புரிந்து கொள்ளாத மாணவர்கள்..! பாவமான வைகோ..!

08-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற வார இட்லி-வடை பதிவில் சொன்னதுபோல ஈழத்தில் போர் நிறுத்தம் கோரியும், இயக்குநர் சீமானை விடுவிக்கக் கோரியும் மாணவர்களின் ரயில் பிரச்சாரப் பயணம் கொஞ்சம் சர்ச்சைகளுடன் நடந்து முடிந்தது.

06-04-2009 திங்கட்கிழமை இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனைத்து போராட்டக் குழு மாணவர்களும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களை வரவேற்க பல்வேறு மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகளும், இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக பல துணை இயக்குநர்களும் அங்கு சென்றிருந்தனர். நானும் போயிருந்தேன்.

ரயில் நிலையத்தின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு. எதிர்பார்த்ததுதான்.. ரயில் நிலையத்தின் உள்ளேயும் ரயில்வே போலீஸ் பாதுகாப்பு. ஆனாலும் சற்றுத் தொலைவில்தான் நின்றிருந்தார்கள். பல்வேறு குழுவினரும் ஈழம் பற்றியும், விடுதலைப்புலிகள் பற்றியும் பல்வேறு துண்டுப் பிரசுரங்களை பயணிகளிடமும், அங்கு நின்றிருந்தவர்களிடமும் கொடுத்தனர்.

ம.தி.மு.க.வின் தொண்டரணிப் படையினர் வந்தபோதே நினைத்தேன் நிச்சயம் வைகோ வருவார் என்று.. மாணவர்கள் பலரும் அவர்களையும் பார்த்தனர். வைகோ வருவதை ஊகித்துக் கொண்டனர். ரயில் வரும்போதே மாணவர்கள் கைகளில் இருந்த போஸ்டர்களையும், கொடிகளையும் உயர்த்தி கோஷமிட்டபடியே ஓடினர். ரயிலில் வந்த மாணவர்களும் பெட்டி வாசலில் நின்று கோஷமிட்டபடியே வந்தனர்.

அப்போதுதான் வைகோ வேகமாக வந்தார். மாணவர்கள் இறங்கி பரஸ்பரம் கை குலுக்கி நலம் விசாரித்துக் கொண்ட பின்பு வைகோ சிலரிடம் பேசினார். பலர் ஆர்வமாக அவருடன் கை குலுக்கினார்கள். திடீரென்று இடையில் இருந்த சில மாணவர்கள், “நாங்க யாரையும் கூப்பிடலையே..? அரசியல்வாதிகளே எங்களுக்கு வேணாம் ஸார்..” என்று வைகோ முன்பாகவே கத்தினார்கள்.

முன்னால் இருந்த மாணவர்கள் அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஏதோ பேசப் போக.. ஒட்டு மொத்தப் பயணிகள் கூட்டமும் வைகோவை கவனித்தது. வைகோ அந்தக் கூச்சலைக் கண்டு கொள்ளாமல் வந்த மாணவர்களை வரவேற்பதிலேயே குறியாக இருந்தார். புகைப்படம் எடுத்துக் கொள்ள வரிசைப்படுத்தும்படி வைகோ சொன்னதுதான் கொஞ்சம் சிக்கலை உண்டாக்கிவிட்டது..

“அதெப்படி நீங்க சொல்லலாம்..? எங்களுக்குத் தெரியாதா?” என்று சிலர் கத்த.. “வெளிய போ.. வெளிய போ..” என்று சிலர் கைகளை ஆட்டி கூச்சல் போட.. வைகோவுக்கு ஏற்பட்ட சங்கடம் அவர் முகத்திலேயே தெரிந்தது. பாவம் நெளிந்துதான் போனார். அவருடன் வந்தவர்கள் பதிலுக்கு எதையோ சொல்லப் போக.. அவ்வளவுதான் அந்த கோஷ கூட்டம் மொத்தமாக வைகோ மீது பாய்ந்தது.

இடையில் நுழைந்த சில அமைப்பின் நிர்வாகிகள்தான் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி நிறுத்தினார்கள். இந்தக் களேபரத்துக்கிடையில் உடனடியாக தான் வெளியேற வேண்டும் என்று நினைத்த வைகோ.. பேசவும் தொடங்கினார்.

தான் அரசியல் காரணத்துக்காக இங்கு வரவில்லை எனவும், ஈழத்திற்காக எந்த வகைப் போராட்டம் நடந்தாலும் தான் அதற்கு முன்னால் நிற்பேன்.. ஆதரவு தருவேன் என்று வேகவேகமாகப் பேசினார். அவர் பேசியதே கேட்காத அளவுக்கு அந்த இடத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

வைகோ பேச்சை முடித்துவிட்டு விடைபெறுவதைப் போல் கை அசைத்துவிட்டு வேகமாக வெளியேறினார். வெளிறிய முகத்துடன் வைகோ வெளியேறிய வேகம் அங்கிருந்தோரை கொஞ்சம் கவலைப்படத்தான் வைத்தது.

முதலில் மாணவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கை ஓசையைவிட இரு கை ஓசைக்கு பலம் அதிகம். ஒரு குறிக்கோளை நாம் கையில் எடுத்துக் கொண்டுவிட்டால், அதற்குத் துணையாக யார் வருகிறார்களோ, ஒத்தக் கருத்துடன் யார் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் இணைத்துக் கொண்டு தங்களது போராட்டத்துக்கு வலுவுண்டாக்க வேண்டும். அதுதான் போராட்டம் வெற்றி பெற கிடைக்கும் வழி..

இப்போது வைகோவை மட்டும் குற்றம் சொல்லி புண்ணியமில்லை. இங்கே வந்தால் என்ன நடக்கும் என்பது தெரிந்துதான் திருமாவளவன் வரவில்லை.. ராமதாஸ் வரவில்லை.. எப்படியும் பிரச்சினையாகும் என்று தெரிந்தும் வைகோ வந்தது நிச்சயம் பாராட்டுக்குரியதுதான்..

அவர் கால் வைத்திருக்கும் அரசியல் என்னும் சாக்கடையில் நீந்த வேண்டுமெனில் அவரும் சில விட்டுக் கொடுத்தல்களை அவரை நம்பியிருக்கும் தொண்டர்களுக்காக செய்யத்தான் வேண்டும். அவர் நிலையில் இருந்து பார்த்தால் அவர் கஷ்டம் தெரியும். அவருடைய கண்மூடித்தனமான புலி ஆதரவு நிலை எனக்குப் பிடிக்கவில்லை. அதே சமயம் அரசியல் ரீதியாக அவர் எடுத்திருக்கும் சில முடிவுகளும் பிடிக்கவில்லைதான். ஆனால் என்ன செய்ய..? அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்..?

ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் அவர் புலி ஆதரவு கோஷத்தையோ, அல்லது ஈழ ஆதரவு கோஷத்தையோ அவர் ஒருபோதும் நிறுத்தியதில்லை. நிறுத்தப் போவதுமில்லை. இப்படியிருக்க அவருடைய தற்போதைய அரசியல் நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல் அவருடைய ஆதரவையும் கேட்டுப் பெற்று அதன் மூலம் ஈழத்திற்கான போராட்ட ஆதரவை வலுவடையச் செய்வதுதான் மாணவர்களின் அறிவுப்பூர்வமான செயலாக இருக்க வேண்டும்.

முத்துக்குமார் மரணத்தின்போதும் இப்படித்தான் சில மாணவர்கள் நடந்து கொண்டார்கள். நெடுமாறன், வைகோ, திருமாவளவன், வெள்ளையன் என்று அந்த நிகழ்ச்சிக்காக உழைத்த பலரையும் வேதனைப்பட வைத்தார்கள். அவமானப்படுத்தினார்கள்.

அன்றைய நிலைமையில் இந்தத் தலைவர்கள் மட்டும் வராமல் போயிருந்தால், நிச்சயம் பெரும் கலவரமே நடந்து தமிழகத்து மக்கள் மத்தியில் ஈழப் போராட்டம் குறித்து எதிர்மறையான கருத்துக்கள்தான் தோன்றியிருக்கும். தலைவர்கள் இருக்கிறார்கள்.. கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்திருக்கிறார்கள்.. பத்திரிகையாளர்கள் எப்போதும் உடன் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்துதான் அன்றைக்கு காவல்துறை கொஞ்சம் அமைதி காத்திருந்தது. இல்லாவிடில் உயர்நீதிமன்றத்தில் நடந்த வரலாறு காணாத கலவரம் இரண்டாவது இடத்தைத்தான் பிடித்திருக்கும்.

நிலைமைக்கேற்றாற் போல் நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.. இப்படி போராட்டத்தை ஆதரிக்கும் பலரையும் குற்றம் சொல்லிக் கொண்டே போனால் கடைசியில் இந்த ஈழப் போராட்டத்திற்கான ஆதரவை தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் பாதுகாப்புப் பிரதேசத்தில் சிக்கிக் கொண்டுள்ள ஈழத்து மக்கள்தான் ஓடி வந்து ஆதரவு தர வேண்டும். வேறு யாரும் வர முடியாது.

அன்றைக்குக்கூட வெளியில் காவல்துறை.. உள்ளே ரயில்வே படை என அனைவரும் தயார் நிலையில்தான் இருந்தார்கள். வைகோ வருகிறார் என்ற பின்புதான் ரயில்வே படை சற்றுப் பின் வாங்கி ஓரமாகப் போய் நின்றிருந்தார்கள். அவர் இருக்கின்றபோது எழுந்த சலசலப்பைக்கூட வேடிக்கை பார்த்த ரயில்வே போலீஸ் அவர் போன பின்புதான் மெல்ல, மெல்ல அருகில் வந்தது.

யாருமே வேண்டாம்.. நாங்களே பார்த்துக் கொள்வோம்.. நாங்களே ஜெயித்துக் காட்டுகிறோம் என்று சொல்வதற்கு இதென்ன கபடி விளையாட்டா..? ஏழு பேர் மட்டும் நின்று விளையாடி ஜெயிப்பதற்கு..?

அத்தனை கட்சியினரையும், அனைத்துத் தரப்பு மக்களையும், அத்தனை பிரிவு சமூகத்தினரையும் ஒன்றிணைத்து போராடத்தை வலுவாக்கி உலக சமுதாயத்தை நம் பக்கம் திருப்பினால்தான் இது ஒரு வெற்றி போராட்டமாகும்.

நேற்று முதல் லண்டன்வாழ் தமிழர்கள் இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அது அந்நாட்டு தமிழர்களின் ஒருங்கிணைந்த போராட்டம்.. இப்போது பல்வேறு நாடுகளிலும் ஒரே சமயத்தில் உலகத் தலைவர்களை ஈர்க்க வேண்டும் என்றெண்ணி போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சமயத்தில், நம் விரலை வைத்து நம் கண்ணை நாமே குத்திக் கொள்ளும் இந்த முட்டாள்தனத்திற்கு மாணவர் அமைப்பினர் இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

62 comments:

முத்துகுமரன் said...

உண்மையான வார்த்தைகள் உண்மைத் தமிழன். செறிவான அதேசமயம் தெளிவான கருத்துகள். ஈகோ அல்ல இப்போதய பிரச்சனை, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டிய தருணம். சுய விருப்பு வெறுப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தேளோடு தோள் சேர்க்க வேண்டும். நாயக மனப்பான்மையை விட்டுவிட்டு எதார்த்தத்தோடு போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே வெல்ல முடியும்.

முதன் முறையாக உங்கள் எழுத்தை வாழ்த்துகிறேன், வழிம்மொழிகிறேன்

பதி said...

இன்றைய தேவையை உணர்த்தும் ஒரு அவசியமன பதிவு...

//யாருமே வேண்டாம்.. நாங்களே பார்த்துக் கொள்வோம்.. நாங்களே ஜெயித்துக் காட்டுகிறோம் என்று சொல்வதற்கு இதென்ன கபடி விளையாட்டா..? ஏழு பேர் மட்டும் நின்று விளையாடி ஜெயிப்பதற்கு..?//

இணையம் வழியாக செய்தியை படித்துவிட்டு சிலர் இப்படித் தான் நினைப்பதாக எண்ணத் தோன்றுகிறது. இது போன்ற 'புதுப் போரட்டக்காரர்களின்' உணர்ச்சி பிரவாகத்தை ஓர்குட்டில் ஏராளமாய் காணலாம். :(

//நிலைமைக்கேற்றாற் போல் நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.. இப்படி போராட்டத்தை ஆதரிக்கும் பலரையும் குற்றம் சொல்லிக் கொண்டே போனால் கடைசியில் இந்த ஈழப் போராட்டத்திற்கான ஆதரவை தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் பாதுகாப்புப் பிரதேசத்தில் சிக்கிக் கொண்டுள்ள ஈழத்து மக்கள்தான் ஓடி வந்து ஆதரவு தர வேண்டும். வேறு யாரும் வர முடியாது.//

இதை வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது.

இங்கு (ஐரோப்பாவில்) நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களில் ஏற்படும் சிற்சிறு பிரச்சனைகளின் போது கைது செய்யப்படுகின்றவர்களுக்கு போரட தமிழ் அமைப்புகள் இருக்கின்றன. அதுவில்லாமல், இங்கு காவல்துறை போராட்டக்காரர்களை கையாளும் முறையை தமிழகத்திலோ/இந்தியாவிலோ எதிர்பார்க்காதீர்கள்.

இப்படி உணர்ச்சிவசப்பட்டு வசப்பட்டு முடிவெடுத்து தான் நமது தமிழர்களின் நிலை இன்று வீதிகளில் இறங்கி போரட வேண்டிய நிலையில் உள்ளது என்பதை என்று இது போன்ற 'புதுப் போராட்டக்காரர்கள்' உணரப் போகின்றனரோ??? :(


//முதலில் மாணவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கை ஓசையைவிட இரு கை ஓசைக்கு பலம் அதிகம். ஒரு குறிக்கோளை நாம் கையில் எடுத்துக் கொண்டுவிட்டால், அதற்குத் துணையாக யார் வருகிறார்களோ, ஒத்தக் கருத்துடன் யார் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் இணைத்துக் கொண்டு தங்களது போராட்டத்துக்கு வலுவுண்டாக்க வேண்டும். அதுதான் போராட்டம் வெற்றி பெற கிடைக்கும் வழி..//

இது மாணவர்களுக்கு மட்டுமல்ல தமிழர் நலனை காக்க போரட வரும் ஒவ்வொரு அமைப்பினருக்கும் பொருந்தும்.

www.mdmkonline.com said...

சரியாக எட்டு மன்னிக்கு வரவேண்டிய குருவாயூர் புகைவண்டி கால தாமதமாக ஒன்பது மணி பக்கத்தில் வந்தது.

எட்டு மணி முதல் வைகோ அவர்கள் கால் கடுக்க காட்திருண்டார்கள் . நாங்கள் அவர்களிடம் கூட கேட்டோம்

"எவ்வளவோ பிரச்சினைகள் தொகுதி பங்கீட்டில் உள்ளது . உங்களுக்காக தாயகத்தில் கிட்டத்தட்ட நூறு பேர் காத்திருக்கிறார்கள் நீங்கள் இங்கே வரும் யார் என்று தெரியாத மாணவர்களுக்காக காதிருக்க்ரீர்கலே "

"வருவது யார் என்பது முக்கியம் இல்லை , இன்று எனக்கு வந்த செய்தி (லண்டன் லிருந்து) அங்கே (ஈழத்தில்)இன்னும் சில நாட்களில் அனைத்து தமிழர்களையும் கொல்ல எல்லா வேலைகளையும் இந்தியாவும் இலங்கை அரசாங்கமும் சேர்ந்து செய்துவிட்டது , அவர்களுக்காக அவர்களின் ஆதரவிற்காக வரும் எந்த குரலும் , அது யாராக இருந்தாலும் அவர்களை உற்சாக படுத்த வேண்டும் . அதற்காகத்தான் வந்தேன் " என்றார்.

http://www.mdmkonline.com/news/latest/students_at_railway_statation.html

இராகவன் நைஜிரியா said...

// முதலில் மாணவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கை ஓசையைவிட இரு கை ஓசைக்கு பலம் அதிகம். //

சரியாகச் சொன்னீர்கள். தனிமரம் தோப்பாகாது. அதிலும், மற்றவர்கள் வரத் தயங்கிய நேரத்தில் இவர் வந்துள்ளார் என்பதே பெரிய விசயம்.

நீங்க கூறிய அனைத்து கருத்தும் சரியானது.

வெத்து வேட்டு said...

did this Vaiko say that there would be a blood bath in TN if Praba was killed in Srilanka?
if that is true what kind of moronic statement is that?
who is Vaiko going to kill?
DMK? ADMK? Congress? Brahmins?
or is he going to tell his supporters to commit group suicide?
or he is planning on setting fire to buses and trains?
:)

இமயவரம்பன் said...

// நேற்று முதல் லண்டன்வாழ் தமிழர்கள் இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அது அந்நாட்டு தமிழர்களின் ஒருங்கிணைந்த போராட்டம்...//

பிரித்தானியாவில் 3 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்! காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாதுஅங்கு 5 அம்சக் கோரிக்கைகளுடன் இருவர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தை தொடக்கியுள்ளனர்!

ஷண்முகப்ரியன் said...

முத்துகுமரன் said...

வாழ்த்துகிறேன், வழிம்மொழிகிறேன்//

நானும் சரவ்ணன்.

சொல்லரசன் said...

//“அதெப்படி நீங்க சொல்லலாம்..? எங்களுக்குத் தெரியாதா?” //

பெருபான்மையான மாணவர்கள் கேட்கும் கேள்வி இது,சில சமயங்களில் இவர்களை வழிநடத்தும் தலைமையை இந்த கேள்விகளால் வெறுப்புற செய்து
போராட்டத்தை பலவீனபடுத்தி விடுகிறார்கள்.

Tamilan said...

//யாருமே வேண்டாம்.. நாங்களே பார்த்துக் கொள்வோம்.. நாங்களே ஜெயித்துக் காட்டுகிறோம் என்று சொல்வதற்கு இதென்ன கபடி விளையாட்டா..? ஏழு பேர் மட்டும் நின்று விளையாடி ஜெயிப்பதற்கு..?//
வைகோ ஒரு சிறந்த தலைவர் அவரை மாணவர்கள் அவரின் திறமையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

V.RAMACHANDRAN said...

Dear Truetamilan very good article It is true.
Thanks,
V.Ramachandran
Singapore

Tamilan said...

//யாருமே வேண்டாம்.. நாங்களே பார்த்துக் கொள்வோம்.. நாங்களே ஜெயித்துக் காட்டுகிறோம் என்று சொல்வதற்கு இதென்ன கபடி விளையாட்டா..? ஏழு பேர் மட்டும் நின்று விளையாடி ஜெயிப்பதற்கு..?//
வைகோ ஒரு சிறந்த தலைவர் அவரை மாணவர்கள் அவரின் திறமையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

V.RAMACHANDRAN said...

Dear Truetamilan very good article It is true.
Thanks,
V.Ramachandran
Singapore

Chellamuthu Kuppusamy said...

தெளிவாக அணுகியிருக்கிறீர்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தன் அரசியல் எதிர்காலத்தையே அழித்துக் கொண்டவர் வைகோ என்பதில் சந்தேக மில்லை.

கருணாநிதியைப் பிடிக்காத பத்திரிக்கைகள் - குறிப்பாக இந்து & தினமலர் - வைகோவை (எம்ஜிஆரைப் போல) எங்கோ கொண்டு போய் வைத்திருக்கும். அப்படி நடக்காமல் போனதற்கு அவருடைய புலி ஆதரவு நிலைப்பாடு முக்கியமான காரணம் என்று கருதுகிறேன்.

அரசியல் ரீதியாக இனிமேல் பெரிய சக்தியாக வைகோவும், மதிமுகவும் இருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அரசியல் செய்வதற்கு குறைந்த பட்சம் மக்கள் தொலைக்காட்சி கூட அவரிடம் கிடையாது.

எனினும் தமிழக அரசியல் மற்றும் சமூகக் களத்தில் வைகோ அவசியமான சக்தி.

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலமாகட்டும், இப்போது எழும்பூர் ரயில் நிலையம் ஆகட்டும்.. நீங்கள் முன்னால் போய் நிற்கிறீர்களே.. அதற்கும் நன்றி.

ரிஷி (கடைசி பக்கம்) said...

Dear Unmaithamizhan,

I accept each and every word which u said.

Same time on Vaiko no body blame him in Eelam issue.

We don't have unity and tolerance

:-(

அது ஒரு கனாக் காலம் said...

இது நமக்கு சம்மந்தமில்லாத பிரச்சனை என்று நினைப்பவர்கள் கூட , நாம் கூட எதாவுது செய்யலாமே என்று யோசிக்க தூண்டும் பதிவு. ..வாழ்த்துகள்

Suresh said...

அருமையான பதிவு

உண்மைத்தமிழன் said...

//முத்துகுமரன் said...
உண்மையான வார்த்தைகள் உண்மைத் தமிழன். செறிவான அதேசமயம் தெளிவான கருத்துகள். ஈகோ அல்ல இப்போதய பிரச்சனை, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டிய தருணம். சுய விருப்பு வெறுப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தேளோடு தோள் சேர்க்க வேண்டும். நாயக மனப்பான்மையை விட்டுவிட்டு எதார்த்தத்தோடு போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே வெல்ல முடியும்.

முதன் முறையாக உங்கள் எழுத்தை வாழ்த்துகிறேன், வழிமொழிகிறேன்//

முதன்முறையாக எனது தளத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணராததால்தான் ஈழப் பிரச்சினை இவ்வளவு நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை ஈழத்துப் போராளிகளும் அறியவில்லை. தமிழகத்து போராளிகளும் உணர மறுக்கிறார்கள்.

இவர்கள் இதனைப் புரிந்து கொண்டு, செயலாற்றினால் மட்டுமே இந்த விஷயத்தில் வெற்றி கிடைக்கும்.. இல்லையேல் துயரம்தான்.. இதைச் சொல்வதற்கு கொஞ்சம் கூச்சமாகவும், தயக்கமாகவும்தான் உள்ளது. ஆனாலும் என்ன செய்ய..? உண்மை நிலவரம் இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

//பதி said...
இன்றைய தேவையை உணர்த்தும் ஒரு அவசியமன பதிவு...

//யாருமே வேண்டாம்.. நாங்களே பார்த்துக் கொள்வோம்.. நாங்களே ஜெயித்துக் காட்டுகிறோம் என்று சொல்வதற்கு இதென்ன கபடி விளையாட்டா..? ஏழு பேர் மட்டும் நின்று விளையாடி ஜெயிப்பதற்கு..?//

இணையம் வழியாக செய்தியை படித்துவிட்டு சிலர் இப்படித் தான் நினைப்பதாக எண்ணத் தோன்றுகிறது. இது போன்ற 'புதுப் போரட்டக்காரர்களின்' உணர்ச்சி பிரவாகத்தை ஓர்குட்டில் ஏராளமாய் காணலாம். :(

//நிலைமைக்கேற்றாற் போல் நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.. இப்படி போராட்டத்தை ஆதரிக்கும் பலரையும் குற்றம் சொல்லிக் கொண்டே போனால் கடைசியில் இந்த ஈழப் போராட்டத்திற்கான ஆதரவை தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் பாதுகாப்புப் பிரதேசத்தில் சிக்கிக் கொண்டுள்ள ஈழத்து மக்கள்தான் ஓடி வந்து ஆதரவு தர வேண்டும். வேறு யாரும் வர முடியாது.//

இதை வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது.

இங்கு (ஐரோப்பாவில்) நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களில் ஏற்படும் சிற்சிறு பிரச்சனைகளின் போது கைது செய்யப்படுகின்றவர்களுக்கு போரட தமிழ் அமைப்புகள் இருக்கின்றன. அதுவில்லாமல், இங்கு காவல்துறை போராட்டக்காரர்களை கையாளும் முறையை தமிழகத்திலோ/இந்தியாவிலோ எதிர்பார்க்காதீர்கள்.

இப்படி உணர்ச்சிவசப்பட்டு வசப்பட்டு முடிவெடுத்து தான் நமது தமிழர்களின் நிலை இன்று வீதிகளில் இறங்கி போரட வேண்டிய நிலையில் உள்ளது என்பதை என்று இது போன்ற 'புதுப் போராட்டக்காரர்கள்' உணரப் போகின்றனரோ??? :(


//முதலில் மாணவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கை ஓசையைவிட இரு கை ஓசைக்கு பலம் அதிகம். ஒரு குறிக்கோளை நாம் கையில் எடுத்துக் கொண்டுவிட்டால், அதற்குத் துணையாக யார் வருகிறார்களோ, ஒத்தக் கருத்துடன் யார் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் இணைத்துக் கொண்டு தங்களது போராட்டத்துக்கு வலுவுண்டாக்க வேண்டும். அதுதான் போராட்டம் வெற்றி பெற கிடைக்கும் வழி..//

இது மாணவர்களுக்கு மட்டுமல்ல தமிழர் நலனை காக்க போரட வரும் ஒவ்வொரு அமைப்பினருக்கும் பொருந்தும்.
//

நன்றி பதி அவர்களே..

ஒற்றுமையே நமது பலம் என்பதை நாம் உணர்ந்தால்தான் வெற்றி நமக்குக் கிடைக்கும்..

மாணவர்கள்.. இள ரத்தமாக இருப்பதால்.. பல்வேறு அமைப்புகளாக பிரிந்து கிடப்பதால் ஒருங்கிணைப்பது மிகவும் கடினமாக உள்ளது.

உண்மைத்தமிழன் said...

//சங்கொலி said...
சரியாக எட்டு மன்னிக்கு வரவேண்டிய குருவாயூர் புகைவண்டி கால தாமதமாக ஒன்பது மணி பக்கத்தில் வந்தது.

எட்டு மணி முதல் வைகோ அவர்கள் கால் கடுக்க காட்திருண்டார்கள் . நாங்கள் அவர்களிடம் கூட கேட்டோம்

"எவ்வளவோ பிரச்சினைகள் தொகுதி பங்கீட்டில் உள்ளது . உங்களுக்காக தாயகத்தில் கிட்டத்தட்ட நூறு பேர் காத்திருக்கிறார்கள் நீங்கள் இங்கே வரும் யார் என்று தெரியாத மாணவர்களுக்காக காதிருக்க்ரீர்கலே "

"வருவது யார் என்பது முக்கியம் இல்லை , இன்று எனக்கு வந்த செய்தி (லண்டன் லிருந்து) அங்கே (ஈழத்தில்)இன்னும் சில நாட்களில் அனைத்து தமிழர்களையும் கொல்ல எல்லா வேலைகளையும் இந்தியாவும் இலங்கை அரசாங்கமும் சேர்ந்து செய்துவிட்டது , அவர்களுக்காக அவர்களின் ஆதரவிற்காக வரும் எந்த குரலும் , அது யாராக இருந்தாலும் அவர்களை உற்சாக படுத்த வேண்டும் . அதற்காகத்தான் வந்தேன் " என்றார்.

http://www.mdmkonline.com/news/latest/students_at_railway_statation.html//

வருகைக்கு மிக்க நன்றி சங்கொலி..

உடன் வருகிறேன் என்று சொன்ன நண்பர்கள் 9 மணிக்குத்தான் டிரெயின் வருது என்று சொன்னதால்நானும் சற்றுத் தாமதமாகவேதான் வந்தேன். அதுதான் வைகோ அங்கு ஏற்கெனவே வந்து காத்திருந்ததை அறிய முடியவில்லை.. மன்னிக்கவும்..

உண்மைத்தமிழன் said...

///இராகவன் நைஜிரியா said...
// முதலில் மாணவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கை ஓசையைவிட இரு கை ஓசைக்கு பலம் அதிகம். //

சரியாகச் சொன்னீர்கள். தனிமரம் தோப்பாகாது. அதிலும், மற்றவர்கள் வரத் தயங்கிய நேரத்தில் இவர் வந்துள்ளார் என்பதே பெரிய விசயம்.

நீங்க கூறிய அனைத்து கருத்தும் சரியானது.///

ரொம்பச் சரி ராகவன் ஸார்..

மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே..?!

உண்மைத்தமிழன் said...

//வெத்து வேட்டு said...
did this Vaiko say that there would be a blood bath in TN if Praba was killed in Srilanka?
if that is true what kind of moronic statement is that?
who is Vaiko going to kill?
DMK? ADMK? Congress? Brahmins?
or is he going to tell his supporters to commit group suicide?
or he is planning on setting fire to buses and trains?
:)//

ஐயா வெத்துவேட்டு..

புலி எதிர்ப்பு என்ற ஒன்றை வைத்துக் கொண்டுதான் ராஜபக்சே அரசு தந்திரமாக தமிழ் இனத்தை இந்திய அரசின் உதவியுடன் தீர்த்துக் கட்டி வருகிறது.. புரிந்து கொள்ளுங்கள்.. நானும் உங்களைப் போன்ற புலி எதிர்ப்பாளன்தான்.. ஆனால் சூழ்நிலைக்கேற்றாற்போல் நடந்து கொள்ள வேண்டும்.
முதலில் நமக்குத் தேவை சுதந்திரம். பின்பு நமது குடும்பப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம்..

Bhuvanesh said...

நல்ல பதிவு அண்ணே.. மாணவர்கள் என்னதான் இங்கே போராட்டாம் நடத்தினாலும், இலங்கையை நிர்பந்திக்க அரசியல்வாதிகள் தான் வேண்டும்.. அவர்களை தவிர்த்து போராட்டம் முழுமை அடையாது..

Anonymous said...

//முத்துக்குமாரின் இறுதி ஊர்வலமாகட்டும், இப்போது எழும்பூர் ரயில் நிலையம் ஆகட்டும்.. நீங்கள் முன்னால் போய் நிற்கிறீர்களே.. அதற்கும் நன்றி.//

உளப்பூர்வ்மாக வழிமொழிகிறேன். உங்களிடமிருந்து நேரடியாகக் கேட்டு அறிந்து கொள்வது நம்பகத் தன்மையை கூட்டுகிறது.

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!!

பதி said...

Chellamuthu Kuppusamy said...

//கருணாநிதியைப் பிடிக்காத பத்திரிக்கைகள் - குறிப்பாக இந்து & தினமலர் - வைகோவை (எம்ஜிஆரைப் போல) எங்கோ கொண்டு போய் வைத்திருக்கும். அப்படி நடக்காமல் போனதற்கு அவருடைய புலி ஆதரவு நிலைப்பாடு முக்கியமான காரணம் என்று கருதுகிறேன்.//

உண்மை...

ஆனால், //எனினும் தமிழக அரசியல் மற்றும் சமூகக் களத்தில் வைகோ அவசியமான சக்தி.//

என்று எழுதிவிட்டு, வைகோ (மதிமுக)வின் எதிர்காலத்தைப் பற்றி கீழ்கண்ட முறையில் கணித்து சொல்வது எதற்காக??

//அரசியல் ரீதியாக இனிமேல் பெரிய சக்தியாக வைகோவும், மதிமுகவும் இருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அரசியல் செய்வதற்கு குறைந்த பட்சம் மக்கள் தொலைக்காட்சி கூட அவரிடம் கிடையாது.//

???

தீப்பெட்டி said...

தங்களின் கருத்து எப்போதும் போல தெளிவாக இருந்தது.

யாராக இருந்தாலும் பிரச்னையை வெளியில் இருந்து பார்க்க பழகி கொள்ளவேண்டும்.

உண்மையான உறுதி, தெளிவோடு அணுகப்படும் போதே உருவாகிறது.
வெற்று கூச்சல் கதைக்குதவாது. விரக்தியில் போய் கொண்டுவிடும்.

நன்றி உண்மை சார், இன்றும் ஈழ பிரச்னையை முதன்மை படுத்துவதற்கு.....

Chellamuthu Kuppusamy said...

//என்று எழுதிவிட்டு, வைகோ (மதிமுக)வின் எதிர்காலத்தைப் பற்றி கீழ்கண்ட முறையில் கணித்து சொல்வது எதற்காக??
//
அதுதான் நடைமுறை எதார்த்தம்! மீடியா மற்றும் பண பலமின்றி இங்கே அரசியலில் நிற்க முடியாது.

www.mdmkonline.com said...

நண்பர் பதிக்கு :-

மதிமுக சார்பில் தொலைகாட்சி


http://www.mdmkonline.com/news/latest/mdmk_to_host_party_tv.ஹ்த்ம்ல்

மதிமுக நான்கு தொகுதிகளில் போட்டி அவை : விருதுநகர், நீலகிரி , ஈரோடு, தஞ்சை.

அடுத்த முக்கிய அறிவிப்பு :
மதிமுக சார்பில் தொலைகாட்சி ஆரம்பிக்க போகிறார்கள். வைகோ அவர்கள் அதிகப்படியான கரவோசை மத்தியில் இதை அறிவித்தார்கள்.

உண்மைத்தமிழன் அவர்களுக்கு :
மிக நல்ல பதிவு . மிக்க நன்றி.

எனது பதிலையும் போட்டதற்காக மீண்டும் ஒரு நன்றி.

நட்புடன்
தோழர்.

உண்மைத்தமிழன் said...

///இமயவரம்பன் said...
// நேற்று முதல் லண்டன்வாழ் தமிழர்கள் இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அது அந்நாட்டு தமிழர்களின் ஒருங்கிணைந்த போராட்டம்...//

பிரித்தானியாவில் 3 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்! காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாது அங்கு 5 அம்சக் கோரிக்கைகளுடன் இருவர் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை தொடக்கியுள்ளனர்!///

உலகம் முழுவதுமே போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க தாய்த்தமிழகத்தில் பணக் கொண்டாட்டம்தான் நடந்து கொண்டிருக்கிறது.

வழக்கம்போல மத்திய, மாநில அரசுகள் சப்பைக் கட்டுக் கட்டிக் கொண்டிருக்கின்றன.

கலைஞர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சிதம்பரத்திற்கு தந்தி கொடுத்தாராம்.. சோனியாவுக்கு கடிதம் அனுப்பினாராம்..

பாவம் இவர்கள் இருவரும் சந்திர மண்டலத்தில் இருக்கிறார்கள் பாருங்கள்..

என்ன பொழப்பு இது..? கேவலமா இருக்கு..?!!!!!!!!!!!

உண்மைத்தமிழன் said...

///ஷண்முகப்ரியன் said...
முத்துகுமரன் said...
வாழ்த்துகிறேன், வழிமொழிகிறேன்//
நானும் சரவ்ணன்.///

வணங்குகிறேன்.. நன்றி தெரிவிக்கிறேன்..

நீங்கள் ஏற்கெனவே சரவணன்தானே.. எனக்குத் தெரியுமே..? ))))))))))

உண்மைத்தமிழன் said...

///சொல்லரசன் said...
//“அதெப்படி நீங்க சொல்லலாம்..? எங்களுக்குத் தெரியாதா?” //

பெருபான்மையான மாணவர்கள் கேட்கும் கேள்வி இது, சில சமயங்களில் இவர்களை வழி நடத்தும் தலைமையை இந்த கேள்விகளால் வெறுப்புற செய்து
போராட்டத்தை பலவீனபடுத்தி விடுகிறார்கள்.///

உண்மை சொல்லரசன்..

இவர்களின் அதீத ஆர்வம் மற்றும் கட்டுப்படாத குணத்தில் போராட்டத்திற்கு பின்னடைவுதான் ஏற்படுகிறது..!

உண்மைத்தமிழன் said...

///Tamilan said...
//யாருமே வேண்டாம்.. நாங்களே பார்த்துக் கொள்வோம்.. நாங்களே ஜெயித்துக் காட்டுகிறோம் என்று சொல்வதற்கு இதென்ன கபடி விளையாட்டா..? ஏழு பேர் மட்டும் நின்று விளையாடி ஜெயிப்பதற்கு..?//

வைகோ ஒரு சிறந்த தலைவர். அவரை மாணவர்கள் அவரின் திறமையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.///

தமிழன் ஸார்..

எனது கருத்தும் இதுதான்.. புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டுமே..!

உண்மைத்தமிழன் said...

//V.RAMACHANDRAN said...
Dear Truetamilan very good article It is true.
Thanks,
V.Ramachandran
Singapore//

நன்றிகள் ஸார்..! இன்றைய தமிழக அரசியலின் யதார்த்த நிலைமை இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

///Chellamuthu Kuppusamy said...
தெளிவாக அணுகியிருக்கிறீர்கள். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தன் அரசியல் எதிர்காலத்தையே அழித்துக் கொண்டவர் வைகோ என்பதில் சந்தேக மில்லை. கருணாநிதியைப் பிடிக்காத பத்திரிக்கைகள் - குறிப்பாக இந்து & தினமலர் - வைகோவை (எம்ஜிஆரைப் போல) எங்கோ கொண்டு போய் வைத்திருக்கும். அப்படி நடக்காமல் போனதற்கு அவருடைய புலி ஆதரவு நிலைப்பாடு முக்கியமான காரணம் என்று கருதுகிறேன். அரசியல் ரீதியாக இனிமேல் பெரிய சக்தியாக வைகோவும், மதிமுகவும் இருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அரசியல் செய்வதற்கு குறைந்தபட்சம் மக்கள் தொலைக்காட்சிகூட அவரிடம் கிடையாது. எனினும் தமிழக அரசியல் மற்றும் சமூகக் களத்தில் வைகோ அவசியமான சக்தி.///

உண்மைதான் செல்லமுத்து ஸார்..

அவருடைய மிகப் பெரிய பலவீனம் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுப்பது.

இரண்டாவது பாட்டாளி மக்கள் கட்சியைப் போல் கிடைத்த வாய்ப்பை வைத்து கட்சியை வளர்க்க நினைக்காமல் விட்டுவிட்டது.. இதற்காக இப்போது வைகோ வருந்துவார் என்று நினைக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

//கடைசி பக்கம் said...
Dear Unmaithamizhan, I accept each and every word which u said. Same time on Vaiko nobody blame him in Eelam issue. We don't have unity and tolerance:-(//

நமது போராட்டம் நீர்த்துப் போனமைக்குக் காரணமே நம்மிடையே இருக்கும் ஒற்றுமையின்மைதான்..

சரி.. அதென்ன கடைசிப் பக்கம்.. பெயரே வித்தியாசமாக இருக்கிறதே..?

உண்மைத்தமிழன் said...

//அது ஒரு கனாக் காலம் said...
இது நமக்கு சம்மந்தமில்லாத பிரச்சனை என்று நினைப்பவர்கள்கூட, நாம்கூட எதாவுது செய்யலாமே என்று யோசிக்க தூண்டும் பதிவு. வாழ்த்துகள்.//

ஏதாவது செய்தாக வேண்டும் ஸார்..

நம்மால் முடிந்த ஆதரவை வழங்க வேண்டுமே என்னும்போது நிகழும் இது போன்ற தடங்கல்கள் மனதிற்கு வருத்தத்தைத் தருகிறது..!

உண்மைத்தமிழன் said...

//Suresh said...
அருமையான பதிவு//

நன்றி சுரேஷ்..

உண்மைத்தமிழன் said...

//Bhuvanesh said...
நல்ல பதிவு அண்ணே.. மாணவர்கள் என்னதான் இங்கே போராட்டாம் நடத்தினாலும், இலங்கையை நிர்பந்திக்க அரசியல்வாதிகள்தான் வேண்டும்.. அவர்களை தவிர்த்து போராட்டம் முழுமை அடையாது..//

இதைத்தான் நானும் சொல்கிறேன் புவனேஷ்..

உண்மைத்தமிழன் said...

///ஆசிப் மீரான் said...
//முத்துக்குமாரின் இறுதி ஊர்வலமாகட்டும், இப்போது எழும்பூர் ரயில் நிலையம் ஆகட்டும்.. நீங்கள் முன்னால் போய் நிற்கிறீர்களே.. அதற்கும் நன்றி.//

உளப்பூர்வ்மாக வழிமொழிகிறேன். உங்களிடமிருந்து நேரடியாகக் கேட்டு அறிந்து கொள்வது நம்பகத்தன்மையை கூட்டுகிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!!///

நன்றி அண்ணாச்சி..

எனக்கு நேரமும், ஆர்வமும், வாய்ப்பும் இருக்கிறது.. கிடைக்கிறது.. அதனால்தான் ஓடுகிறேன்..

ஏதோ என்னால் முடிந்தது..

உண்மைத்தமிழன் said...

///பதி said...
Chellamuthu Kuppusamy said...
//கருணாநிதியைப் பிடிக்காத பத்திரிக்கைகள் - குறிப்பாக இந்து & தினமலர் - வைகோவை (எம்ஜிஆரைப் போல) எங்கோ கொண்டு போய் வைத்திருக்கும். அப்படி நடக்காமல் போனதற்கு அவருடைய புலி ஆதரவு நிலைப்பாடு முக்கியமான காரணம் என்று கருதுகிறேன்.//

உண்மை...

ஆனால், //எனினும் தமிழக அரசியல் மற்றும் சமூகக் களத்தில் வைகோ அவசியமான சக்தி.//

என்று எழுதிவிட்டு, வைகோ (மதிமுக)வின் எதிர்காலத்தைப் பற்றி கீழ்கண்ட முறையில் கணித்து சொல்வது எதற்காக??

//அரசியல் ரீதியாக இனிமேல் பெரிய சக்தியாக வைகோவும், மதிமுகவும் இருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அரசியல் செய்வதற்கு குறைந்த பட்சம் மக்கள் தொலைக்காட்சிகூட அவரிடம் கிடையாது.//
???///

இளைஞர்களைத் தவிர மற்றவர்களின் மனோபாவம் மாறி வருகிறது பதி..

கைல காசை வைச்சா, ஓட்டுப் போடுவோம் என்கிற எண்ணவோட்டத்துக்கு மக்கள் ஆளாகிவிட்டார்கள்.

பரபரப்பு பெயரும், பணமும் சேர்ந்தால்தான் இங்கே வெற்றி கிடைக்கும் சூழல். அதனால்தான் செல்லமுத்து ஸார் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைத்தமிழன் said...

///தீப்பெட்டி said...
தங்களின் கருத்து எப்போதும் போல தெளிவாக இருந்தது. யாராக இருந்தாலும் பிரச்னையை வெளியில் இருந்து பார்க்க பழகி கொள்ளவேண்டும். உண்மையான உறுதி, தெளிவோடு அணுகப்படும்போதே உருவாகிறது.
வெற்று கூச்சல் கதைக்குதவாது. விரக்தியில் போய் கொண்டுவிடும்.
நன்றி உண்மை சார், இன்றும் ஈழ பிரச்னையை முதன்மைபடுத்துவதற்கு.....///

இது நமது கடமை.. செய்துதான் தீர வேண்டும்..

என்னென்ன வழிகள் நமக்குக் கிடைக்கிறதோ அந்தந்த வழிகளிலெல்லாம் நாம் போராடத்தான் வேண்டும்..

உண்மைத்தமிழன் said...

///Chellamuthu Kuppusamy said...
//என்று எழுதிவிட்டு, வைகோ (மதிமுக)வின் எதிர்காலத்தைப் பற்றி கீழ்கண்ட முறையில் கணித்து சொல்வது எதற்காக??//
அதுதான் நடைமுறை எதார்த்தம்! மீடியா மற்றும் பண பலமின்றி இங்கே அரசியலில் நிற்க முடியாது.///

உண்மை.. இதைத்தான் நானும் சொல்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

///சங்கொலி said...
நண்பர் பதிக்கு :- மதிமுக சார்பில் தொலைகாட்சி.
http://www.mdmkonline.com/news/latest/mdmk_to_host_party_tv.ஹ்த்ம்ல்
மதிமுக நான்கு தொகுதிகளில் போட்டி அவை : விருதுநகர், நீலகிரி , ஈரோடு, தஞ்சை.
அடுத்த முக்கிய அறிவிப்பு :
மதிமுக சார்பில் தொலைகாட்சி ஆரம்பிக்க போகிறார்கள். வைகோ அவர்கள் அதிகப்படியான கரவோசை மத்தியில் இதை அறிவித்தார்கள்.
உண்மைத்தமிழன் அவர்களுக்கு :
மிக நல்ல பதிவு . மிக்க நன்றி.
எனது பதிலையும் போட்டதற்காக மீண்டும் ஒரு நன்றி.
நட்புடன்
தோழர்.///

நன்றி தோழரே..

பின்னூட்டம் என்பதே கருத்துரிமைக்காகத்தான்..

அதனை நாம் என்றும் மதிப்போம்..!

Hariharan # 03985177737685368452 said...

டெல்லியில் பிரதமர், ஜனாதிபதி, ஜன்பத்ரோடு அதிபர்க்கு என தந்தி அனுப்பும் தமிழினத்தலைவரது அறவழியில் போராடும் டெக்னிக் இருக்கே.

சாமானிய ஈழத்தமிழர் சிங்கள அரசினாலும், விடுதலைப் புலிகளாலும், தமிழகத்து தமிழின அரசியல் புள்ளிகளின் தமிழின உணர்வு வியாபாரத்தினால் வாழ்வின் விளிம்பில் கொணரப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி மூன்று ஆபத்துகளிடம் மாட்டிக்கொண்டு முச்சந்தியில் அல்லல்படும் சாமானிய ஈழத்தமிழன் நிலை எண்ணி வருந்துகிறேன்.

மைனாரிட்டி காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்திய அரசை கண்ட் ரோல் செய்வது அகில உலக தமிழினத்தலைவர் கருணாநிதி.

இந்திய அரசின் ஆட்சிகாலம் முடியும் இரண்டு வாரம் வரை கடந்த மார்ச் மாதம் முடியும் வரை மத்திய அரசின் சுகாதாரத்துறை, ரயில்வேயில் அமைச்சர்களை வைத்திருந்தவர் குடிதாங்கி ராமதாஸ்.

ராமதாஸ் அதிமுகவுடன் தாவியமாதிரி பிஜேபியுடன் தேர்தலுக்குப்பின் கருணாநிதி தாவி மத்திய அரசில் வேண்டிய துறைகளில் அழகிரி, கனிமொழி போன்ர தன் ரத்த உறவுகளை மந்திரியாக்கிவிட்டு அதன் பின் முரசொலித்து அகில உலக தமிழினத்தலைவர் கருணாநிதி ஈழத்தவரை கண்டிப்பாக மீட்பார்.

எனவே இளிச்சவாய் தமிழகத்து மாணவர்களே, ஈழத்து தமிழர்களே அதுவரையில் கோபாலபுர, அறிவாலய, தைலாபுர கதவுகளை தட்டுங்கள் அவை திறக்கப்டும் என்ற நம்பிக்கையோடு, கேளுங்கள் அவை கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்!

மீண்டும் அல்லல்படும் சாமானிய ஈழத்தமிழன் நிலை எண்ணி வருந்துகிறேன்.

ரிஷி (கடைசி பக்கம்) said...

கடைசிப்பக்கம் என்று பெயர் வைத்ததற்கான காரணங்கள் என்றோ மாறிவிட்டன.

தற்போது பெரிதாக சொல்லும்படி ஏதும் இல்லை. மற்றபடி உங்களுடைய பதிவுகளை சில நாட்களாக படித்து வருகிறேன்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

நிழலை விட்டுவிட்டு நிசத்தின் பின்னாலே செல்வதுதான் சாலசிறந்தது

ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்து... நன்றி நண்பரே

பதி said...

//சங்கொலி said...
நண்பர் பதிக்கு :-

மதிமுக சார்பில் தொலைகாட்சி


http://www.mdmkonline.com/news/latest/mdmk_to_host_party_tv.html//

தகவலுக்கு நன்றி நண்பரே.. ஆனால், மதிமுக வின் தொலைக்காட்சியைப் பற்றி நான் கேட்கவில்லை... :)

தமிழகத்திலுள்ள மீடியாக்களைப் பற்றி எனக்கு அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் இல்லாததால் (மக்கள் தொலைக்காட்சி தவிர்த்து) அதனைப் பற்றி நான் பேசுவதில்லை.

வால்பையன் said...

//இப்படி போராட்டத்தை ஆதரிக்கும் பலரையும் குற்றம் சொல்லிக் கொண்டே போனால் கடைசியில் இந்த ஈழப் போராட்டத்திற்கான ஆதரவை தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் பாதுகாப்புப் பிரதேசத்தில் சிக்கிக் கொண்டுள்ள ஈழத்து மக்கள்தான் ஓடி வந்து ஆதரவு தர வேண்டும்.//

அரசியல்வாதிகள் அவர்களது சுயத்தை இழந்ததே இதற்கு காரணம்!

வைகோவின் மீது இருந்து நம்பிக்கை தொகுதி பங்கீட்டின் போது போய் விட்டது!

விஜயகாந்த் தனித்து போட்டியிடும் போது வைகோவுக்கு என்ன வந்தது?

வெத்து வேட்டு said...

"ஐயா வெத்துவேட்டு..

புலி எதிர்ப்பு என்ற ஒன்றை வைத்துக் கொண்டுதான் ராஜபக்சே அரசு தந்திரமாக தமிழ் இனத்தை இந்திய அரசின் உதவியுடன் தீர்த்துக் கட்டி வருகிறது.. புரிந்து கொள்ளுங்கள்.."

how can you say that Rajapkashe is killing "Tamils"?
those who are being killed now because of LTTE...
in "cleared area" only people who have links with ltte being killed
in non cleared area who cannot "escape" because of LTTE's orders are being killed...

ltte is the one who asked for WAR in end of 2005...now war is there..

a normal tamil doesn't have right to choose his life
for me there is ltte is worse than SLGov

மதிபாலா said...

வைகோவின் ஈழ ஆதரவையோ , ஈழ உணர்வையோ என்றுமே நாம் குறை காண முடியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் குழம்பிய குட்டையை மேலும் குழப்புவதையே அவர் தன் நோக்கமாக கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகமே எழுகிறது.

முத்துக்குமரனின் மரணத்திற்குப் பிறகு எழுந்த எழுச்சியை இரும்புக்கரம் கொண்டு ஆட்சியாளர்கள் அடக்கத்துணிந்ததற்கு முக்கியக் காரணம் வைகோவும் அதன் அடிப்பொடிகளும் பேசிய தனித்தமிழ்நாடு போன்ற முட்டாள்தனமான பேச்சுக்கள்தான். !!!!!

இப்போது பாருங்கள் , உணர்ச்சி வேகத்தில் வைகோ என்ன பேசினார் என்று ? தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுமாம்...

தமிழகத்தில் யாரை வெட்டப் போகிறார் வைகோ. ???

உங்களுக்கு ஒரு லட்சம் தொண்டர்கள் இருப்பார்களா ? உண்மையான உணர்வாளர்களாக இருந்தால் , ராமதாஸுடன் சேர்ந்து மறியல் மூலமாக தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்யுங்கள்.

இந்திய மத்திய அரசாங்கம் நம்மிடம் இறங்கி வந்து பேசுகின்ற அளவுக்கு போராடுங்கள். அதுவும் மரங்களை வெட்டிப்போடுவது என்ன மருத்துவருக்கு புதிதா என்ன?

திமுக காங்கிரஸுடன் வைத்துக்கொள்ளும் கூட்டணி எப்படித் தமிழினத்துரோகமோ அதை விட நூறுமடங்கான தமிழினத்துரோகம் ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்துக்கொள்வது.

உண்மையா இல்லையா ?

ஒன்று சேர்ந்து போராடுவோம் என்று கருணாநிதி அழைத்தபோது அவர் மீது வராத நம்பிக்கை ஜெயலலிதா ஒரே நாள் உண்ணாவிரதம் இருந்த உடனே வந்ததில் வியப்பில்லை.

புலிகளைச் சுடும் போது தமிழனும் சாவான் என்று சொன்ன போது வைகோ என்ன புல் புடுங்கவா போயிருந்தார் ?

வைகோவிற்கு எப்படி அரசியல் வெற்றி முக்கியமோ , கூட்டணி முக்கியமோ அதே போலத்தான் திமுகவுக்கும்.

ஆக , திமுகவை காங்கிரஸ் கூட்டணிக்காக புறக்கணிப்பதும் , மதிமுகவை அதிமுக கூட்டணிக்காக புறக்கணிப்பதும் ஒன்றேதான்.

பிழைப்புக்காக ஒரு கூட்டணி என்றால் ஈழ உணர்வு வைகோவின் அரசியலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சும்மா மேடையில் பேசுவதற்காக மட்டுமே என்ற கருத்து உண்மையாகிறது.

ஆகவே , என் கருத்துப்படி பிழைப்புவாத அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவை மாணவர்கள் வெளியே போ என்று சொன்னதில் தவறேயில்லை.

ஒருவேளை வைகோவின் வரவேற்பையோ , ஆதரவையோ மாணவர்கள் ஏற்றுக்கொள்வது என்பது ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸின் தோளில் சவாரி செய்யும் திமுகவின் இழிநிலையை ஒத்ததாகவே இருக்கும்.

போதும் இந்த அரசியல்வாதிகள் நமது உரிமைகளுக்காகப் போராடியது.

வெற்று முழக்கங்களை விட செயலாக்கம் தான் முக்கியம். அதைத்தான் மாணவர்கள் செய்கிறார்கள். அதிலும் நமக்கு ஏதும் ஆதாயம் கிடைக்குமா என்று பார்ப்பவர்கள்தான் அரசியல்வாதிகள். அவர்களை அண்டாதே என்று மாணவர்கள் சொல்வதில் தவறேயில்லை.......

உண்மைத்தமிழன் said...

//Hariharan # 03985177737685368452 said...

டெல்லியில் பிரதமர், ஜனாதிபதி, ஜன்பத்ரோடு அதிபர்க்கு என தந்தி அனுப்பும் தமிழினத் தலைவரது அறவழியில் போராடும் டெக்னிக் இருக்கே. சாமானிய ஈழத் தமிழர் சிங்கள அரசினாலும், விடுதலைப் புலிகளாலும், தமிழகத்து தமிழின அரசியல் புள்ளிகளின் தமிழின உணர்வு வியாபாரத்தினால் வாழ்வின் விளிம்பில் கொணரப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி மூன்று ஆபத்துகளிடம் மாட்டிக்கொண்டு முச்சந்தியில் அல்லல்படும் சாமானிய ஈழத் தமிழன் நிலை எண்ணி வருந்துகிறேன். மைனாரிட்டி காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்திய அரசை கண்ட் ரோல் செய்வது அகில உலக தமிழினத் தலைவர் கருணாநிதி. இந்திய அரசின் ஆட்சி காலம் முடியும் இரண்டு வாரம்வரை கடந்த மார்ச் மாதம் முடியும்வரை மத்திய அரசின் சுகாதாரத் துறை, ரயில்வேயில் அமைச்சர்களை வைத்திருந்தவர் குடிதாங்கி ராமதாஸ். ராமதாஸ் அதிமுகவுடன் தாவிய மாதிரி பிஜேபியுடன் தேர்தலுக்குப் பின் கருணாநிதி தாவி மத்திய அரசில் வேண்டிய துறைகளில் அழகிரி, கனிமொழி போன்ர தன் ரத்த உறவுகளை மந்திரியாக்கிவிட்டு அதன் பின் முரசொலித்து அகில உலக தமிழினத் தலைவர் கருணாநிதி ஈழத்தவரை கண்டிப்பாக மீட்பார்.
எனவே இளிச்சவாய் தமிழகத்து மாணவர்களே, ஈழத்து தமிழர்களே அதுவரையில் கோபாலபுர, அறிவாலய, தைலாபுர கதவுகளை தட்டுங்கள் அவை திறக்கப்டும் என்ற நம்பிக்கையோடு, கேளுங்கள் அவை கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்! மீண்டும் அல்லல்படும் சாமானிய ஈழத்தமிழன் நிலை எண்ணி வருந்துகிறேன்.///

ஹரிஹரன் ஸார்..

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.. அதே வேகத்தோட..

தேர்தலுக்குப் பின்பான காட்சிகள் நீங்கள் சொல்வது போல் மாறினாலும் மாறலாம்.. நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்.

அதேபோல் ராமதாஸும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க ஓடலாம்..

எப்படியோ எல்லாருக்கும் பதவிதானே முக்கியம்..!

உண்மைத்தமிழன் said...

///கடைசி பக்கம் said...
கடைசிப் பக்கம் என்று பெயர் வைத்ததற்கான காரணங்கள் என்றோ மாறிவிட்டன. தற்போது பெரிதாக சொல்லும்படி ஏதும் இல்லை. மற்றபடி உங்களுடைய பதிவுகளை சில நாட்களாக படித்து வருகிறேன்.///

சில நாட்களாகத்தானா..? எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான்..

உண்மைத்தமிழன் said...

//பித்தன் said...

நிழலை விட்டுவிட்டு நிசத்தின் பின்னாலே செல்வதுதான் சாலசிறந்தது.

ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து... நன்றி நண்பரே.//

கருத்தொற்றுமைக்கு நன்றி பித்தா..?!!!!

உண்மைத்தமிழன் said...

///பதி said...

//சங்கொலி said...
நண்பர் பதிக்கு :-
மதிமுக சார்பில் தொலைகாட்சி
http://www.mdmkonline.com/news/latest/mdmk_to_host_party_tv.html//
தகவலுக்கு நன்றி நண்பரே.. ஆனால், மதிமுகவின் தொலைக்காட்சியைப் பற்றி நான் கேட்கவில்லை... :)
தமிழகத்திலுள்ள மீடியாக்களைப் பற்றி எனக்கு அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் இல்லாததால் (மக்கள் தொலைக்காட்சி தவிர்த்து) அதனைப் பற்றி நான் பேசுவதில்லை.///

தமிழகத்தில் உள்ள டிவிக்களில் பெரும்பான்மை கட்சி சார்பில் இருப்பதால் ம.தி.மு.க. செய்திகள் அதிகம் ஒளிபரப்பாவதில்லை.. மக்களிடம் சென்றடைவதில்லை..

அதனால்தான் வைகோ புது டிவி தொடங்க உத்தேசித்துள்ளார். நல்ல முடிவுதான்..

உண்மைத்தமிழன் said...

///வால்பையன் said...

//இப்படி போராட்டத்தை ஆதரிக்கும் பலரையும் குற்றம் சொல்லிக் கொண்டே போனால் கடைசியில் இந்த ஈழப் போராட்டத்திற்கான ஆதரவை தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் பாதுகாப்புப் பிரதேசத்தில் சிக்கிக் கொண்டுள்ள ஈழத்து மக்கள்தான் ஓடி வந்து ஆதரவு தர வேண்டும்.//

அரசியல்வாதிகள் அவர்களது சுயத்தை இழந்ததே இதற்கு காரணம்!
வைகோவின் மீது இருந்து நம்பிக்கை தொகுதி பங்கீட்டின்போது போய் விட்டது!///

அவர் என்ன செய்வார் பாவம்..? எல்லாம் அம்மாவின் தனிப்பட்ட குணத்தினால் விளைவது..

//விஜயகாந்த் தனித்து போட்டியிடும் போது வைகோவுக்கு என்ன வந்தது?//

தெரிந்தே தற்கொலை செய்து கொள்ள அவர் என்ன முட்டாளா..?

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி மாநிலக் கட்சி என்கிற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அந்தக் கட்சி தேர்தலில் மொத்த ஓட்டுக்களில் 6 சதவிகித ஓட்டுக்களை பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக 2 மக்களவை உறுப்பினர்களாவது அக்கட்சிக்கு இருக்க வேண்டும். இருந்தால்தான் அது மாநிலக் கட்சி. அடுத்தத் தேர்தலில் ஒரே சின்னம் கிடைக்கும். இல்லாவிடில் சுயேட்சை லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு தொகுதிக்கு தொகுதி சின்னம் மாறுபடும்.. தேவையா இது..?

இது ஒன்றுக்காகத்தான் அனைவரும் அல்லலோகப்படுகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

///வெத்து வேட்டு said...

"ஐயா வெத்துவேட்டு.. புலி எதிர்ப்பு என்ற ஒன்றை வைத்துக் கொண்டுதான் ராஜபக்சே அரசு தந்திரமாக தமிழ் இனத்தை இந்திய அரசின் உதவியுடன் தீர்த்துக் கட்டி வருகிறது.. புரிந்து கொள்ளுங்கள்.."

how can you say that Rajapkashe is killing "Tamils"? those who are being killed now because of LTTE...
in "cleared area" only people who have links with ltte being killed
in non cleared area who cannot "escape" because of LTTE's orders are being killed... ltte is the one who asked for WAR in end of 2005... now war is there.. a normal tamil doesn't have right to choose his life for me there is ltte is worse than SLGov.///

சரி.. புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழர்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்..

நான் இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது..

அதற்காக புலிகள் உத்தம புருஷர்கள் என்று நான் சொல்ல வரவில்லை.

இந்த இடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டியது சிங்கள அரசுதான்.. அவர்கள்தான் போரை நிறுத்திவிட்டு உலகச் சமுதாயத்தின் முன்னிலையில் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.. நிரந்தரத் தீர்வுக்கு வழி காண வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

//மதிபாலா said...

வைகோவின் ஈழ ஆதரவையோ, ஈழ உணர்வையோ என்றுமே நாம் குறை காண முடியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் குழம்பிய குட்டையை மேலும் குழப்புவதையே அவர் தன் நோக்கமாக கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகமே எழுகிறது.
முத்துக்குமரனின் மரணத்திற்குப் பிறகு எழுந்த எழுச்சியை இரும்புக்கரம் கொண்டு ஆட்சியாளர்கள் அடக்கத் துணிந்ததற்கு முக்கியக் காரணம் வைகோவும் அதன் அடிப்பொடிகளும் பேசிய தனித்தமிழ்நாடு போன்ற முட்டாள்தனமான பேச்சுக்கள்தான்.!!!!!
இப்போது பாருங்கள், உணர்ச்சி வேகத்தில் வைகோ என்ன பேசினார் என்று? தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுமாம்... தமிழகத்தில் யாரை வெட்டப் போகிறார் வைகோ. ???
உங்களுக்கு ஒரு லட்சம் தொண்டர்கள் இருப்பார்களா ? உண்மையான உணர்வாளர்களாக இருந்தால், ராமதாஸுடன் சேர்ந்து மறியல் மூலமாக தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்யுங்கள்.
இந்திய மத்திய அரசாங்கம் நம்மிடம் இறங்கி வந்து பேசுகின்ற அளவுக்கு போராடுங்கள். அதுவும் மரங்களை வெட்டிப் போடுவது என்ன மருத்துவருக்கு புதிதா என்ன?
திமுக காங்கிரஸுடன் வைத்துக்கொள்ளும் கூட்டணி எப்படித் தமிழினத் துரோகமோ அதை விட நூறு மடங்கான தமிழினத் துரோகம் ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்துக்கொள்வது. உண்மையா இல்லையா?//

//ஒன்று சேர்ந்து போராடுவோம் என்று கருணாநிதி அழைத்தபோது அவர் மீது வராத நம்பிக்கை ஜெயலலிதா ஒரே நாள் உண்ணாவிரதம் இருந்த உடனே வந்ததில் வியப்பில்லை. புலிகளைச் சுடும் போது தமிழனும் சாவான் என்று சொன்ன போது வைகோ என்ன புல் புடுங்கவா போயிருந்தார்? வைகோவிற்கு எப்படி அரசியல் வெற்றி முக்கியமோ, கூட்டணி முக்கியமோ அதே போலத்தான் திமுகவுக்கும்.
ஆக , திமுகவை காங்கிரஸ் கூட்டணிக்காக புறக்கணிப்பதும், மதிமுகவை அதிமுக கூட்டணிக்காக புறக்கணிப்பதும் ஒன்றேதான்.
பிழைப்புக்காக ஒரு கூட்டணி என்றால் ஈழ உணர்வு வைகோவின் அரசியலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சும்மா மேடையில் பேசுவதற்காக மட்டுமே என்ற கருத்து உண்மையாகிறது.
ஆகவே, என் கருத்துப்படி பிழைப்புவாத அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவை மாணவர்கள் வெளியே போ என்று சொன்னதில் தவறேயில்லை. ஒருவேளை வைகோவின் வரவேற்பையோ , ஆதரவையோ மாணவர்கள் ஏற்றுக் கொள்வது என்பது ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸின் தோளில் சவாரி செய்யும் திமுகவின் இழிநிலையை ஒத்ததாகவே இருக்கும். போதும் இந்த அரசியல்வாதிகள் நமது உரிமைகளுக்காகப் போராடியது.
வெற்று முழக்கங்களைவிட செயலாக்கம்தான் முக்கியம். அதைத்தான் மாணவர்கள் செய்கிறார்கள். அதிலும் நமக்கு ஏதும் ஆதாயம் கிடைக்குமா என்று பார்ப்பவர்கள்தான் அரசியல்வாதிகள். அவர்களை அண்டாதே என்று மாணவர்கள் சொல்வதில் தவறேயில்லை.......//

மதிபாலா ஸார்..

கொதித்துக் போய் இருக்கிறீர்கள் என்பது உங்களது பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது.

வைகோ, கலைஞர், ஜெயலலிதா என்றில்லை அத்தனை அரசியல்வியாதிகளுமே தங்களுடைய எதிர்காலத்திற்காகத்தான் அரசியலே நடத்துகிறார்கள். இதில் எனக்கும் சந்தேகமில்லை.

ஈழப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் அதற்கான ஆதரவு பொதுமக்களிடையே வெறும் உதட்டளவில் மட்டுமே உள்ளது.. உள்ளத்தளவில் மறுபடியும் தோன்றவில்லை. காரணம் மக்களின் மனோபாவம் மாறிவிட்டது. ராஜீவ் கொலைக்கு முன் நமது தமிழகத்து மக்களிடம் இருந்த ஈழத்து ஆதரவு இப்போது மிக, மிக மங்கிவிட்டது. இப்போது மாணவர்களிடையே, ஆண்களிடையே மட்டுமே இந்த உணர்வு கொஞ்சம் உள்ளது.

இந்த உணர்வை அதிகப்படுத்த வேண்டும்.. வீட்டு சமையல்கட்டு வரைக்கும் இதனைக் கொண்டு போக வேண்டும் எனில் அனைத்து அரசியல்கட்சிகளின் உதவியும் தேவை..

வெறுமனே மாணவர்களே கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தால் கடைசியில் அவர்களது படிப்புதான் கெடும்.

வைகோ எளிதில் உணர்ச்சிவசப்படுவார். இது இன்று நேற்றல்ல.. வருடக்கணக்காக.. இதுதான் அவரது குணம்.. அவரது இந்தப் பேச்சுக்காக நீங்கள் பயப்பட வேண்டாம். எல்லா அரசியல்வியாதிகளும் பேசுவதுதான்.. தலையை வெட்டிக் கொணர்ந்து தலைவர் காலில் வைப்பேன் என்று பேசுவதில்லையா.. அது போலத்தான்..

ஈழத் தமிழர் விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் பலமும் மாணவர்களுக்குக் கிடைத்தால் அது அவர்களுக்குத்தான் பலவிதங்களிலும் நன்மை பயக்கும்..

HS said...

எனது மின்னஞ்சல் harirajendran@gmail.com
உண்மைத்தமிழன் தொடர்பு கொள்ளுங்கள், பரிஸில் நடக்கும் சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்துக்கு உங்களை நேரடியாக இணக்க விரும்புகின்றோம்,உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்

ஹரி
பரிஸ்

அத்திரி said...

//யாருமே வேண்டாம்.. நாங்களே பார்த்துக் கொள்வோம்.. நாங்களே ஜெயித்துக் காட்டுகிறோம் என்று சொல்வதற்கு இதென்ன கபடி விளையாட்டா..? ஏழு பேர் மட்டும் நின்று விளையாடி ஜெயிப்பதற்கு..?//

அண்ணே அருமையா சொல்லியிருக்கீங்க...

உண்மைத்தமிழன் said...

//HS said...
எனது மின்னஞ்சல் harirajendran@gmail.com
உண்மைத்தமிழன் தொடர்பு கொள்ளுங்கள், பரிஸில் நடக்கும் சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்துக்கு உங்களை நேரடியாக இணக்க விரும்புகின்றோம்,உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்
ஹரி
பரிஸ்//

தமிழ் ஈழத்திற்கான எனது ஆதரவு என்றென்றைக்கும் உண்டு ஹரி ஸார்..

உண்மைத்தமிழன் said...

///அத்திரி said...

//யாருமே வேண்டாம்.. நாங்களே பார்த்துக் கொள்வோம்.. நாங்களே ஜெயித்துக் காட்டுகிறோம் என்று சொல்வதற்கு இதென்ன கபடி விளையாட்டா..? ஏழு பேர் மட்டும் நின்று விளையாடி ஜெயிப்பதற்கு..?//

அண்ணே அருமையா சொல்லியிருக்கீங்க...///

நன்றி தம்பி..

தமிழ் ஈழப் போராட்டத்திற்கு உன்னால் முடிந்த அனைத்துவித ஒத்துழைப்பையும், ஆதரவையும் உனது பதிவின் மூலமாக வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..

மடல்காரன்_MadalKaran said...

நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். தமிழர்கள் (நாம்) உணர்ச்சிப்பெருக்கில் இருக்கிறார்களே தவிர செயலில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. புலிகளும் ஆயுதம் ஏந்துவது தற்காப்புக்கு என்ற நிலையில் மட்டும் இருந்து கொண்டு உலக நாடுகளை முதலில் இருந்தே இலங்கை அரசின் சூழ்ச்சிகளை உலகுக்கு எடுத்துக் காட்டி ஆதரவு திரட்டி இருக்க வேண்டும். அதை விடுத்து மக்களின் உணர்ச்சியை ஊட்டி, அவர்கள் மேல் (இலங்கை தமிழர்கள்) பச்சாதாபம் ஏற்பட காத்து கிடந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். நமக்கு வேலை நடக்கணும்யா வேற என்ன வேணும்?
வைகோவும் ஒரு முதிர்ந்த அரசியல் வாதி.. உணர்ச்சிக்கு இடம் கொடாமல் சிறந்த வழி காட்டியாக இருக்கோனம். நல்லவனா நமக்கும் வல்லவனா எல்லாருக்கும் இருந்தாதான் இப்ப இருக்கற அரசியல்ல பொழைக்க முடியும். மருத்துவர் ஐயாவையும் வைகோவையும் ஒப்பிடக்கூடாது. முதலாமவர் காரிய வியாதி கொண்டவர். வைகோவிற்கு இருக்கும் மொழிவீச்சை பயன் படுத்தி உலக அரங்கில் இலங்கை தமிழர்களின் நிலையை எடுத்துச் செல்லலாம். அவர் ஏன் ஆங்கிலத்தில் இலங்கை தமிழர் பற்றி ஒரு புத்தகம் எழுதகூடாது? புக்கர் பரிசு பெறும் இந்தியர்களும் ‘ஸ்லம் டாக்' உழைப்பாளிகளும் இந்தியாவை இந்தியரை உலக அரங்கின் பார்வைக்கு வைத்தது போல் இவராலும் இலங்கை வாழ் தமிழரின் பிரச்சனையை எடுத்து செல்ல முடியும். யூதர்களின் செயல் திரனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தனி நாடு வேண்டி அது கிடைக்க எண்ணவெல்லாம் செய்தார்கள். அரசியல் காழ்புணர்ச்சியை ஒதுக்கி வைத்து விட்டு அனைவரும் கை கொடுத்தால் ஒழிய இலங்கை தமிழர்கள் சொந்த ரத்த வாடையை அவர்கள் நுகர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். உலகில் தலை சிறந்த அறிவார்ந்த உழைப்பாளிகளில் தமிழர்களும் அடங்குவர். ஒற்றுமை என்பதை மறந்ததால் நாம் இந்நிலையில் இருக்கிறோம். என்ன செய்ய? இறைவனுக்கு ‘கருணை' என்ற சொல்லை நினைவுருத்துவோம்.

உண்மைத்தமிழன் said...

///மடல்காரன்_MadalKaran said...

நீங்க சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழர்கள் (நாம்) உணர்ச்சிப்பெருக்கில் இருக்கிறார்களே தவிர செயலில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. புலிகளும் ஆயுதம் ஏந்துவது தற்காப்புக்கு என்ற நிலையில் மட்டும் இருந்து கொண்டு உலக நாடுகளை முதலில் இருந்தே இலங்கை அரசின் சூழ்ச்சிகளை உலகுக்கு எடுத்துக் காட்டி ஆதரவு திரட்டி இருக்க வேண்டும். அதை விடுத்து மக்களின் உணர்ச்சியை ஊட்டி, அவர்கள் மேல் (இலங்கை தமிழர்கள்) பச்சாதாபம் ஏற்பட காத்து கிடந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். நமக்கு வேலை நடக்கணும்யா வேற என்ன வேணும்?
வைகோவும் ஒரு முதிர்ந்த அரசியல் வாதி.. உணர்ச்சிக்கு இடம் கொடாமல் சிறந்த வழி காட்டியாக இருக்கோனம். நல்லவனா நமக்கும் வல்லவனா எல்லாருக்கும் இருந்தாதான் இப்ப இருக்கற அரசியல்ல பொழைக்க முடியும். மருத்துவர் ஐயாவையும் வைகோவையும் ஒப்பிடக்கூடாது. முதலாமவர் காரிய வியாதி கொண்டவர். வைகோவிற்கு இருக்கும் மொழிவீச்சை பயன் படுத்தி உலக அரங்கில் இலங்கை தமிழர்களின் நிலையை எடுத்துச் செல்லலாம். அவர் ஏன் ஆங்கிலத்தில் இலங்கை தமிழர் பற்றி ஒரு புத்தகம் எழுதகூடாது? புக்கர் பரிசு பெறும் இந்தியர்களும் ‘ஸ்லம் டாக்' உழைப்பாளிகளும் இந்தியாவை இந்தியரை உலக அரங்கின் பார்வைக்கு வைத்தது போல் இவராலும் இலங்கை வாழ் தமிழரின் பிரச்சனையை எடுத்து செல்ல முடியும். யூதர்களின் செயல் திரனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தனி நாடு வேண்டி அது கிடைக்க எண்ணவெல்லாம் செய்தார்கள். அரசியல் காழ்புணர்ச்சியை ஒதுக்கி வைத்து விட்டு அனைவரும் கை கொடுத்தால் ஒழிய இலங்கை தமிழர்கள் சொந்த ரத்த வாடையை அவர்கள் நுகர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். உலகில் தலை சிறந்த அறிவார்ந்த உழைப்பாளிகளில் தமிழர்களும் அடங்குவர். ஒற்றுமை என்பதை மறந்ததால் நாம் இந்நிலையில் இருக்கிறோம். என்ன செய்ய? இறைவனுக்கு ‘கருணை' என்ற சொல்லை நினைவுருத்துவோம்.///

மடல்காரன் தங்களுடைய நீண்ட பதிலில் பல உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது..

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை உலகத்திற்குச் சொன்ன தமிழ் இனமே இன்று அதனை மறந்துவிட்டது..

நாடு, மக்கள் என்ற பொதுநலம் மறைந்து தான், தனது, தன் குடும்பம் என்று தமிழன் குறுக்கிக் கொண்டதுதான் நமது இனத்தின் தோல்விக்கு முதல் காரணம்..

இனி கடவுளிடம் கையேந்துவதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு..!

அருமையான பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள் மடல்காரன் ஸார்..