மெர்க்குரி - சினிமா விமர்சனம்

25-04-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கார்த்திகேயன் சந்தானம், ஜெயந்திலால் காடா ஆகியோர் தயாரிப்பில் ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
படத்தில் பிரபுதேவா, சனந்த், இந்துஜா, தீபக் ரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷான்க் புருஷோத்தமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு, இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், ஒலி வடிவமைப்பு – குணால் ராஜன், கலை இயக்கம் – சதீஷ்குமார், சண்டை இயக்கம் – அன்பறிவ், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா, தயாரிப்பு – கார்த்திகேயன் சந்தானம், ஜெயந்திலால் காடா, எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ்.

பாதரசம் தயாரிக்கும் நிறுவனங்களால் உலகம் முழுவதுமே பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொடைக்கானலில் தெர்மாமீட்டரை தயாரிக்கும்விதமாக பாதரசத்தை உருவாக்கும் ஆலை உருவாக்கப்பட்டது.
இந்த ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு பாதரசக் கழிவுகளால் உடல் உபாதைகள் ஏற்பட்டன. அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் பலரும் உடல் ஊனமுற்றவர்களாக பிறந்தனர். பலருக்கு பேச்சுக் குறைபாடு இருந்தது. சிலருக்கு கண் பார்வையில்லாமல் போனது. பாதரச கழிவுகள் காற்றில் கலந்ததினால் சுற்றுப்புறச் சூழலும் கெட்டு, நிலத்தடி நீரும் கெட்டு கொடைக்கானலின் சுகாதரத்திற்கே கேடு விளைந்தது. இதன் பின்பு மக்கள் பெரும் போராட்டம் நடத்தி அந்த ஆலையை மூட வைத்தனர்.
ஆனால் அந்த ஆலையினால் உடல் ஊனமாகி, பேசாக் குழந்தைகளாகி, கண்ணில்லாதவர்களுக்கு இன்றுவரையிலும் எந்தவித நஷ்டஈடும் கிடைக்கவில்லை. இன்றுவரையிலும் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதரச ஆலையை மையமாக வைத்து ஒரு பேய் கான்செப்ட்டையும் இணைத்து, திகில், சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த படமாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
சனந்த், இந்துஜா, தீபக் ரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷான்க் ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஐவருக்குமே காதும் கேட்காது, வாய் பேசவும் முடியாது. ஒரே பள்ளியில் படித்தவர்கள். கல்லூரி முடித்தவர்கள். தங்களது படிப்பு முடிந்த சந்தோஷத்தை கொடைக்கானலில் நண்பனின் வீட்டில் கொண்டாடுகிறார்கள்.
அன்றைய இரவில் இந்துஜாவிடம் தனது காதலைச் சொல்வதற்காக அவளை வெளியில் அழைத்துச் செல்கிறார் சனந்த். இவர்களுடன் கூட்டாளிகளும் சேர்ந்து கொள்கிறார்கள். வீடு திரும்பி வரும்போது எதிர்பாராதவிதமாக பிரபுதேவா மீது கார் மோத.. அவர் பலியாகிறார்.
தப்பிக்க நினைக்கும் ஐவரணி பிரபுதேவாவை தங்களது காரிலேயே வைத்து தூக்கிச் செல்கிறார்கள். எங்கேயாவது ஓரிடத்தில் பிணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் வரும் வழியில் மூடப்பட்டிருக்கும் பாதரச ஆலை இவர்களின் கண்ணில் சிக்குகிறது.
உடனேயே ஆலைக்குள் போய் அங்கே பிரபுதேவாவை ஒரு பெரிய பள்ளத்தில் போட்டுவிட்டு தப்பிக்கிறார்கள். மறுநாளே ஊரைவிட்டு போக நினைத்திருக்கும்போதுதான் தீபக்கின் ஐபாட் காணாமல் போனது தெரிகிறது. இந்த ஐபாட் போலீஸ் கையில் சிக்கினால், இவர்கள் கூண்டோடு மாட்டுவார்கள் என்பது தெரியுமாதலால் மறுபடியும் பாதரச ஆலைக்கு ஓடி வருகிறார்கள் நண்பர்கள்.
அங்கே தேடியலைந்து ஐபாடை எடுத்தாலும் புதைத்துவிட்டு போன இடத்தில் பிரபுதேவா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகிறார்கள். ஒருவேளை பிரபுதேவாவுக்கு உயிர் இருந்து எழுந்து போய்விட்டாரோ என்றெண்ணி அவசரமாக திரும்புகிறார்கள்.
ஆனால் இவர்கள் திரும்பி வரும்போது  காரில் அமர்ந்திருந்த இந்துஜா அங்கே இல்லை. இந்துஜாவை தேடி ஆலைக்குள் செல்கிறார்கள் நண்பர்கள். தேடுகிறார்கள். அங்கே தீபக்கின் கண்களுக்கு ஒரு பீரோவுக்குள் அமர்ந்த நிலையில் இருக்கிறார் பிரபுதேவா.
தாங்கள் புதைத்துவிட்டு போன பிரபுதேவா இங்கே எப்படி என்று யோசிப்பதற்குள் தீபக் பிரபுதேவாவால் தாக்கப்பட்டு பலியாகிறார். இப்படி நண்பர்களுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையில் கண்ணா மூச்சி ஆட்டம் தொடர்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவு என்ன என்பதுதான் இந்த ‘மெர்க்குரி’ படத்தின் சுவையான திரைக்கதை.
படத்தின் துவக்கத்தில் சமூக விழிப்புணர்வோடு ஒரு கதையைக் கொடுக்கவிருக்கிறார்கள் என்ற ஆர்வத்தைத் தூண்டினார்கள். ஆனால் போகப் போக அது பேய்ப் படமாக உருவெடுக்கிறது. கடைசியில் மீண்டும் இதுவொரு சமூக விழிப்புணர்வு படமாக முடிகிறது. இந்த விந்தையான திரைக்கதையை கார்த்திக் சுப்பராஜ் ஏன் கையிலெடுத்தார் என்று தெரியவில்லை.
ஒன்று சமூக விழிப்புணர்வை உணர்த்தும் படமாகவே இதனைக் கொணர்ந்திருக்கலாம். அல்லது பேய், பிசாசு இரண்டும் கலந்த மர்மம், திகில் படமாகவே கொண்டு சென்றிருக்கலாம். இரண்டையும் தொட்டுச் சென்றுள்ளதால் இது எந்த மாதிரியான திரைப்படம் என்பதை திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.
ஆனால், இயக்கத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை கார்த்திக். அவருடைய முந்தைய படங்களை போலவே இதுவும் எழுத்து, இயக்கத்தில் இவருக்கு பெயர் சொல்லும் படம்தான்.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1987-ம் வருடம் வெளிவந்த ‘பேசும் படம்’ என்னும் திரைப்படம்தான் தமிழில் கடைசியாக வெளிவந்த மெளனப் படம். அதற்கு பின்பு 30 வருடங்களுக்குப் பிறகு இத்திரைப்படம் அழுத்தமான கதையுடன், மெளனப் படம் என்பதற்கான சரியான காரணத்துடனும் வந்திருக்கிறது.
வாய் பேச முடியாத, காது கேளாத தன்மையுடன் வாழும் 5 நண்பர்கள் பற்றிய கதையுடன் பிரபுதேவாவின் ஒரு பாதிக்கப்பட்ட தன்மையும் சேர்ந்து கொள்ள இது நிச்சயமாக கலை வடிவ படமாகத்தான் எடுக்கப்பட்டாக வேண்டும். அப்படித்தான் கார்த்திக்கும் படமாக்கியிருக்கிறார்.
பிரபுதேவா எப்படி இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. இதுநாள்வரையிலான பிரபுதேவாவை வேறு ஒரு வடிவத்தில் இந்தப் படத்தில் பார்க்கலாம். தனது இயலாமையை சைகை மொழியிலேயே வெளி்ப்படுத்தும் காட்சியில் மனதைத் தொட்டுவிட்டார்.
இதேபோல் அந்த குறைபாடு உள்ளவர்களை போலவே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். அதே முகபாவனை, காதுகளின் கூர்மையைக் காட்டும் செயல்.. ஒட்டு மொத்த அவயங்களின் வெறியையும் கை, கால்களில் காட்டுவது.. தன்னால் முடியாத காரியத்தை இந்துஜாவின் கண்கள் மூலமாகப் பார்த்துவிட்டு பின்பு தனது இலக்கு நோக்கிச் செல்வது என்று அந்தக் காட்சிகளை காவியம்போல படமாக்கியிருக்கிறார் கார்த்திக். அதில் கவிதையாய் படர்ந்திருக்கிறார்கள் பிரபுதேவாவும், இந்துஜாவும்.
இந்துஜா இன்னுமொரு நடிப்பு திலகமாக வர வாய்ப்பிருக்கிறது. அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். காதலனிடம் ஏன் இத்தனை தாமதமாக காதலைச் சொல்கிறாய் என்று செல்லக் கோபத்தோடு கேட்கும் இந்துஜாவை நமக்கே பிடித்துப் போகிறது. இடையில் ஒரு அரை மணி நேரம் அவர் இல்லாமலேயே கதை நகர்ந்தாலும் கிளைமாக்ஸில் இவர்தான் படத்தை முடித்து வைக்கிறார். படத்தின் ஹைலைட்டே இந்துஜாவின் மூலமாக பிரபுதேவா இந்த உலகத்தைப் பார்க்கும் காட்சிதான். வாவ்.. வெல்டன் கார்த்திக் சுப்பராஜ்.
இந்துஜாவின் நண்பர்களாக நடித்திருக்கும் அனைவருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இந்துஜாவின் காதலனாக நடித்திருக்கும் சனந்த். இவர் தப்பித்து ஓடும் காட்சியை மிகவும் பரபரப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
படத்திற்கு பலம் சேர்த்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும்தான். பாதரச ஆலையின் உட்புறத்தில் நடப்பது அனைத்தையும் கலர் டோனில் வடிவமைத்திருந்தாலும் அந்த இருள் கவியும் காட்சிகளெல்லாம் கண்ணுக்குக் குளுமையாகவே தெரிகின்றன.
இதேபோல் பாடல்கள் இல்லாததை போக்கும்வகையில் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். படத்தின் சஸ்பென்ஸ், திரில்லரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இசையமைப்பாளருக்கு இருந்ததால் அதனை செவ்வனே செய்திருக்கிறார் சந்தோஷ்.
கார் விபத்தாகி நிற்கும் காட்சியிலும், இந்துஜா கடத்தப்படு்ம் காட்சியிலும், பிரபுதேவா அவர்கள் ஒவ்வொருவரையும் சம்ஹாரம் செய்யும் காட்சியையும், சண்டை காட்சிகளையும் ஒரு திடுக் உணர்வோடு பார்க்க வைக்கும்வகையில் தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
ஒட்டு மொத்தமாய் படம் பேய்ப் படம் என்பதாக உருமாறியிருந்தாலும் அதில்கூட பிரபுதேவா செய்வதில் கொஞ்சமும் நியாயம் இல்லாததுபோலவே தெரிகிறது. பிரபுதேவாவின் கேரக்டர் ஸ்கெட்ச் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது.
தெரியாமல் செய்தார்களா.. தெரிந்து செய்தார்களா என்பதே தெரியாமல் அவர்களை கொலை செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதானா..? அதேபோல் இந்த இளைஞர்கள் அனைவரும் ஏன் இப்படி அநியாயத்துக்கு பயந்து சாகிறார்கள் என்பதற்கும் காரணம் இல்லை. ஒருவருக்குக்கூடவா தைரியம் இல்லை..? பேயா இல்லை பிசாசா.. என்பதெல்லாம் தெரிவதற்கு முன்பாகவே இவர்களின் பய உணர்வே தேவையற்றதாகியிருக்கிறது.
மெளனப் படம் என்பதன் மூலமும் ஒரு விஷயத்தைச் சொல்ல முடியும் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். பாதரசம் மட்டுமல்ல.. மக்களின் உயிரோடு விளையாடும் எந்தவகையான ஆலைகளும், வேலைவாய்ப்பு என்கிற பொரியைக் காட்டி மக்களிடத்தில் வரக் கூடாது என்பதற்கு இந்தப் படம் ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை, காவிரி நீர்ப் படுகையில் மீத்தேன் வாயு, நியூட்ரினோ திட்டம், கூடன்குளம் அணு உலை என்று மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாய் இருக்கும் இந்த நேரத்தில் இவை போன்ற படங்கள் வரவேற்கத்தக்கதுதான்..!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கு இதற்காகவே நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

0 comments: