அமிர்தயோகம் - சினிமா விமர்சனம்

20-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!   

இந்தப் படத்தின் இயக்குநர் மாணிக்கராஜ், இசை வெளியீட்டு விழாவில் மிக உருக்கமாகப் பேசியிருந்தார்.  மாணிக்கராஜ் ஏதோவொரு சினிமாவில் துணை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த்தபோதுதான் அவரது தாயார் இறந்துபோனாராம். அப்போது வேலைப் பளு காரணமா அம்மாவின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லையாம்.. சில ஆண்டுகள் கழித்து இவரது மனைவி இறந்தபோதும் ஏதோவொரு ஷூட்டிங்கில்தான் இருந்தாராம்..! இந்தக் கலையுலகத்திற்காக நான் சந்தித்த பெரிய இழப்புகள் இவை என்று டச்சிங்காக பேசி வந்திருந்த ஒரு சில பெண்களையும் கண்ணீர் சிந்த வைத்திருந்தார்.

3 பாடல் காட்சிகளைத் திரையிட்டுக் காட்டியபோது 1980-களின் இசை திரையில் வழிந்தோடியது. மாணிக்கராஜ் பாக்யராஜின் அஸோஸியேட் என்ற கூடுதல் தகவலும் தெரியவர அப்போதே பார்க்கப்பட வேண்டிய படங்களின் பட்டியலில் இதையும் சேர்த்தாகிவிட்டது..! அந்த நினைப்புக்குக் கிடைத்த தண்டனை கொஞ்சம் அதிகம்தான்..!

 

முதல் காட்சியில் ஹீரோயின் பேருந்தில் இருந்து இறங்கி ஊருக்குள் வருகிறார்.  ஒரு இடத்துல இருந்து “ராமு” என்று அவர் அழைக்க.. இன்னொரு பக்கம் வயலில் டிராக்டர் ஓட்டிக் கொண்டிருக்கும் அந்த ராமு, “ஜானகி” என்றழைக்க.. இருவரும் ஓடுகிறார்கள்.. ஓடுகிறார்கள்.. ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.. “டேய்.. போதும்டா.. எங்களுக்குக் கண்ணு வலிக்குது.. அதான் பக்கத்துல வந்துட்டீங்கள்ல.. கட்டிப் பிடிச்சுக்குங்கடா” என்று நாம் மனசுக்குள்ள கதறிய பின்புதான் அந்தக் காட்சியே முடிவுக்கு வந்தது..! இப்போது ராமுவுக்காக பிஸ்கெட்டெல்லாம் வாங்கி வராமல் “ஜானகி-ராமு” என்று எழுதப்பட்ட ஒரு போர்வையை பரிசாக கொடுக்கிறாள் ஜானகி. இதை மறந்திராம ஞாபகத்துல வைச்சுக்குங்க..! படத்தின் துவக்கத்திலேயே இந்தச் சித்ரவதையைக் கொடுத்துவிட்டதால் “விசாரணை” எப்படியிருக்கும் என்பதை ஓரளவுக்கு ஊகித்துவிட்ட மக்கள்ஸ்.. பல பேர் செல்போனில் மூழ்கத் துவங்க.. சிலர் கண்ணை மூடித் தூங்கவும் துவங்கினார்கள்..!

ஜானகியும், ராமுவும் ஒரே ஊர்க்கார காதலர்கள்.. ராமு பிறந்தவுடனேயே அவனுடைய அம்மா இறந்து போனதால் அப்பா அவனை பாராமுகமாக நடத்துகிறார்.. சித்தியும், ஒரு தம்பியும் வந்த பின்பும் விவசாய வேலைக்காக அவனை அடிமை போல் நடத்துவதாக ஜானகியே குத்தம் சொல்கிறார். ஜானகிக்கு ஒரேயொரு அண்ணன். ஸ்கூல் டீச்சராம்.. இவுங்க ரெண்டு பேரு லவ்வு பண்றது அந்த ஊர்ல இருக்குற ஆடு, மாடு, கோழி உட்பட அனைவருக்கும் தெரியுமாம்..!

இன்னும் 2 வருஷம் கழிச்சு படிப்பை முடிச்சவுடனேயே நம்ம கல்யாணந்தான்னு சொல்லிட்டு ஜானகி டவுனுக்கு வண்டியேற.. ராமு மீண்டும் வயக்காட்டு வேலையில் மூழ்குகிறானாம். அதே ஊரைச் சேர்ந்த சக மாணவனுக்கு, ஜானகி மீது ஒரு ஈர்ப்பு.. அவளை லவ் செய்வதாகக் கூற..  ஜானகி அதை மறுத்துவிட்டு அடுத்த நாலாவது ரீலிலேயே ஊர் திரும்புகிறாள். மீண்டும் ஒரு ஓடிப் பிடிச்சு விளையாடும் கொடுமை..!

அதே ஜானகி ராமு போர்வையை போர்த்திக் கொண்டு இங்கிட்டும், அங்கிட்டுமா 4 நிமிஷம் ஜானகியும், ராமுவும் ஓடிப் பிடிக்க.. நமக்கே களைப்பாகி நாம விட்ட மூச்சு ஸ்கிரீன்ல பட்டுச்சோ தெரியலை.. அவங்களே ஓடுறதை நிறுத்திடுறாங்க. இப்போ “என்னைய பார்க்காத.. ஓடிப் போயிரு”ன்னு கதறு, கதறுன்னு கதறுறான் ராமு.. பார்த்தே தீருவேன்னு ஜானகி நேரடியா சொன்னாலும், படம் பார்க்க வந்தவர்களுக்கு அந்தக் கொடுமையைக் காட்டியே தீரணும்னு மறைமுகமாகவும் இயக்குநர் பிளான் பண்ணியிருந்ததால ராமு தன் முகத்தைக் காட்டுகிறான்..!

தொழு நோய் வந்தது போல் முகமே தோல் உரிந்து அசிங்கமாக இருக்க.. ஏதோ பாம்பு கடிச்சிருச்சாம். அதுனால இப்படி வந்தது என்று கூசாமல் ரீல் விட்டிருக்கிறார்கள்..! இப்போ இந்த “அழகு” மூஞ்சியை ஜானகி கண்ணாலம் கட்டிக்கிட்டாளா இல்லையா என்கிறதுதான் மிச்ச சொச்சக் கதை..! 

 

இயக்குநர் மிகச் சிறந்த வசனகர்த்தா என்பதில் சந்தேகமில்லை.. மேடை நாடகங்கள் நிறைய எழுதியவர் போலும்.. பக்கம், பக்கமான டச்சிங்கான வசனங்களை பேச வைத்தே நம்மை மிரட்டியிருக்கிறார்.. தப்பித் தவறி டைரக்சன்னா என்ன்ன்னு யாரும் அவரண்டை கேட்டிரக் கூடாதுன்றதுக்காகத்தான், நடக்குறதையெல்லாம் ஓடுறதா காட்டி நம்மளை தியேட்டரைவிட்டு ஓட வைக்குறாரு..!

ஹீரோவைவிடவும், ஹீரோயினுக்குத்தான் ஸ்கோப் அதிகம்..!  ஏதோ ரெண்டு பேரும் வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம நடிச்சிருக்காங்கன்னு சொல்லிக்கலாம். அம்புட்டுத்தான்..!

படத்தோட தயாரிப்பாளர் ஜெயசேகர உடையார் பாண்டிச்சேரில பெரிய கையாம்.. சொந்த ஊருக்குள்ளாற டீமை கூட்டிட்டு போனதால இஷ்டத்துக்கு எடுத்துட்டு வந்திருக்காங்க.. தயாரிப்பாளர்தான் ராமுவோட அப்பா.. இவர் அம்மனுக்கு பால்குடம் எடுக்கிறதையெல்லாம் ஒரு காட்சியா திணிச்சு அவரோட ஆசையையும் நிறைவேத்தி வைச்சிருக்கிற இந்த மாதிரி இயக்குநர்கள் இருக்கிறவரைக்கும் தமிழ்ச் சினிமாவுக்கு அழிவே கிடையாது..!

சீரியல் டிராக் மாதிரி ஜெயசேகர உடையாரின் வீட்ல இருக்குற லூஸான பொண்ணை ஜானகியின் ஒன் சைட் லவ்வர் யூஸ் பண்ணிட்டு சொர்க்கத்துக்குக் கூட்டிட்டுப் போய் விட்டுர்றாரு.. இந்தப் பழியும் அந்த நேரத்துல வீட்டுக்கு வரும் ராமு மேல விழுக.. அவங்க அப்பனே அத்தாந்தாண்டி உடம்பை வைச்சுக்கிட்டே பையனை புரட்டி எடுத்திர்றாரு.. அப்பால 10 நிமிஷத்துல உண்மை தெரிஞ்சு மறுபடியும் அந்த உடம்போடு குடுகுடுன்னு ரோட்டு, வயக்காட்டுல, தோப்புக்குள்ள.. ஏரிக்குள்ள ஓடியும், நடந்தும் கிளைமாக்ஸை பரபரப்பாக்கியிருக்காரு.. பாவம்.. இந்தத் தயாரிப்பாளர்.. எனக்குத் தெரிஞ்சு இவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சிருக்குற முதல் படத் தயாரிப்பாளர் இவராகத்தான் இருக்கும்..!

“இளையராஜாவைத் தவிர வேற எந்த இசையமைப்பாளருக்கும் கொடுக்குற காசு வேஸ்ட்டு”ன்னும், “எதுக்காக வெளிநாட்டுக்கு போய் டியூன் போடுறதா சொல்லி தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்குறாங்க..?” என்று இப்போதைய டாப் லிஸ்ட் இசையமைப்பாளர்களை வாரு வாருன்னு வாரின, இந்தப் படத்தோட இசையமைப்பாளர் சுந்தர்.... 1980-ல வந்த இளையராஜாவின் மெட்டுக்களை அப்படியே தோசையைத் திருப்பிப் போடுற மாதிரி போட்டு டியூன் உருவாக்கியதை மட்டும் சொல்லாம விட்டுட்டாரு.. “ராமன் தேடிய சீதை” பாடல் மட்டுமே அமர்க்களம்.. ஆனா சத்தியமா அதை விஷூவலா பார்த்திராதீங்க.. டெங்கு காய்ச்சலே வந்தாலும் வந்திரும்..!

சிசர் மனோகர் அப்பப்போ வந்து சீன்களை ஜாயிண்ட் பண்ணி விடுறாரு.. மனோபாலா ஒரேயொரு காட்சில வந்து ஆட்டத்தைக் கலைச்சிட்டுப் போயிடறாரு.. எப்படியோ எல்லா தயாரிப்பாளர்களின் முதல்  படத்திலும் மனோபாலா இருக்கணும்ன்ற தமிழ்ச் சினிமாவின் விதிக்கப்படாத விதியை இந்தப் படத்துலேயும் நிறைவைத்திட்டாங்க.. வாழ்க.. வளர்க..!

கிளைமாக்ஸில் “ஒரு பொண்ணு, கணவனுக்கு மனைவியாத்தான் வாழணும்னு அவசியமில்லை.. தாயாகவும் இருக்கலாமே..?”ன்ற உலக மகா தத்துவத்தை  தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அள்ளிக் கொடுத்திருக்கும் இதன் இயக்குநர் மாணிக்கராஜின் மாணிக்கமான அந்த மனசுக்கு நாம வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவிச்சுக்குவோம்..!

ஏதோ இதன் இயக்குநருக்கு அமிர்தயோகம்ன்னு நினைக்கிறேன்.. அதான் படம் கிடைச்சிருக்கு..! அடுத்த படத்தையும் நிச்சயமா இயக்குவேன்னு தைரியமா சொல்லியிருக்காரு இயக்குநர்.. அந்தத் தயாரிப்பாளருக்கு இப்பவே நம்முடைய அனுதாபங்களை தெரிவிச்சுக்குவோம். இந்தத் தயாரிப்பாளருக்கு ஏன் சொல்லலைன்றீங்களா..? இவருக்கு படத்தின் முடிவு முன்னாடியே தெரிஞ்சுதான் படத்தை எடுத்திருக்கிறாருன்னு நல்லாவே தெரியுது..! தன் முகம் தெரியணும்.. தன் ஊர் தெரியணும்.. தான் அம்மனின் பக்தன் என்பது அம்மனுக்கே தெரியணுன்ற இவரது ஆசையின் வெளிப்பாடுதான் இந்தப் படம்..!  இதன் விளைவுகளையும் அவர்தான் அனுபவிக்க வேண்டும். நோ பீலிங்ஸ் மக்களே..!

 ஆகவே..! வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை..!

16 comments:

ராம்ஜி_யாஹூ said...

கலைமாமணி என்று இயக்குனர் பெயர் முன்னால் போட்டு இருக்கிறதே
அவர் கலைமாமணி விருது வாங்கியவரா

ராம்ஜி_யாஹூ said...

நேத்து ஒரு த்ரில்லர் படம்
இன்று ஒரு கிராமத்து காதல் படம்

உண்மையில் உங்கள் பணியும் சிரமமானதே

Philosophy Prabhakaran said...

இன்னைக்கு எங்க ஏரியாவுல 12 - 2 மின்வெட்டு... அந்த சமாச்சாரம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் 11:30 மணிக்காட்சிக்கு அமிர்த யோகம் பார்க்கும் யோகம் கிடைத்திருக்கும்... ச்சே மிஸ் பண்ணிட்டேன்...

வவ்வால் said...

அண்ணாச்சி,

ரெண்டு மூனு இங்கிலீஷ் படத்தை ஒன்றாக மிக்ஸ் செய்து எடுக்கும் பிஸ்ஸா எல்லாம் உங்களுக்கு உலக மகா படமா தெரியுதே எப்பூடி :-))

அமிர்த யோகம் படம் நன்றாக இல்லாமல் போனதற்கு தயாரிப்பாளரும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இது தான் முதல் படம் என நினைக்கிறேன் ,அப்புறம் எப்படி இயக்குனருக்கு கலைமாமா மணி பட்டம் கொடுக்கப்பட்டது(ராம்ஜியும் அதே தான் கேட்டிருக்கார்)

எல்லாருக்கும் கலைமாமாமணி பட்டம் கொடுக்கிறாங்க, உங்களுக்கு எப்போ கொடுப்பாங்க? கொடுத்தா நான் தினத்தந்தில ஒரு வரி விளம்பரம் கொடுத்து உங்களை வாழ்த்துவேன் என உறுதி அளிக்கிறேன்!

Philosophy Prabhakaran said...

வவ்வால்,

இந்த செய்திக்காக தான் காத்திருந்தோம்... அந்த ரெண்டு மூணு இங்க்லீஷ் படம் என்னான்னு சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்...

வவ்வால் said...

பிரபா,

நிறைய காட்சிகள் எங்கோ பார்த்தாப்போலவே அலையடிக்குது ஆனால் முழுசா இந்தப்படம் தான்னு சொல்ல முடியலை :-))

பெரும்பாலும் சைலன்ட் ஹவுஸ் படத்தின் காட்சிகள் ஒத்து போகுது.

கொஞ்சம் தமிழ் டிவிஸ்ட்கள் ,ஆனால் ஒரே அடியா ஒரு படத்தின் காபி என சொல்லிவிட முடியாது.

நியாபகம் வந்தாலோ ,இல்லை தேடியோ தான் முழுவிவரம் சொல்லணும்.

Rafeek said...

"நிறைய காட்சிகள் எங்கோ பார்த்தாப்போலவே அலையடிக்குது" அதானே..அப்பா டக்கர்ஸ் இன்னும் கிளம்பலயேன்னு நினைச்சேன்!!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

கலைமாமணி என்று இயக்குனர் பெயர் முன்னால் போட்டு இருக்கிறதே
அவர் கலைமாமணி விருது வாங்கியவரா?]]]

ஆமாம்ண்ணே.. வாங்காமல் போட முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

நேத்து ஒரு த்ரில்லர் படம்
இன்று ஒரு கிராமத்து காதல் படம்
உண்மையில் உங்கள் பணியும் சிரமமானதே...]]]

ரொம்ப ரொம்பச் சிரமம்ன்னே..! படம் முடிஞ்சதும் வாசலில் காத்திருக்கும் இயக்குநர், தயாரிப்பாளரிடம் பொய் சொல்லும் சங்கடத்தை நினைத்துப் பாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

இன்னைக்கு எங்க ஏரியாவுல 12 - 2 மின்வெட்டு... அந்த சமாச்சாரம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் 11:30 மணி காட்சிக்கு அமிர்த யோகம் பார்க்கும் யோகம் கிடைத்திருக்கும்... ச்சே மிஸ் பண்ணிட்டேன்...]]]

நாளைக்கு போங்க பிரதர்..! அடுத்த வியாழன்வரைக்கும் ஓடும்ல்ல..?!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, ரெண்டு மூனு இங்கிலீஷ் படத்தை ஒன்றாக மிக்ஸ் செய்து எடுக்கும் பிஸ்ஸா எல்லாம் உங்களுக்கு உலக மகா படமா தெரியுதே எப்பூடி :-))]]]

ஐயையோ.. நான் எங்கே சொன்னேன் இது உலக மகா படம்ன்னு..? அப்புறம் இது அக்மார்க் தமிழ் கிராமத்து கதை.. இதை போய் யாருண்ணே காப்பியடிச்சு இங்கிலீஷ்ல படம் எடுத்தா..?

அமிர்தயோகம் படம் நன்றாக இல்லாமல் போனதற்கு தயாரிப்பாளரும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுதான் முதல் படம் என நினைக்கிறேன். அப்புறம் எப்படி இயக்குனருக்கு கலைமாமாமணி பட்டம் கொடுக்கப்பட்டது (ராம்ஜியும் அதேதான் கேட்டிருக்கார்.]]])

இயக்குநரின் நாடக படைப்புகளுக்காக கொடுக்கப்பட்டதாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

வவ்வால், இந்த செய்திக்காக தான் காத்திருந்தோம்... அந்த ரெண்டு மூணு இங்க்லீஷ் படம் என்னான்னு சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்...]]]

ம்ஹூம்.. எனக்கும் புண்ணியமா இருக்கும்..! தெரிஞ்சு என்ன ஆவப் போவுது..?

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

பிரபா, நிறைய காட்சிகள் எங்கோ பார்த்தா போலவே அலையடிக்குது ஆனால் முழுசா இந்தப் படம்தான்னு சொல்ல முடியலை :-))

பெரும்பாலும் சைலன்ட் ஹவுஸ் படத்தின் காட்சிகள் ஒத்து போகுது.

கொஞ்சம் தமிழ் டிவிஸ்ட்கள், ஆனால் ஒரே அடியா ஒரு படத்தின் காபி என சொல்லிவிட முடியாது.

நியாபகம் வந்தாலோ, இல்லை தேடியோதான் முழு விவரம் சொல்லணும்.]]]

மொதல்ல இந்த சைலண்ட் ஹவுஸ் படத்தை பார்த்தே ஆகணும்.. அப்புறம் வந்து வைச்சுக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Rafeek said...

"நிறைய காட்சிகள் எங்கோ பார்த்தா போலவே அலையடிக்குது" அதானே. அப்பா டக்கர்ஸ் இன்னும் கிளம்பலயேன்னு நினைச்சேன்!!]]]

ஹி.. ஹி.. வவ்வாலுக்கு நிறைய நண்பர்கள் இங்க இருக்காங்க போலிருக்கே..?

வவ்வால் said...

அண்ணாச்சி,

சைலண்ட் ஹவுஸின் மேக்கிங் ,அந்த நாட் மட்டும் இருக்குன்னு சொல்லலாம்.

இருட்டுல ,தனியா ஒரு பேய் வீட்டுக்குள் மாட்டிக்கிட்டு ,பேயை கண்ணுல காட்டாமலே பேய்னு பயமுறுத்துவது போல வரும், ஆனால் அதனை இம்புருவைஸ் செய்து தான் இயக்குனர் செய்திருப்பார், ஆங்கிலப்படங்கள் அடிக்கடி பார்த்தாலே இப்படிலாம் மனசுக்குள் எங்கோ பார்த்தாப்போல அலையடிக்கும்னு தான் சொல்லி இருக்கேன்.

கொடுக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு நல்ல படம் எடுத்திருக்கார் இயக்குனர்.

---------



நமக்கு நண்பர்களுக்கா பஞ்சம் , ஹி....ஹி விமர்சனம் எழுதி படத்தை கிழிக்கிறவங்களை எல்லாம் விட்டுடு ,பின்னூட்டம் போடுறவங்களை அப்பாடக்கர்ஸ்னு சுலுவா சொல்வது தான் மக்களுக்கு வழக்கமாச்சே :-))
------------

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, சைலண்ட் ஹவுஸின் மேக்கிங், அந்த நாட் மட்டும் இருக்குன்னு சொல்லலாம்.
இருட்டுல, தனியா ஒரு பேய் வீட்டுக்குள் மாட்டிக்கிட்டு, பேயை கண்ணுல காட்டாமலே பேய்னு பயமுறுத்துவது போல வரும், ஆனால் அதனை இம்புருவைஸ் செய்துதான் இயக்குனர் செய்திருப்பார். ஆங்கிலப் படங்கள் அடிக்கடி பார்த்தாலே இப்படிலாம் மனசுக்குள் எங்கோ பார்த்தாப்போல அலையடிக்கும்னுதான் சொல்லி இருக்கேன். கொடுக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு நல்ல படம் எடுத்திருக்கார் இயக்குனர்.]]]

கொலை பண்ணப் போறேன்..

பீட்சா பதிவுல போட வேண்டிய கமெண்ட்டை அமிர்தயோகம் பதிவுல ஏன் போடுறீரு..?

இந்தக் கதையைத்தான் சுட்டக் கதைன்னு காமெடி பண்றீரோன்னு எல்லோருக்கும் சந்தேகம்..!