24-06-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சென்னை போன்ற மெட்ரோ நகரத்தின் பயங்கரமான இன்னொரு முகத்தினை உரித்துக் காட்டியிருக்கும் படம் இது. இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணனை வெகுவாகப் பாராட்ட வேண்டும். இதுதான் கதை என்று முடிவான பிறகு இதற்கு வணிக ரீதியான அரசு உதவியை எதிர்பார்க்காமல், ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் கிடைக்கும். இதனால் படத்தின் பெயரும் ‘மெட்ரோ’ என்று ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என்று தீர்மானமாக யோசித்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஏற்கெனவே விதார்த் நடிப்பில் ‘ஆள்’ என்னும் திரில்லர் படத்தை இயக்கிய அனுபவம் கொண்ட ஆனந்த் கிருஷ்ணன், அதே டைப்பில் மறுபடியும் இந்த ‘மெட்ரோ’வை கொடுத்துள்ளார்.
குற்றவாளிகள் தானாக உருவாகுகிறார்களா..? அல்லது உருவாக்கப்படுகிறார்களா..? என்கிற கேள்விக்கு ஒரே பதில் உருவாக்கப்படுகிறார்கள் என்பதுதான். ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ என்பது சாசுவதமான உண்மை. அதன் பின்னான வளர்ப்புகளிலும், சூழ்நிலைகளினால் மட்டுமே பல குற்றவாளிகளின் வாழ்க்கை தடம் புரள்கிறது. அதே சமயம், பொருளாதாரத் தேவைதான் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றும் எமன் என்பதையும், அப்படியொரு எமச் சிக்கலில் மாட்டிய இளைஞனின் கதையையும் சொல்வதுதான் இந்த ‘மெட்ரோ’,
ஓய்வு பெற்ற ஏட்டய்யா ராஜா.. அவரது மனைவி துளசி.. மூத்த மகன் அறிவழகன்(சிரிஷ்).. இளைய மகன் மதியழகன்(சத்யா) என்ற அன்பான குடும்பத்தில் இளைய மகனான சத்யாவின் காதலால் குடும்பமே தலைகீழாக மாறுகிறது..
ஒரு பத்திரிகை அலுவலகத்தில் ரிப்போர்ட்டராக வேலை செய்கிறார் சிரீஷ். குடும்பத்தினர் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். தம்பி சத்யாவோ கல்லூரி மாணவர். இவருக்கு ஒரு காதலி. அவர் ஆடம்பரப் பிரியை. தன்னுடைய காதல் தொடர வேண்டுமெனில் சத்யாவிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்.. லேப்டாப், விலையுயர்ந்த செல்போன் என்று பல இத்யாதிகைளை பட்டியலிடுகிறார் காதலி.
சத்யா தன் வீட்டில் பைக் கேட்கிறார். அவ்வளவு பணமில்லை என்கிறார்கள். சிரீஷ் தம்பிக்காக முயன்று பார்த்தும் லோன் கிடைக்காததால் விட்டுவிடுகிறார். ஆனால் சத்யாவின் காதலி விடவில்லை. காதல் முறியும் அபாயம் வர.. சத்யா பதறுகிறான். அவனுடன் படிக்கும் கணேஷ் என்ற மாணவன் செல்வச் செழிப்பில் திளைப்பது எப்படி என்று அவனிடமே கேட்கிறான் சத்யா.
சத்யாவை கையோடு அழைத்துச் சென்று பெண்களின் கழுத்துச் செயினை குறி வைத்து அறுக்கும் படுபாதகச் செயலை செய்து காட்டுகிறான் கணேஷ். தனக்கும் பணம் வேண்டும். ஆடம்பரமான வாழ்க்கை வேண்டும். காதலி வேண்டும்.. இதைவிட்டால் உடனடி பணத் தேவைக்கு வேறு வழியில்லை என்று நினைத்து இதற்குள் ஆட்படுகிறான் சத்யா.
சென்னையின் செயின் பறிப்பாளர்களின் சங்கத் தலைவரான தாதா குணா என்னும் பாபி சிம்ஹாவிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகிறான் சத்யா. அவனையும் ‘ஆட்டை’யில் சேர்த்துக் கொள்கிறார் பாபி. இதன் பின்பு சத்யாவின் வாழ்க்கையில் அவன் விரும்பியதெல்லாம் கிடைக்கிறது.
ஒரு கட்டத்தில் சத்யாவின் திருட்டுத் தொழில் அவனது அம்மாவுக்குத் தெரிய வர.. அவள் அவனைக் கண்டிக்கிறாள். அந்த நேரத்தில் சத்யா ஒரு படுபாதகச் செயலைச் செய்துவிட.. குடும்பமே பரிதவிக்கிறது. இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படமே..!
படத்தின் துவக்கமே சஸ்பென்ஸில் துவங்கி.. போகப் போக டாப் கியரில் கொண்டு செல்லப்படுகிறது. எதற்கு இந்த சித்ரவதை என்ற சந்தேகம் வலுவாகிக் கொண்டே போய், கடைசியாக அந்த முதல் நபரை மறந்தே போக வைத்துவிட்டது திரைக்கதை.
இயக்குநர் தந்திருக்கும் அழுத்தமான இயக்கத்தினால் படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். புதுமுகமான சிரிஷும், சத்யாவும் தங்களது அண்ணன், தம்பி கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. சிரிஷின் ஹீரோத்தனமான ஆக்சன் காட்சிகளுக்கேற்றாற்போல் முதல் 20 நிமிட திரைக்கதைகள் அமைந்திருக்கின்றன.
இதைவிடவும் தன் அப்பாவிடமே சிகரெட் கேட்பது.. கட்டிங் கேட்பது.. அப்பா, அம்மா பாசத்தில் நெகிழ்வது. அவர்களது திருமணத் தின கொண்டாட்டங்கள்.. தம்பிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பது. கடைசியில் உண்மை தெரிந்து தம்பிக்கு முன்னால் தான் மண்டியிட்டு நிற்பது என்று ஒரு அண்ணன் கேரக்டரை புரிந்து செய்திருக்கிறார் சிரிஷ். ஆனாலும் அப்பாவிடமே சிகரெட், கட்டிங் கேட்கும் காட்சியெல்லாம் ரொம்ப ஓவர் இயக்குநரே.. நீக்கப்பட்டிருக்க வேண்டிய காட்சிகள்..!
தம்பி சத்யாவின் தடுமாற்றமான மனநிலைக்கு ஏற்றாற்போன்று திரைக்கதை காட்சிகள் அமைந்திருப்பதால் எதுவும் வலிந்து திணிக்கப்பட்டதாகவே தெரியவில்லை. ஆடு தானாக வந்து தன்னிடம் மாட்டும் என்று கசாப்புக்காரன் காத்திருப்பதுபோல, கணேஷின் அந்த கேண்டீன் காட்சி மட்டுமே கதையின் போக்கை சொல்கிறது.
“எனக்கு இதாம்மா பிடிச்சிருக்கு.. தப்பில்லம்மா.. என்னை புரிஞ்சுக்கம்மா..” என்று தன் அம்மாவிடம் கெஞ்சும் செயலும், தன் அண்ணனிடம் கடைசியாக இதையே சொல்வதும் அந்தக் கேரக்டரை கடைசிவரையிலும் நியாயப்படுத்தும் செயல்தான். ஆனால் எதிர்த்துப் பேசுபவர்கள் இதைவிட அதிகமாக நியாயம் பேசியிருக்க வேண்டும். அது இல்லாதது ஒரு பெரிய குறைதான்.
பாபி சிம்ஹாவுக்கு புதிய கேரக்டர் ஸ்கெட்ச். முதலில் தாதாவாக வந்தவர் கடைசியில் போதை மருந்தினால் பைத்தியக்காரன் லெவலுக்கு போய் பரிதாபமாக முடிகிறது இவரது கதை. இவருடனேயே இருக்கும் இவரது சீனியரின் செட்டப் ரசிக்க வைக்கிறது. ஹீரோயின் மாயாவுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை. இருக்கும் காட்சிகளில் கவர்ந்திருக்கிறார். ராஜாவும், துளசியுமே மனதை ஆக்கிரமிக்கிறார்கள். நண்பனாக வரும் செண்றாயனின் அறிமுகக் காட்சியே ஒரு பாட்ஷா ஸ்டைல். நண்பனுக்காக எந்த அளவுக்கு இறங்க முடியுமோ அந்த அளவுக்கு இறங்கியிருக்கிறார் கதையில்..!
செயின் திருடர்கள் பற்றிய கதை என்பதாலேயே செயின் திருடர்கள் எப்படி.. யாரை.. எங்கே குறி வைத்து இதைச் செய்கிறார்கள் என்பதையெல்லாம் விலாவாரியாக விளக்கியிருக்கிறார் இயக்குநர்.
தலையை விரித்துப் போடாமல் கொண்டை போட்டிருக்கும் பெண்கள்.. அல்லது ஜடை போட்டிருப்பவர்கள்.. சேலை அணிந்திருக்கும் பெண்கள்.. துப்பட்டா இல்லாத பெண்கள்.. பேசிக் கொண்டே கவனமில்லாமல் இருக்கும் பெண்கள்.. குழந்தையுடன் செல்லும் பெண்கள்.. இவர்களைத்தான் குறி வைக்க வேண்டும் என்பதும்.. கழுத்தில் ஒரு நகக்கீரல்கூட விழுகக் கூடாது என்று இந்த செயின் வேட்டையில் இருக்கும் எழுதப்படாத விதிகளை இந்தப் படத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
எப்படி பறிக்கிறார்கள் என்பதையும் பல காட்சிகளில் விளக்கியிருக்கிறார். அதிலும் குழந்தையுடன் செல்லும் குடும்பத்தினரின் மீது கை வைக்க.. இது தவறுதலாக குழந்தையையும் தாக்க.. குழந்தை பறந்து வந்து விழும் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் அருமை. கொடூரம் என்றாலும் இதைக் காட்டித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லைதான்.
இதேபோல் செயினை பறித்ததும் என்ன செய்வார்கள்..? அந்தச் செயினை எங்கே விற்பார்கள். திருட்டு செயின்கள் கடைசியில் என்னவாகும் என்பதையெல்லாம் விளக்கமாகவே காண்பித்திருக்கிறார் இயக்குநர். மொத்த செயினையும் உருக்கி தங்கக் கட்டியாக வகுத்தெடுத்து அதனை விற்கும் இந்த அண்டர்கிரவுண்ட் ஆபரேஷனையும் நிஜமாகவே நடப்பது போல் படமாக்கியிருக்கிறார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் கதையாகத்தான் பல திருடர்கள் இப்போது சிக்கிக் கொள்கிறார்கள். இதிலும் அந்த வயதான செக்யூரிட்டிக்காரர் தனது சைக்கிளை தூக்கி செயின் திருடர்களை அடித்து வீழ்த்துமிடத்தில், படம் பார்க்கும் ரசிகனின் மனம் சந்தோஷப்படும் அளவுக்கு இயக்குநர் படமாக்கியிருக்கிறார்.
ஜோகனின் இசையில் பாடல்கள் வழக்கம்போல மீண்டும் கேட்கும்படியாக இல்லை என்றாலும், பின்னணி இசையில் அடக்கி வாசித்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். என்.எஸ்.உதயகுமாரின் கேமிராவில் டைட்டில் காட்சி, மற்றும் இறுதிக் காட்சியில் காட்டப்படும் கழுகுப் பார்வையே அவரது திறமையைக் காட்டுகிறது.
படம் பார்க்கும் தாய்க்குலங்கள் இனிமேலாவது ஜாக்கிரதையாக இருந்துவிட்டால் நல்லதுதான். போதாக்குறைக்கு ஹெல்மெட் போடாமல் டூவிலர் ஓட்டக் கூடாது என்பது தற்போது தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் இந்த வேளையில், அறுத்துக் கொண்டு ஓடுபவனை எப்படி அடையாளம் காட்டுவார்கள் என்கிற பிரச்சினையும் தீவிரமாகி வருகிறது.
காவல்துறையின் உதவியில்லாமல் இவர்களைப் போன்ற குற்றவாளிகள் வெளியில் நடமாடவே முடியாது. அவர்களுக்கும், பாபி சிம்ஹா போன்ற இடைநிலை தாதாக்களுக்கும் இடையிலான கள்ளத்தனமான மறைமுகமான தொடர்பினை பற்றி இந்தப் படத்தில் எதுவும் சொல்லாதது ஏன் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் எந்த ஊரில் எந்த ஸ்டைலில் திருட்டு நடந்தாலும் யார் செய்திருப்பார்கள் என்று போலீஸாரே சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு திருடர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்கள்.
மாமூல், லஞ்சம், ஊழலில் திளைக்கும் ஒரு சில காக்கிச் சட்டையணிந்த பெருச்சாளிகளால்தான் சத்யா போன்ற இளம் குற்வாளிகளும் வளர்க்கப்பட்டு வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
தாய், தந்தை நல்லவர்களாக இருந்தும் பிள்ளைகள் தடம் மாறும்போது ஏன் என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் எழுமே.. அது இந்தப் படத்திலும் எழுந்திருக்கிறது. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் ஒரு மனிதனை குற்றவாளியாக்குகிறது என்பதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி.
மெட்ரோ – படமாக்கலில் ஒரு சிறப்பான திரைப்படம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment