எய்தவன் - சினிமா விமர்சனம்

11-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இத்திரைப்படத்தை Friends Festival  Films  நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் கலையரசன் ஹீரோவாகவும், ‘சைத்தான்’ நாயகி சாட்னா டைட்டஸ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
மேலும், ‘ஆடுகளம்’ நரேன், வேல ராமமூர்த்தி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், வினோத், சரித்திரன், கெளதம், செளம்யா, ராதா, ரேவதியம்மா, லட்சுமி, சாண்ட்ரா எமி மற்றும் பலர்  நடித்துள்ளனர்.
தயாரிப்பு – எஸ்.சுதாகரன், எழுத்து, இயக்கம் – சக்தி ராஜசேகரன், ஒளிப்பதிவு – சி.பிரேம்குமார், இசை – பார்த்தவ் பார்கோ, படத் தொகுப்பு – ஐ.ஜெ.அலென், கலை இயக்கம் – எம்.லட்சுமிதேவ், பாடல்கள் – நா.முத்துக்குமார், கானா வினோத், சண்டை பயிற்சி – ராக் பிரபு. நடனம் – தினா, பாபி ஆண்டனி, வசனம் – சக்தி ராஜசேகரன், சதீஷ் செளந்தர், தயாரிப்பு வடிவமைப்பு – கமலக்குமார், எஸ்.சுகந்தன், ஸ்டில்ஸ் – ஜோன்ஸ், டிஸைன்ஸ் – ஜெ.ஷரத், கிராபிக்ஸ் – மாஸ்டர் மீடியா, டாஸ்பி அட்மாஸ் – மந்த்ரா ஆடியோ லேப், மக்கள் தொடர்பு – நிகில்.

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வினை நடத்திய விதம், அதன் கேள்வித் தாள்கள் பற்றி நாடெங்கிலும் சர்ச்சைகள் கிளம்பி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கும் அதே வேளையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கேப்பிடேஷன் பீஸ் என்கிற பெயரில் கல்லூரியின் முதலாளிகள் அடிக்கும் கொள்ளைகள் பற்றி வெளிப்படையாய் பேச வந்திருக்கிறது இந்த ‘எய்தவன்’ திரைப்படம்.
ரூபாய் நோட்டுக்களை எண்ணும் மிஷினை சப்ளை செய்யும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் கலையரசன். அவருக்கு ஒரு தங்கை. பிளஸ் டூ தேர்வு எழுதியிருக்கிறார். அப்பா வேல ராம்மூர்த்தி ரிட்டையர்டானவுடன் சென்னைக்கு வந்து இவருடன் இருக்கிறார். கலையரசன் காதலிக்கும் ஹீரோயின் சாத்னா டைட்டஸ், சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.
கலையரசனின் தங்கை பிளஸ் டூவில் 1162 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கவுன்சிலிங்கில் அவருக்கு அரசு கோட்டாவில் சீட் கிடைக்கவில்லை. டாக்டராக வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே லட்சியமாக கொண்டிருக்கும் தன்னுடைய தங்கையை, எப்படியாவது டாக்டராக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் கலையரசன்.
இதனால் அம்மாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தங்கையை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க விழைகிறார். இதற்காக ஒரு புரோக்கரை பிடித்து பேசுகிறார். 50 லட்சம் ரூபாய்க்கு ஒரு ரூபாய்கூட குறைக்க மாட்டோம் என்று புரோக்கர் சொல்லிவிட கடன் வாங்கியும், இருந்த சொத்துக்களை வித்தும் பணத்தைப் புரட்டி தங்கையை ஜி.கே.எம். மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறார் கலை.
ஆனால் தங்கையின் தொடர்ந்த படிப்புச் செலவுக்காக வங்கியில் கடன் கேட்டிருந்த சூழலில், தங்கை சேர்ந்த ஜி.கே.எம். மருத்துவக் கல்லூரி இந்தாண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெறவில்லை என்கிற உண்மை கலையரசனுக்கு தெரிய வருகிறது.
இதனால் பயந்து போன அவர் பலரிடமும் விசாரிக்கிறார். இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு அந்தக் கல்லூரிக்கு அனுமதியில்லை என்பது உறுதியாய் தெரிய வர.. தான் பணம் கொடுத்த புரோக்கரை தேடிப் பிடித்து பணத்தை திருப்பிக் கேட்கிறார் கலையரசன். ஆனால் புரோக்கர் தர மறுக்கிறார். இதனால் அங்கே லேசான அடிதடி நடக்கிறது.
மறுநாள் காலை தனது காதலியான சப்-இன்ஸ்பெக்டர் சாத்னாவின் அட்வைஸ்படி விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புரோக்கர் மீது புகார் சொல்கிறார் கலையரசன். புகார் கொடுத்துவிட்டு வந்த சில மணி நேரத்தில் அந்த புரோக்கர் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி வருகிறது.
இந்த நேரத்தில் முந்தைய நாள் நடந்த அடிதடியை மனதில் வைத்து அது கொலையாகவும் இருக்கலாம் என்றும், அதற்கு கலையரசனே காரணமாகவும் இருக்கலாம் என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தேகிக்கிறார்.
மருத்துவக் கல்லூரி மீது புகார் கொடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கலையரசன் வந்தபோது திடீரென்று ஏற்படும் ஒரு விபத்தில் கலையரசனின் தங்கை பலியாகிறார். இப்போது கலையரசனுக்குள் ஒரு கோபம் தீயாய் கொளுந்துவிட்டு எரிகிறது. தனது தங்கையின் சாவுக்கும், தனது குடும்பத்தின் இழப்புக்கும் சேர்த்து பழி வாங்கத் துடிக்கிறார்.
அந்த ஜி.கே.எம். மருத்துவக் கல்லூரியின் வண்டவாளங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களின் உதவியுடன் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி வாங்க நினைக்கிறார் கலையரசன். இதனை அவர் செய்து முடித்தாரா..? இல்லையா..? என்பதுதான் இடைவேளைக்கு பின்னான கதை.
கலையரசனுக்கு இது தொடர் வெற்றிதான். அவருடைய சமீபத்திய படங்களில் அவருக்கேயான கதாபாத்திரங்கள்தான் கிடைத்திருக்கின்றன. கமர்ஷியல் ஹீரோக்களின் மேனரிசத்தை அவர் கையாளவில்லை. பாதிக்கப்பட்ட நம்மில் ஒருவராகவே அவர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
சிறப்பு என்று சொல்லும் அளவுக்கு இல்லையென்றாலும், படத்தின் கதை, திரைக்கதையின் போக்கில் கதையை தன் முதுகில் சுமந்து கொண்டு அவர் ஓடும் ஓட்டம்தான் படமே..!
ஹீரோயினாக சாத்னா டைட்டஸ்.. போலீஸ் டிரெஸ்ஸின் கெத்து இவரிடத்தில் இல்லை என்றாலும், அழகு மிளிர்கிறது. இன்னும் கொஞ்ச காலம் இவர் நடித்திருக்கலாமே..! அதற்குள் ஏன் முழுக்கு போட்டார் என்று தெரியவில்லை.
படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பை காட்டியிருப்பவர்கள் ‘ஆடுகளம்’ நரேனும், கெளதமாக நடித்த கெளதமும்தான்..!
ஜிகேஎம் மருத்துவக் கல்லூரி முதலாளியின் மகனான கெளதமின் அறிமுகக் காட்சியிலேயே அவருக்கான நடிப்பு பளிச்சிடுகிறது. அவருடைய பணக்காரத் திமிரைக் காட்டும் அந்த நீண்ட காட்சி இயக்குநரின் இயக்கத் திறமைக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
பாத்ரூமுக்குள் அமர்ந்து கொண்டு தனக்கு நேர்ந்த அவமானத்தை சகித்துக் கொள்ள முடியாமல் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவமானப்பட்டு.. பொறுமித் தள்ளுவது மிகச் சிறந்த நடிப்பு..!
பிரச்சினை பெரிதானவுடன் “அப்பாவுக்கு ஜாமீன் போட வேண்டாம்…” என்பது.. அமைச்சர் முன்பாகவே தெனாவெட்டாக “கல்லூரிக்கு அனுமதி கொடுங்க. நான் நடத்துறேன். பணத்தையெல்லாம் திருப்பித் தர முடியாது…” என்று ஆணவத்துடன் பேசிவிட்டு போவது.. அப்பா ஜெயிலில் இருக்கும் அசிங்கத்தை பற்றியே நினைக்காமல் தன்னுடைய திறமையை பற்றியே பேசுவது.. கிளைமாக்ஸில் இத்தனை நடந்தும் தன் மனதை அரித்துக் கொண்டிருந்த அந்தக் கோபத்தை துப்பாக்கியால் தீர்த்துக் கொள்வதுமாய் இந்தக் கேரக்டரில் உணர்ந்து நடித்திருக்கிறார் கெளதம்.
இதேபோல் கெளதம் சாம்ராஜ்யத்தின் தளபதியாக கர்ணா என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ நரேனும் தனது பண்பட்ட நடிப்பினால் படத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்.
சிதம்பரத்திடம் பொறுமையாக பிரச்சினையை தீர்க்க வழி சொல்லிவிட்டு காத்திருப்பதும், தனது மனைவியிடம் தான் இப்போது சிக்கியிருக்கும் மீள முடியாத சூழல் பற்றி சொல்லியழுவதும்.. தன்னுடைய டபுள் கேம் கெளதமுக்கு தெரிந்தவுடன் பதறுவதும்.. அவருடைய கடைசியான அந்த எதிர்பாராத முடிவும் படத்தின் மீதான கனத்தை கூட்டியிருக்கின்றன.
தர்மனாக நடித்திருக்கும் கிருஷ்ணாவுக்கும் ஒரு அழகான கேரக்டர். இத்தனை நாள் இது மாதிரியான ரவுடி கேரக்டரில் நடித்தவர்களுக்கெல்லாம் இத்தனை அழகான குளோஸப் காட்சிகளை வைத்ததில்லை. நிஜமான ரவுடி வாழ்க்கையின் சில பக்கங்களை இவர் மூலமாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
மற்றும் கலையரசனின் அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அம்மா ராதா, கிருஷ்ணாவின் நண்பர்கள்.. கெளதமின் பி.ஏ., வளவன் என்று அனைவருமே அவரவர் கேரக்டர்களுக்கேற்ற நடிப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவின் அருமை படம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. பார்ட்டவ் பார்கோவின் இசையில் இரண்டு பாடல்கள். இரண்டுமே தேவையில்லாதது. படத்தின் ஓட்டத்தில் இடைவேளைக்கு பின்பு வரும் அந்தக் குத்து பாடல் மிகப் பெரிய இடைவெளியைத் தருகிறது. தயவு செய்து அந்த பாடல் காட்சியை நீக்குவது இயக்குநருக்கு நல்லது.
இது மாதிரியான சேஸிங் படங்களில் படத் தொகுப்பாளரின் பங்களிப்பும் அதிகமாகவே இருக்கும். இதிலும் படத் தொகுப்பாளர் ஐ.ஜே.ஆலனின் படத் தொகுப்பு பிரமாதம். ராக் பிரபுவின் சண்டை காட்சிகளில் கொஞ்சம் யதார்த்தமாகவே சிந்தித்து வைத்திருக்கிறார்கள்.
எந்த நிலைமையிலும் அம்பை நோகாமல் எய்தவனை அடித்து நொறுக்கு என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் மிகப் பெரிய டிவிஸ்ட்டுகளாக இடம் பெறும் கெளதமுக்கு நேரும் அந்த அசிங்கமான நிகழ்வு.. இதற்கான காரணம் கிருஷ்ணாதான் என்று தெரியும் இடம். வளவனை பாலோ செய்து போகுமிடத்தில் அவர் கொலை செய்யப்பட்டு கிருஷ்ணா கலையரனுடன் நட்பாகும் இடம்.. வளவனின் கொலையில் இருந்து கதையை ஸ்டார்ட் செய்து பிளாஷ்பேக்கில் கதையைச் சொல்லியிருப்பது மிகச் சிறந்த உத்தி.
கெளதமை கொலை செய்ய முயற்சி செய்து தோற்பது.. பிரில்லியண்ட்டாக ‘ஆடுகளம்’ நரேனை தனியாளாக போய் மடக்குவது.. தான் யார் என்று தெரியக் கூடாது என்பதில் குறியாய் இருந்து கிருஷ்ணாவை கைப்பாவையாய் வைத்து காரியத்தை நடத்தும் கலையின் திரைக்கதை.. கிளைமாக்ஸ் டிவிஸ்ட்.. என்று எல்லாமும் சேர்ந்து படத்தை ஒரு முறையாவது பார்த்துவிடுங்கள் என்றுதான் சொல்ல வைக்கிறது..!
திருத்தணி செல்லும் வழியில் இருக்கும் ஜி.கே.நாயுடு மருத்துவக் கல்லூரியும் இப்படித்தான் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியில்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொண்டு கல்லூரியையும் தெம்பாக நடத்தி வந்தது. அந்தக் கல்லூரி மாணவர்கள் தீராத போராட்டத்தை நடத்தி.. 3 மாத கால உழைப்புக்கு பின்பு வேறு, வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டு இன்றைக்கு படிப்பையே நிறைவு செய்திருக்கிறார்கள்.
கல்லூரியின் தாளாளரான நாயுடு அந்தக் கல்லூரியை பல்வேறு வங்கிகளில் அடமானம் வைத்து கடன் வாங்கித் திருப்பிக் கட்டாமல் ஏமாற்றியிருக்க.. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் அட்மிஷனுக்காக பணம் கட்டியவர்கள் தயாரிப்பாளர் மதன் மீது புகார் கொடுத்து.. மதனை 5 மாதங்களாக போலீஸார் தேடிப் பிடித்து சிறையில் அடைத்து.. அந்த மாணவர்கள் கட்டிய 89 கோடியை கோர்ட்டில் கட்டினால்தான் மதனுக்கு ஜாமீன் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பு காட்ட.. வேறு வழியில்லாமல் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அந்தப் பணத்தைக் கட்டித்தான் மதனை பிணையில் வெளியில் எடுத்திருக்கிறது.
ஆக.. இந்தக் கல்லூரி விவகாரத்தில்கூட ஒரு சின்ன ரசீதுகூட தரப்படாமல் வெறும் வாய் மொழி வார்த்தையிலேயே நம்பி இத்தனை பெரிய தொகையை பணமாக மாற்றிக் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள் பெற்றோர்கள். நிச்சயமாக அவர்களுக்கும் இந்த திருட்டுத்தனத்தில் பெரும் பங்குண்டு.
தங்களுடைய மகனை, மகளை எப்பாடுபட்டாவது மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று துடிக்கும் அவர்களது போக்குதான் இந்த தில்லுமுல்லுகளுக்கு மூல காரணம். திருடர்களை கண்டிக்கும் அதே நேரத்தில் கேப்பிடேஷன் பீஸை கொடுத்திருக்கும் அந்தப் பெற்றோர்களையும் நிச்சயமாக கண்டிக்க வேண்டும்.
இத்தனை லட்சம் பணத்தை கேஷாக கொடுக்கிறார்கள் என்றால் இவர்கள் நீட்டுகின்ற பணமும் நிச்சயமாக நேர்மைக்கு புறம்பாக சம்பாதித்த பணமாகத்தான் இருக்க வேண்டும். இப்படி மக்களே திருடர்களாக இருந்து பணத்தை வாங்கியவர்களை திருடர்கள் என்று சொல்வதெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும் போலிருக்கிறது..!
திருடர்களெல்லாம் கல்லூரிகளை கட்டி வைத்துக் கொண்டு தங்களைத் தாங்களே கல்வி வள்ளல்கள் என்று சொல்லிக் கொண்டு பெருமையோடு திரிவதும் இந்தியாவில்தான் நடக்கும்.
இனிமேல் மருத்துவக் கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்க்கும் முன் அந்தக் கல்லூரிக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் உள்ளதா…? கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இருக்கின்றனவா..? சேர்க்கைக் கட்டணங்களை அரசு விதிமுறைப்படி வாங்குகிறார்களா..? என்பதையெல்லாம் தீர, யோசித்து சேர்ப்பதுதான் சிறந்தது.
இது போன்ற விழிப்புணர்வு மக்களுக்கும், மாணவர்களுக்கும் அவசியம் தேவை என்பதை இந்தப் படம் அழுத்திச் சொல்லியிருக்கிறது. இந்தக் காரணத்திற்காக இந்தப் படத்தின் இயக்குநருக்கு நமது ஸ்பெஷல் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்..!
அவசியம் பார்க்க வேண்டிய படம் என்கிற லிஸ்ட்டில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது..!

0 comments: