கேப்டன் விஜயகாந்த் திருமணத்தில் ஒரு அனுபவம்..!

02-04-2009


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

காவல்துறையினரைப் பார்க்கின்றபோது அவர்கள் சீருடையைவிட அவர்கள் கையில் வைத்திருக்கும் லத்திதான் பொதுமக்களுக்கு அதிக பயத்தைத் தரும்.


‘ஒரு தடவை அதுல அடி வாங்கிப் பாரு.. அதோட மகிமை தெரியும்..!’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திருக்காத கட்சித் தொண்டர்களும், இளைஞர் இயக்கத்து தோழர்களும் இந்தியத் திருநாட்டில் இருக்கவே முடியாது.

பதிவர்களில் எத்தனை பேருக்கு அந்த அனுபவம் கிட்டியதோ எனக்குத் தெரியாது.. ஆனால் எனக்கு நிறைய உண்டு. அதில் மறக்க முடியாதது முதல் அனுபவம்தான்.. எங்கே என்பதுதான் கொஞ்சம் வேடிக்கையான, வேதனையான விஷயம்..

நான் மதுரையில் சில ஆண்டு காலம் எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டு நிம்மதியாக ராஜா மாதிரி இருந்த நேரம் அது.

மதுரையின் மண்ணின் மைந்தனான நடிகர், புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணம் பற்றிய செய்திகள் அனைத்தும் திருமணத்திற்கு முன்பே அப்போதைய பல பத்திரிகைகளில் வாராவாரம் வெளி வந்தபடியே இருந்ததால் மதுரையே ஏக பரபரப்பில் இருந்தது.

விஜயகாந்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு சில பத்திரிகைகளுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக ஆதித்தனார் குடும்பப் பத்திரிகைகள் விஜயகாந்திற்குத்தான் முக்கியத்துவம் அளித்து வந்தார்கள். 

திரு.சிவந்தி ஆதித்தனின் 'ராணி', மற்றும் திரு.ராமச்சந்திர ஆதித்தனின் 'தேவி' பத்திரிகையிலும் விஜயகாந்த் பற்றிய செய்தி வராத இதழ்களே இருக்க முடியாது.

இந்த இரண்டு இதழ்களுமே விஜயகாந்த் திருமணத்திற்கு முன்பாகவே திருமதி பிரேமலதாவின் புகைப்படத்தை பிரசுரித்து அமர்க்களம் செய்திருந்தன. பத்திரிகை செய்திகளின் தூண்டுதலில் நானும் அந்தத் திருவிழாவைக் காண நானும் ஆவலோடு காத்திருந்தேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மதுரை நகரமே திருமண விளம்பரத் தட்டிகளால் அல்லலோகப்பட்டுக் கொண்டிருந்தது. சுவரொட்டிகளாலும், சின்னச் சின்னத் தோரணங்களாலும் களை கட்டியிருந்தது மதுரை. தல்லாகுளம் பகுதி முழுவதும் விஜயகாந்தின் திருமண வாழ்த்து சுவரொட்டிகளைத் தாங்காத சுவர்களே கிடையாது. மேலமாசிவீதியில் உள்ள விஜயகாந்தின் அக்கா வீட்டிலிருந்து, மண்டபம் வரையிலானதூரம் வரையிலும் கட்சிக் கொடி போல் விஜயகாந்தின் மன்றத்துக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் பார்த்து மதுரை ஏக திகைப்பில் இருந்தது.


1990 ஜனவரி 30 இரவு 'தங்கரீகல்' தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 'தங்கம்' தியேட்டர் வழியாக வீடு திரும்பியபோது 'சுப்ரீம் ஹோட்டல்' வாசலில் ஏகமான கூட்டம்.. 

திருமணத்திற்கு முன்பும், திருமணம் முடிந்த அன்று இரவும் மணமக்கள் இந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தனர். அண்ணனைப் பார்க்க அப்போதே அவரது ரசிகர்கள் ஒன்று திரண்டு சாலையை மறித்து நின்று கொண்டிருந்தார்கள். 

கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து அப்போதே முடிவு செய்துவிட்டேன், நாளைக்கு முதல் வேலை அண்ணன் கல்யாணத்துக்கு போறதுதான்னு..! (அழைப்பிதழ் வந்துச்சான்னு சின்னப்புள்ளத்தனமா கொஸ்டீன் கேக்கக்கூடாது..!)

மறுநாள் ஜனவரி 31. விடிந்ததும், விடியாததுமாக அவசர, அவசரமாகக் கிளம்பி எனது சைக்கிளில் ராஜா முத்தையா மன்றத்திற்கு வந்தால், ஒரு அரசியல் கட்சி மாநாடு நடப்பது போல் ரசிகர்களின் கூட்டம். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மொட்டை வெயில் என்றே சொல்லலாம்.. 

மூன்று புற வாசல்களுமே மூடப்பட்டு போலீஸ், ரசிகர் மன்றப் பொறுப்பாளர்கள் என்ற பாதுகாப்பில் இருந்தது மண்டபம். ரசிகர் மன்றத்தினர் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்து தட்டிகளை வைத்திருந்ததால் மண்டபமே மறைக்கப்பட்டிருந்ததுபோல் தெரிந்தது. 

மண்டபத்தின் வெளியே இருந்த பெட்டிக் கடைகளின் மேலேகூட ரசிகர்கள் ஏறி நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த மரங்களிலும் ரசிகர்கள் கூட்டம் தொற்றிக் கொண்டிருந்தது.

சில ரசிகர்கள் மெயின் கேட்டின் மீது ஏறி நின்று உள்ளே இறங்க முயல.. போலீஸார் அவர்களை அடிக்கப் போவதைப் போல் பாவ்லா காட்ட, அவர்கள் பட்டென்று வெளிப்பக்கமாக காலை போட்டுக் கொள்ள என்று விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

மண்டபத்தைச் சுற்றிலும் இருந்த இரும்புக் கிராதிகளின் மேலேயும் ரசிகர்கள் ஏறி நின்று கொண்டு எங்காவது கிடைக்கின்ற நேரத்தில் தங்கள் தலைவனின் முகம் தெரியாதா என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

மண்டபத்தின் வலது பக்கமிருந்தும், இடது பக்கமிருந்தும் பார்த்தால் மண்டபத்தினுள் நுழையும் கதவுகள் தெரியும். அந்தக் கதவுகள் நி்மிடத்துக்கொரு முறை திறக்கப்பட்டுக் கொணடிருக்க, அந்த ஒரு நொடி தரிசனத்தையே ஐயப்ப தரிசனம்போல் ரசித்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.. 

அரங்கத்தின் வலது புறமாக இருந்த ரோட்டோரத்தில் நின்றுதான் பார்க்கவும், கேட்கவும் முடிந்தது.. இங்கேதான் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது.

கலைஞர் தலைமையில் திருமணம். கலைஞர் 13 வருட கால வனவாசத்திற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருந்த நேரம். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கலைஞர், விஜயகாந்தின் மனம் கவர்ந்த தலைவர் மூப்பனார், இசைஞானி இளையராஜா, சத்யராஜ், பிரபு, எஸ்.எஸ்.சந்திசந்திரசேகர், பாண்டியன், தியாகு, தாணு, இராம.நாராயணன், பாரதிராஜா, மணிவண்ணன், எஸ்.பி.முத்துராமன், சங்கர்கணேஷ், ஜி.வி.. என்று எனக்கு நினைவில் இருக்கிறவரைக்கும் தெரிகிறது.

இதனாலேயே விஜயகாந்த் ரசிகர்களைவிடவும், தி.மு.க. கரைவேட்டிகளின் எண்ணிக்கையும், காங்கிரஸ் கட்சியினரின் எண்ணிக்கையும் அந்த இடத்தில் அதிகமாக இருந்தது. உள்ளே மைக்கில் பேசுவது வெளியில் கேட்க வேண்டும் என்பதற்காக மண்டபத்தின் மூன்று பக்கமும் ஸ்பீக்கரை கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.

உள்ளே பேசியவர்களெல்லாம் 'புரட்சிக் கலைஞர்' என்றும் 'விஜயகாந்த்' என்றும் சொல்லும்போதெல்லாம் உள்ளே இருந்து எழுந்த கைதட்டலைவிட, மண்டபத்தைச் சுற்றி அந்த வேகாத வெயிலில் காத்திருந்த ரசிகர் பெருமக்கள் எழுப்பிய கரகோஷம்தான் அதிகம்.

உள்ளே இசை வாத்தியங்களின் மங்கள இசையில் மாலை மாற்றுதலும், தாலி கட்டுதலும் நடக்க.. சட்டென்று வெளியே வந்த ஒருவர் ரசிகர்களைப் பார்த்து கை தட்டல் எழுப்பும்படி சைகை செய்ய.. அதற்காகவே காத்திருந்ததைப் போல ரசிகர்கள் எழுப்பிய விசில் சப்தமும், கை தட்டலும் அந்தப் பகுதியை அலற வைத்தது. வித்தியாசமான அனுபவம்யா இது..!

போலீஸார்தான் பாவம்.. ஒரு பக்கம் ரசிகர்களின் கண்ணாமூச்சி விளையாட்டு. மறுபக்கம் கட்சிக்காரர்களின் நொச்சு. இரண்டையும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.

கலைஞர் பேசியது அப்போது நியாபகத்தில் இல்லை.. இப்போது பத்திரிகைகளில் பதிவாகியிருப்பதை தட்டச்சு செய்து இடுகிறேன்..! 

"தம்பி விஜயகாந்த் எளிமை, இனிமை ஆகிய இயல்புகளுடன் தன்னடக்கத்துடன் விளங்குகிறார். கலையுலகின் உச்சிக்குச் சென்றாலும், ஆணவம், செருக்கு, அகம்பாவம் ஆகியவை தன்னை அணுகாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

விஜயகாந்த் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ந்து வெற்றிப் படங்களாக தந்து கலையுலகிற்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் தம்பி விஜயகாந்த். 

இந்த விழாவுக்கு என்னையும் அழைத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரையும் அழைத்திருப்பதால் இதுவொரு வித்தியாசமான விழா என்று யாரும் கருத வேண்டாம். நானும் அப்படி கருதவில்லை. நாம் எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழன் என்ற உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம்..!

தன்மானத் திருமணம், சுயமரியாதைத் திருமணம், பகுத்தறிவு திருமணம் என்று தந்தை பெரியார்தான் அறிமுகப்படுத்தினார். கிராமம், பட்டி தொட்டிகளில் எல்லாம் இந்த சுயமரியாதை திருமணத்தை அண்ணா பரப்பினார். இன்று மூட நம்பிக்கையைத் தவிர்த்து தமிழனின் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது..!

ராஜா தேசிங்கிற்கு ஒரு மகமத்கான் கிடைத்ததுபோல் விஜயகாந்திற்கு ஒரு ராவுத்தர் கிடைத்திருக்கிறார். என்னை மாத்திரம் இந்த விழாவுக்கு அழைத்தால், தன்னை அடையாளம் தெரிந்து கொள்வார்கள் என்று தம்பி விஜயகாந்துக்கு ஒரு தயக்கம்..

பஞ்சாங்கத்தை நம்புகிறவர்கள், கிழக்கே இருக்கும் ஊருக்குப் போகும்போது, கிழக்கே சூலம் என்றால் போகக் கூடாது என்று நினைப்பார்கள். அதே பஞ்சாங்கத்தில் இதனை நிவர்த்தி செய்ய சிறு குறிப்பும் இருக்கும். அதில் கிழக்கே சூலமாக இருந்தாலும் அதற்குப் பரிகாரமாக வெல்லத்தை சாப்பிட்டுக் கொண்டு செல்லலாம் என்று குறிப்பிட்டிருக்கும். 

அது போலத்தான் தம்பி விஜயகாந்த் வெல்லமாக நண்பர் மூப்பனாரை இங்கே அழைத்துள்ளார். அவர் நட்பில் வெல்லமாக இனிக்கக் கூடியவர். தஞ்சாவூர் பண்பு அது. அந்த பண்பின் அடிப்படையில் அவர் இங்கு வந்திருக்கிறார். மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.." என்றார் கலைஞர் மு.கருணாநிதி.

ஆனால் இளையராஜா பேசியதில் ஒன்றே ஒன்றுதான்(சப்ஜெக்ட் அப்படி) எனக்கு பளிச்சென்று இன்றும் நினைவுக்கு வருகிறது.

"இனிமேல் விஜயகாந்த், 'விரிச்சு வைச்ச பாயும், எடுத்து வைச்ச பாலும் வீணாகத்தான் போகுது.. அந்த வெள்ளி நிலாக் காயுது..' என்று பாட முடியாது என்று நினைக்கிறேன்.." என்றார். இது எப்படி இருக்கு..? மறக்கவா முடியும்..!?

கல்யாணம் செய்துவைத்துவிட்டு கலைஞரும், மற்றவர்களும் வெளியேறிய பின்பு, ஒரு பெரும்கூட்டமே திமுதிமுவென்று கேட்டின் மீது ஏறி உள்ளே குதித்து ஓடியது. அதுவரையில் அவர்களை அடக்கியிருந்ததே பெரிய விஷயம்.. நானும் சைக்கிளை ஓரமாக வைத்துவிட்டு கேட்டில் ஏறி உள்ளே இறங்கி ஓடினேன்..

அந்தப் பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் திரண்டு வந்த ரசிகர்களை வழி மறித்த மன்றப் பொறுப்பாளர் ஒருவர், "அண்ணன்(விஜயகாந்த்) பொருளாளர் கல்யாணத்துக்குப் போறாருப்பா.. திரும்பி வருவாரு.. அப்புறமா பாருங்க..” என்று கெஞ்சாத குறையாக எங்களைத் தடுத்து நிறுத்தினார். 

யார் கேக்கப் போறா..? அவரையும் தாண்டி மேலே ஏற.. பட்டென்று மேலேயிருந்த கதவை இழுத்துப் பூட்டிவிட்டு போலீஸாரை வரவழைத்தார் அவர்.. போலீஸ் தலையைப் பார்த்தவுடன் கூட்டம் பிய்த்துக் கொண்டு நாலாபுறமும் ஓடியது. நானும்தான்..

பழையபடி அதே மரத்தடியில் வந்து நின்று, “என்னடா..! உடனேயே மனுஷன் கிளம்பி்ட்டாரு..?”ன்னு விசாரிச்சா.. விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் பொருளாளரும், விஜயகாந்தின் நீண்ட கால நண்பருமான சுந்தர்ராஜனுக்கும் அன்றைக்குத்தான் திருமணமாம். 

‘விஜயகாந்த் திருமணத்தன்றுதான் நானும் திருமணம் செய்து கொள்வேன்..’ என்று சபதமெடுத்து அதன்படியே செய்து காட்டிய உத்தம நண்பர் இவர். அந்தத் திருமணம் தெற்குவாசல் பகுதியில் ஒரு மண்டபத்தில் நடந்தது. 

(விஜயகாந்த் சமீபத்தில் திருவரங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏதோ ஒரு கோபத்தில், கட்சிக்காரர் ஒருவரை உரிமையுடன் கன்னத்தில் அறைந்தாரே. ஞாபகமிருக்கிறதா..? அது இந்த சுந்தர்ராஜனைத்தான்..!) 

அந்தத் திருமணத்திற்குச் சென்று தனது உற்ற நண்பனுக்கு தாலியைக் கையில் எடுத்துக் கொடுத்து, அந்தக் கல்யாணத்தையும் நடத்தி வைத்துவிட்டுத்தான் திரும்பவும் இங்கே வந்தார்..!

பாதுகாப்புக்கு உள்ளே மண்டப கேட்டில் நின்று கொண்டிருந்த போலீஸாரிடம் பல ரசிகர்கள் சிநேகத்துடன் "ஏண்ணே யாராவது நடிகைங்க வந்திருக்காங்களா..?" என்று விசாரித்தார்கள்.. ஒருத்தர்கூட வரலை என்றவுடன் பலருக்கும் சோகம்.. எனக்கும்தான்..!

"ஒரு நடிகைகூட வரலியே..!? எத்தனை பேரோட அண்ணன் டூயட் பாடியிருப்பாரு.. எத்தனை பேருக்கு சான்ஸ் கொடுத்தாரு.. இது முக்கியம் இல்லியா..? எப்படி வராம போனாங்க..! ஏமாத்திட்டாங்க அத்தனை பேரும்..!" என்று சிலர் திட்டித் தீர்த்தார்கள்.

(வந்தால் சட்னிதான் என்பதை உணர்ந்துதான் எந்த நடிகையும் வரவில்லை. ஆனால் சென்னையில் வைத்த திருமண வரவேற்புக்கு வந்திருந்த ரேகாவும், வைஷ்ணவியும் கண்கலங்கித்தான் வெளியில் வந்தார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் 'அன்பு'த் தொல்லை இருந்தது..)

நேரம் ஓடிக் கொண்டிருந்தது.. வி.ஐ.பி.க்கள் கியூ வரிசையில் நின்று அன்பளிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வேகாத வெயிலில் என்ன செய்வது என்று தெரியாமல் உலாத்திக் கொண்டிருந்த எனக்கு அருகில் இருந்த தமுக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்காக பிரியாணி காத்திருப்பதாகவும், ராவுத்தர் ஏற்பாடு அது என்றும், அங்கே ரசிகர்களோடு ரசிகராக விஜயகாந்தும் சாப்பிடப் போகிறார் என்றும் சொன்னார்கள்.

ஆஹா.. பிரியாணியா..? அதுவும் ஓசிலயா..? எவன் விடுவான்.. மனம் பரபரத்தது நடக்கப் போவது தெரியாமல்.. நாம ஒண்ணு நினைச்சா, முருகன் ஒண்ணு செய்வானே..! செஞ்சுட்டான்..!


நேரம் ஆக, ஆக ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. சிறிது நேரம் கழித்து தெற்கு வாசலில் இருந்து காந்தி மியூஸியம் வழியாக மீண்டும் முத்தையா மன்றத்திற்கே வந்தார்கள் மணமக்கள். 

கூட்டம் அருகே ஓட.. போலீஸ் மிகப் பிரயத்தனப்பட்டு அவர்களை அடக்க, விஜயகாந்த் போலீஸை ஒதுங்கச் சொன்னார். அவர்களும் ஆளை விட்டால் போதும் என்று மனதுடன் ஒதுங்கிக் கொள்ள.. ஒரு திறந்த ஜீப்பில் விஜயகாந்தும், பிரேமலதாவும் மாலையும், கழுத்துமாக ஏறினார்கள். பிரேமலதா அடக்கமாக கை கூப்பியபடியே வர.. விஜயகாந்த் தனது ரசிகர்களை நோக்கி கை ஆட்டியபடியே வந்தார்.. ஜீப், தமுக்கம் மைதானம் நோக்கிச் சென்றது.

ஜீப்பின் முன்னும், பின்னும் அப்படியொரு கூட்டம். நெரிசலில் கூடவே ஓடினேன்.. வியர்வை பொங்கி வழிந்தது.. அதெல்லாம் இப்பத்தான் தோணுது. அப்ப இருந்தது ஒரு ஆர்வமும், பிரியாணி மீதான பாசமும்தான்..

சாலையில் ஒரு புறம் மட்டுமே போக்குவரத்து திறந்துவிடப்பட அதையும் ரசிகர்கள் தடை செய்துவிட்டார்கள். கொஞ்ச நேரத்திற்கு அடக்கமாக கை கூப்பியபடியே வந்த பிரேமலதா, விஜயகாந்தின் அறிவுரைக்குப் பின் அவரும் கையை அசைக்க ஆரம்பிக்க கரகோஷம் பிய்த்தது. இதற்கு ரோட்டின் இரு புறமும் இருந்த பெண்களிடத்தில் அமோக ரெஸ்பான்ஸ்.. 

கூட்டம் நகராமல் அப்படியே நிற்க.. “சீக்கிரம் போங்க.. சாப்பிடணும்.. நிறைய பேர் காத்துக்கிட்டிருக்காங்க..” என்று மைக்கில் சொல்லிச் சொல்லி நகர்த்தினார்கள் ரசிகர் மன்றத் தலைவர்கள். 

சில இடங்களில் ரசிகர்களே கரகாட்டம், காவடியாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் வேறு சில சில இடங்களில் ஜீப்பை நிறுத்தி தங்களது ஆட்டத்தைத் தொடர விஜயகாந்தே தலையிட்டு சீக்கிரம் போகும்படி சொல்ல வேண்டியதாயிற்று..

தமுக்கம் மைதானத்தின் உட்புறம் இருந்த மண்டபத்தில் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கேயும் போலீஸ் குவிப்பு. விஜயகாந்தின் ஜீப் மைதானத்தின் உள்ளே நுழையவே 20 நிமிடங்கள் பிடித்தது.. கூட்டத்தில் என் செருப்பு பிய்ந்து, ஒரு செருப்பை மட்டுமே போட மனமில்லாமல் தூக்கியெறிந்துவிட்டு வீராதிவீரனாக உள்ளே நுழைந்தேன்.

உள்ளே ஏற்கெனவே ரசிகர் மன்றத் தலைவர்கள் ரசிகர்களைப் பொறுக்கியெடுத்து சாப்பிடுவதற்குத் தயாராக, வரிசையாக அமர வைத்திருந்தார்கள். பிரியாணி என்றவுடன் சாப்பிட பசியாய் பறந்து வந்திருந்த, என்னைப் போன்றவர்களுக்கு இதைப் பார்த்தவுடன் திக்கென்றானது, எப்ப நாம சாப்பிடறது என்று..!?

கூட்டம் விஜயகாந்த் தம்பதிகளோடு உள்ளே நுழைய முயல இரும்பு கேட்டை லேசாகத் திறந்து விஜயகாந்தோடு 5 பேரை மட்டுமே உள்ளே அனுமதித்த ராவுத்தர், கேட்டை இழுத்துச் சாத்திவிட்டார். பின்பு ஆரம்பி்த்தது எங்களுக்கு சாத்து..

லேசான தள்ளுமுள்ளு.. தடியடிதான்.. உள்ளே பிரியாணியை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்த என் தொடையில் ஏதோ ஒரு அடி.. ‘ஐயோ..!’ என்று கத்தியபடியே கீழே விழுந்தேன். அடுத்த அடியும் அதே தொடையில் விழுந்தது.. நிமிர்ந்துகூட பார்க்க தைரியமில்லாமல், கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியில் வந்து விழுந்தேன்.

தமுக்கம் மைதானத்தின் முகப்பில் ஒரு மரம் இருந்தது. இப்போது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அந்த மரத்தின் ஓரமாகப் போய் தொடையைப் பிடித்துக் கொண்டு நின்றவன், சில நொடிகளில் நிற்கவே முடியவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டேன்.

சிறிது நேரத்திற்கு காலை அசைக்கக்கூட முடியவில்லை. என்னைப் போன்று அடி வாங்கிய பல ரசிகர்களும் மரியாதையாக வெளியே வந்து ஒதுங்கி நிற்க.. சில நொடிகளில் கூட்டம் கட்டுக்குள் வந்தது.. பின்பு ரசிகர் மன்றத் தலைவர்கள் பலரும் ஓடோடி வந்து ரசிகர்களை சமாதானப்படுத்தி ‘அனைவருக்கும் பிரியாணி உண்டு..’ என்று சொல்லி வயிற்றில் பால் வார்த்தார்கள்.

ஆனால் என்னால்தான் அதனை ரசிக்க முடியவில்லை. வலி என்றால் அப்படி ஒரு வலி.. அழுதேவிட்டேன். என் நிலையைப் பார்த்த ஒரு ஆள், “தம்பி... மாமனுங்க அடிச்சிட்டானுங்களா..?” என்றார். என்னத்த சொல்றது நானு..!? பதில் சொல்லாமல் நான் அவரைப் பார்க்க.. “மொதல்ல கொஞ்ச நேரம் அப்படித்தான் இருக்கும்.. அப்படியே ஆட்டாம, அசையாம இருங்க.. தசை இறுகிருக்கும். கொஞ்ச நேரத்துல சரியாப் போயிரும்..” என்றார் அக்கறையோடு.. ஒருவேளை நல்ல அனுபவசாலியாக இருப்பார் போலிருக்கு..!

சட்டையின் பின்பக்கம் கிழிந்து தொங்கிய நிலையில், பேண்ட்டும் அழுக்காகி, செருப்பு இல்லாமல் தலைமுடி கலைந்து, கிட்டத்தட்ட ஓசி பிரியாணி சாப்பிடக் கூடிய தோற்றத்தில்தான் நானும் இருந்தேன். ஆனால் பிரியாணி சாப்பிடும் மனநிலையில் இல்லை.

வலியோடு நான் உட்கார்ந்திருக்க.. முதல் பந்தி முடிந்து விஜயகாந்த் ரசிகர்களோடு சாப்பிட்டுவிட்டு வெளியேறினார். மறுபடியும் கூட்டம் அவரை மொய்த்தது.. “எல்லாரும் கண்டிப்பா சாப்பிட்டுட்டுத்தான் போகணும்..” என்று விஜயகாந்த் சொன்னபோது தமுக்கமே கை தட்டலில் அரண்டு போனது..

பின்பு அம்பாசிடர் காரில் அவரும், அவரது திருமதியாரும் வெளியேற.. ரசிகர்கள் கூட்டம் அவர்களது காரைத் துரத்திக் கொண்டே ஓடியது. எனக்கும் கால் நல்லாயிருந்தா சத்தியமா துரத்தியிருப்பேன். முடியலையே..

கொஞ்சம், கொஞ்சமாக கால் வலி குறைய.. எழுந்து நடந்தேன்.. நேரம் மதியம் 1 மணி இருக்கும் என்று நினைக்கிறேன்.. ‘இப்போதைக்கு வீட்ல போய் படுக்கணும்யா..’ என்ற ஒரு எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை அப்போதைக்கு..

அங்கிருந்து பொடி நடையாய் நொண்டியபடியே நடந்து ராஜா முத்தையா மன்றத்திற்கு வந்து, எனது ஓட்டை சைக்கிளைத் தேடியெடுத்து வீடு திரும்பியபோது, வீட்டில் அனைவரும் என்னை பார்த்த பார்வை இருக்கிறது பாருங்க..! ம்ஹும்.. ரெண்டு நாளைக்கு ஒருத்தர் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்க முடியல..!!!

இதற்கு பின்பு பல கட்சி ஊர்வலங்களில் போலீஸ் தடியடியில் சிக்கி அடிபட்ட அனுபவம் உண்டு என்றாலும், முதல் அனுபவம் இதுதான் என்பதால் மறக்க முடியாமல் போய்விட்டது..!

இதுல இருந்து நான் சொல்றது என்னன்னா..!

1. தயவு செய்து ஓசி பிரியாணிக்காக எங்கேயும் அலையாதீங்க..!?????????

2. எந்தக் கூட்டத்துக்குப் போனாலும், போலீஸ் இருந்தா கொஞ்சம் சுதாரிப்பா இருந்துக்குங்க..! மாட்டினீங்க அவ்ளோதான்..!

விஜயகாந்தின் அரசியல் நிலவரம் பத்தி பதிவெழுதலாம்னு யோசிச்சுட்டு அவரோட நல்ல புகைப்படம் கேட்டு, கூகிளாண்டவர்கிட்ட தேடினப்போ திடீர்ன்னு இந்த போட்டோ கிடைச்சது.


இதைப் பார்த்தவுடனேயே இதை எழுதிரணும்னு தோணுச்சு.. எழுதி்ட்டேன்..

நன்றி..

வணக்கம்..

புகைப்பட உதவிக்காக ஸ்டில்ஸ் ரவியண்ணனுக்கு எனது நன்றிகள்..!

48 comments:

மஞ்சள் ஜட்டி said...

குசும்பனாரே, இப்படியாக நாயடி, பேயடி வாங்கி அந்த பிரியாணியை சாப்பிடாமல் வந்துட்டீங்களே..ரொம்ப தைர்யம் தான் உங்களுக்கு...இன்னிய தேதில இப்படி ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள..

பி.கு : ஜு.வி ல வந்த உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.. (கொஞ்சம் லேட் தான்..ஆனா லேட்டஸ்ட் :))

நையாண்டி நைனா said...

/*எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டு நிம்மதியாக ராஜா மாதிரி இருந்த நேரம் அது.*/

இப்ப எப்படியாம்?

/*அழைப்பிதழ் வந்துச்சான்னு சின்னப்புள்ளத்தனமா கொஸ்டீன் கேக்கக்கூடாது..!*/

கேக்க மாட்டோம். கேக்க மாட்டோம்.

வெனையை யாரும், வெத்தலை பாக்கு வைச்சு அழைக்க மாட்டாங்கன்னு எங்களுக்கும் தெரியும்.

/*அவரோட நல்ல புகைப்படம் கேட்டு, கூகிளாண்டவர்கிட்ட தேடினப்போ*/

இந்த குசும்புக்குதாண்டி எங்க அண்ணன் அன்னிக்கே உங்களுக்கு "கொடு"த்திருக்கிறார்.

நையாண்டி நைனா said...

நல்ல வேளைடா சாமி, உங்களை அன்னிக்கு அடிச்சு விரட்டுனாங்க.
இல்லேன்னா, இந்த பதிவு இதோட முடிஞ்சிருக்குமா? இன்னும், எத்தனை ஆடு வெட்டுனாங்க, எப்படி வெட்டுனாங்க, எத்னி பேரு வெட்டுனாங்க, எத்தனை பேரு சமைச்சாங்க, அதுக்கு மஞ்ச போடி எப்படி அரைச்சாங்க, ஆடு வெட்டும்போது எப்படி சவுண்டு வந்துச்சு, சமைக்கிறதுக்கு யாரு வந்தா, எத்தனை இலை வந்துச்சு............................................ இதுவே இப்போதைக்கு முடியாது அப்புறம் பதிவு?

எங்களை காப்பாற்றிய சரவணா.... உனக்கு அரோகரா..... இல்லேன்னா இப்ப மக்களுக்கு அரோகரா தான்.

நல்ல வேளை, அன்னிக்கு ஐயாவை வச்சு கல்யாணம் பண்ணாரு.
ஜெ.ஜெ அவர்களை கூப்பிட்டு இருந்தாரு?????
இப்ப ஜெ.ஜெ.அவர்கள் விஜயகாந்து "போதையிலே" எனக்கு "மாலை" போட இருந்தார் என்று ஒரு பிரச்சினையை கிளப்பி இருப்பாங்க.

வடுவூர் குமார் said...

யாரப்பா அது? புஸ் மஞ்சள் ஜட்டி போட்டு இருப்பதை பார்த்தது?? :-))
என்ன உண்மைத்தமிழன், இந்த பதிவு 50% குறைவாக இருக்கே!
இப்படி ஸ்குரோல் பண்ணி படிக்காம எழுதியை ஆடியோவாக தொடுப்பு கொடுத்தால் இன்னும் சௌகரியமாக இருக்கும்.:-)

அசோக் said...

Very nice...

உண்மைத்தமிழன் said...

///மஞ்சள் ஜட்டி said...
குசும்பனாரே, இப்படியாக நாயடி, பேயடி வாங்கி அந்த பிரியாணியை சாப்பிடாமல் வந்துட்டீங்களே.. ரொம்ப தைர்யம்தான் உங்களுக்கு... இன்னிய தேதில இப்படி ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள..

பி.கு : ஜு.வி.ல வந்த உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.. (கொஞ்சம் லேட்தான்.. ஆனா லேட்டஸ்ட் :))///

இதைச் சொல்றதுக்கு என்ன வெக்கம் வேண்டிக் கிடக்கு..?

எடுக்கிறது பிச்சை..! அதுக்கென்ன ஸ்டேட்டஸ் வேண்டிக் கிடக்கு..!?

ஆமா இதென்ன மஞ்சள் ஜட்டி.. அசிங்கமா இருக்கு.. மாத்துங்க..

உண்மைத்தமிழன் said...

///நையாண்டி நைனா said...
/*எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டு நிம்மதியாக ராஜா மாதிரி இருந்த நேரம் அது.*/

இப்ப எப்படியாம்?//

இப்பவும் அதே மாதிரி ஊர் சுற்றுதல்தான்.. ஆனால் பிச்சைக்காரன் மாதிரி..!

/*அழைப்பிதழ் வந்துச்சான்னு சின்னப்புள்ளத்தனமா கொஸ்டீன் கேக்கக்கூடாது..!*/
கேக்க மாட்டோம். கேக்க மாட்டோம்.
வெனையை யாரும், வெத்தலை பாக்கு வைச்சு அழைக்க மாட்டாங்கன்னு எங்களுக்கும் தெரியும்.//

வெனை இல்லை.. கிரகம்.. எனக்கு எப்பவுமே இப்படித்தான் நடக்கும்..!

/*அவரோட நல்ல புகைப்படம் கேட்டு, கூகிளாண்டவர்கிட்ட தேடினப்போ*/
இந்த குசும்புக்குதாண்டி எங்க அண்ணன் அன்னிக்கே உங்களுக்கு "கொடு"த்திருக்கிறார்.///

இருப்பா.. இரு.. உங்கண்ணனுக்கு நான் ஒரு நாள் திருப்பிக் கொடுப்பேன்.. அப்ப வந்து பாரு..!

உண்மைத்தமிழன் said...

///நையாண்டி நைனா said...
நல்ல வேளைடா சாமி, உங்களை அன்னிக்கு அடிச்சு விரட்டுனாங்க.
இல்லேன்னா, இந்த பதிவு இதோட முடிஞ்சிருக்குமா? இன்னும், எத்தனை ஆடு வெட்டுனாங்க, எப்படி வெட்டுனாங்க, எத்னி பேரு வெட்டுனாங்க, எத்தனை பேரு சமைச்சாங்க, அதுக்கு மஞ்ச போடி எப்படி அரைச்சாங்க, ஆடு வெட்டும்போது எப்படி சவுண்டு வந்துச்சு, சமைக்கிறதுக்கு யாரு வந்தா, எத்தனை இலை வந்துச்சு............................................ இதுவே இப்போதைக்கு முடியாது அப்புறம் பதிவு? எங்களை காப்பாற்றிய சரவணா.... உனக்கு அரோகரா..... இல்லேன்னா இப்ப மக்களுக்கு அரோகராதான்.//

நைனாஜி.. நைஸ் கமெண்ட்டு.. நிறைய ஐடியா கொடுத்திருக்கீங்க.. மனசுல வைச்சுக்குறேன்.. கண்டிப்பா இதையெல்லாம் கலந்தடிச்சு ஒண்ணு எழுதி உங்களைக் கதற வைக்குறேனா இல்லையான்னு பாருங்க..!

//நல்ல வேளை, அன்னிக்கு ஐயாவை வச்சு கல்யாணம் பண்ணாரு.
ஜெ.ஜெ அவர்களை கூப்பிட்டு இருந்தாரு????? இப்ப ஜெ.ஜெ.அவர்கள் விஜயகாந்து "போதையிலே" எனக்கு "மாலை" போட இருந்தார் என்று ஒரு பிரச்சினையை கிளப்பி இருப்பாங்க.///

ஹா..ஹா..ஹா.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

///வடுவூர் குமார் said...
யாரப்பா அது? புஸ் மஞ்சள் ஜட்டி போட்டு இருப்பதை பார்த்தது?? :-))
என்ன உண்மைத்தமிழன், இந்த பதிவு 50% குறைவாக இருக்கே!
இப்படி ஸ்குரோல் பண்ணி படிக்காம எழுதியை ஆடியோவாக தொடுப்பு கொடுத்தால் இன்னும் சௌகரியமாக இருக்கும்.:-)///

அது சரி.. பெரிசா எழுதினா ஸ்குரோல் பண்ண முடியலைன்னு புகாரு..

கொஞ்சமா எழுதினா என்ன உடம்பு சரியில்லையான்னா நக்கலு..

இப்ப ஆடியோவா குடுக்கணுமா..? வடுவூராரே.. இந்தப் பதிவு போடறதுக்கே நாலு பேரைக் கெஞ்சி கம்ப்யூட்டரை வாங்கிப் போட்டேன்.. ஆடியோவுக்கு நான் எங்க போறது..? அந்த அளவுக்கெல்லாம் நமக்கு அறிவு இல்லீங்கோ..

உண்மைத்தமிழன் said...

//அசோக் said...
Very nice...//

Thanks Ashok..

Bhuvanesh said...

//ஆஹா.. பிரியாணியா..? அதுவும் ஓசிலயா..? எவன் விடுவான்.. மனம் பரபரத்தது நடக்கப் போவது தெரியாமல்.. நாம ஒண்ணு நினைச்சா, முருகன் ஒண்ணு செய்வானே..! செஞ்சுட்டான்..!

நேரம் ஆக, ஆக ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தார்கள் மணமக்கள்.//

அண்ணே பிரியாணி சாப்ட போனவங்கெல்லாம் ரசிகர்களா??

Bhuvanesh said...

//பின்பு அம்பாசிடர் காரில் அவரும், திருமதியாரும் வெளியேற.. ரசிகர்கள் கூட்டம் அவர்களது காரைத் துரத்திக் கொண்டே ஓடியது. எனக்கும் கால் நல்லாயிருந்தா சத்தியமா துரத்தியிருப்பேன்.//


நீங்க அந்த கட்சியா ?? என்னால நம்பவே முடியல!!

Bhuvanesh said...

இந்த பதிவ பாத்தவுடனே, இப்படி எல்லாம் யாரும் அடிவாங்க கூடாது னு கோயில்ல போய் கல்யாணம் செஞ்சுகிட்டு வந்த வேறு ஒரு நடிகர் ஞாபகம் வந்தார்!!

Shan Nalliah / GANDHIYIST said...

Great..! You are a good writer ...write more stories or biography....I love TN writers!!!

Shan Nalliah...NORWAY
http://sarvadesatamilercenter.blogspot.com

Venkatesh subramanian said...

நானும் மதுரைகாரன் என்பதால் மிகவும் ரசித்தேன் நானும் ஒரு முறை மாட்ட வேண்டியது JUST MISSU தேவர் மகன் படம் முதல் நாள் முதல் ஸோ மினாட்சி பாரடைஸ் தியேட்டர் ரசிகர்கள் அணுகுண்டை பொட்டு திரையை கிழித்து விட்டார்கள் தியேட்டர்காரன் மற்றும் போலிஸ்சும் சேர்ந்த்து பட்டயை கிளப்ப எஸ்கேப் ஆகி ஓடி வருவதற்குள் நாக்கு தள்ளி விட்டது JUST MISS தான் இல்லாவிட்டால் உங்கள் நிலைமை தான் எனக்கும் அன்றுமுதல் முதல் நாள் முதல் ஸோ பார்க்கும்ஆசை போய்விட்டது

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//கியூ வரிசையில் //
கியூவா? வரிசையா?...மெல்ல மெல்ல இந்த கீயூ வரிசை, நடுச் சென்ரர் - விட்டால் தான் என்ன?
மற்றும் ஆனாலும் உங்களுக்குத் துணிச்சல் அதிகம்...இந்த இடத்துக்கெல்லாம் போகிறீர்களே?

Raju said...

\\1990 ஜனவரி 30 இரவு 'தங்கரீகல்' தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 'தங்கம்' தியேட்டர் வழியாக வீடு திரும்பியபோது '\\

ஹி..ஹி..தங்கரீகல்ல என்னா படம்ன்னே பாத்தீங்க? பிட்டு நல்லாருந்துச்சா...

நானும் சினிப்பிரியா தியேட்டர்ல "வல்லவன்"பட டிக்கெட் வாங்க வரிசையில நின்னப்ப போலீஸ்கிட்ட அடி வாங்குனேன்,
கையில காலேஜ் பேக்கு இருந்ததால அத வச்சு மறைச்சு தப்பிச்சிகிட்டேன். அதனால வலிக்கல.ஆனா தியேட்டருக்குள்ள‌
போனவுடனே "இந்த படத்துக்காகவா அடி வாங்குனோம்"னு நினைச்சு நினைச்சு அழுகை வந்துருச்சுண்ணே ...

லோகு said...

அவருக்காக அடி வாங்கி இருக்கீங்க, நீங்க விஜயகாந்த் கிட்ட ஒரு எம்.பி சீட் கேட்டுருக்கலாம்..

நையாண்டி நைனா said...

டக்ளஸ்....... said...
/*...... தியேட்டர்ல "வல்லவன்"பட டிக்கெட்.......... "இந்த படத்துக்காகவா அடி வாங்குனோம்"னு நினைச்சு நினைச்சு அழுகை வந்துருச்சுண்ணே ...*/

ஹும்ம்ம், நான் சிம்புவின் "குத்து"-லே வாங்குன குத்து தான் அதுக்கு அப்புறம் நான் எங்கேயும் "செம்பு" அப்படின்னு கூட சொல்றது இல்லை.

நையாண்டி நைனா said...

/*இருப்பா.. இரு.. உங்கண்ணனுக்கு நான் ஒரு நாள் திருப்பிக் கொடுப்பேன்.. அப்ப வந்து பாரு..!*/

அப்ப நீங்க பாக்கிஸ்தான் தீவிரவாதியா?

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//ஆஹா.. பிரியாணியா..? அதுவும் ஓசிலயா..? எவன் விடுவான்.. மனம் பரபரத்தது நடக்கப் போவது தெரியாமல்.. நாம ஒண்ணு நினைச்சா, முருகன் ஒண்ணு செய்வானே..! செஞ்சுட்டான்..!
நேரம் ஆக, ஆக ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தார்கள் மணமக்கள்.//

அண்ணே பிரியாணி சாப்ட போனவங்கெல்லாம் ரசிகர்களா??///

அப்புறம் யாருன்னு நினைச்ச..? ரசிகர்களாக இருப்பதால்தான் வந்திருக்காங்க. விசேஷத்துக்கு வந்தா சாப்பிடத்தான் சொல்வாங்க.. சாப்பிடச் சொன்னா சாப்பிடத்தான் செய்வாங்க..

இதுல என்ன ராசா குத்தம்..?

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//பின்பு அம்பாசிடர் காரில் அவரும், திருமதியாரும் வெளியேற.. ரசிகர்கள் கூட்டம் அவர்களது காரைத் துரத்திக் கொண்டே ஓடியது. எனக்கும் கால் நல்லாயிருந்தா சத்தியமா துரத்தியிருப்பேன்.//


நீங்க அந்த கட்சியா?? என்னால நம்பவே முடியல!!//

பொதுவாக அவரைப் பிடித்துப் போய் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பதற்காக வந்த இடத்தில் பிரியாணி ஆசையால் தூண்டப்பட்ட வந்து.. இப்படி..?

என்ன செய்ய? ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பது என்னளவில் மிகச் சரிதான்..

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...
இந்த பதிவ பாத்தவுடனே, இப்படி எல்லாம் யாரும் அடிவாங்க கூடாதுனு கோயில்ல போய் கல்யாணம் செஞ்சுகிட்டு வந்த வேறு ஒரு நடிகர் ஞாபகம் வந்தார்!!///

வர்றாலுல்ல.. வந்தா சரிதான்..!

உண்மைத்தமிழன் said...

///Shan Nalliah / GANDHIYIST said...

Great..! You are a good writer... write more stories or biography.... I love TN writers!!!
Shan Nalliah...NORWAY
http://sarvadesatamilercenter.blogspot.com///

மிக்க நன்றி ஐயா..

தங்களுடைய தளத்தைப் பார்வையிட்டேன்.. பல்வேறு பதிவர்களைத் தொகுத்து திரட்டி வைத்துள்ளீர்கள்.

ஒரு நாள் விடுமுறையில் அந்தப் பதிவுகள் முழுவதையும் ஆராய வேண்டும் என்று நினைத்துள்ளேன்..

அறிமுகத்திற்கு நன்றி ஐயா..!

உண்மைத்தமிழன் said...

///Venkatesh subramanian said...

நானும் மதுரைகாரன் என்பதால் மிகவும் ரசித்தேன்.

நானும் ஒரு முறை மாட்ட வேண்டியது JUST MISSU தேவர் மகன் படம் முதல் நாள் முதல் ஸோ மினாட்சி பாரடைஸ் தியேட்டர் ரசிகர்கள் அணுகுண்டை பொட்டு திரையை கிழித்து விட்டார்கள் தியேட்டர்காரன் மற்றும் போலிஸ்சும் சேர்ந்த்து பட்டயை கிளப்ப எஸ்கேப் ஆகி ஓடி வருவதற்குள் நாக்கு தள்ளி விட்டது JUST MISSதான் இல்லாவிட்டால் உங்கள் நிலைமைதான் எனக்கும். அன்று முதல் முதல் நாள் முதல் ஸோ பார்க்கும் ஆசை போய்விட்டது.///

ஓ.. வெங்கடேஷ்.. கிட்டக்க வந்துட்டீங்க..!

அன்றைக்கு நானும் அங்கேதான் இருந்தேன்.

ஸ்கிரீனை கிழித்ததோடு அல்லாமல், தியேட்டர் ஓனரையே அடித்து, சட்டையைக் கிழித்தது தெரியுமா உங்களுக்கு..?

அதனால்தான் போலீஸ் உள்ளே நுழைந்தது. நானும் கடைசி பெஞ்சுக்குத் தாவிதான் தப்பி்த்தேன்.

ஆனால் அன்றைக்கு ரசிகர்கள் செய்தது ரொம்பவே ஓவர்தான்..

இது பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.. கிளப்பி விட்டீர்கள்..

மிக்க நன்றி நண்பரே..!

அடிக்கடி வாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

///யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//கியூ வரிசையில் //
கியூவா? வரிசையா?...மெல்ல மெல்ல இந்த கீயூ வரிசை, நடுச் சென்ரர் - விட்டால்தான் என்ன?//

மன்னிக்கணும்.. மன்னிக்கணும் யோகன்.. அடுத்த முறை இது போன்று தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன்..

//ஆனாலும் உங்களுக்குத் துணிச்சல் அதிகம்... இந்த இடத்துக்கெல்லாம் போகிறீர்களே?///

இதுவொன்றும் போகக் கூடாத இடமல்ல யோகன்.. கண்டிப்பாக போக வேண்டிய நிகழ்ச்சிதான்.. அதுதான் போனேன்..

இதுக்கெதுக்கு துணிச்சல் வேணும்.. சாதாரணம்தான்..

உண்மைத்தமிழன் said...

///டக்ளஸ்....... said...

\\1990 ஜனவரி 30 இரவு 'தங்கரீகல்' தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 'தங்கம்' தியேட்டர் வழியாக வீடு திரும்பியபோது '\\

ஹி.. ஹி.. தங்கரீகல்ல என்னா படம்ன்னே பாத்தீங்க? பிட்டு நல்லாருந்துச்சா...//

டக்ளஸு.. தங்கரீகல்ன்னு சொன்னவுடனேயே ஞாபகம் வந்திருச்சா..? பிட்டு படம்தான்.. பெயர் ஞாபகமில்லை..

//நானும் சினிப்பிரியா தியேட்டர்ல "வல்லவன்" பட டிக்கெட் வாங்க வரிசையில நின்னப்ப போலீஸ்கிட்ட அடி வாங்குனேன், கையில காலேஜ் பேக்கு இருந்ததால அத வச்சு மறைச்சு தப்பிச்சிகிட்டேன். அதனால வலிக்கல.ஆனா தியேட்டருக்குள்ள‌
போனவுடனே "இந்த படத்துக்காகவா அடி வாங்குனோம்"னு நினைச்சு நினைச்சு அழுகை வந்துருச்சுண்ணே///

செம காமெடி டக்ளஸ்.. எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..!

உண்மைத்தமிழன் said...

///லோகு said...
அவருக்காக அடி வாங்கி இருக்கீங்க, நீங்க விஜயகாந்த்கிட்ட ஒரு எம்.பி சீட் கேட்டுருக்கலாம்..///

கேக்கலாம்தான்.. தருவாரான்றதுதான் கேள்வி..?!

உண்மைத்தமிழன் said...

///நையாண்டி நைனா said...

டக்ளஸ்....... said...
/*...... தியேட்டர்ல "வல்லவன்"பட டிக்கெட்.......... "இந்த படத்துக்காகவா அடி வாங்குனோம்"னு நினைச்சு நினைச்சு அழுகை வந்துருச்சுண்ணே ...*/

ஹும்ம்ம், நான் சிம்புவின் "குத்து"-லே வாங்குன குத்துதான்.. அதுக்கு அப்புறம் நான் எங்கேயும் "செம்பு" அப்படின்னுகூட சொல்றது இல்லை.///

அப்பாடி.. நான் தப்பிச்சேன்..

சிம்பு நடிச்ச ஒரு படத்தைக்கூட நான் முழுசா பார்த்ததில்லை..

அப்பப்ப டிவில பார்த்ததோட சரி..!

உண்மைத்தமிழன் said...

///நையாண்டி நைனா said...

/*இருப்பா.. இரு.. உங்கண்ணனுக்கு நான் ஒரு நாள் திருப்பிக் கொடுப்பேன்.. அப்ப வந்து பாரு..!*/

அப்ப நீங்க பாக்கிஸ்தான் தீவிரவாதியா?///

ஐயையோ... குசும்பனுக்கு அண்ணன், தம்பிகள்ன்னு நிறைய பேர் உருவாகிகிட்டே போறாங்களே..? தமிழ்மணம் தாங்குமா..?

Cable சங்கர் said...

ஓசி பிரியாணி சொன்ன கதை..

Venkatesh subramanian said...

தியேட்டர் ஓனரையே அடித்து, சட்டையைக் கிழித்தது தெரியுமா உங்களுக்கு..?
தெரியாது ஏன்னா ஒடி வந்த வேகம் அப்படி
இது பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன்..
கண்டிப்பாக எழுதுங்கள் ஆவலுடன் எதிர்பார்கிறேன்

உண்மைத்தமிழன் said...

//Cable Sankar said...
ஓசி பிரியாணி சொன்ன கதை..//

ஆமாம்.. பிரியாணியெல்லாம் அப்போ அதிகமா கைக்கு கிடைக்கிறதில்ல.. வருஷத்துக்கு ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ எப்பவாச்சும் யாராவது பிரெண்ட்ஸ்கூட போய் அவனுக வாங்கிக் குடுத்தாத்தான்.. அதனாலதான் கொஞ்சம் ஓவராகி பிச்சையெடுக்கக் கிளம்பிட்டேன்..!!!!

மணிஜி said...

பிரியாணிக்கு ஆசைபட்டார்.....
பிரித்து மேயப்பட்டார்..

அத்திரி said...

பிரியாணி சாப்பிடுறதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கீங்களே....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உண்மைத்தமிழன் said...

///Venkatesh subramanian said...
தியேட்டர் ஓனரையே அடித்து, சட்டையைக் கிழித்தது தெரியுமா உங்களுக்கு..?//

தெரியாது ஏன்னா ஒடி வந்த வேகம் அப்படி.. இது பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.. கண்டிப்பாக எழுதுங்கள் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.///

சொல்லிட்டீங்கள்.. எழுதிருவோம்.. ஜஸ்ட் வெயிட்..

உண்மைத்தமிழன் said...

///தண்டோரா said...

பிரியாணிக்கு ஆசைபட்டார்.....
பிரித்து மேயப்பட்டார்..///

ஹா... ஹா.. நல்ல டைமிங் ஜோக்கு தண்டோரா ஸார்.! (எனக்கும் ஒரு நேரம் வரும்)

உண்மைத்தமிழன் said...

///அத்திரி said...

பிரியாணி சாப்பிடுறதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கீங்களே....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.///

என்ன செய்யறது..? பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை வெறிச்சுப் பார்த்த மாதிரி..

பிரியாணி தேடி அலைஞ்சு தர்ம அடி கிடைச்சதுதான் பாக்கி..!

அது சரி(18185106603874041862) said...

ஏண்ணே, அடி வாங்கிறது நமக்கெல்லாம் புதுசா? இதுக்கு கோவிச்சிக்கிட்டு யார்னா பிரியாணி சாப்பிடாம வருவாங்களா?? அட போங்கண்ணே...

சீக்கிரமா கேப்டன் மகன் கல்யாணம் நடக்கும்...பழசையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு வராம இருந்துராதீங்க..எங்களுக்கு பிச்சி எடுக்க ச்சீ பிரியாணி சாப்பிட ஆள் வேணும்...

பி.கு. வரும்போதே ஒரு கால் செருப்புடன் வருதல் உத்தமம் :0))

துளசி கோபால் said...

இப்படியெல்லாமா ஆச்சு?????/

கிறைஸ்ட்சர்ச் விஜயகாந்தோட அடுத்தமுறை பிரியாணி சாப்புடுங்க( அடி வாங்காமல்)

அந்த சுப்ரீம் ஹொட்டேலுக்கு இன்னொரு பெருமையும் சமீபத்துலே கிடைச்சுருக்கு:-)

Bhuvanesh said...

//அப்புறம் யாருன்னு நினைச்ச..? ரசிகர்களாக இருப்பதால்தான் வந்திருக்காங்க. விசேஷத்துக்கு வந்தா சாப்பிடத்தான் சொல்வாங்க.. சாப்பிடச் சொன்னா சாப்பிடத்தான் செய்வாங்க..

இதுல என்ன ராசா குத்தம்..?
//

அய்யய்யோ.. குத்தம்னு யார் சொன்னா ?? பிரியாணி சாப்ட வந்த கூடத்தையும் ரசிகர்கள்னு சொல்லிடீங்களே? வெறும் பிரியாணிக்காக மட்டும் நிறைய பேர் போயிருபாங்கில்ல?

உண்மைத்தமிழன் said...

///அது சரி said...

ஏண்ணே, அடி வாங்கிறது நமக்கெல்லாம் புதுசா? இதுக்கு கோவிச்சிக்கிட்டு யார்னா பிரியாணி சாப்பிடாம வருவாங்களா?? அட போங்கண்ணே... சீக்கிரமா கேப்டன் மகன் கல்யாணம் நடக்கும்... பழசையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு வராம இருந்துராதீங்க.. எங்களுக்கு பிச்சி எடுக்க ச்சீ பிரியாணி சாப்பிட ஆள் வேணும்...
பி.கு. வரும்போதே ஒரு கால் செருப்புடன் வருதல் உத்தமம் :0))///

அது சரி தம்பி..! அது சரிதான்..!

கேப்டன் மகன் கல்யாணத்துக்காச்சும் மரியாதைக்கு ஒரு பத்திரிகை வருதான்னு பார்ப்போம்.. அப்பால போறத பத்தி யோசிப்போம்..!

உண்மைத்தமிழன் said...

///துளசி கோபால் said...
இப்படியெல்லாமா ஆச்சு?????/
கிறைஸ்ட்சர்ச் விஜயகாந்தோட அடுத்த முறை பிரியாணி சாப்புடுங்க( அடி வாங்காமல்)//

ஓ.. கண்டிப்பா.. அடுத்த தடவை உங்க ஊருக்கு வரும்போது ஒரு மாசத்துக்கு முன்னாடியே வயித்தைக் காயப் போட்டு வைச்சுக்குறேன்.. ஒரு வெட்டு வெட்டிரலாம்..!

//அந்த சுப்ரீம் ஹொட்டேலுக்கு இன்னொரு பெருமையும் சமீபத்துலே கிடைச்சுருக்கு:-)///

புரிஞ்சது ரீச்சர்..

சமீபத்தில் எங்களது வலையுலக ரீச்சரம்மா கால் வைத்ததனால் பெருமையடைந்துள்ளது மதுரை சுப்ரீம் ஹோட்டல்..

கரீக்ட்டா ரீச்சர்..?

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//அப்புறம் யாருன்னு நினைச்ச..? ரசிகர்களாக இருப்பதால்தான் வந்திருக்காங்க. விசேஷத்துக்கு வந்தா சாப்பிடத்தான் சொல்வாங்க.. சாப்பிடச் சொன்னா சாப்பிடத்தான் செய்வாங்க.. இதுல என்ன ராசா குத்தம்..?//

அய்யய்யோ.. குத்தம்னு யார் சொன்னா?? பிரியாணி சாப்ட வந்த கூடத்தையும் ரசிகர்கள்னு சொல்லிடீங்களே? வெறும் பிரியாணிக்காக மட்டும் நிறைய பேர் போயிருபாங்கில்ல?///

போகட்டுமே.. இதுல என்ன தப்பு இருக்கு..?

எத்தனை பேர் என்னை மாதிரி பிச்சைக்காரனா இருந்திருப்பாங்க.. சாப்பிடட்டுமே..

Unknown said...

//டக்ளஸு.. தங்கரீகல்ன்னு சொன்னவுடனேயே ஞாபகம் வந்திருச்சா..? பிட்டு படம்தான்.. பெயர் ஞாபகமில்லை..//

கோழி குருடா இருந்தா என்ன, குழம்பு ருசியா இருந்துச்சா?

Oceanhooks said...

Awesome article sir!
Thank you so much for this info on our Captain!
We the Captain fans are very thankful to you!
:)

Our FB fan page

உண்மைத்தமிழன் said...

[[[ராஜா said...

//டக்ளஸு.. தங்க ரீகல்ன்னு சொன்னவுடனேயே ஞாபகம் வந்திருச்சா..? பிட்டு படம்தான்.. பெயர் ஞாபகமில்லை..//

கோழி குருடா இருந்தா என்ன, குழம்பு ருசியா இருந்துச்சா?]]]

ஹி.. ஹி.. உண்மையை ஒத்துக்கிறதுல என்ன தயக்கம் வேண்டிக் கெடக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[micman said...
Awesome article sir! Thank you so much for this info on our Captain!
We the Captain fans are very thankful to you!:)
Our FB fan page ]]]

மிக்க நன்றிகள் நண்பரே..!

தன் கல்யாணத்தை ரசிகர்களுக்காகவே நடத்திய முதல் ஹீரோ அவர்தான்னு நினைக்கிறேன்..!