மிரட்டல் - சினிமா விமர்சனம்


03-08-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீப காலங்களில் வெற்றி பெற்றிருக்கும் நகைச்சுவை கலந்த காதல் கதை பட வரிசையில் அடுத்தப் படம் இது..! லாஜிக் பார்க்கவில்லையெனில் தலைவலி தராமல் ஜஸ்ட் டைம் பாஸ் எண்ட்டெர்டெயிண்மெண்ட்டாக கொடுத்து வெளியே அனுப்புகிறார்கள்..! நம்பிச் செல்லலாம்..!


2007-ம் ஆண்டு சீனு வைட்லா இயக்கத்தில் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, ஜெனிலியா டிசெளசா நடிப்பில் வெளிவந்த "Dhee" என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்குதான் இது..! 

வீட்டில் பொறுப்பில்லாமல் தண்டச்சோறு பட்டம் வாங்கிக் கொண்டு ஊர் சுற்றும் ஹீரோவை அவரது தந்தை சங்கர் தாதாவிடம் கொண்டு போய் தள்ளிவிடுகிறார். தினத்துக்கு ஒரு கொலை செய்து, அந்த ஊரிலேயே பெரிய டானாகத் திகழும் சங்கரின் அலுவலகத்தில் அன்றாடம் வசூலாகும் மாமூல் பணத்தை எண்ணும் வேலை ஹீரோவுக்கு கிடைக்கிறது.. சங்கர் தாதாவும் உள்ளூரின் இன்னொரு தாதாவான பிரதீப் ராவத்துக்கும் இடையில் ஜென்மப் பகை.. சங்கர் தாதாவின் அடியாள் ஒருவரை பிரதீப்பின் ஆட்கள் பொலி போட.. இதனால் கோப்ப்படும் சங்கர் பிரதீப்பின் மகனை தீர்த்துக் கட்டுகிறார். இப்போது பிரதீப் சங்கரின் தங்கையான ஹீரோயினை கொலை செய்யத் திட்டம் போடுகிறார். லண்டனில் படித்துக் கொண்டிருந்த தனது தங்கையை பாதுகாப்பிற்காக சென்னை அழைத்து வந்து பாதுகாத்து வருகிறார் சங்கர். இந்த நேரத்தில் எசகுபிசகாக ஹீரோ, ஹீரோயினை சந்தித்துவிட காதல் மலர்கிறது.. இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா.. சங்கர், பிரதீப் மோதலில் ஜெயித்தது யார் என்ற கேள்விக்கெல்லாம் பதில் வேணும்னா 120 ரூபாய் செலவழித்து தியேட்டருக்குப் போய் பார்த்துக்குங்க..!

படத்தின் துவக்கத்தில் இருந்தே லாஜிக் கிலோ என்ன விலை என்ற காட்சிகள்தான் அதிகம்..! இது கமர்ஷியல் கம்மர் கட் என்று துவக்கத்திலேயே உணர்ந்துவிடுவதால் உடனேயே கதையில் ஒன்ற முடிகிறது..!

படத்தின் ஹீரோவான வினய் ரொம்பவும் கஷ்டப்படாமல் வெகு இயல்பாக தனக்கு தோன்றியதை நடித்துக் காண்பித்திருக்கிறார்..! நகைச்சுவை என்று சொல்லியாகிவிட்டது.. பின்பு அதில் நடிப்பை எதுக்கு தேடுவானேன்..? போலீஸாக வேஷம் போடுவதில் துவங்கி.. அம்மாவிடம் கொஞ்சுவது.. சங்கரிடம் பயமில்லாமல் பேசுவது.. ஹீரோயினிடம் வழிவது.. சமாளிப்பது.. சந்தானத்தை அவ்வப்போது வாருவது என்று அத்தனை தில்லுமுல்லுகளையும் கச்சிதமாகச் செய்திருக்கிறார் வினய்.. 

ஹீரோயின் லண்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஷர்மிளா..! இதுதான் முதல் படம் என்றார்கள். பார்த்தால் அப்படி தெரியவில்லை..! வசன உச்சரிப்பு ஏ ஒன். ஒரு சின்ன பிழைகூட என் கண்ணுக்குத் தெரியவில்லை. டப்பிங் தெரியாத அளவுக்கு ஒன்றிப் போய் நடித்திருக்கிறார்..! பாடல் காட்சிகளில் கண்ணியமாகவே இவரை காண்பித்திருப்பதால் இவருக்கு அடுத்துத் தொடர்ந்து படங்கள் கிட்டுமா என்று தெரியவில்லை..! 

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது மூவரை.. பிரபு, சந்தானம், மன்சூரலிகான்..! தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸிலும் சக்கைப் போடு போடும் அண்ணன் பிரபு இதிலும் அப்படியே.. கொலை செய்யத் தயங்காத வில்லனாக.. பாசமிக்க அண்ணனாக.. டெக்னாலஜி தெரியாத தலைவனாக.. அப்பாவியாக என்று அனைத்திலும் பிரபுவாகவே நடித்திருக்கிறார்..! 

சந்தானம்.. வழக்கம்போல படத்தினை காப்பாற்றி கொடுத்திருக்கிறார். இதில் சந்தேகமில்லை..! வினய்யுடன் இணைந்து சாரி என்ற அய்யர் வேடத்தில் இவர் அள்ளி விடும் பஞ்ச்சுகள் வயிற்றை பதம் பார்க்கின்றன..! வினய் அவ்வப்போது சந்தானத்தை லின்க் செய்துவிடுவதும், அதற்கு அவர் பதறுகின்ற பதற்றமும் யதார்த்தமான நகைச்சுவை..! நல்ல பிளாட்பார்ம் கிடைத்தால் எந்த இடத்திலும் புகுந்து விளையாடலாம் என்பதற்கு கஞ்சா கருப்பு-சந்தானத்தின் காமெடி ஒரு நல்ல உதாரணம்..!

இதுவரையிலும் கழுத்தை அறுபது டிகிரி கோணத்திலும், உடலை எண்பது டிகிரி கோணத்திலும் திருப்பிக் கொண்டு ஒரு வினோதமான உடல் மொழியைக் காட்டி நடிக்கும் மன்சூரலிகான் இந்தப் படத்தில் ஈஸிசேரில் அமர்ந்திருக்கும் நோயாளியாக பெர்பெக்ட் ஆக்ட் கொடுத்திருக்கிறார்..! ஒரு வசனமில்லை.. கோபமில்லை.. விழி உருட்டல் இல்லை.. ஆனால் பேச முடியாத தனது இயலாமையை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார் மன்சூரலிகான்..!

அவருடைய குறைபாட்டை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு வினய் அவரை பாடாய்படுத்துவதும்.. ஹீரோ, ஹீரோயின் காதல் பற்றி தெரிந்தும் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் அந்தப் பரிதவிப்பும் கொஞ்சூண்டு நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறது..! இவருக்கு அடுத்து கஞ்சா கருப்பு, பாண்டியராஜன், பிரதீப் ராவத் மூவரும் தங்களது கேரக்டருக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.. 

வினய் வருகின்ற காட்சிகளிலெல்லாம் டிவிஸ்ட்டுகள் வரிசையாக வலம் வந்து கொண்டிருக்க.. படம் வேகமாகவே நகர்கிறது..! முடிவில் எப்போதுதான் உண்மை வெளி வருமோ என்று நம்மையே ஏங்க வைத்துவிட்டார்கள்..! இது மாதிரியான நகைச்சுவை படங்களில் லாஜிக் பார்ப்பதே வேஸ்ட்டு.. அப்படி பார்த்தால் இந்தப் படத்தில் காட்சிக்கு காட்சி குப்பை என்றே சொல்வதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஆனால் அது தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்..!

ஒரு நல்ல எண்ட்டெர்டெயிண்மெண்ட்டுக்கு நாம் இதைவிடவும் அதிகமாக எதிர்பார்க்க முடியாது..! பிற்பாதியில் படத்தின் வேகத்திற்கு தடையாக இருப்பது பாடல்கள்தான்.. முற்பாதியில் 1 பாடல்.. பிற்பாதியில் 3 பாடல்கள் என்று கலந்து கட்டியிருப்பதால், பிற்பாதி ரொம்ப நீளமோ என்ற பீலிங்கை தந்தது..! பாடல்களைவிட பாடல் காட்சிகள் ரசனையோடுதான் எடுக்கப்பட்டுள்ளன. தனது இடுப்பை மட்டுமே ஆட்டியிருக்கும் ஷர்மிளாவுக்கு சுட்டுப் போட்டாலும் டான்ஸ் வரவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..! சீக்கிரமே கத்துக்கலைன்னா வீட்ல உக்காந்து டிவி பார்க்க வேண்டியதுதான் அம்மணி..!

டி.கண்ணனின் ஒளிப்பதிவையும் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்..! வெளிநாட்டு லொகேஷன்களை படமாக்கியவிதம் அசத்தல்.. அந்த ஊர்ல அப்படியிருக்கு.. அப்படியே ரோட்டுல இலையைக்கூட போடாம சாதம் போட்டு விருந்து சாப்பிடலாம் போலிருக்கு..! படத்தின் வேகத்திற்கு எடிட்டரின் கத்திரிக்கோல் கடுமையாக உழைத்திருக்கிறது எனலாம்..!  இசையமைப்பாளர் பிரவீண் மணியின் உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்ததா என்று தெரியவில்லை..! ஆனால் பாடல்கள் எதுவும் மனதில் நிற்காமல் போனது ஏன் என்றுதான் தெரியவில்லை..!

'தில்லுமுல்லு' என்று முதலில் பெயர் வைத்திருந்துவிட்டு பின்பு அதற்கான ஒப்புதல் கிடைக்காததால், பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள்..   தயாரிப்பாளருக்கு போட்ட காசு திரும்பி வரணும்.. அதே சமயம் பணத்துக்காக சிற்றின்பத்தை மலிவாகத் தூண்டிவிடும் படமாகவும் இருக்கக் கூடாது..! மசாலாவில் நல்ல மசாலாவாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து படமெடுத்திருக்கும் மாதேஷின் இந்தப் படம் சிறந்த பொழுதுபோக்கைத் தருகிறது என்பது மட்டுமே உண்மை..!

16 comments:

திருவாரூர் சரவணா said...

மாதேஷ் விஜயை வைத்து 2004ல் மதுர என்ற படத்தை இயக்கினார்.(தயாரிப்பும் அவர்தான் என்று நினைக்கிறேன்.) இதில் தேஜாஸ்ரீ, ரக்சிதாவை வைத்து கவர்ச்சி விருந்து படைத்திருப்பார்.

2001ல் பிரசாந்த் நடித்த சாக்லேட் படத்தின் கதை எழுதி தயாரித்த போது அதிலும் மலை மலை என்று பாடல் வைத்து புண்ணியம் கட்டிக்கொண்டவர்.

இந்த படத்தில் அதெல்லாம் இருக்கா இல்லையா.

குறும்பன் said...

\\லண்டனில் படித்துக் கொண்டிருந்த தனது தங்கையை பாதுகாப்பிற்காக சென்னை அழைத்து வந்து பாதுகாத்து வருகிறார் சங்கர்\\
இலண்டனில் படிக்கிறது தமிழில் இருக்கலாம் (நம்மாளுக்கு வெளிநாட்டு மோகம் அதிகமப்பா) தெலுங்கில் அப்படி இல்லை.

வவ்வால் said...

//இதுதான் முதல் படம் என்றார்கள். பார்த்தால் அப்படி தெரியவில்லை..! வசன உச்சரிப்பு ஏ ஒன். ஒரு சின்ன பிழைகூட என் கண்ணுக்குத் தெரியவில்லை. டப்பிங் தெரியாத அளவுக்கு ஒன்றிப் போய் நடித்திருக்கிறார்..!

//

கவனிப்பு ரொம்ப பலம் போல.டப்பிங்னு சொல்லிட்டு வசன உச்சரிப்பு ஏ ஒன் சொல்றிங்க :-))

ரொம்ப நாளா பொட்டீல தூங்கிட்டிருந்த படம் ,இந்த கதை ,காட்சிகள் பலப்படத்தில் வந்து போச்சு .

திண்டுக்கல் தனபாலன் said...

படம் பார்க்கவில்லை நண்பரே...
விளக்கமான விமர்சனம்...

(த.ம. 3)

ஜெட்லி... said...

//இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா.. சங்கர், பிரதீப் மோதலில் ஜெயித்தது யார் என்ற கேள்விக்கெல்லாம் பதில் வேணும்னா 120 ரூபாய் செலவழித்து தியேட்டருக்குப் போய் பார்த்துக்குங்க..!//

ஒண்ணும் தெரிஞ்சிக வேணாம்.....
வேணும்னா பாஸ் வாங்கி கொடுங்க...

உண்மைத்தமிழன் said...

[[[திருவாரூர் சரவணன் said...

மாதேஷ் விஜயை வைத்து 2004ல் மதுர என்ற படத்தை இயக்கினார்.(தயாரிப்பும் அவர்தான் என்று நினைக்கிறேன்.) இதில் தேஜாஸ்ரீ, ரக்சிதாவை வைத்து கவர்ச்சி விருந்து படைத்திருப்பார்.

2001ல் பிரசாந்த் நடித்த சாக்லேட் படத்தின் கதை எழுதி தயாரித்த போது அதிலும் மலை மலை என்று பாடல் வைத்து புண்ணியம் கட்டிக் கொண்டவர். இந்த படத்தில் அதெல்லாம் இருக்கா இல்லையா.]]]

இதில் அப்படி எதுவும் இல்லை சரவணன்.. குத்துப் பாடல் வைப்பதற்கு சிச்சுவேஷன் இருந்தும் வைக்கவில்லை.. ரொம்பத் திருந்திட்டாரோ..?

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...

\\லண்டனில் படித்துக் கொண்டிருந்த தனது தங்கையை பாதுகாப்பிற்காக சென்னை அழைத்து வந்து பாதுகாத்து வருகிறார் சங்கர்\\

இலண்டனில் படிக்கிறது தமிழில் இருக்கலாம் (நம்மாளுக்கு வெளிநாட்டு மோகம் அதிகமப்பா) தெலுங்கில் அப்படி இல்லை.]]]

அதையேன் கேக்குறீங்க.. சவுத் லண்டன் யுனிவர்சிட்டில படிச்சுக்கிட்டிருக்குற தங்கச்சியை அடியாட்களை வைச்சு துப்பாக்கி முனைல இந்தியாவுக்கு கடத்திட்டு வர்றாராம் சங்கர்.. எம்புட்டூ பெரிய பூவைச் சுத்தியிருக்காங்கன்னு யோசிச்சுப் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

//இதுதான் முதல் படம் என்றார்கள். பார்த்தால் அப்படி தெரியவில்லை..! வசன உச்சரிப்பு ஏ ஒன். ஒரு சின்ன பிழைகூட என் கண்ணுக்குத் தெரியவில்லை. டப்பிங் தெரியாத அளவுக்கு ஒன்றிப் போய் நடித்திருக்கிறார்..!

//கவனிப்பு ரொம்ப பலம் போல.டப்பிங்னு சொல்லிட்டு வசன உச்சரிப்பு ஏ ஒன் சொல்றிங்க :-))
ரொம்ப நாளா பொட்டீல தூங்கிட்டிருந்த படம். இந்த கதை, காட்சிகள் பலப்படத்தில் வந்து போச்சு]]]

வவ்வால்ஜி.. தமிங்கிலீஷ்ல எழுதி வைச்சு மனப்பாடம் பண்ணி நடிச்சாலும் உதடு உச்சரிப்பே சில பேருக்கு காட்டிக் கொடுத்திரும். அது மாதிரி இதுல ஒண்ணும் இல்லை..! படத்தைப் பார்த்திட்டு சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[திண்டுக்கல் தனபாலன் said...

படம் பார்க்கவில்லை நண்பரே...
விளக்கமான விமர்சனம்...]]]

நேரமிருந்தா பாருங்க ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...

//இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா.. சங்கர், பிரதீப் மோதலில் ஜெயித்தது யார் என்ற கேள்விக்கெல்லாம் பதில் வேணும்னா 120 ரூபாய் செலவழித்து தியேட்டருக்குப் போய் பார்த்துக்குங்க..!//

ஒண்ணும் தெரிஞ்சிக வேணாம்.
வேணும்னா பாஸ் வாங்கி கொடுங்க.]]]

எங்களுக்கே பாஸ் தர்றதில்லை பாஸ்.. வெறுமனே அழைப்பு மட்டும்தான்.. பிரிவியூ தியேட்டர்ல மட்டும்தான்..! நீங்க தியேட்டர்ல போயி பார்த்துட்டு வந்து சொல்லுங்களேன்..!

rajasundararajan said...

தெலுங்கு ஒரிஜினல் பார்த்திருக்கிறேன். நல்ல பொழுதுபோக்கு. நேற்று 'மதுபானக்கடை' போனதால் இது தவறிவிட்டது. என்னத்துக்கு 120 ரூபாய்? (உங்கள் தரம் உயர்ந்துவிட்டது என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்!) 'தேவி கருமாரி'யில் 60 ரூபாய்தான்.

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

தெலுங்கு ஒரிஜினல் பார்த்திருக்கிறேன். நல்ல பொழுதுபோக்கு. நேற்று 'மதுபானக்கடை' போனதால் இது தவறிவிட்டது. என்னத்துக்கு 120 ரூபாய்? (உங்கள் தரம் உயர்ந்துவிட்டது என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்!) 'தேவி கருமாரி'யில் 60 ரூபாய்தான்.]]]

அண்ணே.. நான் சொன்னது உங்கள மாதிரியானவங்களுக்குத்தாண்ணே.. நானெல்லாம் பார்த்தா ஓசி.. இல்லாட்டி தேவி கருமாரிதான்..!

சரி.. மதுபானக்கடை எப்படி..?

குருத்து said...

அதென்னவோ தெரியவில்லை. சில சமயங்களில் பதிவர்கள் கூட கவர் வாங்கிகொண்டு எழுதுவது போல பிரமை!

ஜெட்லி... said...

//ங்களுக்கே பாஸ் தர்றதில்லை பாஸ்.. வெறுமனே அழைப்பு மட்டும்தான்.. பிரிவியூ தியேட்டர்ல மட்டும்தான்..! நீங்க தியேட்டர்ல போயி பார்த்துட்டு வந்து சொல்லுங்களேன்..!
//

neenga enna promote pannalum naan poo porathillai annae... kalyanathukku maasam rendu padam pakkuruthae perusaa irukku...

உண்மைத்தமிழன் said...

[[[குருத்து said...

அதென்னவோ தெரியவில்லை. சில சமயங்களில் பதிவர்கள் கூட கவர் வாங்கி கொண்டு எழுதுவது போல பிரமை!]]]

பிரமைதானே..? முகத்துல கொஞ்சம் தண்ணி தெளிச்சிட்டு அப்புறமா யோசிங்க.. நிஜத்துக்கு வந்திருவீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...

//ங்களுக்கே பாஸ் தர்றதில்லை பாஸ்.. வெறுமனே அழைப்பு மட்டும்தான்.. பிரிவியூ தியேட்டர்ல மட்டும்தான்..! நீங்க தியேட்டர்ல போயி பார்த்துட்டு வந்து சொல்லுங்களேன்..!//

neenga enna promote pannalum naan poo porathillai annae... kalyanathukku maasam rendu padam pakkuruthae perusaa irukku...]]]

ஐயோ பாவம்.. ஒரு காலத்துல வாராவாரம் முதல் நாள் முதல் ஷோ பார்த்து எழுதின ஆளாச்சே நீங்க..? உங்களுக்கா இந்தக் கொடுமை.. வருந்துகிறேன் ஜெட்லி..!