மதுபான கடை - சினிமா விமர்சனம்

06-08-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கதைக்குள்ள போறதுக்கு முன்னால 2 மாசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தைப் பத்திச் சொல்றேன்.. மதுரையின் இலக்கியச் செல்வர் கார்த்திகைபாண்டியனின் திருமணத்திற்கு மதுரை செல்வதற்காக நானும், அண்ணன்கள் தண்டோராவும், வாசுவும் பெருங்களத்தூர் பஸ்ஸ்டாண்டில் ஒரு மதியவேளையில் மொட்டை வெயிலில் நின்று கொண்டிருந்தோம்.


எங்களுக்குச் சற்றுத் தொலைவில் 3 பெண் குழந்தைகள், 1 பையனுடன் கணவன், மனைவி நின்றிருந்தனர். அந்தாள் மனைவியிடம் “காசு கொடு காசு கொடு” என்று செல்போனை பிடுங்குவதும், பர்ஸை பிடுங்குவதுமாக கெஞ்சிக் கொண்டிருந்தான். மனைவியோ வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் வீசியெறிந்து அவனை கேவலப்படுத்திக் கொண்டிருந்தாள்.. “டேய்.. டேய் நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..? உனக்கெல்லாம் பொண்டாட்டி, பிள்ளைக ஒரு கேடா.. சம்பாதிக்க துப்பில்லை.. குடிக்க காசு கேக்குதா உனக்கு..?” என்று எட்டியிருந்த கடைக்காரர்களுக்கூட கேட்கும் அளவுக்கு திட்டித் தீர்த்தாள்.. ஆனாலும் நம்மாளு இம்மியும் அசையவில்லை. காசு கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.. ஒரு அளவுக்கு மேல் அதைப் பார்க்கவே கடுப்பாக இருந்தது.. இத்தனை பேர் சுற்றி நிற்குமிடத்தில் இப்படி கேவலப்படுகிறோமோ என்ற சொரணைகூட இல்லாத அந்தக் குடிகாரனை காலில் கிடப்பதை எடுத்து நாலு சாத்து சாத்தலாம் போலத்தான் தோன்றியது..!

குடிகாரர்களின் உலகம் புரிந்து கொள்ள முடியாததுதான்.. ச்சும்மா ஜாலிக்குக் குடிக்கிறோம் என்று குடிப்பவர்கள்கூட ஒரு பெக் உள்ளே போனவுடன் ஊரில் இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் தன்னைச் சுற்றியே நடப்பதாக நினைத்து அளந்துவிடுவார்கள்..! பிரச்சினைகளோடு இருப்பவர்கள் அதனை மறக்கவே குடிக்கிறேன் என்று சொன்னாலும், மீண்டும், மீண்டும் அதனுடையே உழல்வார்கள்..! 

ஆனால் இதில் இருக்கும் ஒரேயொரு அழகான முரண்பாடு எனில், அத்தனை தீவிரமான குடிகாரர்களும் மிகுந்த பாசக்காரர்களாக இருக்கிறார்கள்..! அவர்களுடைய குடியே அவர்களை அன்னியப்படுத்துகிறது என்பது அவர்களுக்கு புரிந்தாலும், பாசத்தையும் வெளிப்டுத்த்த் தெரியாமல், குடிப்பதையும் நிறுத்த முடியாமல்.. தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்..! இந்த முரண்பாட்டை எனது தந்தை, நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலரிடமும் கண்டிருக்கிறேன்..!

விபச்சார விடுதியினை போலவே டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் பற்றியும் அது பற்றி அறியாத மக்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கிறது..!  விதம்விதமான குடிகாரர்கள் ஒன்று கூடும் அந்த இடத்தில், ஒரு நாளில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதனால்தான் தைரியமாகவே இதில் கதை என்று எதுவும் இல்லை என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். இந்தத் தைரியத்துக்கு முதலில் எனது சல்யூட்..!




டாஸ்மாக் ஊழியர்.. பார் ஓனர்.. 2 சப்ளையர்கள்.. பார் ஓனரின் மகள்.. பார் கிளீனர்கள்.. பாத்திரம் கழுவும் அம்மா.. சமையல்காரர்.. குடிக்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள்.. மாமூல் போலீஸ்காரர்.. என்று இவர்களையே சுற்றிச் சுற்றி வருகிறது கதை..!

பத்து காசு பாக்கெட்டில் இல்லாமல் பாருக்குள் நுழைந்து டீஸண்ட்டாக பிச்சையெடுத்து ஓசி சரக்கடிக்கும் அந்த கேரக்டரும், யாரைப் பார்த்தாலும் எகத்தாளம் பேசினாலும், உணர்ச்சிவசப்பட்டால் காலில் விழுகவும் தயங்காத பெட்டிஷன் மணியும்தான் படத்தின் பிரதான கேரக்டர்கள்..! கதை இவர்களாலேயே அவ்வப்போது நகர்த்தப்படுகிறது..!

கடையில் இருந்து வெளியேறச் சொல்லும்போது போராட்டம் வெடிக்கும் என்று அறிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் பெட்டிஷன் மணியை ஏதோ பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது.. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் இந்தப் புண்ணியவான்தான் எழுதியிருக்கிறார். 2 முக்கிய பாடல்களையும் இவரேதான் பாடியிருக்கிறார். 

துவக்கத்தில் இவர் செய்யும் அலம்பல்களுக்கு ஒட்டு மொத்த பதிலடியாக காதல் தோல்வியால் சரக்கடிக்க வந்திருக்கும் இளைஞன், இவரிடம் பெண்களைப் பற்றிப் பேசும்பேச்சில் தியேட்டரே அதிர்கிறது..! இதற்கு மணி கொடுக்கும் ரியாக்ஷன்தான் சூப்பர்..!

ஓசி சரக்கடிக்கும் நபர், ஒவ்வொருவரின் சோகத்திலும் பங்கெடுத்துக் கொள்வதுபோல தானும் கொஞ்சம் லவட்டிக் கொள்வது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது..! ஒவ்வொரு பாரிலும் இப்படியும் ஒருத்தன் நிச்சயம் இருப்பான் என்கிறார்கள் வலையுல பார் அனுபவஸ்தர்கள்.. 

துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் ஒரே இடத்தைத்தான் காண்பிக்கப் போகிறோம் என்பதை முதலிலேயே முடிவு கட்டிவிட்டதால் காட்சிகளை மாற்றிப் போட்டு, கதாபாத்திரங்களையும் மாற்றி, மாற்றி வரவழைத்து, வசனத்தில் தேனையும், மிளகாயையும் குழைத்து, ஒரு சைட் டிஷ்ஷாக அளித்திருக்கிறார் இயக்குநர்..! படத்தின் பிற்பாதியில் கொஞ்சம் அலுப்புத் தட்டியது என்னவோ உண்மைதான்.. இருந்தாலும் பெட்டிஷன் மணியின் புண்ணியத்தில் அது சிறிது நேரத்திலேயே காணாமலும் போனது..!

இவ்வளவு களேபரத்திலும் சப்ளையரின் காதல் காட்சியில் ஒரு அதீத உடற்சேர்க்கைக்கான முன்னுரை காத்திருப்பதை முதல் காட்சியிலேயே உணர்த்துகிறார் இயக்குநர்.. காதலர்களின் லிப் டூ லிப் காட்சி இதனாலேயே கொஞ்சமும் அதிர்ச்சியைத் தரவில்லை.. அதான் முன்னாடியே எதிர்பார்த்தோமோ என்பதாலும், காதலர்கள் ஊரைவிட்டுக் கிளம்பும் இறுதிக் காட்சியும் மனதில் நிற்காமலேயே போய்விட்டது..!





இயக்குநரின் இயக்குதல் திறமை பல இடங்களில் பளீச்சிடுகிறது..! டாஸ்மாக் வாசலில் கடை திறக்க லேட்டாவது குறித்து எழும் சர்ச்சை.. வாத்தியார், பையன்கள் காட்சிகள்.. சண்டைக் காட்சியை படமெடுத்த கேமிரா கீழே தள்ளப்பட்டவுடன் அப்படியே நிலைகுத்தி நிற்க.. யாரோ தூக்கிவிட்ட பின்பு மீண்டும் சரியான இடத்துக்கு வந்து நிற்பது.. பார் ஓனர் தனது மகளின் முத்தக் காட்சியை பார்த்துவிட்ட பின்பும் அமைதி காத்து, அடியாட்கள் மூலம் காதலனை அடிக்க செட்டப் செய்யும் காட்சி.. என்று பல இடங்களில் இயக்குதலை ரசிக்க முடிகிறது..!

பாலை படத்தின் இசையமைப்பாளர் வேத்ஷங்கர்தான் இதற்கும் இசை. 4 பாடல்களில் 3 ஓகே ரகம்தான்.. பின்னணி இசையை சில இடங்களில் உலாவ்விட்டும், பல இடங்களில் அடித்து ஆடவும் அனுமதித்திருக்கிறார் இயக்குநர். உதாரணத்திற்கு சப்ளையர்களை வாடா போடா என்றழைக்கும் அந்த கேரக்டரின் வருகையின்போதும், பெட்டிஷன் மணியிடம் டிப்டாப் இளைஞன் சரக்கை ஆட்டையைப் போடும் காட்சியிலும் இசையை கேட்டுப் பாருங்கள்.. பாருக்குள் அடிதடி நடக்கும்போது அத்தனையையும் நிறுத்திவிட்டு நம்மை யோசிக்கவும் வைக்கிறார்கள்..!

சமரசம் உலாவும் இடமே பாடல் காட்சியை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள். கூடவே அப்பாடல் காட்சியிலேயே அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.. “கள்ளுக் குளம் வெட்டி ராமன் குளிச்சதும்” பாடலை இறுதி டைட்டில் காட்சிகளில் போட்டதற்குப் பதிலாக படத்தின் நடுவிலேயே வைத்திருக்கலாம்.. மிக இனிமையாகவும் இருந்தது..

ஒரு பாரின் உள்ளரங்கை கச்சிதமாக நிர்மாணித்தது.. தப்பும் தவறுமாக தமிழில் எழுதி வைத்திருப்பது.. எதற்கும் அஞ்சாத சப்ளையர்கள் மனநிலை.. உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கேன் என்பது போன்ற அவர்களது தொடர்ச்சியான பேச்சுக்கள்.. அடாவடியாக பேசும் ஆளை சோத்துக் கையாலேயே அடித்துவிரட்டுவது.. கடை மூட இன்னும் 10 நிமிஷம் இருக்கு என்று டாஸ்மாக்கிற்கு வந்து சட்டம் பேசும் குடிமகன்கள்.. மாமூவை வெட்கமில்லாமல் வந்து வாங்கிச் சொல்லும் கான்ஸ்டபிள்.. டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு காலையிலேயே பொய் சொல்லி காசு வாங்கி வந்துவிட்டு.. தலைகுனிந்த நிலையிலேயே அமர்ந்திருக்கும் இளைஞன்.. ராமர் வேடத்தில் இருப்பவனை பிச்சைக்காரனை போலவும், அனுமாரை அவனுக்காக கட்டிங் வாங்கிக் கொடுக்கும் ஆளாகவும் காட்டியிருப்பது.. மதுவில் கலப்படம் செய்வது.. குடிகாரர்களின் பேச்சுக்கள் அனைத்தையும் குடியினால் விளைந்த பேச்சாகவே எடுத்துக் கொள்வதாக படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் காட்டியிருக்கும் வசனங்கள்.. என்று இது அனைத்திலும் இயக்குநரின் கைவண்ணம் அமோகம்..!

டிஜிட்டல் கேமிரா.. முற்றிலும் புதுமுகங்கள்.. சின்ன பட்ஜெட்.. இதனாலேயே இந்தப் படத்தை ஓஹோ என்று சொல்லலாமா என்கிறார்கள்..! டிஜிட்டலில் படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக இது போன்ற கதைகளை படமாக்கலாமா என்று திட்டுபவர்களும் உண்டு..! ஆனால் இது போன்ற “குறிப்பாக எது பற்றியும் இல்லாத - நான் லீனியர் வகை திரைப்படங்கள்” தமிழுக்கு நிச்சயம் புதுசுதான்.. 

இதையே ஒரு கோவில், ஒரு பள்ளிக்கூடம், ஒரு மருத்துவமனை என்று அமைத்திருந்தால் படம் சாதாரண தமிழ்ப் படங்களைப் போல பிரித்து மேய்ந்திருக்கலாம்.. ஆனால் இது டாஸ்மாக் பாராகவே அமைந்துவிட்டதால் இந்தக் குடிகாரர்களின் சேட்டைகளையும், அனுபவங்களையும், விரோதங்களையும், பேச்சுக்களையும், சோகங்களையும், தாகங்களையும் தமிழகத்துப் பெண்கள் பார்க்க முடியாமல் போய்விட்டது என்பது சோகம்தான்..!

“இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தாலே எப்படியும் பெண்கள் வர மாட்டார்களே.. பின்பு எப்படி தைரியமாக வைத்தீர்கள்..?” என்று இயக்குநரிடம் பிரஸ் மீட்டிலேயே கேட்டேன்.. “இது எனக்கும் தெரியும்தான்.. ஆனால் படம் வெளியான பின்பு மெளத் டாக்கினால் நிச்சயம் வருவார்கள்..” என்றார் உறுதியாக.. இப்போது வருகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்..! ஆனால் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும்..!

கதையை விட்டுத் தள்ளுங்கள்.. ஆனால் இயக்கம் சூப்பர்..! தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு சிறந்த புதுமுக இயக்குநர் கிடைத்திருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல்லாம்..! அடுத்தடுத்த படங்களில் இந்த இயக்குநர் புதுவித கதைகளில் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்..!

26 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

நீங்க சென்னை தானே எதுக்கு மதுராந்தகம் போய் மதுரை பஸ்ஸுக்கு நின்னிங்க ஒன்னுமே புரியலை ,மதுபானக்கடை வேலையை காட்டிடுச்சா :-))

மதுரை பஸ் எல்லாம் பை பாஸ் மேலேயெ போயிடும் ஏரிக்கரை ஓரம் வந்து காத்தோட்டம நின்னு இருந்திருக்கலாம் :-))

மதுபானக்கடை வித்தியாசமான்ன முயற்சி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை ,படம் பார்த்த பின்னரே இயக்குனரின் திறமையை பற்றி சொல்ல முடியும், ஏன்ன எங்க ஏரியா சப்ஜெட்க்ட் ஆச்சே ,தப்பா எடுத்த விட்ருவமா :-))

படம் 2 நாள் கூட தியேட்டரில் நிக்கலைனு ஒரு பேச்சு.

குரங்குபெடல் said...

வவ்வால் அண்ணே . .

"மது" ரை . .

"மது" ராந்தகம் . .


மதுபானக்கடை . .



காலையிலேயே கடைக்கு அனுப்பிடுவ போலிருக்கே . .

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, நீங்க சென்னைதானே.. எதுக்கு மதுராந்தகம் போய் மதுரை பஸ்ஸுக்கு நின்னிங்க.. ஒன்னுமே புரியலை, மதுபானக்கடை வேலையை காட்டிடுச்சா :-))]]]

ஸாரி.. அது பெருங்களத்தூர்.. மாத்திட்டேன்..!

[[[மதுபானக்கடை வித்தியாசமான்ன முயற்சி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை, படம் பார்த்த பின்னரே இயக்குனரின் திறமையை பற்றி சொல்ல முடியும், ஏன்ன எங்க ஏரியா சப்ஜெட்க்ட் ஆச்சே, தப்பா எடுத்த விட்ருவமா :-))]]]

சீக்கிரமா பாருங்க பிரதர்..!

[[[படம் 2 நாள் கூட தியேட்டரில் நிக்கலைனு ஒரு பேச்சு.]]]

உம்மை மாதிரி ஆளுகதான்யா பொதுமக்களை குழப்புறீங்க..? மொதல்ல உங்களைத்தான் நாலு சாத்து சாத்தணும்.. பெரும் குடிமகன்களின் பேராதரவுடன் வெற்றிகரமா 4-வது நாளை தாண்டியிருக்கு படம்.. 50, 60, 70 சதவிகிதம் புல்லுல போயிட்டிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

வவ்வால் அண்ணே . .

"மது" ரை . .

"மது" ராந்தகம் . .

மதுபானக்கடை . .

காலையிலேயே கடைக்கு அனுப்பிடுவ போலிருக்கே.]]]

குரங்கு பெடல்ஜி.. நல்ல கூர்மையான பார்வையா உமக்கு..? காலையிலேயே சரக்கா..?

ஜெட்லி... said...

//[[[படம் 2 நாள் கூட தியேட்டரில் நிக்கலைனு ஒரு பேச்சு.]]]

உம்மை மாதிரி ஆளுகதான்யா பொதுமக்களை குழப்புறீங்க..? மொதல்ல உங்களைத்தான் நாலு சாத்து சாத்தணும்.. பெரும் குடிமகன்களின் பேராதரவுடன் வெற்றிகரமா 4-வது நாளை தாண்டியிருக்கு படம்.. 50, 60, 70 சதவிகிதம் புல்லுல போயிட்டிருக்கு..!//


கணபதிராம்ல ரெண்டு நாள்ல தூக்கிட்டாங்க முருகா....
மிரட்டல் போட்டு இருக்காங்க... ஆனா நான் இன்னைக்கு கண்டிப்பா
போறேன் டாஸ்மாக்...

rajasundararajan said...

//2 சப்ளையர்கள்.. இதில் ஒருவன் டாவடிக்கும் பார் ஓனரின் மகள்..//

தம்பி, நானும் பழந்தமிழ் வளர்த்த பழைய பாண்டியநாட்டு எல்கைக்குள் பிறந்தவன்தான், ஆனால் நம்மைப் போலத் தமிழைக் குழப்ப வேறு எந்தத் தமிழனுக்கும் தெரியாது பாருங்கள்! நாகர்கோவில் பக்கத்து ஆட்களுக்கு இந்தக் குழப்பம் இல்லை, அதனால்தான் புறநானூற்றுத் தொகுப்பில் சேரர்களைப் பாடுகிற பாடல்களை முதலில் வைத்தார்கள் போலும்!

செயப்பாட்டு வினை என்று ஒன்று இருக்கிறதைப் பாண்டிநாட்டு மக்களும் நினைவுகொள்ள வேண்டும் என்பது என் கோரிக்கை. /இரண்டு சப்ளையர்கள்; இவர்களில் ஒருவனால் டாவடிக்கப் படும் பார் ஓனரின் மக்ள்/ என்று எழுதலாமா? இதில் கூட டாவடிக்கப்படுகிற ஆள் பார் ஓனர் என்று அர்த்தமாகிற்தே! வாசிக்கிறவன், பார் ஓனர் எதாவது சொர்ணக்கா என்று எடுத்துக்கொள்ளப் போகிறான். என்றால் /இவர்களில் ஒருவனால் டாவடிக்கப் படுகிறவள் பார் ஓனரின் மகள்/

ஒன்று எழுதினால் அதில் உள்ள ஸப்ஜெக்டைப் பேசுவதற்குத் தமிழில் ஆளில்லையாம்; ஒரே ஒரு வார்த்தையில் தவறு கண்டு பிடித்துக் குவிகிற கடிதங்கள் ஏராளமாம். இப்படி சுந்தரராமசாமி சொன்னதாக ஜெயமோகன் எழுதி இருக்கிறார்.

வவ்வால் said...

அண்ணாச்சி ,

பெருங்களத்தூரா ஓ.கே.ஓ.கே ,அங்கே தான் நானும் பஸ் புடிக்கணும், ஸ்டாப்பிங்க்க்லவே ஒரு அரசு மதுபான கடை இருக்கும், பெரும்பாலும் சரக்குப்போட்டு தான் நிறைய பேரு பஸ் ஏறுவாங்க ...ஹி..ஹி இரவு பயணம் என்றால் அடியேனும் யாத்திரையை "தீர்த்த" யாத்திரை ஆக்கிவிடுவதுண்டு :-))

பகலில் தீர்த்தம் சாப்பிட்டா வேர்த்துக்கொட்டுமே , ஆனாலும் அந்த புண்ணியவான் வெயிலிலும் சரக்கடிக்க துடிச்சு இருக்கார் :-))

வெயில் நேரத்துல தீர்த்தம் சாப்பிடும் அளவுக்கு இன்னும் போகலை ... டென்சன் ஆனா மட்டும் பகல் நேரத்தில் பழரசம் :-))

-------

நல்லாப்பாருங்க ,பிரபல ஸினிமா விமர்சகர் ஜெட்லியே மதுபான கடையின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டார்.

ஜெட்லி என்னாச்சு இப்போலாம் முதல் நாள் முதல் ஷோ படம் பார்ப்பதை நிறுத்தியாச்சா? பதிவு ஒன்னும் கண்ணுல படவேயில்லை?

வவ்வால் said...

////2 சப்ளையர்கள்.. இதில் ஒருவன் டாவடிக்கும் பார் ஓனரின் மகள்..//

ராஜா சுந்தர்ராஜன்,

கண்டுப்பிடிச்சுட்டார் கம்பர் :-))

இதையே நான் சொன்னால் குறை சொல்லவே வரான்னு சொல்லி இருப்பார் :-))

//2 சப்ளையர்கள்.. இதில் ஒருவன் டாவடிப்பது பார் ஓனரின் மகளை..//

என மாற்றினால் சரியாகிடும் சார் !

படத்தின் களன் மது பான கூடம் என்பதால் அண்ணாச்சிக்கும் லேசா மப்பு ஏறிடுச்சு போல :-))

rajasundararajan said...

/இதில் ஒருவனை டாவடிக்கும் பார் ஓனரின் மகள்/ என்பதே அவர் சொல்ல வந்த வாக்கிய அமைப்புக்குச் சரி. சும்மா, சீண்டுகிறதற்காக ஒரு கதை எழுதினேன்.

ஜெட்லி... said...

@வவ்வால்

//ஜெட்லி என்னாச்சு இப்போலாம் முதல் நாள் முதல் ஷோ படம் பார்ப்பதை நிறுத்தியாச்சா? பதிவு ஒன்னும் கண்ணுல படவேயில்லை?//

என்ன பண்றது ஜி...படம் பாக்குற இன்ட்ரஸ்ட் கொஞ்சம் குறைஞ்சிடிச்சு...

வவ்வால் said...

ஜெட்லீ,

இன்ட்ரஸ்ட் கொறஞ்சு போச்சா ,அய்யயோ அப்போ இனிமே மொக்கைப்படங்களின், ஒரு டிக்கெட் போச்சே,இனிமே தமிழ் சினிமாவின் எதிர்கால்ம் சந்தேகம் தான்.

மிரட்டல் பதிவில் காரணம் சொல்லியிருந்தைப்பார்த்தேன்... குயிலைப்புடிச்சு கூட்டில் அடைத்தா அது எப்படி படம் பார்க்குமைய்யா ..ஓ..ஓ

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...

கணபதிராம்ல ரெண்டு நாள்ல தூக்கிட்டாங்க முருகா. மிரட்டல் போட்டு இருக்காங்க. ஆனா, நான் இன்னைக்கு கண்டிப்பா போறேன் டாஸ்மாக்.]]]

மிரட்டலுக்காக தூக்கியிருப்பாங்க.. அது பெரிய பட்ஜெட் படமாச்சே..?

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

//2 சப்ளையர்கள்.. இதில் ஒருவன் டாவடிக்கும் பார் ஓனரின் மகள்..//


/இரண்டு சப்ளையர்கள்; இவர்களில் ஒருவனால் டாவடிக்கப் படும் பார் ஓனரின் மக்ள்/ என்று எழுதலாமா? இதில்கூட டாவடிக்கப்படுகிற ஆள் பார் ஓனர் என்று அர்த்தமாகிற்தே! வாசிக்கிறவன், பார் ஓனர் எதாவது சொர்ணக்கா என்று எடுத்துக்கொள்ளப் போகிறான். என்றால் /இவர்களில் ஒருவனால் டாவடிக்கப் படுகிறவள் பார் ஓனரின் மகள்/]]]

திருத்திவிட்டேன் புலவரே..! நீங்களெல்லாம் இந்த பார் புகழும் வலையுலகத்தில் இருக்கிறீர்கள் என்று கொஞ்சம் மறந்து போய்விட்டேன்.. மன்னியுங்கள்..!

இதுக்கு இவ்ளோ பெரிய கமெண்ட் தேவையா..?

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, பெருங்களத்தூரா ஓ.கே.ஓ.கே, அங்கேதான் நானும் பஸ் புடிக்கணும், ஸ்டாப்பிங்க்க்லவே ஒரு அரசு மதுபான கடை இருக்கும், பெரும்பாலும் சரக்குப் போட்டுதான் நிறைய பேரு பஸ் ஏறுவாங்க. ஹி..ஹி இரவு பயணம் என்றால் அடியேனும் யாத்திரையை "தீர்த்த" யாத்திரை ஆக்கிவிடுவதுண்டு :-))]]]

எங்க பயணமும் இப்படித்தான் நடந்தது வவ்வால்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...
//2 சப்ளையர்கள்.. இதில் ஒருவன் டாவடிக்கும் பார் ஓனரின் மகள்..//

ராஜா சுந்தர்ராஜன், கண்டு பிடிச்சுட்டார் கம்பர் :-)) இதையே நான் சொன்னால் குறை சொல்லவே வரான்னு சொல்லி இருப்பார் :-))]]]

வவ்வால்ஜி.. புலவர் உங்களுக்கு அறிமுகமெனில் கிண்டல் செய்யலாம். இல்லையென்றால் வேண்டாம்.. விட்ருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

/இதில் ஒருவனை டாவடிக்கும் பார் ஓனரின் மகள்/

என்பதே அவர் சொல்ல வந்த வாக்கிய அமைப்புக்குச் சரி. சும்மா, சீண்டுகிறதற்காக ஒரு கதை எழுதினேன்.]]]

ஓகேண்ணே.. எனக்குத் தெரியாதா என்ன..? விடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

ஜெட்லீ, இன்ட்ரஸ்ட் கொறஞ்சு போச்சா, அய்யயோ அப்போ இனிமே மொக்கை படங்களின், ஒரு டிக்கெட் போச்சே, இனிமே தமிழ் சினிமாவின் எதிர்கால்ம் சந்தேகம்தான். மிரட்டல் பதிவில் காரணம் சொல்லியிருந்தைப் பார்த்தேன். குயிலைப் புடிச்சு கூட்டில் அடைத்தா அது எப்படி படம் பார்க்குமைய்யா. ஓ. ஓ]]]

ம்ஹூம்.. நீர் அடங்க மாட்டீரு வவ்ஸ்ஜி..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

முருகா ,ஞானப்பண்டிதான்னு சொல்லிக்கிட்டு "தீர்த்த "யாத்திரையா நல்ல முன்னேற்றம் தான் போங்கோ :-))

அந்த டாஸ்மாக்கில் பின் பக்கம் இரும்பு ஏணியில் ஏறிப்போனால் ஏ.சி பார் இருக்குமே அங்கே போனிங்களா ,ஒரு தலைக்கு ஒரு மணிக்கு 30 ரூ புடுங்கிடுவானுங்களே :-))

, இல்லை கீழ குப்பையில ஸ்டூல் போட்டு வச்ச இடத்திலயே மேட்டரை முடிச்சிட்டிங்களா?

//வவ்வால்ஜி.. புலவர் உங்களுக்கு அறிமுகமெனில் கிண்டல் செய்யலாம். இல்லையென்றால் வேண்டாம்.. விட்ருங்க..!//

சுதந்திரம் தான் பொறந்தது மிட் நைட்டுல ,கருத்து சொதந்திரம் தான் தவிக்குது இருட்டிலே ...!

//ம்ஹூம்.. நீர் அடங்க மாட்டீரு வவ்ஸ்ஜி..!//

அடக்கமாகும் வரையில் அடங்காமல் இருப்பதே உயிர்த்திருத்தலின் அடையாளம்!

அடக்கம் அமரருள் வைக்கும் ,அடங்காமை ஆரிருள் வவ்வாலாய் உய்த்துவிடும்!

சூனிய விகடன் said...

இது தினமலர் செய்தி


இந்துக்கள் மனதை புண்படுத்தும் மதுபானக்கடை!


சமீபத்தில் வெளிவந்த படம் மதுபானக்கடை. ஒரு டாஸ்மாக் பாருக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாருக்கு மது அருந்தவரும் விதவிதமான மனிதர்களின் செயல்பாடுகளை நகைச்சுவையாக காட்டி அதற்குள் ஒரு காதல் கதையை சொல்கிறார்கள். இந்தப் படத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இந்து அமைப்பு பிரமுகர் ஒருவர் கூறியதாவது: பாருக்கு மது அருந்த வரும் நபர்களில், அனுமன், ராமர் வேடமணிந்து பிச்சை எடுக்கும் இரண்டு பேரும் உண்டு. இவர்கள் அனுமன், ராமர் வேடத்திலேயே பாருக்குள் வந்து மது அருந்துவதோடு, அசைவமும் சாப்பிடுகிறார்கள். புகைபிடிக்கிறார்கள். மதுவுக்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல அனுமன் வேடத்தில் இருப்பவரிடம் ஒருவர் வந்து அவரை வணங்கி, "எனக்கு 40 வயதாகிறது இதுவரை திருணம் நடக்கவில்லை, பெண்ணும் கிடைக்கவில்லை. நீங்கள்தான் ஆசீர்வாதம் செய்து விரைவில் திருமணம் நடக்க உதவ வேண்டும்" என்கிறார். அதற்கு அனுமன் வேடத்தில் இருப்பவர் "நானே திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருக்கிறேன். நீ இந்த கோரிக்கையை முருகன், கிருஷ்ணனிடம்தான் வைக்க வேண்டும்" என்பார். அதற்கு அந்த நபர் "அவர்கள் எல்லாம் இரண்டு மூன்று திருமணம் பண்ணினவர்கள். எனக்கு பார்த்த பெண்ணையும் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்" என்கிறார். இதில் சில வார்த்தைகள் மவுனிக்கப்பட்டிருந்தாலும் இதுதான் வசனம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படத்தில் அவர்கள் கடவுள் வேடத்தை கலைத்து விட்டு மது அருந்துவதாக காட்டியிருந்தால் பரவாயில்லை. ஆனால் இது திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பது போலவே தெரிகிறது" என்றார்
இந்து கடவுள்களை கிண்டல் செய்வதும், அவமானப்படுத்துவதும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார்கள். இந்து அமைப்பு நிர்வாகிகள்.
இதைப் பற்றி நீங்கள் எதுவுமே குறிப்பிடவில்லையே..... குறிப்பிடுமளவுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா..அப்படீங்கற மாதிரி நெனைக்கிறீங்களா ...இல்ல இதப்பத்தி எழுதினால் பதிவுலக விதிப்படி உங்களை இந்து வெறியர் என்று சொல்லி டோண்டுவுடன் சேர்த்து விடுவார்களோ என்று தயக்கமா...

அல்லது ...நீங்கள் பார்த்த தியேட்டரில் இதையெல்லாம் வெட்டிவிட்டார்களா ?

திண்டுக்கல் தனபாலன் said...

நான் படம் பார்க்கவில்லை... உங்களின் பதிவு படம் பார்த்த திருப்தி... நன்றி...

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...

@வவ்வால்

//ஜெட்லி என்னாச்சு இப்போலாம் முதல் நாள் முதல் ஷோ படம் பார்ப்பதை நிறுத்தியாச்சா? பதிவு ஒன்னும் கண்ணுல படவேயில்லை?//

என்ன பண்றது ஜி. படம் பாக்குற இன்ட்ரஸ்ட் கொஞ்சம் குறைஞ்சிடிச்சு.]]]

குடும்பஸ்தன் ஆனதுக்கு முதல் பலியாடு சினிமாதானா..? பர்ஸ்ட் ஷோ இனி தேவையில்லை.. இனி எப்போதும் வேண்டாம். ஆனால் நான் ஈ போன்ற படங்களை மிஸ் செய்ய வேண்டாம் தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, முருகா, ஞானப் பண்டிதான்னு சொல்லிக்கிட்டு "தீர்த்த "யாத்திரையா நல்ல முன்னேற்றம்தான் போங்கோ:-)]]]

நான் செய்வனா வவ்ஸ்ஜி..?!

[[[அந்த டாஸ்மாக்கில் பின் பக்கம் இரும்பு ஏணியில் ஏறிப் போனால் ஏ.சி பார் இருக்குமே அங்கே போனிங்களா, ஒரு தலைக்கு ஒரு மணிக்கு 30 ரூ புடுங்கிடுவானுங்களே :-))]]]

நல்ல வேளை போகலை.. தப்பிச்சோம்..!

//வவ்வால்ஜி.. புலவர் உங்களுக்கு அறிமுகமெனில் கிண்டல் செய்யலாம். இல்லையென்றால் வேண்டாம்.. விட்ருங்க..!//

சுதந்திரம்தான் பொறந்தது மிட் நைட்டுல, கருத்து சொதந்திரம்தான் தவிக்குது இருட்டிலே...!]]]

அப்படியில்லை.. தெரியாதவர்ன்னு கொஞ்சமும் கிண்டல் செய்யாமயே பேசலாம்..!

//ம்ஹூம்.. நீர் அடங்க மாட்டீரு வவ்ஸ்ஜி..!//

அடக்கமாகும் வரையில் அடங்காமல் இருப்பதே உயிர்த்திருத்தலின் அடையாளம்! அடக்கம் அமரருள் வைக்கும், அடங்காமை ஆரிருள் வவ்வாலாய் உய்த்துவிடும்!]]]

உம்மையெல்லாம் திருத்த முடியாது.. போய்த் தொலையும்..!

உண்மைத்தமிழன் said...

சூனிய விகடன்..

வெல்கம் பேக்.. ரொம்ப நாள் ஆச்சு நீங்க நம்ம வீட்டுப் பக்கம் வந்து..!

அதுல வந்திருக்கிறதெல்லாம் உண்மைதான்.. எனக்கு அது பெரிய விஷயமா தெரியலை..! அனுமார் வேஷம் போட்ட மனுஷன்னா காலைல கக்கா போக மாட்டானா..? ஒண்ணுக்கு வந்தா மேக்கப்பை கலைச்சுட்டுத்தான் போவானா..? விடுங்க ஸார்.. நாலு பேர் கத்தத்தான் செய்வான்.. கத்திட்டுப் போகட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[திண்டுக்கல் தனபாலன் said...

நான் படம் பார்க்கவில்லை... உங்களின் பதிவு படம் பார்த்த திருப்தி... நன்றி...]]]

அதுக்காக பார்க்காமல் இருந்திராதீங்க பிரதர்.. டைம் கிடைச்சா அவசியம் உடனே பார்த்திருங்க..!

ஜெட்லி... said...

//குடும்பஸ்தன் ஆனதுக்கு முதல் பலியாடு சினிமாதானா..? பர்ஸ்ட் ஷோ இனி தேவையில்லை.. இனி எப்போதும் வேண்டாம். ஆனால் நான் ஈ போன்ற படங்களை மிஸ் செய்ய வேண்டாம் //

thaniyavum,kudumbathudan rendu thadavai parthaachu annae...

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...

//குடும்பஸ்தன் ஆனதுக்கு முதல் பலியாடு சினிமாதானா..? பர்ஸ்ட் ஷோ இனி தேவையில்லை.. இனி எப்போதும் வேண்டாம். ஆனால் நான் ஈ போன்ற படங்களை மிஸ் செய்ய வேண்டாம் //

thaniyavum, kudumbathudan rendu thadavai parthaachu annae...]]]

ஆஹா... சந்தோஷம் தம்பி.. வாழ்க வளமுடன்..!