திறப்பு விழா - சினிமா விமர்சனம்

12-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Poomika Infra Developers நிறுவனத்தின் சார்பில் எம்.ஜெரினா பேகம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இதில் ஜெய ஆனந்த் ஹீரோவாகவும், மணீஷா ஜித் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் மனோபாலா, ரோபோ சங்கர், ஜி.எம்.குமார், ‘பசங்க’ சிவக்குமார், பாவா லட்சுமண், நாதஸ்வரம் முனீஸ், விஜய் சந்தர், கவிதா பாலாஜி, ரெங்கநாயகி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கலை – எஸ்.எஸ்.மூர்த்தி, நிர்வாகத் தயாரிப்பு – பி.ரத்தினவேல், கே.சி.விஜய், மக்கள் தொடர்பு – பெரு.துளசி பழனிவேல், இசை வசந்த ரமேஷ், ஒளிப்பதிவு – ஆர்.பி.செல்வா, படத் தொகுப்பு – பி.ஜி.வேல், கதை, வசனம் – நிலம், திரைக்கதை, இயக்கம் – கே.ஜி.வீரமணி, தயாரிப்பு – எம். ஜெரினா பேகம்.
இன்றைய தமிழகத்திற்கு தேவையான ஒரு கருத்தை சரியான நேரத்தில், சரியான வகையில்,  தெளிவான விதத்தில் சொல்லியிருக்கிறது இந்தப் படம்.

மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ஆளும் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சியினரும், பொது நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வரும் நிலையில் அதையே படத்தின் மையக் கருத்தாகக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை நாம் இரு கரம் கூப்பி வரவேற்கத்தான் வேண்டும்..!
தமிழகத்தின் ஒரு குக்கிராமம். விவசாயம் பொய்த்துப் போன நிலைமை. நிலங்களெல்லாம் களைச் செடிகள் பூத்து வேரற்றுப் போய் கிடக்கின்றன. அந்த ஊரில் ஒரு டாஸ்மாக் கடை. அங்கே வேலைக்கு வருகிறார் ஹீரோ ஜெய ஆனந்த். தான் இந்த வேலைக்காக தேர்வு செய்யப்பட்டவுடன் இந்த ஊருக்குத்தான் செல்வேன் என்று அடம் பிடித்து போஸ்டிங் வாங்கி வந்திருக்கிறார் ஹீரோ.
டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையைவிடவும் 10, 15 ரூபாயை கூடுதல் தொகையாக வைத்துதான் விற்பனை செய்கிறார். மாலை வேளைகளில் குடிக்க வந்தவர்களின் மனைவிமார்களையும், குடும்பத்தினரையும் பார்த்தால் அந்த 10, 15 ரூபாயையும் அவர்களிடம் கொடுக்கும் அளவுக்கு நல்லவுள்ளம் படைத்தவர் ஹீரோ. மாட்டை விற்று குடிக்க வந்தவரிடமிருந்து, மாட்டையும் மீட்டுக் கொண்டு வந்து வீட்டில் ஒப்படைக்கும் நல்லவராகவும் இருக்கிறார்.
இவர் மீது ஊர்ப் பெரியவரான ஜி.எம்.குமாரின் மகளான ஹீரோயின் மணீஷா ஜித்திற்கு காதல். இந்தக் காதலை முதலில் ஏற்க மறுக்கிறார் ஹீரோ. தனக்கு நிறைய வேலையிருப்பதாகவும், தான் இந்த நேரத்தில் யாரையும் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்திலேயே இல்லை என்றும் சொல்கிறார். ஆனாலும் ஹீரோயின் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் டாஸ்மாக் கடையருகில் பார் திறந்த உள்ளூர் அரசியல் பிரமுகர் அங்கேயே போலி சரக்கினை விற்பனை செய்கிறார். இதனை எதிர்த்து சண்டையிடுகிறார் ஹீரோ. விஷயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறது. ‘போலி சரக்கு விற்பனையை தடுத்த டாஸ்மாக் ஊழியர்’ன்னு வெளில பெயர் பரவி நமக்கு ஆபத்தாயிரும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சமரசம் செய்து வைத்து அனுப்பிவிடுகிறார்.
பாரை நடத்தவிடாமல் ஹீரோ தடுப்பதாக வில்லன் நினைக்கிறார். இந்த நேரத்தில் அங்கே விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்து சிலர் உடனடியாக உயிர் இழக்கிறார்கள். இதில் தந்திரமாக ஹீரோவின் பெயரை வில்லன் இழுத்துவிட.. ஹீரோ கைதாகி ஜெயிலுக்கு போகிறார்.
ஆனால் ஹீரோ மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கும் ஹீரோயின் தனது முயற்சியால் அவரை ஜாமீனில் எடுக்கிறார். ஊருக்குள் வரும் ஹீரோவை ஊரைவிட்டு வெளியேறும்படி சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். அப்போதுதான் தான் யார், தான் எதற்காக இந்த ஊருக்கு வந்தேன் என்னும் உண்மையை பிளாஷ்பேக்கில் சொல்கிறார் ஹீரோ.
ஹீரோவும் அதே ஊரில் பிறந்தவர்தான். அவருடைய தந்தை பெரும் குடிகாரர். வயதுக்கு வந்த ஒரு அக்கா இருக்கும் நிலையில் அப்பாவின் குடிப் பழக்கம் அந்தக் குடும்பத்தை வருத்தத்தில் வைத்திருக்கிறது.
அக்காவுக்கு வரன் வருகிறது. 10 பவுன் போடுவதாக முன்கூட்டியே சொல்லியிருந்தும், கூடுதலாக 5 பவுன் கேட்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். எப்படியாவது தருவதாகச் சொல்லிவிடுகிறார் அம்மா. அந்தக் கூடுதல் 5 பவுனுக்காக வீட்டில் இருக்கும் விதை நெல்லை விற்கலாம் என்கிறார் அம்மா.
அந்த விதை நெல்லை விற்பனை செய்ய டவுனுக்குச் சென்ற ஹீரோவின் அப்பா, நெல்லை விற்றுவிட்டு ஊர் திரும்பும் வழியில் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தவர் மூக்கு முட்ட குடித்து மட்டையாகிறார். மறுநாள் விடியும்போது அவர் கையில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை.
ஊரில் அன்றைய தினம்தான் திருமணம் என்பதால் அனைவரும் அவருக்காகக் காத்திருக்கிறார்கள். கடைசியில் பணமும் இல்லாமல் வீடு திரும்ப வேண்டியதாகிவிட்டதே என்கிற குற்றவுணர்ச்சியில் ஹீரோவின் அப்பா விஷமருந்து தற்கொலை செய்து கொள்கிறார். அப்போதே ஹீரோவின் அம்மாவும் மாரடைப்பால் காலமாக.. சிறு வயதிலேயே அனாதையாகிவிட்டார் ஹீரோ.
அதன் பின்னர் வெளியூர் சென்று படித்து இந்த வேலைதான் வேண்டும் என்று வந்தவர் ஊர் மக்களை குடியில் இருந்து மீட்கலாம் என்று திட்டம் போட்டுத்தான் வந்ததாகச் சொல்கிறார். ஹீரோவின் அம்மா நாட்டு வைத்தியர் என்பதால் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த ஊர் மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள்.
தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை நமக்குத் தேவையில்லை. அதனை இந்த ஊரில் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று சொல்லி போராடத் தூண்டுகிறார் ஹீரோ. ஊர் மக்கள் குறிப்பாக பெண்கள் இதற்கு ஒத்துக் கொள்ள.. போராட்டம் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்தை வில்லனின் ஆட்களும், லஞ்ச போலீஸும் இணைந்து முறியடிக்க நினைக்கிறார்கள். போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் அமைதி வழி அஹிம்சா போராட்டத்தை சீர்குலைக்கிறது காக்கி அணி. ஆனால் இதன் விளைவாய் ஹீரோயின் ஒரு முடிவையெடுக்க.. அது மது என்னும் அரக்கனை அந்த ஊரைவிட்டே துரத்துகிறது. ஆனால் ஹீரோவும், அந்த ஊரும் இழப்பது மிகப் பெரிய விலை மதிக்க முடியாத உயிரை..?! அதுதான் கிளைமாக்ஸ்..!
அறிமுக ஹீரோவான ஜெய ஆனந்த் தனக்கு கிடைத்த வாய்ப்பில், தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பைக் காட்டியிருக்கிறார். தான் யார் என்பதை ஊர்க்காரர்களுக்கு சொல்கின்ற காட்சியில் மனதைத் தொடுகிறார். இறுதியில் ஊர்க்காரர்களை ஒன்று திரட்டி டாஸ்மாக் கடையை விரட்டும் காட்சியில் போராளியாய் தனது குணத்தைக் காட்டியிருக்கிறார்.
நாயகியான மணீஷா ஜித் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருப்பதால் அந்த அனுபவத்தோடு நடித்திருக்கிறார். ஹீரோவை வம்பிழுக்கும் காட்சியில் தனது வயதையொத்த ஆக்சன்களை காட்டியிருக்கிறார். கிளைமாக்ஸில் தனக்குள்ளிருக்கும் ஒரு போர்க்குணத்தையும் காட்டியிருக்கிறார். இடையில் ஒரு பாசமான மகளாய்.. ரோஷமான மகளாய்.. அன்பான மகளாய் என்று பலவிதங்களிலும் குழந்தைத்தனமான முகத்துடன் இவரை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.
ஆனால் எல்லா காட்சிகளிலும் ஹீரோயினை தொப்புளை காட்டிக் கொண்டும், ஒரு சைடாக மார்பை காட்டிக் கொண்டும் நடிக்க வைத்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. இந்தப் படத்தில் இது போன்ற கவர்ச்சி அவசியம் தேவைதானா இயக்குநரே..?
ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் பசங்க சிவக்குமாரும், அம்மாவாக நடித்திருக்கும் கவிதா பாலாஜியும் அந்த பிளாஷ்பேக் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். பணம் பறி போனவுடன் சிவக்குமார் அழுது புலம்பும் காட்சியில் அசத்தல் நடிப்பு. அதேபோல் கவிதா பாலாஜியும் தனது அழுத்தமான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
அந்தப் பகுதி மக்களையும் பல கேரக்டர்களில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். மண்ணின் மைந்தவர்களாக உலா வந்தவர்களில் யாரும் சோடை போகவில்லை. மதுவருந்தியவர்களாகவும், ஊர்ப் பெண்களாகவும் கொஞ்சமும் வித்தியாசம் காட்டாமல் நடித்திருக்கிறார்கள்.
ஒரு வித்தியாசமான கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் இருக்கும் வில்லனின் நடிப்பும் சுவாரஸ்யமானதுதான்..! அந்த ஒரு பாடல் வரி மட்டும் அவருடைய நினைவுக்கே வராமல் இருப்பதெல்லாம் சுவையானது..! இப்படி ஒட்டு மொத்தமாக இயக்குநரின் இயக்கத் திறமையை பாராட்டத்தான் வேண்டும்.
ஆர்.பி.செல்வாவின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளுமே அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. பாடல் காட்சிகளில் கொஞ்சம் கூடுதல் அக்கறையுடன் படமாக்கியிருப்பது தெரிகிறது.
வசந்த ரமேஷின் இசையில் பாடல்கள் அனைத்துமே கிராமத்து இசையை மையமாக வைத்தே இசைக்கப்பட்டிருக்கிறது. கேட்கும் ரகமான பாடல்கள்தான். ‘தட தட ரயிலொன்னு ஓடுது’ பாடல் தாளம் போட வைக்கிறது. ‘இந்தா இந்தா வாங்கிக்கய்யா’ பாடல் கூடவே பாடவும் வைத்தது. ‘பருத்தி பூ பூக்கும்’ என்ற தஞ்சை செல்வி பாடியிருக்கும் பாடலும் ஒரு கலக்கல். ‘அக்டோபர் மழையில்’ பாடலும், ‘வெள்ளாடு மேஞ்ச பொட்டக்காடு’ பாடலும் தனி ரகம்..!
படம் இன்றைய தமிழகத்தின் சென்சிட்டிவ்வான பிரச்சினையை பேசுவதால் பல வசனங்கள் இன்றைய டாஸ்மாக் கடை எதிர்ப்பாளர்களுக்கு உரம் போடுவது போல் எழுதப்பட்டிருக்கின்றன. வசனம் எழுதிய வசனகர்த்தா நிலம் அவர்களுக்கு நமது நன்றிகள்..!
ஹீரோயினை பெண் பார்க்க வரும் காட்சியில் தெறிகட்டும் அளவுக்கு நகைச்சுவை தெறிக்கிறது.. இதையே படம் முழுக்க கொண்டு போயிருக்கலாமே இயக்குநரே..!? கோட்டைவிட்டுவிட்டீர்களே..?!
கிராமத்து கதை, சின்ன பட்ஜெட் என்றாலும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தைக் கூட்டியிருந்தாலும், திரைக்கதையை இன்னும் அதிகளவு சுவாரஸ்யமாக அமைத்திருந்தாலும் இந்தப் படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்..! ஜஸ்ட் மிஸ்ஸிங்..!
படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!

0 comments: