இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் - அஞ்சலி

10-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கடந்த 7-ம் தேதி காலை திரையுலக பி.ஆர்.ஓ. நண்பர் விஜயமுரளி அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி தமிழ்த் திரையுலகத்தில் அரை நூற்றாண்டு காலமாக பணியாற்றிய ஒரு இயக்குநரின் மரணத்தை தெரிவித்தது..! ஆனால் அந்த இயக்குநரின் 50 வருட கால சினிமா வாழ்க்கையைப் பற்றி கோடம்பாக்கம் அதிகம் அறிந்திருக்கவில்லை. அந்த மனிதரும் அதைப் பற்றி இறுதிவரையிலும் கவலைப்பட்டவரில்லை..!

நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனின் கை காட்டலில் நான் அறிந்து கொண்ட ICAF என்னும் அமைப்பில் சேர்ந்து உலகப் படங்களை ஆர்வத்துடன் கண்டு கொண்டிருந்த நேரம்..! ஒரு வெளிநாட்டு பட விழாவைத் துவக்கி வைக்க மேடையேறி முதன்முதலாக எனக்கு அறிமுகமாகியிருந்தார் இயக்குநர் ஏ.ஜெகந்நாதன். 

அந்த நிகழ்ச்சியில் அவருடைய பேச்சுதான் கலகலப்பு.. அவ்வளவு சுவாரஸ்யமாகவும், நகைச்சுவை பொங்கவும் பேசி கூட்டத்தைக் கவர்ந்திருந்தார். “இவர்தான் மூன்று முகம் இயக்குநர்” என்று இயக்குநர் வேதம் கே.கண்ணனால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட அந்த நாளில் இருந்து, சென்ற மாதம் நான் கடைசியாகப் பேசியவரையிலும் என் மீது அன்பு காட்டி, நட்பு வைத்திருந்து ஒரு நல்ல நண்பனாகவே இருந்து வந்திருக்கிறார் இந்தப் பெரியவர்.

என்னுடைய ஜாதகத்தைக் கேட்டறிந்ததில் இருந்து இவர் என்னை அழைத்தது “லூட்டி சரவணன்” என்றுதான்..! “வீட்டுக்கு வீடு லூட்டி' சீரியலை நானும் பார்த்திருக்கேன்.. நீங்கதான் எழுதினதா..? நல்லாயிருந்துச்சே.. அப்புறம் ஏன் நிறுத்துனீங்க..?” என்றவர் என் முன்பாகவே தனது செல்போனில் “சரவணன் லூட்டி” என்று என் பெயரை பதிவு செய்த தினத்தையும் நான் மறக்க முடியாததுதான்..!

கோடம்பாக்கம் இயக்குநர்கள் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் பிலிம் சேம்பர் வரும் இவருடன்தான் பெரும்பாலான நேரங்களில் நான் அருகே அமர்ந்து உலகப் படங்களை ரசித்திருக்கிறேன். நான் முதலில் சென்றால் இவருக்கும், இவர் முதலில் சென்றால் எனக்குமாக சீட் போட்டு வைக்கும் அளவுக்கான நட்பு கடைசிவரையிலும் இருந்தது..!

படம் முடிந்தவுடன் என்னுடைய TVS XL Super-ல் நானே அவரது வீட்டில் அவரை டிராப் செய்வேன்.. “உன் வண்டி என்னைத் தாங்குமா..?” என்று முதல் முறை மட்டுமே கேட்டார். அடுத்த முறைகளெல்லாம் “நீ எங்க உக்காந்தாலும், படம் முடிஞ்சவுடனே வாசல்ல வந்து நில்லு.. உன் வண்டிலதான் நானும் வருவேன்..” என்று உரிமையுடன் கேட்டு பல நாட்கள் என்னுடன் பயணம் செய்திருக்கிறார்..

எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவக்குமார், ஜெய்சங்கர், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று முன்னணி ஹீரோக்கள் அனைவரையும் வைத்து படம் இயக்கியவருக்கு, சில காலம் நான் சாரதியாக இருந்த அந்த நேரத்தை இப்போது நினைத்தாலும் பெருமையாகத்தான் இருக்கிறது..! 

என்னுடைய நிலையில் இருந்து பார்த்தால்தான் இது புரியும். அன்றைய நாளில் ஒரேயொரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த ஒரு புதிய இயக்குநரிடம் இதே உலகப் பட விழாக்களில் நட்பு பாராட்டச் சென்று நான் அருகில் சென்றவுடனேயே “கொஞ்சம் திங்க் பண்ணிக்கிட்டிருக்கனே..!” என்று முகத்தில் அடித்தாற்போல்  ஜாதி வெறியையும் தோற்கடிக்கும் திமிர்ப் பேச்சைக் கேட்டு நொந்து போயிருக்கிறேன்.. இன்னொரு புதிய இயக்குநர். எனக்கு நல்ல அறிமுகம். அவரது படத்தின் ஸ்கிரிப்ட்டைகூட நான் டைப் செய்து கொடுத்திருக்கிறேன். அரங்கத்தில் அவர் அருகே சீட் உள்ளது என்று எதேச்சையாக அறிந்து அருகில் அமர்ந்து “ஹலோ ஸார்..” என்று சொன்னவுடனேயே லேசாக புன்சிரிப்பை மட்டுமே உதிர்த்துவிட்டு, விருட்டென எழுந்து 2 சீட்டுக்கள் பின்னால் போய் அமர்ந்து என்னை அவமானப்படுத்தியதையும் மறக்க முடியாது..!

யாரோ, ஊர் பேர் தெரியாத அனாதைகள் கூட்டத்தில் ஒருவனாக, சினிமா ரசிகனாக மட்டுமே பிலிம் சேம்பரில் முகத்தைக் காட்டியிருக்கும் எனக்கு இப்படியொரு பெரிய இயக்குநர் நண்பராக இருந்தது அந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த ஒரு டானிக்கும்கூட..!

“சாயந்தரமா வீட்டுக்கு வாங்க.. நிறைய பேசலாம்..” என்பார்.  அவருடைய மனைவி வந்து “டைம் ஆச்சு..” என்று சொல்லும்வரையிலும் பேசிக் கொண்டேயிருப்பார். கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல.. பொதுவாகவே வயதானவர்கள் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிலும் உழைப்பாளிகளாக தங்களை இந்தச் சமூகத்தில் நிலை நிறுத்திக் கொண்டவர்கள் தங்களுடைய அனுபவங்களை யாரிடமாவது பகிர வேண்டும் என்று நினைக்கிறார்கள். துரதிருஷ்டம் வேகமாக வர.. அதிர்ஷ்டம் ஓடத்தில் வரும் என்பதை போல இந்தப் பாக்கியம் பலருக்கும் கிடைப்பதில்லை..!

“என்னோட திரையுலக வாழ்க்கை அனுபவங்களை எழுதறதுக்கு ஒரு பத்திரிகை கிடைக்கலை.. ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா..?” என்றார்..! அப்போது விகடனில் இது பற்றி கேட்டுப் பார்த்தேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக 'தினகரனி'லும், 'கல்கி'யிலும் கொஞ்சம், கொஞ்சமாக எழுதினார்.  மிச்சம், மீதியாக பல விஷயங்களை அவரது இல்லத்திலும், பிலிம் சேம்பரிலும், உலக திரைப்பட விழாக்கள் நடைபெற்ற ஆனந்த், உட்லண்ட்ஸ், பைலட் தியேட்டர்களிலும் அவருடன் பேசியதும், பழகியதும், தெரிந்து கொண்டதும் இன்றைக்கும் மனதில் பசுமையாகவே இருக்கிறது..!

ஏ.ஜெகந்நாதன் தனது சினிமா வாழ்க்கையை 1958-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸில் இருந்துதான் துவக்கியிருக்கிறார். இயக்குநர்  டி.பிரகாஷ்ராவ் அந்தச் சமயத்தில் ஜூபிடரில் “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். ஏ.ஜெகந்நாதன் முதலில் துணை இயக்குநராகப் பணியாற்றியதும் இந்தப் படத்தில்தான்.! இந்தப் படம் முடியும்போது அப்படத்தின் கதாசிரியர் வித்வான் மா.லட்சுமணன், இவரின் சுறுசுறுப்பான வேலைகளினால் கவரப்பட்டு, இயக்குநர் ப.நீலகண்டனிடம் இவரை உதவியாளராகச் சேர்த்துவிட்டார். அப்போதிலிருந்துதான் தனக்கு சுக்ரதிசை திரும்பியதாகச் சொன்னார் ஜெகந்நாதன் ஸார்.

“வரிசையா எம்.ஜி.ஆர். படம்.. 'காவல்காரன்', 'கண்ணன் என் காதலன்', 'மாட்டுக்கார வேலன்', 'ராமன் தேடிய சீதை', 'என் அண்ணன்', 'சங்கே முழங்கு', 'கணவன்', 'நீரும் நெருப்பும்', 'நல்லவன் வாழ்வான்', 'ஒரு தாய் மக்கள்'ன்னு ப.நீலகண்டன் இயக்கிய அத்தனை படங்களிலும் நான் வேலை செஞ்சேன். அப்போ எம்.ஜி.ஆர். படத்துல கரெக்ட்டா பேமெண்ட் வந்திரும்.. அதுனால எனக்கு அடுத்தடுத்த பல வருடங்கள் சோத்துக்குப் பஞ்சமில்லாம போச்சு.. நான் இந்த கோடம்பாக்கத்துல ஸ்டெடியா நின்னதுக்கு ரொம்ப பெரிய காரணம் இது ஒண்ணுதான்.. இடைல இடைல டி.பிரகாஷ்ராவ் ஸாரும் வெளிப்படங்கள் செய்யும்போது என்னைக் கூப்பிட்டுக்குவாரு.. நான் நீலகண்டன்கிட்ட சொல்லிட்டுப் போயிட்டு வருவேன்.. ‘படகோட்டி’ படத்துல என்னை இணை இயக்குநரா பிரமோஷன் கொடுத்து பெருமைப்படுத்தினாரு பிரகாஷ்ராவ்..” என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

“தொட்டால் பூ மலரும்” பாடல் ஷூட்டிங் எடுக்கப் போகும்போது அதை எப்படி எடுக்கலாம்ன்னு பிரகாஷ்ராவ் ஒரு ஐடியா பண்ணிட்டு வந்திருந்தாரு..! ஆனா இயக்குநர் வரும்போது எம்.ஜி.ஆர். ரொம்ப யதார்த்தமா தென்னை மரத்துல கையை வைச்சு அந்தப் பாட்டை பாடி ஹம்மிங் பண்ணிக்கிட்டிருக்கிறதை தூரத்துல இருந்து பார்த்தாரு.. என்ன நினைச்சாரோ தெரியலை.. என்னைக் கூப்பிட்டு “ஏன் அதையே ஸாங் லீடிங்கா நாம வைச்சுக்கக் கூடாது?”ன்னாரு..! அப்படி திடீர்ன்னு உருவானதுதான் அந்தப் பாடலின் துவக்க வரிகளின் காட்சிகள்.. இப்போதும் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி ரொமான்ஸ்களில் இந்தப் பாடலும் தனியிடத்தைப் பிடிச்சிருக்கு...” என்றார்.

1958-ம் ஆண்டில் இருந்து இயக்குநர் பணியைக் கற்றுக் கொண்ட இவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது எம்.ஜி.ஆரின் முதலாளி ஆர்.எம்.வீரப்பன்தான்.. சின்ன பட்ஜெட்டில் தனது மகள் செல்வி பெயரில் துவங்கிய புது கம்பெனிக்காக ஒரு படத்தைத் தயாரிக்க முன் வந்த ஆர்.எம்.வீ., “ஜெகந்நாதனை இந்தப் படத்தை இயக்கச் சொல்ல்லாமா?” என்று எம்.ஜி.ஆரிடமே கேட்டுவிட்டுத்தான் இந்தப் பணியினை இவருக்கு வழங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். ஜெகந்நாதனை பெரிதும் பாராட்டிவிட்டு, “இவருடைய பணியினை நான் நன்கு அறிவேன்.. மிகச் சிறந்த உழைப்பாளி. என்னோட ஸ்டூடண்ட் மாதிரி.. ப.நீலகண்டனிடம் பணியாற்றிய போது இவரது திறமையைப் பார்த்து நான் பெரிதும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்..” என்றெல்லாம் சொல்லி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இதுவே மிகச் சிறந்த விஸிட்டிங் கார்டாகிவிட்டது இவருக்கு..!
இந்த ‘மணிப்பயல்’ படம்தான் திராவிட இயக்கத்தினருக்கும் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ஜெகந்நாதன் ஸார் செய்த புண்ணியம் என்றே சொல்ல வேண்டும். மாஸ்டர் சேகரின் நடிப்பில் பேரறிஞர் அண்ணாவின் புகழ் பாடும் புலமைப்பித்தன் எழுதிய அந்த புகழ் பெற்ற வாழ்க்கை வரலாற்றுப் பாடல் காட்சி இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருந்தது..! 'வங்கக் கடல் அலையே வாய் மூடித் தூங்குமெங்கள் தங்கத் தமிழ் மகனைத் தாலாட்டிப் பாடினையோ..” என்ற இந்த வரிகளைக் கேட்டு கண் கலங்காத ரசிகர்கள் இருந்திருக்க முடியாது..!  “அண்ணா.. அண்ணா.. எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா…” என்ற இந்தப் பாடல் இன்றுவரையிலும் அண்ணாவின் தம்பிகளுக்குப் பிடித்தமானதே..!

இதற்குப் பின் “உனக்கு ஒரு படம் பண்ண வாய்ப்பு தரேன்..” என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்த இடைவேளையில்தான், ஜெய்சங்கரின் ‘இதயம் பார்க்கிறது’ என்ற சின்ன பட்ஜெட் படத்தையும் இயக்கியிருக்கிறார். இதற்குப் பின் எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி..!’ சஸ்பென்ஸ் காட்சிகளோடு, எம்.ஜி.ஆரின் அதே அம்மா சென்டிமெண்ட்.. காதல் களியாட்டங்கள்.. அவரது புகழ் பாடும் காட்சிகள் என்று ‘ஏ கிளாஸ் எம்.ஜி.ஆர் படம்’ என்ற பெயரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்குப் பிறகு இந்தப் படம்தான் பெற்றது..!

படத்தின் துவக்கக் காட்சியில் வரும் “நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற..” பாடல் எம்.ஜி.ஆருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது..!  இந்தப் படத்தை சிறப்பான முறையில் இயக்கியதற்காக எம்.ஜி.ஆரிடமிருந்து பரிசாக வாங்கி ஜெகந்நாதன் ஸார் அணிந்திருந்த, அந்த கைக்கடிகாரத்தை அடிக்கடி தொட்டுப் பார்ப்பேன்.. சிரிப்பார்.. அதைப் பற்றிப் பேசினாலும், எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினாலும் பேசிக் கொண்டேயிருப்பார். அதற்குள் வீடு வந்துவிட்டால், “நாளைக்கு மிச்சத்தைச் சொல்றேன்..” என்று பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்..!

அப்படி அவர் பாதியிலேயே சொல்லாமலேயே விட்டுவிட்டது “இன்பமே..” பாடல் காட்சியை ஷூட் செய்த தினங்களில் வி.என்.ஜானகி அம்மாளை ஸ்பாட்டுக்கு தன்னுடன் வர விடாமல் செய்ய எம்.ஜி.ஆர். செய்த சதி வேலைகள்..! பாதிதான் சொன்னார் இயக்குநர்.. மீதி, இனியும் கேட்க முடியாது..!

அந்தப் பாடல் காட்சி என்றில்லை.. “அந்தப் படம் முழுவதுமே ராதாசலூஜா காட்டிய கவர்ச்சி மிகவும் அதீதமாக இருந்ததே..?” என்றேன்.. “அப்போ எம்.ஜி.ஆரை.. எல்லா லேடீஸும் தன்னோட ஹஸ்பெண்ட்டாவே நினைச்சு ரசிச்சுக்கிட்டிருந்தாங்க. அதுனாலதான் எம்.ஜி.ஆரை வைச்சு படம் பண்ற அத்தனை இயக்குநர்களும் கதாநாயகிகளை கவர்ச்சியாவே காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. விநியோகஸ்தர்களும் இதைத்தான் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் விரும்புறதாவே சொன்னதால எங்களுக்கும் வேற வழியில்லாம போச்சு..” என்றார்..!

இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட்டுக்கு பின்பும் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம்.. “அடுத்த 2 வருடங்கள் மட்டுமே எம்.ஜி.ஆர். நடித்தார்.  அதிலும் என்னுடைய குருநாதர் நீலகண்டனே எம்.ஜி.ஆரின் 2 படங்களை இயக்குவதற்காக காத்திருந்தார். கே.சங்கர், ஸ்ரீதர் தலா ஒரு படம் பண்ணினாங்க.. அதுக்குள்ள எம்.ஜி.ஆரும் தேர்தல்ல ஜெயித்து முதலமைச்சராகிவிட்டதால் ஒரு படம் செஞ்சாலும், மறக்க முடியாத படமா செஞ்சுட்டதா இப்போவரைக்கும் எனக்கு பெருமைதான்..” என்றார்..

“இப்படியே டைப் அடிச்சுக் கொடுத்திட்டு காலத்தை வீணாக்காத.. ஏதாவது சினிமா கதை இருந்தா சொல்லு.. நான் யார்கிட்டயாச்சும் சொல்றேன்.. அப்படியாச்சும் உள்ள நுழைஞ்சு பொழைச்சுக்கோ..” என்றார் ஜெகந்நாதன் ஸார். அப்போதும், இப்போதும் என்னிடம் ஒரு கதை இருந்தது. இருக்கிறது.. “அது மலையாளத்துல பண்ணா நல்லாயிருக்கும்.. நீங்க வேண்ணா படிச்சுப் பாருங்க ஸார்.. புடிச்சிருந்தா யார்கிட்ட வேண்ணாலும் சொல்லுங்க..” என்று சொல்லி அந்தக் கதையைக் குடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு மறுநாள் போன் செய்து என்னை வீட்டுக்கு கூப்பிட்டார்.

போனவனை காபியோடு வரவேற்று உட்கார வைத்து, “படிச்சேன்.. நீ சொன்ன மாதிரி இது தமிழுக்கு சூட்டாகாது. மலையாளத்துக்குத்தான் ஆகும்.. வேண்ணா பாலாஜிகிட்ட சொல்லலாமா..?” என்று கேட்டுவிட்டு என்னை கேட்காமலேயே போனை எடுத்து டயல் செய்தார்.. ரிங் போய்க் கொண்டேயிருந்தது.. எடுக்க ஆளில்லை போலும்.. போனை வைத்துவிட்டு, “ரொம்ப வருஷமாச்சு பாலாஜிகிட்ட பேசி.. அவரோட தயாரிப்புல ஒரு படம் செஞ்சேன். பாதி படம் செஞ்சுக்கிட்டிருக்கும்போதே அதே கதையை எனக்குத் தெரியாமலேயே தெலுங்குல செய்ய ரைட்ஸ் கொடுத்திட்டாரு பாலாஜி.. இது எனக்கு ரொம்பக் கோவமாகி காச் மூச்சுன்னு கத்திட்டேன்.. அன்னிக்கு பேசினதுதான்.. இப்போதான் உனக்காக பேசப் போறேன்..” என்று சொல்லிவிட்டு மீண்டும், மீண்டும் டயல் செய்தார். ஆளில்லை போல தெரிய.. “சரி விடு.. நாளைக்கு நான் பேசிட்டு சொல்றேன்..” என்றார்.. எனக்காக இத்தனை வருட பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வந்து தனது ஈகோவை கைவிட எத்தனித்த அவருடைய அந்த நிமிடத்தை இப்போது நினைத்தால் பெருமையாக உள்ளது.. கடைசியில் அவர் திரு.பாலாஜியிடம் பேசிவிட்டு பின்பு என்னிடமும் சொன்னார். “நீ அவரை போய்ப் பாரு..” என்றார். நான் திரு.பாலாஜிக்கு  போன் செய்த நேரம் அவருக்கு மிகவும் துரதிருஷ்டமான நேரம்.. அத்தோடு நான் அதை விட்டுவிட்டேன்..!

‘இதயக்கனி’க்கு பின்பு பிலிம் நியூஸ் ஆனந்தன் தொகுத்தளித்திருக்கும் லிஸ்ட்படி பார்த்தால் பல படங்களை ஜெகந்நாதன் இயக்கியிருந்தாலும் முழு தகவல்களைத் திரட்ட முடியவில்லை. நான் நேரிலும் கேட்டபோது “அதையெல்லாம் நோட் போட்டு எழுதி வைச்சிருந்தேன். வெள்ளையடிக்கும்போது எங்கோ மிஸ்ஸாயிருச்சு.. இப்போ எனக்கே மறந்து போச்சு” என்றார்.. ‘ஆயிரம் வாசல் இதயம்’, ‘குமார விஜயம்’, ‘நந்தா என் நிலா’, ‘குரோதம்’, ‘முதல் இரவு’, ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ போன்ற படங்களை இயக்கியிருப்பது தெரிகிறது.. இதில் ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ‘சின்னச்சாமி’ என்ற பாரதிராஜாவின் ஒரிஜினல் பெயர்தான் டைட்டிலில் வருமாம்..!

'குரோதம்' படத்தில் இவர் அறிமுகப்படுத்திய மலேசிய நடிகர் பிரேமை நீங்கள் மறந்திருக்க முடியாது..! இந்தப் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்கிறது.  “முதல் இரவு” படத்தில் சிவக்குமார், சுமித்ரா நடித்திருந்தார்கள். “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்” என்ற பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருந்தது.. இந்தப் பாடல் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னேன்..  “ஊட்டியில் மாலை மயங்கிய நேரங்களிலேயே இந்தப் பாடல் காட்சியை படமாக்கியதாகவும், இளையராஜாவின் அற்புதமான இசைதான் பாடலை ஹிட்டாக்கிவிட்டது..” என்றார்..! “சிவக்குமாருக்கு அப்போதைய காலக்கட்டத்தில் பொருத்தமான ஜோடி சுமித்ராதான்.. படம் சரியாப் போகலைன்னாலும் எனக்கும், சிவக்குமாருக்கும் இந்தப் படத்துல ஆத்ம திருப்தி..” என்றார்..!

8 ஆண்டுகளுக்கு முன்பாக உலக திரைப்பட விழா சென்னையில் துவங்கியபோது மிக ஆர்வமாக கலந்து கொண்டவர், கடைசியாக சென்ற ஆண்டு வரையிலும் தினம் தவறாமல் வந்திருந்து படங்களை பார்த்துச் சென்றார். சென்ற ஆண்டுதான் கடைசி ஆண்டோ தெரியவில்லை.. இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமனும், ஜெகந்நாதன் ஸாரும்தான் போன வருஷம் முழுக்க ஜோடி போட்டு உட்லண்ட்ஸ் தியேட்டர்ல சுத்தினாங்க..! நான் தியேட்டருக்குள் வேக வேகமா படியேறும்போதே அவரிடமிருந்து போன் வரும். “மிஸ்டர் லூட்டி சரவணன்.. உட்லண்ட்ஸ்ல படம் போர்.. சிம்பொனிக்கு வாங்க.. அங்கதான் உக்காந்திருக்கேன்..” என்பார். சமயங்களில் பல முக்கியத் திரைப்படங்களை முன்பே பார்த்திருப்பதால் “அந்தப் படத்துக்கு போங்க.. இந்தப் படத்துக்கு போங்க..” என்று அவரே திசை திருப்பிவிடுவார்..!

முதல் 2 உலகப் பட விழாக்கள் ஆனந்த் தியேட்டரில் நடந்தபோது நான் வெட்டி ஆபீஸராக இருந்தேன். அப்போதெல்லாம் தினம்தோறும் எனக்கு மதியச் சாப்பாடும், மாலை சிற்றுண்டியும் ஜெகந்நாதன் ஐயா வழங்கியதுதான்..! இப்போதும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்..! ஆனந்த் தியேட்டரில் அன்றொரு நாள் பார்த்த ஒரு படம் மிக மிக வித்தியாசமாக படத்தின் கிளைமாக்ஸே 4 விதமாக இருந்தது.. கடைசி 5 நிமிடங்கள் ரசிகர்கள் அனைவரும் நின்று கொண்டுதான் இருந்தோம். அப்படியொரு சுவாரஸ்யம்..!

வண்டியில் வீட்டிற்கு போகும்வழியில் பாம்குரோம் பக்கத்தில் இருக்கும் செட்டி நாடு ஹோட்டலுக்கு விடச் சொன்னவர்.. அங்கேயே எனக்கு இரவு டிபன் வாங்கிக் கொடுத்து அந்தப் படத்தைப் பற்றி ரீல் பை ரீல் பாராட்டிப் பேசினார்..! “இப்படியெல்லாம் எடுக்கணும்யா.. எங்க நம்ம ஆளுக ரசிச்சானுங்கன்னா எடுக்கலாம்.. யாருய்யா நஷ்டப்பட்டு கை தட்டலுக்காக படம் எடுக்க முன் வரப் போறாங்க..?” என்று பெரிதும் வருத்தப்பட்டார்..!

உதவி செய்வதும், கை காட்டுவதும்.. கனிவாகப் பேசுவதும்.. ஒரு புறத்தில் இருந்தாலும் சுயமரியாதையில் மிக உறுதியாகவே இருந்தார் ஐயா.. நான் எப்போதும் எனது குருநாதர் கே.பி.யை பெயர் குறிப்பிடாமல், “டைரக்டர்” என்றே சொல்வது வழக்கம்.  ‘மின்பிம்பங்கள்’ காலம் தொட்டே இப்படித்தான்..! இவரிடமும் பேசும்போது “இன்னிக்கு டைரக்டரை பார்த்தேன் ஸார்.. டைரக்டர்கிட்ட பேசுனேன் ஸார்..” என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் திடீரென்று கோபப்பட்டு, “ஏம்ப்பா இங்க பாலசந்தர் மட்டும்தான் டைரக்டரா..? மத்தவன்லாம் அஸிஸ்டெண்ட்டா..? என்ன.. எப்போ பார்த்தாலும் ‘டைரக்டர்’.. ‘டைரக்டர்’ன்னுட்டு..!” என்று சிடுசிடுத்தார்..

அவரது கோபத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும், பதில் சொல்ல முடியாமல் நிற்க.. இன்னும் கோபமானார்.. “என்னய்யா டைரக்டர் அவரு(கே.பாலசந்தர்)..? ஒரு ஷாட்கூட ஒழுங்கா வைக்கத் தெரியாது..! நாங்க எடுத்ததெல்லாம் சினிமாய்யா.. அவர் எடுத்தது சினிமாவா..? இங்கேயும் வந்து நாடகம் மாதிரியே டைம் லேப்ஸ் கொடுத்து கிடைச்ச கேப்புல காலண்டரை காட்டுறது.. காலை காட்டுறது.. பொம்மைய காட்டுறதுன்னு  டயலாக் டெலிவரிக்கு டைம் கொடுத்தே, தமிழ்ச் சினிமாவையும் நாடமாக்கிட்டாரு.. இதுல என்னய்யா சினிமாத்தனம் இருக்கு..?” என்று பொங்கித் தீர்த்துவிட்டார்..!

மெளனமாக அவர் சொன்னது முழுவதையும் தாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவனை இரவு 11 மணிக்கு கைப்பேசியில் மீண்டும் அழைத்தார் ஜெகந்நாதன் ஸார். “அது வந்து.. ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்.. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க.. அவர்கிட்ட சொன்னாலும் எனக்கொண்ணும் ஆட்சேபணையில்லை.. சொல்லலைன்னாலும் வருத்தப்பட மாட்டேன்.. அவரோட மேக்கிங் ஸ்டைல் பத்தி என்னோட கருத்து இதுதான்.. கொஞ்சம் ஸ்பீடா சொல்லும்போது வேற மாதிரி வந்திருச்சு. உங்களுக்கு ஒண்ணும் கோபமில்லையே..?” என்றார் 75 வயது நிரம்பிய அந்த முதியவர்..! இப்போது நினைத்து பார்த்தாலும் இதில் கோபிக்க ஏதுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது..!

1982-ம் வருடம் ஜெகந்நாதன் ஸாரின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பு முனை.  சத்யா மூவிஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த 'மூன்று முகம்' படத்தை ஜகந்நாதன் டைரக்ட் செய்தார்.  ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்ற இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த ரஜினியின் கேரக்டர் ஸ்கெட்ச்தான் படமே..! இந்தப் படத்தின் கதையை ரஜினியிடம் சொன்னபோது, “பிறந்த நாள் கேக்கை வெட்டும்போது அந்தத் தீச்சுவாலையில்  பிளாஷ்பேக் கதை விரியும்..” என்று ஜெகந்நாதன் ஸார் சொன்னபோது, ரஜினி கை தட்டி ரசித்தாராம்.. “இது நல்லாயிருக்கு ஸார்.. கண்டிப்பா நல்லா வரும் ஸார்..” என்று முதலிலேயே ரெடியாகிவிட்டாராம்..!

முதலில் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டருக்கு ரவிச்சந்திரன்தான் நடிப்பதாக இருந்ததாம்.. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட அதையும் ரஜினியே செய்யட்டுமே என்று ஆர்.எம்.வீ.யும் கதை இலாகாவினரும் சொல்லிவிட்டார்களாம்.. அந்த கேரக்டருக்காக தனி ஸ்டைல் இருந்தால் நல்லாயிருக்குமே என்று ஜெகந்நாதன் ஸார் விருப்ப்ப்பட்டிருக்கிறார். “நீங்க சொல்லுங்க ஸார்.. செஞ்சு பார்த்திருவோம்..” என்று ரஜினியும் ஓகே சொல்லி “இதுவரைக்கும் வேகமாக பேசித்தான் நடிச்சிருக்கேன்.. அதே ஸ்பீட்ல நடந்தா நல்லாயிருக்குமா..? செஞ்சு பார்க்கலாமா..?” என்று ப்ளோரிலேயே பல முறை நடந்து காட்டினாராம்.. இதுவும் போதாமல், மேக்கப் அறையில்கூட குறுக்கும், நெடுக்குமாக நடந்து பார்த்துவிட்டு “இப்போ ஓகே ஸார்..” என்றாராம்..! “அந்த ஸ்டைல்தான் படமே..! அதுனாலதான் படம் ஜெயிச்சது.. நான் திரும்பவும் ஜெயிச்சேன்..” என்றார்..!

“ரஜினி அதுக்கப்புறம் பல நேரம் திடீர், திடீர்ன்னு போன் செய்வாரு.. அப்புறம் போனே செய்றதில்லை.. ரொம்ப நாளாச்சு..  செளந்தர்யா கல்யாணத்துல பார்த்ததுதான்..” என்ற வருத்தத்தில் இருந்த ஜெகந்நாதன் ஸாரை, இன்னும் கொஞ்சம் கோபப்பட வைத்துவிட்டார் ரஜினி.

இயக்குநர்கள் சங்க ஆண்டு விழாவில் ஜெகந்நாதன் ஸார் ரஜினியின் அருகில் சென்று பேச முயல.. “ஓகே.. ஓகே..” என்று வழக்கம்போல ஆசீர்வாதம் செய்வது போல சொல்லி  மறுதலித்துவிட்டார் ரஜினி. ஏற்கெனவே நடு ராத்திரியில் மேடையேற்றிய கோபத்தில் இருந்த ஜெகந்நாதன் ஸாருக்கு இது இன்னுமொரு கோபமாகிவிட்டது.. “என்ன சரவணா இது..? ச்சும்மா தலையை ஆட்டி.. ஓகே ஓகேன்னா என்ன அர்த்தம்..? அவர்ல்ல எந்திரிச்சு வந்து என்னை விசாரிக்கணும்.. நானே தள்ளாடிக்கிட்டு நடந்து வர்றேன். ஏதோ மூணாம் மனுஷன் மாதிரி பேசினா எப்படி...?” என்று மிகவும் வருத்தப்பட்டார்..!

இதுவும் கொஞ்ச நாள்தான்..! இதற்குச் சில நாட்கள் கழித்து ரஜினி தனது வீட்டில் தன்னை வைத்து இயக்கிய பெரிய இயக்குநர்கள்.. தனக்கு நெருக்கமான திரையுலகப் பிரமுகர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விழா எடுத்தார்..! இந்த விழாவுக்கு ஜெகந்நாதன் ஸாருக்கும் அழைப்பு வந்தது. லதா ரஜினியே போன் செய்து அழைத்திருந்தார். விழாவுக்கு போய்விட்டு வந்து அன்று மாலையே என்னை போனில் அழைத்து சந்தோஷப்பட்டார்..!

“இன்னிக்கு ரஜினியை பார்த்தேன் சரவணன்.. நல்லா பேசினாரு.. ‘உடம்பை பார்த்துக்குங்க’ன்னு சொன்னாரு..  ‘உங்களை நிறைய மிஸ் பண்ணிட்டேன்’னு சொன்னாரு.. எனக்கும் வருத்தமாத்தான் இருந்தது.. ‘எனக்கு உடம்புக்கு முடியலை. இல்லாட்டி உங்களை அடிக்கடி வந்து பார்ப்பேன்’னு சொன்னேன்.. ‘இல்ல.. இல்ல.. நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க.. போன்ல பேசுவோம்’னு சொன்னாரு..! அவருக்கு உ.வே.சா. பத்தின புத்தகத்தை பரிசா கொடுத்தேன்..! உங்காளும்(கே.பி.) வந்திருந்தாரு.. ரொம்ப நாள் கழிச்சு அவர்கிட்டேயும் பேசினேன்.. அவருக்கும் ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்திட்டு வந்தேன்..! ஆனா உன்னைப் பத்தி எதுவும் சொல்லலை.. ரஜினி வாசல்வரைக்கும் வந்து வழியனுப்பி வைச்சாரு.. ஐ ஆம் ஸோ ஹேப்பி..!” என்றார்.

அடிப்படையில் ஜெகந்நாதன் ஸார் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் இரண்டாம் பேட்ச் மாணவர். பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்தவர்.. தமிழ் இலக்கியத்தில் நிரம்ப ஆர்வம் கொண்டவர்.. அதிலும் சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர்.. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். சென்னையில் உ.வே.சா.வுக்கு சிலை அமைக்கப்பட்ட பின்பு, உ.வே.சா.வின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும்  அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

உ.வே.சா.வை பற்றிப் பேசச் சொன்னாலும் மணிக்கணக்காகப் பேசுவார். அவரைப் பற்றி தூர்தர்ஷனுக்காக 13 வாரத் தொடராக “தமிழ்த் தாத்தா” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியிருந்தார்..!  வீட்டில் இருந்த புத்தகங்களில் பெரும்பான்மையானவை இலக்கிய புத்தகங்கள்தான்..! “சிலப்பதிகாரத்துக்கு உரைநடையாக புத்தகம் இருக்குமா?” என்று நான் கேட்டிருந்தேன்.. எனக்காக பல இடங்களிலும் விசாரித்துவிட்டு மிகவும் கவலையோடு “இதுவரைக்கும் யாரும் அப்படி எழுதலை சரவணா..!” என்று வருத்தப்பட்டு சொன்னவிதம் , எனக்குள் அவர் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்த்தியது..!

இலக்கியத் தொடர்பில் பல முக்கிய இலக்கிய பத்திரிகைகளை வாசித்து வந்தாலும் அசோகமித்திரனுடன் பழக்கம் இருந்ததாகச் சொன்னார்..!  ஒரு முறை அசோகமித்திரன் இவரிடம், “கரகாட்டக்காரன்-சின்னத்தம்பி.. இந்த ரெண்டு படமும் எப்படிங்க ஜெயிச்சது..? ஏன் இந்த ஓட்டம் ஓடுச்சு..?” என்று கேட்டாராம்..! “இதுக்கு ஆன்ஸர் தெரிஞ்சா, நானே இதே மாதிரி படம் செஞ்சிர மாட்டேனா...?” என்று இவரும் பதில் சொன்னாராம்..!

மூன்று முகம் வெளியான அடுத்த வருடமே ஜெகந்நாதன் ஸாருக்கு மீண்டும் ஒரு டபுள் ஆக்சன்..! 1983 நவம்பர் 4. தீபாவளியன்று சிவாஜி பிலிம்ஸின் ‘வெள்ளை ரோஜா’வும், ரஜினியின் ‘தங்க மகன்’ இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டுமே ஹிட்டடித்தன..! ‘வெள்ளை ரோஜா’வில் சாப்ட்டான கேரக்டரில் நடிப்பு சாயல் இல்லாமல் இருந்தால் ஜெயிக்குமா என்ற நடிகர் திலகத்தின் சந்தேகத்தை தீர்த்துவைத்து, உடன் ராம்குமாரையும் வில்லனாக நடிக்க வைத்து ஜெயித்துக் காட்டினார்.  இதே 'வெள்ளை ரோஜா', இந்திக்கும், கன்னடத்திற்கும் படையெடுத்திருக்கிறது. இந்தியில் ஜிதேந்திராவும் கன்னடத்தில் பிரபாகரும் நடிக்க இவைகளையும் ஜெகந்நாதன் ஸாரே இயக்கியிருக்கிறார். சிறந்த இயக்குநருக்கான ஒரேயொரு பிலிம்பேர் விருதையும் ‘வெள்ளை ரோஜா’ படத்துக்காகவே வாங்கியிருக்கிறார் ஜெகந்நாதன் ஸார்..!

ரஜினி, சிவாஜியுடன் மட்டுமா என்ற கேள்விக்கு 1987 பொங்கலில் வெளியான சத்யா மூவிஸின்  'காதல் பரிசு' படம் விடை சொன்னது. இதில் ‘காதல் மகாராணி’ பாடல் “நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ ஸ்டைலில் இருப்பதாக நான் சொன்னவுடன்.. “அதேதான்.. அந்த ஸ்டைல்ல ஒரு பாட்டு வேணும்ன்னு விருப்பப்பட்டோம். அதுனால அதே மாதிரி  எடுத்தோம்.. இருந்தாலும் கமல், அம்பிகாவோட ஆர்ட் டைரக்சனும் அற்புதமாக வேலை பார்த்தாங்க.. இப்பவும் அந்தப் படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு அதுதான்...” என்றார். “ஆனால் எனக்கு கூ.. கூ.. என்று குயில் கூவாதா..? பாட்டுதான் பிடிக்குது..” என்றேன்.. “அந்த டான்ஸெல்லாம் ச்சே.. ச்சே.. சான்ஸே இல்லை.. கமலுக்கு மட்டும்தான்..” என்றேன்..

“கமல் இதுக்கு முன்னாடி நான் டைரக்ட் செஞ்ச படங்கள்லேயே சின்ன சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கான்.. அப்பல்லாம் ஆழ்வார்பேட்டைல அவனை ஏத்திக்கிட்டு அதே கார் என் வீட்டுக்கு வந்து என்னையும் கூட்டிக்கிட்டு கிளம்பும்.. அன்னிக்கு டான்ஸ் ரிகர்சல்ன்னா வண்டிலேயே கையை, காலை ஆட்டிக்கிட்டு ஏதாவது செஞ்சுக்கிட்டேதான் வருவான்.. டயலாக் போர்ஷன்னா மனப்பாடம் செஞ்ச மாதிரி டயலாக்கை சொல்லிக்கிட்டேதான் வருவான்.. டெடிகேஷன் பெர்ஷன்.. அதுனாலதான் இந்த அளவுக்கு வந்திருக்கான்..! இந்தப் படத்துலகூட லொகேஷன் வந்த பின்னாடி இடத்தைப் பார்த்துட்டு, திரும்பத் திரும்ப டான்ஸ் மூவ்மெண்ட்ஸை மாத்தி, மாத்தி ரெடி பண்ணிக் குடுத்தான்.. அதான் அந்த டான்ஸ் இப்பவும் பேசப்படுது..” என்றார்..!

சத்யா மூவிஸ் தயாரிப்பு மட்டுமல்ல.. வெளி தயாரிப்புப் படங்களையும் ஒப்புக் கொண்டு இயக்கியிருந்தாலும் அவருடைய கடைசி ஹிட் ‘காதல் பரிசு’தான். ‘முத்துக்கள் மூன்று’, 'கொம்பேறி மூக்கன்', 'நாளை உனது நாள்', ஓ மானே - மானே, 'கற்பூர தீபம்' 'என் தங்கை', மில் தொழிலாளி', 'அர்ச்சனா ஐ.ஏ.எஸ்', 'ஹீரோ' என்று லிஸ்ட்டில் பல படங்களும் அடக்கம். இடையில் சுருளிராஜனை ஹீரோவாக வைத்துகூட ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ஜெகந்நாதன் ஸார் இயக்கிய கடைசிப் படம் ‘வாட்ச்மேன் வடிவேலு’. சிவக்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். “அதற்குப் பின்பும் பட வாய்ப்பு வந்தது.. அந்த நேரத்துல உ.வே.சா. பத்தின டாக்குமெண்ட்ரி எடுக்கப் போனதால கொஞ்சம் கேப் விழுந்திருச்சு.. அதுனால அப்படியே கோடம்பாக்கம் கை விட்டுப் போயிருச்சு” என்றார்..!

கோடம்பாக்கம் கைவிட்டாலும் சின்னத்திரையிலும் சில தொடர்களை இயக்கியிருக்கிறார் ஜெகந்நாதன் ஸார்.. வரிசைக்கிரமமாக பார்த்தால் ‘தாலி’, ‘மர்மம்’, ‘நரசிம்மாவதாரம்’, ‘பவானி’, ‘கோர்ட்டு தீர்ப்பு’, ‘பெண் ஒரு ஜீவ நதி’ என்று சில குறுந்தொடர்களை இயக்கிய நிலையில் மேலும் பலவற்றுக்கு கதை ஐடியா மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தார். வயதானது ஒரு பக்கம்.. துணைக்கு யாருடைய உதவியும் இல்லாதது..! சேனல்களில் அறிமுகம் இல்லாதது - இதெல்லாம் சேர்ந்து கொண்டதால் இதுவே போதும் என்று தனது படைப்புலகத்தில் இருந்து விலகியிருந்தார் ஜெகந்நாதன் ஸார்..!

சென்ற வருட உலகத் திரைப்பட விழாவின் அனைத்து நாட்களிலும் வராமல் போனாலும் கடைசி 4 நாட்கள் முழுவதுமாக என்னுடன் இருந்தார்..! நான் ஈரோடு சென்று திரும்புவதாகச் சொன்னபோது “உனக்கு இப்போ அந்த விருது ரொம்ப முக்கியமா..? இப்போ மிஸ் பண்ற படங்களை எப்படி திரும்பப் பார்ப்ப..?” என்று லேசாகக் கோபித்தும் கொண்டார்..!  இடையிடையே ஐசிஏஎஃப்பின் புதிய பட திரையிடூகள் பற்றி போனில் பேசுவோம்..! ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இட நெருக்கடியால் சில நேரங்களில் உட்கார முடியாததால், இப்போதெல்லாம் போக முடியவில்லை என்று ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார்..!

அவருடைய மகள்கள் இருவரும் திருப்பூரிலும், திருச்சியிலும் இருப்பதால் அடிக்கடி டூர் சென்றுவிடுவார். ஏதாவது முக்கிய படங்கள் ரிலீஸாகும்போது மட்டுமே போன் செய்து ரிசல்ட் என்ன என்று ஆர்வத்துடன் விசாரிப்பார். “இதுவும் ஊத்திக்கிச்சா..?” என்று அவர் மெல்ல சொல்லும்போது எனக்கு புரையேறுவது போல சிரிப்பு வரும்..! ஆனாலும் அவர் சிரிக்காமல் “அவன் இவ்ளோ அலட்டும்போதே நினைச்சேன்.. இப்படித்தான் எடுத்துத் தொலைப்பான்னு..” என்பார்..!

திருப்பூரில் தான் இருந்தபொழுதுகூட அந்த ஊரில் நடந்த பல புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.. “இப்போ எல்லாருமே வரலாறு தெரியாமலேயே பேசுறாங்க.. எழுதுறாங்க.. நம்மளை கொஞ்சம் பேச விட்டா பேசலாம்.. எங்க முடியுது..” என்று அலுத்துக் கொண்டவருக்கு சினிமாவைக் கற்றுக் கொள்வதில் இருந்த ஆர்வம் இறுதி வரையிலும் இருந்திருக்கிறது. இதுதான் ஆச்சரியம்..! சிலருக்கு மட்டுமே இது சாத்தியம்..!

ஒரு மகன். பெயர் அருண்.. மைக்ரோசாப்ட் கம்பெனியில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பது குறித்து அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதே சமயம்.. பெரிய குறையும் அதுதான் என்பார். “எனக்குப் பின்னாடி என் பேரைச் சொல்ல இங்க யாருமே இல்லை..” என்பார். “என்னோட அஸிஸ்டெண்ட்கூட யார், எங்க இருக்காங்கன்னே தெரியலை.. ஒருத்தராச்சும் ஏதாவது ஒரு நல்ல நாள்ல வந்து பார்த்திட்டு போகக் கூடாதா..?” என்பார்.. எனக்குத் தெரிந்து இவருடன் நீண்ட நாட்கள் அஸிஸ்டெண்ட்டாக இருந்தவர்களில் யாரும் இயக்குநர்களாக பரிணமிக்கவில்லை என்பது உண்மை..!

78 வயதாகி சற்றுத் தளர்ச்சியான நடையில் இருந்தாலும், 2 ஆண்டுகளுக்கு முன்னால்தான் அமெரிக்கா சென்று 6 மாதங்கள் தனது மகன் வீட்டில் தங்கியிருந்துவிட்டு வந்தார்..!  திருப்பூரிலேயே பாத்ரூமில் வழுக்கி விழுந்து அடிபட்டுவிட்டதாகவும், சீக்கிரமா சென்னைக்கு வந்துட்டு கூப்பிடுறேன் என்று மட்டுமே கடைசியாக  பேசும்போது கூறியிருந்தார்.  திரும்பி வருவார் என்றுதான் நானும் நம்பியிருந்தேன். நான் மட்டுமல்ல.. அவர் வீட்டு போர்டிகாவில் இப்போதும் எரிந்து கொண்டிருக்கும் அந்த 40 வால்ட்ஸ் பல்பும் அவருக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது..!

அவரது பூதவுடலை சென்னை கொண்டு வந்திருந்தால் இயக்குநர்கள் சங்க மாலையோடு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியிருக்கலாம்.. ஆனால் வாய்ப்பில்லாமல் போய்விட்டதெண்ணி அவர் நிச்சயம் வருத்தப்படுவார் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவர் சினிமாவை நேசித்தார்.. தான் சினிமாக்காரன் என்பதை மிகவும் உயர்வாகவே கருதினார்.. அந்த உயர்வுக்குரிய மரியாதை அவரது உடலுக்கு கிடைக்காமல் போனது வருத்தமானதே..! ஆனால் இது எல்லாவற்றையும்விட அவருக்கு இன்னொரு பெயர் கிடைத்திருக்கிறது.. தான் பிறந்து வாழ்ந்த அதே ஊரில் ஒரு பண்பட்ட மனிதனுக்கு இறப்பும் கிடைக்கிறது என்றால் அது அவரவர் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்..!

1935 டிசம்பர் 25-ம் தேதி இதே திருப்பூரில் ஆறுமுகம் முதலியாருக்கும்,  ராமாத்தாளுக்கும் மகனாகப் பிறந்த ஜெகந்நாதன் அதே ஊரில் தனது தந்தை பெயரில் கட்டியிருந்த.. பெற்றோர் இருந்திருந்த வீட்டிலேயே இறந்தும் போனது அவருக்குக் கிடைத்த கொடுப்பினை..!

என்னைப் போன்ற சாதாரணமானவர்களையெல்லாம் நடுவீட்டில் உட்கார வைத்து மரியாதை செய்து நம்பிக்கையூட்டிய எனது மூத்தோர் ஜெகந்நாதன் ஐயாவுக்கு என்னால் முடிந்தது இந்தச் சிறிய அஞ்சலிதான்..!

அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..!

58 comments:

ராம்ஜி_யாஹூ said...

படம் முடிந்தவுடன் என்னுடைய TVS XL Super-ல் நானே அவரது வீட்டில் அவரை டிராப் செய்வேன்..

தமிழ்த் திரை உலகின் ஒரு மிகப் பெரிய வெற்றி இயக்குனர், உச்ச நடிகர்களை வைத்து இயக்கியவர்

எந்த அளவிற்கு ஆழமாக நட்பிற்கு மரியாதை அளித்து உள்ளார்


நீங்கள் பாக்கியவான்

Nat Sriram said...

அன்னாருக்கு அஞ்சலி.

கட்டுரையின் சிறப்பு அதன் frankness-ஏ..

உங்கள் கேபி அனுபவங்கள் எழுதியிருக்கிறீர்களா?

pichaikaaran said...

நெகிழ வைத்த பதிவு. எம் ஜி ஆர் , ரஜினி, கமல் போன்றவர்களுக்கு ஏற்றபடி படங்கள் செய்த அவரை , இன்னும் சிறப்பாக திரை உலகம் பயன் படுத்தி இருக்கலாம். மூன்று முகம் பார்த்தபோது , அவர் சிறந்த இயக்குனர் என்பதை உணர்ந்தேன். இந்த பதிவின்மூலம் , அவர் சிறந்த மனிதரும்கூட என உணர்ந்தேன்

கானா பிரபா said...

அண்ணே, நீங்களும் ஜெகந்நாதன் ஸாரும் அருகில் இருந்து பேசிக்கொண்டதுபோல உணர்ந்தேன் :-( நிறைகுடம்
என் ஆழ்ந்த இரங்கலைப் பதிவாக்குகிறேன்

வந்தியத்தேவன் said...

அண்ணே நீங்கள் பெரிய மனிதர் என்பது தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய மனிதர் என்பதை இன்றைக்குத் தான் அறிந்தேன். நிறை குடங்கள் தளம்பாது. ஜெகந்நாதன் ஐயாவிற்க்கும் அஞ்சலிகள்.

கணேஷ் said...

RIP Director sir!!

கிரி said...

சரவணன் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. கானா பிரபா சொன்னது போல "நீங்களும் ஜெகநாதன் சார் ம் அருகில் இருந்து பேசிக்கொண்டது போல இருந்தது. அவருடைய ஆதகங்களை அவரே எங்களிடம் கூறியது போல இருந்தது. நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும் போது அவர் நிறைய பகிர நினைத்து இருக்கிறார் ஆனால், அதற்க்கான சந்தர்ப்பம் அமையாது போனது அவருடைய துரதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். இது கடைசி வரை அவருக்கு மனக்குறையாகவே இருந்து இருக்கும். வீணா போனவங்களை எல்லாம் பேட்டி எடுக்கும் தொலைக்காட்சிகள் இவரது பேட்டியை ஒளிபரப்பி இருக்கலாம்.

நீங்கள் சுஜாதா அவர்கள் மறைந்த போது எழுதிய பதிவைப் போல இதுவும் மிகச் சிறப்பாக வந்துள்ளது.

Unknown said...

rip

Jackiesekar said...

ரொம்ப ரொம்ப அற்புதமான கட்டுரை அண்ணே... இதுக்கு எத்தனை மணி நேரம் செலவாகியிருக்கும்ன்னு என்னால உணர முடியது..காரணம் அவர் உங்கள் மேல் வைத்து இருந்த மரியாதை... நல்ல ரைட்டடப்.. நீங்களாவது அவரை பற்றி உலகத்துக்கு சில பேருக்காவது அறிமுகபடுத்தினிங்களே... நன்றி.

உலக சினிமா ரசிகன் said...

உச்ச நட்சத்திரக்களை இயக்கி முகவரி இல்லாமல் மறைந்து போய் விட்டார்.

கிட்டத்தட்ட அவரது எல்லா படங்களையுமே பார்த்து இருக்கிறேன்.
கிரைம் திரில்லர் பாணியில் ஜாம்பவனாக திகழ்ந்தார் ஜெகந்நாதன்.
உ.ம். இதயக்கனி,வெள்ளை ரோஜா

நட்சத்திரங்களை ஜொலிக்க வைத்து மறைந்த மகா கலைஞனுக்கு...மகர ஜோதி ஏற்றிய உண்மைத்தமிழனை நன்றியுடன் வணங்குகிறேன்.

gnani said...

அருமையான அஞ்சலிக் கட்டுரை சரவணன். ஜகந்நாதனை ஓர் வெற்றி பெற்ற இயக்குநராக மட்டுமல்லாமல், எளிய இனிய மனிராகவும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். இது ஒட்டு மொத்த சினிமா உலகம் சார்பான அஞ்சலியாக அமைந்துவிட்டது.அவர் ஊருக்கு சென்று அஞ்சலி செலுத்திய, செலுத்தாத -அவரால் பயனடைந்த பிர்பலங்கள பட்டியலை தோண்டி எடுத்து வெளியிட்டு நிறைவு செய்யுங்கள்.

Prabu M said...

ரொம்ப நல்ல கட்டுரை....
நிறுத்தி நிதானமா.... ரொம்பவே டைம் ட்ராவல் பண்ணித் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க....
அநேகமா ஜெகந்நாதன் அவர்களுக்கு யாரும் இந்தளவு அஞ்சலி செலுத்தலன்னுதான் நினைக்கிறேன்..
இவர் படங்கள் மட்டுமே அறிமுகம் இவரை இப்போதுதான் இந்தளவு அறியவும் வாய்ப்பு கிட்டியது...
நன்றி.....

ஜெக‌ந்நாதன் சார் சந்தோஷப்பட்டிருப்பார்..... அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..

scenecreator said...

இதுபோல் இன்னும் எத்தனை பேர் வாழும் போது போதிய கவனிப்பு இல்லாமல் ,இறந்த பின் வருத்தப்பட வைக்க போறார்களோ ? ரஜினி எப்போதும் நன்றி மறந்தவர் தான்.தயாரிப்பாளர் ஜி.வி. இறப்பதற்கு முன் நெருக்கடியில் இருந்தார் என்று சினிமா உலகம் முழுதும் தெரியும்.ஆனால் இரங்கல் கூட்டத்திற்கு வந்த ரஜினி தனக்கு எதுவும்தெரியாது தெரிந்திருந்தால் உதவி இருப்பேன் என்று அப்பட்டமாக பேசினார்.இது போல் நிறைய .ஆனால் ரஜினியை கேள்வி கேட்பது யார்.இது போல் ஒரு விஷயம் நடந்தது என்று சொன்னாலே யாரும் நம்புவது இல்லை

Caricaturist Sugumarje said...

மனம் நெகிழும் பதிவு...
உங்கள் இருவரும் கலந்திருந்த நட்பான அந்த நாட்கள் அருமை!
என் ஆழ்ந்த இரங்கல்!!!

வவ்வால் said...

அண்ணாச்சி,

புகழ்மிகு இயக்குநரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்,இரங்கலும்.

பல தெரியாத விடயங்களை நன்கு தொகுத்து சிறந்த நினைவஞ்சலி செலுத்திவிட்டீர்கள்.

//“என்னோட திரையுலக வாழ்க்கை அனுபவங்களை எழுதறதுக்கு ஒரு பத்திரிகை கிடைக்கலை..//

ச்சே என்ன உலகமடா இது, ஒரு படம் நடித்த ,இயக்கியவருக்கு எல்லாம் வாழ்க்கை வரலாறு, தொடர் போடுகின்றன பத்திரிக்கைகள், எம்ஜிஆர், சிவாஜி,ரஜினி,கமல் என இயக்கியவரை இப்படி செய்துள்ளார்களே?

நீராவது , வலைப்பதிவு பற்றி சொல்லி அதில் எழுத சொல்லி இருக்கலாமே, அவருக்கும் நல்ல வடிகால்,படிப்பவர்களுக்கும் நல்ல தீனியாக இருந்து இருக்கும்.

இனிமேல் யாரேனும் இப்படி எங்கே எழுத என இடம் தேடினால் வலைப்பதிவு பற்றி சொல்லுங்க சாமி.

Pattu & Kuttu said...

great write up ! my tributes AJ

VS Balajee

PS : write more..no write up on politics for long time..

Amudhavan said...

துயரம் தோய்ந்த உங்கள் நினைவுகளை எவ்வித பாசாங்கும் இன்றி பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். திரு ஏ.ஜெகந்நாதன் அவர்களைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்துவைத்திருந்ததில் அவர் திரைப்படத்துறையில் இருக்கும் மரியாதைக்குரியவர்களில் ஒருவர் என்பது மட்டும்தான். தமிழ்த்தாத்தா பற்றிய ஆவணப்படமும் புத்தகமும் இவர் தயாரிப்பில் உருவாகின்றன என்பதை அறிந்ததுமுதல் அவரைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
இறுதிவரை முடியாமலேயே போய்விட்டது. திரு சிவகுமார் அவர்களின் படப்பிடிப்பில் ஒருமுறை அவரை சந்தித்தது ஞாபகம் இருக்கிறது. வெறும் சந்திப்புதான். குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமில்லை.
ஒரு சாதனையாளரையும் நட்புக்கு உயர்வு தந்தவரையும் இழந்த சோகத்தை மிக ஆழமாகவே பதிவு செய்திருக்கிறீர்கள்.

manjoorraja said...

சரவணா, மிகவும் நன்றாக உங்கள் நட்பை எழுதியிருக்கிறீர்கள். இதே போல இன்னும் பலருடனும் உங்களுக்கு நட்பிருக்கலாம், அவர்களைப் பற்றி எழுதுவதுடன் அவர்களுக்கு வலையுலகையும் அறிமுகம் செய்யவும்.

பாராட்டுகள்.

மணிஜி said...

ஜெகநாதன் சாருக்கு என் அஞ்சலிகள்..இந்த கட்டுரை இன்னொரு முத்து அண்ணே!!.. அருமையான எழுத்தஞ்சலி..

settaikkaran said...

ஓரிரு வருடங்களுக்கு முன்னர் உங்களால் நானும் ஏ.ஜகந்நாதன் அவர்களை வுட்லண்ட்ஸ் சிம்பனியில், உலகத்திரைப்பட விழாவில் சந்திக்க முடிந்தது; பேச முடிந்தது. அவசியம் நீங்கள் அவர் குறித்த நினைவுகளுடன், அஞ்சலி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஒரு திறமையான இயக்குனருக்கும், நல்ல மனிதருக்கும் அருமையாகப் புகழ்மாலை அணிவித்து அஞ்சலி செய்திருக்கிறீர்கள்!

எம்.ஞானசேகரன் said...

மிக அருமையான அஞ்சலிக்கட்டுரை!நிறைய அறிந்திராத தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி நண்பரே!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

படம் முடிந்தவுடன் என்னுடைய TVS XL Super-ல் நானே அவரது வீட்டில் அவரை டிராப் செய்வேன். தமிழ்த் திரை உலகின் ஒரு மிகப் பெரிய வெற்றி இயக்குனர், உச்ச நடிகர்களை வைத்து இயக்கியவர், எந்த அளவிற்கு ஆழமாக நட்பிற்கு மரியாதை அளித்து உள்ளார்
நீங்கள் பாக்கியவான்.]]]

ஆமாம் ராம்ஜி.. இப்போது நினைத்தாலும் எனக்குப் பெருமையாகத்தான் உள்ளது..!

உண்மைத்தமிழன் said...

[[[Nataraj (ரசனைக்காரன்) said...

அன்னாருக்கு அஞ்சலி. கட்டுரையின் சிறப்பு அதன் frankness-ஏ..]]]

அவருடனான எனது அனுபவத்தில் சிறிதளவை மிக நேர்மையாக இங்கே கொட்டியிருக்கிறேன்..!

[[[உங்கள் கேபி அனுபவங்கள் எழுதியிருக்கிறீர்களா?]]]

இல்லை.. அதற்கொரு காலம் வரும். அப்போது எழுதுவேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[pichaikaaran s said...

நெகிழ வைத்த பதிவு. எம் ஜி ஆர், ரஜினி, கமல் போன்றவர்களுக்கு ஏற்றபடி படங்கள் செய்த அவரை, இன்னும் சிறப்பாக திரை உலகம் பயன் படுத்தி இருக்கலாம். மூன்று முகம் பார்த்தபோது, அவர் சிறந்த இயக்குனர் என்பதை உணர்ந்தேன். இந்த பதிவின் மூலம், அவர் சிறந்த மனிதரும்கூட என உணர்ந்தேன்.]]]

நிச்சயமாக சிறந்த மனிதர்தான்..! பார்ப்போரிடத்திலெல்லாம் அந்த அளவுக்கு தன்மையாகவும், மரியாதையாகவும் பேசுவார்.. பழகுவார்..! அதுதான் என்னை அவரிடத்தில் கடைசிவரையிலும் ஒட்ட வைத்திருந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[கானா பிரபா said...

அண்ணே, நீங்களும் ஜெகந்நாதன் ஸாரும் அருகில் இருந்து பேசிக் கொண்டதுபோல உணர்ந்தேன் :-( நிறைகுடம். என் ஆழ்ந்த இரங்கலைப் பதிவாக்குகிறேன்.]]]

வருகைக்கு நன்றி கானா..! ஏதோ அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கும் தெரிய வைக்க வேண்டும்.. பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்தக் கட்டுரை..!

உண்மைத்தமிழன் said...

[[[வந்தியத்தேவன் said...

அண்ணே நீங்கள் பெரிய மனிதர் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய மனிதர் என்பதை இன்றைக்குத்தான் அறிந்தேன். நிறை குடங்கள் தளம்பாது. ஜெகந்நாதன் ஐயாவிற்கும் அஞ்சலிகள்.]]]

வந்தி.. என்னையெல்லாம் பெரிய மனிதர் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டாம்.. உண்மையில் பெரிய மனிதர் ஜெகந்நாதன் ஸார்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[கணேஷ் said...

RIP Director sir!!]]]

வருகைக்கு மிக்க நன்றிகள் கணேஷ் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிரி said...

சரவணன் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. கானா பிரபா சொன்னது போல "நீங்களும் ஜெகநாதன் சார் ம் அருகில் இருந்து பேசிக்கொண்டது போல இருந்தது. அவருடைய ஆதகங்களை அவரே எங்களிடம் கூறியது போல இருந்தது. நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும் போது அவர் நிறைய பகிர நினைத்து இருக்கிறார் ஆனால், அதற்க்கான சந்தர்ப்பம் அமையாது போனது அவருடைய துரதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். இது கடைசிவரை அவருக்கு மனக்குறையாகவே இருந்து இருக்கும். வீணா போனவங்களை எல்லாம் பேட்டி எடுக்கும் தொலைக்காட்சிகள் இவரது பேட்டியை ஒளிபரப்பி இருக்கலாம்.]]]

அவருக்கு தன்னை மார்க்கெட்டிங் செய்யத் தெரியவில்லை.. யாராவது அழைத்தால்தான் போக வேண்டும் என்ற மரியாதையை எதிர்பார்த்தார். அதனைத் தராதது மீடியாக்களின் தவறு..!

[[[நீங்கள் சுஜாதா அவர்கள் மறைந்தபோது எழுதிய பதிவைப் போல இதுவும் மிகச் சிறப்பாக வந்துள்ளது.]]]

மிக்க நன்றி..! அதையும் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[Vijayakumar Ramdoss said...

rip.]]]

தங்களது வருகைக்கு நன்றிகள் விஜயகுமார் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jackiesekar said...

ரொம்ப ரொம்ப அற்புதமான கட்டுரை அண்ணே. இதுக்கு எத்தனை மணி நேரம் செலவாகியிருக்கும்ன்னு என்னால உணர முடியது. காரணம் அவர் உங்கள் மேல் வைத்து இருந்த மரியாதை. நல்ல ரைட்டப். நீங்களாவது அவரை பற்றி உலகத்துக்கு சில பேருக்காவது அறிமுகபடுத்தினிங்களே. நன்றி.]]]

நாமளே சொல்லலைன்னா வேறு யார் சொல்வது ஜாக்கி..? ஏதோ அந்த மனிதர் எனக்களித்த மரியாதைக்கும், செய்த உதவிகளுக்கும் என்னாலான அஞ்சலி இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[உலக சினிமா ரசிகன் said...

உச்ச நட்சத்திரக்களை இயக்கி முகவரி இல்லாமல் மறைந்து போய் விட்டார். கிட்டத்தட்ட அவரது எல்லா படங்களையுமே பார்த்து இருக்கிறேன்.
கிரைம் திரில்லர் பாணியில் ஜாம்பவனாக திகழ்ந்தார் ஜெகந்நாதன்.
உ.ம். இதயக்கனி,வெள்ளை ரோஜா]]]

அவரது மற்ற படங்களும் ஏதோ ஒரு வகையில் நன்றாகத்தான் இருக்கும்.. திரைக்கதையை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லக் கூடியவர் என்று இவரைப் பற்றி சிவக்குமார் அடிக்கடி சொல்லுவார்..!

உண்மைத்தமிழன் said...

[[[gnani said...

அருமையான அஞ்சலிக் கட்டுரை சரவணன். ஜகந்நாதனை ஓர் வெற்றி பெற்ற இயக்குநராக மட்டுமல்லாமல், எளிய இனிய மனிராகவும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். இது ஒட்டு மொத்த சினிமா உலகம் சார்பான அஞ்சலியாக அமைந்துவிட்டது.]]]

வருகைக்கு நன்றிகள் ஞாநியண்ணே..! மிக எளிய மனிதர்.. அதனாலேயே திரையுலகில் பலருக்கும் தெரியாமலேயே போய்விட்டது..!

[[[அவர் ஊருக்கு சென்று அஞ்சலி செலுத்திய, செலுத்தாத - அவரால் பயனடைந்த பிர்பலங்கள பட்டியலை தோண்டி எடுத்து வெளியிட்டு நிறைவு செய்யுங்கள்.]]]

எதுக்கு ஸார் இது..? சென்னையில் இருந்தும், இயக்குநர்கள் சங்கத்தில் இருந்தும் யார் சென்றது என்று தெரியவில்லை. என்னாலேயே போக முடியவில்லை..! வேறு என்ன செய்வது..? அவர்களாவது சென்னைக்கு கொண்டு வந்திருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Prabu M said...

ரொம்ப நல்ல கட்டுரை. நிறுத்தி நிதானமா ரொம்பவே டைம் ட்ராவல் பண்ணித் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க. அநேகமா ஜெகந்நாதன் அவர்களுக்கு யாரும் இந்தளவு அஞ்சலி செலுத்தலன்னுதான் நினைக்கிறேன். இவர் படங்கள் மட்டுமே அறிமுகம் இவரை இப்போதுதான் இந்தளவு அறியவும் வாய்ப்பு கிட்டியது... நன்றி.....]]]

இவர் அதிகமா தற்போதைய திரையுலகில் பழக்கமில்லை என்பதால்தான் இந்த நிலை.. சினிமாவுலகமே இப்படித்தான்.. உச்சத்தில் இருந்தால் மட்டுமே மரியாதை.. கொஞ்சம் இறங்கி வந்தால் டூப்புகள் கூட மதிக்க மாட்டார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[scenecreator said...

இதுபோல் இன்னும் எத்தனை பேர் வாழும் போது போதிய கவனிப்பு இல்லாமல், இறந்த பின் வருத்தப்பட வைக்க போறார்களோ? ரஜினி எப்போதும் நன்றி மறந்தவர்தான். தயாரிப்பாளர் ஜி.வி. இறப்பதற்கு முன் நெருக்கடியில் இருந்தார் என்று சினிமா உலகம் முழுதும் தெரியும். ஆனால் இரங்கல் கூட்டத்திற்கு வந்த ரஜினி தனக்கு எதுவும் தெரியாது தெரிந்திருந்தால்.. உதவி இருப்பேன் என்று அப்பட்டமாக பேசினார். இது போல் நிறைய. ஆனால் ரஜினியை கேள்வி கேட்பது யார். இது போல் ஒரு விஷயம் நடந்தது என்று சொன்னாலே யாரும் நம்புவது இல்லை.]]]

இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை நண்பரே.. இருந்தாலும் வருகைக்கு மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Caricaturist Sugumarje said...

மனம் நெகிழும் பதிவு. உங்கள் இருவரும் கலந்திருந்த நட்பான அந்த நாட்கள் அருமை! என் ஆழ்ந்த இரங்கல்!!!]]]

வருகைக்கு நன்றி சுகுமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, புகழ்மிகு இயக்குநரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், இரங்கலும். பல தெரியாத விடயங்களை நன்கு தொகுத்து சிறந்த நினைவஞ்சலி செலுத்திவிட்டீர்கள்.

//“என்னோட திரையுலக வாழ்க்கை அனுபவங்களை எழுதறதுக்கு ஒரு பத்திரிகை கிடைக்கலை..//

ச்சே என்ன உலகமடா இது, ஒரு படம் நடித்த, இயக்கியவருக்கு எல்லாம் வாழ்க்கை வரலாறு, தொடர் போடுகின்றன பத்திரிக்கைகள், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என இயக்கியவரை இப்படி செய்துள்ளார்களே? நீராவது, வலைப்பதிவு பற்றி சொல்லி அதில் எழுத சொல்லி இருக்கலாமே, அவருக்கும் நல்ல வடிகால், படிப்பவர்களுக்கும் நல்ல தீனியாக இருந்து இருக்கும். இனிமேல் யாரேனும் இப்படி எங்கே எழுத என இடம் தேடினால் வலைப்பதிவு பற்றி சொல்லுங்க சாமி.]]]

அதை யார் டைப் செய்வது..? அவரது வீட்டில் கம்ப்யூட்டர் இல்லை. அத்தோடு இணையம் தொடர்பாக அவருக்கு அதிகப் பரிச்சயமும் இல்லை..! ஆனால் நான் இணையத்தில் எழுதி வருவது அவருக்குத் தெரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Pattu & Kuttu said...

great write up ! my tributes AJ

VS Balajee

PS : write more.. no write up on politics for long time..]]]

வருகைக்கு நன்றிகள் நண்பர்களே..! அரசியல் எழுத இப்போதெல்லாம் எரிச்சலாக உள்ளது..! அதனால்தான் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Amudhavan said...

துயரம் தோய்ந்த உங்கள் நினைவுகளை எவ்வித பாசாங்கும் இன்றி பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். திரு ஏ.ஜெகந்நாதன் அவர்களைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்து வைத்திருந்ததில் அவர் திரைப்படத் துறையில் இருக்கும் மரியாதைக்குரியவர்களில் ஒருவர் என்பது மட்டும்தான். தமிழ்த் தாத்தா பற்றிய ஆவணப்படமும், புத்தகமும் இவர் தயாரிப்பில் உருவாகின்றன என்பதை அறிந்தது முதல் அவரைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இறுதிவரை முடியாமலேயே போய்விட்டது. திரு சிவகுமார் அவர்களின் படப்பிடிப்பில் ஒரு முறை அவரை சந்தித்தது ஞாபகம் இருக்கிறது. வெறும் சந்திப்புதான். குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமில்லை. ஒரு சாதனையாளரையும் நட்புக்கு உயர்வு தந்தவரையும் இழந்த சோகத்தை மிக ஆழமாகவே பதிவு செய்திருக்கிறீர்கள்.]]]

எனது தோழர் ஒருவரை இழந்துவிட்டேன் என்ற உணர்வுதான் என்னை இப்படி எழுத வைத்திருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[manjoorraja said...

சரவணா, மிகவும் நன்றாக உங்கள் நட்பை எழுதியிருக்கிறீர்கள். இதே போல இன்னும் பலருடனும் உங்களுக்கு நட்பிருக்கலாம், அவர்களைப் பற்றி எழுதுவதுடன் அவர்களுக்கு வலையுலகையும் அறிமுகம் செய்யவும்.
பாராட்டுகள்.]]]

நிச்சயம் எழுதுகிறேன் பிரதர்..! வருகைக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[மணி ஜி. said...

ஜெகநாதன் சாருக்கு என் அஞ்சலிகள்.. இந்த கட்டுரை இன்னொரு முத்து அண்ணே!! அருமையான எழுத்தஞ்சலி..]]]

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க..! நன்றிண்ணே..! ஆனாலும் நீ அவரிடம் பேசிப் பழகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..! உன் சினிமா அனுபவத்தில் அவரை நிச்சயம் சந்தித்திருப்பாய் என்றே நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

ஓரிரு வருடங்களுக்கு முன்னர் உங்களால் நானும் ஏ.ஜகந்நாதன் அவர்களை வுட்லண்ட்ஸ் சிம்பனியில், உலகத் திரைப்பட விழாவில் சந்திக்க முடிந்தது; பேச முடிந்தது. அவசியம் நீங்கள் அவர் குறித்த நினைவுகளுடன், அஞ்சலி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஒரு திறமையான இயக்குனருக்கும், நல்ல மனிதருக்கும் அருமையாகப் புகழ்மாலை அணிவித்து அஞ்சலி செய்திருக்கிறீர்கள்!]]]

இந்த வருட உலகத் திரைப்பட விழா என்னைப் பொறுத்தவரை வேதனையுடன்தான் துவங்கப் போகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[கவிப்ரியன் said...

மிக அருமையான அஞ்சலி கட்டுரை! நிறைய அறிந்திராத தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி நண்பரே!]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..!

Nakkiran said...

arumai sir.. Jaganathan Saarukku uyariya mariyathai thanthathu intha katturai

Anonymous said...

His son and I studied engg together..i will forward this article to him..

உண்மைத்தமிழன் said...

[[[Nakkiran said...

arumai sir.. Jaganathan Saarukku uyariya mariyathai thanthathu intha katturai.]]]

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நக்கீரன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ramesh said...

His son and I studied engg together.. i will forward this article to him..]]]

தங்களுடைய உதவிக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

butterfly Surya said...

அந்த மாபெரும் இயக்குநருக்கு அஞ்சலி.

நெகிழ்ச்சியான பதிவு.
நெரேட்டிங் ரைட்டப்ல உன்ன அடிச்சிக்க ஆளே இல்லைண்ணே..


Unknown said...

நல்ல கட்டுரை சார். மிக முக்கியமானதும் கூட.. இயக்குனரைப் பற்றி தெரிந்துக் கொள்ள மிக உதவியாகிருக்கிறது. நன்றி

Ganpat said...

பல பதிவர்கள் தாம் மூளையால் பதிவுகள் எழுதுகின்றனர்.ஆனால் இதயத்தால் பதிவு எழுதும் குறைந்த சில பதிவர்களில் நீவிர் முக்கியமனாவர்.
எந்த சொல் அலங்காரமோ,உயர்வு நவிற்சியோ,தூற்றுதலோ அற்ற இந்த பதிவு, ஒரு ஆத்மார்ந்த அஞ்சலி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு.
உங்கள் எழுத்துக்களில் உள்ள இந்த ஈரம்,படித்து முடிக்கும்போது எப்படியோ எங்கள் கண்களுக்கு வந்து விடுகிறது.
என்னைப்பொறுத்தவரை உண்மையான, அன்பான, துவேஷமற்ற எழுத்துக்கள் எல்லாம் இலக்கியமே.நீங்கள் அவ்வகையில் ஒரு இலக்கியவாதி.

RP RAJANAYAHEM said...

உண்மைத்தமிழன்!
இந்த பதிவு என்னை செயலோயச்செய்து விட்டது.
சம்பிரதாயமாக பாராட்ட விரும்பவில்லை.
உங்களுக்குத் தெரியுமா? ஜகன்னாதன் சாரை சென்னையில் எப்போதுமே அவர் நடந்து வரும்போது தான் பார்த்திருக்கிறேன். திருப்பூரில் 2009ல் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் காய்கறி செக்சனில் சந்தித்துப் பேசினேன்.

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...

அந்த மாபெரும் இயக்குநருக்கு அஞ்சலி.
நெகிழ்ச்சியான பதிவு. நெரேட்டிங் ரைட்டப்ல உன்ன அடிச்சிக்க ஆளே இல்லைண்ணே..]]]

நன்றி பிரதர்..! எப்பவுமே லேட்டாத்தான வருவியா..? அப்படி என்னய்யா வேலை பார்க்குறீரு..?

உண்மைத்தமிழன் said...

[[[Armstrong Vijay said...

நல்ல கட்டுரை சார். மிக முக்கியமானதும் கூட.. இயக்குனரைப் பற்றி தெரிந்து கொள்ள மிக உதவியாகிருக்கிறது. நன்றி.]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

பல பதிவர்கள்தாம் மூளையால் பதிவுகள் எழுதுகின்றனர். ஆனால் இதயத்தால் பதிவு எழுதும் குறைந்த சில பதிவர்களில் நீவிர் முக்கியமனாவர். எந்த சொல் அலங்காரமோ, உயர்வு நவிற்சியோ, தூற்றுதலோ அற்ற இந்த பதிவு. ஒரு ஆத்மார்ந்த அஞ்சலி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. உங்கள் எழுத்துக்களில் உள்ள இந்த ஈரம், படித்து முடிக்கும்போது எப்படியோ எங்கள் கண்களுக்கு வந்து விடுகிறது. என்னைப் பொறுத்தவரை உண்மையான, அன்பான, துவேஷமற்ற எழுத்துக்கள் எல்லாம் இலக்கியமே. நீங்கள் அவ்வகையில் ஒரு இலக்கியவாதி.]]]

ஐயையோ.. இது ரொம்ப ஓவரா இருக்கே கண்பத் அண்ணே.. ஏதோ எனக்குத் தெரிஞ்சதை தெரிஞ்ச மொழில எழுதுறேன்.. அதுக்குப் போய் ஏன் இத்தனை பெரிய, பெரிய வார்த்தைகள்..? இவரைப் பற்றிய செய்திகளை பதிவு செய்யவில்லையெனில் அது நான் கொண்டிருந்த நட்புக்கே துரோகம் செய்வது போலாகும்.. அதனால்தான் இத்தனை முனைப்போடு எழுதியிருக்கிறேன்..! நன்றிண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[RP RAJANAYAHEM said...

உண்மைத்தமிழன்! இந்த பதிவு என்னை செயலோயச் செய்து விட்டது. சம்பிரதாயமாக பாராட்ட விரும்பவில்லை. உங்களுக்குத் தெரியுமா? ஜகன்னாதன் சாரை சென்னையில் எப்போதுமே அவர் நடந்து வரும்போதுதான் பார்த்திருக்கிறேன். திருப்பூரில் 2009-ல் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் காய்கறி செக்சனில் சந்தித்துப் பேசினேன்.]]]

ராஜநாயகம் அண்ணனின் முதல் வருகைக்கு எனது தலை சாய்ந்த நன்றிகள்..!

ஜெகன்னாதன் ஸார், மிக எளிமையான மனிதர்.. பழகுவதற்கும் இனிமையான மனிதர்.. அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டியவர்.. புகழ் வெளிச்சத்தை அவர் எப்போது நாடியதில்லை. ஆதலால் அவரைப் பற்றி அதிகம் தெரியாமல் தெரியாமல் போய்விட்டது..! நானும் எழுதலைன்னா எப்படிங்கண்ணா..?

அடிக்கடி வாங்கண்ணே..!

Paleo God said...

படிச்சி முடிச்சதும் மனசு என்னமோ போல ஆகிடுச்சிண்ணே :((

நெகிழ்ச்சியான அஞ்சலி!

பெரியவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

CS. Mohan Kumar said...

அண்ணே இன்னிக்கு தான் பொறுமையா முழுசா படிச்சேன். என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயங்கள் அவருடன்
உங்களுக்கிருந்த நெருக்கமான நட்பும் அவரின் எளிமையும் !

நல்லதொரு அஞ்சலி கட்டுரையாக இது அமைந்து விட்டது

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்

உண்மைத்தமிழன் said...

[[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

படிச்சி முடிச்சதும் மனசு என்னமோ போல ஆகிடுச்சிண்ணே :((
நெகிழ்ச்சியான அஞ்சலி! பெரியவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.]]]

வருகைக்கு நன்றி ஷங்கர்..! நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லையே என்று எனக்குள் இப்போதும் வருத்தமாக இருக்கிறது பபாஷா..!

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

அண்ணே இன்னிக்குதான் பொறுமையா முழுசா படிச்சேன். என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயங்கள் அவருடன்
உங்களுக்கிருந்த நெருக்கமான நட்பும் அவரின் எளிமையும்! நல்லதொரு அஞ்சலி கட்டுரையாக இது அமைந்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.]]]

நன்றி மோகன்குமார்..!