‘தேவர் மகன்’ படத்தின் உண்மையான கதாசிரியர் யார்..? சர்ச்சையில் கலைஞானமும், கமலும்..!

20-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தேவர் மகன்’. கலைஞானி கமல்ஹாசனின் படங்களில் தனித்துவம் வாய்ந்தது. மறக்க முடியாத படமும்கூட.. கமல்ஹாசன், சிவாஜி கணேசன், கவுதமி, ரேவதி, நாசர், காக்கா ராதாகிருஷ்ணன், வடிவேலு, சங்கிலி முருகன், எஸ்.என்.பார்வதி என்று பல பிரபலங்களுக்கு பெயர் சொன்ன படம். 1992-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி தீபாவளியன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.



இந்தப் படத்திற்கு சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதினை சிவாஜி கணேசனுக்குப் பெற்றுக் கொடுத்தது. சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது ரேவதிக்குக் கிடைத்தது. சிறந்த ஆடியோகிராபிக்கான விருதும், சிறந்த பாடகிக்கான விருது எஸ்.ஜானகிக்கும் இதே படம் பெற்றுக் கொடுத்தது.

படத்தின் கதை, திரைக்கதையைவிட வசனகர்த்தா கமல்ஹாசன் இந்தப் படத்தில் அதிகம் பேசப்பட்டார். அவ்வளவு வீரியமான வசனங்கள் இந்தப் படத்தில் இருந்தன. கூடவே இளையராஜாவின் இனிமையான இசையும் சேர்ந்து கொள்ள.. இப்போதும் பார்க்கப் பார்க்க திகட்டாத படம்..

மலையாள இயக்குநர் பரதன்தான் இந்தப் படத்தை இயக்கினார். பாதி படம் இயக்கி முடித்தபோதே பரதனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்களிருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது. அப்படியிருந்தும் படத்தை எடுத்து முடித்து வெளியிட்டு ஹிட்டாக்கியது கமல்ஹாசனின் சாமர்த்தியம். ‘தேவர் மகன்’ படத்தின் வெற்றி விழாவில் அருகருகே அமர்ந்திருந்தும் பரதனும், கமல்ஹாசனும் பேசிக் கொள்ளாமலேயே இருந்தது சுவாரஸ்யம்தான்.

இந்தப் படம் இந்த பிரெண்ட்ஷிப்பை படத்தின் ஷூட்டிங்கின்போதே கட் செய்தது எனில்,  இன்னொரு பிரெண்ட்ஷிப்பை பட வெளியீட்டுக்குப் பின்பு கட் செய்தது. அது கமலுக்கும், இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கும் இடையிலான நட்பு. ‘தேவர் மகன்’ படத்தின் கதை தன்னுடையது என்றும், இதனை கமல்ஹாசன் தன்னுடைய பெயரில் வெளியிட்டிருக்கிறார் என்றும் படம் வெளியானவுடன் புகார் சொன்னார் கங்கை அமரன்.

இதைப் பற்றி கமல்ஹாசனிடம் கேட்டபோது செல்லமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு “அவரோட கதையாம்மா..?” என்று எதிர்க் கேள்வி கேட்டு பஞ்சாயத்தை முடித்துவிட்டார். அதற்குப் பின்னர் இன்றுவரையிலும் கங்கை அமரனுக்கும், கமலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை.

இதில் இப்போது மேலும் ஒரு டிவிஸ்ட்டாக ‘நக்கீரன்’ பத்திரிகையில் தன்னுடைய திரையுலக வாழ்க்கை அனுபவங்களை ‘சினிமா சீக்ரெட்’ என்ற பெயரில் எழுதி வரும் பிரபல கதாசிரியர் கலைஞானம், ‘தேவர் மகன்’ படத்தின் கதைக் கருவும், சில காட்சிகளும் தன்னுடையது என்கிறார்.

இது குறித்து ‘நக்கீரன்’ இதழில் அவர் எழுதியிருப்பது இது :

பெரிய ஸ்டாரான கமலின் ஓரிரு படங்கள் சரியாகப் போகாத நிலையில் ‘கரகாட்டக்காரன்’ என்னும் பெரும் வெற்றிப் படத்தைத் தந்த கங்கை அமரனை தனது படத்திற்கு டைரக்டராக்கினார் கமல். படத்தின் தயாரிப்பும் கமல்தான்.

ஜல்லிக்காட்டு காளை பின்னணியில் ஆன கிராமியக் கதையை எழுதிய கங்கை அமரன், “இந்தக் கதையின் டிஷ்கஷனுக்கு கலைஞானமும், கலைமணியும் வந்தால் நன்றாக இருக்கும்…” என்று சொல்ல கமலும் டபுள் ஓகே சொல்லிவிட்டார். அழைப்பின்பேரில் நானும் கலைமணியும், கமலின் ஆபீஸுக்குச் சென்றோம். அங்கே தீவிரமாக கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது. எனக்கும், கலைமணிக்கும் தலா ஐயாயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்தார் கமல்.

கதை விவாதத்திற்கிடையே என்னிடம் உள்ள கதைகளை சுருக்கமாகச் சொல்வது எனது வழக்கம். அப்படித்தான்.. எனது கல்கத்தா கார் அனுபவமான ‘கான்வாய்’ கதையை கமலிடம் சொன்னேன். அடுத்து ‘எங்க ஊரு ஏட்டையா’ என்கிற கதையையும் சொன்னேன். “ரெண்டு கதைகளையுமே எடுக்கிறேன். ஆனா ரெண்டு, மூணு வருஷம் கழிச்சுத்தான் எடுக்க முடியும்…” என்றார். கமல். “உங்க செளகர்யம் போல செஞ்சுக்கலாம் தம்பி…” என நான் சொன்னேன்.

கமல்-கங்கை அமரன் படத்திற்காக கதை விவாதம் முடிந்தது. படத்திற்கு ‘அதிவீரபாண்டியன்’ என்கிற தலைப்பையும் சொன்னேன். கமல் உட்பட எல்லோருக்கும் பிடித்துவிட்டது. படப்பிடிப்பு துவங்கிருந்த நேரத்தில் சில, பல.. காரணங்களினால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

உடனடியாக வேறு படம் தொடங்க வேண்டியிருந்த கமல், ஒரு கதையைத் தானே தயார் செய்து, தானே இயக்கித் தயாரிக்க திட்டமிட்டார். எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு நட்சத்திரங்கள், துணை நடிகர்கள் என சுமார் 200 பேர்களுடன் கமல் தனது சொந்த ஊரான பரமக்குடி பக்கம் தங்கிவிட்டார்.

முதல் நாள் ஷூட்டிங் முடிந்தது. சிந்தனைவயப்பட்டவராக கமல் தூங்காமல் விழித்திருக்க.. அந்தச் சமயம் கமலை வைத்து படம் தயாரிக்க விரும்பி, அங்கே சென்று கமலை சந்தித்தார் சங்கிலிமுருகன்.

“என்ன கமல்.. ஒரு மாதிரியா இருக்கீங்க..?” என்று சங்கிலிமுருகன் கேட்க, “இன்னிக்கு ஷூட்டிங் முடிஞ்சது. ஆனாலும் எனக்கு திருப்தி வரலை. கதை சரியா இல்லை.. அதான் யோசனையா இருக்கு..” என்று கமல் சொல்லிவிட்டு, “சங்கிலி ஸார்.. கலைஞானம் என்கிட்ட ரெண்டு கதைகளோட லைன் சொன்னார். அதுல ஒண்ணு எனக்குப் பிடிச்சிருக்கு. அதை வைச்சு பண்ணலாமா..? அந்த லைன் சொல்றேன்.. கேக்குறீங்களா..?”

“சொல்லுங்க..”

“ஒரு கிராமத்துல இரு பெரிய புள்ளிகள். கோயிலின் ‘முதல் மரியாதை’ என்னும் ‘பரிவட்டம்’ யாருக்கு என்பதில் இருவருக்கும் இடையே போட்டி. தீர்வு கிடைக்காததால் கோயிலை மூடி ஆளுக்கொரு பூட்டைப் போட்டுவிடுகிறார்கள். ‘தீர்வு கிடைக்கும்வரை கோயிலை திறக்கக் கூடாது’ என பரஸ்பரம் சவால் விடுகிறார்கள். இதுதான் கலைஞானம் அண்ணன் சொன்ன ஒன் லைன்..” என்று கமல் சொல்ல.. “இதை வைச்சு தாராளமா செய்யலாம்..” என்று சங்கிலிமுருகனும் ஆர்வமாகிவிட.. இருவரும் விடிய, விடிய கலந்து பேசியதில் முழு திரைக்கதையையும் கமல் அழகாக எழுதிவிட்டார்.

மறுநாள் படப்பிடிப்பு ஜோராகத் தொடங்கியது. அதுதான் ‘தேவர் மகன்’ திரைப்படம். இந்தச் சமயம், சந்தர்ப்பம் சில சங்கடங்களை உண்டாக்கியது.

‘தேவர் மகன்’ படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் பாக்யராஜுடன் பார்ட்னராக சேர்ந்து ‘அம்மா வந்தாச்சு’ படத்தை எடுத்து அதனை ரிலீஸ் பண்ணும் வேலைகளில் இருந்தோம். இதற்காக நான் பாக்யராஜின் ஆபிஸிலேயே இருந்தேன். அந்த ஆபீஸுக்கு கமல் போன் பண்ணினார்.

“அண்ணே.. என் படத்தில் உங்களுக்கு முக்கியமான வேஷம் இருக்கு. உடனே கிளம்பி வர முடியுமா..?” என கேட்டார். “தம்பீ.. உங்க படத்துல நீங்க எனக்கு வேஷம் தர்றது அளவிலா மகிழ்ச்சி தருது. ஆனா, இங்க எனக்கு ‘அம்மா வந்தாச்சு’ ரிலீஸ் வேலைகள் இருக்கே…?” என்றேன் நான். “அப்போ.. முதல்ல அதைச் செய்யுங்கண்ணே.. நான் வேற ஆளைப் போட்டுக்குறேன்..” என்றார் கமல். (‘தேவர் மகன்’ படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் ஏற்றிருந்த வேஷத்திற்காகத்தான் கமல் என்னை அழைத்தார் என்பதை, பிற்பாடு காக்கா ராதாகிருஷ்ணனே என்னிடம் சொன்னார்.)

ஒரு நாள் என்னுடைய ‘மிருதங்க சக்கரவர்த்தி’ படத்தில் என்னால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட, நடிகர் நாகராஜ சோழன் என்னைச் சந்தித்தார். “அண்ணே, ‘தேவர் மகன்’ படத்ல ஒரு நல்ல கேரக்டர் பண்ணிட்டு வந்தேன்…” என்றார். “அப்படியென்ன கேரக்டர்..?” என கேட்டேன். டேமில் குண்டு வைப்பது உள்ளிட்ட சில சீன்களையும் சொன்னார். இது கமல்கிட்ட நாம சொன்ன கதை மாதிரியிருக்கே..? இதுக்குத்தான் கமல் ‘தேவர் மகனில்’ நடிக்கக் கூப்பிட்டாரோ என எனக்குள் ஒரு சந்தேகம். இருந்தாலும் முழு விபரமும் தெரியாமல் அவசரப்படக் கூடாது என அமைதியானேன்.

சில நாட்கள் கழித்து கமல் அலுவலகத்திற்கு போன் போட்டு மேனேஜர் டி.என்.எஸ்ஸிடம் பேசினேன். நேரடியாகக் கேட்டுவிடக்கூடாது என்பதால் பாலீஷாக சுற்றி வளைத்து பேச்சை ஆரம்பித்தேன். “அதிவீரபாண்டியன்’ படத்துக்கு ஸ்டோரி டிஸ்கஷனில் கலந்துக்கிட்டதுக்காக ஒரு செக் குடுத்துச்சு தம்பி. அது என்ன தேதின்னு சொல்ல முடியுமா..?” என கேட்டேன். தேடிப் பிடித்து செக் தேதியைச் சொன்னவர் “கலைஞானம் ஸார்.. ஒரு செய்தி.. உங்ககிட்ட சொல்ல மறந்திட்டேன்..” என்றார். “என்ன..?” என்றேன். “உங்க தம்பி கமல்.. நீங்க சொன்ன கதையில் இருந்து ‘தேவர் மகன்’ படத்துக்காக ரெண்டு, மூணு சீன்களை எடுத்துக் கொண்டார். உங்ககிட்ட சொல்லச் சொன்னார். நான்தான் மறந்திட்டேன்..”  என்றார். “சரிங்க…” எனச் சொல்லி போனை வைத்துவிட்டேன்.

‘தேவர் மகன்’ படத்தைப் பார்க்காமல் எந்த முடிவுக்கும் வரக் கூடாது. அவசரப்பட்டு அநாகரிகமாக நடந்துவிடக் கூடாது என உறுதியாக இருந்தேன். ‘தேவர் மகன்’ ரிலீஸ். முதல் நாள், முதல் ஷோவே பார்த்தேன். உடனேயே, கமலிடம் பேசுவதற்காக போன் செய்தேன். சிவாஜி பிலிம்ஸின் ‘கலைஞன்’ படப்பிடிற்காக மைசூர் போய்விட்டதாகச் சொன்னார்கள். சென்னைக்கு கமல் வந்த பிறகு சந்திக்கலாம் என இருந்துவிட்டேன்.  ‘தேவர் மகன்’ மிகப் பெரும் வெற்றியுடன் ஓடி முடியும் தருவாய் ஆன நிலையில், அதாவது இரு மாதங்களுக்குப் பிறகு, கமல் சென்னை திரும்பிவிட்டதாக செய்தி கிடைத்த்து.

கமலுடன் பேச விரும்பி பல முறை அவருடைய அலுவலகத்துக்கு போன் செய்தேன். ஆனால் முடியவில்லை. ஒரு நாள் போன் போட்டு உரத்த குரலில் பேசினேன். “கமல் தம்பிகிட்ட போனை குடுங்க. குடுக்கலைன்னா, நான் இப்பவே ஆபீஸுக்கு வருவேன்..” என்று சொன்னதும் உடனே லைனில் வந்தார் கமல்.

“அண்ணே.. வணக்கம்ண்ணே.. கொஞ்சம் பிஸியா இருந்திட்டேன்.. என்னண்ணே..?”

“தம்பீ.. தேவர் மகன் பார்த்தேன். கதையோட ஆரம்பம் என்னுடையதா இருந்தாலும், அதுக்கு நீங்க எழுதின ஸ்கிரீன் பிளே அற்புதம் தம்பி.. உங்களைத் தவிர வேற யாராலும் இப்படி எழுத முடியாது தம்பி..”

“தேங்க்ஸ் அண்ணே.. நாளைக்கு காலைல டி.என்.எஸ்ஸை உங்க வீட்டுக்கு அனுப்புறேன்..”

கமல் சொன்னது போலவே டி.என்.எஸ். என் வீட்டுக்கு வந்தார். செக் ஒன்றை தந்தார்.  ஆனால், அது என் உழைப்புக்கேற்ற  ஊதியமாக இல்லை.  “நான் நாளைக்கு தம்பிய பார்த்து பேசிக்கிறேன். செக்கை நீங்க திரும்ப எடுத்திட்டுப் போயிருங்க..” என்று சொல்லிவிட்டேன்.

மறுநாள் காலை காக்கா ராதாகிருஷ்ணன் எனக்கு போன் செய்து, “கலைஞானம்… ஷூட்டிங்ல கமலுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சுப்பா…” என்றார். எனக்கு வருத்தம் ஏற்பட்டது. ‘கலைஞன்’ படத்திற்காக சென்னை அண்ணா மேம்பாலத்திற்குக் கீழே கமல் குதிரையில் வரும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள், அதிகாலைக்கும் முன்பாக. பாலத்தின் தூண் சுவர் மீது குதிரை மோதியதில் கமல் கீழே விழுந்துவிட்டார். இதில் குறுக்குத் தண்டின் கடைசி தசைப் பகுதியில் இரண்டாக வெடிப்பு ஏற்பட்டுவிட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் கமல்.  இந்தச் சூழ்நிலையில் அவரைப் போய் பார்த்தால் ‘கதை விஷயமாக இருக்குமோ’ என்று கமல் நினைத்து வருந்தினால்..? அப்படி ஒரு வேதனைக்கு நாம் காரணமாகக் கூடாது என்று இருந்துவிட்டேன். கமல் நலம் பெற என் இஷ்ட தெய்வம் முருகனிடம் வேண்டிக் கொண்டேன். உயர் சிகிச்சைக்காக மும்பை சென்றுவிட்டார் கமல்.

சில வாரங்களுக்குப் பின் டைரக்டர் ரங்கராஜன் தயாரித்து வந்த ‘மகாராசன்’ படத்தில் கமல் சிறப்பு வேடமேற்று நடித்து வந்தார். இன்னும் ஒரு நாள் கமல் நடித்துக் கொடுத்தால் படம் வெளியாகிவிடும் என்ற சூழலில் அதில் நடித்துக் கொடுக்க கமல், மோகன் ஸ்டூடியோ வந்திருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. நான் அங்கு போனேன். என்னைப் பார்த்ததும் “வாங்கண்ணே…” என எழுந்து கும்பிட்டார் கமல். அரை பாதியாக மெலிந்திருந்த கமலைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன தம்பி இப்படி மெலிஞ்சீட்டிங்க..?”

“அடிபட்ட காயம் இன்னும் முழுசா ஆறலண்ணே.. தொடர்ந்து ட்ரீட்மெண்ட்ல இருக்கேன்…” என்றபடியே தான் உட்கார்ந்திருந்த சேரை காண்பித்தார். அதில் பெரிய ஓட்டை இருந்தது.

“என்ன தம்பி இது..?”

“சேர்ல உட்காரும்போது மறந்துபோய் சாய்ந்து உட்கார்ந்தா, முதுகுத் தண்டுல உராயும். புண் ஆறாது.. அதனாலதான் இந்த ஓட்டை சேர்…” - 

கமல் இப்படிச் சொன்னதும் என் மனம் ரொம்பவே வேதனைப்பட்டது. “தம்பி.. உங்களை நலம் விசாரிக்க மட்டும்தான் வந்தேன். முதல்ல 
உங்க உடம்பை பார்த்துக்குங்க…” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அடுத்த ஓரிரு நாளில் சங்கிலி முருகன் என் வீட்டுக்கு வந்தார்.

“அப்பே.. கமல் உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னார்..” என்றார் சங்கிலி முருகன். அவரது காரில் அவரும், என் காரில் நானும் கமல் ஆபீஸ் போனோம். கமல், மேனேஜர் டி.என்.எஸ். மற்றும் ஊழியர்கள் என்னை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். எனக்கு முன் சங்கிலி முருகன் நுழைந்தார். அவர் டைரக்சன் பண்ணினார்.

“டி.என்.எஸ். அந்த பண்டலை எடுத்திட்டு வாங்க..”

கொண்டு வந்தார் டி.என்.எஸ்.

“அதை கமல் தம்பியிடம் கொடுங்க..”

கொடுத்தார்.

“கமல் தம்பி.. அண்ணன்கிட்ட பண்டலைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குங்க..”

கமல் என்னிடம் கொடுக்க நானும் வாங்கிக் கொண்டு கமலை ஆசீர்வதித்தேன். (ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை கமலை ஆசீர்வதிக்கின்றவன்தானே  நான்…!)

பண்டலில் என்ன இருக்கிறது என நாகரிகம் கருதி நானும் கேட்கவில்லை. அவர்களும் சொல்லவில்லை. விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன். பண்டலைப் பிரித்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் கமல் மேனேஜர் டி.என்.எஸ்., என் வீட்டுக்கு வந்து கொடுத்த.. திறமைக்கேற்ற ஊதியம் இல்லை என நான் திருப்பியனுப்பிய அதே காசோலை தொகையே, இப்போது பணமாக இருந்தது. எனக்கும், கமலுக்கும் இடையே இடைத்தரகர்கள் விளையாடிவிட்டார்கள் என்றாலும், கமல் மீது நம்பிக்கையோடு இப்போதும் காத்திருக்கிறேன்…”

- இதுதான் கதாசிரியர் கலைஞானம் எழுதியிருப்பது.

இவர் சொல்படி பார்த்தால் ‘தேவர் மகனின்’ கதைக் கருவே இவருடையதுதான்.. பின்பு எப்படி கங்கை அமரன் தன் கதை என்று சொல்ல முடியும்..? ஒருவேளை இதுவரையிலும் கலைஞானம் இதனை வெளியில் சொல்லாத காரணத்தினால், கங்கை அமரன் டிஸ்கஷனில் உருவான கதையை இயக்குநர் என்ற முறையில் தன்னுடையது என்கிறாரோ என்னவோ..?

இனி அடுத்த வெர்ஷனை கங்கை அமரன்தான் சொல்ல வேண்டும்..! காத்திருப்போம்..!!!

நன்றி : நக்கீரன் வார இதழ்

11 comments:

silanerangalil sila karuththukkal said...

அண்ணே.. அந்தக் கதை காட்பாதர் பாணி கதை என்று வேறு சொல்றாங்க... என்னங்க நடக்குது...?

ravikumar said...

Kamal is not only scene stealer he also steals story

குட்டிபிசாசு said...

//அண்ணே.. அந்தக் கதை காட்பாதர் பாணி கதை என்று வேறு சொல்றாங்க//

அப்பதானே உலகப்படமுனு சொல்லிக்கலாம்.

Anonymous said...

dear saravanan sir
expecting a post on the latest election result please

krishna

SANKAR said...

வெற்றிக்கு ஆயிரம் அன்னைகள்.தோல்வி என்றுமே அனாதை தான். சங்கர் பாளை

வருண் said...

கமலஹாசனுடைய "திருட்டு ரெப்யூட்டேசன்" உலகம் அறிந்தது.

திருடுனது ஒண்ணா ரெண்டா?

திருடிவிட்டு பிடிபட்டாலும் அதை கேவலமாக ஏதாவது "ஜஸ்டிஃபிகேஷன்" சொல்லி அசிங்கமா சமாளிக்கிற ஒரு ஜந்து கமலஹாசன் என்கிற மேதை.

இந்த மேதைக்கு சொம்பு தூக்கிற மேதைகளும், பெரிய மனுஷனுகளும் இதுபோல் குற்றச்சாட்டு வரும்போது பொத்திக்கிட்டு, மனசுக்குள்ளேயே புளுங்கிக்கொண்டு இருப்பதையும் பார்க்கலாம்!

"உலக நாயகன்" ஒரு "உலகத் திருடந்தான்"னு இவனுக ஒத்துக்கொள்ளாத வரைக்கும் இவனுகளும் பெரியமனுசன் போர்வையில் திரியும் கீச்தரமான கூட்டுக்களவானிகள்தான் என்பது என் திடமான எண்ணம்.

குட்டிபிசாசு said...

கமலஹாசன் நியமானவரோ? நியாயமற்றவரோ? கதாசியருக்கு பணம் கொடுத்திருக்கிறார். கலைஞானம் அவர்களும் அதை வாங்கி இருக்கிறார். பணம் போதவில்லை என்றால் அதைப் பல வருடங்கள் கழித்து, அதுவும் பத்திரிகை மூலமாகத்தான் சொல்ல வேண்டுமா?

குட்டிபிசாசு said...

ஒருவர் ஒரு கதையை விற்றுவிடுகிறார். பிறகு அக்கதை திரைக்கதையாக மாறி, படமாகி வெற்றி பெற்றுவிடுகிறது. பின்னர் அவ்வெற்றியைப் பார்த்து "கதைக்கரு என்னுடையது" இன்னும் எதாவது மேலே போட்டுக்கொடுங்கள் என்று போய் கேட்பது திரையுலகில் சகஜம். ஒருவேளை படம்தோல்வி அடைந்தால் இவ்வாறு ஒத்துக்கொள்வார்களா?

வவ்வால் said...

கு.பி,

//கலைஞானம் அவர்களும் அதை வாங்கி இருக்கிறார். பணம் போதவில்லை என்றால் அதைப் பல வருடங்கள் கழித்து, அதுவும் பத்திரிகை மூலமாகத்தான் சொல்ல வேண்டுமா?//

இதுல இருக்க தார்மீக அறம் என்ன என்பதை மறந்துவிட்டு இப்படி கேட்கிறீர்,

அதாவது கலைஞானம் ஒரு கதை சொல்லி இருக்கிறார் ,அதனைப்பயன்ப்படுத்த போவதாக சொல்லவில்லை, மேலும் படத்தில் அவருக்கான கிரெடிட்டும் கொடுக்கவில்லை.

அவரா கண்டுப்பிடிச்சு கேட்டவுடன் தான் பணம் கொடுக்க முன்வருகிறார், அவர் அதனை ஆரம்பத்தில் மறுத்தும் விடுகிறார், பின்னர் எப்படியோ சுத்தி வளைச்சு வாங்க வச்சிடுறார்.

இது முறையான செயல் அல்லவே.

இப்போ ஒரு பொண்ணு மேல ஒருத்தன் ஆசைப்படுறான் "கல்யாணம் செய்துக்கலாமா"னு கேட்கிறான் ,அப்பெண்ணுக்கு விருப்பம் இல்லைனு மறுத்து விடுகிறது என வச்சிப்போம்.

இப்போ கேட்டவன் என்ன செய்கிறான் , ஆசைப்பட்ட பொண்ணு தனக்கு வேண்டும்னு தூக்கிட்டு போயி "பாலியல் பலாத்காரம்" செய்து விடுகிறான் , ஊருல இருக்காங்கலாம் பஞ்சாயத்து கூட்டி வச்சி ஏன்டாப்பா இப்படி செய்தே இனிமே அந்தப்பொண்ணை யாருக்கட்டிப்பானு கேட்டால் ,கவலைப்படாதிங்க நானே கட்டிக்கிறேன்னு சொல்லிடுறான், இப்போ அவன் அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தான்னு பாரட்டனுமா? இல்லை பாலியல் பலாத்காரம் செய்துட்டான்னு தண்டனை கொடுக்கனுமா?

விவேக் படத்தில் வர "மைனர் குஞ்சு" காமெடிய நினைச்சிப்பார்க்கவும்!

மோகன்,பூர்ணிமா ஜெயராம் ,சுஜாதா நடிச்ச விதிப்படம் கூட இதனை சொல்லும்.

அனுமதி/விருப்பம் இல்லாமல் ஒன்றை செய்துவிட்டு ,பின்னர் நஷ்ட ஈடு கொடுக்கிறேன் என்பதும் "குற்றமே"!

அப்படியே நஷ்ட ஈடு கொடுப்பாயிருந்தாலும் "பாதிக்கப்பட்டார்கள்" கேட்பதை தான் கொடுக்கணும் , திருடுனவன் போனாப்போகுதுனு கொடுப்பதல்ல.

வவ்வால் said...
This comment has been removed by the author.
குட்டிபிசாசு said...

//இப்போ ஒரு பொண்ணு மேல ஒருத்தன் ஆசைப்படுறான் "கல்யாணம் செய்துக்கலாமா"னு கேட்கிறான் ,அப்பெண்ணுக்கு விருப்பம் இல்லைனு மறுத்து விடுகிறது என வச்சிப்போம்.

இப்போ கேட்டவன் என்ன செய்கிறான் , ஆசைப்பட்ட பொண்ணு தனக்கு வேண்டும்னு தூக்கிட்டு போயி "பாலியல் பலாத்காரம்" செய்து விடுகிறான் , ஊருல இருக்காங்கலாம் பஞ்சாயத்து கூட்டி வச்சி ஏன்டாப்பா இப்படி செய்தே இனிமே அந்தப்பொண்ணை யாருக்கட்டிப்பானு கேட்டால் ,கவலைப்படாதிங்க நானே கட்டிக்கிறேன்னு சொல்லிடுறான், இப்போ அவன் அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தான்னு பாரட்டனுமா? இல்லை பாலியல் பலாத்காரம் செய்துட்டான்னு தண்டனை கொடுக்கனுமா?
//

முதல்ல சொன்னதே புரிந்தது. அதுக்கு இப்படி ஒரு பலாத்கார விளக்கமா? :))

பத்ரிகையில் கேட்காமல் நேரடியாகவே இருக்கலாம் என்று சொல்ல வந்தேன்.

மூத்த வசனகர்த்தா, கதாசிரியர் ஆரூர்தாஸ் அவர்களும் இப்படித்தான் எழுதிவருகிறார்.