Showing posts with label செந்தில். Show all posts
Showing posts with label செந்தில். Show all posts

கண் பேசும் வார்த்தைகள் - சினிமா விமர்சனம்

07-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட் பற்றிய உங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் இந்தப் படத்தில் முழு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். யாருக்காவது சிங்கப்பூரில் செட்டிலாக விருப்பம் இருப்பின் இந்தப் படத்தை அவசியம் பார்க்கவும்..!


உள்ளூரில் பேட்மிட்டன் வீரராக வலம் வரும் செந்திலுக்கு வீட்டில் மரியாதை இல்லை..! ஆனால் விளையாட்டில் பெரும் ஆர்வம்.. எதிர்வீட்டில் குடியிருக்கும் செந்திலின் பெரியப்பா, செந்திலின் அப்பாவையும், அவர் குடும்பத்தையும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் பொழப்பு கெட்ட குடும்பம் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் நேரும் ஒரு அவமானத்தை பார்த்த பின்பு, தான் இனிமேல் உழைத்து சம்பாதித்து தனது குடும்பத்தைக் காப்பாற்றுவது நல்லது என்ற முடிவுக்கு வருகிறார் செந்தில். இதற்காக இவரும் சிங்கப்பூர் பயணமாகிறார் நண்பர் வேல்முருகனுடன்..!

அங்கே நுழைந்தவுடன் எதிர்பார்த்த வேலை இல்லை.. ஆனால் அதிர்ஷ்டம் அழைக்கிறது.. சைட் சூப்பர்வைஸரின் வீட்டில் குக்கிங் உதவியாளராகவும், அவருக்கு தொழில் உதவியாளராகவும் வேலையில் அமர்கிறார் செந்தில். தனது பெரியப்பா மகனை சந்திக்கப் போய் அங்கேயும் ஒரு அவமானத்தை சந்திக்க நேர்கிறது.. “மவனே இதே சிங்கப்பூர்ல நானும் சிட்டிஸனாகி அதுக்கப்புறம் உன்னை வைச்சுக்குறேன்” என்று சவால் விடுகிறார் செந்தில்..!

சிங்கப்பூர் சிட்டிஸனாக பிளான் செய்யும்போது இனியா வந்து மாட்டுகிறார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்தாலும் “தான் சிங்கப்பூர் சிட்டிஸன். இங்கே ஒரு துணிக்கடைக்கு ஓனர்..” என்றெல்லாம் பொய் சொல்ல.. இவரை காதலித்து கல்யாணம் செய்ய விரும்பி செந்தில் இவரைப் பின் தொடர்கிறார்.. இந்தக் காதல் ஜெயித்ததா..? செந்தில் சிங்கப்பூர் சிட்டிஸன் ஆனாரா? என்பதுதான் கடைசி கதை..!

முடிந்த அளவுக்கு கதையை நேர்மையாகவே கொண்டு போயிருக்கிறார்கள்..! செந்திலுக்கு ஒரு பேக்கிரவுண்டு கதை.. இனியாவுக்கும் ஒன்று.. என்று இந்த இரண்டுமே லாஜிக் எல்லை மீறாதவை..! பின்னாடியே துரத்தித் துரத்தி சைட் அடிக்கும் செந்திலுக்கு போனில் ஐ லவ் யூ சொல்ல முனையும்போது அது ராங் நம்பராகி தமிழ்நாட்டில் இருக்கும் மாமன், நான் கடவுள் ராஜேந்திரனுக்கு செல்வது மிக சுவாரஸ்யம்..! 
பேட்மிட்டன் பிளேயர் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக் கொண்டு, அதிலேயும் பெரிய லெவலுக்கு வர நினைக்கும்போது காதல் வந்து கெடுத்துவிடுவதை உருக்கமாகவே சொல்லியிருக்கிறார்..! அந்த இறுதிக்கட்ட சிங்கப்பூர் காட்சிகளை படமாக்கியவிதம் நன்றாகவே இருக்கிறது..!

செந்திலை இன்னமும் கொஞ்சம் மோல்டு செய்யலாம்..! அடுத்தடுத்து நல்ல இயக்குநர்களிடத்தில் சிக்கினால் ஒரு ரவுண்டு வரலாம்..! இனியா பொண்ணு.. நிறைய காட்சிகளில் அழுது கொண்டேயிருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை..! ஆனால் பாடல் காட்சிகளில் ரொம்பவே பிடித்திருக்கிறது.. இவரைவிட இவரது தோழியாக வரும் அந்த ஜாங்கிரி பொண்ணு.. செம டைமிங் சென்ஸ் ஆக்ட்டிங்..! எந்த இடத்திலும் சோடை போகவில்லை..  சைட் சூப்பர்வைஸராக வருபவர் திருமணம் மற்றும் உறவுகள் பற்றி கிளாஸ் எடுப்பது ரசனையானது.. மனிதர் நன்றாகவே நடித்திருக்கிறார்.. புதுமுகம் என்கிறார்கள்.. வாழ்த்துகள்..! 

சிங்கப்பூரிலேயே படமாக்கப்பட்டிருந்தாலும், ஒரே பகுதியிலேயே பல காட்சிகள் திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்த்திருக்கலாம்..! சிங்கப்பூரில் இவ்வளவுதான் இடமா..? இதற்கு முன் வந்த படங்களிலேயே நிறையவற்றை காட்டியிருக்கிறார்களே..? ப்ரியாவைச் சொல்லலாம்..! 

பாடல்கள் ஹூம்.. எழுதியிருக்கிறார்கள்.. இசையமைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். அவைகள் மனதில் உட்கார்கிறதா என்றெல்லாம் யார் பார்த்தார்கள்..? ஒளிப்பதிவாளர் அதிக சிரமம் எடுக்காமல் படமாக்கியிருக்கிறார்.. ஒரே கோணத்தில் சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. தவிர்த்திருக்கலாம்..! இறுதியில் வரும் கடத்தல் சம்பவங்களும்.. ஓட்டமும் ரசிக்க வைக்கிறது என்றாலும், ராஜேந்திரனின் அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட் எதிர்பாராதது..! 

சிறந்த பேட்மிட்டன் பிளேயர்.. சிங்கப்பூருக்காக விளையாடினால் ஈஸியாக சிட்டிஸன் கிடைத்துவிடும் என்பதற்காக இருக்கும்போது காதல் விளையாடி அவரை இங்கே அழைத்து வந்துவிட.. இந்த இடத்தில் இந்தப் படமும் சாதாரண சீரியல் கதை போலாகி கொட்டாவிவிட வைத்துவிட்டது..! அங்கேயே நடப்பதுபோல நிகழ்த்தியிருக்கலாம்.. இருவரின் தவறுகளை, இருவரும் சொன்ன பொய்களை அங்கேயே உதிர்ப்பதைபோல காட்டியிருக்கலாம்தான்..! ஆனாலும் காதல் போராடி ஜெயித்தால்தான் தியேட்டர்களில் வெற்றி கிடைக்கும் என்பதையே அனைத்து இயக்குநர்களும் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதால் இவரை மட்டும் குத்தம் சொல்லி புண்ணியமில்லை..!

ஒரு முறை பார்க்க கூடிய படம்தான்..!

வளர்த்த கடா வடிவேலு..! புண்ணாக்கு குஷ்பு..!

04-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“என்னடா இது? பத்திரிகை செய்திகளையே போட்டுக்கிட்டிருக்க..?” என்று கோபப்படாதீர்கள் மக்களே..!

2011 சட்டமன்றத் தேர்தல் முடிகிறவரையில் இதை தொடர்ந்து செய்வதாகத்தான் உள்ளேன்.. தற்போதைய நிலையில் பத்திரிகைகளில் வரும் சில ஸ்கூப் நியூஸ்களை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கூடவே இணையத்தில் பதிவும் செய்து வைக்க வேண்டியுள்ளது.

உள்ளூரில் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் படிப்பார்கள். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களில் புத்தகத்தை இணையத்தின் மூலமாகப் படிக்காமல் இருப்பவர்களுக்காக இங்கே எனது தளத்தில் அவைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன..!

கோபித்துக் கொள்ளாமல் ஓ.பி. அடிக்கிறேன் என்றெல்லாம் நினைக்காமல் எனது உடன் பிறந்த சகோதரனான எனது கைகளுக்காக என்னைத் திட்டாமல் ‘போய்த் தொலைடா’ என்று பெரிய மனதுடன் மன்னித்து விட்டுவிடுங்கள்..!

இது திரையுலக அரசியல்வியாதிகளின் முதல் மோதல் கட்டுரை..!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியை, 'ஒண்டிக்கு ஒண்டி  வர்றியா?’ என சவால்​விட்டவர், வாழைப்பழ காமெடி நடிகர் செந்தில். இந்தத் தேர்தலிலும், தமிழகம் முழுக்க, தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பிச்சு உதறு​கிறார்.

''மதுரையில் நாடகத்தில் நடிச்சுட்டு இருந்தான் வடிவேலு. ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடிக்கிறதுக்கு சான்ஸ் கேட்டு மெட்ராஸ் வந்தான். அவனைப் பார்த்ததுமே, 'இவன் ஆளே சரி இல்லையே... ஒரு தினுசா இருக்கானேன்’னு கவுண்டமணி அண்ணன் கரெக்ட்டா கண்டுபிடிச்சுத் திட்டினார். நான்தான் அவரை சமாதானம் செஞ்சு, ''அண்ணே ஏதோ நாடகத்துல நடிச்சுப் பொழைப்பை நடத்துறான். சினிமாவுல நடிச்சா இன்னும் கொஞ்சம் கூடுதலா நாலு காசு பார்ப்பான், பாவம்’னு வடிவேலுக்கு வக்காலத்து வாங்கினேன்.

சினிமாவில் அவனுக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண். அந்தப் பாவத்துக்காக அவர் பக்கத்துல இருந்தவங்களை எல்லாம் தன்கிட்டே இழுத்து வெச்சுக்கிட்டான். கஷ்டப்படுற ராஜ்கிரணுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன்னு தப்பா ஒரு சேதியைக் கிளப்பிவிட்டு, தன்னை ஒரு வள்ளலா காட்டிக்கிட்டான். விஷயத்தைக் கேள்விப்பட்டு ராஜ்கிரணே நொந்துபோய்ட்டார். இது மாதிரி அறிமுகம் செஞ்சவரையே அசிங்கம் செஞ்சவன்தான் வடிவேலு.

ஆர்.வி.உதயகுமாரோட 'சின்னக் கவுண்டர்’ படத்துல நானும், கவுண்டமணி அண்ணனும் நடிச்​சோம். எங்ககூட வடிவேலுவும் நடிச்சான். ஷூட்டிங்கில் விஜயகாந்த் எங்களைவிட வடிவேலுவைத்​தான் விழுந்து, விழுந்து கவனிப்பார். அவனை எப்பவும் தன் கூடவே வெச்சுக்குவார். அவர் சாப்பிடுற ஐயிட்டங்களையே அவனுக்கும் பரிமாறச் சொல்லுவார். அந்தப் படத்துல வடிவேலு நிறைய ஸீன்ல நடிக்கறதுக்கு டைரக்டர்கிட்டே சிபாரிசுகூட பண்ணினார் விஜயகாந்த். 'என்னண்ணே இப்படிச் செய்றீங்களே?’ன்னு நான் விஜயகாந்த்கிட்ட கேட்டேன். 'அண்ணே, நீங்க ராமநாதபுரத்து ஆளு. வடிவேலு என் ஊர்க்காரன். என்னோட ஆளு. நீங்க வேணா பாருங்க.. அவன் பெரிய்ய ஆளா வருவான்’னு விஜயகாந்த் என்கிட்ட சொன்னார். அப்படி அவர் வளர்த்த கடா வடிவேலு, இப்போ அவர் மார்பிலேயே பாயுது. அவன், அவரை அசிங்க அசிங்கமாத் திட்டுறான்.

தருமபுரியில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிச்சுப் பேசியிருக்கார் விஜயகாந்த். அப்போ, வேனுக்குள்ளே மைக் விழுந்துடுச்சு. உதவியாளரிடம் குனிஞ்சு எடுக்கச் சொல்லி இருக்கார். அந்தச் சம்பவத்தை கேமரா ட்ரிக் மூலமா வேட்பாளரை அடிச்ச மாதிரி தப்பாப் பிரசாரம் பண்றாங்க. கருணாநிதியைக் கைது செஞ்சப்போ, பரிதாபமாக் கத்துற மாதிரி டப்பிங் வாய்ஸ் கொடுத்தவங்கதானே இந்த தி.மு.க-காரங்க.

இன்னோர் கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது,​ 'அ.தி.மு.க. கொடியைக் கீழே இறக்கச் சொல்லித் திட்டின மாதிரி’ கருணாநிதி டி.வி-யில் காட்டுறாங்க. அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சியோடு கொடிகளுக்கு மத்தியில் திடீர்னு ஒருத்தன் தி.மு.க. கொடியைத் தூக்கிக் காட்டுனான். அதைப் பார்த்துக் கடுப்பான விஜயகாந்த், தி.மு.க. கொடியைக் கிழே இறக்கச் சொல்லித் திட்டினார். டப்புன்னு கேமராவை அ.தி.மு.க. பக்கம் மாத்திக் காட்டி கூட்டணிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துறாங்க.

சென்னையில் அம்மா பேசுன கூட்டத்துல ஜனங்க நெரிசலில் மாட்டுனதா காட்டுறாங்க. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, அந்தக் காட்சியைக் கை கட்டி வேடிக்கைதானே பார்த்தது? உண்மையிலே, தோல்வி பயத்தில், தி.மு.க-வோடு அந்தக் கட்சியின் சேனல்களும் திட்டம் போட்டு ஏற்பாடு செய்த தள்ளுமுள்ளு வேலைதான் அது...'' என்றவர் அடுத்து குஷ்பு விஷயத்துக்குத் தாவினார்.

''ஜெயா டி.வி-யின் ஜாக்பாட் நிகழ்ச்சி மூலமாத்தான் குஷ்பு தமிழைக் கத்துக்கிட்டாங்க. இப்போ, தி.மு.க-வை ஆரம்பிச்ச ஐம்பெரும் தலைவருங்க வாரிசு மாதிரி... தலை, கால் புரியாம ததிங்கிணத்தோம் ஆட்டம் போடுது.

கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டில், 'கற்புன்னு ஒண்ணு இல்லவே இல்லை’ன்னு கேவலமாப் பேசி, நம்ம தாய்மார்களை இழிவுபடுத்தின மோசமான பொம்பளைதான் குஷ்பு. அதை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்ட கட்சிகள் பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தைகளும்.

குஷ்பூ வெளியூர்ல கோர்ட்டுக்கு வந்தப்ப செருப்பு, விளக்குமாறைக் காட்டினது ராமதாஸ், திருமாவளவன் கட்சியோட மகளிர் அணிகள்தான். இப்போ, அவங்களே அந்தப் பொம்பளைக்கு ஆரத்தி எடுக்குறாங்க. எம்.எல்.ஏ. பதவிக்காக அந்த வட நாட்டுக்காரி காலில் போய் ராமதாஸும் திருமாவளவனும் விழுறீங்களே... உங்களுக்கு வெட்கமா இல்லையா..?

“ஆண்டிபட்டியில் போட்டியிடப் பயந்துக்கிட்டு அம்மா ஸ்ரீரங்கத்தில் நிற்கிறதா..” குஷ்பு பேசுது. தைரியசாலி கருணாநிதி எதுக்கு சென்னையை விட்டுட்டுப் பயந்துபோய் திருவாரூர்ல நிக்கிறார்? ஸ்டாலின் எதுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற கொளத்தூர்ல போட்டி போடுறார்? ஏற்கெனவே, போட்டியிட்ட ஆண்டிபட்டியை அம்மா அரசப்பட்டி ஆக்கிட்டாங்க. அதனால, இப்போ ஸ்ரீரங்கத்துல நிற்கிறாங்க. இந்த விவரம்கூட புரியாத புண்ணாக்குதான் குஷ்பு!'' கடகடக்கிறார் செந்தில்!

நன்றி : ஜூனியர் விகடன் - 04-04-2011