிற்கு வர வேண்டிய கட்டாயமாகிவிட்டது.

முதல் படத்திலேயே அடையாளம் காணும் அளவுக்கு நடித்திருக்கும் கோட்டா பிரசாத்திற்கு அடுத்தடுத்து அழைப்புகள் வர.. அத்தனையிலும் கையெழுத்திட்டுவிட்டு காத்திருந்தவரைத்தான் எமன் கொள்ளை கொண்டு போயிருக்கிறான்.


அஞ்சலி செலுத்த வந்தவர்கள் முன் அழுகையை கட்டுப்படுத்த பல்லைக் கடித்துக் கொண்டு கோட்டா சீனிவாசராவ் பட்ட கஷ்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இந்தக் கொடூரம் வேறு யாருக்கும் வரக்கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது..


சோகத்தில் பெரும் சோகம், புத்திர சோகம் என்பார்கள். தான் உயிருடன் இருக்க தான் பெற்ற பிள்ளைக்கு கொள்ளி வைப்பது என்பது மிகப் பெரும் கொடுமை என்பார்கள்.. தனக்கு மிகவும் நெருக்கமான பாபுமோகனையும், பிரம்மானந்தத்தையும் பார்த்தவுடன் கட்டுப்படுத்த முடியாமல் மீறிய அவரது அழுகையை பார்த்து என் கண்களும் சட்டென்று கலங்கிவிட்டன.


பைக் ஓட்டுவதில் பெரும் ஆர்வமுள்ள பிரசாத் ஆசையாக அந்த பைக்கில் அமர்ந்த நிலையில் எடுத்திருந்த புகைப்படத்தை துக்கம் விசாரிக்க வந்தவர்களிடத்திலெல்லாம் காட்டியபடியே கண் கலங்கிய ஒரு தந்தையின் பரிதவிப்பை இன்றைக்கு சீனிவாசராவ் மூலமாக நான் பார்த்தேன்..


“எங்க அப்பா கூடவே அவருக்கு சரிக்கு சமமான எதிர் வில்லனா நடிக்கணும்.. அதுதான் என்னோட திரையுலக லட்சியம்..” என்று கடைசியாக பேட்டியளித்திருக்கும் பிரசாத்தின் கனவு நிராசையானது சோகம்தான்..

இறந்தவர் யாராக இருந்தால்தான் என்ன..? யார் வீட்டில் நடந்தாலும் அது சாவுதானே..?

ஆனாலும் தந்தையர் தினத்தன்றே.. ஒரு தந்தைக்கு இந்தக் கொடுமை நடந்திருக்கக் கூடாதுதான்.. அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..