25-03-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பல நல்ல விஷயங்களின் துவக்கத்திற்கு பின்புலமாக சில கசப்பான உண்மைகள் நிச்சயம் இருக்கும்..! பல சாதனைகளுக்குப் பின்னால் நிச்சயமாக சில வேதனைகளும் இருக்கத்தான் செய்யும்.. சாதனைகளையும், துவக்கத்தையும் மட்டுமே நாம பேசுவோமே தவிர.. அதற்குத் தூண்டுதலாக இருந்தது எது என்பதையும், அதனை அடைய சாதனையாளர்களும், ஊக்கப்படுத்தியவர்களும் பட்ட கஷ்டத்தை நாம் அறியோம்..!
தமிழ்ச் சினிமாவில் 'வித்தக இயக்குநரான' இயக்குநர் விக்ரமன், புதிய இயக்குநர்களுக்கெல்லாம் முன்னோடி.. புதிதாக திரையுலகில் நுழையத் துடிக்கும் தற்போதைய இயக்குநர்களுக்கெல்லாம் நிச்சயமாக ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். 'புது வசந்த'த்தில் ஆரம்பித்து இன்றுவரையிலும் தனது டிரேட் மார்க்கை இம்மியும் விலகாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்..! குடும்பத்தோடு படம் பார்க்கச் செல்ல 'விக்ரமன்' என்ற பெயர் போஸ்டரில் இருந்தாலே போதும் என்னும் அளவுக்கு பெயர் பெற்றிருப்பவர்..!
திரைத்துறையில் இன்னொரு நல்ல பெயரும் அவருக்கு உண்டு. அது உதவி இயக்குநர்கள் பலரும் நன்றியுணர்வோடு நினைவு கூர்கிறார்கள் அண்ணன் விக்ரமனின் பாசத்தை.. "மாசம் பிறந்தால் துணை, உதவி இயக்குநர்களுக்கான சம்பளக் கவர் அவரது அலுவலகத்தில் தயாராக இருக்கும்.. என்றைக்கும் தாமதமாகாது..! வேலையே இல்லை என்ற காலத்தில்கூட உடன் இருப்பவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் கொடுப்பதை நிறுத்தாதவர் எங்க டைரக்டர்.." என்கிறார்கள்..!
'புது வசந்தம்' படத்தில் இவர் துவக்கி வைத்த ஒரு புதிய அலை, இன்றுவரையிலும் ஓயவில்லை..! அத்தோடு இவரும் எஸ்.ஏ.ராஜ்குமாரும் இணைந்து கொடுத்த பல மெலடிகள் இன்றைக்கும் இசையுலகில் பேசப்பட்டு வருகிறது..! இதைவிடவும், பல புதிய, புதிய கவிஞர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்வித்த விக்ரமனின் பரந்த சேவைதான் இன்றைக்கு தமிழ்ச் சினிமாவுலகத்தில் இத்தனை புதிய கவிஞர்களுக்கு வருகைக்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது..! அண்ணன் விக்ரமனின் இந்த அறிமுக வெறிக்கு, பின்புலமாக ஏதாவது காரணம் இருக்குமோ என்று யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை.. ஆனால் இருந்திருக்கிறது.
நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்ற 'அமிர்தயோகம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்தான் இதனை வெளியிட்டார் அண்ணன் விக்ரமன்..!
இவருக்கு முன்பாகவே அந்த விழாவில் பேசிய அப்படத்தின் இசையமைப்பாளர் திரு.ஆர்.கே.சுந்தர், “இப்போதைய தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள், இசைஞானி இளையராஜா வாங்கும் சம்பளத்தைவிட ஒரு பைசாகூட அதிகம் வாங்கத் தகுதியில்லாதவர்கள்..!” என்றார் ஆணித்தரமாக.. அதேபோல் பாடல் கம்போஸிற்காக வெளிநாடுகளுக்கு பறக்கும் கலாச்சாரத்தையும் கண்டித்தார்.. “தாய் நாட்டில், சொந்த ஊரில் வராத இசை அறிவு, தாய்லாந்து போனால் மட்டும் வந்துவிடுமா என்ன..? அப்படி நாடு, நாடாக சுற்றி செலவு செய்யும் காசை படத்தில் போட்டாலாவது தயாரிப்பாளருக்கு உதவுமே..?” என்றார்..
இதன் பின்பு பேச வந்த அண்ணன் விக்ரமன் “நானும் நிறைய பட விழாக்கள்ல கலந்துக்குவேன். ஆனா அடுத்த நாள் பேப்பர்ல பார்த்தா என் பேரே இருக்காது..” என்று துவக்கத்திலேயே பத்திரிகையாளர்களை வாரிவிட்டார். தொடர்ந்து இசையமைப்பாளர் ஆர்.கே.சுந்தரின் பேச்சை ஒட்டியே பேசிய விக்ரமன், தான் படமெடுத்த காலத்தில் பெரும் கவிஞர் ஒருவருக்கும், அவருக்கும் நடந்த மோதல் பற்றி சுவாரஸ்யமாகச் சொன்னார்.
“புதிய மன்னர்கள்' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைச்சார். அந்தப் படத்துக்கு பாட்டு எழுதினாரு ஒரு பெரிய கவிஞர்.. அவர் எழுதின ஒரு பாட்டுல சில இடத்துல எனக்கு திருப்தியில்லை. அதுனால இடைல இடைல நான் திருத்தம் சொல்லிக்கிட்டேயிருந்தேன். அவரும் செஞ்சாரு.. 9, 10 முறை திருத்தம் சொன்னப்புறம், “நான் பாரதிராஜா, பாலசந்தர் முதற்கொண்டு, பெரிய இயக்குநர்கள் அத்தனை பேருக்கும் பாட்டு எழுதியிருக்கேன். ஆனா யாரும் உங்களை மாதிரி இப்படி திருத்தம் சொன்னதே இல்லை. நீங்க மட்டும் ஏன் இப்படி பண்றீங்க..?”ன்னு கேட்டார். நான் எந்தப் பதிலும் சொல்லலை. அமைதியா இருந்துட்டேன்..
உடனேயே அங்கேயிருந்து நேரா ரஹ்மான்கிட்ட போனேன்.. ‘ஸார்.. இந்த செட்டப் எனக்கு ஒத்து வராதுன்னு ஃபீல் பண்றேன்.. அதுனால அவர்கூட வொர்க் பண்ண முடியாதுன்னு'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்..! அதுக்கப்புறமா அந்தப் பாட்டுக்கு பழநிபாரதியை எழுத வைச்சு அதைப் பயன்படுத்திக்கிட்டேன்..!
ஆனா அந்தச் சம்பவம் என்னை ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சுச்சு.. அந்தக் கவிஞர் அளவுக்கு நான் இலக்கியம் படிச்சவனில்லைன்னாலும், 50 சதவிகிதமாவது தமிழ் இலக்கியம் பத்தி எனக்கும் தெரியும்.. ஏன்னா நான் பிளஸ் டூலேயே சிறப்புத் தமிழ் படிச்சவன். நான் எந்த அளவுக்கு புத்தகங்களை வாசிச்சவன்.. நேசிக்கிறவன்.. படிச்சவன்றது தமிழ் இண்டஸ்ட்ரில நிறைய பேருக்கு தெரியும்..! ஆனாலும் அவர் ‘நீங்க ஏன் திருத்தம் சொல்றீங்க?’ன்னு கேட்டது என்னை புண்படுத்துச்சு.
அதுக்கப்புறமாத்தான் இனிமே எல்லா படத்துலேயும் புதிய, புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியே ஆகணும்னு எனக்கு வெறியே வந்திருச்சு. அதையும் செஞ்சேன்.. இப்போ கணக்கற்ற அளவுக்கு புதிய கவிஞர்கள் தமிழ்ச் சினிமாவுக்கு கிடைச்சிருக்காங்க.. இதுக்குப் பின்புலமா நான் இருந்திருக்கேன்னாலும், முக்கியக் காரணம், அந்தக் கவிஞர்தான்..” என்றார்.
அந்தக் கவிஞர் யார் என்பதை அண்ணன் விக்ரமன் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், இதைப் படிப்பவர்கள் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்..!
ஆக.. ஒரு கவிஞரின் கோபம்.. கோபத்தைத் தாங்க முடியாத இயக்குநரின் அறச்சீற்றம்.. இவையிரண்டும் சேர்ந்து தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு நிறைய கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் மற்றும் நல்ல இசை கிடைக்க வாய்ப்பாக இருந்திருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் சினிமா நியூஸ்..!
அண்ணன் விக்ரமனை பத்தி ரொம்ப நாளா உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைச்சுக்கிட்டேயிருந்தேன். இப்போ இட்லி-வடை பதிவுகளை நான் எழுதாததால 'படித்ததில் பிடித்தது' பகுதி இல்லாம, இதை போட முடியலை. இதுதான் சாக்குன்னு நினைச்சு இந்த இடத்துல இதையும் சேர்த்துக்குறேன்..
அண்ணன் விக்ரமன் தனது திரையுலக அனுபவங்களை “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற தலைப்புல புத்தகமா வெளியிட்டிருக்காரு. அதுல நான் படிச்சு கண்ணு கலங்குன ஒரு பகுதியை இங்கே உங்களுக்காக டைப்பி தர்றேன்.. படிச்சுப் பாருங்க..! சினிமாவுலகத்தின் உண்மையான கலைஞர்கள் எங்கேயிருந்து, எப்படி உருவாகியிருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்..!
“புது வசந்தம்’ படத்தோட புரஜக்சன் போட்டிருக்காங்க. அப்ப படம் பார்த்தவங்களும் 'படம் சூப்பர்'ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க.. அது மட்டுமில்ல.. படத்தை வாங்க யாருமே முன் வராத நிலைமை மாறி, ஏரியாவுக்கு இருபது லட்சம், முப்பது லட்சம்ன்னு விலை கேட்டிருக்காங்க.. 22 லட்சம் ரூபாய் பர்ஸ்ட் காப்பில எடுத்த, ‘புது வசந்தம்’ படத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு ஆஃபர் வந்துக்கிட்டிருக்கு..
‘புது வசந்தம்’ படம் இந்த அளவுக்குப் பரபரப்பா பேசப்பட்டிருக்கிற இதே நேரம்.. நானோ சாப்பாட்டுக்கு வழியில்லாம ரூமுல படுத்துக் கிடக்கிறேன்.. பாக்கெட்டுல பத்து காசு இல்லை. டேப் ரிக்கார்டரை வித்தாச்சு.. பழைய பேப்பரை எடைக்குப் போட்டாச்சு.. மோதிரத்தை அடகு வைச்சாச்சு.. வாட்ச்சை அடகு வைச்சாச்சு.. இனிமே விக்குறதுக்கோ, அடகு வைக்கவோ ஒண்ணுமில்லை.. இன்னும் பச்சையா சொல்லப் போனா, இரண்டு பேண்ட்டையும் வித்துட்டேன்.. அப்படியும் வறுமை தீரலை. மூணு நாளா பட்டினி கிடக்கிறேன்..
சூப்பர் குட் பிலிம்ஸ்ல டிரைவரா இருந்த விஸ்வம்பரன்ங்கிறவர் ரெண்டு, மூணு தடவை வந்து, ‘ஸார்(ஆர்.பி.செளத்ரி) கூப்பிடறார்’ன்னு கூப்பிட்டார். நான் போகலை. அப்புறம் என் அஸிஸ்டெண்ட் ஒருத்தர் புரஜக்சன் போயிருக்கார். அவர்கிட்டேயும் என்னை வரச் சொல்லி அனுப்பியிருக்கார் செளத்ரி ஸார்.
‘விக்ரமனை நான் அவசியம் பார்க்கணும். அவர் வரலைன்னா, நான் வேண்ணா அவர் ரூமுக்கு வரட்டுமா..?’ என்று கேட்டிருக்கார். இந்த விஷயத்தை என் அஸிஸ்டெண்ட் வந்து சொன்னதும், என் பிடிவாதத்தைத் தளர்த்திட்டு, மறுநாள் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆபீஸுக்கு போனேன்.
‘ஏன் வர்றதே இல்லை..?’ என்று செளத்ரி ஸார் கேட்டார்..
‘நான் வந்தப்ப நீங்க்கூட என் முகம் கொடுத்துப் பேசலை.. நான் என்னவோ தப்பான கிளைமாக்ஸை எடுத்திட்டதா மத்தவங்க சொன்னதைக் கேட்டு இப்படி நடந்துக்கிட்டீங்க.. அதனாலதான் நா வர்றதை நிப்பாட்டிட்டேன்.. இப்ப பாருங்க.. எல்லாரும் கிளைமாக்ஸை பாராட்டுறாங்க..’ என்று நான் வருத்தப்பட்டேன்..
‘நான் அப்படிச் சொல்ல்லை.. எல்லாரும் என்னை பயம் காட்டிட்டாங்க.. நானும் ஃப்ர்ஸ்ட் படம்தானே எடுக்கிறேன்.. நான் என்ன பண்றது..?’ - நடந்த சம்பவங்களுக்காக அவரும் வருத்தப்பட்டார்.
அதுக்கப்புறம் போட்ட எல்லா புரஜக்சன்லேயும் படத்துக்கு நல்ல ரிப்போர்ட். ‘ஆஸ்கார் பிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் ஸார் படத்தைப் பார்த்துட்டு ஒரு ஏரியா வாங்கினார். ஏரியா வாங்கினது மட்டுமில்லே.. இன்னொரு காரியமும் பண்ணினார் அவர்.
அந்த நாளை என்னிக்குமே என்னால மறக்க முடியாது..!
அன்னைக்கு எனக்கு பிறந்த நாள். காளிகாம்பாள் கோவிலுக்குப் போகணும்.. என்கிட்ட காசு இல்லை.. மூணு நாள் பட்டினி வேற கிடந்திருக்கேன். வேற வழி தெரியாம எடிட்டர் தணிகாசலத்தைப் பார்க்கப் போனேன்..
‘உங்ககிட்ட நூறு ரூபாய் இருக்குமா?’ என்று அவர்கிட்ட கேட்டேன்..
'எதுக்கு..?'
'காளிகாம்பாள் கோவிலுக்குப் போகணும்.. ஆட்டோல போயிட்டு வர்றதுக்கு நாப்பது ரூபாய் ஆகும். அர்ச்சனை பண்றதுக்கு இருபது ரூபாயாகும். நான் மூணு நாளா சாப்பிடலை.. அதுக்கும் காசு வேணும்.. அதான் நூறு ரூபாய் கேட்டேன்..'
- நான் இப்படிச் சொன்னதும் தணிகாசலம் அதிர்ச்சியாயிட்டார்.. ‘மூணு நாளா சாப்பிடலை’ன்னு சொன்னதை அவரால தாங்க முடியலை.. உடனே அவர் போட்டிருந்த மோதிரத்தை அடகு வைச்சு 300 ரூபாயோ, 400 ரூபாயோ கொடுத்தார். இன்னைக்கும் அதை நான் எல்லா பேட்டிகளிலும் மறக்காம சொல்லிக்கிட்டிருக்கேன்..! அதுக்கப்புறம் அவர் என்னோடு ஐந்து படங்கள் பண்ணினார். அப்புறம் பண்ணலை. ஆனாலும், அன்னைக்கு அவர் பண்ணின உதவியை என்னால எப்பவும் மறக்க முடியாது..
தணிகாசலம் பணம் கொடுத்த்தும் காலைல கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். மதியானம் அவரை பார்த்தப்ப, சவேரா ஹோட்டல்ல இருந்த பிரிவியூ தியேட்டர்ல புரஜக்சன் நடக்குதுன்னு என்னைக் கூப்பிட்டார்.
நான் அங்கே போனப்ப படம் முடிஞ்சு ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஸார், வெளியே வர்றார். என்னைப் பார்த்த்தும் நேரா கிட்ட வந்தார். படத்தைப் பத்தி பாராட்டிட்டு கைல வைச்சிருந்த சூட்கேஸைத் திறந்து காட்டினார். உள்ளே ஏகப்பட்ட பணக்கட்டுக்கள்..!
‘விக்ரமன் ஸார்.. இதிலே இவ்வளவு பணம் இருக்கு.. வாங்கிக்கங்க. அடுத்த படம் எனக்குத்தான் பண்ண்ணும்.. இது அட்வான்ஸ்தான்.. படம் ஹிட்டாகி நீங்க என்ன சம்பளம் சொன்னாலும், அதுக்கு நான் ஒத்துக்குறேன்..’ என்று சொன்னார். நான் அவ்வளவு பணத்தைப் பார்த்ததும் ஷாக்காயிட்டேன்..! ‘இல்ல ஸார்.. ரெண்டாவது படம் சூப்பர் குட்டுக்கு பண்றதா செளத்ரி ஸார்கிட்ட வாக்குக் கொடுத்திருக்கேன். அதை முடிச்சிட்டு வேண்ணா உங்களுக்கு பண்றேன்’னு சொல்லிட்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்திட்டேன்.. அதுக்கப்புறமும் படத்தைப் பார்த்த பல பேர் அட்வான்ஸ் கொடுக்க வந்தாங்க. நான் வாங்கலை..
காலைல பிச்சைக்காரன்.. சாயந்தரம் கோடீஸ்வரன்.. இதுதான் சினிமா..!”
நன்றிகள்
"நான் பேச நினைப்பதெல்லாம்"
திரையுலகில் சாதிக்கத் தூண்டும் விக்ரமனின் போராட்டம்
பக்கங்கள் 67-70
போதி பதிப்பகம்
எஸ்-2, ஜாஸ்மின் கார்டன்
5, வேதவல்லி தெரு, சாலிகிராம்ம்
சென்னை-600093.
|
Tweet |
20 comments:
விக்ரமன் ஒரு சிறந்த கலைஞன் மட்டும் அல்ல, ஒரு ஜென்டில்மன்
எ ஆர் ரஹ்மானும் பாராட்டப் பட வேண்டியவர்
அப்போதே அவர் பிரபலம் மற்றும் பிசி இசை அமைப்பாளர், இருந்தாலும் விக்ரமன் படத்திற்கு
அதும் அத்துனையும் மிகச் சிறந்த பாடல்கள்.
மிகுந்த நெகிழ்ச்சியை உண்டு பண்ணகூடியதாக உள்ளது.விளம்பர கவிகளை வெளி காட்டுவதாகவும் உள்ளது.
Thiyagarajan
[[[ராம்ஜி_யாஹூ said...
விக்ரமன் ஒரு சிறந்த கலைஞன் மட்டும் அல்ல, ஒரு ஜென்டில்மன். எ ஆர் ரஹ்மானும் பாராட்டப்பட வேண்டியவர். அப்போதே அவர் பிரபலம் மற்றும் பிசி இசை அமைப்பாளர், இருந்தாலும் விக்ரமன் படத்திற்கு அதும் அத்துனையும் மிகச் சிறந்த பாடல்கள்.]]]
அந்தப் புத்தகத்தில் ரஹ்மானைப் பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கிறார் விக்ரமன்.. ரஹ்மானின் குணாதிசயம் பாராட்டுக் கூடியதுதான்..!
[[[vasuthiags said...
மிகுந்த நெகிழ்ச்சியை உண்டு பண்ண கூடியதாக உள்ளது. விளம்பர கவிகளை வெளி காட்டுவதாகவும் உள்ளது.
Thiyagarajan]]]
எல்லாரும் எல்லாரிடமும் நல்லவனாக இருக்கவே முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்தான்..!
Muthal padathukku Chaudry panam tharalaiyaa? Why Vikraman should suffer like this after first film release? If Chaudary has not given money, why should Vikraman do 2nd film for him? The part that you give raises more questions than answers !!
Annaa, Puthiya thalaimurai TV yil 360 degree ena oru nigazhchi varuthu. Neenga thaan seyreengalaa?
உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள். மிகச் சிறப்பாக எழுதுகிறீர்கள். சரியான பாதை கிடைத்தால் நீங்கள் மிக அதிகமான புகழடைவீர்கள். சரவணன்! உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
[[[மோகன் குமார் said...
Muthal padathukku Chaudry panam tharalaiyaa? Why Vikraman should suffer like this after first film release? If Chaudary has not given money, why should Vikraman do 2nd film for him? The part that you give raises more questions than answers!!]]]
கொடுத்திருப்பாரு.. 50 ஆயிரம் இருக்கலாம்..! மனிதர்களுக்குப் பிரச்சினைகள்தான் நிறைய இருக்கே..
[[[Annaa, Puthiya thalaimurai TV yil 360 degree ena oru nigazhchi varuthu. Neenga thaan seyreengalaa?]]]
இல்லை. நான் தற்போது என்டிடிவி ஹிண்டுவில் பணியாற்றுகிறேன்..!
[[[லதானந்த் said...
உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள். மிகச் சிறப்பாக எழுதுகிறீர்கள். சரியான பாதை கிடைத்தால் நீங்கள் மிக அதிகமான புகழடைவீர்கள். சரவணன்! உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.]]]
வாழ்த்துக்கு நன்றிண்ணே..! அந்தப் பாதையைத்தான் நானும் தேடிக்கிட்டிருக்கேன்..!
படிச்ச போது மிகவும் உயர்வான இயக்குநர் விக்ரமன் சார் என்பது புரிகிறது .
நான் வாய்ப்பு கேட்டு சந்தித்த பல இயக்குனர்களில் விக்ரமன் சார் மிகவும் உயர்வானவர் என்பதை நானும் அனுபவித்திருக்கிறேன்
.என்னை சந்தித்து என் பாடல்களை கேட்டு ,என்னை பாராட்டி என் விலாசத்தையும் வாங்கிக்கொண்டு அனுப்பினர் அவர் .நீண்ட இடைவெளிக்குப்பிறகு போராட்டத்தின் பின்பு இப்போது மன்னாரு என்றொரு படம் இசை அமைக்கிறேன் ...அந்த ஆடியோ வெளிவந்தபிறகு நான் பார்க்க ஆசைப்படும் முதல் இயக்குநர் விக்ரமன் சார் தான்
விக்ரமனை பற்றி எனக்கு தெரியாத விஷயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி அண்ணே.
Vikram movies were decent & he had given different dimension for Vijay & Vijaykanth
[[[udayan music director said...
படிச்ச போது மிகவும் உயர்வான இயக்குநர் விக்ரமன் சார் என்பது புரிகிறது. நான் வாய்ப்பு கேட்டு சந்தித்த பல இயக்குனர்களில் விக்ரமன் சார் மிகவும் உயர்வானவர் என்பதை நானும் அனுபவித்திருக்கிறேன். என்னை சந்தித்து என் பாடல்களை கேட்டு, என்னை பாராட்டி என் விலாசத்தையும் வாங்கிக் கொண்டு அனுப்பினர் அவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு போராட்டத்தின் பின்பு இப்போது மன்னாரு என்றொரு படம் இசை அமைக்கிறேன். அந்த ஆடியோ வெளிவந்த பிறகு நான் பார்க்க ஆசைப்படும் முதல் இயக்குநர் விக்ரமன் சார்தான்]]]
வாழ்த்துகள் உதயன் ஸார்..! நிச்சயம் நீங்கள் சாதிப்பீர்கள்..! வெல்வீர்கள்..!
[[[N.H.பிரசாத் said...
விக்ரமனை பற்றி எனக்கு தெரியாத விஷயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி அண்ணே.]]]
பின்னூட்டத்திற்கு நன்றிகள் பிரசாத்..!
[[[ravikumar said...
Vikram movies were decent & he had given different dimension for Vijay & Vijaykanth.]]]
ஆமாம்.. விஜய்க்கு பூவே உனக்காகவும், விஜயகாந்திற்கு மரியாதையும் இன்றைக்கும் மரியாதை அளிக்கும் திரைப்படங்கள்..!
விகரமன் இந்த விழாவில் இளையராஜா பற்றி பேசியதையும் கூறவும். தாழ்மையான வேண்டுகோள்..
[[[அரவிந்த் said...
விகரமன் இந்த விழாவில் இளையராஜா பற்றி பேசியதையும் கூறவும். தாழ்மையான வேண்டுகோள்.]]]
"அப்போ சினிமா மார்க்கெட் வேல்யூவிற்கு சில விஷயங்கள் இருந்தது. இளையராஜா இசையமைச்சிருந்தா ஏரியாவுக்கு 10 லட்சம் கன்பார்ம்.. ஏரியாக்கள்லாம் சீக்கிரமா வித்திரும்.. அப்படியொரு காலம் இருந்தது.."
இதுதானே அரவிந்த்.. சொல்லிட்டேன்..
ஆனா 10 கவிஞர்களை பாட்டு எழுத சொல்லி அதில் ஒரு வரி எடுத்து புது பாடலாக மாற்றிவிடுவாரமே?
சங்கர் நெல்லை
[[[SANKAR said...
ஆனா 10 கவிஞர்களை பாட்டு எழுத சொல்லி அதில் ஒரு வரி எடுத்து புது பாடலாக மாற்றிவிடுவாரமே?
சங்கர் நெல்லை..]]]
புரூடா..!
really a heart touching ....!
[[[வித்யாஷங்கர் said...
really a heart touching ....!]]]
இயக்கம் தெரிந்தவர் மட்டுமல்ல.. விக்ரமன் அண்ணன் ஒரு நல்ல எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும்கூட..!
Post a Comment