சாருலதா-சினிமா விமர்சனம்

21-09-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திகில், மர்மக் கதைகளைப் படமாக்கவும் தனிக் கலைத் திறன் வேண்டும்... இந்தத் திறமையும் அனைத்து இயக்குநர்களுக்கும் வந்துவிடாது. இந்த உண்மையை இந்தப் படத்தின் ரிசல்ட்டை பார்த்து இயக்குநர் பொன்குமரன் இதனை புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்..!

இந்தப் படம் தாய்லாந்து மொழியில் வெளியான அலோன் என்ற படத்தின் தமிழ்ப் பதிப்பு. முறையாக அனுமதி வாங்கிச் செய்திருக்கிறார்கள் என்கிற வகையில் இதன் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது பாராட்டுக்கள். அதே நேரத்தில், இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் இவர்களை பார்த்தாவது இது பற்றி தெரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்..!

 

20 ஆண்டுகளாக ஒட்டிய நிலையிலேயே இருக்கும் சாரு-லதா என்ற இரட்டைச் சகோதரிகளின் வாழ்க்கையை காதல் என்ற கசமுசா கலைக்கிறது. சகோதரிகள் இருவருமே ஒருவரை காதலிக்க.. அந்த காதலனோ இரட்டையர்களில் சாருவை மட்டுமே விரும்பியிருக்க.. அந்தக் காதல் கை கூடியதா என்பதுதான் கதை.. முக்கோண காதல் கதையாகக் கொண்டு போயிருக்க வேண்டியது.. யார் பேச்சைக் கேட்டு இப்படி திகில், மர்மக் கதையாக கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை..!

படத்தில் 2 பேர் மட்டுமே பெரும் பாராட்டுக்குரியவர்கள்.. ஒருவர் ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம்.. மற்றொருவர் ஹீரோயினும், வில்லியுமான பிரியாமணி..! திரையைவிட்டு கொஞ்சமும் அகலவிடாத அளவுக்கு நம் கண்களுக்கு பெரும் தீனி இந்தப் படத்தின் ஒளிப்பதிவு..!

முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சிவரையிலும் பிரேமுக்கு பிரேம் ஏதோவொரு ஓவியத்தின் நடுவில் கேரக்டர்கள் தங்களது பங்களிப்பை செய்வது போலவே இருந்தது...! காஷ்மீரின் அழகை இவ்வளவு ரம்மியமாக வேறு எந்தக் கேமிராவும் இதுவரையிலும் படம் பிடித்ததில்லை என்று நினைக்கிறேன்.. கூடவே அழகான பிரியாமணியும் இருக்க.. பாடல் காட்சிகளில் பாடலை மறந்து காட்சிகளில் ஒன்றிப் போகிறோம்..! திகிலூட்ட வேண்டிய பல காட்சிகளில் இயக்குநருக்கு பெரிதும் கை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. சாரு-லதா சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிக மைனூட்டாகக்கூட, வித்தியாசம் காண முடியாத அளவுக்கு ஒளிப்பதிவு நேர்த்தியாக இருந்தது..! கிளைமாக்ஸ் காட்சியில் பிரியாமணியையும், இயக்குநரையும் தாண்டி இன்னொரு பக்கம் ஒளிப்பதிவாளரும் தனது பணியைக் கச்சிதமாகவே செய்திருக்கிறார்..

இந்தக் கேரக்டருக்கு பிரியாமணியை செலக்ட் செய்ததற்கு இயக்குநரைத்தான் முதலில் பாராட்ட வேண்டும்..! சாரு கேரக்டரைவிடவும் லதா கேரக்டரில்தான் வாழ்ந்திருக்கிறார் பிரியாமணி. அந்தக் கட்டைக் குரலும், திமிரான பார்வையும், சின்ன சின்ன பார்வையாலேயே தனது கோபத்தைக் காட்டும் அழகும்.. இந்தப் பொண்ணை ஏன் தமிழ்ச் சினிமா இன்னமும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தெரியவில்லை..! வருத்தமாகத்தான் இருக்கிறது..!

மேக்கிங்படி பார்த்தால் மிகவும் கஷ்டமான வேலை இது.. சில சமயங்களில் பக்கத்தில் ஒருவர் இருப்பதாகவும், பல சமயங்களில் இருப்பதாகக் கற்பyனை செய்து கொண்டும் நடித்திருப்பதில் மிகவும் சிரமப்பட்டதாகச் சொன்னார் பிரியாமணி. அந்தக் கஷ்டத்திற்கெல்லாம் நிச்சயம் பாராட்டு கிடைக்கும் என்றே நம்புகிறேன்..! எப்போதும் ஒட்டியே இருப்பது போன்ற காட்சியமைப்பும், இரு வேறு மேக்கப்களில் அடுத்தடுத்து எடுக்கப்படும் காட்சிகளின்போதெல்லாம் அஸிஸ்டெண்ட் டைரக்டர் வேலை.. காஸ்ட்யூம்ஸ் அஸிஸ்டெண்ட் வேலையையெல்லாம் தானே இழுத்துப் போட்டுச் செய்ததாகச் சொன்னார் பிரியாமணி.. ஹாட்ஸ் அப்..! இறுதி 20 நிமிடங்களில் லதாவாக உருமாறி பிரியாமணி செய்யும் ஆக்ட்டிங் அசத்தலானது..!

புதுமுக ஹீரோ எதையும் ஈர்க்கும்விதமாகச் செய்துவிடவில்லை.. இருக்கிறார். நடித்திருக்கிறார். அவ்வளவுதான்.. தயாரிப்பாளர் பெரிய கைதான்.. தமிழுக்கும், தெலுங்குக்கும் தோதான வேறு ஹீரோவை நடிக்க வைத்திருக்கலாம்..!

திகிலூட்டும்விதமாக பின்னணி இசையை மூட்டிவிட்டு இடை, இடையே கிச்சுமுச்சு மூட்டுவதைப் போல அந்தச் சின்னப் பையன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே வேஸ்ட்டு..! இடைவேளைக்கு முன்பு படத்தில் ஒன்ற முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்..!

உள்ளே, வெளியே என்று விளையாட்டாக திகிலுக்குள் நுழைவதும், பின்பு வெளியே வருவதும்.. மறுபடியும் உள்ளே திணிப்பதுமாகக் கொண்டு சென்ற முன்பாதி காட்சிகளை கட் செய்திருந்தால் ஒருவேளை படத்தில் ஈர்ப்பு இருந்திருக்கலாம்..! தேவையற்ற வேலை..!

சீரியஸ் படங்களில் லாஜிக் பார்க்கலாம் என்கிற வகையில் பல லாஜிக் மீறல்களையும் சொல்லப்படாத விஷயங்களையும் வைத்துப் பார்த்தால் படமே தள்ளாடுகிறது..! அம்மா சரண்யா சீரியஸ் நிலையில் இருக்க பிரியாமணி பார்க்க வரும் காட்சியில் ஒரு துடிப்பு இல்லை.. திரைக்கதையில் ஒரு அனுதாப உணர்வும் வரவில்லை..! சொந்த வீட்டில் இருக்க வரும் பிரியாமணி அந்தப் பையனிடம் தான் சரண்யாவின் மகள் என்பதைச் சொல்ல வேண்டாம் என்று தடுப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. இதனால் திரைக்கதையில் இயககுநருக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

சரண்யா கோமாவில் இருப்பதாக டாக்டர் சொன்ன பின்பும் அடுத்தடுத்த காட்சிகளில் திடீரென்று கூப்பிட்டவும் கண் விழிக்கிறார். பயப்படுகிறார். இறுதிக் காட்சியில் திடீரென்று தனியே காரில் வந்து இறங்குகிறார். வீ்ட்டில் ஆவி இருக்கிறது என்பதைக் காட்டி, ஆவியை உண்மையாக்கியிருக்கிறார்கள். இதை எந்த ஊர் ஆவி வந்து கேட்கும் என்று தெரியவில்லை..!?

திரைக்கதையின் வேகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அந்தச் சிறுவனின் இடுப்பில் இருக்கும் தாயத்து மற்றும், அந்த மந்திரவாதி.. செப்புத் தகடு கொடுப்பது.. அது எரிந்து போன பின்பு மந்திரவாதி தானே வாலண்டியராக வீடு தேடி வந்து ஆவியை விரட்டப் பார்ப்பது என்று கதையை தங்களுக்குத் தோதான லைனுக்கு இழுத்திருக்கிறார்கள்.. ஆனாலும் அநியாயத்திற்கு லாஜிக் இடிக்கிறது..!

ஒரு வித்தியாசமான கதைக் களன்.. பிரியாமணி போன்ற பெரிய ஹீரோயின்.. பெரிய தயாரிப்பாளர்.. நிச்சயமாக இதைவிடவும் வித்தியாசமான கோணத்தில் இரட்டைப் பிறவிகளைப் பற்றிச் சொல்லியிருக்கலாம்.. இரட்டைப் பிறவிகள் பற்றிய விழிப்புணர்வு, அவர்கள் படும் கஷ்டம்.. அவர்களுடைய வாழ்க்கை முறை.. இதையெல்லாம் ஆடியன்ஸுக்கு சொல்லாமல், கடைசியாக இதுவும் ஒரு வழக்கமான காதல் படமாகவே முடிந்து போனது நமது துரதிருஷ்டம்தான்..!

23 comments:

ILA (a) இளா said...

அப்ப மாற்றான் சிக்ஸர் அடிக்கலாம்னு சொல்லுங்க.. இப்ப ஆனந்த் அண்ணே பெருமூச்சு விட்டிருப்பாரு

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இன்று காலைதான் அந்த தயாரிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். கன்னடத்திலும் இன்றுதான் ரிலீஸ் என்று சொன்னார். தசாவதாரத்தின்போதே ரவிகுமார் அசிஸ்டெண்டாக இருந்த பொன். குமரனுடன் பழக்கம். நன்றாக வருவார் என்று நினைத்தேன்.

படம் மிகுந்த பொருட்செலவிலெல்லாம் எடுக்கப்படவில்லை. அதனால் தப்பு பண்ணாது என்றே நினைக்கிறேன்!

வவ்வால் said...

அண்ணாச்சி,

வலைப்பதிவராக இருந்து கொண்டு படத்தை காசு கொடுத்து பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவது ஒரு வகை, ஆனால் ஊடகவியலாளர் என விமர்சனம் எழுதும் போதும் குத்துமதிப்பாவே எல்லாம் எழுதினால் எப்படி?

குளோபல் ஒன் ஸ்டுடியோ என்பது பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமா? தயாரிப்பாளர் யார்னே தெரியாலை? சில என்.ஆர்.ஐ அப்படினு சொல்லிட்டு , சன் டிவி சக்ஸ்சேனா ரிலீஸ் செய்றார்,எனக்கு என்னமோ எல்லாம் கருப்பு வெள்ளை வித்தை போல இருக்கு.

-------

பிரியாமணியை நல்லா பயன்ப்படுத்தி கொண்டது தமிழ் படவுலகே,சிறந்த நடிகை விருது பருத்திவீரனில் வாங்க்யதை மறந்துவிட்டீரே?

இந்த படம் தெலுங்கு , கூடவே தமிழும் , இது டப்பிங் படம் போல தான், ஆனால் டப்பிங் இல்லைனு காட்ட தனி சென்சார் செர்டிபிகேட் போன்ற கதையை எல்லாம் நான் சொல்ல வேண்டியாதாக இருக்கே?

பை லிங்குவல் என்பதே ஏமாற்று வேலை, ஆனால் என்னமோ ஒரே சமயத்தில் ரெண்டு மொழின்னு டப்பிங் படம் இல்லை போல :-))

rajasundararajan said...

பொறுப்பான விமர்சனம். ஒரு டிக்கெட் விலைச் செலவை எனக்கு சேமித்துக் கொடுத்ததற்கு நன்றி.

கேபிள் 'சாட்டை'க்கு எழுதி இருக்கிற விமர்சன நிலவரப்படி, ஞாயிற்றுக் கிழமை நாம் இருவரும் ஃபேம் தியேட்டரில் சந்திப்பதும் தள்ளிப் போகுமா?

உண்மைத்தமிழன் said...

[[[ILA(@)இளா said...

அப்ப மாற்றான் சிக்ஸர் அடிக்கலாம்னு சொல்லுங்க.. இப்ப ஆனந்த் அண்ணே பெருமூச்சு விட்டிருப்பாரு.]]]

"அடிக்கலாம்"ன்னுதான் நான் நினைக்கிறேன். கே.வி.ஆனந்தின் திரைக்கதை சுவாரசியமாக இருக்கும்.. அதனால்தான் இந்த எதிர்பார்ப்பு..!

உண்மைத்தமிழன் said...

[[[லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இன்று காலைதான் அந்த தயாரிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். கன்னடத்திலும் இன்றுதான் ரிலீஸ் என்று சொன்னார். தசாவதாரத்தின்போதே ரவிகுமார் அசிஸ்டெண்டாக இருந்த பொன். குமரனுடன் பழக்கம். நன்றாக வருவார் என்று நினைத்தேன்.
படம் மிகுந்த பொருட்செலவிலெல்லாம் எடுக்கப்படவில்லை. அதனால் தப்பு பண்ணாது என்றே நினைக்கிறேன்!]]]

மூன்று மொழிகளிலும் ரிலீஸ் என்பதாலும், குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பதாலும் போட்ட காசு கிடைத்துவிடும் என்றே நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, வலைப்பதிவராக இருந்து கொண்டு படத்தை காசு கொடுத்து பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவது ஒரு வகை, ஆனால் ஊடகவியலாளர் என விமர்சனம் எழுதும் போதும் குத்துமதிப்பாவே எல்லாம் எழுதினால் எப்படி?
குளோபல் ஒன் ஸ்டுடியோ என்பது பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமா? தயாரிப்பாளர் யார்னே தெரியாலை? சில என்.ஆர்.ஐ அப்படினு சொல்லிட்டு, சன் டிவி சக்ஸ்சேனா ரிலீஸ் செய்றார்,எனக்கு என்னமோ எல்லாம் கருப்பு வெள்ளை வித்தை போல இருக்கு.]]]

அண்ணாச்சி.. சக்சேனாவும் ஐயப்பனும் சேர்ந்துதான் வாங்கி விநியோகம் செய்திருக்கிறார்கள். கணிசமான தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றன.. முதல் மூன்று நாட்கள் முக்கால்வாசி கூட்டம் நிரம்பினாலே போதும் என்ற அளவுக்குத்தான் பிளான் செய்திருக்கிறார்கள்.. கருப்போ, வெள்ளையோ.. யாருக்குத் தெரியும்..?
-------

[[[பிரியாமணியை நல்லா பயன்ப்படுத்தி கொண்டது தமிழ் படவுலகே, சிறந்த நடிகை விருது பருத்திவீரனில் வாங்க்யதை மறந்துவிட்டீரே? இந்த படம் தெலுங்கு, கூடவே தமிழும். இது டப்பிங் படம் போலதான். ஆனால் டப்பிங் இல்லைனு காட்ட தனி சென்சார் செர்டிபிகேட் போன்ற கதையை எல்லாம் நான் சொல்ல வேண்டியாதா இருக்கே?]]]

எல்லாம் தெரிஞ்ச விஷயம்தானே..? மலையாளத்தில் கூட கூடிய சீக்கிரம் டப் செஞ்சு வெளியிடப் போறாங்களாம்..!

[[[பை லிங்குவல் என்பதே ஏமாற்று வேலை. ஆனால் என்னமோ ஒரே சமயத்தில் ரெண்டு மொழின்னு டப்பிங் படம் இல்லை போல :-))]]]

உங்களை மாதிரி சிஐடி ஆபீஸர்ஸ் இல்லைன்ற தைரியத்துலதான் இப்படி ஆடுறாங்கண்ணே..! ஆனா ஒவ்வொரு மொழியிலேயும் படம் நல்லாயில்லைன்னா படுத்திரப் போவுது..!? அப்புறமென்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

பொறுப்பான விமர்சனம். ஒரு டிக்கெட் விலைச் செலவை எனக்கு சேமித்துக் கொடுத்ததற்கு நன்றி.]]]

பார்க்கவே கூடாத படம்னு சொல்லலை.. பார்த்தே தீரணும்னும் சொல்லலை.. நேரம் இருந்தால், வாய்ப்பிருந்தால் பாருங்கள்..!

[[[கேபிள் 'சாட்டை'க்கு எழுதி இருக்கிற விமர்சன நிலவரப்படி, ஞாயிற்றுக்கிழமை நாம் இருவரும் ஃபேம் தியேட்டரில் சந்திப்பதும் தள்ளிப் போகுமா?]]]

இந்தக் கதையெல்லாம் வேண்டாம்.. "சாட்டை" அவசியம் பார்க்க வேண்டிய படம்..! மறக்காம வந்திருங்க..!

முரளிகண்ணன் said...

அண்ணே, உடல் நிலை சரியில்லையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கேபிள் 19 வருடம்ன்னு சொல்றார். நீங்க 20 வருடம்ன்னு சொல்றீங்க. யார் சொல்றது உண்மை?

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...

அண்ணே, உடல் நிலை சரியில்லையா?]]]

இல்லையே.. நல்லாத்தான இருக்கேன்.. இப்பல்லாம் விவரிச்சு எழுதுற அளவுக்கு தோண மாட்டேங்குதுண்ணே.. இதுவே போதும்ன்னு நினைக்கிறேன்..! வருகைக்கு மிக்க நன்றிகள்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கேபிள் 19 வருடம்ன்னு சொல்றார். நீங்க 20 வருடம்ன்னு சொல்றீங்க. யார் சொல்றது உண்மை?]]]

படத்துல பிரியாமணி 20 வருஷம்ன்னு சொல்றாங்க. அதுனால நானும் அதையே யூஸ் பண்ணியிருக்கேன்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

அண்ணாச்சி,//உங்களை மாதிரி சிஐடி ஆபீஸர்ஸ் இல்லைன்ற தைரியத்துலதான் இப்படி ஆடுறாங்கண்ணே..!
//

அந்த சி.ஐடி ஆபிசரே நீங்க தான், பல உண்மைகளை எங்களுக்கு சொல்லணும், உங்க கிட்டே இருந்து நிறய எதிர்ப்பார்க்கிறோம்...வீ வாண்ட் மோர் ...மோர்...(குடிக்கிற மோர் கொடுத்துப்புடுவாரோ)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்டின்னா கேபிள் சொல்றது பொய். அவரு உண்மையே சொல்ல மாட்டார்ன்னு சொல்றீங்க. அப்படித்தான அண்ணே? (சண்டை வருமா? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்டின்னா கேபிள் சொல்றது பொய். அவரு உண்மையே சொல்ல மாட்டார்ன்னு சொல்றீங்க. அப்படித்தான அண்ணே? (சண்டை வருமா? :))

Anonymous said...

//இரட்டைப் பிறவிகள் பற்றிய விழிப்புணர்வு, அவர்கள் படும் கஷ்டம்.. அவர்களுடைய வாழ்க்கை முறை.. இதையெல்லாம் ஆடியன்ஸுக்கு சொல்லாமல்,

///

அடபோங்கண்ணே.. இத எல்லாம் காட்டுனா ஒருத்தனும் தியேட்டர் பக்கம் போக மாட்டான்.. இந்த வருசத்துல வந்து ஹிட் ஆகன படங்கள எல்லாம் பார்த்தீங்கன்னா, சூப்பர் டூப்பர் ஹிட் ஓகே ஓகே ல இருந்து, நான் ஈ, காதலில் சொதப்புவது எப்புடி, நண்பன், ப்லா ப்லா ப்லா எல்லாமே ஜாலியான அழவைக்காத படங்கள் தான்.. எதுக்கும் ஒரு வாட்டி "பர்ஃபி" பாருங்கண்ணே... இந்த காலத்துல போயி அவுங்க கஷ்டத்தையும் விழிப்புணர்வையும் பற்றி பேசுறீங்களேண்ணே....

Anonymous said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்டின்னா கேபிள் சொல்றது பொய். அவரு உண்மையே சொல்ல மாட்டார்ன்னு சொல்றீங்க. அப்படித்தான அண்ணே? (சண்டை வருமா? :))////

அநேகமா வராதுன்னுதான் தோணுது.. எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்போம் ரமேஷ்...

priyamudanprabu said...

:)

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்டின்னா கேபிள் சொல்றது பொய். அவரு உண்மையே சொல்ல மாட்டார்ன்னு சொல்றீங்க. அப்படித்தான அண்ணே? (சண்டை வருமா? :))]]]

ஆமாம்.. அப்படித்தான்.. உனக்குத் தேவையானது இதுதானே..? போட்டாச்சு..! (சண்டை வருமா?)

உண்மைத்தமிழன் said...

[[[மொக்கராசு மாமா said...

//இரட்டைப் பிறவிகள் பற்றிய விழிப்புணர்வு, அவர்கள் படும் கஷ்டம்.. அவர்களுடைய வாழ்க்கை முறை.. இதையெல்லாம் ஆடியன்ஸுக்கு சொல்லாமல்,///

அடபோங்கண்ணே.. இத எல்லாம் காட்டுனா ஒருத்தனும் தியேட்டர் பக்கம் போக மாட்டான்.. இந்த வருசத்துல வந்து ஹிட் ஆகன படங்கள எல்லாம் பார்த்தீங்கன்னா, சூப்பர் டூப்பர் ஹிட் ஓகே ஓகே ல இருந்து, நான் ஈ, காதலில் சொதப்புவது எப்புடி, நண்பன், ப்லா ப்லா ப்லா எல்லாமே ஜாலியான அழ வைக்காத படங்கள்தான்.. எதுக்கும் ஒரு வாட்டி "பர்ஃபி" பாருங்கண்ணே... இந்த காலத்துல போயி அவுங்க கஷ்டத்தையும் விழிப்புணர்வையும் பற்றி பேசுறீங்களேண்ணே.]]]

நம்ம நேரம்தான்.. நாட்டுல நல்லதை எதிர்பார்க்கக் கூடாதே..?

உண்மைத்தமிழன் said...

[[[மொக்கராசு மாமா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்டின்னா கேபிள் சொல்றது பொய். அவரு உண்மையே சொல்ல மாட்டார்ன்னு சொல்றீங்க. அப்படித்தான அண்ணே? (சண்டை வருமா? :))////

அநேகமா வராதுன்னுதான் தோணுது.. எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி பார்போம் ரமேஷ்.]]]

வரலைன்னு சொன்னா வருத்தப்பட மாட்டேன். ஆனா வந்துட்டாலும் யாரையும் குத்தம் சொல்ல மாட்டேன்..! (எப்பூடி)

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் பிரபு said...

:)]]]

வருகைக்கு நன்றி பிரபு..!