ஆரம்பமே அட்டகாசம் - சினிமா விமர்சனம்

06-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தில் கதாநாயகனாக ‘லொள்ளு சபா’ ஜீவாவும் அவருக்கு ஜோடியாக  சங்கீதா பட்டும்  நடித்திருக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், ஸ்ரீரஞ்சனி, கு.ஞானசம்பந்தன், வையாபுரி, சாம்ஸ், நாத், ஆகியோரும் நடிக்கிறார்கள். சுவாதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை ரங்கா இயக்கியிருக்கிறார்.
அப்பா பாண்டியராஜன் தான் காதலித்த பெண்ணை மணக்க முடியாமல் போய்விட்டதால் தனது மகனுக்கு சின்ன வயதில் இருந்தே காதலித்து மணம் செய்து கொள்ளும்படி சொல்லிக் கொடுக்கிறார்.
மகனான ‘லொள்ளு சபா’ ஜீவா பெரியவனாகி அதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு காதலிக்க பெண் தேடி அலைகிறார். இந்த நேரத்தில்தான் படமே துவங்குகிறது.

பார்ப்பதற்கு பெரியப்பா, சித்தப்பா வயதில் இருக்கும் சாம்ஸும், வையாபுரியும், ஹீரோ ‘லொள்ளு சபா’ ஜீவாவிற்கு தோஸ்த்துகளாக வாய்க்கிறார்கள். இதில் ஆண்ட்டிகளை கரெக்ட் செய்யும் வேலை வையாபுரிக்காம்..!
ஒரு நாள் கடற்கரையில் இந்த டீம் அமர்ந்திருக்கும்போது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வரும் நாயகி சங்கீதா பட் ஒரு கிப்ட்டை தருகிறார். அதில் தாஜ்மஹால் இருக்கிறது. காதலிக்க ஆள் தேடும் நேரத்தில் இப்படியொரு பெண்ணே தேடி வந்து, தாஜ்மஹால் கொடுத்தால் காதல் வராதா என்ன..?
ஹீரோவுக்குள் வந்துவிட்டது. ஆனால் வெளியில் சொல்லாமல் மறைக்கிறார். காதலி முன்பு பந்தா பண்ணுவதற்காக நண்பனின் பைக்,  மற்றும் குடும்பத்தார் கொடுக்கும் பணம் என்று அனைத்தையும் காதலிக்காக இறைக்கத் துவங்க.. ஒரு கட்டத்தில் சங்கீதா பட் முந்திக் கொண்டு ஜீவாவை தான் காதலிப்பதாகச் சொல்கிறார். காதலர்கள் இறக்கை கட்டி பறக்கிறார்கள்.
உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்களே.. அதனால் பொறுப்பாக வேலைக்கு போனால்தான் பெண் கேட்டு போக முடியும் என்பதால் சாம்ஸின் அலுவலகத்திலேயே வேலைக்குச் செல்கிறார் ஜீவா. ஹைதராபாத்தில் மூன்று மாதங்கள் டிரெயினிங் என்று டிரான்ஸ்பர் செய்ய காதலியை பிரிய முடியாமல் பிரிந்து செல்கிறார் ஜீவா.
ஜீவா ஹைதராபாத்தில் இருந்தபோது திடீரென்று நாயகி போனை எடுக்க மறுக்கிறாள். போன் சுவிட்ச் ஆஃபிலேயே இருக்கிறது. தொடர்பு கொள்ளவே முடியாமல் போனதால் எப்போதடா மூன்று மாதம் முடியும் என்று காத்திருந்து ஓடி வந்து பார்க்கிறார் ஜீவா.
இங்கே காதலி மிஸ்ஸிங்.. வீட்டை காலி செய்துவிட்டு போய்விட்டதாகச் சொல்ல வழக்கமான சினிமா காதலர்கள் போல டாஸ்மாக் கடை விஜயம், சோகமயம் என்று தன்னைத்தானே நொந்து கொண்டிருக்கும் நேரத்தில் காதலியை ஒரு இடத்தில் பார்த்துவிடுகிறார் ஜீவா.
நாயகியை பின் தொடர்ந்து சென்று அவரை மடக்கிப் பிடிக்கிறார். கேட்டால் அவர் ஒரு கதை சொல்கிறார். வீட்டார் எதிர்ப்பு.. கொஞ்ச நாளைக்கு நாம் சந்திக்காமல் இருக்கலாம் என்று ஒரு கதை சொல்லி அனுப்பி வைக்கிறார்.
ஆனால் இதற்குள் காதலிக்குள் இன்னொரு காதல் உருவாகிவிட்டது. இப்போது காதலிப்பவர் மிகப் பெரிய கோடீஸ்வரர். இதனால் காதல் தடம் புரண்டு அந்தப் பக்கம் போய்விட.. இது எதுவுமே தெரியாமல் ஜீவா காதலி தன்னைத்தான் திருமணம் செய்து கொள்வாள் என்று காத்திருக்கிறார். ஆனால் காதலியோ புதிய கோடீஸ்வர காதலரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் நிம்மதியாக செட்டிலாக வழிவகை தேடிக் கொண்டிருக்கிறார்.
கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை..!
சாதாரண கதை.. அதனால் மிக சாதாரணமாகவே படமாக்கியிருக்கிறார்கள். ஜீவா தன்னால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். நடனமாடுகிறார். சோகக் காட்சிகளில்தான் அவரது சோகத்தை நம்மால் உணர முடியவில்லை.
ஹீரோயின் சங்கீதா பட்டுக்கு இது முதல் படம் போலவே தெரியவில்லை. இவரை மட்டும் நன்கு நடிக்க வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் டப்பிங் வாய்ஸ் கரடு முரடாக தரை புரண்டோடுகிறது. கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்..!
“தேங்க்யூ. தேங்க்யூ ஸோ மச்.. தெளஸண்ட் டைம் ஸோ மச்…” என்று ஹீரோயின் அடிக்கடி சொல்லும்போது, இனிமேல் பெண்களிடம் எச்சரிக்கையாகவே பேச வேண்டும் என்று ஆயிரம் முறை எச்சரிக்கை செய்கிறார் இயக்குநர்.
பெரியப்பா வையாபுரியும், சித்தப்பா சாம்ஸும்தான் படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றியிருக்கிறார்கள். அதிலும் சாம்ஸின் டயலாக் டெலிவரி அழகு.
புதுமையான அப்பாவாக பாண்டியராஜன், பேக்கு அம்மாவாக ஸ்ரீரஞ்சனி.. இன்னொரு ஹீரோவாக நடித்தவரும் ஏதோ ஒன்றாக நடித்திருக்கிறார்கள்..!
கிளைமாக்ஸில் ரிஜிஸ்தரர் அலுவலகத்தில் “கொடுத்த காசை திருப்பிக் கொடு” என்று ஈட்டிக்காரன் கணக்காக ஜீவா திரும்பிக் கேட்கும்போது அந்தக் காதலுக்கே அர்த்தமில்லாமல் போகிறது. சரி.. யதார்த்த வாழ்க்கையோடு நாங்களும் காதலை இணைத்துக் கொள்கிறோம் என்று இயக்குநர் முடிவெடுத்துவிட்டார் போலிருக்கிறது.
சற்றும் எதிர்பார்க்காத அந்த கிளைமாக்ஸ் காட்சியில் புது மாப்பிள்ளையும் ஏமாந்த சோணகிரியாக நஷ்ட ஈடு பணத்தை அள்ளிக் கொடுப்பதை பார்க்கும்போது ஹீரோயின் எடுத்த முடிவு சரியானதுதான் என்று தோன்றுகிறது. இப்படியொரு இளிச்சவாய மாப்பிள்ளையை எந்தப் பெண்ணும் விட்டுவிடக் கூடாது என்பதே பெருவாரியான ரசிகர்களின் கருத்தாக இருக்கும்.
ஆர்.ஆனந்தின் ஒளிப்பதிவில் ஒரு டூயட் பாடலை கண்ணுக்குக் குளிர்ச்சியாக்கும் அளவுக்குப் படமாக்கியிருக்கிறார்கள். ஜெய.கே.தாஸின் பாடல்களும் கேட்கும் ரகமில்லை. ஏதோ பாடல்களை போட்டு ஒப்பேற்றியிருக்கிறார்கள்.
இதுநாள்வரையிலும் காதலன் என்ற போர்வையில் காதலிகளை ஏமாற்றிவிட்டுப் போனவர்களைத்தான் அதிகமாக திரைப்படங்களில் காண்பித்திருக்கிறார்கள். இதில் காதலனை ஏமாற்றிவிட்டுப் போகும் காதலியை காட்டியிருக்கிறார்கள். அவ்வளவுதான்..!
ஹீரோவான ‘லொள்ளு சபா’ ஜீவா முதல் முறையாக ஹீரோ வேஷம் கட்டியிருக்கும் படம் என்பதால் அவருக்கும் பொருத்தமாக இருக்குமே என்றெண்ணிதான் ‘ஆரம்பமே அட்டகாசம்’ என்று தலைப்பு வைத்தார்கள் போலும்..!
ஆனால் படத்தில் ‘அட்டகாசம்’ எதுவும் இல்லை என்பதுதான் உண்மை..!

1 comments:

vimal said...

Appo Aarambame padumosamnu solla varringa ?