Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts

சட்டம் ஒரு இருட்டறை-சினிமா விமர்சனம்



22-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பழைய திரைப்படங்களை ரீமேக் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படி கனம் தமிழ்த் திரைப்படத் துறையினரை நோக்கி ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்ள இப்படம் பெரிதும் உதவியிருக்கிறது என்றே நினைக்கிறேன்..!

1981-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் நாள் வெளியான ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறை அப்போதைக்கு சூப்பர் டூப்பர் ஹிட்.. அது அந்தக் காலத்தில் மக்களின் ரசனைக்கு நிறையவே தீனி போட்டிருந்தது..! கூடவே பரமசிவனின் நெற்றிக்கண்ணைத் திறந்தாற்போல் காட்சிக்கு காட்சி தனது சிவப்பு விழிகளை உருட்டி, உருட்டி ரசிகர்களை பெருமளவுக்கு கவர்ந்திருந்த கேப்டனும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்..! 

எஸ்.ஏ.சி. தனது பேத்திக்கு ஒரு நல்ல துவக்கத்தைக் கொடுக்க நினைத்தது தவறில்லை. ஆனால் அதற்காக இப்படத்தையே தூக்கிக் கொடுத்து பழைய படத்தை நினைத்து பெருமூச்சுவிட வைத்ததுதான் தவறு..! புதுமுக நடிகரோ, பேர் இல்லாத நடிகைகளோ நடிக்கிறார்கள் என்றால் அதில் கதை அல்லது இயக்கம் இரண்டில் ஏதாவது ஒன்றாவது உருப்படியாய் இருந்தால்தான் மக்களிடம் அது பேசப்படும். இரண்டுமே அசத்தல் என்றால் வழக்கு எண் படம் போல சூப்பர்தான்..! இது இரண்டுமே இல்லாமல் வெறுமனே பழைய பெருமையை நினைத்து வேட்டியில் மஞ்சள் தடவிய கதையாகத்தான் இந்தப் படம் முடிந்திருக்கிறது..!

தமிழில் விஜயகாந்த்.. மலையாளத்தில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் சங்கர்நாக், ஹிந்தியில் அமிதாப்-ரஜினிகாந்த் என்று ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்த இந்தப் படத்தின் கதி என்ன என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்..!



தனது காதலியை கொன்றவர்கள் சட்டத்தின் ஓட்டைகளால் தப்பித்துவிட்ட கோபத்தில் ஹீரோ தானே அவதாரமெடுத்து அவர்களை அழிக்கிறார். ஹீரோவின் அக்கா போலீஸ் துணை கமிஷனராக இருந்தும், தனது தம்பிதான் இந்தக் கொலைகளை செய்திருக்கிறார் என்று தெரிந்தும் ஆதாரங்கள் இல்லாததால் தம்பியை கைது செய்ய முடியாமல் தவிக்கிறார். 2 கொலைகளைச் செய்துவிட்டு, அதை ஒப்புக் கொண்டுவிட்டு.. பின்பு கடைசி ஆளையும் தான் கொலை செய்வேன் என்று அக்காவிடம் சபதமிடுகிறார் ஹீரோவான தம்பி. அக்காவும் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள.. என்னாச்சு என்பதை பழைய சட்டம் ஒரு இருட்டறை படத்தைப் பார்த்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..!

விஜயகாந்த் வேடத்தில் புதுமுகம் தமன். பழைய படத்தைப் பார்க்காதவர்களுக்கு புதுமுக ஹீரோவாகத் தெரியும். இவர் ஏற்கெனவே ஆச்சரியங்கள் படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னும் 4, 5 படங்களில் நடித்த  பின்பு இவரது நடிப்பு பற்றி நாம் பேசுவோம்..! ஹாங்காங்கில் பியாவுடனான காதல் காட்சிகளில் மட்டும் திரைக்கதையினால் கொஞ்சம் சுவாரசியப்படுத்துகிறார். அவ்வளவே..!
ஹீரோயின்கள் பியா அண்ட் பிந்து மாதவி.. இருவருக்குமே ஸ்பெஷலாட்டி கண்கள்தான்.  முடிந்தவரையிலும் அதனையே எக்ஸ்போஸ் செய்து பாடல் காட்சிகளையும், காதல் காட்சிகளையும் நகர்த்தியிருக்கிறார்கள். பியாவுக்கு இருந்த நடிப்பு ஸ்கோப்கூட பிந்துவுக்கு இல்லாததால், கொஞ்ச நேரமே வந்தாலும் பியாவே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறார்..!

இறுதிக் காட்சியில் தலை காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் எஸ்.ஏ.சி. இதிலும் அப்படியே..! ஹீரோவுக்கு உதவும் ஜெயிலராக வந்து சட்டத்தை கிழி கிழியென்று கிழித்து எறிகிறார். ஆனால் தியேட்டரில் கைதட்டல் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை. சட்டத்திற்கும் சாமான்யனுக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளிதான் இந்தப் படத்தின் கரு. அதனை மையப்படுத்தி வசனத்தை வைக்காமல், சென்சார் போர்டை கூல் செய்ய வேண்டி வசனத்திலும் சமரசம் செய்திருக்க முயன்றிருப்பதால் அதுவும் மனதில் நிற்கவில்லை..!

துணை கமிஷனர் கெளசல்யாவாக ரீமாசென். காக்கி சட்டையை போட்டாலே வந்துவிடும் ஒரு மிடுக்கும், தோரணையும் இங்கே மிஸ்ஸிங்.. பாடல் காட்சிகளில் அணிவதுபோலவே காக்கி பேண்ட்கூட சற்று இறக்கமாகத்தான் இருந்தது..! விஜயசாந்தி, ராதிகாவைத் தவிர வேறு யாருக்கும் போலீஸ் பாடி லாங்குவேஜ் வரவே வராது..!  படத்துக்குப் படம் வித்தியாசமாக எதையாவது செய்து தனித்திறமையை காட்டினால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும்.. அம்மணி இப்போது “உண்டாகி”யிருப்பதால் இதுதான் இப்போதைக்கு கடைசி படமென்றும் சொல்லலாம்.. ஆகவே ஓகே மேடம் என்று விட்டுவிடுவோம்..!

1981-ல் இருந்த ரசிகர்களின் மனநிலையும், அறிவும் அன்று போலவே இப்போதும் இருக்கும் என்று நினைத்திருக்கும் எஸ்.ஏ.சி மற்றும் இயக்குநருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..! சுரேஷ் நடுரோட்டில் ஆக்ஸிடெண்ட்டில் இறக்கும்போது, ஓடி வரும் இன்ஸ்பெக்டர் முன்பு ஜெயிலராகவும் இருந்தவராம்..! இது எந்த நாட்டு சட்டம் என்று தெரியவில்லை.. சர்வசாதாரணமாக ஒரு துணை கமிஷனர் ஜெயிலுக்குள் நுழைந்து “செல்”வரைக்கும் போய் பார்த்து வருவதெல்லாம் முடிகிற காரியமா..? அத்தோடு அவர் ஜெயிலரா..? இன்ஸ்பெக்டரா..? எப்படி வந்தார் என்பதையெல்லாம் கொஞ்சமாவது யோசித்து வைத்திருக்க வேண்டாமா..? அதோடு 2 நாளுக்காக ஹீரோவை ஜெயிலில் வைக்கிறார் துணை கமிஷனர்.. இதையும் புதிய ஜெயிலர் ஏற்றுக் கொள்கிறார். பின்பு ஜெயிலரே போலீஸ் கமிஷனரிடம் விளக்கமளிக்க நேரில் வருகிறாராம்..!  ஒரு அமைப்பின் செயல்பாடுகளைச் சொல்லும்போது அதில் கொஞ்சமாவது உண்மைத்தன்மை வேண்டாமா..? லாஜிக் பார்க்காமல் செல்வதற்கு இதுவொன்றும் நகைச்சுவை, கமர்ஷியல் படமில்லையே..? இறுதியில் பழைய ஜெயிலரையே செல்போன் மூலமா கமிஷனர் முன்பாக அவரது அறையிலேயே கொலை செய்கிறார் ஹீரோ.. நம்பத்தான் முடியலை..!  

ஒளிப்பதிவாளர் தனது பணியைக் கச்சிதமாகவே செய்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும், ஹாங்காங் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் அழகுடன் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இது ஒன்று மட்டும் போதாதே.. படத்தின் வெற்றிக்கு..! அது போலவே இசையும்.. விஜய் ஆண்ட்டனியின் இசையில் 2 பாடல்கள் கேட்கும்படி உள்ளது. 'கும்கி'யில் உள்ளது போலவே இதிலிருக்கும் 'சொய் சொய்' பாடல் முணுமுணுக்கவும் வைக்கிறது..!

இந்திய அளவில் பார்த்தால் இந்தப் படத்தின் பெண் இயக்குநரான சினேகா பிரிட்டோதான் 34-வது இயக்குநர்.  புதுமுக இயக்குநர் என்பதால் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் வராமைக்கு அவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியவில்லை. இயன்றவரைக்கும் எடுத்திருக்கிறார். தமன்-பியா காதல் காட்சிகள்.. “நத்திங்” என்று இருவரும் ஒருவரையொருவர் காலை வாரும் காட்சிகள் மட்டுமே ரசிக்க வைக்கிறது.. தமனின் நண்பர்கள் கமிஷனர் அறையில் பேசும் பேச்சுக்களெல்லாம் ஓவர்.. இனி அடுத்தடுத்த வாய்ப்புகளில் இவரது இயக்கத் திறமை நம்மைக் கவர்வது போல இருக்கட்டும்..!

விஜயகாந்தின் அந்த அனல் தெறித்த நடிப்பும், வெறியூட்டிய சண்டைக் காட்சிகளும், மனதைக் குடைந்த அரசியல் வசனங்களும் இல்லாமல்.. ஏதோ காதலுக்காக நடந்த ஒரு சின்ன சண்டையை போல இந்தப் படம் முடிவடைந்திருப்பதுதான் ஏமாற்றத்திற்குக் காரணம்..! இப்படத்தின் மூலம் கிடைத்த லாபம் ‘கும்கி’ படத்திற்குக் கூடுதலாக தியேட்டர்களும், ரசிகர்களும், வசூலும் கிடைக்கப் போகிறது.. கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்..! 

வளர்த்த கடா வடிவேலு..! புண்ணாக்கு குஷ்பு..!

04-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“என்னடா இது? பத்திரிகை செய்திகளையே போட்டுக்கிட்டிருக்க..?” என்று கோபப்படாதீர்கள் மக்களே..!

2011 சட்டமன்றத் தேர்தல் முடிகிறவரையில் இதை தொடர்ந்து செய்வதாகத்தான் உள்ளேன்.. தற்போதைய நிலையில் பத்திரிகைகளில் வரும் சில ஸ்கூப் நியூஸ்களை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கூடவே இணையத்தில் பதிவும் செய்து வைக்க வேண்டியுள்ளது.

உள்ளூரில் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் படிப்பார்கள். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களில் புத்தகத்தை இணையத்தின் மூலமாகப் படிக்காமல் இருப்பவர்களுக்காக இங்கே எனது தளத்தில் அவைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன..!

கோபித்துக் கொள்ளாமல் ஓ.பி. அடிக்கிறேன் என்றெல்லாம் நினைக்காமல் எனது உடன் பிறந்த சகோதரனான எனது கைகளுக்காக என்னைத் திட்டாமல் ‘போய்த் தொலைடா’ என்று பெரிய மனதுடன் மன்னித்து விட்டுவிடுங்கள்..!

இது திரையுலக அரசியல்வியாதிகளின் முதல் மோதல் கட்டுரை..!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியை, 'ஒண்டிக்கு ஒண்டி  வர்றியா?’ என சவால்​விட்டவர், வாழைப்பழ காமெடி நடிகர் செந்தில். இந்தத் தேர்தலிலும், தமிழகம் முழுக்க, தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பிச்சு உதறு​கிறார்.

''மதுரையில் நாடகத்தில் நடிச்சுட்டு இருந்தான் வடிவேலு. ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடிக்கிறதுக்கு சான்ஸ் கேட்டு மெட்ராஸ் வந்தான். அவனைப் பார்த்ததுமே, 'இவன் ஆளே சரி இல்லையே... ஒரு தினுசா இருக்கானேன்’னு கவுண்டமணி அண்ணன் கரெக்ட்டா கண்டுபிடிச்சுத் திட்டினார். நான்தான் அவரை சமாதானம் செஞ்சு, ''அண்ணே ஏதோ நாடகத்துல நடிச்சுப் பொழைப்பை நடத்துறான். சினிமாவுல நடிச்சா இன்னும் கொஞ்சம் கூடுதலா நாலு காசு பார்ப்பான், பாவம்’னு வடிவேலுக்கு வக்காலத்து வாங்கினேன்.

சினிமாவில் அவனுக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண். அந்தப் பாவத்துக்காக அவர் பக்கத்துல இருந்தவங்களை எல்லாம் தன்கிட்டே இழுத்து வெச்சுக்கிட்டான். கஷ்டப்படுற ராஜ்கிரணுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன்னு தப்பா ஒரு சேதியைக் கிளப்பிவிட்டு, தன்னை ஒரு வள்ளலா காட்டிக்கிட்டான். விஷயத்தைக் கேள்விப்பட்டு ராஜ்கிரணே நொந்துபோய்ட்டார். இது மாதிரி அறிமுகம் செஞ்சவரையே அசிங்கம் செஞ்சவன்தான் வடிவேலு.

ஆர்.வி.உதயகுமாரோட 'சின்னக் கவுண்டர்’ படத்துல நானும், கவுண்டமணி அண்ணனும் நடிச்​சோம். எங்ககூட வடிவேலுவும் நடிச்சான். ஷூட்டிங்கில் விஜயகாந்த் எங்களைவிட வடிவேலுவைத்​தான் விழுந்து, விழுந்து கவனிப்பார். அவனை எப்பவும் தன் கூடவே வெச்சுக்குவார். அவர் சாப்பிடுற ஐயிட்டங்களையே அவனுக்கும் பரிமாறச் சொல்லுவார். அந்தப் படத்துல வடிவேலு நிறைய ஸீன்ல நடிக்கறதுக்கு டைரக்டர்கிட்டே சிபாரிசுகூட பண்ணினார் விஜயகாந்த். 'என்னண்ணே இப்படிச் செய்றீங்களே?’ன்னு நான் விஜயகாந்த்கிட்ட கேட்டேன். 'அண்ணே, நீங்க ராமநாதபுரத்து ஆளு. வடிவேலு என் ஊர்க்காரன். என்னோட ஆளு. நீங்க வேணா பாருங்க.. அவன் பெரிய்ய ஆளா வருவான்’னு விஜயகாந்த் என்கிட்ட சொன்னார். அப்படி அவர் வளர்த்த கடா வடிவேலு, இப்போ அவர் மார்பிலேயே பாயுது. அவன், அவரை அசிங்க அசிங்கமாத் திட்டுறான்.

தருமபுரியில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிச்சுப் பேசியிருக்கார் விஜயகாந்த். அப்போ, வேனுக்குள்ளே மைக் விழுந்துடுச்சு. உதவியாளரிடம் குனிஞ்சு எடுக்கச் சொல்லி இருக்கார். அந்தச் சம்பவத்தை கேமரா ட்ரிக் மூலமா வேட்பாளரை அடிச்ச மாதிரி தப்பாப் பிரசாரம் பண்றாங்க. கருணாநிதியைக் கைது செஞ்சப்போ, பரிதாபமாக் கத்துற மாதிரி டப்பிங் வாய்ஸ் கொடுத்தவங்கதானே இந்த தி.மு.க-காரங்க.

இன்னோர் கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது,​ 'அ.தி.மு.க. கொடியைக் கீழே இறக்கச் சொல்லித் திட்டின மாதிரி’ கருணாநிதி டி.வி-யில் காட்டுறாங்க. அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சியோடு கொடிகளுக்கு மத்தியில் திடீர்னு ஒருத்தன் தி.மு.க. கொடியைத் தூக்கிக் காட்டுனான். அதைப் பார்த்துக் கடுப்பான விஜயகாந்த், தி.மு.க. கொடியைக் கிழே இறக்கச் சொல்லித் திட்டினார். டப்புன்னு கேமராவை அ.தி.மு.க. பக்கம் மாத்திக் காட்டி கூட்டணிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துறாங்க.

சென்னையில் அம்மா பேசுன கூட்டத்துல ஜனங்க நெரிசலில் மாட்டுனதா காட்டுறாங்க. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, அந்தக் காட்சியைக் கை கட்டி வேடிக்கைதானே பார்த்தது? உண்மையிலே, தோல்வி பயத்தில், தி.மு.க-வோடு அந்தக் கட்சியின் சேனல்களும் திட்டம் போட்டு ஏற்பாடு செய்த தள்ளுமுள்ளு வேலைதான் அது...'' என்றவர் அடுத்து குஷ்பு விஷயத்துக்குத் தாவினார்.

''ஜெயா டி.வி-யின் ஜாக்பாட் நிகழ்ச்சி மூலமாத்தான் குஷ்பு தமிழைக் கத்துக்கிட்டாங்க. இப்போ, தி.மு.க-வை ஆரம்பிச்ச ஐம்பெரும் தலைவருங்க வாரிசு மாதிரி... தலை, கால் புரியாம ததிங்கிணத்தோம் ஆட்டம் போடுது.

கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டில், 'கற்புன்னு ஒண்ணு இல்லவே இல்லை’ன்னு கேவலமாப் பேசி, நம்ம தாய்மார்களை இழிவுபடுத்தின மோசமான பொம்பளைதான் குஷ்பு. அதை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்ட கட்சிகள் பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தைகளும்.

குஷ்பூ வெளியூர்ல கோர்ட்டுக்கு வந்தப்ப செருப்பு, விளக்குமாறைக் காட்டினது ராமதாஸ், திருமாவளவன் கட்சியோட மகளிர் அணிகள்தான். இப்போ, அவங்களே அந்தப் பொம்பளைக்கு ஆரத்தி எடுக்குறாங்க. எம்.எல்.ஏ. பதவிக்காக அந்த வட நாட்டுக்காரி காலில் போய் ராமதாஸும் திருமாவளவனும் விழுறீங்களே... உங்களுக்கு வெட்கமா இல்லையா..?

“ஆண்டிபட்டியில் போட்டியிடப் பயந்துக்கிட்டு அம்மா ஸ்ரீரங்கத்தில் நிற்கிறதா..” குஷ்பு பேசுது. தைரியசாலி கருணாநிதி எதுக்கு சென்னையை விட்டுட்டுப் பயந்துபோய் திருவாரூர்ல நிக்கிறார்? ஸ்டாலின் எதுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற கொளத்தூர்ல போட்டி போடுறார்? ஏற்கெனவே, போட்டியிட்ட ஆண்டிபட்டியை அம்மா அரசப்பட்டி ஆக்கிட்டாங்க. அதனால, இப்போ ஸ்ரீரங்கத்துல நிற்கிறாங்க. இந்த விவரம்கூட புரியாத புண்ணாக்குதான் குஷ்பு!'' கடகடக்கிறார் செந்தில்!

நன்றி : ஜூனியர் விகடன் - 04-04-2011

நடிகர்-நடிகைகள் Vs. பத்திரிகையாளர்கள் - அமர்க்களமான சண்டைக் காட்சிகள்..!

08-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வெளியூரில் இருந்து கொண்டு "மெட்ராஸ்ல காத்தடிக்குதாண்ணே.. வெயில் அடிக்குதாண்ணே.." என்று அப்பிராணியாக அக்கறையாக விசாரிக்கும் நமது அன்புத் தம்பி 'நையாண்டி நைனா' போன்ற ஊர்ப்பாசம் கொண்ட பதிவர்களுக்காக இந்தப் பதிவு..!!!

'புலிவாலைப் பிடித்த கதை'யாகப் போய்க் கொண்டிருக்கிறது திரைப்பட நடிகை புவனேஷ்வரியின் கைது.

எப்போதும் போல இந்த மாதத்தின் கைது கணக்கில் ஒன்றைக் கூட்டிக் காட்டுவதற்காக அலைந்து திரிந்த விபச்சாரத் தடுப்பு போலீஸாருக்கு, ஒரு பெரிய கையைப் பிடித்து தங்களது மேலதிகாரிகளிடம் மெடல் வாங்க வேண்டும் என்று ஒரு நப்பாசை.

அந்த ஆசையை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, விஸ்தாரப்படுத்தி ஒரு திரைக்கதை எழுதி புவனேஸ்வரியை எப்படியோ பிடித்துப் போட்டுவிட்டார்கள். ஆனால் இந்த பாய்ச்சல் ரெய்டு நடத்திய போலீஸாருக்கு பாராட்டும், பரிசும், மெடலும் கிடைப்பதற்குப் பதிலாக 'கும்மாங்குத்து' கிடைத்திருக்கிறது.

"பிடிக்கிறதுக்கு வேற ஆளே இல்லையா..? சும்மாவே இருக்க மாட்டீங்களா? ஏன்யா பிரச்சினையை கிளப்புறீங்க..?" என்கிற ரீதியில் காவல்துறை மேலிடத்தில் இருந்தே டோஸ்கள் ஹெவியாக கிடைத்திருக்கிறதாம். விபச்சாரப் பிரிவு போலீஸார் நொந்து, நூடூல்ஸான நிலைமையில் உள்ளனர்.

இதற்கிடையில் தங்கள் மீது அவதூறாக செய்தியைக் வெளியிட்டுவிட்டதாக சம்பந்தப்பட்ட நடிகைகள் கண்ணீர் மல்க நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அழுது புலம்ப உடனடி கண்டனங்களும், கண்டனக் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.

தனக்கு 'கலை உலக உழைப்பாளி' பட்டத்தை வழங்க திரையுலகம் ஆர்வமாகக் காத்திருக்கும் இந்த நேரத்தில், அவர்களே கண்ணீர்விடும்படியான சூழல் உருவாகிவிட்டதால் அந்தக் கண்ணீரைத் துடைக்க வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு.

கண்டனக் கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே இந்தப் பக்கம் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து செய்தி ஆசிரியரைக் கைது செய்து தனது நேர்மையை பறை சாற்றிக்கொண்டுள்ளது காவல்துறை. தனது திரையுலகப் பாசத்தை இப்படியாகக் காட்டியிருக்கிறார் முதல்வர்.

ஆனால் அவரே அடிக்கடி சொல்லிக் கொள்ளும் தானும் ஒரு பத்திரிகையாளன்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயச் சூழல் அடுத்த நாளே அவருக்கு உருவாகியிருப்பது ஒரு சுவையான திருப்பம்தான்..

இதற்கு முன்பாக உண்மையாகவே இந்த விஷயத்தில் 'தினமலர்' பத்திரிகையில் நடந்தது என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் மேலும் தொடர்ந்து படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.

அருமைத் தம்பி பாலபாரதி, 'தினமலரில்' அந்தச் செய்தி அச்சுக்குப் போன கதையையும், அதன் பிறகு அந்த செய்தியாளர் என்ன ஆனார் என்பது பற்றியும் இங்கே எழுதியுள்ளார்.

தயவு செய்து அதனைப் படித்துவிட்டு பின்பு இங்கு வந்து தொடரவும்.

கண்டனக் கூட்டத்தில் நாமும் கலந்து கொண்டு 'காவரேஜ்' செய்யலாம் என்று நினைத்து நடிகர் சங்கத்திற்கு சென்றேன்.

கண்டனக் கூட்டத்திற்காக பெரிய போஸ்டரை தயார் செய்து தெருவில் நிறுத்தி வைத்திருந்தார்கள். போவோர், வருவோருக்கெல்லாம் தெரியட்டுமே என்பதற்காக இந்த ஏற்பாடாம்..


"பத்திரிகையாளர்கள் ஓகே.. ஆனால் வெளியாட்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க ஸார்.. ஸாரி.." என்றார்கள் வாசலிலேயே.

20-க்கும் அதிகமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள், கண்டனங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் பிடித்தபடி நின்றிருந்தனர்.


வாசல் அருகே வைக்கப்பட்டிருந்த ரிஜிஸ்தரில் நடிகர் சங்க உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் எண்ணைக் குறிப்பிட்டு கையெழுத்திட்ட பின்புதான் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். எந்த வழியிலும் உள்ளே போக முடியாத சூழல் இருந்ததால், அப்படியே திரும்பிவிட்டேன்.

இனி வருவது நேற்றைக்கு அங்கே நடந்த நிகழ்வுகள் பற்றி இன்றைய செய்தித்தாள்களிலும், இணையதளங்களிலும் வந்த செய்திகளின் தொகுப்பு..

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் உள்ள சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் இந்தக் கண்டனக் கூட்டம் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நடிகைகள் மஞ்சுளா, நளினி, சீதா, ஸ்ரீப்ரியா, அஞ்சு, ஷகிலா, தாரிகா, சத்யப்ரியா, பாத்திமாபாபு, லதா, ரேவதி, குயிலி, ராதிகா, ஷர்மிளி, கோவை சரளா, பசி சத்யா, ரோகிணி, பூர்ணிமா பாக்கியராஜ், சபீதா ஆனந்த், சச்சு, நித்யா, ஊர்வசி, சங்கீதா...


நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, ராதாரவி, விஜயகுமார், அருண் விஜய், கார்த்தி, சாந்தனு, உதயா, ஹரிகுமார், பவன், கவுண்டமணி, எஸ்.வி.சேகர், விவேக், சார்லி, ரமேஷ்கண்ணா, நாசர், மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர், அலெக்ஸ், பாபுகணேஷ், சின்னி ஜெயந்த், மாஸ்டர் கணேஷ், பொன்வண்ணன், ஜீவன், பிரேம், ஸ்ரீமன், வையாபுரி, மயில்சாமி, விச்சு, குமரிமுத்து...


பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, செயலாளர் காட்ரகட்ட பிரசாத், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், பொருளாளர் காஜாமைதீன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், செயலாளர் ஜி.சிவா, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், திரைப்பட பாதுகாப்பு பேரவை தலைவர் கே.ராஜன், பட அதிபர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், சேரன், பி.ஆர்.ஓ. சங்க தலைவர் விஜயமுரளி, ஜனநாயக மாதர் சங்க தலைவி வாசுகி, சின்னத்திரை எழுத்தாளர் சுபா வெங்கட் என்று பிரபலங்களும், நடிகர் சங்க உறுப்பினர்கள் பெருவாரியாகவும் கலந்து கொண்டு கோபத்தைக் கிளறியிருக்கிறார்கள்.

நடிகர்களில் ரஜினி, விஜய்காந்த் மற்றும் தாமு தவிர, மற்ற அனைவருமே பொங்கித் தீர்த்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பாக ஸ்ரீப்ரியா, விவேக், சத்யராஜ், சூர்யா, சேரனின் பேச்சுக்கள்தான் ஹைலைட் என்கிறார்கள். சேரனின் பேச்சு மட்டும் கிடைக்கவில்லை.

பேச்சாளர்கள் பலரும் 'தினமலரை' மட்டுமல்ல.. "பொதுவாகவே பத்திரிகைகள் அனைத்துமே நம்மை இப்படித்தான் எழுதுகின்றன.. பேசுகின்றன.." என்று சொல்லி அனைத்துப் பத்திரிக்கைகளையும் போட்டுத் தாக்கியுள்ளனர். 'ராஸ்கல்ஸ்', 'பாஸ்டர்ட்ஸ்' போன்ற சினிமா டயலாக்குகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.

இனி நடிகர், நடிகையரின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

நடிகை ஸ்ரீபிரியா:

ரஜினி 14 வருஷத்துக்கு முன்னாடி என் கல்யாணத்தப்போ 'வர்றேன்'னு சொல்லிட்டு வராம பொய் சொன்னதால, எனக்கு அவர் மேல கோபம் இருந்தது. ஆனா இப்ப எங்களுக்கு ஒரு அவமானம் என்றவுடன் அவர் வந்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கு.

என்னால சரியா பேச முடியல. அழுகைதான் வருது. அதனால் எழுதிக் கொண்டு வந்ததைப் படித்து விடுகிறேன்.

நான் 35 ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன். என்னை பற்றி தவறாக எழுதியவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள். யாரோ ஒரு கேடுகெட்ட, நல்ல தாய், தந்தைக்குப் பிறக்காத ஈனப்பிறவிகள் எழுதியது வலியை ஏற்படுத்தியிருக்கிறது. த்தூ.. பாஸ்ட்டர்ட்..!

நாங்களும் சாதாரண பெண்கள்தான். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கிறார்கள். எங்களின் பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். எங்கள் வயிற்றெரிச்சல் அவர்களை சும்மா விடாது. எங்கள் உணர்வுகளை அவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. திரைக்குப் பின்னால் நாங்களும் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். ஏன் உங்க வீட்ல உங்களைச் சுத்தி இதெல்லாம் நடக்கிறதேயில்லையா?

விபச்சாரத்தில் ஈடுபடுவதாக என் பெயரை வெளியிட்டிருக்கிறார்கள். நான் இதற்கு பிறகும் மவுனமாக இருந்துவிட்டால் அது என் கனவருக்கும், பிள்ளைகளுக்கும் நான் செய்யும் துரோகம் ஆகிவிடும். நான் கலங்கிப்போவதை பார்த்து "நீ ரொம்ப தைரியமான பொண்ணு... எதுக்கு இப்படி கலங்குற..?" என்று கேட்கிறார்கள். நான் தைரியமான பொண்ணுதான். ஆனால் நானும் மனுஷிதானே. இது போன்று எங்களை அவமானப்படுத்தும் உங்களையெல்லாம்...(சென்ஸாராம்)


நடிகர், இயக்குநர் சேரன் :

நடிக்க வருகிற பெண்ணுக்கும் இதயம் உண்டுங்கிறதை மறந்த அந்த ராஸ்கல்ஸ்.. உன் வீட்டுப் பிள்ளை ஓடிப் போகும்போது தெரியும்டா அந்த வலி..!

நடிகை நளினி:


ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா நான். என்னைப்பற்றி இப்படியெல்லாம் எழுதுறாங்களே.. என் பிள்ளைகள் மனசு என்ன பாடுபடும். கணவரை பிரிந்தும் தனியாக வாழ முடியும் என்று என் பிள்ளைகளை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். இப்படியெல்லாம் செய்வது நியாமா?

இது இத்தோடு நிற்கிற பிரச்சனையில்லை. இந்த பிரச்சனையை நாங்க சும்மா விடப்போவதில்லை. நான் தைரியமான பொண்ணு. அதனாலதான் இவ்வளவு வேதனையிலும் தாங்கிக்கொண்டு போராடுகிறேன்.. இந்த செய்தி எழுதினவன் மட்டும் கைல கிடைச்சான்...

நடிகை சீதா :

இதுவும் ஒரு வகையில் கொலை குற்றம்தான். கேரக்டர் கொலை. இதற்காக நடக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் நான் முன்னால் நிற்பேன்.. இதை நெனச்சு நெனச்சு ரொம்ப வேதனையா இருக்கு. என்னால தாங்க முடியல. எங்களுக்கும் குடும்பம் இருக்கு. பொறுப்பு இருக்கு என்பது அவங்களுக்கு ஏன் புரியமாட்டேங்குது. எங்க மனச ஏன் புரிஞ்சுக்கல. இதுக்கு மேல என்னால பேச முடியல.. (என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.)

நடிகை ரேவதி :

சில்க் ஸ்மிதா இறந்தப்போ நான் ரோகிணி, ரஞ்சிதா மூவரும் வடபழநி பக்கம் இருந்ததால் உடனே போனோம்.. மருத்துவனையில் பத்திரிகை போட்டோகிராபர்கள் சில்க்கின் சடலத்துக்கு கிளாமர் டிரெஸ்ஸை போட்டு படம் எடுக்க முயன்றாங்க.. சிலுக்கு கவர்ச்சி நடிகைங்கிறதால கிளாமர் போட்டோ வேணுமாம். ஆனா நாங்க மூணு பேரும் கடுமையா எதிர்ப்புத் தெரிவிச்சோம்.

நடிகர் விவேக்:

இந்த அவதூறு செய்தியைப் பார்த்தவுடனேயே ஸ்ரீப்ரியா, அஞ்சு, நளினி போன்றவர்களிடம் போனில் பேசினேன். அப்போது "தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்று சீதா சொன்னதாக நளினி கூறினார். அதுபோல், "நான் செத்துவிட்டது போல் உணர்கிறேன்" என்று ஸ்ரீப்ரியா கூறினார். கலைஞர்களின் மனதை இப்படி புண்படுத்துவதற்காகவா பத்திரிகை நடத்துகிறீர்கள்..?


எனக்கு வருகின்ற கோபத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அந்த செய்தியை நினைத்தால் உடம்பு கொதிக்கிறது. இதுக்கு முன்னாடியும் நிறைய எழுதியிருக்காய்ங்க.. அப்பவே நாமெல்லாம் கூடி கண்டிச்சிருக்கணும். விரல் நடிகர்னா சிம்பு, உயரமான நடிகைன்னா நமீதான்னு தெரியாதா? ஏண்டா கிசுகிசுவா எழுதறீங்க..? தைரியமிருந்தா பேரு, இடம் போட்டு எழுது.. ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா நேருக்கு நேரா வாடா..!

டேய்.. எங்களைப் பத்தியா மேட்டர் போடுறீங்க? உங்கக்கா, உங்கம்மா, உன் பாட்டி நிர்வாண படம் இருந்தா அத எடுத்து போடு. இங்க திரிஷா குளிக்கிறத எடுத்து இன்டெர்நெட்ல போட்டியே.. அப்படியே உன் பொண்டாட்டி, உன் அக்கா, உன் அம்மா குளிக்கிற படம் இருந்த அதையும் எடுத்துப் போடு. உன் அம்மாவும், உன் அக்காவும் குளிக்கும்பொது ரெயின் கோட்டு மாட்டிக்கிட்டாடா குளிப்பாங்க? அவங்களும் நிர்வாணமாத்தாண்டா குளிப்பாங்க. அத எடுத்து உன் பத்திரிகையில போடுறா. இப்ப நான் போடறேன் மேட்டர்.. உங்க ஆயா, அம்மா, மனைவி, அக்கா - தங்கச்சிகளை அனுப்புங்கடா.. அவங்களை மார்ப்பிங்ல ஜட்டியோட நான் மாத்தி தர்றேன்.. அதைப் போடு உன் பத்திரிகையில! அப்பத் தெரியும் உனக்கு அந்த வலி..!


ஒரு குவார்ட்டர், பிரியாணி, முந்நூறு ரூபா குடுத்தா எழுதறவிங்கதான..! சினிமா செய்தி இல்லாம பத்திரிகை நடத்த முடியுமாடா? ஏற்கெனவே எழுதினப்ப நாம நடவடிக்கை எடுத்திருந்தா பத்திகை நாய்ங்க இப்ப இப்படி எழுதுமா..?

மஞ்சுளா எத்தனை பெருமைக்குரிய நடிகை தெரியுமா உங்களுக்கு..? கலைக்காக அந்தக் குடும்பம் செய்துள்ள சேவை கொஞ்ச நஞ்சமல்ல. எம்ஜிஆர் - சிவாஜியுடன் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் மஞ்சுளா. அவங்க குடும்ப பின்னணி தெரியுமா உங்களுக்கு..? அவங்க சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா உங்களை பீஸ் பீஸாக்கிடுவாங்கடா.. அவங்க மாப்பிள்ளை எவ்வளவு பெரிய டைரக்டர் தெரியுமா..? இந்த செய்தி அவருக்கு எவ்வளவு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும்.. இப்ப சொல்றேன்.. இனி எனக்கு எந்த பத்திரிகைக்காரன் தயவும் தேவையில்லை. அதிலும் இந்த (சென்ஸார்)பய 'தினமலர்' வேண்டவே வேண்டாம்...

நடிகர் சத்யராஜ் :

எங்க ஊர்ல அந்த பத்திரிகைக்குப் பேரே 'இழவுப் பத்திரிகை'தான். நான் சொல்லாததையெல்லாம் சொன்னதா செய்தி போட்டு வீணா சண்டை மூட்டி விட்டுட்டானுங்க.


விவேக் சொன்ன மாதிரியே பண்ணிரலாம்..! கிராபிக்ஸ் பண்ணும்போது, ரொம்ப சின்ன ஜட்டி, ரொம்ப சின்ன பிரா மாட்டி விட்றலாம்..

ஒரு தடவை எம்.ஜி.ஆரைப் பத்தி ஒரு பத்திரிகைல தப்பா எழுதிட்டாங்க. ஏவி.எம். ஸ்டூடியோவுல தலைவர் ஷூட்டிங்ல இருந்தாரு. அப்போ அந்தச் செய்தியை எழுதின நிருபர் அந்தப் பக்கம் வந்திருக்காரு. அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர். தன் ஸ்டைல்லேயே சிரிச்சபடி சாப்பிடலாம் வாங்கன்னு நிருபரை மேக்கப் ரூமிற்கு கூட்டிட்டுப் போனார். உள்ள வச்சு சும்மா பின்னு பின்னுன்னு பின்னி எடுத்திட்டார்.

மேக்கப் ரூம்ல இருந்த ஒரு சட்டையை எடுத்து நிருபருக்கு மாட்டிவிட்டு தலைவரே அந்த நிருபருக்கு தலை சீவிவிட்டு, பவுடரும் போட்டு அனுப்பினார். அந்த நிருபர் தன் ஆபீஸ்ல வந்து எம்.ஜி.ஆர். அடிச்சு உதைச்சார்.. அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்னு குமுறினார். ஆனால் வெளிக்காயம் இல்லாம உள்குத்தாவே தலைவர் அடிச்சிருந்தார். காயம் இல்லாததால் எம்.ஜி.ஆர். அடிச்சார் என்பதை யாரும் நம்பலே..!

சரத்ல இருந்து எல்லாருமே எம்.ஜி.ஆர். ரசிகர்கள்தான். சரத்துக்கு கராத்தே, குங்பூன்னு நிறைய டெக்னிக் தெரியும். இனிமே அதைப் பயன்படுத்த வேண்டியதுதான்..!


சமீபத்தில் ஓவியக் கண்காட்சி நடத்தி அந்த நிதியை சமூக அமைப்பு ஒன்றுக்குக் கொடுத்தார் ஸ்ரீபிரியா. அவரைப் பார்த்து வாழ்க்கை அமைத்துக் கொண்டிருக்கிறாள் என் மகள். வழிகாட்டியாக வாழும் ஸ்ரீபிரியா போன்றவர்களை அவதூறாக எழுதியதை மன்னிக்கவே கூடாது.

இந்த இடத்தில் ஸ்ரீபிரியா பேசும்போது அந்த பத்திரிகை ஆசிரியரைப் பற்றி சொன்ன 'பாஸ்டர்ட்ஸ்' என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை ஆதரிப்பவர்கள் எல்லோரும் கையத் தூக்குங்க.. (எல்லோரும் ஆரவாரத்துடன் கையைத் தூக்க...)

அப்ப இதை நான் மட்டுமல்ல.. நடிகர் சங்கத்தில் உள்ள அனைவருமே வழிமொழிகிறோம். இதையே நம்ம தீர்மானமா போட்டு அந்தப் பத்திரிகைக்கும் அனுப்பி வைங்க! போடு.. எங்க எல்லார் மேலேயும் மான நஷ்ட வழக்குப் போடுறா.. உன்னால புடுங்கக்கூட முடியாது..

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி :

ஆந்திராவில் இப்படியெல்லாம் ஒரு கிசுகிசு செய்தி, அவதூறு செய்தி கூடப் பார்க்க முடியாது. அப்படி யாராவது எழுதினால் மீண்டும் அவன் பேனா பிடிக்கவே முடியாது.. என் மனைவி இந்த பத்திரிகைக்கார (சென்சாராம்)களால் எவ்வளவு இம்சைக்கு உள்ளானார் தெரியுமா?

நடிகர் சூர்யா :


சமுதாயத்துக்கு வழிகாட்டியாக பத்திரிக்கைகள் இருக்க வேண்டும். வயிற்றை கழுவுவதற்காக இப்படி அவதூறு எழுதுகிறார்கள். கண்ட கண்ட ஈனப்பசங்க எழுதறாங்க. அவங்க பின்னாடி நாம ஓடிக்கிட்டிருக்க முடியாது.

இவர்களை சும்மா விடக்கூடாது. அவனுங்களை லீகலா நசுக்கணும். அதுக்காக லீகல் அமைப்பு ஏற்படுத்தறதுக்கான செலவை நான் ஏத்துக்குறேன்.. அந்த குழுவைக் கொண்டு அவதூறு எழுதுபவர்களை நசுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியொரு கூட்டம் நடக்கக் கூடாது. அந்த அளவுக்கு நடவடிக்கை இருக்க வேண்டும்...

ஃபங்ஷன்ல நடிகைகள் சேர்ல உட்கார்ந்திருக்கும்போது சேருக்கு அடியில இருந்து போட்டோ எடுக்கிற வேலையை இனிமே பண்ணாதீங்க..!


நடிகர் அருண் விஜய் :

எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அந்த செய்தியை எழுதிய ரிப்போர்ட்டர் மற்றும் அலுவலகத்தில் உள்ள நான்கு பேரையாவது அடித்து துவம்சம் செய்து இழுத்து வந்து எங்கம்மா (மஞ்சுளா) காலடியில் போட்டிருப்பேன். ஆனால் சங்கம் என்னைத் தடுத்து விட்டது...

நடிகர் தாமு :

நண்பர்களே.. ஆவேசம் வேண்டாம். பத்திரிகைகள் தயவு நமக்குத் தேவை. நான் இன்றைக்கு இந்த நிலைமைக்கு வரக் காரணம் பத்திரிகைகள்தான். நான் மட்டுமல்ல.. இன்னும் பல கலைஞர்களை பத்திரிகைகள்தான் உயிரோடு வைத்திருக்கின்றன. அவர்களைத் திட்ட வேண்டிய அவசியமில்லை. எனது கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். பத்திரிகை நண்பர்களுக்கும் சினிமாவின் தயவு தேவையாக இருக்கிறது. எனவே முடிந்தவரை இணக்கமாகப் போக வேண்டும். ஆதாரமில்லாத அவதூறுகளைத் தவிர்க்கலாமே..

நடிகை ராதிகா :

"கத்தியைவிட கூர்மையானது பேனா.." என்பார்கள். அதை நல்லதுக்குப் பயன்படுத்தாமல் அந்தப் பத்திரிகையில் அசிங்கமாக எழுதியிருக்கிறார்கள். 'மறப்போம், மன்னிப்போம்' என்றார் அண்ணா. அது நல்லவர்களுக்குத்தான். கெட்டவர்களுக்கு இல்லை. இவர்களை மன்னிக்கவே கூடாது.

நடிகர் விஜயகுமார் :

சிவாஜி சிலை திறப்பு விழாவுக்காக மதுரை சென்றிருந்தபோது இப்படியொரு அவதூறு செய்தி வந்திருப்பதாகச் சொன்னார்கள். கொதித்துப் போனேன்.

நான் இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு தினமலர் அலுவலகம் சென்று அங்கே கண்ணில் படும் நான்கு பேரை வெட்டிப் போட்டு விட்டு வந்திருப்பேன். அந்த அளவுக்கு எனக்கு ஆத்திரம் இருந்தது.

இங்கு ரஜினிகாந்த் பேசியது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. குறிப்பிட்ட பத்திரிகையை ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் என எல்லா நடிகர்களின் ரசிகர்களும் வாங்கவேகூடாது. அவதூறு செய்தியை அரைபக்கம் போட்டதுபோல், மன்னிப்பு கேட்கும் செய்தியையும் அரைபக்கம் போடும்வரை விடமாட்டேன்.

நடிகர் விஜயகாந்த் :


நடிகர்கள் ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. அவர்களுக்கும் மனசு இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. தன்மானம் இருக்கிறது. மதித்து எழுத வேண்டும்.

செய்தி வெளியிட்ட பத்திரிகையே மறுநாள் மறுப்பும் வெளியிட்டிருக்கிறது. பத்திரிகை தர்மம் என்பது இரு பக்கமும் கேட்டு வெளியிட வேண்டும். பத்திரிகைகள் பெருகிவிட்டதால் செய்தியை முதலில் தாங்கள்தான் வெளியிட வேண்டும் என்பதற்காக ஆராயாமல் வெளியிடுகிறார்கள். முதல் நாள் பெரிதாக வருகிற செய்தி மறுநாள் சிறிதாக வருகிறது. பத்திரிகை தர்மம்போல காவல் துறையும் கட்டுப்பாடுகளுடன் செய்திகளை கொடுக்க வேண்டும்.

நான் நடிகர் சங்க உறுப்பினர். நடிகர் சங்கத்துக்கு கட்டுப்பட்டவன். நடிகர் சங்கம் சாதாரண அமைப்பு கிடையாது. கட்டுக்கோப்பானது. அது முடிவெடுத்தால் பலமானதாக இருக்கும். எதையும் சாதிக்க முடியும்.

நடிகர் சரத்குமார்:


நான் பத்திரிகையாளர் குடும்பத்தில் இருந்து வந்தவன். எல்லா பத்திரிகையாளர்களும் இப்படி எழுதுவதில்லை. குறிப்பிட்ட அந்தப் பத்திரிகை மட்டுமே விற்பனையில் புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு இன்று மண்ணை கவ்வியிருக்கிறது. கலைத்துறையைப் பற்றி கீழ்த்தரமான செய்தியையே எப்போதும் அவர்கள் வெளியிடுகிறார்கள்.


நான் ஒரு நடிகையைக் காதலிச்சதா அந்த பத்திரிகைல எழுதியிருந்தாங்க. காதலிச்சதாகூட இருக்கட்டுமே.. அந்த மேட்டர் கடைசியில.. 'கிறுக்குப்பய நாட்டாமை'ன்னு எழுதியிருந்தாங்க. நான் 200 பேரோட போய் அந்த ஆபீஸ 'அட்டாக்' பண்ணினேன்.

நாங்க மக்களை சந்தோஷப்படுத்த வந்தவங்க. எங்களைப் பத்தி இப்படி எழுதியதால் நாங்க போராடிக்கிட்டிருக்கோம்.. ஆனா இதுவே ஒரு தொழில் அதிபரை பற்றி எழுதியிருந்தால் அவர் கண்மறைவாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு சென்றிருப்பார். நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வரையும், போலீஸ் கமிஷனரையும் கேட்டோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.


செல்வமணி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். 'ரோஜாவுக்கு எய்ட்ஸ்', 'எனக்கு எய்ட்ஸ்' என்றெல்லாம் செய்தி போட்டார்கள். அதனால் எங்களுக்கு எத்தனை பாதிப்பு தெரியுமா? 'தினமலர்' அவதூறு செய்தி வெளியானதும் நடிகை ஸ்ரீபிரியாவும், சீதாவும் தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்..? ஒருவேளை இந்தப் பட்டியலில் என் மனைவி ராதிகா பெயர் இடம்பெற்றிருந்தால்..? அய்யோ நினைக்கவே முடியவில்லை. அவரை இந்நேரம் உயிரோடு பார்த்திருக்கவே முடியாது (சொல்லி விட்டு அழுதார்).

இந்தப் பிரச்சினைகள் இனிமேலும் வராமல் தடுக்க விரைவில் நாங்களே ஒரு புதிய பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறோம். இதுதவிர, இம்மாதிரி அவதூறுகளைச் சந்திக்கவென்றே ஒரு வக்கீலை சங்கத்தில் நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம்...!

நடிகர் ரஜினிகாந்த் :


நான் கோபமாக இருந்தால், அதிகமாக பேச மாட்டேன். கோபமாக இல்லையென்றால் நிறைய பேசுவேன். ரொம்ப கோபமாக இருந்தால் பேசவே மாட்டேன். இப்போது நான் ரொம்ப கோபத்தில் இருக்கிறேன். இருந்தாலும் என் கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் எந்தப் பெண்ணை கைது செய்து அழைத்துச் செல்லும்போதும் அவர்களை நிற்கவைத்து, தலைகுனிய வைத்து, அதை மறைத்து போட்டோ எடுத்துப் போடாதீர்கள்.

விபசார வழக்கில் கைது செய்யப்படுகிற பெண்கள் உல்லாசத்துக்காக அந்த தொழிலை செய்வதில்லை. பாவம், இரண்டு வேளை சோற்றுக்காக செய்கிறார்கள். அவர்கள் போட்டோவை மட்டும் போடுகிறீர்கள்.. அவர்களோடு சென்றவர்களையும் எடுத்துப் போட வேண்டியதுதானே..? தப்பு செய்தவர்களுக்காகவே இவ்வளவு பேசுகிறேன்.

தப்பே செய்யாத இன்று மிகப் பெரிய அந்தஸ்தோடும், மதிப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் நண்பர்களைப் பற்றிய செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது ஏப்ரல் முட்டாள்கள் தினம் போல் டூப் ஆக இருக்குமோ என்று நினைத்தேன். இப்படியா..? நிஜமாகச் சொல்கிறேன்.. படித்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இரவு முழுவதும் தூங்கவில்லை.

ஸ்ரீபிரியா, மஞ்சுளா, நளினி, சீதா எவ்ளோ பெரிய கலைஞர்கள். உங்களைப் பற்றி உங்களைப் பெற்றவர்களுக்கும், கணவனுக்கும், குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எங்களுக்கும் தெரியும் நீங்கள் எப்படி என்று..? அதனால் இவர்கள் எழுதுவதை விடுங்கள்..

சம்பந்தப்பட்ட பத்திரிகையின் துணை ஆசிரியரை கைது பண்ணிவிட்டதாகச் சொன்னார்கள். அதற்கு முயற்சி எடுத்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான், கோபமாக இருக்கிறேன். இதற்கு மேல் பேச விரும்பவில்லை.

இதைத் தொடர்ந்து சில தீர்மானங்களை சரத்குமார் படித்துக் காண்பிக்க, கூட்டத்தினரின் ஏகோபித்த ஆமோதிப்புடன் அதை நிறைவேற்றியிருக்கிறார்கள்.





1. நடிகை புவனேஷ்வரி காவல்துறையினரிடம், நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பற்றி தவறாக கூறியதாகவும், காவல்துறையினர் பத்திரிகைகளிடம் அதைக் கூறியதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையினர் இப்படிப்பட்ட செய்தியை அளிக்கவில்லை என்றால், காவல்துறை பற்றி பொய்யான செய்தியை பரப்பி சட்டம் ஒழுங்கு துறையை களப்படுத்திய அந்த நாளிதழின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அந்தப் பத்திரிகைக்கு தடைவிதிக்க வேண்டும்.

2. தவறாக விமர்சிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

3. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் ரசிகர்கள், இன்று முதல் அந்த நாளிதழுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

4. உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு சட்டம்-ஒழுங்கு சீர்குலையவும், திரையுலகினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கும் ஆளாக்கி, பெண்களை இழிவுபடுத்திய அந்த நாளிதழை ஏன் தடை செய்யக்கூடாது? என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிறுவனத்திடம் புகார் அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5. அந்த நாளிதழை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், விழாக்களில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்வதில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது. இதற்காக திரையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகளிடம் ஆதரவு கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

6. தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உரிய நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தத் தீர்மான நிறைவேற்றலுடன் அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு வழிவகுத்திருக்கிறது நடிகர் சங்கம்.

அந்தப் போராட்டத்தைத் துவக்கியிருப்பவர்கள் பத்திரிகையாளர்கள்தான்.

தங்களை 'பாஸ்டர்ட்ஸ்' என்றும், 'ராஸ்கல்ஸ்' என்றும் நடிகர் சங்கக் கூட்டத்தில் அழைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் இன்றைக்கே அவர்கள் தங்களது எதிர்ப்புக் குரலை எழுப்பியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே பத்திரிகை அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்து தைரியமாக செய்தி ஆசிரியரை கைது செய்திருக்கும் காவல்துறையினரின் அதிரடியால் கோபமாகிப் போயிருந்த அவர்களுக்கு, நடிகர் சங்கக் கூட்டத்தில் தங்களுக்குக் கிடைத்த 'அர்ச்சனை'யைக் கேட்டு ஆவேசப்பட்டுத்தான் போயிருக்கிறார்கள்.

இதற்காக இன்று மதியம் கூடிய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இது பற்றி காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் 'நக்கீரன்' ஆசிரியர் கோபாலும் கலந்து கொண்டுள்ளார். அப்போது கோபால், சில நடிகைகளைப் பற்றிய பல பலான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அதனை தான் வெளியிடுவதாகவும் அவர்களது இந்த கடும் தாக்குதலை எதிர்கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார்.

தங்களைத் தாக்கி அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியிருக்கும் நடிகர்கள் விவேக், ஸ்ரீப்ரியா, சத்யராஜ், விஜயகுமார் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி உழைப்பாளர் சிலை அருகே இன்று மதியம் திடீரென்று சாலை மறியல் செய்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

பத்திரிகையாளர்கள் என்பதால் கை வைக்க பயந்து போன காவல்துறை விஷயத்தை மேலிடத்திற்கு பாஸ் செய்து அங்கிருந்து வந்த உத்தரவின்படி பத்திரிகையாளர்களை உடனுக்குடன் போலீஸ் கமிஷனரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது.

பத்திரிகையாளர்கள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் விவேக், ஸ்ரீப்ரியா, சத்யராஜ், விஜயகுமார் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்களாம். "எங்களது சக பத்திரிகையாளரை எந்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்தீர்களோ, அதை புகாரின் கீழேயே இதற்கும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல் போராட்டம் பெரிய அளவுக்கு வெடிக்கும்" என்று எச்சரிக்கை விட்டுள்ளார்கள் பத்திரிகையாளர்கள்.

அவர்களிடம் பேசிய கமிஷனர் ராஜேந்திரன், "செய்தி ஆசிரியர் லெனின் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தை பிரயோகப்படுத்த முகாந்திரம் இருந்தால், அதே சட்டம் இந்த நடிக, நடிகையர் மீதும் பிரயோகப்படுத்தப்படும். அதில் எந்த மாறுதலும் இல்லை" என்று உறுதியளித்துள்ளாராம்.

இதற்கிடையில் விவேக் பேசிய பேச்சின் எதிரொலியாக 'தினத்தந்தி' பத்திரிகை அவரைப் பற்றிய செய்திகளை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்புச் செய்தி பரவியுள்ளது.

'பிள்ளையாரைப் பிடிக்கப் போய் குரங்காய் மாறியது' என்பார்களே.. அது இந்த விஷயத்தில் உண்மையாகிவிட்டது.

இந்த விஷயத்தில் முதல் குற்றவாளி காவல்துறைதான். காவல்துறை எப்போதுமே தான் ஒரு நடவடிக்கை எடுத்தால் அதில் தங்கள் பெயர் கெடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்டவர்களை பற்றி எதிர்மறை செய்திகளை லேசுபாசாக பத்திரிகையாளர்களிடம் ஆஃப் தி ரிக்கார்டாக பரப்புவார்கள். இது மீடியா உலகத்துக்கே அத்துப்படி.

அப்படித்தான் இந்தச் செய்தியும் காவல்துறை மூலமாக செய்தியாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த நடிகைகள் லிஸ்ட் அனைத்து பத்திரிகைகளுக்குமே கிடைத்தது. தினமலரில் மட்டுமே வெளியாகவில்லை. முழுப் பெயருடன் வெளியான தவறு மட்டுமே தினமலரில் நடந்தது. மற்ற பத்திரிகைகளில் பெயர்களை மறைத்துதான் செய்தி வெளியானது.

ஆக, அத்தனை நாளிதழ் செய்தியாளர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்தது என்றால் செய்தியை வெளியிட்டது நிச்சயம் காவல்துறையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்பது எனது அனுமானம்.

புவனேஷ்வரி மீது பொதுமக்களுக்கு இரக்கம் வரக்கூடாது என்பதற்காகவும், மற்ற நடிகைகள் மீது பழி விழுந்தால் அவர்களது கோபம் புவனேஷ்வரி மீது பாயும். நம் மீது விழாது என்று நினைத்துத்தான் காவல்துறை இப்படி பிளேட்டை திருப்பிப் போட்டுள்ளது.

ஆனால் விஷயம் மறுபடியும் பல்டியாகி காவல்துறையினருக்கே உலை வைத்திருக்கிறது.

தம்பி பாலபாரதியின் செய்தியின்படி பிரிண்ட்டிங்கில் இந்தச் செய்தி வெளி வந்ததற்கு, அந்த நாளிதழின் துணை ஆசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டும். நாளிதழின் செய்தி ஆசிரியர் தார்மீகப் பொறுப்பை ஏற்கத்தான் வேண்டும்.

ஏனெனில் இது ஒருவரை கொலை செய்வதற்கு சமமான குற்றச்சாட்டு. ஒரு நாள் குற்றம் சுமத்திவிட்டு மறுநாள் இல்லை.. சும்மா சொன்னேன் என்பதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போடும்போது வைத்துக் கொள்ளலாம். பொதுவாழ்க்கையில் வைக்க முடியாது.

அதே பத்திரிகையின் தற்போதைய இளைய நிர்வாகியான அந்துமணி என்கிற ரமேஷிற்கும், ஒரு பெண் பத்திரிகையாளருக்கும் இடையில் நடந்த சண்டையின்போது உடனுக்குடன் ஒரு பக்க அளவுக்கு தன்னிலை விளக்கமளித்தும், அதுவொரு பொய்யான குற்றச்சாட்டு என்றும் சொல்ல முடிந்த 'தினமலர்', இந்த விஷயத்தில் கால் பேஜுக்கும் குறைவான ஓரிடத்தில் மன்னிப்பு செய்தியை வெளியிட்டு தப்பிக்க நினைப்பது மன்னிக்க முடியாதது..

'தினமலர்' பத்திரிகையை கண்டிக்கத்தான் வேண்டும்.. அதே போல் நடிகர், நடிகைகளும் விஷயத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அவர்களைப் போலவே பேசிவிட்டதும் கண்டனத்துக்குரியதுதான்.

இன்று காலை நடிகர் சங்கப் பிரதிநிதிகளும், பாதிக்கப்பட்ட நடிகைகளும் முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து தங்களது பிரச்சினையை சொல்லியிருக்கிறார்களாம். கூடுதலாக நடிகர்-நடிகைகளுக்கு நல வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.. ஐயோ.. முருகா.. எத்தனை வேலைதான்யா செய்வாரு அவரு..?

இந்தச் செய்தியைப் படம் பிடித்துக் கொண்டு போன அவசரத்துடன்தான், பத்திரிகையாளர்கள் தங்களது பலத்தைக் காட்ட வேண்டி களத்தில் குதித்துவிட்டார்கள்..

இப்போது இருவருக்குமே அவசரத் தேவை ஒரு நல்ல மீடியேட்டர்தான். ஏனெனில் பத்திரிகைகள் திரைப்படத்துறைக்கு அவசியம் தேவை. அவர்கள் இல்லையெனில் திரைப்படத்துறைக்கு மார்க்கெட் போய்விடும்.. பத்திரிகையாளர்களுக்கும் திரைப்படத்துறையினரின் தயவு நிச்சயம் தேவை. திரையுலகத்தினரின் செய்தி இல்லையென்றால் தமிழ்நாட்டில் பத்திரிகை பொழைப்பு ஓடாது..

இரு சாராரும் உடனுக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது பிரச்சினையை முடித்துக் கொள்வதே நல்லது.

விஷயத்தை பெரிதுபடுத்தினால் பாதிக்கப்படப் போவது இரு தரப்பினரும்தான்.. ஏனெனில் தவறுகள் இரு தரப்பினர் மேலேயுமே வண்டி, வண்டியாக உள்ளன. யாருக்காவது புரிந்தால் சரி..!


செய்திகள் உதவி : பல்வேறு பத்திரிகைகள், தின நாளிதழ்கள், இணையதளங்கள், வலைப்பதிவுகள்


புகைப்பட உதவி : www.indiaglitz.com

விஜயகாந்த் கட்சியின் எதிர்காலம்..!

18-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே.!


தமிழகத்தை மொட்டையடித்து தங்களது குடும்பத்தின் மொத்த சொத்துக்களை அதிகரிப்பதில் போட்டோ போட்டியில் இருக்கும் இரண்டு பெரிய திராவிட அரசியல் கட்சிகளுமே ஒரு விஷயத்தில் மட்டுமே உறுதியுடன் உள்ளன. அது தங்களைத் தவிர வேறு யாரையும் இப்போதைக்கு மட்டுமல்ல.. எப்போதுமே வளர விடக்கூடாது என்பதில்தான்.

அடிக்கின்ற கொள்ளையைத் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வது. முடிந்தால் தங்களுக்குள் மட்டுமே விட்டுக் கொடுத்துவிட்டுப் போவது.. மற்றபடி வேறு எவனாவது நானும் திராவிடன் என்று சொல்லி வந்தால் அவனை வெட்டிவிடுவது என்பதை இந்தத் தேர்தல் வரையிலும் பின்பற்றி வருகின்றன திமுகவும், அதிமுகவும்.

இரண்டு கழகங்களும் வைகோவுக்கு தேர்தல் நேரத்தில் கழுத்தில் கத்தி வைப்பதுபோல் நெருக்கடி கொடுத்தது இதனால்தான். தங்களுக்கு அடங்கியிருக்கும் கட்சி என்பதோடு, நாய்க்கு போடும் பிஸ்கட்டைப் போல் 1, 2-ஐ வாங்கிக் கொண்டு வாங்கியதற்கு நன்றியாக கேட்கும்போதெல்லாம் வாலாட்டும் கட்சிகள்தான் அவர்களுக்குத் தேவை..

இன்றுவரையிலும் விஜயகாந்த் மீது தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் இரு கட்சியினருமே தாக்குதலைக் கொடுக்காமல் வருவதற்குக் காரணமே நாம் ஏன் வளர்த்து விட வேண்டும் என்று இந்த சிவனும், ஆண்டாளும் (அப்படி என்று நினைப்பு ரெண்டு பேருக்கும்..!) நினைப்பதுதான்..

இவர்களுடைய புறக்கணிப்பில் இன்னொரு லாபமும் உண்டு. அது விஜயகாந்தால் பிரியப் போகும் பொதுவானவர்களின் ஓட்டு. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தமிழ்நாட்டில் நிரந்தரமான ஓட்டு வங்கி ஒன்று உண்டு. அந்த இரு கட்சியின் ரசிகர்களைத் தவிர பொதுவாக இருப்பவர்களில் அதிகம்பேர் எந்தப் பக்கம் வாக்களிக்கிறார்களோ, அவர்களே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஜெயித்து வருகிறார்கள்.

அப்படி பொதுவாக இருப்பவர்களில் லட்சணக்கணக்கானோர் இந்த இரண்டு திருடர்களைத் தவிர வேறு யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் விஜயகாந்துக்கு கடந்த தேர்தலிலும், இந்தத் தேர்தலில் தங்களது வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதன் பயனாக சென்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8.38 சதவிகித ஓட்டுக்களைப் பெற்றிருந்த தே.மு.தி.க., இந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் 10.1 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று தனது ஓட்டு வங்கியை உயர்த்தியிருக்கிறது.

இந்த தேர்தலில் திமுக 22 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இக்கட்சி பெற்றிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 76 லட்சத்து 25 ஆயிரத்து 421. இது 25.10 சதவிகிதம்.

அதிமுக 23 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களை வென்றிருக்கிறது. இக்கட்சி வாங்கியிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 69 லட்சத்து 63 ஆயிரத்து 510. இக்கட்சியின் ஓட்டு சதவிகிதம் 22.91.


இந்த மக்களவைத் தொகுதியில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் பதிவான ஓட்டுக்கள் 3 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்து 49. இதில் 30 லட்சத்து 72 ஆயிரத்து 881 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது தே.மு.தி.க.

35 தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளியுள்ளது தேமுதிக.

25 தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றி வித்தியாசத்தைவிட தேமுதிக வேட்பாளர் பெற்ற ஓட்டுக்கள் அதிகம்.

தேமுதிக தனித்துப் போட்டியிட்டு ஓட்டுக்களைப் பிரித்ததினால் அதிகப்பட்சமாக அதிமுக 8 தொகுதிகள், காங்கிரஸ் 7 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 1 தொகுதி, மதிமுக 1 தொகுதி, விடுதலைச்சிறுத்தைகள் 1 தொகுதி, மற்றும் பாரதீய ஜனதா 1 தொகுதி என்று பல தொகுதிகளை இழந்திருக்கிறார்கள்.

ஏழு தொகுதிகளில் திமுக வெற்றி பெற உதவியிருக்கிறது தேமுதிக.

வடசென்னை, திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி வித்தியாசத்தைவிடவும், தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதிகம்.

அதே போல் திருவள்ளூர், தென்சென்னை, சேலம், திருப்பூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கும் தேமுதிக வேட்பாளர்கள் பிரித்தெடுத்த வாக்குகளே காரணம்.

ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என்று மதிமுக ஈரோட்டில் வென்ற கதையிலும் தேமுதிகவின் வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய 7 தொகுதிகளில் அக்கட்சி பெற்ற வெற்றிக்கும் காரணம் தேமுதிகதான்.

நான் பெரிதும் வருத்தப்படுவது வைகோவின் தோல்விக்காகத்தான்.. அவர் தோற்றது 15764 வாக்குகள் வித்தியாசத்தில். ஆனால் அந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மாபா பாண்டியராஜன் பெற்றிருக்கும் வாக்குகள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 229. நடிகர் கார்த்திக் வாங்கியிருந்த ஓட்டுக்களும் பத்தாயிரத்துக்கும் மேல்..

இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக இவர் ஜெயித்திருக்க வேண்டும். கதையை முடித்துவிட்டார்கள் விருதுநகர் தொகுதி மக்கள். இனிமேல் நல்லவர்கள் ஜெயிக்க முடியவில்லை என்று யாரும் புலம்பக் கூடாது..

கடைசி நிமிடத்தில் புதுமனைபுகுவிழா வீட்டில் நடந்த பேரம் நல்லபடியாக நடந்து முடிந்து காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்தால், தேமுதிக மூலம் திமுக கூட்டணிக்கு 12 இடங்களாவது கூடுதலாக கிடைத்திருக்கும்.

அல்லது கொட்டிவாக்கம் பங்களாவில் நடத்திய பேச்சுவார்த்தை ஜெயித்து பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும் ‘அம்மா'வுடன் இணைந்திருந்தால், அந்தக் கூட்டணிக்கும் 12 இடங்களாவது கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.

கூடவே விஜயகாந்திற்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக இருவருமே கொடுக்க முன் வந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மாத்திரை கொடுக்காமலேயே மருத்துவர் ராமதாஸுக்கு பேதியை வரவழைத்திருக்கலாம்.

இப்படி ஜெயிக்க முடிந்த விஷயங்களையெல்லாம் கைவிட்டுவிட்டு, தங்களது கட்சிக்காரர்களை அல்லல்பட வைத்தாலும் தைரியமாக தனித்து நின்று வீரம் காட்டிய அண்ணன் விஜயகாந்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன்..

அதோடு காங்கிரஸுடனான தேமுதிகவின் கூட்டணியை முறியடித்த பெருமையும் கலைஞரையே சேரும். திமுகவின் தொகுதிப் பட்டியலில் ஒதுக்க முடியாது. வேண்டுமானால் உங்களது பட்டியலிலேயே 5 தொகுதிகளை ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

முடிந்தவரை கேட்டுப் பார்த்தும், போராடிப் பார்த்தும் 8 தொகுதிகளுக்குக் குறையாமல் விஜயகாந்த் கேட்க.. இழுபறி நிலைமை இருக்கும்போதே விஜயகாந்துக்கே 5 போய்விடும் என்றால் உங்களது மற்றத் தலைவர்களுக்கும், அவர்களுடைய அடிப்பொடிகளுக்கும் சீட்டு எப்படி கிடைக்கும் என்று டெல்லிக்கு காவடி எடுக்க வைத்து அந்தத் திட்டத்தையே முறியடித்தது திமுக.

இந்தப் பக்கம் வழக்கம்போல அம்மா.. சும்மா பேச்சுக்கு ஒரு பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு 4 தர்றோம்.. இஷ்டம்னா வாங்க.. இல்லாட்டி மரியாதை படத்துக்கு டப்பிங் இருக்காம்ல.. போய்ச் செய்யுங்க என்று சொல்லி கவுரவமாக அனுப்பி வைத்தார் அம்மா..

வேறு வழியில்லாமல் தனித்தே நின்று ஓட்டு வங்கியை உயர்த்திக் கொண்ட பெருமையை மட்டுமே இத்தேர்தல் விஜயகாந்திற்குக் கொடுத்துள்ளது.

அடுத்தத் தேர்தலில் கேப்டன் திராவிட பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் அவருக்கு தற்போது இருக்கும் பத்து சதவிகித வாக்குகள் அப்படியே இனிமேல் கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. “இரண்டு திருட்டுக் கட்சிகளுமே வேண்டாம் என்றுதான் உன்னை கூப்பிடுறோம்.. நீயும் அவங்களோட சேர்ந்துக்கிட்டு வோட்டு கேட்டு வந்தா என்ன அர்த்தம்..?” என்று மக்கள் திருப்பி பொடனியில் அடித்துக் கேட்பார்கள்.

ஆக புரட்சிக் கலைஞர் அடுத்தத் தேர்தலிலும் தனித்து நின்று ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பெறலாம்.

அல்லது இந்த இரண்டு பெரிய திருட்டுக் கட்சிகளைத் தவிர மற்ற சில சில்லரை உதிரி பாகங்களைக் கொண்ட கட்சிகளை வைத்து மூன்றாவது அணி அமைத்தால் ஒரு பத்து, பதினைந்து தொகுதிகளாவது அண்ணனுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். விஜயகாந்திற்கு இன்னும் வயது இருக்கிறது.. ஒரு வேளை அடுத்தடுத்தத் தேர்தல்களின்போது அவருக்கான வாய்ப்பு இருக்குமானால் அதனை அவர் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்..

பார்ப்போம்..!

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-17-04-2009

17.04.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆட்டோ டிரைவர்களின் புதுவித விளையாட்டு

உலகம் முழுவதும் மாறி வரும் பொருளாதாரச் சூழலில் எங்கே காத்தாடுகிறதோ இல்லையோ ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆட்டோக்களின் வரிசை நீண்டு கொண்டே செல்வதைப் பார்க்க முடிகிறது.

மக்கள் காசை இறுக்கிப் பிடித்துக் கொள்ள ஆரம்பிக்க சும்மா உட்கார்ந்திருந்த டிரைவர்களுக்குள் தற்போது ஒரு புதுவித விளையாட்டு மோகம் பிடித்திருக்கிறது.

இரண்டு நாலணா நாணயங்கள்தான் விளையாட்டு உபகரணம். நான்கு பேர் செட் சேர்கிறார்கள். அதில் ஒருவர் இரண்டு நாணயங்களையும் மேலே தூக்கி சுண்டி விடுகிறார். இரண்டு நாணயங்களிலும் தலை விழுந்தால் போட்டியில் சேர்ந்திருக்கும் அனைவரும் பத்து ரூபாய் அவருக்குத் தர வேண்டும். மாறி விழுந்துவிட்டால் நாணயங்களைச் சுண்டுவது அடுத்தவருக்குப் போகும். தலை விழுந்தால் அப்படியே தொடர்ந்து அவரை நாணயங்களைச் சுண்டலாம். பூ விழுகின்றவரையிலும் அந்த ஒருவருக்கே சுண்டும் வாய்ப்பு தரப்படுகிறது. இப்படியே மாறி, மாறிப் போகிறது விளையாட்டு.

யார் ஆரம்பித்து வைத்தது..? எங்கேயிருந்து துவங்கியது என்று தெரியவில்லை.. அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே நம்பி ஆட்டம் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது..

எப்படின்னாலும் விட மாட்டோம்ல..!

சினிமா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ள வரும் இப்போதைய நடிகைகள் எப்படியாவது குறைந்தபட்ச ஆடை அணிந்து வந்து கவனத்தை ஈர்த்து, புகைப்படங்களில் சிக்கி மேலும் பரபரப்படைந்து வாய்ப்பு தேடுவது ஒரு பேஷனாகிவிட்டது.

இது போன்ற சமயங்களில் புகைப்படம் எடுக்கும் நிபுணர்களுக்கு மிகவும் கொண்டாட்டம்தான். புகைப்படங்களில் அப்படி, இப்படி என்று நடிகைகள் சிக்கிவிட்டால் அது நடிகைகளின் தவறாகத்தான் தோன்றுமே தவிர, புகைப்படம் எடுத்தவர்கள் மீது குற்றமாகாது என்பதால்தான் புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார்கள்.

வட இந்தியாவிலிருந்து கலைச்சேவை செய்ய வந்த நடிகைகள்தான் முதலில் இந்த ஆடைக் குறைப்பு அலங்கோலத்தை ஆரம்பித்துவைக்க இப்போது அதனையே அனைவரும் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.

குறைந்த ஆடையுடன் பாதுகாப்பாக இப்படி போஸ் கொடுத்தாலும்..




காத்திருந்து சமயம் பார்த்து இப்படி புகைப்படம் எடுப்பதில் கில்லாடிகள் சினிமாவின் புகைப்பட நிபுணர்கள்.




இது போனஸுக்கு..



உடல் ஊனமுற்றவர்களுக்கு சலுகை

சமீபத்தில் தமிழக அரசு ஒரு மிகப் பெரும் உதவியை உடல் ஊனமுற்றோருக்கு செய்திருக்கிறது.

உடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்துகளைத் தவிர மற்ற விரைவுப் பேருந்துகள், சாதாரணப் பேருந்துகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்ய சலுகை வழங்கியுள்ளது.

தேசிய உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் சமூக நலத் துறையின் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் அதற்கான சலுகை உத்தரவு உடனேயே கிடைக்கிறது.

ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்கி வைத்துக் கொள்ளுவோம் என்று நினைத்து பல வருடங்கள் கழித்து அந்த அலுவலகத்தில் கால் வைத்த எனக்கு இதைப் பார்த்து ஒரு திடீர் அதிர்ச்சி. நான் இனிமேல்தான் அடையாள அட்டையே பெற வேண்டும். அடையாள அட்டை கிடைத்துவிட்டால் பஸ் பாஸ். கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கு இன்னொரு பதிவு.

'எங்கள் ஆசான்' திரைப்படத்தின் தாமதம் ஏன்..?

திரையுலகின் கதாநாயகர்கள் அனைவருக்கும் அவரவர் திரைப்படங்கள் வெளியாவதில் இருக்கின்ற சந்தோஷம் வேறு எதற்கும் இருக்காது. அவர்களுடைய லைப் கிராப்பில் அது ஏற்றிவிடுமா அல்லது இறக்கிவிடுமா என்பது தெரியாமல் அனைவரும் பதட்டத்துடன் இருப்பார்கள்.



நம்ம கேப்டன் மட்டும்தான் எந்தக் கவலையும் இல்லாமல் ஹாயாக கூலிங்கிளாஸுடன் வேர்க்க, வியர்க்க பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடைய நடிப்பில் 'இன்னொரு வானத்தைப் போல' என்ற பிரச்சாரத்துடன் 'மரியாதை' திரைப்படம் வரும் 24-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு முன்பு சென்ற மாதமே வந்திருக்க வேண்டிய எங்கள் ஆசான் என்னும் படம் திரையிட வேண்டிய நாளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் வெளிவராமல் போனது. காரணத்தைத் துழாவினால் கொஞ்சம் சுவாரசியமாகவும் இருக்கிறது.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் என்பவர் கேப்டனின் ஆரம்ப கால நண்பர். திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தபோதே தங்கராஜை கேப்டனுக்கு நன்கு பழக்கமாம். இந்த தங்கராஜ் இதற்கு முன்பு 'மீசை மாதவன்', 'சுந்தரா டிராவல்ஸ்' என்று இரண்டு திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். 'சுந்தரா டிராவல்ஸ்' தயாரித்ததில் உடலெங்கும் பலத்த அடியாம். நடக்க முடியாமல் கிடப்பதை அறிந்த கேப்டன், பெரிய மனதுடன் அவரே முன் வந்து இவரைத் தயாரிப்பாளராக்கி 'எங்கள் ஆசானை' உருவாக்கித் தந்தார்.

படம் முடிந்து வெளியாகும்வரையிலும் கேப்டன் தன் சம்பளம் பற்றி எதையும் பேசவில்லையாம். கடைசியில் நண்பர் தருவார் என்று எதிர்பார்த்திருக்கிறார். தயாரிப்பாளரோ தே.மு.தி.க. தொண்டர்களின் ஆவலையே முதலீடாக்கி விநியோகஸ்தர்களிடம் கூடுமானவரையில் சேதாரமாகாதவகையில் விற்றிருக்கிறார். படத்தின் வெளியீட்டுக்கு முதல் நாள்வரையிலும் நடிப்புக்கான கூலி கைக்கு வந்து சேராத கேப்டன் பின்பு பணம் கேட்க தயாரிப்பாளர் தரப்பில் "படம் விற்கவில்லை.. போனியாகவில்லை" என்றெல்லாம் 'காந்தி கணக்கு' காட்டியிருக்கிறார்.

கூட்டிக் கழித்துப் பார்த்த கேப்டனின் 'கிச்சன் காபினெட்' அவசரமாகக் கூடி முதல் நாள் நள்ளிரவில் ஒரு முடிவெடுத்தது. அந்த முடிவின்படி, கேப்டனுக்குரிய சம்பளப் பணத்தைத் தராமல் படத்தை வெளியிடக்கூடாது என்று லேபில் கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் தரப்பு அதிர்ந்துபோய் அதற்கு பிறகு சம்பளம் பற்றிப் பேசப் போயிருக்கிறது.

அதற்குள் தேர்தல், வேட்பாளர் தேர்வு, கூட்டணி, பிரச்சாரம் என்று வந்துவிட கூடவே இன்னொரு விஷயமும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பித் தவறி 'எங்கள் ஆசானை' முன்கூட்டியே வெளியிட்டு படம் படுத்துவிட்டால் பின்பு வரும் 'மரியாதை'க்கு மரியாதை இருக்காது. அதனால் 'மரியாதை' முதலில் ரிலீஸாகட்டும். பின்பு எங்கள் ஆசானின் தலையெழுத்தை பார்ப்போம் என்று ரகசிய ஆலோசனை கூறப்பட்டதால் 'எங்கள் ஆசானை பின்பு பார்ப்போம். அப்படியே நிறுத்தி வையுங்கள்' என்று சொல்லிவிட்டாராம் கேப்டன்.

ஷெரில் பெர்ணான்டோவை பார்க்கலாம் என்று தவிப்புடன் இருந்த என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான். மீனாவையும், ஜாஸ்மினையும் பார்த்து என்ன செய்ய..?

பல நேரங்களில் பல மனிதர்கள்

எழுத்தாளர் பாரதிமணி ஐயா உயிர்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இப்போது புத்தகமாக வெளிவந்துவிட்டது. 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற தலைப்பில் 110 ரூபாய் விலையில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் இப்புத்தகத்தில் எழுத்தாளர்கள் பலரும் என்னைப் போலவே பாரதி ஐயாவை பற்றி உருகி, உருகி எழுதியிருக்கிறார்கள். படிக்கத் தவறாதீர்கள்.. நேரம் வீணாகாது என்பதற்கு நான் கியாரண்டி.

எது உண்மை..? எது பொய்..?

ராகுல்காந்தி தனது வேட்புமனுவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பாடத்தில் தான் தேர்ச்சியடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறாராம்.

ஆனால் உண்மையில் அவர் எம்.பில். படிப்புக்கான இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் 58 சதவிகிதம் மட்டுமே எடுத்திருக்கிறாராம். (60 எடுத்தால்தான் பாஸாம்) பத்திரிகை செய்திகளில் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. சர்டிபிகேட்டில் பெயர்கூட ராகுல்வின்சி என்றுதான் இருக்கிறது . அப்புறம் எதுக்கு காந்தி..? சரி விடுங்க..

ஆனால் அவர் தோல்வியடைந்த பாடத்தின் பெயரைப் படித்தவுடன் கொஞ்சம் சிரிப்பு வந்தது. National Economic Planning & Policy-யாம். ஆரம்பமே சரியில்லையே. மனு பரிசீலனையின்போது எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்..


16 வயதினிலேயின் பெண்ணாம்..


அடுத்த மயிலு..???????

மருத்துவமனையில் மணிரத்னம்


வேலை என்று வந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கக் கூடியவர் இயக்குநர் மணிரத்னம். 'தளபதி' ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு ஊழியர்கள் சிலர் மரணமடைந்தபோதும், ஷூட்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பு செய்தவர். உழைப்பின் மீது அவ்வளவு வெறி..

'குரு' படத்தின்போதுதான் இப்படிப்பட்ட அதீத உழைப்பின் காரணமாக முதல் முறையாக நெஞ்சு வலி அவரைத் தாக்கியது.. மருத்துவமனையில் வாசம் செய்துவிட்டு மீண்டும் தனது பணியினைத் தொடர்ந்தார். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுவலி வர.. மருத்துவமனைக்கு சென்று மீண்டு வந்தார்.


இப்போது 'ராவணன்' திரைப்படத்திற்கும் பேயாய் உழைத்திருக்கிறார் இயக்குநர். அதன் விளைவாக இப்போதும் மீண்டும் மருத்துவமனையில்.


உழைப்பு அவசியம்தான்.. தேவைதான். அதே சமயம் அதற்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும். மணி போன்ற இந்தியாவின் இயக்குநர்கள் இன்னும் படைக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. கொஞ்சம் மெதுவாக உழைக்கலாமே.. ஏன் இவ்வளவு அவசரம்..? அவர் நல்ல உடல் நலம் பெற்று திரும்ப என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.