பகிரி - சினிமா விமர்சனம்

17-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சவுண்ட்டே இல்லாமல் தெளஸண்ட் வாலா வெடியை பற்ற வைத்திருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். படத்தின் முந்தைய பிரமோஷன்களில் படத்தின் கதைக் கருவைப் பற்றி மட்டுமே சொன்னவர்.. இந்தப் படத்தில் சாட்டையடியாக அரசியல் கலவரத்தை உண்டு செய்திருக்கிறோம் என்பதை மட்டும் சஸ்பென்ஸில் வைத்துவிட்டார். உண்மையாகவே தைரியசாலிதான் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.

2 ஏக்கர் உள்ள தனது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் ஹீரோவின் அப்பா. தனக்குப் பின்பு தனது மகன் அதே விவசாயத் தொழிலை தொடர வேண்டும் என்பதாலேயே அவரை அக்ரியில் டிப்ளமா படிக்க வைத்திருக்கிறார். ஆனால் மகனுக்கோ விவசாயத்தில் ஆர்வம் இல்லை.
அரசு வேலைக்கு போக வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார். அதிலும் டாஸ்மாக்கில்தான் சேர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்.
இந்த நேரத்தில் டாஸ்மாக் கடையில் வேலைக்கு ஆளெடுக்க ஆளும் கட்சி தனது மாவட்டச் செயலாளர்களுக்கு இடம் ஒதுக்குத் தருகிறது. அதில் ஒரு இடத்தை ஹீரோ கேட்கிறார். “5 லட்சம் கொடுத்தால் வேலை உறுதி..” என்கிறார் மாவட்டச் செயலாளர். தன் அப்பாவிடம் பணம் கேட்கிறார் ஹீரோ. “பணமில்லை…” என்று பதில் வர.. நிலத்தை விற்று காசைக் கொடுக்கும்படி கேட்கிறார் ஹீரோ. “ஒழுங்கா ஓடிப் போயிரு..” என்று அப்பா விரட்டியடிக்கிறார். டாஸ்மாக்கில்தான் வேலை கிடைக்கவில்லை. டாஸ்மாக் பாரில் வேலை செய்யலாமே என்று நினைத்து ஒரு பாரில் வேலைக்கு சேர்கிறார் ஹீரோ.
இந்த நேரம் பார்த்து அவருக்குள் ஒரு காதலும் வந்து சேர்கிறது. அடாவடியாய் இருக்கும் ஒரு பெண்ணின் வாய் நீளத்தைப் பார்த்து அசந்து போகும் ஹீரோ, இதே பொண்ணு தன் வீட்டுக்கு மருமகளாய் வந்தால் தன் வாயாடி அம்மாவுடன் போட்டி போட ஏதுவாய் இருக்குமே என்றெண்ணி ஹீரோயினை விரட்டிவிரட்டி காதலிக்கிறார்.
இந்தக் காதலுக்கு ஹீரோயினும் சம்மதிக்கிறார். ஹீரோயினின் தந்தையான ஏ.வெங்கடேஷ் மகா குடிகாரர். அவரும் ஹீரோவின் பாரில் வந்துதான் சரக்கடிக்கிறார். ஏ.வெங்கடேஷின் மனைவியான ராணியை, 40 வயதை கடந்தும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல்.. வார்டு கவுன்சிலர் ஆன பிறகுதான் கல்யாணம் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு இருக்கும் அரசியல்வாதியான ரவி மரியா விரட்டி விரட்டி சைட் அடிக்கிறார்.
இந்த அசிங்கமான காதலுக்கிடையில் ஹீரோ, ஹீரோயினின் நிஜ காதலும் ஓடிக் கொண்டிருக்கிறது. வருங்கால மருமகனின் அரசு வேலைக்காக தன் மகளின் கல்யாணத்திற்காக வைத்திருந்த நகைகளையெல்லாம் எடுத்துக் கொடுக்கிறார் மாமியார் ராணி. அதை வைத்து பணத்தைப் புரட்டி மாவட்டத்திடம் கொடுத்து சீட்டை உறுதி செய்து கொள்கிறார் ஹீரோ.
ஆனால் இவர் வேலைக்குச் சேரும் நேரத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், டாஸ்மாக் கடைகளை மூடும்படி சொல்லியும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட துவங்க.. கடை மூடப்படுகிறது. வேறு இடத்தில் கடையைத் திறந்த பிறகு அங்கே போஸ்டிங் கிடைக்கும் என்ற நிலையில் ஹீரோ காத்திருக்கிறார்..? முடிவு என்னாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.  
சமீபக காலமாக உலகம் முழுவதுமே பல்வேறு சமூக கொந்தளிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கும் ‘வாட்ஸ் அப்’ என்னும் அப்ளிகேஷனின் தமிழ்ப் பெயர்தான் இந்தப் படத்தின் டைட்டிலான ‘பகிரி’.
படத்தின் சுவாரஸ்யமே மதுவிலக்குக் கொள்கைக்கு பின்னால் இருக்கும் அரசியல் விளையாட்டுக்கள்தான். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லை அனைவரும் ஒன்று சேர்ந்துதான் இந்த டாஸ்மாக்கை வாழ வைக்கிறார்கள். தமிழகத்தையே குடிகாரர்கள் மாநிலமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஜெயலலிதா, கருணாநிதி, முன்னாள் மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கட்டிங் கேட்கும் கலெக்டர், கட்சிக்காரனுக்கே காசு வாங்கிக் கொண்டு போஸ்டிங் கொடுக்கும் மாவட்டச் செயலாளர், அரசு வேலையிலேயே கட்சிக்காரர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்திருக்கும் அரசுகளின் தந்திரம்.. ஒன்றியச் செயலாளர்களின் ரகசியமான வசூல் வேட்டை.. தொண்டர்களின் இளிச்சவாயத்தனம்.. எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணம் சம்பாதிப்பது மட்டுமே தங்களது குறிக்கோள் என்றிருக்கும் சில பார் நடத்தும் தமிழர்கள்.. என்று பலரையும் தனது வசனத்தால் பதம் பார்த்திருக்கிறார் இயக்குநர்.
கலைஞர் கருணாநிதி போலவே கடிதம் எழுதி, “டாஸ்மாக்கில் 8 சீட்டு உனக்கே.. அள்ளிக் கொள் உடன்பிறப்பே..” என்று சொல்வது.. மூன்று மதங்களை சேர்ந்த மதுவிலக்குத் துறை மந்திரியின் மனைவிகள் வரிசையாக அவருக்கு போன் செய்து “சுகர் மாத்திரை சாப்பிட்டாச்சா..? பிபி மாத்திரை சாப்பிட்டாச்சா..?” என்று அக்கறையுடன் விசாரிப்பது.. ஜெயல்லிதாவின் போயஸ் கார்டன் வீடு போன்ற பெரிய வீட்டின் உள்ளேயிருந்து வரும் அமைச்சர் டி.பி.கஜேந்திரன் தனது அமைச்சர் பதவி பறிபோய்விட்டதை புலம்பித் தள்ளுவது என்று அனைத்தையும் அரசியல் களத்தில் இருந்து சுட்டே படமாக்கியிருக்கிறார்.
அமைச்சராக பந்தாவாக காரில் போயஸ் கார்டனுக்கு வந்த பல அமைச்சர்கள், உள்ளே கிடைத்த மண்டகப்படியில் சிக்கி சின்னாப்பின்னமாகி, அமைச்சர் பதவியை ஒரு நிமிடத்தில் இழந்து அவமானப்பட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்த கதையை இயக்குநர் கச்சிதமாக, பொருத்தமான இடத்தில் இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். ரொம்ப தைரியம்தான் போங்க..!
வசனங்கள் பலவும் இன்றைய அரசியலின் யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டியிருக்கின்றன. மாவட்டம், ஒன்றியத்திடம் பேசுவது.. அமைச்சர் அதிகாரிகளிடத்தில் பேசுவது.. கலெக்டர் மீடியாக்களை பார்த்து பயப்படுவது.. மதுவிலக்கு போராட்டத்திற்கு வரும் பிரியாணி பொட்டல பார்ட்டிகள்.. என்று சகலத்தையும் போட்டுடைத்திருக்கிறார் இயக்குநர்.
இருந்தாலும், இது எல்லாவற்றையும்விட, “சார்ஜே ஏறாத செல்போனுக்கு எதுக்கு ஸார் மூணு சிம் கார்டு..?” என்று மந்திரியின் பி.ஏ., மந்திரியிடம் கேட்கும் வசனமே தியேட்டரை அதிர வைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
ஒரு அரசியல் சட்டையர் என்று சொல்லும் அளவுக்கு வந்திருக்கும் இந்தப் படத்தில் இருக்கும் ஒரேயொரு குறை ரவி மரியாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான். அடுத்தவர் மனைவிக்கு லுக்கு விடும் அந்த கேவலமான விஷயத்தை நீக்கிவிட்டு, வேறு எதையாவது வைத்திருக்கலாம்.
ஆனாலும் ரவி மரியாவின் நடிப்பில் குறையே இல்லை. ராணியை பார்த்து ஜொள்ளு விடுவதும்.. மாவு பாக்கெட்டை வாங்கி பிச்சைக்காரனிடம் கொடுத்தனுப்புவதும், கொசு கடித்துவிட்டது என்பதற்காக மாநகராட்சிக்கு போன் செய்து திட்டுவதுமாக கலவரப்படுத்தியிருக்கிறார். எங்கே ஆபாசத்தை அரங்கேற்றிவிடுவாரோ என்று நினைத்த நேரத்தில்’ அண்ணா’ என்று ரவி மரியாவை அழைத்து கதையை டைவர்ட் செய்து நம்மைக் காப்பாற்றிவிட்டார் ராணி. அவருக்கு நமது நன்றி.
ஹீரோயினின் அப்பாவான ஏ.வெங்கடேஷ் தண்ணியடிக்காமல் இருக்கும்போது குளறலுடன் பேசுபவர் தண்ணியடித்துவிட்டு பேசும்போது தெளிவாக பேசுகிறார். குடிக்காரர்களுக்கு பிடித்த கதைதான். அவ்வப்போது இவர் சொல்லும் பன்ச் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன.
ஹீரோயினான ஷ்ரவ்யா புதுமுகமாம். நம்பித்தான் ஆக வேண்டும். நன்றாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய வட்ட வடிவமான கண்களே நிறைய பேசுகின்றன. காவியம் படைக்கும் இயக்குநர்களுக்குக் கிடைத்தால், நல்ல கேரக்டர்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
அந்த அடாவடித்தனமான வாய்ப் பேச்சு.. பொண்ணு பார்க்க வந்தவர்களை “இப்பவே ரிசல்ட்டை சொல்லிட்டு போங்க..” என்று சொல்லி விரட்டுவது.. பெத்த அம்மாவிடமே “உன் ஆளு வர்றாப்புல.. இந்த வயசுலேயும் உன்னைய போயி சைட் அடிக்கிறான் பாரு..” என்ற பெரிய மனுஷத்தனமான பேச்சுடன்.. காதல் உணர்வுகளையும் நிரம்பவே காட்டியிருக்கிறார் படத்தில்..!
ஹீரோ ரணவீரன் என்னதான் பெர்பார்மென்ஸ் காட்டியிருந்தாலும் ஏதோ ஒன்று கடைசிவரையிலும் அவரை ரசிக்க வைக்கவிடாமல் செய்கிறது. அடுத்தடுத்த படங்களில் பார்ப்போம்.
வீரக்குமாரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. அதே சமயம் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியும் எதுவுமில்லை. அருணகிரியின் இசையில் வழக்கமான மெலடியுடன் கலந்த பாடல்கள். பின்னணி இசையை உறுத்தாமல் கொண்டு போனதற்கே பெரிய நன்றிகள்.
வாக்களித்த மகாஜனங்களை யோசிக்க வைக்கும் அளவுக்கான வசனங்கள், மற்றும் நக்கல், நையாண்டி கலந்த காட்சியமைப்புகளுடன் திரைக்கதை இருப்பதால் படம் போரடிக்காமல்தான் செல்கிறது.
படத்தினை இறுதிவரையிலும் ஏதோவொரு எதிர்பார்ப்புடன் கொண்டு போக வைத்துவிட்டு, கடைசியில் சப்பென்று எந்தவொரு பெரிய காரணமும் சொல்லப்படாமல் ஹீரோ மனம் திருந்தியது எப்படி என்றுதான் தெரியவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று இப்போதைய எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக வரும்வரையில்தான் சொல்லும். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்பு “படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்..” என்பார்கள். கடைசியாக “அது சாத்தியமில்லை…” என்பார்கள்.
இப்படியே சொல்லிச் சொல்லித்தான் தமிழகத்தை இப்போது குடிகாரர்கள் மாநிலமாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த மதுபானங்களின் விற்பனையில் ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் பங்குண்டு என்பதும், அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் இந்த மதுவிலக்கு துறை பணம் சம்பாதிக்கும் ஒரு துறையாக இருப்பதும் இந்தப் படத்தில் உண்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்தப் படம் பாராட்டத்தக்கது என்றே சொல்லலாம்..!
ஒரு திரைப்படத்தில்.. ஒரு அரசியல் பிரச்சினையில் தன்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படையாக உண்மையை பேசி, மக்களுக்கு உணர்த்தியிருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.. நன்றிகள்..!
தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு கொடுத்து கை தூக்கிவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்..!

0 comments: