தமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..!

17-04-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே இன்றைய முத்தரப்பு பேச்சு வார்த்தையின் விளைவாக கடந்த 47 நாட்களாக நடந்து வந்த தமிழ்த் திரைப்படத் துறையினரின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இது இன்றைக்கு இப்படித்தான் முடியும் என்று ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான்..!
விஷால் இந்த வேலை நிறுத்தத்தைத் துவக்கியது சரியானதே.. தியேட்டர் உரிமையாளர்களும், கியூப் நிறுவனத்தினரும் இணைந்து தயாரிப்பாளர்களிடம் கோடிக்கணக்கான பணத்தைத் திருடிக் கொண்டேயிருப்பதால் இந்தத் திருட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாய் விஷால் துணிந்து களத்தில் குதித்து கடைசியாய் ஒரு வழியாக வெற்றி பெற்றுவிட்டார்.


தியேட்டர்காரர்களும், கியூப் நிறுவனமும் என்னதான் செய்வார்கள் பார்த்துவிடுவோம் என்று ஒரு பக்கம் விஷாலும் அவரது சங்கத்தினரும் தனித்து நின்றாலும்.. தன்னால் முடிந்த அளவுக்கு இந்தப் போராட்டத்தில் இருக்கும் உண்மைத்தனத்தை சினிமா துறையையும் தாண்டியிருக்கும் பொதுவான மக்களிடத்திலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கொண்டு போயிருக்கிறது. அந்தத் திட்டமிடலுக்கு நமது பாராட்டுக்கள்.
அன்றாடங் காய்ச்சிகளான பெப்சி ஊழியர்களும் வேறு வழியில்லாமல் இந்த வேலை நிறுத்தத்தில் உள்ளே இழுக்கப்பட்டனர். அப்போதுதான் தமிழக அரசின் கவனம் திரைப்படத் துறை மீது விழும் என்பது தயாரிப்பாளர் கவுன்சிலின் எண்ணம். பெப்சி அமைப்பு இதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து உதவியிருக்கிறது.
ஆனால் முட்டாள்களும், திருடர்களும் நிரம்பிய தமிழக அரசும், அமைச்சரவையும் முதலில் திரையுலகத்தினரின் இந்த வேலை நிறுத்தத்தை உதாசீனப்படுத்தினார்கள்.
பத்திரிகையாளர்கள் அமைச்சர்களிடத்தில் இது குறித்து கேட்டபோது “விஷாலே பெரிய ஆள்தானே.. அவரே தீர்த்து வைப்பார்…” என்று சந்தர்ப்பம் கிடைத்தாற்போல் நக்கலடித்தார்கள்.
எல்லாவற்றுக்கும் ஒரு முடிவாய் சமீபத்தில் ‘காவிரி பிரச்சினையின்போது ஐபிஎல் கொண்டாடுவதா?’ என்று கொதித்தெழுந்த தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னையை முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதால் தமிழகத்தின் தற்போதைய கொதி நிலைமை டெல்லிவரைக்கும் போய்விட்டன.
இதையடுத்து ‘புதிய பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அல்லல்பட வேண்டாம்’ என்று நினைத்துதான் இந்த திரையுலக வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசும் முனைந்தது.
தயாரிப்பாளர் சங்கமோ தியேட்டர்களை கையில் வைத்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்களை அதட்டி வழிக்குக் கொண்டு வர முடியாமல் தவித்து, கடைசியில் எப்படியாவது ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர எண்ணியது.
இதேபோல்தான் தியேட்டர் உரிமையாளர்களும்.. கடந்த 47 நாட்களாக தியேட்டரில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்குக் கூட பணம் வசூலாகாமல் தவித்துப் போனார்கள்.
ஆனால் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பினருக்குமே ஈகோ பிராப்ளம் இடித்ததால், வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார்கள்.
தமிழக அரசே கூப்பிட்டு சமரச பேச்சை நடத்துவதால் எப்படியாவது ஏதாவது ஒரு இடத்திலாவது விட்டுக் கொடுத்து பழியை தமிழக அரசின் மீது சுமத்திவிட்டு ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பினரும் திட்டமிட்டுத்தான் பேச்சுவார்த்தைக்கே போயிருக்கிறார்கள்.
அவர்கள் நினைத்ததுபோலவே அரசு தரப்பு பிரச்சினையை தற்காலிகமாவது தீர்க்க வேண்டும் என்ற நினைப்பில் பேச.. இரு தரப்பினரும் அதேபோல் இறங்கி வந்து பேசி கடைசியில் எல்லாவற்றையும் சுமூகமாக முடித்திருக்கிறார்கள்.
இந்த முடிவின்படி சில முக்கிய பிரச்சினைகளை பேசி முடித்திருக்கிறார்கள் இரு தரப்பினரும்.
1. க்யூப் நிறுவனம் ஏற்கெனவே தயாரிப்பாளர்களுடன் தனித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஒப்புக் கொண்ட அதே அளவுக்கான VPF கட்டணக் குறைப்பை இப்போது தமிழக அரசின் முன்னிலையிலும் ஒத்துக் கொண்டுள்ளது.
இதுவரையிலும் வாரத்திற்கு 28 காட்சிகளுக்கு ஒரு தியேட்டருக்கு 9,000 ரூபாயை ஒளிபரப்பும் கட்டணமாக வசூலித்துக் கொண்டிருந்த க்யூப் நிறுவனம், இனிமேல் 5,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கும்.
இதேபோல் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்கிற பிரிவில் ஒரு திரைப்படத்திற்கு 20,000 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த க்யூப் நிறுவனம் இப்போது 10,000 ரூபாயை வாங்கிக் கொள்ள சம்மதித்திருக்கிறது.
அதுவும் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே. அதற்கடுத்து வேறு டிஜிட்டல் நிறுவனங்களின் மூலமாக தியேட்டர்களுக்கு தங்களது தயாரிப்புகளை கொடுப்பது குறித்து தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் பேசி முடித்துக் கொள்ளலாம் என்று முடிவாகியுள்ளதாம். எனவே இந்த 6 மாத காலம் மட்டுமே க்யூப் தனது ஆதிக்கத்தை தமிழகத்தின் தியேட்டர்களில் செலுத்த முடியும்.
2. தியேட்டர் கட்டணத்தை அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியாக வைத்துக் கொள்ளாமல் பட்ஜெட்டை மனதில் கொண்டு சில படங்களுக்குக் கட்டணத்தைக் குறைத்து வாங்க தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
இதனால் மீடியம் பட்ஜெட் மற்றும் பட்ஜெட் படங்களை திரையிடும்போது அவற்றுக்கான தியேட்டர் கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்படும். இதனால் இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
3. தியேட்டர்களில் செய்யப்படும் முன் பதிவுக் கட்டணம் இதுவரையிலும் 35 ரூபாய்வரையிலும் இருந்து வந்தது. இனிமேல் அது வெறும் 4 ரூபாய் மட்டுமே என்பதற்கு தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்களாம்.
அதிலும் முன் பதிவுக்கான இணையத்தளத்தை தயாரிப்பாளர் சங்கமே அரசின் மேற்பார்வையில் செயல்படுத்தித் தரப் போகிறதாம். இதனால் தியேட்டருக்கு வரவிருக்கும் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்திற்கான செலவு பெருமளவு குறையும்.
4. தியேட்டர் டிக்கெட் விற்பனை முழுவதையும் கணிணி மயமாக்கவும் தியேட்டர் அதிபர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்திட்டம் வரும் ஜூன் முதல் தேதி முதல் அமலாகுமாம்.
இதனால் ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூல் நிலவரம் அன்றன்றைக்கே தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்துவிடும். ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலும் தெரிந்துவிடுவதால் பெரிய நடிகர்களுக்குத் தரப்படும் சம்பளம் அடுத்தப் படங்களில் ஒரு வகையில் நிலை நிறுத்தப்படும். இதனால் சமச் சீரான சம்பளம் நடிகர்களுக்கு தரப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமை குறையும்.
5. இதேபோல் தியேட்டர் அதிபர்களுக்கு உதவும்வகையில் மற்ற மாநிலங்களில் இருக்கும் தியேட்டர் பராமரிப்பு கட்டணத்தை தியேட்டர் கட்டணத்தில் சேர்ப்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிடுமாம். இது தியேட்டர் அதிபர்களின் நீண்ட நாள் கோரிக்கை . இக்கோரிக்கை நிறைவேறியதில் தியேட்டர் அதிபர்களுக்கு பெரும் மகிழ்ச்சிதானாம்..!
இன்றைக்கு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைகள் பற்றி நாளைக்குக் கூடவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அதன் பின்பு புதிய திரைப்படங்களை எப்போது திரைக்குக் கொண்டு வருவது, படப்பிடிப்புகளை துவக்குவது எப்போது என்பது பற்றியெல்லாம் முடிவெடுத்து அறிவிப்பார்கள்.
இப்போது, இதுவரையிலான இந்த வெற்றிக்கு முழு முதற்காரணம் நடிகர் விஷால்தான். அவருடைய சங்க செயல்பாடுகளில் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், விஷால் இல்லாமல் வேறு யாராவது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக இப்போது இருந்திருந்தால் நிச்சயமாக இந்த அளவுக்குத் திட்டமிட்டு, புத்திசாலித்தனமாக தியேட்டர் அதிபர்களையும், கியூப் நிறுவனத்தாரையும் அரசின் முன் உட்கார வைத்து அவர்களை சமரசத்துக்கு கொண்டு வந்திருக்க முடியாது.
இது முழுக்க, முழுக்க விஷால் மற்றும் அவரது குழுவினரின் வெற்றிதான். இந்த வெற்றிக்காக நடிகர் விஷாலையும், அவரது குழுவினரையும் பெரிதும் பாராட்டுகிறோம்..!
விஷாலின் எதிர்ப்பாளர்கள்கூட இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் என்றால், அது இந்த வேலை நிறுத்தத்திற்காக விஷால் சொன்ன காரணங்கள்தான்.
இப்படி தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தலைவலியாய் இருந்த முக்கியமான பல விஷயங்களை விஷாலும் அவரது குழுவினரும் தங்களது புத்திசாலித்தனத்தால் செய்து காட்டியிருக்கிறார்கள்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் இனிமேலாவது தங்களது சொந்த, சுய, ஈகோக்களை கைவிட்டு விஷாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சங்கத்தை நல்வழிப்படுத்துவதன் மூலம், தமிழ்த் திரைப்படத் துறையையும் முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.