கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்


21-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..! 
 

பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும்தான் ஹாலிவுட்டை காப்பியடிக்குமா..? நாங்க எல்லாம் செய்ய மாட்டோமா என்று இந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளரும், இயக்குநரும் யோசித்து எடுத்த படம் இது..!

ஐந்து வெவ்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இறுதியில் ஓரிடத்தில் சந்திக்கும் சூழலில் அனைவருக்கும் பொதுவான முடிவு கிளைமாக்ஸில் கிடை(ந)டக்கிறது..! இதுதான் கதை..!

 
காதலித்து ஏமாற்றும் பெண்கள் மீதெல்லாம் கோபம் கொள்ளும் ஹீரோ.. தன் நண்பனை அவமானப்படுத்திய பெண்ணை எப்படியாவது தன்னுடன் காதலில் விழ வைத்து பின்பு அவளை அவமானப்படுத்தி காட்டுகிறேன் என்று ஒற்றைக் காலில் நின்று அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்..!

நாமக்கல்லில் லாரி டிரைவராக இருக்கும் ஒருவர், ரோட்டார குஜிலிகளிடம் சென்று எய்ட்ஸ் நோயை பரிசாக வாங்கி வருகிறார்.. மனைவிக்கும் இது தெரிய வர.. இவரது குடும்ப வாழ்க்கையில் விரிசல்..! “உறை” போட்டாவது வேலையை முடிக்க எண்ணும் கணவனை பக்கத்திலேயே நெருங்க விட மறுக்கிறாள் மனைவி.. கடுப்பில் இருக்கிறார் லாரி டிரைவர் ராஜாகண்ணு..!

ஆந்திரா பார்டரில் இருக்கும் முறுக்கு தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் சிறுவர்கள், அதை நடத்தும் ரவுடி அக்கா ஒருவரின் சித்ரவதையை சந்தித்து வருகிறார்கள். இதில் இருந்து தப்பிக்க முயல்கிறார்கள்..!

பணம் கொடுத்தால் எதையும் முடிக்கும் வில்லன் ஒருவன், முடி வெட்ட கடைக்கு வரும் பலிகடாவையே ஷேவிங் செய்பவன்போல போட்டுத் தள்ளிவிட்டு போகிறான்.. இவனிடம் தனது கலப்படத் தொழில் பற்றி போலீஸுக்கு போக ரெடியாக இருக்கும் ஒருவனை போட்டுத் தள்ளும் அஸைண்மெண்ட் தரப்படுகிறது..!

பொய்யைத் தவிர வேறு எதையும் சொல்ல விரும்பாமலும், உழைக்கப் பிடிக்காமல் பக்கத்து வீட்டு தங்கச்சியிடம் பாசம் காட்டி காசை அடிக்கும் குடிகார தம்பியொருவன், ஒரு முறை பணம் கொடுக்கவில்லையென்பதற்காக அந்த வீட்டு குழந்தையை கடத்திக் கொண்டு போய் பணம் கேட்கிறான்..

இப்படி இந்த 5 கதைகளையும் இறுதியில் ஒன்றாகச் சேர்த்து வைத்து, தற்செயலாக குற்றவாளிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பரலோகம் போவது போல போக வைத்து.. குற்றம் செய்தவன் எப்படியும் தண்டனை பெற்றே தீருவான் என்பதுபோல முடித்திருக்கிறார்கள்..!  ம்ஹூம்.. ஏதோ பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே முடிந்த விஷயத்தை கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த அளவுக்காச்சும் எடுத்திருக்கிறார்களே  என்று சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்..!

நடிப்பையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆவாது..! ஹீரோ, ஹீரோயின்ஸுக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம்..! இயக்கமே கொஞ்சூண்டுதான் என்பதால் அவர்களையும் குத்தம் சொல்லி புண்ணியமில்லை. ஆனாலும் ஹீரோயினின் அப்பாவை மடக்க அவருக்கு தண்ணி வாங்கிக் கொடுத்து "மாமா" என்பதும், நிதானத்தில் இருக்கும்போது "என்ன மாமா மறந்துட்டீங்களே..?" என்று கலாய்ப்பதும் சுவாரசியமாகவே இருக்கிறது..!

 

இருப்பதிலேயே எனக்கு பிடித்த போர்ஷனாக இருந்த்து நாமக்கல் லாரி டிரைவரின் சீக்ரெட் லைப்.. பாவம்.. அதுக்கும் முடியாம.. இதுக்கும் முடியாம அவர் படுற பாடு.. இதுல பொண்டாட்டி குளிச்சிட்டு பாவாடையோட வந்து நிக்குற கோலத்தை பார்த்தும் ஒண்ணும் செய்ய முடியாம தவிக்கிறது.. முயற்சி செஞ்சு மூக்குடைபட்டு அங்கலாய்க்கிறதுமா.. பாவமா இருந்தாரு இவரு..!

குழந்தையைக் கடத்திட்டு போற போர்ஷனில் நடிகர்களும், நடிப்பும் செமையான அக்கப்போர்..! பதட்டத்தை கூட்டுறேன்னு சொல்லி நமக்கு இன்னுமா படம் முடியலைன்னு டென்ஷனைத்தான் கூட்டிட்டாங்க..!

ஹீரோ, ஹீரோயினை பிரெண்ட் வீட்டுக்குத் தள்ளிட்டுப் போய் காந்தர்வ மணத்திற்கு முயலும்போது தப்பிக்குற ஹீரோயினுக்கு இப்போ ஹீரோ கெட்டவனா தெரியலையா..? அவன் தன்னை ஏமாத்துறதுக்குத்தான் பழகுறான்னு தெரிஞ்ச பின்னாடி அவனை விட்டு விலகுறேன்னு சொல்றது கொஞ்சம் லாஜிக் மிஸ்டேக்கா இருக்கு டைரக்டர் ஸார்..!

ஹீரோயினை துவக்கத்துல கொஞ்ச நேரத்துக்கு சைவப் பட்சியா காண்பிச்சிட்டு அப்புறம் மேல் போகப் போக அசைவமா காண்பிக்க வைச்சு.. அவரும் தன்னால முடிஞ்ச அளவுக்கு காட்டியிருக்காரு.. இடைல குத்துப் பாட்டு ரசிகர்களுக்காக ஒரு தெருவோர குத்துப் பாட்டு.. பாட்டையும், டான்ஸையும்விட ஆடுற பொண்ணு அசத்தல்..! பேசாம இந்தப் பொண்ணையே ஹீரோயினா போட்டிருக்கலாம்..!

அதெப்படி கிளைமாக்ஸ்ல குண்டெல்லாம் கரெக்ட்டா குற்றவாளிகள் மேலேயே படுதுன்றதுக்கு இயக்குநர்கிட்டதான் கேள்வி கேக்கணும்ன்றதால இதையும் லூஸ்ல விடுவோம்..! ஆனாலும், சுமாரான இயக்கம்.. சுமாரான நடிப்பு.. ஓய்ந்து போன இசை.. இதை வைத்தே படத்தை எடுத்து முடித்திருக்கும் இயக்குநரின் திறமைக்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போட வேண்டும்..!

என்னமோ.. எந்தக் கதையை வைச்சாவது படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணிட்டாலே போதும்ன்ற லெவல்ல தயாரிப்பாளர்கள் இருக்கும்போது, எப்படியாச்சும் இயக்கம் என்பதற்குக் கீழே தங்களது பெயரை கொண்டு வரத் துடிக்கும் இயக்குநர்களைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..? ஒரு வாரம் ஓடும்ன்னு நினைக்கிறேன்..! என்னிக்காச்சும் டிவில போடும்போது அவசியம் பாருங்க..!

9 comments:

உண்மைத்தமிழன் said...

1002 பேர் இதுவரைக்கும் படிச்சிருக்காங்க.. ஒருத்தருக்குக் கூடவா பின்னூட்டம் போடணும்னு தோணலை..? என்ன கொடுமை சரவணா இது..?

துபாய் ராஜா said...

கேட்டதுக்காக இந்த பின்னூட்டம்... :))

”தளிர் சுரேஷ்” said...

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையா ரீலீஸ் பண்ண எடுத்த படம் போல இருக்கு பொறுமையா விமர்சனம் செய்தமைக்கு நன்றி!

குடுகுடுப்பை said...

இயக்குனர் மணிவாசகம் எங்க ஊர்.

உண்மைத்தமிழன் said...

[[[துபாய் ராஜா said...

கேட்டதுக்காக இந்த பின்னூட்டம்... :))]]]

நாலு வார்த்தை திட்டியாவது எழுதக் கூடாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையா ரீலீஸ் பண்ண எடுத்த படம் போல இருக்கு.. பொறுமையா விமர்சனம் செய்தமைக்கு நன்றி!]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் சுரேஷ் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[குடுகுடுப்பை said...

இயக்குனர் மணிவாசகம் எங்க ஊர்.]]]

எந்த ஊருங்கண்ணா..?

வவ்வால் said...

அண்ணாச்சி,

//நாலு வார்த்தை திட்டியாவது எழுதக் கூடாதா..?//

நாலு வார்த்தை கூடுதலா சொல்லிட்டாலே திட்டுறாங்கன்னு சொல்லுறான்ங்க, இதில நாலு வார்த்தை திட்டி வேற எழுதனுமா :-))

கோயம்பேடு பேருந்து நிலையம் ,அடுத்து சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் என படம் வருமா?

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

//நாலு வார்த்தை திட்டியாவது எழுதக் கூடாதா..?//

நாலு வார்த்தை கூடுதலா சொல்லிட்டாலே திட்டுறாங்கன்னு சொல்லுறான்ங்க, இதில நாலு வார்த்தை திட்டி வேற எழுதனுமா :-))]]]

என்னைய திட்டுண்ணே.. நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்..!

[[[கோயம்பேடு பேருந்து நிலையம் , அடுத்து சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் என படம் வருமா?]]]

சென்னை சென்ட்ரல்ன்னு வேண்ணா வரலாம்..!