18-04-20128
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
“வருகிற ஏப்ரல் 20-ம் தேதி முதல் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பும், வெளியீடும் ஆரம்பமாகும்…” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் அறிவித்திருக்கிறார்.
நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தரப்பு முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இது குறித்து தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இதற்கடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழ்த் திரையுலகத்தின் அடுத்தக் கட்ட நகர்வுகளைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் பேசினார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் விஷால் பேசும்போது, “தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு நாங்கள் பெரிதும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
இனிமேல் சினிமா தியேட்டர்களின் கட்டணம் 150 ரூபாய்க்கு மேல் இருக்காது.
தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினி மயமாக்கப்படும்.
டிக்கெட் விற்பனை இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும்.
தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்
தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன் மூலம் அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதிவரையிலான வெளியீட்டு படங்களை இப்போதே பட்டியலிட இருக்கிறோம்.
இனி வாரத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே வெளியிட அனுமதிக்கப்படும். இதைக் கண்காணிக்கவும் ஒரு புது குழு அமைக்கப்படும்.
வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியாகும். முதல் படமாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘மெர்க்குரி’ திரைப்படம் வெளியாகும்.
கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகளும் வரும் ஏப்ரல் 20, வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும்.
ஆனால், படப்பிடிப்பை துவக்க புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம்.
ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அந்த படக் குழு தயாரிப்பாளர் சங்கத்தின் முன் அனுமதியை பெற வேண்டும்.
அதற்கு அந்த படக் குழுவினர் முழு கதையையும் கையில் தயாராக வைத்திருக்க வேண்டும்,
எந்தெந்த நாட்களில், எந்தெந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என்கிற விவரத்தை கொடுக்க வேண்டும்.
படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
தொழில் நுட்ப கலைஞர்களின் ஒப்பந்த பட்டியலை கொடுக்க வேண்டும்.
இந்த விபரங்களையெல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கடிதம் கொடுக்கும்.
அந்த அனுமதி கடிதத்தை பெப்சி அமைப்பில் படக் குழுவினர் கொடுத்தால் மட்டுமே, பெப்சி தொழிலாளர்கள் அந்த படத்தில் பணியாற்றுவார்கள்.
இந்த புதிய விதியின்படியே வரும் வெள்ளிக்கிழமை முதல் படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும்.
சம்பளப் பிரச்சினை தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் முடிவெடுக்கப்படும்.
‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ‘காலா’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறது. இதற்கு ஒத்துக் கொண்ட தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப் பெரியது.” என்றார் விஷால்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, கௌரவ செயலாளர் கதிரேசன், FEFSI தலைவர் R.K.செல்வமணி, கௌரவ செயலாளர் S.S.துரைராஜ், செயற்குழு உறுப்பினர்களான R.K.சுரேஷ், உதயகுமார், A.L.உதயா, பிரவீன் காந்த், மிட்டாய் அன்பு மற்றும் S.S. குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
Tweet |
0 comments:
Post a Comment