கலகலப்பு-சினிமா விமர்சனம்

13-05-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படம் 2009-ம் ஆண்டு வெளியான SOUL KITCHEN என்னும் ஜெர்மானிய திரைப்படத்தின் தமிழ் ரீமேக். இது குறித்து மேலும் அறிய இங்கே செல்லவும்.


அக்மார்க் சுந்தர்.சி.யின் படம்தான். படத்தின் தலைப்புக்கேற்ப கலகலப்பான படம்தான். சந்தேகமில்லை. லாஜிக்கையெல்லாம் பார்க்காமல் இரண்டரை மணி நேரத்தில் முக்கால்வாசி நேரம் சிரித்துவிட்டு வரலாம்..!


கும்பகோணத்தில் 3 தலைமுறையாக நடத்தப்பட்டு தற்போது மூடுவிழா காணும் நிலையில் இருக்கும் மசாலா கபே என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார் விமல். கொஞ்சம் நேர்மையாளன்.. இவரது தம்பி சிவா. அண்ணனுக்கு நேரெதிர்.  அந்த ஹோட்டலில் சுகாதாரமில்லை என்று சொல்லி நோட்டீஸ் அனுப்பும் நகராட்சி ஹெல்த் இன்ஸ்பெக்டர் அஞ்சலியை முதலில் ஜொள்ளுவிட்டு, பின்பு லொள்ளு செய்து, கரெக்ட் செய்கிறார் விமல். அப்போதுதான் ஜெயிலுக்கு இன்பச் சுற்றுலா சென்றுவிட்டு அடுத்த டூட்டிக்காக வெளியில் வந்திருக்கும் சிவா, நேரே ஹோட்டலுக்கு வர, அங்கேயிருக்கும் தலைமை சமையற்காரர் வி.எஸ்.ராகவனின் பேத்தி ஓவியாவை சைட் அடித்து பிக்கப் செய்கிறார்..!

விமலுக்கு கடன் கொடுத்தே ஓய்ஞ்சு போயிருக்கும் இளவரசு ஒரு பக்கம் விமலை துரத்திக் கொண்டிருக்கிறார். ஹோட்டல் இருக்கும் இடத்தை விலைக்குக் கேட்கும் நகைக்கடைக்காரர், லோக்கல் இன்ஸ்பெக்டர் மூலம் காய் நகர்த்துகிறார். ஊரில் இருக்கும் தனது தாத்தா மண்டையைப் போடும் சூழலில் இருப்பதால் தனக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதால் உடனே வந்து என்னை தள்ளிக் கொண்டு போகும்படி அஞ்சலி விமலை அழைக்கிறார்.

அஞ்சலியை கட்ட நினைக்கும் முறைமாமன் சந்தானத்தை முதலில் காக்கா பிடித்து, பின்பு உண்மை தெரிந்து தப்பிக்க முயன்று முடியாமல், தாத்தாவும் செத்துப் போக நொந்து போய் ஊர் திரும்புகிறார் விமல். இந்த இடைவெளியில் லோக்கல் இன்ஸ்பெக்டர் மங்காத்தா ஆட்டத்தில் ஹோட்டல் இடத்தை சிவாவிடம் இருந்து தட்டிப் பறிக்கிறார். 

இதற்கிடையில் பஞ்சு சிவா, தனது நகைக்கடையில் இருந்த வைரங்களை சேப்டியாக பத்திரப்படுத்திவிட்டு கடையை கொளுத்திவிடுகிறார். இன்சூரன்ஸ் கிடைக்கும்வரையில் பணம் பத்திரமாக இருக்கட்டுமே என்று சொல்லி தனது வீணாப் போன மச்சினனிடம் கொடுத்து கும்பகோணத்துக்கு அனுப்ப, அந்த வைரம் அடங்கிய செல்போன் ஒரு கட்டத்தில் விமல்-சிவாவிடம் வந்து மாட்டுகிறது. இந்த விஷயமும் இன்ஸ்பெக்டருக்கு தெரிய வர அவரும் வைரத்தை ஆட்டையப் போட நினைக்கிறார்.  இரட்டையர்கள் ஹோட்டலை மீட்டார்களா..? வைரத்தின் கதி என்ன என்பதைத்தான் சுவையான திரைக்கதையின் மூலமாக போரடிக்காமல் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. 

முதல் சில நிமிடங்கள்வரையிலும் படம் மெதுவாகத்தான் நகர்கிறது.. அதிலும் ஓவியாவின் அறிமுகமும் சப்பென்று இருக்க.. என்னடா இது என்று முணுமுணுக்க வைத்தது. மிர்ச்சி சிவாவின் என்ட்ரியும், அதனைத் தொடர்ந்த காட்சியிலேயே இளவரசுவை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மாட்டிவிடும் காட்சியில் தொடங்கும் கலாட்டா கலகலப்பு.. இறுதிவரையில் அவ்வப்போது வந்து, வந்து போய்க் கொண்டு படத்தை நிறைவு செய்துவிட்டது..!

விமலுக்கு வழக்கம்போல இயல்பான நடிப்புதான்..! உணர்ச்சிகரமாக இவர் நடிக்க வாய்ப்பே இல்லை என்னும்போது இது போன்று நடிப்பு தேவையில்லாத கேரக்டரில் வெளுத்துக் கட்டிவிட்டு போய்விடுவதே சாலச் சிறந்தது..! விமலுக்கு இருக்கும் இன்னொரு பிளஸ் பாயிண்ட் சாதாரணமாகவே காமெடி டைமிங்சென்ஸ் மிகச் சரியாக வருகிறது.. இதையே பாலோ செய்துவிட்டு போக வேண்டியதுதான்..!

மிர்ச்சி சிவாவின் அட்டூழியம்தான் சந்தானம் வரும்வரையிலும் படத்தில் ஒன்ற வைத்தது..! வந்த முதல் நாளே ஓவியாவுக்கு ரூட்டு விடுவதில் துவங்கி, ஓவியாவுக்காக பர்தா அணிந்து கடையில் புகுந்து ஆட்டையைப் போடும் காட்சி, ஹோட்டலை நவீனப்படுத்தப் போவதாகச் சொல்லி பழமையான உணவு வகைகளுக்காக கடையை கொள்ளையடிப்பது.. இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அவர் பேசும் டைமிங் டயலாக்குகள் குபீர் சிரிப்பு ரகம்..!

இருந்தாலும் பல இடங்களிலும் இருந்த இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் அவைகள் இல்லாமல் இருந்திருந்தாலும் படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..! அதிலும் ஓவியாவிடம் சைஸ் கேட்கும் காட்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயக்குநர் சுந்தர்.சி.க்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இது போன்ற காட்சியமைப்புகளை வைப்பதற்கு முன்பு அதனை அவர் சற்று யோசித்திருக்கலாம்..! பேட் டேஸ்ட் சுந்தர் ஸார்..!

ஓவியாவும், அஞ்சலியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தும் இருக்கிறார்கள். 'காட்டி'யும் இருக்கிறார்கள்..! இரண்டு நடிகைகள் ஒரு படத்தில் நடிக்கும்போது, இப்படி, அப்படி நடிக்க வைக்க சித்து விளையாட்டை விளையாடுவார்கள் படக் குழுவினர். ஆனால் அப்படியெதுவும் இல்லாமலேயே இந்த இரண்டு தாரகைகளுமே அந்தப் பாடல் காட்சியின் போது அணிந்திருந்த காஸ்ட்யூம்ஸ்களை தாங்களேதான் தேர்வு செய்தார்களாம்.. இனிமேல் நாம் பேசி பயனில்லை..! இது அவர்களின் பிஸினஸ் பிரச்சினை..! எப்படியாவது டாப் லெவலுக்கு சம்பளத்தை லட்சங்களில் பெற வேண்டும் என்ற அவர்களது ஆசை நிறைவேற வாழ்த்துவோம்..!

ஓவியாவைவிடவும் அஞ்சலி மிகவும் ரசிக்க வைக்கிறார். தான் யார் என்பதை சொல்லாமலேயே விமலிடம் சிக்கிக் கொண்டு தப்பிப்பது.. பின்பு விமலை மடக்குவது என்ற காட்சிகளில் அவரது பார்வை ஒன்று போதும்.. கவிழ்வதற்கு.. விமல் கவிழ்ந்ததில் தப்பில்லை.. சரியான கேரக்டர் ஸ்கெட்ச்.. இதற்கேற்றாற்போல் நடிகர், நடிகைகளை செலக்ட் செய்து ரசிகர்களுக்கு கிக் ஏற்றியிருக்கிறார்கள்..!

இடைவேளைக்குப் பின்பு ஆட்டத்தில் குதிக்கும் சந்தானத்தின் அலப்பறை இறுதிவரையிலும் சக்கை போடு போடுகிறது..! அவருடைய உதவியாளர்களுக்கு வைத்திருக்கும் பட்டப் பெயர்களும்.. சண்டைக்குக் கிளம்பும்போது மாத்திரை போட்டுட்டு வரவா என்று சிரியா மூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும் டயலாக்குகளும்.. மனோபாலாவுடன் அவர் பேசும் எகத்தாள பேச்சுக்களும் செம.. செம..!

அஞ்சலி கை நழுவிய பின்பு அவர் சொல்லும் அந்த மொட்டை மாடி டயலாக் ஏ ஒன்..! படத்தின் டிரெயிலரிலேயே அனைவராலும் ரசிக்கப்பட்டது..! ஆனாலும் இவர் இப்படி வாயை வைத்தே எத்தனை நாளைக்கு குப்பை கொட்ட முடியும் என்பதும் தெரியவில்லை.. வைகைப்புயலின் நீண்ட மெளனத்தில் முத்துக் குளிப்பது சந்தானம் மட்டுமே..! வாழ்க..!

பஞ்சு சுப்புவின் ஆட்கள் இன்னொரு பக்கம் விமல் அண்ட் கோ-வை துரத்த.. இந்த இம்சை தாங்க முடியாமல், போலீஸையும் உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு திரைக்கதையில் பரமபதம் ஆடியிருக்கிறார்கள்.. ஸ்டோரி டிஸ்கஷன் டீமுக்கு எனது பாராட்டுக்கள்..!

பாடல்களில் சந்தேகமே இல்லாமல் இவளுக இம்சை தாங்க முடியலை டாப்புதான்..! ஆனால் பாடல் காட்சிகளே இம்சையாக இருப்பதுதான் கொடுமை..! எப்படியோ இளசுகளை சிக்க வைத்தாகிவிட்டது.. வசூலை அள்ளிவிடுவார்கள்..!

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் இப்படியொரு மோசம்  இருக்கும் என்று நான் நினைக்கவில்லை..! என்னதான் டைட் ஷெட்யூல் என்றாலும் அதற்காக நைட் எபெக்ட் காட்சிகளை இப்படி பகலில் எடுத்து லைட்டை குறைத்து ஷோ காட்டுவது..? எத்தனை படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்..? கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா..? ஒரே நாள் இரவில் அனைத்தையும் எடுத்திருக்கலாமே..? ஆனாலும் அஞ்சலி தப்பிக்க நினைக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து கார் சேஸிங் காட்சிகளும் நல்ல நகைச்சுவையைத் தந்தன..!

பொதுவாகவே சுந்தர் சியின் படங்களில் ஒரே வீட்டில் பலரும் கைகளில் தடியுடன் சுற்றி சுற்றி வருவார்கள். இதில் கொஞ்சம் வித்தியாசமாக காரில் பவனி வர வைத்திருக்கிறார்.. வெல்டன்..!

சுந்தர் சி.க்கு இது 25-வது படம். வாழ்த்துகள்.. நான் முன்பே குறிப்பிட்ட அந்த ஆபாச வசனங்களை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால், இது நல்ல காமெடி படம்தான்..! சந்தேகமேயில்லை..! சுந்தர் சி.க்கு இப்படம் பொருளாதார ரீதியாகவும், கோடியில் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. வெறுமனே "யு" சர்டிபிகேட் மட்டும் வாங்கியிருந்தால், கூடுதல் வரியையும் சேர்த்து சம்பாதித்திருக்கலாம்..! ம்.. போகட்டும்.. அடுத்தப் படத்தில் பார்த்துக் கொள்ளலாம்..!

சுந்தர் சி. நடிக்கப் போகாமல், இது போன்று திரும்பவும் படங்களை இயக்கத் துவங்கினால், காமெடியை விரும்பும் ரசிகர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்..!

கலகலப்பு உண்மையாகவே கலகலப்புதான்..! 



16 comments:

ராம்ஜி_யாஹூ said...

இரட்டை அர்த்த வசனங்களுக்கு வசன கர்த்தா வைக் குறை சொல்லாமல்
குஷ்பூவின் கணவரைக் குறை கூறுவது
எந்த வகை நியாயம்

ராம்ஜி_யாஹூ said...

சைஸ் கேட்பது
சிவாஜி தி பாஸ் படத்திலேயே உண்டே

சுஜாதா ஷங்கர் ரஜினி ஏவி எம் தயாரிப்பிலேயே

MARI The Great said...

ரைட்டு, படத்தை பார்த்திருவோம் ..!

Subramanian said...

Dear UT,

Somehow I could rarely find anything funny in this film. I dont think it is my lack of humour sense. I watched for nearly 1.15 minutes and there was not anything funny in this movie.I think a lot of people will agree with my view.

மணிஜி said...

//இருந்தாலும் பல இடங்களிலும் இருந்த இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் அவைகள் இல்லாமல் இருந்திருந்தாலும் படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..! அதிலும் ஓவியாவிடம் சைஸ் கேட்கும் காட்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயக்குநர் சுந்தர்.சி.க்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இது போன்ற காட்சியமைப்புகளை வைப்பதற்கு முன்பு அதனை அவர் சற்று யோசித்திருக்கலாம்..! பேட் டேஸ்ட் சுந்தர் ஸார்..!

அண்ணே..வசனம் எழுதியது கேபிள்..அவருக்கு ரெண்டும் ஆண் குழந்தைகள்தான்:-)

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

இரட்டை அர்த்த வசனங்களுக்கு வசனகர்த்தாவைக் குறை சொல்லாமல்
குஷ்பூவின் கணவரைக் குறை கூறுவது
எந்த வகை நியாயம்..?]]]

வசனகர்த்தா எழுதினாலும் அதனை வைத்துக் கொள்வதும், நிராகரிப்பதும் இயக்குநரின் உரிமையாச்சே.. அவரது அனுமதியில்லாமல் அது படமாகாதே..?

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

சைஸ் கேட்பது, சிவாஜி தி பாஸ் படத்திலேயே உண்டே.. சுஜாதா-ஷங்கர் ரஜினி ஏவி.எம். தயாரிப்பிலேயே..]]]

இதுக்கும் முன்னாடி எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலேயே அது இடம் பெற்றுள்ளது என்பதும் தெரிஞ்சதுதாண்ணே..! அதுக்காக நம்ம கடமையை ஆத்தாம இருக்க முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[வரலாற்று சுவடுகள் said...

ரைட்டு, படத்தை பார்த்திருவோம்..!]]]

பாருங்க ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Subramanian said...

Dear UT, Somehow I could rarely find anything funny in this film. I dont think it is my lack of humour sense. I watched for nearly 1.15 minutes and there was not anything funny in this movie. I think a lot of people will agree with my view.]]]

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம்..! இதைத்தான் என்னால் சொல்ல முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[மணி ஜி. said...

//இருந்தாலும் பல இடங்களிலும் இருந்த இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் அவைகள் இல்லாமல் இருந்திருந்தாலும் படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..! அதிலும் ஓவியாவிடம் சைஸ் கேட்கும் காட்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயக்குநர் சுந்தர்.சி.க்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இது போன்ற காட்சியமைப்புகளை வைப்பதற்கு முன்பு அதனை அவர் சற்று யோசித்திருக்கலாம்..! பேட் டேஸ்ட் சுந்தர் ஸார்..!

அண்ணே வசனம் எழுதியது கேபிள்.. அவருக்கு ரெண்டும் ஆண் குழந்தைகள்தான்:-)]]]

ஓ.. அப்போ அந்த "நெருங்கிய" நட்பு வட்டாரம் நீர்தானா..? உமக்கு ஏன்யா இவ்வளவு வயித்தெரிச்சலு..?

நிலவகன் said...

//இருந்தாலும் பல இடங்களிலும் இருந்த இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் அவைகள் இல்லாமல் இருந்திருந்தாலும் படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..! அதிலும் ஓவியாவிடம் சைஸ் கேட்கும் காட்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயக்குநர் சுந்தர்.சி.க்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இது போன்ற காட்சியமைப்புகளை வைப்பதற்கு முன்பு அதனை அவர் சற்று யோசித்திருக்கலாம்..! பேட் டேஸ்ட் சுந்தர் ஸார்..!

இதை நீங்க எழுதினதில் எந்த உல் நோக்கமும் இல்லைதானே

உண்மைத்தமிழன் said...

[[[வசந்திரன் said...

//இருந்தாலும் பல இடங்களிலும் இருந்த இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் அவைகள் இல்லாமல் இருந்திருந்தாலும் படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..! அதிலும் ஓவியாவிடம் சைஸ் கேட்கும் காட்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயக்குநர் சுந்தர்.சி.க்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இது போன்ற காட்சியமைப்புகளை வைப்பதற்கு முன்பு அதனை அவர் சற்று யோசித்திருக்கலாம்..! பேட் டேஸ்ட் சுந்தர் ஸார்..!

இதை நீங்க எழுதினதில் எந்த உல் நோக்கமும் இல்லைதானே..]]]

இதுல என்ன உள் நோக்கம் இருக்க முடியும் ஸார்..?

குரங்குபெடல் said...

வரி விலக்கின் பலன்கள்

படம் பாக்குறவங்களுக்கு கிடைக்கணும் . .

ஆனா அது இந்த மாதிரி தேவையில்லாமல் வெளிவருகிற பட ஓனர்களுக்கு

கிடைக்கணும் னு தொடர்ச்சியா போராடுற

உமது புரட்சி போராட்டம்

வெல்ல வாழ்துக்கள் ! ?

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

வரி விலக்கின் பலன்கள் படம் பாக்குறவங்களுக்கு கிடைக்கணும்.
ஆனா அது இந்த மாதிரி தேவையில்லாமல் வெளிவருகிற பட ஓனர்களுக்கு கிடைக்கணும்னு தொடர்ச்சியா போராடுற உமது புரட்சி போராட்டம் வெல்ல வாழ்துக்கள்!?]]]

வரி விலக்கின் பலன்கள் தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்து அதன் மூலம் அடுத்தப் படத் தயாரிப்புகளை அவர்கள் தொடர்ந்து அத்துறை தொடர்ந்து சுழற்சியாக நடைபெற வேண்டும்..

இதற்காகத்தான் இந்த வரிவிலக்கு..!

நையாண்டி நைனா said...

அண்ணே என்னண்ணே பொசுக்குன்னு முடுச்சிபுட்டீங்க.

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...

அண்ணே என்னண்ணே பொசுக்குன்னு முடுச்சிபுட்டீங்க.]]]

போதும்பா.. மிச்சத்தை தியேட்டர்ல போயி பாருங்க..!