எப்படி மனசுக்குள் வந்தாய் - சினிமா விமர்சனம்

13-08-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படத்தின் டைட்டில் கவிதையாகத்தான் உள்ளது. ஆனால் படமோ கவிதையாக ஆரம்பித்து, அடிதடிக்குள் நுழைந்து டெர்ரர் படமாக முடிகிறது..! 


துணி வெளுக்கும் டோபி குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோ, தமிழ்ச் சினிமாவின் பார்முலாபடி ஹீரோயினை பார்த்தவுடன் காதல் கொள்கிறார்.. அவளுக்காகவே.. அவளுடன் நட்பு கொண்டு, காதலில் ஜெயிக்க விரும்பி ஹீரோயின் படிக்கப் போகும் அதே கல்லூரியில் ஹீரோயின் படிக்கும் பேஷன் டெக்னாலஜி கோர்ஸில் சேர்கிறார்.. காதல் கொஞ்சம் கை கூடும் நிலையில் இருக்கும்போது ஏற்படும் ஒரு அசம்பாவிதத்தில் உடன் படிக்கும் ஹீரோயினின் நெருங்கிய குடும்பத்து தோழன் இறந்துவிட.. அதன் பின்பு படம் வேறு பக்கம் சூடு பிடிக்கிறது.. தான் செய்த தவறை மறைக்கப் பார்த்து.. பொய் மேல் பொய் சொல்லி.. எப்பாடுபட்டாவது தனது காதலைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கிறார் ஹீரோ.. முடிந்ததா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

2008-ல் வெளிவந்த காதலில் விழுந்தேன் படத்தின் இயக்குநர் பி.வி.பிரசாத்தின் அடுத்த படம் இது.  4 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு நல்ல கதைக்காக காத்திருந்து செய்தேன் என்கிறார் இயக்குநர்..!  சொல்லப்படும் காதல் அரதப் பழசு என்றாலும், அதில் ஏதாவது வித்தியாசத்தைக் காட்டி முதல் மூன்று நாளில் ஓடி வருகின்ற ரசிகர் பட்டாளத்தை திருப்திபடுத்திவிட அனைத்து இயக்குநர்களுமே துடிக்கிறார்கள்..! இயக்குநர் பிரசாத்தின் துடிப்பும் அப்படித்தான் இருந்திருக்கிறது..!

காதலை வளர்ப்பதும், அந்தக் கொலை வரையிலும் கதை நேர்க்கோட்டில்தான் செல்கிறது.. பின்புதான் தடம் புரண்டு ஹீரோவை ஆண்ட்டி ஹீரோவாக்கி, காதலுக்கு சமாதிகட்டி சினிமாத்தனமான வில்லனாக்கி முடித்திருக்கிறார்கள். பொதுவாகவே காதல் என்றாலே அடுத்தது கல்யாணம் என்ற லெவலை நோக்கித்தான் கதையைக் கொண்டு போவார்கள்.. கண்மூடித்தனமான காதலுடன், ஹீரோ காதலிக்காக உயிரையே கொடுப்பான் என்றாலும், அதையும் ஒரு கட்டுக்குள் வைத்து, சில காம்ப்ரமைஸ்களால் ஹீரோவை நல்லவனாகவே காட்டிவிடுவார்கள். இதில் பிரசாத் வித்தியாசமாக ஹீரோவை அநியாயத்துக்கு வில்லனாக காட்டியிருக்கிறார்..!

நண்பன் காணாமல் போய்விட்டதாக புரளியைக் கிளப்பி.. அதன் தொடர்ச்சியாக அவனை போல குரல் மாற்றி ஹீரோயினிடம் அசிங்கமாகப் பேசுவது.. ஹீரோயினிடம் போலீஸின் ரூட்டையும் மாற்றிச் சொல்வது.. தன்னை அவள் காதலிக்கும் அளவுக்கு சூழலை ஏற்படுத்துவது என்று கதை போகிற போக்கில் திரைக்கதையின் வேகம் நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும், ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச் அங்கே புஸ்ஸென்று போனதுதான் உண்மை..! 

முந்தைய படங்களில் பாதிப்பை ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நினைத்து நாக்கு முக்க ஸ்டைலில் ஊறாக்கிளி பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் 4 ஆண்டுகள் கழித்து மீண்டு வருவதால், இதனை நியாகப்படுத்தும் விதமாகவே விளம்பரங்கள் செய்தாலும், படத்தின் துவக்கத்திலேயே இந்தப் பாடல் வந்துவிடுவதால் வெறுமனே ஒரு பாடல் நடனமாக மட்டுமே இதனை ரசிக்க முடிகிறது..! நாக்க முக்க பாடலில் இருந்த கதையின் இருப்பிடம், இதில் இல்லாதது பாடலுக்கே பெரிய மைனஸாகிவிட்டது..!

அறிமுக ஹீரோ விஸ்வா, 10 படங்களில் நடித்த அனுவபத்தை இந்த ஒரு படத்திலேயே பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன். இயக்குநர் விஸ்வாவை புரட்டி எடுத்திருக்கிறார். ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். காதலில் பரவாயில்லை ரகம்.. இன்னும் கொஞ்சம் படங்களில் தேறிவிடுவார் போலத்தான் தோன்றுகிறது..! ஹீரோயினை முதல் பார்வையில் பார்த்த உடனேயே காதலாகி கசிந்துருவுதலில் ஆரம்பித்து.. கொலை செய்துவிட்டு பதறுவது.. ஹீரோயினிடம் சமாளிபிகேஷன் செய்வது.. ரவி காலேயிடம் ஆவேசமாக மோதுவது என்றெல்லாம் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை மட்டுமே செய்திருக்கிறார். அடுத்த படத்தில் தனக்கென்று தனி பாணியை கடைப்பிடித்தால் தொடர்ச்சியாக வரலாம்..!


ஹீரோயின் முன்னாள் மிஸ் இந்தியாவாக வென்றவராம். தான்வி வியாஸ்.. கொள்ளை அழகு.. ஸ்கிரீனில் இன்னும் அழகாகத் தெரிகிறார்.. பால்கோவாவை உடம்பெல்லாம் பூசியதுபோல பளீச்சென்று இருக்கிறார்.. இவருக்கேற்ற கேரக்டர்தான் படத்தில்..! ஒவ்வொரு புதுமுகமும் சந்திக்கும் டயலாக் லிப் லாக்  இவருக்கு பிரச்சினையில்லாமல் இருந்ததினால் நமக்கும் சந்தோஷம்தான்..! 

படத்தில் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கிய நடிகர் ரவி காலே.. போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர் ஏன் இந்த வழக்கை இவ்வளவு ஆர்வமாக கையில் எடுத்திருக்கிறார் என்ற லாஜிக் கொஸ்டீனை மட்டும் விட்டுவிட்டால் மனிதர் நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார்..!  விஸ்வாவை புரட்டியெடுத்துவிட்டு டீலிங் பேசும் சமயங்களில் அவரது வசன உச்சரிப்பும், பாடி லாங்வேஜூம் அசத்தல்..! தமிழ்ச் சினிமாவுக்கு புதிய வில்லன் கிடைத்திருக்கிறார்..!

ஒளிப்பதிவு வேலையோடு வசனத்தையும் எழுதியிருக்கிறார் விஜய் மில்டன். ஒளிப்பதிவு வழக்கம்போல அவரது பெயரை சொல்லாமல் சொல்கிறது.. கேமிராவின் கண்களில் ஹீரோயினின் அழகையும், லொகேஷனையும் மாறி மாறி காட்டுவதால், எதனை ரசிப்பது என்பதே புரியவில்லை.. அந்த அளவுக்கு இருக்கிறது ஒளிப்பதிவு..! சண்டைக் காட்சிகளிலும், விஸ்வா போலீஸாரால் தாக்கப்படும் காட்சியிலும் விஜய் மில்டன் தனியே தெரிகிறார்..!

ஹாரீஸ் ஜெயராஜிடம் உதவியாளராக இருந்த டேனியல்தான் இசையமைப்பாளர். என் காதல் நீதானே.. கன்னக் குழியழகி, ஒரு பார்வையிலே பாடல்களைவிடவும், காட்சிகளை எடுத்தவிதம் ஓகே.. இவ்வளவு அழகான ஹீரோயினை வைத்துக் கொண்டு பாடல் காட்சிகளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும்..!

படத்தில் சுவாரஸ்யமே இல்லையா என்றால் நிறையவே இருக்கிறது.. ஹீரோயினின் ஸ்கிரீன் அறிமுகம்.. ஹீரோயினின் டிரெஸ்ஸை ஹீரோ ஸ்பெஷலான அக்கறை எடுத்துத் துவைப்பது.. ஹீரோயினிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள ஹீரோ செய்யும் வேலைகள்.. இர்பானை தாக்கிவிட்டு அடுத்து நடந்ததை காண்பிக்காமல் அடுத்தடுத்த காட்சிகளில் கொஞ்சம், கொஞ்சமாகக் காட்டுவது.. இர்பான் குரலில் விஸ்வா பேசி ஹீரோயினை கலங்கடிப்பது.. வீட்டிற்கு சர்ச் வாரண்டோடு வந்து வெறும் கையோடு திரும்பிப் போகும்போது ஹீரோ அவர்களை கிண்டலடிப்பது.. அந்தக் காட்சியின் இண்ட்டர்கட்டை அடுத்த காட்சியில் காட்டுவது.. ஆக்ரோஷமான அந்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி, எல்லாவற்றையும்விட ஹீரோவுக்கு எப்போதுமே இருக்கும் முந்தைய செயல்களை பின்னோக்கி பார்க்கும் ஞாபக சக்தி.. என்று பலவற்றைச் சொல்ல்லாம்..!

இருந்தாலும், படம் இடைவேளைக்கு பின்பு டெர்ரர் முகத்தோடு போவதால் காதலையும் கொண்டாட முடியாமல், ஹீரோவின் காதலுக்கான நியாயங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவியாய் தவிக்க வேண்டியுள்ளது..! பரபர திரைக்கதையுடன், டிவிஸ்ட்டுகளுடன் கூடிய புத்திசாலித்தனமான வசனத்தையும் வைத்துக் கொண்டு இயக்கத்தில் ரங்கு ராட்டினமே ஆடியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இவை அத்தனையும் காதலர்களின் மனதிலும், சராசரி ரசிகனின் மனதிலும் ஒட்டாமல், திரில்லர் பட வரிசையில் சேர்ந்ததுதான் பெரும் சோகம்..!

ஒரு முறை பார்க்கலாம்..!!!

12 comments:

சூனிய விகடன் said...

எங்களுக்கெல்லாம் ஒரு முறை பார்க்கலாம் இல்லீங்கோ....'ஒரு முறை படிக்கலாம்' தான் .

கோவை நேரம் said...

விமர்சனம் நன்று...எப்படியும் இந்த தீபாவளிக்கு டிவியில் போடுவாங்க..அப்ப பார்த்துக்கிறேன்...

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

எங்களுக்கெல்லாம் ஒரு முறை பார்க்கலாம் இல்லீங்கோ. 'ஒரு முறை படிக்கலாம்'தான்.]]]

பரவாயில்லப்பா.. ஒரு தடவையாச்சும் பாருங்க.. சினிமா இண்டஸ்ட்ரீ வளர வேண்டாமா..?

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

விமர்சனம் நன்று. எப்படியும் இந்த தீபாவளிக்கு டிவியில் போடுவாங்க. அப்ப பார்த்துக்கிறேன்.]]]

தீபாவளி போன்ற நாளிலெல்லாம் இந்த மாதிரி படத்தை போட்டு உங்களை கொல்ல மாட்டாங்க.. வேறொரு நாளில் நிச்சயம் அரங்கேறும்..!

ACE !! said...

//ஊறாக்கிளி //

அப்படின்னா என்னாண்ணே?

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ... நன்றி...

உண்மைத்தமிழன் said...

[[[ACE !! said...

//ஊறாக்கிளி //

அப்படின்னா என்னாண்ணே?]]]

யாருக்குத் தெரியும்..? வாஜி.. வாஜி.. டைப்புதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம். நன்றி.]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

Unknown said...

மின்பதிவு.காம் (www.minpathivu.com) - தமிழ் இணைய திரட்டியில் உங்கள் பதிவுகளை இணையுங்கள். உங்கள் வலைப்பூவை பிரபலபடுத்துங்கள்.

உண்மைத்தமிழன் said...

மின் பதிவு திரட்டி நண்பரே..!

தமிழ்வெளி.காம் போல் நான் புது இடுகையை இட்டவுடன் தானாகவே உங்களது தளம் எனது பதிவினை இணைத்துக் கொள்ளும்படி வசதிகள் செய்தால் நலம்..!

Chennai boy said...

எப்படி பாத்தாலும் 50லட்சம் லாஜிக் நல்லாவே உதைக்கிறது. இந்த காலத்தில் யார் 50 லட்சம் அப்படி துக்கி கொடுப்பா அதுவும் சில நிமிட கேப்பில் எப்படி தயார் செய்தார். ஹீரோயின் ஹீரோவை நம்பிட்டார் ஆனால் அவருடைய அப்பாவிற்கு தெரியாமல் 50லட்சம் எப்படி தூக்கி கொடுக்க முடிந்தது. எத்தனை பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் இவ்வளவு பணத்தை மகளிடம் கொடுத்து வைத்திர்ப்பாரா? தூக்கி கொடுத்து விட்டு சில நொடிகளில் இடத்தை காலி செய்கிறார். காதில் ஒரு பெரிய பூச்செண்டை சொருகி இருக்கிறார் இயக்குனர். அதற்கு முன் இந்த இன்ஸ்பெக்டருக்கு கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இல்லை 50லட்சம் புரட்டுவார்னு எப்படி புத்திசாலித்தனமாக யோசித்தார். ஒரு இன்ஸ்பெக்டரை கொலை செய்து விட்டு 100பேத்து ஒருத்தர தப்பிக்கிறது என்பது சொத்த பேத்தல் விசாரணைக்கு முன்பு அவனை அடித்து துவைத்த ஒரு போலீஸ்காரங்க கூட இந்த இன்ஸ்பெக்டரை கொலை செஞ்சது யார்னு தெரியாது. இது தான் மெகா பேத்தல். ஆஹ மொத்தத்துல காதலுக்காக கொலைகள் செஞ்சாலும் தப்பு இல்லைன்னு இன்றைய இளைஞ்ர்களுக்கு பொறுப்பா கருத்து சொல்லியிருக்கார் இந்த இயக்குனர். பாக்குறவன் கேனயனாக இருந்தா வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குதுன்னு சொன்னாலும் சொல்வார் போலிருக்கு இந்த இயக்குனர்.

உண்மைத்தமிழன் said...

சென்னை பாய்..

உங்களுடைய கொதிப்பில் இருக்கும் உண்மையை அறிகிறேன்.. சில லாஜிக் மீறல்களையும் தாண்டித்தான் பல படங்கள் ஜெயிக்கின்றன.. அப்படி நிச்சயம் ஜெயிக்கும் என்று நினைத்துத்தான் இந்த இயக்குநரும் சறுக்கிவிட்டார்.. லாஜிக் மீறலே இல்லாத தமிழ்ச் சினிமா எதுவுமில்லை ஸார்..!