சாட்டை - சினிமா விமர்சனம்

23-09-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமூக அக்கறையுடன், தமிழ்ச் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வந்திருக்கும் படம் இந்த சாட்டை..! முதல் நன்றி பிரபு சாலமனுக்கு.. இப்படியொரு அற்புதமான படத்தினை தயாரித்தமைக்கும்.. தனது சீடனுக்கு, புதுமுக இயக்குநருக்கு வாய்ப்புக் கொடுத்தமைக்கும்..!


 
ஒழுக்கம், கட்டுப்பாடு, படிப்பு இது எதுவுமே இல்லாத திருவண்ணாமலை வந்தாரங்குடி அரசுப் பள்ளிக்கு மாற்றலாகிவரும் அறிவியல் ஆசிரியர் தயாளன், மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் பள்ளியைத் தலைகீழாகப் புரட்டி.. ஆசிரியர்கள், மாணவர்கள் துணையுடன் பள்ளியை முன்னணிக்கு கொண்டு வருவதுதான் இந்தச் சாட்டை..!

சிறந்த திரைக்கதையுடன், கொஞ்சம் நாம் பார்த்து பழகிப் போன சீரியல் டைப் காட்சிகளுடனும், தேர்ந்த நடிப்புடனும் இந்தச் சாட்டை பலருக்கும் எதிராக தனது சாட்டையைச் சுழற்றியிருக்கிறது..!

வட்டிப் பணம் தராதவர்கள் என்று நோட்டீஸ் போர்டில் எழுதி ஒட்டி வைக்கும் அளவுக்கு தரம் கெட்டுப் போயிருக்கும் பள்ளி என்பதை கனி வரும் முதல் காட்சியிலேயே உணர்த்திவிட்டார் இயக்குநர்.. பள்ளியின் அலங்கோல நிலை.. கக்கூஸின் அவலம்.. மாணவர்களின் தறிகெட்டத்தனம்.. ஆசிரியர்களின் பொறுப்பின்மை என்று வரிசையாக பலவும் இருப்பதை சில குறிப்புகள் மூலமாகவே உணர்த்திவிட்டு மிக வேகமாக தயாளனை பேச வைத்திருக்கும் அந்த்த் திரைக்கதையை படம் முடிந்த பின்புதான் யோசிக்கவே முடிந்தது..!

தனது முதல் கூட்டத்திலேயே தயாளன் அந்தப் பள்ளியைப் பற்றிப் பேசுவதும்.. தயாளனின் அறிமுகத்திலும், பேச்சிலுமே ஹெட்மாஸ்டர் ஜூனியர் பாலையா, தயாளன் மீது தனது பார்வையைச் செலுத்துவதும் சீரியல் டைப் காட்சிகள்தான் என்றாலும், கதையின் ஓட்டத்தில் எதுவுமே தெரியவில்லை..!

சமுத்திரக்கனி அலட்டல் இல்லாமல் வெகு இயல்பாக தனது கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..! ஒரு ஆசிரியருக்கு முதல் தேவை நல்ல குரல்.. கம்பீரமான தோற்றம்.. உறுதியான பார்வை.. இவை மூன்றுமே கனியிடமிருந்து இயக்குநருக்கு கிடைத்திருக்கிறது..!

தம்பி ராமையா போன்ற வாத்தியார்கள் இன்றைக்கும் தனியார் பள்ளிகளில்கூட இருக்கிறார்கள்..! “படிச்சா படி.. படிக்காட்டி போ..” என்று சொல்லும் இந்த அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் அந்தக் கேரக்டருக்கு தம்பி ராமையாவை விட்டால் வேறு யார் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை.. ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தலாமா வேண்டாமா என்ற மீட்டிங்கில் இரண்டு கைகளையும் தேய்த்துக் கொண்டு ஒரு ஆக்சன் கொடுக்கிறார் பாருங்கள்.. ஹாட்ஸ் அப்.. அசத்தல்..!

டயலாக் டெலிவரியை டைமிங்காக வெளிப்படுத்தியிருக்கும் இந்தக் காட்சியில் அவருடைய நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங்காக இருந்தாலும் ரசிக்கக் கூடியதே. பள்ளியில் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்தாலும் தனது அடிப்பொடிகளை வைத்து அவர் நடத்தும் வித்தைகள் சுவாரஸ்யமானவை.. தன்னுடைய ஈகோவை ஒரு மனிதன் எப்போதும் கைவிட மாட்டான் என்பதற்கு தம்பி இராமையாவின் கேரக்டரை உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும், கிளைமாக்ஸில் இருக்கும் திடீர் திருப்பம், வழக்கமான சினிமாத்தனமாக திரும்பி அதுவரையிலும் தம்பியின் கேரக்டர் மீதிருந்த ஒரு ஈர்ப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது என்பதும் உண்மை..

பாழாய்ப் போன தமிழ்ச் சினிமாவின் வழக்கப்படி பள்ளியென்றாலும், காதலை காட்டியாக வேண்டுமே என்பதற்காக யுவன், மகிமா காதலையும் காட்டியிருக்கிறார்கள்.  எங்கே இந்த இனக் கவர்ச்சியை காதல் என்று சேர்த்து வைத்துவிடுவார்களோ என்ற பயத்துடன் இருந்தேன்.. நல்லவேளை.. இறுதியில் எந்த முடிவும் சொல்லாமலேயே முடித்துவிட்டார்கள். அதுவரையிலும் சந்தோஷம்தான். ஆனாலும் இவர்களது காதலுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். “காதலிக்கு பிடித்ததுபோல் நடந்து கொள். நல்லா படிச்சாத்தான் அவளுக்குப் புடிக்கும்னா அதையே செய்..” என்கிற சமுத்திரக்கனியின் அட்வைஸ்.. அனைத்து காதல்களுக்கும் பொருத்தமானதுதான்..!

“கபடி கபடியை எழுதி, அதனை படி படி என்று மாற்றுவது.. ஆங்கில வகுப்புகளில் ஆங்கிலம் மட்டுமே பேசிப் பழகுங்கள் என்பது.. தோப்புக்கரணத்தில் இருக்கும் ஒரு அறிவியலை வெளிப்படுத்துவது.. குறைந்த மார்க் எடுத்தாலும், போன தடவைக்கு 2 மார்க் கூடுதல் என்றதால் அதனை பாராட்டுவது.. புத்தகத் திருடன் அட்டையுடன் சுற்றும் மாணவனை அன்புடன் கண்டிப்பது.. லேடீஸ் பாத்ரூமை எட்டிப் பார்த்த குற்றத்திற்காக தண்டனை பெறும் சிறுவனுக்காக பி.டி. டீச்சருடன் சண்டையிடுவது.. சத்துணவை கடத்தும் வாத்தியாரையும், நூலகத்தை திறக்காத நூலகரையும் மீட்டிங்கில் போட்டுத் தாக்குவது.. பாலையா வீட்டில் வைத்து தம்பி இராமையாவை சாத்துவது..” என்று படத்தில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை..!

செய்யாத குற்றத்திற்காக தான் அடி வாங்கியும், மாணவர்களின் எழுச்சியை தடை செய்வது.. மகிமாவின் வீட்டிற்குச்  சென்று அவளை மீண்டும் படிக்க அனுப்பும்படி சொல்வது.. ஒரு பாடல் காட்சியில் மாணவர்களின் மனதில் இடம் பிடிப்பது இதெல்லாம்.. பழமையான சினிமா பாணிதான் என்றாலும்,  வேறு வழியில்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..! கிராமப் புறங்களில் இன்றைக்கும் இந்தக் காதலினால் பல பெண்களின் படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவர்களுடைய வாழ்க்கை திசை திருப்பப்படுகிறது.. குடும்பமே முக்கியம் என்ற சூழலில் இயங்கும் நமது கலாச்சாரம் மாறினால் ஒழிய.. இது போன்ற சம்பவங்களை நிறுத்தவும் முடியாது..!

ஹெட்மாஸ்டர் ஜூனியர் பாலையா, சமுத்திரக்கனியின மனைவி சுவாசிகா, மகிமாவின் அப்பா, மகிமாவைத் தொடும் வாத்தியார், தம்பி இராமையாவின் அல்லக்கை ஆசிரியர்கள்.. மாணவர்களின் காதல் கவிதையை சந்திக்கும் மிடில் ஏஜ் ஆசிரியை.. கோபக்கார பி.டி. டீச்சர், ஸ்கூல் பெஞ்சை வீட்டு விசேஷத்துக்கு எடுத்துச் செல்லும் ஆட்கள்.. என்று பலருமே சுவாரசியமான கேரக்டர்ஸ்..! சுவாசிகா மருத்துவமனை வாசலில் நின்று பேசும் அந்தக் காட்சியும், அதனை எடுத்தவிதமும் நன்று..!

கனியின் இறுதியான முடிவு எதிர்பார்த்துதான் என்றாலும், அதனை வைத்து அவர் பேசும் பேச்சும், அந்தக் காட்சிகளும்.. இடுப்பில் கத்தியுடன் மேடைக்கு வந்து அமரும் தம்பி இராமையாவின் ஆக்சனும், பின்பு அவருடைய மனம் நெகிழ்தலும்.. படத்தின் தன்மையை மாற்றியமைத்தாலும் ஜீரணிக்க வேண்டியதுதான்..!

பள்ளிக்கூடத்தைச் சுற்றியே கதை நகர்ந்தாலும், கொஞ்சமும் சலிப்பு வராத அளவுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்..! யுவன்-மகிமா காதல் காட்சிகளும் படத்தினை வேறு பக்கம் நகர்த்திக் கொண்டு போய்விடுமோ என்ற பயத்துடன் இருக்கும்போது மகிமா-போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்தவுடன் ஜெட்வேகத்தில் பறக்கிறது..!

இமானின் இசையில் “ராங்கி.. ராங்கி” என்ற பாடலும், “சகாயனே” பாடலும் கேட்கும்படி இருந்தது.. மற்றபடி பின்னணி இசையே தேவையில்லாத படமாக இதனை எடுத்துக் கொடுத்திருப்பதால் கஷ்டமே படாமல் பணியாற்றியிருக்கிறார் இமான்..!

வியாபாரம் மட்டுமே நோக்கம் என்று, தமிழ்ச் சினிமா முழு வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் சூழலில்,  ஒரு சமூக அக்கறையுடன்.. கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும் புரியும்வகையில் ஒரு சிறந்த படத்தை இயக்கிக் கொடுத்தமைக்காக இயக்குநர் அன்பழகனுக்கு எனது நன்றிகள்..!

சாட்டை - அவசியம் பார்க்க வேண்டிய படம்..! 


12 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

வி.சேகர் கொஞ்ச நாளா படமெடுக்க காணோம், அவரு இடத்துக்கு ஒருத்தர் வந்துட்டார் போல.

நல்ல மெசேஜ் தான் ,ஆனாலும் நாடகத்தனமாக , தெரிந்த விஷயங்களே வைத்து நகர்த்துவது சரியா?

//“காதலிக்கு பிடித்ததுபோல் நடந்து கொள். நல்லா படிச்சாத்தான் அவளுக்குப் புடிக்கும்னா அதையே செய்..” என்கிற சமுத்திரக்கனியின் அட்வைஸ்.. அனைத்து காதல்களுக்கும் பொருத்தமானதுதான்..!

//

சினிமா வாத்தியாரு :-))

நிறைய படங்கள் தோல்வியடைய காரணம் இயக்குனர்கள் ஒரு காலத்திலும் ,பார்ப்பவர்கள் ஒருக்காலத்திலும் வாழ்வது தான்.

Unknown said...

சமூக அக்கறையுடனும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதைச் ”சாட்டை” தமிழ்த் திரைப்பட விமர்சனத்தின் மூலம் திரை அரங்குகளுக்கே செல்லாத என் போன்றோர்க்கு எடுத்துக்காட்டிய உண்மைத் தமிழனுக்கு நன்றியும் பாராட்டுக்களும் !

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, வி.சேகர் கொஞ்ச நாளா படமெடுக்க காணோம், அவரு இடத்துக்கு ஒருத்தர் வந்துட்டார் போல. நல்ல மெசேஜ்தான், ஆனாலும் நாடகத்தனமாக, தெரிந்த விஷயங்களே வைத்து நகர்த்துவது சரியா?]]]

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல்.. அவர்களிடம் இல்லாததைக் கேட்காதீர்கள் வவ்வால்..!

[[[நிறைய படங்கள் தோல்வியடைய காரணம் இயக்குனர்கள் ஒரு காலத்திலும், பார்ப்பவர்கள் ஒரு காலத்திலும் வாழ்வதுதான்.]]]

இப்போதைய வெற்றி இயக்குநர்கள் அனைவரும் இதனைப் புரிந்துதான் படம் எடுக்க வருகிறார்கள். ஜெயிக்கவும் செய்கிறார்கள்..! ஜெயிக்க முடியாதவர்கள்தான் இதனை நினைத்துப் பார்க்க வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[RamaSamy said...

சமூக அக்கறையுடனும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதைச் ”சாட்டை” தமிழ்த் திரைப்பட விமர்சனத்தின் மூலம் திரை அரங்குகளுக்கே செல்லாத என் போன்றோர்க்கு எடுத்துக் காட்டிய உண்மைத் தமிழனுக்கு நன்றியும் பாராட்டுக்களும் !]]

பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள் ஸார்..!

Doha Talkies said...

அண்ணன் நீங்க சொல்லிட்டீங்க,
கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்.
நல்ல படங்கள் வரும்போது உற்சாக படுத்தவேண்டும் அல்லவா?
http://dohatalkies.blogspot.com/2012/09/the-usual-suspects.html

உண்மைத்தமிழன் said...

[[[Doha Talkies said...

அண்ணன் நீங்க சொல்லிட்டீங்க,
கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்.
நல்ல படங்கள் வரும்போது உற்சாகபடுத்த வேண்டும் அல்லவா?]]]

அவசியம் பாருங்கள்.. பார்த்துவிட்டு நான்கு பேரிடமாவது பார்க்கச் சொல்லுங்கள்.. தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நாம் கொடுக்கும் மரியாதை இதுதான்..!

Anonymous said...

எனக்கென்னமோ சுந்தரபாண்டியன் அளவுக்கெல்லாம் இந்த படம் ஓடாதுன்னு தோணுதுண்ணே... அடுத்த வாரம் தாண்டவம் வேற வருது, ஆயுசு கம்மிதான்... அப்புறம் விஜய் டிவில ஒரு சீரியல் 7Cன்னு ,ஒரே கதைதான்..

உண்மைத்தமிழன் said...

[[[மொக்கராசு மாமா said...

எனக்கென்னமோ சுந்தரபாண்டியன் அளவுக்கெல்லாம் இந்த படம் ஓடாதுன்னு தோணுதுண்ணே...]]]

ஓடணும்.. ஓட வைக்கணும்.. தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக மக்கள் இது போன்ற சமூக விழிப்புணர்வுள்ள படங்களை பெரிதும் ஆதரிக்க வேண்டும்..!

Ganapathi.vv said...

சுந்தரபாண்டியன் இந்த படத்துக்கு .நாகரிக கோமாளி பெட்டர். இன்றைய சமுதாயத்திற்கு தேவையா கதை .
இந்த மாதிரி படம் மக்களுக்கு புடிக்குமா ......?

Anonymous said...

//உண்மைத்தமிழன் said...

ஓடணும்.. ஓட வைக்கணும்.. தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக மக்கள் இது போன்ற சமூக விழிப்புணர்வுள்ள படங்களை பெரிதும் ஆதரிக்க வேண்டும்..!

//

ரைட்டுண்ணே.. ஆனா பதிவுலகத்துல இருக்குற நாங்க மட்டும், உங்கள மாதிரி பெரியவங்க பேச்ச கேட்டு போயி பார்த்தா போதுமா? ஜெனரல் பப்ளிக்குக்கு இந்த படம் மேல பெருசா இன்ட்ரஸ்ட் இல்லண்ணே..எதோ பார்போம்!!

உண்மைத்தமிழன் said...

[[[Ganapathi.vv said...

சுந்தரபாண்டியன் இந்த படத்துக்கு. நாகரிக கோமாளி பெட்டர். இன்றைய சமுதாயத்திற்கு தேவையா கதை.
இந்த மாதிரி படம் மக்களுக்கு புடிக்குமா?]]]

பொழுது போக்கு சினிமாவிற்கு ஏற்ற கதை இது..! இதைவிடவும் பெட்டராக வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[மொக்கராசு மாமா said...

//உண்மைத்தமிழன் said...

ஓடணும்.. ஓட வைக்கணும்.. தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக மக்கள் இது போன்ற சமூக விழிப்புணர்வுள்ள படங்களை பெரிதும் ஆதரிக்க வேண்டும்..!//

ரைட்டுண்ணே. ஆனா பதிவுலகத்துல இருக்குற நாங்க மட்டும், உங்கள மாதிரி பெரியவங்க பேச்ச கேட்டு போயி பார்த்தா போதுமா? ஜெனரல் பப்ளிக்குக்கு இந்த படம் மேல பெருசா இன்ட்ரஸ்ட் இல்லண்ணே. எதோ பார்போம்!! ]]]

அதுக்காகத்தான் பரப்புரை செய்யுங்கன்னு சொல்றேன்..!