Showing posts with label குஷ்பூ. Show all posts
Showing posts with label குஷ்பூ. Show all posts

அறிவாலயத்தில் கட்டிப் போட நானென்ன காயடிக்கப்பட்ட மாடா..?

05-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது ஒரு திரையுலக அரசியல்வியாதியின் அழுகை கட்டுரை..!

தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் தியாகு. ஆனால், சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தியாகுவைக் காண முடியவில்லை. ஏன் என்ற கேள்வியோடு தியாகுவைச் சந்தித்தோம். பதிலுக்குக் கண்ணீரும், கம்பலையுமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார்.


“எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து விலகிய காலத்தில் இருந்தே மிகவும் தீவிரமாகக் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.  இப்போது கட்சியிலேயே இல்லாத வடிவேலுவுக்கு தி.மு.க.வில் உயர்ந்த அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். அவருக்கும் கழகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது..? நேற்று வந்த குஷ்பூவுக்கு ராஜ உபச்சாரம் நடக்கிறது. ஆனால் கட்சிக்காக ஓடாய்த் தேய்ந்த எனக்கு என்ன அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்..?

அறிவாலயத்தில் கட்டிப் போடுவதற்கு நானென்ன காயடிக்கப்பட்ட மாடா..? தலைவர் கலைஞரை மட்டும் நம்பி என் வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேனோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எஸ்.எஸ்.சந்திரன் வீட்டில் பெட்ரோல் பாம் போட்டதாக என் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் பகுதிக்கே சம்பந்தம் இல்லாத அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ரூரல் எஸ்.பி.யான பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் படை என்னை கைது செய்ய என் வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கிறது.

என் மனைவி “அவரைக் கைது செய்ய வேண்டுமென்றால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வாருங்கள்” என்று சொல்லிவிட்டார். போலீஸாரின் மிரட்டலைப் பார்த்து என் மகனுக்கு வலிப்பு வந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் சூழ்ந்துவிட்டார்கள். அந்த நள்ளிரவு நேரத்தில் இல.கணேசன் எனக்கு போன் செய்து பேசுகிறார். ஒரு போலீஸ் அதிகாரி எனக்கு போன் செய்து “பொன்.மாணிக்கவேலுக்கு வளசரவாக்கம் ஏரியா கிடையாதே..? அவர் ஏன் அங்கு வந்தார்?” என்று என்னிடம் கேட்டார்.

நான் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறிக் குதித்து வீட்டின் பின்பக்கமாகத் தப்பி ஊருக்குப் போய்விட்டேன். 22 நாட்களாக அவர்களின் கண்களில் நான் படவில்லை. பின்பு ஐயா மூப்பனார் ஜெயலலிதாவிடம் பேசி என்னை வழக்கில் இருந்து விடுவித்தார். ஆனால், தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது முதல் குரல் கொடுத்தவன் நான்தான்.

நான் நினைத்திருந்தால் என் நண்பர் விஜயகாந்த் பக்கம் போயிருக்கலாம். இன்றைக்கு எனக்கு தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயருக்கு உளவுத் துறை அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டுதான் காரணம். அவருடைய பேச்சைக் கேட்டு என்னை ஓரம் கட்டுகிறார்கள். தலைவரோ, துணை முதல்வரோ என்னைக் கண்டு கொள்ளவில்லை. அண்ணன் அழகிரி மட்டும்தான் என்னை அழைத்து ஆதரவுடன் பரிவாகப் பேசினார்.

“அவரைப் பார்க்காதே.. இவரிடம் பேசாதே..” என்று பல பிரிவுகளைத் தாண்டித்தான் இன்று தி.மு.க.வில் வாழ வேண்டியிருக்கிறது. ஆகையால், நான் இன்று ஓரம் கட்டப்பட்டிருக்கிறேன். என்னை வாழ வைத்தவர் தலைவர் கலைஞர்.. என்றைக்கும் அவரைவிட்டு வெளியேற மாட்டேன்..” என்கிறார் தியாகு.

இவருக்கும், இவருடைய தம்பிக்கும் நடந்த சொத்துப் பிரச்சினையில் தியாகு ஏமாற்றப்பட்டார். தம்பிக்கு ஆதரவாக ஸ்டாலின் குடும்பத்தார் இருந்ததுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

வளர்த்த கடா வடிவேலு..! புண்ணாக்கு குஷ்பு..!

04-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“என்னடா இது? பத்திரிகை செய்திகளையே போட்டுக்கிட்டிருக்க..?” என்று கோபப்படாதீர்கள் மக்களே..!

2011 சட்டமன்றத் தேர்தல் முடிகிறவரையில் இதை தொடர்ந்து செய்வதாகத்தான் உள்ளேன்.. தற்போதைய நிலையில் பத்திரிகைகளில் வரும் சில ஸ்கூப் நியூஸ்களை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கூடவே இணையத்தில் பதிவும் செய்து வைக்க வேண்டியுள்ளது.

உள்ளூரில் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் படிப்பார்கள். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களில் புத்தகத்தை இணையத்தின் மூலமாகப் படிக்காமல் இருப்பவர்களுக்காக இங்கே எனது தளத்தில் அவைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன..!

கோபித்துக் கொள்ளாமல் ஓ.பி. அடிக்கிறேன் என்றெல்லாம் நினைக்காமல் எனது உடன் பிறந்த சகோதரனான எனது கைகளுக்காக என்னைத் திட்டாமல் ‘போய்த் தொலைடா’ என்று பெரிய மனதுடன் மன்னித்து விட்டுவிடுங்கள்..!

இது திரையுலக அரசியல்வியாதிகளின் முதல் மோதல் கட்டுரை..!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியை, 'ஒண்டிக்கு ஒண்டி  வர்றியா?’ என சவால்​விட்டவர், வாழைப்பழ காமெடி நடிகர் செந்தில். இந்தத் தேர்தலிலும், தமிழகம் முழுக்க, தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பிச்சு உதறு​கிறார்.

''மதுரையில் நாடகத்தில் நடிச்சுட்டு இருந்தான் வடிவேலு. ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடிக்கிறதுக்கு சான்ஸ் கேட்டு மெட்ராஸ் வந்தான். அவனைப் பார்த்ததுமே, 'இவன் ஆளே சரி இல்லையே... ஒரு தினுசா இருக்கானேன்’னு கவுண்டமணி அண்ணன் கரெக்ட்டா கண்டுபிடிச்சுத் திட்டினார். நான்தான் அவரை சமாதானம் செஞ்சு, ''அண்ணே ஏதோ நாடகத்துல நடிச்சுப் பொழைப்பை நடத்துறான். சினிமாவுல நடிச்சா இன்னும் கொஞ்சம் கூடுதலா நாலு காசு பார்ப்பான், பாவம்’னு வடிவேலுக்கு வக்காலத்து வாங்கினேன்.

சினிமாவில் அவனுக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண். அந்தப் பாவத்துக்காக அவர் பக்கத்துல இருந்தவங்களை எல்லாம் தன்கிட்டே இழுத்து வெச்சுக்கிட்டான். கஷ்டப்படுற ராஜ்கிரணுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன்னு தப்பா ஒரு சேதியைக் கிளப்பிவிட்டு, தன்னை ஒரு வள்ளலா காட்டிக்கிட்டான். விஷயத்தைக் கேள்விப்பட்டு ராஜ்கிரணே நொந்துபோய்ட்டார். இது மாதிரி அறிமுகம் செஞ்சவரையே அசிங்கம் செஞ்சவன்தான் வடிவேலு.

ஆர்.வி.உதயகுமாரோட 'சின்னக் கவுண்டர்’ படத்துல நானும், கவுண்டமணி அண்ணனும் நடிச்​சோம். எங்ககூட வடிவேலுவும் நடிச்சான். ஷூட்டிங்கில் விஜயகாந்த் எங்களைவிட வடிவேலுவைத்​தான் விழுந்து, விழுந்து கவனிப்பார். அவனை எப்பவும் தன் கூடவே வெச்சுக்குவார். அவர் சாப்பிடுற ஐயிட்டங்களையே அவனுக்கும் பரிமாறச் சொல்லுவார். அந்தப் படத்துல வடிவேலு நிறைய ஸீன்ல நடிக்கறதுக்கு டைரக்டர்கிட்டே சிபாரிசுகூட பண்ணினார் விஜயகாந்த். 'என்னண்ணே இப்படிச் செய்றீங்களே?’ன்னு நான் விஜயகாந்த்கிட்ட கேட்டேன். 'அண்ணே, நீங்க ராமநாதபுரத்து ஆளு. வடிவேலு என் ஊர்க்காரன். என்னோட ஆளு. நீங்க வேணா பாருங்க.. அவன் பெரிய்ய ஆளா வருவான்’னு விஜயகாந்த் என்கிட்ட சொன்னார். அப்படி அவர் வளர்த்த கடா வடிவேலு, இப்போ அவர் மார்பிலேயே பாயுது. அவன், அவரை அசிங்க அசிங்கமாத் திட்டுறான்.

தருமபுரியில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிச்சுப் பேசியிருக்கார் விஜயகாந்த். அப்போ, வேனுக்குள்ளே மைக் விழுந்துடுச்சு. உதவியாளரிடம் குனிஞ்சு எடுக்கச் சொல்லி இருக்கார். அந்தச் சம்பவத்தை கேமரா ட்ரிக் மூலமா வேட்பாளரை அடிச்ச மாதிரி தப்பாப் பிரசாரம் பண்றாங்க. கருணாநிதியைக் கைது செஞ்சப்போ, பரிதாபமாக் கத்துற மாதிரி டப்பிங் வாய்ஸ் கொடுத்தவங்கதானே இந்த தி.மு.க-காரங்க.

இன்னோர் கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது,​ 'அ.தி.மு.க. கொடியைக் கீழே இறக்கச் சொல்லித் திட்டின மாதிரி’ கருணாநிதி டி.வி-யில் காட்டுறாங்க. அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சியோடு கொடிகளுக்கு மத்தியில் திடீர்னு ஒருத்தன் தி.மு.க. கொடியைத் தூக்கிக் காட்டுனான். அதைப் பார்த்துக் கடுப்பான விஜயகாந்த், தி.மு.க. கொடியைக் கிழே இறக்கச் சொல்லித் திட்டினார். டப்புன்னு கேமராவை அ.தி.மு.க. பக்கம் மாத்திக் காட்டி கூட்டணிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துறாங்க.

சென்னையில் அம்மா பேசுன கூட்டத்துல ஜனங்க நெரிசலில் மாட்டுனதா காட்டுறாங்க. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, அந்தக் காட்சியைக் கை கட்டி வேடிக்கைதானே பார்த்தது? உண்மையிலே, தோல்வி பயத்தில், தி.மு.க-வோடு அந்தக் கட்சியின் சேனல்களும் திட்டம் போட்டு ஏற்பாடு செய்த தள்ளுமுள்ளு வேலைதான் அது...'' என்றவர் அடுத்து குஷ்பு விஷயத்துக்குத் தாவினார்.

''ஜெயா டி.வி-யின் ஜாக்பாட் நிகழ்ச்சி மூலமாத்தான் குஷ்பு தமிழைக் கத்துக்கிட்டாங்க. இப்போ, தி.மு.க-வை ஆரம்பிச்ச ஐம்பெரும் தலைவருங்க வாரிசு மாதிரி... தலை, கால் புரியாம ததிங்கிணத்தோம் ஆட்டம் போடுது.

கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டில், 'கற்புன்னு ஒண்ணு இல்லவே இல்லை’ன்னு கேவலமாப் பேசி, நம்ம தாய்மார்களை இழிவுபடுத்தின மோசமான பொம்பளைதான் குஷ்பு. அதை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்ட கட்சிகள் பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தைகளும்.

குஷ்பூ வெளியூர்ல கோர்ட்டுக்கு வந்தப்ப செருப்பு, விளக்குமாறைக் காட்டினது ராமதாஸ், திருமாவளவன் கட்சியோட மகளிர் அணிகள்தான். இப்போ, அவங்களே அந்தப் பொம்பளைக்கு ஆரத்தி எடுக்குறாங்க. எம்.எல்.ஏ. பதவிக்காக அந்த வட நாட்டுக்காரி காலில் போய் ராமதாஸும் திருமாவளவனும் விழுறீங்களே... உங்களுக்கு வெட்கமா இல்லையா..?

“ஆண்டிபட்டியில் போட்டியிடப் பயந்துக்கிட்டு அம்மா ஸ்ரீரங்கத்தில் நிற்கிறதா..” குஷ்பு பேசுது. தைரியசாலி கருணாநிதி எதுக்கு சென்னையை விட்டுட்டுப் பயந்துபோய் திருவாரூர்ல நிக்கிறார்? ஸ்டாலின் எதுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற கொளத்தூர்ல போட்டி போடுறார்? ஏற்கெனவே, போட்டியிட்ட ஆண்டிபட்டியை அம்மா அரசப்பட்டி ஆக்கிட்டாங்க. அதனால, இப்போ ஸ்ரீரங்கத்துல நிற்கிறாங்க. இந்த விவரம்கூட புரியாத புண்ணாக்குதான் குஷ்பு!'' கடகடக்கிறார் செந்தில்!

நன்றி : ஜூனியர் விகடன் - 04-04-2011

குஷ்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூபூ..!

30-04-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று முன்தினம் நடிகை குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, “திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வக் குற்றம் அல்ல” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.




திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான `செக்ஸ்' உறவு கொள்வது தவறு இல்லை என்று, பிரபல நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அவருக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்புவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை'' என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்'சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பின் முழு விவரம் இது..

"திருமணத்துக்கு பிறகே `செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.

தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.

எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

அதே நேரத்தில் குஷ்புவின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். திருமணத்துக்கு முந்தைய உறவு, சேர்ந்து வாழ்வது போன்ற சர்ச்சைகள் எழும்போது அதுபற்றி வெளிப்படையாக விவாதிக்கும் கலாசாரம் வேண்டும்.

திருமண பந்தம் என்பது இந்தியாவில் முக்கியமான சமூக சம்பிரதாயம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதேபோல் சில தனி நபர்கள் மற்றும் அமைப்பினர் அதற்கு எதிரான கருத்துக்களையும் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரத்தில் குற்றவியல் சட்டத்தை அவசியமின்றி பயன்படுத்த முடியாது.

குஷ்புவின் கருத்தில் புகார்தாரர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதே வழியில் அவர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் தங்கள் பதில் கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம். அதற்காக கிரிமினல் வழக்கு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை. குஷ்புவின் கருத்து இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டிவிடும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

"திருமணத்துக்கு முந்தைய உறவுகள் அதிகரித்து வருவதால், இருவருடைய சம்மதத்துடன் நடைபெறும் அத்தகைய உறவுகளை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் குஷ்புவின் கருத்தே தவிர, எல்லா வகையான `செக்ஸ்' தொடர்புகளுக்கும் அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம் அல்ல.

குஷ்புவின் கருத்தை அப்படி தவறாக கருத வேண்டும் என்றால், `செக்ஸ்' தொடர்பாக வெளியிடப்படும் பல்வேறு செய்தி, கட்டுரைகளுக்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையெல்லாம் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

ஒரு வாதத்திற்காக, குஷ்புவின் கருத்து, திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள சில இளைஞர்களை தூண்டுவதாக கருதினாலும், அந்த செயல் கிரிமினல் குற்றம் அல்ல என்பதால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது''.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது குறித்து நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த கருத்துக்களை நீதிபதிகளின் உத்தரவு என்று கருதி, அதற்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதங்களை அனுப்பினார்கள். சிலர் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி இருந்தனர். சில கடிதங்களில், “பாரதத்தின் புராண இலக்கியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?” என்றும் நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தனவாம்.

தீர்ப்பில் இந்தத் தகவலையும் வெளியிட்ட நீதிபதிகள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் திரித்து வெளியான செய்திகளை பார்த்து இந்தக் கடிதங்களை பொதுமக்கள் எழுதி இருப்பதாக தெரிவித்தனர். எனவே, “இது போன்ற செய்திகளை வெளியிடும்போது பத்திரிகை மற்றும் ஊடகங்கள், மேலும் கவனமாகவும், பொறுப்பு - எச்சரிக்கை உணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தன் மனதுக்கு சரியென்று பட்டதை வெளிப்படையாகச் சொன்ன குஷ்புவின் கருத்து, தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று சொல்லி அவரை எதிர்த்து உள் நோக்கத்துடன் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு விடுதலைச்சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்திய அராஜகங்களை சுலபத்தில் மறந்துவிட முடியாது..!

இவர்கள்தான் தமிழ்நாட்டின் கலாச்சாரக் காவலர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டை நாங்கள்தான் காப்பாற்றப் போகிறோம் என்று மேடைக்கு மேடை வாய் கிழிய பேசிவிட்டு ஒண்டியாய் இருந்த ஒரு பெண்ணிடம் தங்களது எதிர்ப்பைக் காட்டுவதற்கு தங்களிடம் இருந்த பெண்கள் படையினரையே அனுப்பி வைத்தார்கள்.

பண்பாடு, கலாச்சாரம் என்று கூவிய இவர்கள் எதிர்க்கக் கிளம்பிய தங்களது அமைப்பின் பெண்களிடம் விளக்குமாற்றையும், செருப்பையும் கொடுத்து குஷ்பு வீட்டின் எதிரே போராட்டம் நடத்த தூண்டினார்கள்.

“எதிர்க் கருத்தைத் தெரிவிக்க செருப்பையும், விளக்குமாற்றையும் காண்பிப்பதுதான் தமிழ்ப் பண்பாடா? தமிழ்க் கலாச்சாரமா?” என்று நடுநிலையாளர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும், இன்றுவரையிலும் இந்தக் கலாச்சாரக் காவலர்களும், பண்பாளர்களும் பதிலே சொல்லவில்லை. வாழ்க இவர்களது ஜனநாயகம்..!

ஆனாலும் தனி ஒரு மனுஷியாய், தான் எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாய் நின்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தோல்வியடைந்தாலும் மனதைரியத்துடன் உச்சநீதிமன்றம் வரையிலும் சென்று தனது கருத்துரிமையை நிலைநாட்டி, பேச்சுரிமை, எழுத்துரிமை, தனி மனித உரிமைகளுக்காக  இனி வரும் காலங்களில் மேற்கோள் காட்ட உச்சநீதிமன்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்கத் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தமைக்காக குஷ்புவிற்கு எனது சல்யூட்..!