ஜனவரி 29 - முத்துக்குமார் பற்றிய ஆவணத் திரைப்படம்..! - ஒரு பார்வை..!

17-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


2009, ஜனவரி 29. மறக்க முடியுமா இந்த நாளை..! 

முத்துக்குமார் என்னும் மாவீரன் தமிழீழத் தாகத்துக்காகத் தீயை அள்ளிக் குடித்து மரணத்தைத் தழுவிய நாள்..

தனது மரணத்தை உயிராயுதமாக ஏந்திய முத்துக்குமாரின் மரண சாசனம் அன்றைக்கு தமிழக மாணவர்கள் மத்தியில் மாபெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. "விதியே விதியே என் செய நினைத்திட்டாய் என் தமிழ்ச் சாதியை...!" என்று துவங்கும் முத்துக்குமாரின் மரண சாசனம் உலகத் தமிழ் இளைஞர்கள் அத்தனை பேரையும் ஒன்று சேர்த்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழகம் முழுதுவதிலிருந்தும் வந்து உணர்ச்சிப் பெருக்கோடு கலந்து கொண்டார்கள்.

தற்போது தம்பி முத்துக்குமாரின் இந்த தியாகத்தை ‘ஜனவரி 29’ என்ற தலைப்பில் ஆவணப் படமாக எடுத்திருக்கிறார்கள்  தஞ்சையைச் சேர்ந்த   நல்லதுரையும் மற்றும் அவரது நண்பர்கள் செல்வராஜ் மற்றும் முருகேசன் ஆகியோர். இந்த ஆவணப் படத்தை இயக்கி இருப்பவர்  பிரகதீஸ்வரன்.

இதன் வெளியீட்டு விழா கடந்த மாதம் 29-ம் தேதி மாலை சென்னை திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நடந்தது.. இயக்குநர் அமீர், நடிகர் சத்யராஜ் ஆகியோர் இந்த ஆவணப் படத்தினை வெளியிட்டு பேசினார்கள். 


70 நிமிடங்கள் ஓடும் அந்தப் படத்தின் மீதிருந்த ஒரு ஈர்ப்பு துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் மறையவே இல்லை. அவ்வளவு வேகம்.. உருக்கம். படம் முடிந்தபோது ஒன்றுபோல் அரங்கத்தில் இருந்த அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் தேங்கி நின்றிருந்தது..!

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் என்னும் ஊர் அருகேயுள்ள மரந்தலை என்னும் கிராமம்தான் முத்துக்குமாரின் சொந்த ஊர். சென்னையில் பிறந்தாலும் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மரந்தலையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்தான் முடித்திருக்கிறார் முத்துக்குமார்.

தமிழில் 90, ஆங்கிலத்தில் 88, கணிதத்தில் 98, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 86 என்று  மொத்தம் 462 மதிப்பெண்கள் எடுத்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் முத்துக்குமார், அந்தப் பள்ளியின் ஆல் ரவுண்டராகவும் இருந்திருக்கிறார்.

பல போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் முத்துக்குமாரின் தமிழ் மீதான ஆர்வம் அவருடைய இளம் பிராயத்திலேயே துவங்கிவிட்டது என்பதை நினைவு கூர்கிறார் அவரது தந்தை.

"சின்ன வயசுலேயே தூயத் தமிழ்லதான் பேசுவார். நாங்க அதைக் கிண்டல் செஞ்சாகூட அதைப் பொருட்படுத்திக்க மாட்டார். திரும்பவும் அதே மாதிரிதான் பேசுவார்.." என்கிறார் அவரது தந்தை. சாப்பிடும்போதும் புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவது என்பது முத்துக்குமாரின் இளமைப் பிராயத்துப் பழக்கம் என்பதையும் அவரது தந்தை ஞாபகப்படுத்துகிறார்.

முத்துக்குமாரின் தலையெழுத்து எப்படி ஆனதோ பரவாயில்லை.. ஆனால் அவரது கையெழுத்து மணி, மணியானது என்கிறார்கள் அவரது நண்பர்களான இயக்குநர்கள் ஆலயமணியும், நட்ராஜூம்.

மீண்டும் சென்னைக்கு வந்த பிறகு கணினியில் போட்டோஷாப், பேஜ்மேக்கர் என்று வடிவமைப்பு செய்யும் தொழிலைக் கற்றுக் கொண்ட முத்துக்குமார் ‘நிழல்’, ‘யுகமாயினி’ போன்ற பத்திரிகைகளுக்கும் அட்டைப் படங்களை வடிவமைப்பு செய்து கொடுத்திருக்கிறார். இந்தப் பணிகளுக்கு ஊடேயே சினிமாத் துறையில் ஈடுபட எத்தனித்து ‘ஈ’ படத்தின் இயக்குநர் ஜனநாதனையும் சந்தித்திருக்கிறார்.

ஜனநாதனுக்கே அவர் தேடியும் கிடைக்காத புத்தகத்தைத் தான் தேடியெடுத்து கொடுத்திருக்கிறார் முத்துக்குமார். "அவருடைய புத்தக அறிவு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.." என்கிறார் ஜனநாதன்.

"சமூகச் சீர்த்திருத்தக் கருத்துக்களோடு நிச்சயம் நான் ஒரு நாள் ஒரு திரைப்படத்தை இயக்குவேன்.." என்னும் ஒரு லட்சியத்தை தனக்குள் வைத்துக் கொண்ட முத்துக்குமார் அதனை அடையும்வரையிலான வாழ்க்கைப் போராட்டத்தை சமாளிப்பதற்காகவே பத்திரிகைகளில் ‘லே அவுட்  ஆர்ட்டிஸ்ட்’ பணிகளைச் செய்திருக்கிறார்.

"தமிழ் மொழியைப் பற்றியும், தமிழ் இனத்தைப் பற்றியும் யார் தவறாகப் பேசினாலும் முத்துக்குமார் பொறுக்க மாட்டார். அவர்களிடம் வாக்குவாதம் செய்வார்.. தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பார்.. இந்த ஒரு கெட்டப் பழக்கம்தான் அவரிடம் இருக்கிறது .." என்று சொல்லி முத்துக்குமாரை தன்னிடம் தனது நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார் பத்திரிகையாளர் ஜி.கெளதம்.

"எத்தனை முறை லே அவுட்டை மாற்றினாலும், முகம் சுளிக்காமல் திருப்பித் திருப்பி பொறுமையாக செய்து முடிக்கும் அவரது பொறுமையான குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது"  என்கிறார்  முத்துக்குமார் வேலை செய்த 'பெண்ணே நீ' பத்திரிகையின்  ஆசிரியர்  கவிதாகணேசு.

இத்தனை அமைதியானவர்.. ஆழமானவர்.. அடக்கமானவர்.. இவரால் எப்படி ஒரே நாளில் இந்தத் தமிழகத்தை பூகம்பம் தாக்கியது போன்ற நிலைமைக்குக் கொண்டு செல்ல முடிந்தது..?

இறுதிக் கட்ட ஈழப் போரின் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தும், செய்தித் தாள்களில் பார்த்தும் மனம் நொந்து போனவராக இருந்த முத்துக்குமார் அந்தக் காலக்கட்டத்தில் சற்று மனம் பதற்றத்துடனேயே இருந்ததாக அவரது நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.

யாரையெல்லாம் நம்பினோமோ அவர்களெல்லாம் துரோகிகளாக மாறிவிடவே.. அந்தக் கோபமும், தாபமும் முத்துக்குமாருக்குள் எழ.. எதையாவது செய்தாவது கேளிக்கைகளிலும், சினிமாக்களிலும் மூழ்கியிருக்கும் இந்தத் தமிழ்ச் சமூகத்தை  ஈழத்தின் பக்கம் திசை திரும்பச் செய்வோம் என்று நினைத்த முத்துக்குமாரின் எண்ணத்தில் விளைந்ததுதான் அந்த ஜனவரி 29 தீக்குளிப்பு.

ஆவணப் படத்தில் முத்துக்குமாரின் ஜனவரி 28-க்கு முந்தைய காட்சிகள் அவரது வாழ்க்கையைக் காட்டி முடித்தாலும் அவர் தீக்குளிக்கும் காட்சியும், அதற்கடுத்து வரும் காட்சிகளும் கண்களில் நீரை சிந்த வைக்கின்றன.

முத்துக்குமாரை போலவே ஒருவரை உருவகப்படுத்தி இந்தக் காட்சிகளை எடுத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. இரவில் தனது வீட்டில் அமர்ந்து, டைரியில் தனது மரண சாசனத்தை எழுதத் துவங்கும் அந்தக் கணம் நமக்குள் ஒரு பலூனை ஊதத் தொடங்கி.. இறுதியில் அந்த முத்துக்குமாரின் சிதைக்கு அவரது தந்தை வைக்கின்ற கொள்ளியின்போதுதான் அந்த பலூன் வெடித்துச் சிதறும் அனுபவமும் நமக்குள் கிடைக்கிறது..!

மிக அழகான உருவாக்கம்.. முத்துக்குமாரின் சொந்த ஊர், பள்ளி, சான்றிதழ்கள், நண்பர்களின் பேட்டிகள், உடன் பிறந்த அக்காவின் கண்ணீர்த் துளியுடன் அவனது முதல் வாழ்க்கைக் கதை முடிந்து இரண்டாவதாக அந்த அர்த்த ராத்திரியில் தன்னந்தனியாக தனது அறைக்குச் சோகத்துடன் திரும்புகின்ற பொழுது துவங்கும் ஒரு சோகப்பிடிப்பு படத்தின் இறுதிவரையில் கொஞ்சமும் நழுவாமல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

"தூங்கிக் கிடந்தது போதும் தமிழா..." என்ற பாடல் காட்சி படத்தின் வேகத்தை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டது. ஒருவர் தன் முகத்தில் “குண்டு வீச்சில் 10 மாணவிகள் பலி” என்கிற தினத்தந்தியின் பேப்பரை வைத்து தூங்கிக் கொண்டிருக்கும் காட்சி. கடற்கரை காட்சிகள்.. காதலன், காதலியின் மடியில் படுத்திருக்கும் காட்சி, சீட்டு விளையாட்டில் 'மாவீரர் கல்லறை'யின் மீது கார்டு விழும் காட்சி.. இடையிடையே ஈழத்தின் கொலைக்களன் காட்சிகள் என்று ஒரு முழு நீள சினிமாவுக்கே உரித்தான முத்தாய்ப்பான காட்சிகளை வைத்து நம் உணர்வுகளை உயிர்த்தெழ வைத்துள்ளார் இயக்குநர்.

2009, ஜனவரி-29 அன்று காலை சாஸ்திரி பவனில் நடைபெற்ற காட்சிகள் அதே இடத்தில் வைத்து மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. எத்தனைத் தடைக்கற்களை இதற்காகத் தாண்டினார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் அந்தக் காட்சிகள் தத்ரூபம்..!

பின்னான காட்சிகள் அன்றைய தினம் ஊடகங்களால் எடுக்கப்பட்டபோதிலும் அனைத்தையும் பயன்படுத்தாமல் மிக குறைவாக, அதே சமயம் தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தி முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் நம்மையும் கலந்து கொள்ள வைத்த உணர்வை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

இருந்தாலும் மிக முக்கியமான ஒரு விஷயத்தையும் இயக்குநர் சுட்டிக் காட்டியிருக்கலாம்.. மறைமலைநகரில் தொல்.திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தபோது மேடை அருகேயே மூன்று நாட்களும் அமர்ந்திருந்து ஈழப் படுகொலை நின்றுவிடாதா..? போர் நிறுத்தப்பட மாட்டாதா என்ற பரிதவிப்புடன் பலரிடமும் பேசி, பேசி துவண்டு போயிருந்த முத்துக்குமாரின் அன்றைய செய்கையை பதிவுச் செய்திருக்கலாம். இது ஏனோ இந்த ஆவணப் படத்தில் இடம் பெறாதது வருத்தமே..!

“ஈழம் எரிகையிலே..” பாடல் காட்சியும், சின்னப்பொன்னுவின் குரலும் நமக்குள்ளேயே தீ மூட்டுகின்றன. பேட்டியளித்திருக்கும் அத்தனை தலைவர்களும் மறுக்காமல் சொல்கின்ற வார்த்தை “இந்த முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தை நாம் மறக்காமல் அதற்கு மரியாதை செய்ய வேண்டும். அவன் தூண்டிவிட்ட தீக்கனல் நமக்குள் மழுங்கிப் போகாமல் இன்னும் அதிகமாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும்” என்பதுதான்.

இதற்கு ஒரே வழி.. முத்துக்குமாரின் ஜனவரி-29 ஆவணப் படம் இல்லாத வீடே தமிழகத்தில் இல்லை என்ற சூழலை முதலில் உருவாக்க வேண்டும்..! இந்த உழைப்பை நோக்கித்தான் அடுத்தக் கட்டமாக நாம் முன்னேற வேண்டும்..!

யாரங்கே...
என் கல்லறையின் மீது
நின்று கொண்டு
எனக்காகக்
கண்ணீர் வடிக்கும்
அந்த மெழுகுவர்த்திகளை
அணைத்துவிடுங்கள்..
அழுகை
எனக்குப் பிடிக்காத
ஒன்று..!

இப்படி ஒரு கவிதையை எழுதியிருக்கும் முத்துக்குமாரின் உணர்வுகளை நாம் புரிந்து கொண்டு நாம் சிந்தவிருக்கும் கண்ணீரை இன உணர்வாக வெளிப்படுத்தினாலே, அவருக்கு நாம் செலுத்துகின்ற மிகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்..!

முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கம்..!

- சூரியக் கதிர் - செப்டம்பர் 1-15 - இதழ்


இந்த ஆவணப் படம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்துப் புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது. கிடைக்கவில்லையெனில் கீழேயுள்ள முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு :

நல்லத்துரை
வடக்குத் தெரு,
கல்லபெரம்பூர்
தஞ்சாவூர் தாலுகா
பின்கோடு - 613603
போன் : 9442317631
இமெயில் : cm.selva@gmail.com
www.muthukumar.in


18 comments:

காலப் பறவை said...

முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கம்.

காலப் பறவை said...

பேரறிவாளனின் புத்தக விழாவில் நீங்கள் இந்த ஆவணப்படத்தை வாங்கி வைத்திருந்த போதே எண்ணினேன் இப்படி ஒரு அருமையான பதிவு வரும் என... நன்றி உ.த.

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

இங்கு இதை நான் எழுவதற்கு என்னை மன்னிகவும்....

எப்படி உங்களுக்கு நான் டோண்டுவின் தளத்தில் எழுதியதை தெரியப் படுத்துவது...என்று தெரியாத்தால் தான் இங்கே இது. மறுபடியும் என்னை மன்னிக்க வேண்டும்...இங்கு இதை எழுதியத்ரக்காக...

அந்த web link:

http://dondu.blogspot.com/2010/09/09092010.html

நீங்கள் எம்ஜிஆரின் கொடைத் தன்மை எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னதிற்கு பதில் தான், இந்தப் பின்னூட்டம்...

"எனக்கு எம்ஜிஆரின் கொடைத் தன்மை பற்றி மிக மிக நன்றாகத் தெரியும்..."

தீப்பெட்டி said...

முத்துக்குமாருக்கு எனது வீரவணக்கம்..

கண்கள் கலங்குவதை கட்டுபடுத்த முயன்று தோற்றேன், இன்னும் எத்தனை காலம்தான் தோற்றுக்கொண்டேயிருப்பது,

ஒருவேளை முத்துக்குமார் உயிருடன் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் நாம் அவரை விமர்சித்துக் கொண்டேதான் இருந்திருப்போம், இன்னும்கூட சில முத்துக்குமார்கள் இருக்கலாம்.. அவர்களை நாம் புரிந்துகொள்ள நம் சமுதாயத்திற்கு எந்த பயிற்சியும் முயற்சியும் இல்லை.. செத்துத்தான் எவரும் தன் தூய்மையை நிரூபிக்க வேண்டியிருக்கும் இந்த காலகட்டம் நமது சமுதாய கட்டமைப்பின் மிகப் பெரிய தோல்வி.. தமிழக சமுதாய கட்டமைப்பில் பங்குகொண்டதாக நினைக்கும் எந்த தலைமைக்கும் இது பரிதாபகரமான வீழ்ச்சியே.. இன்று தமிழக மக்கள் தூக்கிப்பிடிக்கும் அன்றைய தலைவர்கள் எவரேனும் இன்னும் உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் வெட்கிச் சாகத்தான் வேண்டும்..

senthil said...

வணக்கம் சரவணன்!

மிகச் சிறந்த கட்டுரை. ஆற்றொழுக்கான நடை. பாராட்டுக்கள்!

செந்தில் முருகன்.வே

-/சுடலை மாடன்/- said...

நன்றி உண்மைத்தமிழன்.

முத்துக்குமார் ஆவணப்படம் எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?

நன்றி - சொ.சங்கரபாண்டி

அரவிந்தன் said...

நன்றி உண்மைத்தமிழன்,

எனக்கு ஒரு பிரதி வாங்கி அனுப்ப முடியுமா. முடிந்தால் தனியஞ்சலில் சொல்லுங்கள்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

பித்தன் said...

முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கம்.

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...
பேரறிவாளனின் புத்தக விழாவில் நீங்கள் இந்த ஆவணப்படத்தை வாங்கி வைத்திருந்தபோதே எண்ணினேன் இப்படி ஒரு அருமையான பதிவு வரும் என... நன்றி உ.த.]]]

நன்றி ஸ்டாலின்..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை சரவணன் said...
பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்.]]]

வருகைக்கு நன்றி சரவணன்..! எத்தனை சரவணன்கள் வலையுலகத்தில்..?

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

இங்கு இதை நான் எழுவதற்கு என்னை மன்னிகவும். எப்படி உங்களுக்கு நான் டோண்டுவின் தளத்தில் எழுதியதை தெரியப் படுத்துவது என்று தெரியாததால்தான் இங்கே இது. மறுபடியும் என்னை மன்னிக்க வேண்டும். இங்கு இதை எழுதியத்ரக்காக.

அந்த web link:

http://dondu.blogspot.com/2010/09/09092010.html

நீங்கள் எம்ஜிஆரின் கொடைத் தன்மை எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னதிற்கு பதில்தான், இந்தப் பின்னூட்டம்...

"எனக்கு எம்ஜிஆரின் கொடைத் தன்மை பற்றி மிக மிக நன்றாகத் தெரியும்..."]]]

அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை அம்பி..!

நீங்கள் ஒரு முடிவோடு இருக்கிறீர்கள்..! உங்களைத் திருத்துவதென்பது முடியாத காரியம்..! நீங்கள் இப்போது நினைப்பது போலவே எப்போதும் நினைத்துக் கொள்ளுங்கள்..! நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

முத்துக்குமாருக்கு எனது வீரவணக்கம்..

கண்கள் கலங்குவதை கட்டுபடுத்த முயன்று தோற்றேன், இன்னும் எத்தனை காலம்தான் தோற்றுக் கொண்டேயிருப்பது?

ஒருவேளை முத்துக்குமார் உயிருடன் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் நாம் அவரை விமர்சித்துக் கொண்டேதான் இருந்திருப்போம். இன்னும்கூட சில முத்துக்குமார்கள் இருக்கலாம்.. அவர்களை நாம் புரிந்து கொள்ள நம் சமுதாயத்திற்கு எந்த பயிற்சியும் முயற்சியும் இல்லை.. செத்துத்தான் எவரும் தன் தூய்மையை நிரூபிக்க வேண்டியிருக்கும் இந்த காலகட்டம் நமது சமுதாய கட்டமைப்பின் மிகப் பெரிய தோல்வி.. தமிழக சமுதாய கட்டமைப்பில் பங்குகொண்டதாக நினைக்கும் எந்த தலைமைக்கும் இது பரிதாபகரமான வீழ்ச்சியே.. இன்று தமிழக மக்கள் தூக்கிப் பிடிக்கும் அன்றைய தலைவர்கள் எவரேனும் இன்னும் உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் வெட்கிச் சாகத்தான் வேண்டும்.]]]

தீப்பெட்டி அண்ணே.. உங்களது உணர்வுகளை மதிக்கிறேன்.. நீங்கள் சொல்வதும் சரிதான்.. பணம் சம்பாதிக்கவே அரசியல் என்று பிழைப்புவாத அரசியல் நடத்துபவர்களிடம் தியாகச் சுடர்களைப் பற்றிப் பேசி என்ன புண்ணியம்..?

உண்மைத்தமிழன் said...

[[[-/சுடலை மாடன்/- said...

நன்றி உண்மைத்தமிழன்.

முத்துக்குமார் ஆவணப்படம் எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?

நன்றி - சொ.சங்கரபாண்டி]]]

அண்ணே.. சென்னையில் அனைத்துப் புத்தகக் கடைகளிலும் இந்த டிவிடி கிடைக்கிறது..!

தொடர்புக்கு :

நல்லத்துரை
வடக்குத் தெரு,
கல்லபெரம்பூர்
தஞ்சாவூர் தாலுகா
பின்கோடு - 613603
போன் : 9442317631
இமெயில் : cm.selva@gmail.com
www.muthukumar.in

உண்மைத்தமிழன் said...

[[[அரவிந்தன் said...

நன்றி உண்மைத்தமிழன்,

எனக்கு ஒரு பிரதி வாங்கி அனுப்ப முடியுமா. முடிந்தால் தனியஞ்சலில் சொல்லுங்கள்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்]]]

அனுப்பி வைக்கிறேன். தனி அஞ்சலில் முகவரியை அனுப்பி வையுங்கள். tamilsaran2002@gmail.com

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கம்.]]]

வருகைக்கு நன்றி பித்தன்ஜி..!

velji said...

முத்துக்குமாரின் மறைவை எண்ணி துயரமும், ஆற்றலற்ற நம் சமூக அமைப்பை எண்ணி ஆற்றாமையும் ஆவணப்படம் எடுத்தவர்களை பாராட்டும் எண்ணத்தையும் ஒரு சேர விளைவிக்கிறது இந்த இடுகை.

உண்மைத்தமிழன் said...

[[[velji said...
முத்துக்குமாரின் மறைவை எண்ணி துயரமும், ஆற்றலற்ற நம் சமூக அமைப்பை எண்ணி ஆற்றாமையும் ஆவணப் படம் எடுத்தவர்களை பாராட்டும் எண்ணத்தையும் ஒரு சேர விளைவிக்கிறது இந்த இடுகை.]]]

சிற்சில குறைகள் இருந்தாலும் இவர்களது செயல் போற்றத்தக்கது..!