ஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்

12-06-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உண்மையான இறைவிகளை அடையாளம் காட்டும் படம் இதுதான். மூன்று இறைவிகளின் வாழ்க்கையில் சக ஆண்களால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளின் விளைவுகளை சொல்கிறது இந்தப் படம்.

நிச்சயத்தார்த்தம் முடிந்து திருமணத்திற்குக் காத்திருக்கும் நிலையில் ஒரு இறைவி.. நிச்சயத்தார்த்தம் நடக்கவிருக்கும் சூழலில் ஒரு இறைவி.. திருமணம் செய்யக் காத்திருந்தும் மணமகன் கிடைக்காமல் அல்லாடும் இறைவி.. இப்படி இந்த மூன்று இறைவிகளின் வாழ்க்கைக் கதையை தன்னால் முடிந்த அளவுக்கு நேர்மையான முறையில் பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
திருமணம் என்ற பந்தத்தை பற்றிய கனவுகள் இரு பாலருக்கும் நிறையவே உண்டு. இந்தக் கனவில் வலிந்து திணிக்கப்பட்ட குடும்பச் சுமைகளும் அதிகம். இப்படியாப்பட்ட அந்த திருமண நாளோ, ஒரேயொரு நாள்தான். ஆனால் அதற்குப் பின்னான வாழ்க்கைக்கு முதல் புள்ளி அதுதான் என்பதால் அதனைத்தான் ‘ஒரு நாள் கூத்து’ என்று இந்தப் படத்தின் தலைப்பாக்கி பொருத்தமாக வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஐ.டி.யில் பணியாற்றும் தினேஷ் தன் உடன் வேலை செய்யும் நிவேதாவை காதலிக்கிறார். ஏழை, பணக்காரன் பாகுபாடு இவர்களின் கல்யாணப் பிரச்சினையில் தலையிட.. முனைந்து ஒரு முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார் தினேஷ். இதனைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நிவேதாவின் அப்பா, நிவேதாவை வேறொருவருடன் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள வைக்கிறார். நிவேகா சட்டென எழுந்த ஒரு சண்டையில், கோபத்தில் இதை ஏற்றுக் கொண்டாலும் அப்போதுவரையிலும் அவரது இதயத்தைவிட்டு காதலன் தினேஷை நீக்க முடியாமல் தவிக்கிறார்.
இன்னொரு பக்கம் சூரியன் எஃப்.எம்.மில் ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றும் ரித்விகாவுக்கு அண்ணன் கருணாகரன் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டேயிருக்கிறார். எதுவும் சரியாக அமையாமல்போக.. ரித்விகாவே மேட்ரிமோனியலில் தனக்கேற்ற மாப்பிள்ளையை தேடி வருகிறார்.
இந்தச் சூழலில் ஒரு வரன் அமைந்துவிட நிச்சயத்தார்த்தமும் நடந்தேறுகிறது. ஆனால் அதற்கடுத்த நாட்களில் அந்த மாப்பிள்ளைக்காரன், ரித்விகாவைவிட அழகான பெண்ணை எதிர்பார்த்து ‘கல்யாணம் வேண்டாம்’ என்கிறான். அதிர்ச்சியான ரித்விகா.. அவனிடம் மல்லுக் கட்டி வருகிறாள்.
இந்த நேரத்தில் தன்னை விரும்பாத ஒருவனிடம் வேண்டி, வேண்டி தன்னை விரும்ப வைப்பதைவிட.. தன்னை விரும்பி வருபவனை ஏற்றுக் கொள்வதே சரியானது என்றெண்ணி தன்னுடன் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் ரமேஷ் திலக்கை விரும்பத் துவங்குகிறாள் ரித்விகா.
சாதாரண மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்த மியாவுக்கு அவளது அப்பா வாரத்திற்கு ஒரு மாப்பிள்ளையை வீட்டுக்கு வரவழைக்கிறார். ஆனால் வந்தவர்களிடத்தில் அது இல்லை.. இது இல்லை என்று சொல்லி இவரே வேண்டாம் என்றும் சொல்லிவிடுகிறார். இப்படியாக மியாவின் பெண் பார்க்கும் படலம் 20-ஐ தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
கடைசியாக வந்த ஒரு மாப்பிள்ளை மியாவை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்கிறான். ஆனால் அவனது பெற்றோருக்கு மியா குடும்பத்தினரின் மிடில் கிளாஸ் வர்க்க வாழ்க்கை பிடிக்கவில்லை. இவர்களிடத்தில் பணம் கறக்க வழியில்லை என்பதால் மறுக்கிறார்கள்.
மாப்பிள்ளையோ மியாவை மறக்க முடியாமல் இருக்க.. தோழியின் தூண்டுதலால் அவனிடம் மியாவே பேசுகிறாள். அவளை சென்னைக்கு கிளம்பி வரச் சொல்கிறான் மாப்பிள்ளை. போன இடத்தில் மாப்பிள்ளையின் பெற்றோர் வந்து அவனை அடித்து இழுத்துச் சென்றுவிட.. மறுபடியும் வீட்டுக்கே திரும்பி வருகிறாள் மியா.
இந்த மூன்று பேரின் இந்த வாழ்க்கை போராட்டத்தின் கதைதான் இந்த ‘ஒரு நாள் கூத்து’.
முதல் பாதியில் திரைக்கதை கொஞ்சம் அலை பாய்ந்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு நொடிகூட கதையின் மையப்புள்ளியைவிட்டு விலகாமல் நம்மை படத்தில் இருந்து கண் அகலவிடாமல் பார்த்துக் கொண்டது. மிக இயல்பான திரைக்கதை. இயல்பான நடிப்பு. மிக அழகான இயக்கம் என்று அனைத்துவிதத்திலும் தரமான படம்.
மூன்று இறைவிகளில் மியா ஒரு படி மேலே சென்று கவர்கிறார். ஒவ்வொரு பெண் பார்க்கும் படலத்திலும் ஆர்வம் கொண்டவராக இருந்து பின்னர் அது படிப்படியாக குறைந்து கடைசியாக ஏனோதானோவென்று இருக்கும் சூழலுக்கு வரும்வரையிலும் அவருடைய நடிப்பும், முக பாவனைகளும் ‘அச்சச்சோ’ என்கிற உணர்வை ரசிகனுக்குள் நிச்சயம் தோற்றுவித்திருக்கிறது.
கடைசியாக வந்த மாப்பிள்ளையுடன் போனில் பேச ஆரம்பிக்கும் முன் இருக்கும் ஒரு தவிப்பும், அவரை நேரில் பார்த்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் தவிப்பும்.. கடைசியாக இனி என்ன செய்வது என்கிற புரியாத புதிரில் இருக்கும் தவிப்புமாக நடிப்பில் மிகப் பெரிய ஸ்கோர் செய்திருக்கிறார் மியா. கங்கிராட்ஸ் மேடம்.
புதுமுகமாகவே தெரியவில்லை நிவேதா பெத்துராஜ். கொஞ்சம், கொஞ்சமாக காதலுக்குள் விழுந்து தினேஷை தன் பக்கம் முழுமையாக்க் கொண்டு வர முடியாமல் தவித்து கடைசியாக குடும்பத்திற்கும் பயந்து, அப்பாவிற்கும் பயந்து, தினேஷையும் சமாளிக்க முடியாமல் தடுமாறும் நடிப்பில் உண்மையாகவே பரிதாபமான ஒரு உணர்வை தன் மீது ஏற்படுத்தியிருக்கிறார். அந்தக் கடைசி நேர காதல் ஒட்டுதல் நியாயமானதுதான். வேறு வழியே இல்லாமல் கடைசி நேரத்தில் ஏற்படும் டிவிஸ்ட்டைகூட ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பாவமாகிப் போய்விட்டார்.
இன்னொரு பக்கம் ரித்விகா. தான் அப்படியொன்றும் அழகியல்ல என்பதை நினைத்து கிடைத்த மாப்பிள்ளையை தக்க வைத்துக் கொள்ள பெரும்பாடுபடுகிறார். தானே மாப்பிள்ளை பார்க்கும் கொடுமையை மற்றவர்களிடத்தில் மறைக்க முயற்சிக்க பெரும் பாடும்.. அந்த எண்ணவோட்டமும் அருமை. இயக்குநரின் அருமையான திரைக்கதையில் பல காட்சிகள் நிஜமாகவே நடப்பது போலவே இருக்கிறது.
ஹோட்டல் அறையில் சட்டென்று அவர் எடுக்கும் ஒரு முடிவும், “உனக்கும், எனக்கும் செட்டாகாது…” என்று சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டில் அவர் இருக்கும் கோலம்.. தியேட்டரில் கைதட்டலை பெற்றுள்ளது. ‘இது அவசரத்தனமானதே.. சரியில்லையே..’ என்று நமக்குள் நாமே சொல்லிக் கொண்டாலும், அந்தப் பெண்ணின் அந்த நிலைமையில் யோசித்தால் எதுவுமே தப்பில்லை என்றுதான் தோன்றும்.
‘எல்லாம்’ முடிந்த பின்பு “ப்பூ.. இதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா…?” என்று அவர் சொல்லும் வாக்கியத்தில் இருப்பதுதான் இன்றைய இளம் பெண்கள் நினைக்கும் யதார்த்தமான வாழ்க்கை நிலைமை.  ஆனால், இயக்குநர் இவரை மட்டும் ஏன் இப்படி அம்போவென விட்டுவிட்டார் என்று தெரியவில்லை. அந்த கடைசி போன்காலையும் கேட்டுவிட்டு மெதுவாக தன்மையாக ரேடியோவில் விரக்தியாக பேசிவிட்டு “ஏதோ உங்க்கிட்ட சொல்லணும் தோணிச்சு. சொல்லிட்டேன்..” என்று சொல்லிவிட்டுப் போவது டச்சிங்.. டச்சிங்..
தினேஷ்.. அறிமுகக் காட்சியில் சஸ்பென்ஸாகவே ஆரம்பித்து பின்பு பிளாஷ்பேக் உத்தியில் முழு கதையையும் கொஞ்சம், கொஞ்சமாக சொல்லியிருப்பதால் அவருடைய கேரக்டர் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியிருக்கிறது. நிவேதாவின் அப்பாவை சந்திக்க சங்கடப்படுவதும், சந்தித்த பின்பு சட்டு, சட்டென்று பேசும் அவரது சுபாவத்தினால் வெடித்தெழும் வசனங்களும் படத்தின் டர்னிங் பாயிண்ட்டுகள்.
பொருளாதார சமன்பாட்டு நிலைமைதான் இன்றைய காதல் திருமணங்களுக்கு மிகப் பெரிய எதிரி என்பதை இயக்குநர் இவர்களது காதலின் மூலம் தெளிவுபடுத்துகிறார். ஜாதி, மதமெல்லாம் இதற்குப் பின்னால்தான் வருகிறது என்பதை ரசிகர்களும் புரிந்து கொண்டால் நல்லதுதான்.
இறுதியாக தான்தான் மாப்பிள்ளையாகப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் காரை பத்திக் கொண்டு வந்து நிறுத்தி வேகமாக ஓடி வரும் தினேஷிற்கு ஏற்படும் அந்த கடைசி ஏமாற்றமும், அதிர்ச்சியும் அவருக்கு மட்டுமில்லை.. படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் சேர்த்துதான்..! தினேஷின் நடிப்பு படத்திற்கு படம் உயர்ந்து கொண்டேதான் போகிறது. வாழ்த்துகள் பாராட்டுக்கள்..!
அடுத்து குறிப்பாக பாராட்டப்பட வேண்டிய நபர் சார்லிதான். வயதானாலும் இன்னமும் கல்யாணம் ஆகாத அந்த ஏக்கத்தை அவ்வப்போது அவர் வெளிக்காட்டும்விதமும், சிச்சுவேஷனும் அருமை. அதிகக் கைதட்டலை இவர்தான் தட்டிச் சென்றிருக்கிறார். அண்ணனாக கருணாகரன்.. பொறுமையின் சிகரமாக.. தங்கைக்காக.. தங்கையின் போன்காலில்கூட தன்மையாக கோபத்தை பொறுத்துக் கொண்டு பேசி.. கடைசியாக எல்லாத்துக்கும் சேர்த்து பல்பு வாங்கும் காட்சியில் சிரிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் துவக்கத்தில்  இருந்து கடைசிவரையிலும் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு உற்ற துணை கேமிராமேன் கோகுல் பெனாயின். ஒளிப்பதிவு அருமையிலும் அருமை. பாடல் காட்சிகளில் இன்னமும் அருமை.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ‘அடியே அழகு’ பாடல் சிச்சுவேஷனுக்கேற்ற பாடல். ‘எப்போ வருவாரோ’ பாடலும் காட்சிக்கேற்றவாறு இன்னும் கொஞ்சம் சோகத்தை தூண்டிவிட்டிருக்கிறது. பல இடங்களில் பின்னணி இசையை மெளனமாக்கி படத்தை அதிகம் ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். இதற்காகவே அவருக்கு தனி பாராட்டு.
பெண்களை மையப்படுத்திய கதை. திருமணத்தை முன்னுறுத்திய கதை.. பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் கதை என்று எப்படியாகினும் இந்தப் படத்தை நாம் முன் மொழியலாம். வழி மொழியலாம். எப்படியிருந்தாலும், இந்தப் படத்தின் கதை சொல்லும் சிச்சுவேஷனை தெரியாதவர்களோ, அறியாதவர்களோ தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது. அப்படியொரு கதையாக நம்மிடமிருந்தே எடுத்து நமக்கே கொடுத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.
சிறந்த திரைக்கதையாக்கம், சிறந்த இயக்கம் என்று தனது கைவண்ணத்தில் வெற்றியைக் கண்டிருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களை கொடுக்க பெரிதும் வாழ்த்துகிறோம்..!

0 comments: