கிடாரி - சினிமா விமர்சனம்

3-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“இந்த சசிகுமார் கேமிரா முன்னாடி வந்து நின்னான்னா ரத்தம் பாக்காமல் ஓய மாட்டான்”னு சசிகுமார் சொல்லவில்லையென்றாலும், அதுதான் உண்மையாக இருக்கிறது.
‘சுப்ரமணியபுர’த்தில் ஆரம்பித்த ஜாதிக்குள் கலகம்.. அரிவாள் சண்டை, நம்பிக்கை துரோகம்.. கத்தியால் சாய்க்கப்படும் நட்பு… இதெல்லாம் சசிகுமாரின் ஆஸ்தான அஸிஸ்டெண்ட்டுகளாக மாறி, அவரது அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இடையில் அவரே நல்ல பிள்ளையாக மாறி ‘பசங்க’, ‘தலைமுறைகள்’ என்று விருதுகளுக்கான படங்களை எடுத்தாலும் ‘அது ஆத்ம திருப்திக்கு’ என்கிறார். அப்படியானால் இந்த மாதிரியான ‘கத்தி’, ‘கபடா’க்களையெல்லாம் யார் கேட்டதாம்..?
இனியும் சசிகுமார் தன் படங்களில் கத்தியையோ, அரிவாளையோ தூக்கக் கூடாது என்று தமிழ்த் திரையுலகம் அவருக்குத் ‘தடா’ போட வேண்டும். அந்த அளவுக்கு கொடூரமான தாக்குதலாக இருக்கிறது இந்தப் படம்.

‘கொம்பையா பாண்டியன்’ என்னும் சுய கெளரவமும், வீறாப்பும், பிழைப்புவாதத்தனமும் தெரிந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம்.
சாத்தூரில் பலம் வாய்ந்த சாதி மனிதர்கள் கோலோச்சிய இந்தத் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையினர் வாழ்ந்த காலக்கட்டம்.
இளம் மீசையும் துடிப்பும், வீரமுமாக வலம் வந்து கொண்டிருந்த கொம்பையா பாண்டியன் அந்த ஊரின் பிரபல ரவுடி நெப்போலியனிடம் வலதும், இடதுமாக இருக்கிறார்.
நெப்போலியன் தனது முதலாளிக்கு காட்டும் விசுவாசத்தின் காரணமாய் தொகுதி எம்.எல்.ஏ.வையே தாக்கிவிட.. அவரைக் கைது செய்த போலீஸ் சிறையில் வைத்து நெப்போலியனின் கணுக்காலை உடைத்து அவரை நொண்டியாக்குகிறது.
தனது கால் ஊனமானதால் வேறு ஊருக்கு போய்விட தீர்மானிக்கிறார் நெப்போலியன். இதனால் தங்களது அடாவடி தொழில் பாதிக்கப்படுமே என்று நினைக்கும் நெப்போலியனின் அல்லக்கையான கொம்பையா பாண்டியன், நெப்போலியனின் முதலாளியிடம் நெப்போலியனை அழைத்துப் போய் அவர்கள் இருவருக்குமிடையில் சண்டையை மூட்டிவிடுகிறார்.
இது விவகாரமாகிவிட.. ஒரு இரவு நேரத்தில் தனியே வரும் முதலாளியை கொம்பையா பாண்டியன் கொலை செய்கிறார். கூடவே நெப்போலியனையும் சேர்த்தே. இதற்கெல்லாம் ஒரே சாட்சி பாண்டியனின் கூடவே இருக்கும் அவரது நண்பர் மு.ராமசாமி.
அப்பனை இழந்த நெப்போலியனின் மகன் கிடாரியை தன் கூடவே தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார் கொம்பையா பாண்டியன். கிடாரியும் வளர்கிறான். இப்போது வளர்ந்த பின்பு கொம்பையா பாண்டியனின் அடிமையாக.. பெத்த மகனைவிடவும் தீவிர விசுவாசியாக மாறுகிறான் கிடாரி.
சாத்தூரில் ஆட்டுச் சந்தை, காய்கறி சந்தை என்று அனைத்தையும் மிரட்டி தானே மேற்கொள்கிறார் கொம்பையா பாண்டியன். கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிஸம் என்று தனது வீரத்தைக் காட்டி ஜில்லாவே பயப்படும் ஆளாக வளர்ந்திருக்கிறார். இதனால், சொந்த ஊரில் மட்டுமன்றி, அக்கம்பக்கமெல்லாம்.. திரும்பிய இடமெல்லாம்… எதிரிகளை சம்பாதித்து வைக்கிறார் கொம்பையா பாண்டியன்.
இடையில் தனது அந்தியந்த நண்பரான மு.ராமசாமியின் மூத்த மகளை தான் பெற்ற மகனான உடைய நம்பிக்கு திருமணம் செய்து வைக்கிறார் கொம்பையா பாண்டியன். பாண்டியனின் உறவுக்காரப் பெண்ணான ஹீரோயின் நிகிலாவுக்கும், சசிகுமாருக்கும் இடையில் இப்போது காதலும் ஓடிக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய அப்பாவை படுகொலை செய்தது கொம்பையா பாண்டியன்தான் என்பது தெரியாமலேயே, ‘உப்பு சாப்பிட்ட வீட்டுல கத்தியை தூக்கக் கூடாதுன்னு எங்கப்பா சொல்லியிருக்காரு ‘என்று சொல்லிச் சொல்லியே விசுவாசமாக வாழ்கிறார் சசிகுமார்.
இந்த அதி தீவிர விசுவாசத்தினால் பாண்டியனின் சொந்த மகனான உடைய நம்பிக்கு, கிடாரி மீது பொறாமை வருகிறது. கோபம் வருகிறது. ஆத்திரத்தில் கிடாரிக்கு எதிராக சதி செயல்களைச் செய்கிறார்.
யார், யாரை தாக்குகிறார்கள்..? எதற்கு அழிக்க வருகிறார்கள்..? யார் அடியாட்களை ஏற்பாடு செய்தது என்றெல்லாம் தெரியாத ஒரு சூழலில் ஒரு ராத்திரியில் கொம்பையா பாண்டியன் தன்னுடைய வீட்டில் கத்துக்குத்து காயத்துடன் மீட்கப்படுகிறார்.
அவசரமாக சாத்தூர் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கொம்பையா தாக்கப்பட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் சாத்தூரே கொதித்துப் போய் ஊரடங்கு உத்தரவு போல அமைதியாய் கிடக்க..
அவரை கொலை செய்ய முயற்சித்தது யார் என்று சசிகுமார் ஆராய்கிறார். அதில் அவருக்குக் கிடைக்கும் தகவல்கள் அவரைத் திடுக்கிட வைக்க.. நூல் பிடித்தபடியே முன்னேறுகிறார். கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தக் ‘கிடாரி’யின் கதை.
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் மிக நீட்டான திரைக்கதை. மிக அழகான இயக்கம். அற்புதமான நடிப்பாக்கம்.. அந்த சாத்தூர் பகுதியின்.. கந்தகத் தன்மை வாய்ந்த மண்ணின் மணம் கமிழும் பழக்க வழக்கங்கள்.. கிராமிய பேச்சுக்கள்.. ரெளடியிஸம் எப்படி ஒரு ஆணாதிக்க உணர்வாக வளர்கிறது என்பதை புள்ளி வைத்து கோலம் போட்டு விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
தென் மாவட்டங்களில் கொலை செய்வதையே குலத் தொழிலாகவும், கவுரவம் மிக்க தொழிலாகவும் மேற்கொள்பவர்கள் அதனை ‘சம்பவம்’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ‘சம்பவம் செஞ்சுட்டாங்களாமே’ என்று சொன்னால் ‘அங்கே ஒரு கொலை அரங்கேறியிருக்கிறது’ என்றுதான் அர்த்தம்.
இந்த ‘சம்பவம்’ என்கிற ஒரு வார்த்தையை வைத்து முன்பாதியில் காட்சிகளை வீரியமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். அதிலும் கூடவே ‘துஷ்டி கேக்கணும்.. பையனை கூப்பிடு’ என்று கே.என்.காளை வந்து சொல்வதில் காட்டும் சூட்சுமம், படத்தின் அப்போதைய திரைக்கதையை வேகமெடுக்க வைத்திருக்கிறது.
வருடக்கணக்கான அந்தப் பகுதியில் சண்டியராக இருந்து வருபவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இருக்கும் தொடர்புகள்.. அவர்களே சம்பவத்தை செய்ய விடாமல் தடுப்பதும்.. சம்பவம் செய்ய வைப்பது.. குற்றவாளிகளை புதிய டி.எஸ்.பி. பிடிக்க முனைந்தாலும் அவருக்குக் கீழேயுள்ளவர்கள் ரவுடிகளுக்கு சாதகமாக பேசி கேஸை திசை திருப்புவது.. என்று தமிழகத்தின் இன்றைய யதார்த்த நிலைமையையும் விரிவாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர்.
திடீர், திடீரென்று புதிய புதிய வில்லன்களை அறிமுகப்படுத்தி அவர்களது கதையையும் பிளாஷ்பேக் உத்தியில் கொடுப்பதென்பது திரைக்கதைக்கு உகந்ததுதான். ஆனால் படம் முழுக்க கடைசிவரையிலும் கொடுத்துக் கொண்டேயிருந்தால் எப்படி இயக்குநரே..!? பிளாஷ்பேக்கும், நிகழ் காலமுமாக படம் வந்து போய்க் கொண்டேயிருப்பதால்.. வேல.ராம்மூர்த்தி மீதான கரிசனமும், அச்சச்சோ உணர்வும் ரசிகர்களுக்கு ஏற்படவில்லை என்பது மிகப் பெரிய குறை.
பிளாஷ்பேக்கில் வரும் கதையில் ஓ.ஏ.கே.சுந்தர் அட்டகாசம் செய்திருக்கிறார். இதுவரையிலும் சின்னத்திரையிலேயே பெரிதாக நடித்து பெயர் வாங்கியிருப்பவர், இதில் ஹீரோவுக்கு சமமான அளவுக்கு நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.
கோர்ட் வாசலில் அவருடைய அண்ணனிடம் அவர் கோபப்படும்விதமும், நீதிபதியிடம் தங்களைக் காப்பாற்ற அவர் கெஞ்சும் கெஞ்சலும்.. அந்த கார் பயணத்தில் பேசும்விதமும் ஒரு அருமையான நடிகரை மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறது. வெல்டன் ஸார்..!
தன்னுடைய ஆண்மைத்தனமே தன்னைப் பார்த்து நான்கு பேர் பயப்படுதலிலும், கொடுக்கும் மரியாதையிலும்தான் இருக்கிறது என்று நம்பும் கொம்பையா பாண்டியனின் அந்தக் கேரக்டருக்கு வேல.ராமமூர்த்தி மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
கிளைமாக்ஸில் வசனமே இல்லாமல் அவர் முகம் காட்டும் பயமும், வெறுப்பும், கோபமும் அந்தக் கேரக்டருக்கே உரித்தானவை. சண்டியர்த்தனத்துக்கெல்லாம் ‘ஒரு கெத்து வேண்டும்’ என்பார்கள். ‘உடல்வாகு வேண்டும்’ என்பார்கள். ‘தென்பாண்டி பக்கம் சார்ந்த மக்களுக்கான முகமும்’ தேவை.. இது எல்லாமுமாக ஒருங்கே அமர்ந்த முகமாக இருப்பதால் வேல.ராமமூர்த்திக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இதுபோல் கிடைக்கவிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இதேபோல் இவருடைய மகனான உடையநம்பியாக நடித்திருக்கும் கவிஞர் வசுமித்ராவும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அந்தக் கண கோபம்.. கிடாரிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலைமை.. தகப்பன் பேச்சை மீற முடியாத நிலைமை.. கடைசியாக தகப்பன் மீதே கை வைக்க வேண்டிய கட்டாயம்.. இது எல்லாவற்றையும் சீரான இயக்கத்தினால் தனது நடிப்பில் குறை வைக்க முடியாமல் செய்திருக்கிறார்.
யார் இந்த புதுமுகம் என்று ‘வெற்றிவேல்’ படத்திலேயே கேள்வியை எழுப்பியவர் நிகிலா விமல். அழகும், கொஞ்சமும், கோபமும்.. நடிப்பும் இணைந்து இவர் வரும் காட்சிகளிலெல்லாம் ரசிக்க வைத்திருக்கிறார். காதலரான சசிகுமார் தான் சமைத்ததை அம்மா சமைத்ததுபோல் நினைத்து அவளை பாராட்டிவிட்டுச் செல்லும் காட்சியில் அதைக் கேள்வியெழுப்பும் நிகிலாவை பிடிக்காத ரசிகனே இருக்க முடியாது..! ‘செல்லம்’ என்று கொஞ்ச வைக்கிறார் நிகிலா.
சின்ன கேரக்டர் என்றாலும் அநியாயமாக மகன் இறந்ததை தாங்க முடியாமல் குடும்பத்திற்குள்ளேயே கால் வைத்து கூறு போடும் அளவுக்கு செல்லும் சுஜா வாருணி நடிப்பு பிரமாதம். தன் மனைவியின் இந்தக் கோபத்தை பொறுக்க முடியாமல் கடைசியில் கணவன் கத்தியைத் தூக்குவது மிக அழகான இயக்கம். குழப்பமில்லாத லாஜிக் மீறல் சொல்ல முடியாத திரைக்கதை. சுஜாவின் நடிப்பை பார்த்தால் அவரும் கவர்ச்சி ஆட்டங்களை ஒழித்துக் கட்டிவிட்டு இப்படி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவே வலம் வரலாம்.
இவர்கள் மட்டுமில்லாமல் பாண்டியனின் நண்பராக நடித்திருக்கும் கூத்துப்பட்டறை மு.ராமசாமி, ‘ஜோக்கரு’க்கு பின்பு இதில் இன்னும் கொஞ்சம் அதிகப்படியான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மருமகன் மற்றும் கிடாரிக்கு நடுவில் மாட்டிக் கொண்டு சங்கடத்திற்குள்ளாகும் அந்த ஒரு காட்சியே போதும் இவரது நடிப்புக்கு..!
கடைசியாகத்தான் சசிகுமாரை தொட வேண்டியிருக்கிறது. கண்மூடித்தனமான விசுவாசம்.. சோறு போட்டு வளர்த்தால் தன் உயிரைக் கொடுக்கவும் தயங்காத குணம்.. சசிகுமாருக்கு தன்  நடிப்பின் வெரைட்டி தேவையில்லை. கதையிலும், திரைக்கதையிலும் நீட்னெஸ்ஸும், புதுமையும் இருந்தாலே போதும் என்றே இப்போதுவரையிலும் எண்ணுகிறார். இந்தப் படத்திற்கும், முந்தைய படத்திற்கும் அதிகம் வித்தியாசமில்லை. அதே போன்ற நடிப்புதான். கூடவும் இல்லை. குறையவும் இல்லை. மென்மையான இந்த முகம் எப்படி அரிவாளை தூக்கி ஆக்ரோஷமாக சண்டையிடுகிறது என்பதுதான் புதிராக புதிராக இருக்கிறது..!
படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருப்பதற்கு ஒரே காரணம் இயக்குநர் பிரசாத் முருகேசனின் அழகான இயக்கம் மட்டும்தான். எத்தனை வன்முறைகள் இருந்தாலும் அதனை படமாக்கியிருக்கும்விதம்.. சண்டை காட்சிகளில் காட்டியிருக்கும் தீவிரமும், அகோரமும்.. பாடல் காட்சிகளில் சோகத்தை காட்டியிருக்கும்விதமும்.. சில காட்சிகளில் புத்தம்புதிய கோணமாக கேமிராவின் பங்களிப்பும்.. நடிகர்களின் அர்ப்பணிப்பான நடிப்பு.. இப்படி நிறையவே சேர்ந்து இந்தப் படத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றன.
இருந்தாலும் மில்லில் பஞ்சாயத்துக்கு போகுமிடத்தில், “தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே…” பாடலை பாடி அந்தப் பஞ்சாயத்துக்கு லின்க் கொடுப்பதெல்லாம் ரொம்பவே போர் இயக்குநரே.. இதேபோல் சசிகுமார் சில நேரங்களில் பேசும் கெத்தான வசனங்களும் எரிச்சலையூட்டுகின்றன. தவிர்த்திருக்கலாம்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், தர்புகா சிவாவின் பின்னணி இசையும்தான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். சண்டை காட்சிகளே கரடு முரடென்றாலும் அதற்கான பின்னணியில் அடக்கி வாசித்தும், தீம் மியூஸிக்கை ரசிக்கும்படியும் படம் முழுக்க வரும்படியும் அமைத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.
எத்தனை சிறப்புகள் படத்தில் இருந்தாலும் இத்தனை வன்முறையுடன் திரும்பத் திரும்ப இதே கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன..? ஏற்கெனவே நாட்டில் தினம்தோறும் அவரவர் சாதிப் பெயரை பெருமையாகச் சொல்வதாலேயே அடிதடிகள் நடந்து அது கொலைவரைக்கும் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்  நமது அடுத்தத் தலைமுறையையும் இந்த ரத்தச் சகதியில் தள்ளவிட வேண்டுமா என்ன..?
தியேட்டருக்கு வரும் இளையோர்களை இது போன்ற உண்மைத்தனமான இயக்கத்தில் வெளியாகும் படங்கள் நிச்சயம் பாதிக்கும். எனவேதான் வன்முறையை சினிமா மூலம் போதிக்க வேண்டாம் என்கிறோம். என்னதான் முடிவில் சுபமாக முடித்தாலும், இடையில் பேசப்படும் ஜாதிய ரீதியிலான பெருமை பேசும் வசனங்களும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளும்தான் மக்களின் மனதில் சம்மணங்கால் போட்டு உட்காரும். இதன் தொடர்ச்சி அடுத்த நாளே அதே தியேட்டர் வாசலிலேயேகூட நடக்க வாய்ப்புண்டு.
எடுக்க வேண்டிய.. எடுக்கப்படக் கூடிய கதைகள் நிறையவே இதே தென் மாவட்டங்களில் நிறையவே தேங்கிக் கிடக்கின்றன.. அண்ணன் சசிகுமார்.. இனி தனது அடுத்தடுத்த படங்களில் தனது சாதிய கலாச்சாரம் சார்ந்த கதைகளில் கவனம் செலுத்தாமல், வேறு பக்கம் சென்றால் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் அவருக்கு என்றும் நன்றியுடன் இருப்பார்கள்.
கிடாரி – வன்முறை களஞ்சியம்..!

2 comments:

தனிமரம் said...

இன்னும் பார்க்கவில்லை !

Sindhai said...

ஓ.ஏ.கே.தேவர் இல்லேண்ணா ... அவர் பையன் ஓ.ஏ.கே.சுந்தர் .....