11-05-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எத்தனை நாட்களாகிவிட்டது திரையரங்கில் இத்தனை சிரிப்பு சிரித்து..? கடைசியாக இந்த அளவுக்கு சிரித்தது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில்தான்..! அதுவும் ஒரு திகில், மர்மம் படத்திலேயே நகைச்சுவையும் கலந்து வருகிறது எனில், இந்த இயக்குநரின் தனித்திறமையை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.. வெல்டன் இயக்குநர் ஸார்..!
சிட்டுக் குருவி லேகியம்போல் ஒரு மாத்திரையை மார்க்கெட்டிங் செய்யும் நிகழ்ச்சியைத் தயாரித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணாவுக்கு அந்த மாத்திரையை வாங்கிப் பயன்படுத்தியவனால் சோதனை ஏற்படுகிறது. அவனுடைய ‘கிளி’ அளவுக்கதிகமான மாத்திரை உபயோகத்தால் செத்துப் போய்விட்டதாக்க் கூறி அவனுடைய அப்பன் கிருஷ்ணாவைக் கடத்திச் சென்று தாக்குகிறான். மருமகள் ஓடிப் போய்விட்டதால், மரியாதையாக வேறு பொண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து தரும்படி மிரட்டுகிறான். வீட்டுக்கு வந்தால் கடன் கொடுத்தவன் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறான்.
இந்தச் சிக்கல் இருக்கும்போது அவனது நிஜமான அப்பா அவனுக்கு எழுதிய கடிதம் அவர் கைக்கு வருகிறது. அதில் கொள்ளியூரில் இருக்கும் பூர்வீகச் சொத்தை பெற்றுக் கொள்ளும்படி எழுதியிருக்க தனது காதலி ரூபா மஞ்சரியுடன் கொள்ளியூர் பயணமாகிறார் கிருஷ்ணா. அங்கே ஒரு பாழடைந்த பங்களா டைப் வீடுதான் அவரது சொத்தாக இருக்கிறது. அங்கேயே தங்கையுடன் குடியிருக்கும் கருணாகரனுடன் நட்பு வைத்து அவனது ஆலோசனையின்பேரில் அந்த பங்களாவை புதுப்பிக்க ஏற்பாடு செய்கிறான்.
இதற்காக திரும்பவும் சென்னைக்கு வந்து ரவுடியின் மகனுக்கு சோனாவை செட் செய்துவிடுவதாக்க் கூறி 40 லட்சம் ரூபாயை அபேஸ் செய்துவிட்டு கொள்ளியூர் வருகிறார் கிருஷ்ணா. அதனை வைத்து பங்களாவை புதுப்பித்து புது ஹோட்டலாக திறக்கிறார்கள்.
ஹோட்டலுக்குள் தங்க வருபவர்கள் ஒவ்வொருவராக இறந்து போக.. போலீஸுக்கு போனால் சிக்கலாகும் என்று நினைத்து அனைவரையும் வரிசையாக புதைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் புதைத்தவர்களெல்லாம் காணாமல் போக.. திக்கென்றாகிறது.. இதற்கிடையில் வீட்டுக்குள் ஒரு பேய் நடமாடுவது தெரிய வர… அந்தப் பேயின் கதையையும் தேடிப் பிடிக்கிறார்கள். கடைசியில் பேய் அவர்கள் அனைவரையும் விரட்டுகிறது.. தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படமே..!
அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். முற்பாதியில் சிற்சில இடங்களில் அட.. அடடே என்றெல்லாம் போட வைத்தவர்கள் பிற்பாதியில் வெளுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியான சிரிப்பலைகள் தியேட்டர்களில்..! பேயை கொடூரமாகக் காட்டியே இதுவரைக்கும் பயமுறுத்தியிருந்தவர்கள்.. பேயின் ஆக்சன்களில் இப்போது சிரிப்பலையும் சேர்த்தே உருவாக்கியிருக்கிறார்கள்..!
கிருஷ்ணா ஓரளவுக்கு நடித்திருக்கிறார். இது போன்ற இன்னும் 2 படங்களில் நடித்தால் நடிப்பில் தேறிவிடுவார். டயலாக் டெலிவரியின் மென்மேலும் தேர்ச்சி பெற்றுள்ளார். கருணாகரனின் பன்ச் டயலாக்கிற்கு இவரது எதிர் ஆக்சனும், டயலாக்குகளும் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன..
கருணாகரன் சரியான தேர்வு. இவர் வாய் வைக்கும் ஒவ்வொருவரும் சாகின்ற காட்சியில் இவரது நடிப்பும், பேச்சும் செம.. அவ்வளவு அட்டகாசமாக ரசிக்க வைத்து சிரிக்க வைத்திருக்கிறார்கள் அந்தக் காட்சியில்.. சிம்ப்ளி சூப்பர் டைரக்சன்..! யார், யார் கொலைகளைச் செய்தது என்று கருணாகரன் அப்பாவியாய் கணக்குப் போட்டுச் சொல்லும் காட்சி ஒன்றே போதும் அவரது நடிப்புத் திறனுக்கு..!
ரூபா மஞ்சரி.. ஓவியா என்று இரண்டு ஹீரோயின்கள்.. இந்தக் கதைக்கு பொருத்தமாக இரண்டு பேரை திரைக்கதையில் திணித்திருக்கும் லாவகத்திற்கும் பாராட்டுக்கள்.. ஓவியா முன்னழகையும், பின்னழகையும் படம் முழுக்க காட்டியபடியே கவர்ச்சி மழை மொழிந்திருக்கிறார். ஆனால் கோபம்தான் வர மாட்டேங்குது. அதே சிரிப்பு.. அதே புன்னகை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு..? இருவருக்குள்ளும் இடையே நடக்கும் சின்னச் சின்ன சக்களத்தி சண்டைகளும் எல்லை மீறியிருந்தாலும் ரசிக்கத்தான் வைக்கின்றன..
அந்த பில்டிங்கின் ஓனர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொருவித்த்தில் இறந்து போயிருக்கிறார்கள் என்னும் கதையைச் சொல்லும் நளினிகாந்தின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் ஒரு நகைச்சுவை திணிப்பு. அதிலும் தூக்கக் கலக்கத்தில் நடந்து போய் அவரைத் தூக்கிக் கொண்டு வந்து பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்ளும் கருணாகரனின் சிம்பிள் நடிப்பில் தியேட்டரே அதிர்கிறது..!
ஆதவ் கண்ணதாசனை வைத்து ஒரு சிறிய காதல் கதை.. அதன் துவக்கமாக வரும் அந்த பெண் ஆவியான அனஸ்வராவுக்கு ஒரு பாடல் காட்சியையும் கொடுத்து சரிப்படுத்தப் பார்த்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இருக்கும் இரண்டு குறைகளில் ஒன்று பாடல் காட்சி. இன்னொன்று ஆபாச வசனங்கள்.. துவக்கத்தில் வரும் அந்த மாத்திரை காட்சிகள் மற்றும் இடையிடையே வரும் இரட்டை அர்த்த வசனங்களை முழுவதுமாக நீக்கியிருக்கலாம்.. படத்தினை குழந்தைகளும் வந்து பார்ப்பது போல செய்திருந்தால் படம் இன்னும் நன்றாக ஓடும் வாய்ப்புண்டு..
ஒவ்வொருவரின் மரணக் காட்சிகளும், இடைவேளைக்குப் பின்பு ஒவ்வொரு ஆளிடமும் பேய் மாறி மாறி இடம் மாறும் காட்சிகளும், அனஸ்வரா முதலில் தனது முகத்தைக் காட்சியும் காட்சியிலும் பரபரவென்ற திரைக்கதையாலும், நடிப்பாலும், திகிலான இசையாலும் நம்மை திடுக்கிட வைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளரை வெகுவாகப் பாராட்ட வேண்டும். ‘நச்’ என்று இருக்கிறது பின்னணி இசை. திகில் படங்களுக்கு இசைதான் மிக முக்கியம். அவைகள் உசுப்பிவிடுவதில் கோட்டைவிட்டால் என்னதான் ஆக்சனை காட்டியிருந்தாலும், ரசிகர்களை அது தாக்காது.. ஆனால் இது மோதித் தாக்கியிருக்கிறது.. அதகளம் செய்திருக்கிறது கிளைமாக்ஸ் பின்னணி.
மயில்சாமியின் கிளைக் கதையும் இன்னொரு காமெடி டிராக்.. அலட்சியமாக மனிதர் ஸ்கோர் செய்திருக்கிறார். அவரைக் கடத்தி வந்த பின்பு நடக்கும் கூத்துக்களில் மயில்சாமியின் பங்களிப்பும் அதிகம்.. போலி சாமியார்கள் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை இவரை வைத்தும் காமெடியாகவே சொல்லியிருக்கிறார்கள்..
கிளைமாக்ஸில் வரும் இரண்டு டிவிஸ்ட்டுகளுமே செம கலகலப்பு..! இப்படியெல்லாம் நடக்க முடியுமா..? நடந்திருக்குமா என்றெல்லாம் எந்தவித லாஜிக்கையும் பார்க்கவே கூடாது என்பதற்காகத்தான் வந்தவைகளெல்லாம் ஆவிகள் என்று சொல்லி முடித்திருக்கிறார்கள்.
‘பீட்சா’ படம்தான் கடைசியாக நம்மை மிரள வைத்திருந்தது. அடுத்ததாக இந்தப் படம் பல இடங்களில் நம்மை மிரள வைத்து அசத்தியிருக்கிறது. புதுமுக இயக்குநரான டி.கே. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் குறையே வைக்காமல் முதல் முறையாக திகில் படத்தில் அதிர்ச்சியலையுடன் சிரிப்பலையையும் சேர்த்தே வரும்படி செய்திருக்கிறார். எத்துணை பாராட்டினாலும் தகும்..
தங்கள் வரவு நல்வரவாகட்டும் டி.கே.
|
Tweet |
6 comments:
This movie previously titled illa analum irukku..but this title opt for this fun filled thriller.nice watch.
அருமையான படம் இது
Sir The Quit Family koren cinema copy
சுத்த மொக்கை படம்
தயவு செய்து பணத்தையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணாதீங்க
செம மொக்கைப் படம், உங்கள் விமர்சனத்தைப் பார்த்துப் படம் பார்க்கச் சென்று நொந்ததுதான் மிச்சம். இனிமேலாவது நல்ல முறையில் விமர்சனம் எழுதுங்கள்.
படம் நல்லாதான் இருக்கு...படத்த ரசிக்க தெரியலைனா மூடிக்கிட்டு இருக்கனும்...அத வுட்டுட்டு பெரிய புடுங்கிங்க மாதிரி பேசுவானுங்க.....இந்த படம்ன்னு இல்ல எந்த மாதிரி படம் வந்தாலும் சில மூதேவிங்க ரசிக்க தெரியாம படம் நல்லா இல்லன்னு கருத்து எழுதராங்க.....படம் நல்லா இல்லன்னு சொல்ரவனுங்க சொந்த காசு போட்டு படம் எடுத்து சக்சஸ் பண்ணி காட்டுங்க.....அடுத்தவன் படம் எடுத்தத ஓசில சிடி வாங்கி/50-100 ரூபாய்க்கு படம் பாத்துட்டு அதிமேதாவித்தனத்த காட்டாதிங்க.....
Post a Comment