Showing posts with label திண்டுக்கல். Show all posts
Showing posts with label திண்டுக்கல். Show all posts

தாயே... மன்னித்துவிடு..!


17-03-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து கொண்டிருந்தேன். குடியிருந்தது திண்டுக்கல்லில். தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து 5.45 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸையோ அல்லது அதற்குப் பின்பு வரும் டிரெயினையோ பிடித்து மதுரை வந்து, அங்கிருந்து வேறொரு பஸ்ஸில் 8 மணிக்குள்ளாக ஒர்க்ஷாப்பிற்குள் போயாக வேண்டும்..!

எனது அம்மாவுக்கு படிப்பறிவே இல்லை. பள்ளிக்கூடமே போகவில்லை. கையெழுத்து கூட போடத் தெரியாது. உடல் வலுவும் இல்லை. ஒல்லிக்குச்சியாக இருக்கும். எப்போதும் காலை நீட்டி சுவரில் சாய்ந்துதான் உட்கார்ந்திருக்கும். வீட்டில் சமையல் வேலையெல்லாம் எனது அக்காள்கள்தான்..! எனக்காக எனது அக்கா செல்வமணி காலை 4 மணிக்கு எழுந்து சமையல் செய்து கொடுக்கும். சில நாட்களில் அக்காவால் முடியலைன்னா அதுவும் படுத்திரும். 

காலை 4.15 மணிக்கு முதல் அலாரம் ஒலித்த சில நொடிகளில் என் அம்மா கண் முழிச்சிரும்.. “தம்பி...” என்று குரல் கொடுக்கும். என்னிடமிருந்து ஏதாவது அசைவுகள் வரவில்லையெனில் “ராசா” என்று இன்னொரு குரல் கொடுக்கும்.. அதற்கும் நான் பதில் அசைவு கொடுக்கவில்லையெனில் எழுந்து உட்கார்ந்து நான் போர்த்தியிருக்கும் பெட்ஷீட்டை லேசாக உருவியபடியே “கண்ணு.. எந்திரி கண்ணு.. அலாரம் அடிச்சிருச்சு..” என்று சொல்லும்..!

அப்படி, இப்படி என்று திரும்பி, அலுத்துப் போய் எழுந்து உட்கார்ந்து அம்மாவை பார்த்தவுடன் ஒரு இனம் புரியாத கடுப்பு.. கோபம்.. எல்லாம் சேர்ந்து வரும்.. “அதான் எந்திரிச்சிட்டேன்ல.. அப்புறம் எதுக்கு நொய்.. நொய்யுன்ற..” என்று கடுப்போடு எழுந்து போவேன்.. அம்மா இதைக் கண்டு கொள்ளாமலேயே இன்னொரு பக்கம் படுத்திருக்கும் அக்காளை எழுப்பத் துவங்கும். “செல்வா.. தம்பி எந்திரிச்சிட்டான் பாரு..” என்று குரல் கொடுக்கும். அக்காள் உடனே எழுந்தால் நல்லது. இல்லையெனில், கோபத்துடன் வசவுகளை வாரி வழங்கும். இந்தக் கோபக் குரலைக் கேட்டே அக்காளுக்கும் கோபம் வரும்.. “ச்சே.. ஆத்தாளுக்கும், மகனுக்கும் வேலையில்லை. உயிரை வாங்குறீங்க..” என்று சொல்லிக் கொண்டே எழுந்திருக்கும்.. “ஆமா.. எனக்கு வேலையில்லை.. வேலைக்குப் பொற புள்ளைக்கு சமைச்சுக் கொடுக்க உனக்கு வலிக்குதாடி..?” என்று கேட்டுவிட்டு மீண்டும் படுத்துக் கொள்ளும் அம்மா..!

நான் குளித்து முடித்து ரெடியாகி வரும்வரையில் அக்காவிடமிருந்து சின்னச் சின்ன முனங்கல்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக அம்மாவும் எதையாவது படுத்த நிலையில் இருந்தே அள்ளி வீசிக் கொண்டிருக்கும். அதிகமாக “உனக்கு கொழுப்பு கூடிப் போச்சுடி.. பொம்பளை மாதிரியா இருக்குற..? அவனுக்கு சமைச்சுக் கொடுக்க உனக்கு வலிக்குதா.. நாம செஞ்சு கொடுக்கலைன்னா வேற எவ செஞ்சு கொடுப்பா..?” என்பதாகவே இருக்கும்..!

“இந்தாடா.. கிளம்பு.. போய்த் தொலை.. உயிரை எடுக்குறான்..” என்று அதிகப்பட்சம் முறைப்புடன் அக்கா, டிபன் பாக்ஸை கையில் கொடுத்துவிட்டு எப்போது வெளியேறுவேன்.. கதவைச் சாத்தலாம் என்கிற ஆசையோடு காத்திருக்கும்.. நான் பேக், டிபன் பாக்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பும்வரையிலும் படுத்திருக்கும் அம்மா, வாசல் கதவு அருகே சென்றவுடன் எழுந்து உட்கார்ந்து, “தம்பி.. பாஸ் எடுத்துக்கிட்டியா..? எல்லாம் எடுத்திட்டியா..? காசு வைச்சிருக்கியா..?” என்றெல்லாம் அடுக்கடுக்காய் கேள்விகளை வீசும். ஒரு நாள்கூட ஒரு கேள்விக்கும் மரியாதையாய் பதில் சொல்லியதில்லை. “எல்லாம் எடுத்துக்கிட்டேன்.. ச்சும்மா தொண, தொணன்னு அனத்தாதம்மா.. படுத்துத் தொலை..” என்று வெறுப்பை கக்கிவிட்டுத்தான் கிளம்பியிருக்கிறேன்..!

இந்த வெறுப்பை என்றைக்கும் எனது அம்மா கண்டு கொண்டதில்லை.. அடுத்த நாள்.. அதற்கடுத்த நாள்.. அந்த 2 வருட அப்ரண்டிஸ் பீரியட் முடியும்வரையிலும் அதனுடைய கேள்விகளும், விசாரணைகளும், அக்கறையும் ஒரு நாள்கூட நின்றதில்லை..! அதற்குப் பின்பு கேன்சரில் அது படுத்த படுக்கையாகும்வரையிலும்கூட இரவு வேளையில் நான் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் “சாப்பிட்டியா கண்ணு..?” என்று வார்த்தைகளை வீசாமல் தூங்கியதில்லை....! 

எனக்கும் என் அண்ணனுக்கும் இடையில் 16 வருட இடைவெளி. இது தலைமுறை இடைவேளையாக பரவி.. ரோட்டில் பார்த்துக் கொண்டால்கூட பேசிக் கொள்ளாமல் செல்வதாக இருந்தது.. ஒரு நாள் டிரெயின் பாஸ் எடுக்க  காசில்லை என்றார் அண்ணன். எனக்கு கோபம். தொடர்ந்து வீட்டுச் சண்டையில் வீட்டில் எல்லாரையும் சபித்துவிட்டு, பட்டென்று சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு “இந்த எழவெடுத்த வீட்டுக்கு இனிமேல் வரவே மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்..

மதுரை ஒத்தக்கடையில் என்னுடன் வேலை பார்த்த வேல்முருகனின் வீட்டில் டேரா போட்டுவிட்டேன். காலையில் மெதுவாக எழுந்து, ஹோட்டலில் சுடச் சுட இட்லியையும், மெதுவடையையும் சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கும் கடையிலேயே சாப்பிட்டு இரண்டாவது நாளிலேயே நாக்கு சுவை கண்டுவிட்டது..! மாதம் அப்ரண்டீஸ் உதவித் தொகையாக 450 ரூபாய் கொடுத்தார்கள். அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று மனதுக்குள் ஒரு நப்பாசை..!

2-வது நாள் மாலையே எனது அண்ணன் ஒர்க்ஷாப்பிற்கு போன் செய்தார். “டேய் அம்மா கூப்பிடுதுடா.. வந்திருடா..” என்றார். “அதுக்கு வேற வேலையில்லை.. எங்கிட்டாவது போகச் சொல்லுங்க..” என்று சொல்லிவிட்டு வைக்கிறேன்னு சொல்லாமலேயே போனை கட் செய்தேன்.. மாலை வேலைகளில் ஒத்தக்கடை சிவலிங்கம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, அடுத்தடுத்த நாட்களில் சினிப்பிரியா, மினிப்பிரியா என்று நண்பர்களுடன் அவர்களுடைய காசில் ரவுண்டு அடிக்க ஆரம்பித்தேன்..!

தினமும் மாலை 5 மணிக்கு எனது அண்ணன் போன் செய்வதும், நான் மறுப்பதுமாக நாட்கள் நகர்ந்தன. 10-வது நாள். மறுபடியும் போன்.. “டேய்.. அம்மா நேத்து காலைல இருந்து சாப்பிடலைடா.. உன்னை பார்த்தாத்தான் சாப்பிடுவேன்னு சொல்லுதுடா.. வந்து ஒரு வாட்டி முகத்தைக் காட்டிட்டுப் போடா. அது பாவம்டா...” என்றார் அண்ணன்.. இப்போதும் “உங்க வீட்டுக்கே வர விருப்பமில்லை. ஆளை விடுங்க” என்றேன்..!

மீண்டும், மீண்டும் அன்றைக்கே தொடர்ச்சியாய் போன்.. ஒர்க்ஷாப்பில் விசாரித்தார்கள். விபரம் தெரிந்து ஆள், ஆளுக்கு கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கிக் கொண்டு அடிக்க வந்தார்கள். “மரியாதையா இப்பவே கிளம்பலைன்னா நாளைக்கு வீட்டுக்குள்ள விடமாட்டோம்”னு நண்பர்களே சொல்லும் அளவுக்கு டிராக்டர் ஷெட் பஞ்சாயத்து சென்றுவிட்டது..

கடுப்போ கடுப்பு.. கோபமோ கோபம்..! கொஞ்சமும் நிம்மதியாய் இருக்க முடியலை.. நம்ம இஷ்டத்துக்கு விட மாட்டேன்றானுக என்று நெஞ்சு கொதிக்க.. நண்பர்களிடம் கை மாத்து வாங்கிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறினேன்.. மதுரையில் சிடி சினிமா, தீபா, ரூபாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்றுதான் பிட்டு படங்களை மாற்றுவார்கள். அது வியாழக்கிழமை.. நாளைக்கு ஒரு நாள் கூட இருந்து படத்தையாவது பார்த்துட்டுப் போகலாம்னு முடியலையே என்ற கோபமும் சேர்ந்து கொண்டது..!

திண்டுக்கல்லுக்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேர்ந்து அப்பவும் வீட்டுக்குப் போக மனசில்லாமல் ஒய்.எம்.ஆர்.பட்டி தாஸ் கடையில் பையை வைத்துவிட்டு அப்படியே என்விஜிபி தியேட்டருக்கு 8 மணி ஷோவிற்குச் சென்றேன்.. அப்போது பிட்டு படங்கள் மட்டுமே அந்த ஷோவில் ஓட்டுவார்கள்.. ஓட்டினார்கள்.. கண் குளிர பார்த்துவிட்டு மிக சாவகாசமாக போய்த் தொலைவோம் என்ற நினைப்பிலேயே 11 மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டினேன்..!

உள்ளேயிருந்து என் அம்மாவின் குரல்தான்.. “செல்லா.. தம்பி வந்துட்டான்.. தம்பி வந்துட்டான்.. கதவைத் திறடி..” என்றது அவசரமான அந்தக் குரல்.. கதவைத் திறந்த அக்காள் தலையில் நொங்கு நொங்கென்று கொட்டினாள்.. “சனியனே.. சனியனே.. ஏன் எங்க உயிரை எடுக்குற..? உங்க ஆத்தாளுக்கு எவ பதில் சொல்றது..? வந்து தொலைய வேண்டியதுதானே..?” என்றது. படுக்கைகள் விரித்து தூங்கிப் போயிருந்தவர்களை எழுப்பியிருக்கிறேன் என்பது புரிந்த்து. இன்னொரு மூலையில் கட்டிலில் படுத்திருந்த அண்ணன் எழுந்து காலைத் தொங்கபோட்டபடியே என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அருகிலேயே தரையில் காலை நீட்டி அமர்ந்திருந்த எனது அம்மாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் அம்மாவின் குரல் வீடு முழுக்க திரும்பத் திரும்ப ஒலித்தது.. “சோறு எடுத்து வைடி.. புள்ள பசியோட வந்திருப்பான்..” என்றது.. அந்த ஒரு நொடிதான்.. எனக்குள் ஒரு மிருக வெறி.. அடுத்த 5 நிமிடங்களுக்கு எனது அம்மாவைப் பார்த்து எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கத்தித் தீர்த்தேன்.. 

சனியன், பிசாசு, பேய் என்று என்னென்ன அடைமொழி இருக்கோ அத்தனையையும் சொல்லி.. “ஏன் என் உசிரை எடுக்குற..? பார்க்கணும்.. பார்க்கணும்னு ஏன் என்னைக் கொல்லுற.. மதுரைல நிம்மதியா இருந்தேன்.. அதான் வந்துட்டேன்ல.. என்ன செய்யணும்.. சொல்லு.. சொல்லு..?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து அராஜகம் செய்தேன்.. எனது அண்ணன் எனது கையை கஷ்டப்பட்டு விலக்கி என்னைக் கீழே தள்ளிவிட்டார்..

எனது அம்மா தனது கண்ணாடியைக் கழட்டிவிட்டு கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டு மீண்டும் அக்காவிடம் “தட்டு எடுத்து வைடி. சாப்பிட்ட்டும்...” என்று சொல்லிவிட்டு, “சாப்பிடுறா.. சாப்பிடு தம்பி.. ராசா சாப்பிடு..” என்றார். இப்போதும் என் தலையில் அடித்துக் கொண்டு, “சாப்பிடு.. சாப்பிடு.. சாப்பிடு.. ஏன் இப்படி உசிரை எடுக்குற..? சாப்பிடவா நான் பொறந்தேன்.. சனியனே உசிரை எடுக்காத.. காலைல சரவணான்னு எழுப்பின கொன்னே புடுவேன்..” என்று சொன்னபடியே விரித்திருந்த பாயில் மல்லாந்தேன்..!

எனக்கு இப்போதும் நியாபகம் இருக்கிறது. அன்றைய இரவில் நான் சாப்பிட்ட பின்பு எனது அம்மாவை வலுக்கட்டாயமாக எழுப்பி அண்ணன் ஒரு பக்கம், அக்காள் ஒரு பக்கமாக கெஞ்சு, கெஞ்சென்று கெஞ்சி சாப்பிட வைத்தார்கள்.. என்னைப் பார்த்தபடியே ஏக்கத்துடன் இருந்த அந்த சுருங்கிப் போன முகத் தோல்களை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு என் முதுகைக் காட்டிவிட்டு திரும்பிப் படுத்தேன்..!  இப்படித்தான் தொடர்ந்திருந்தது எனக்கும், எனது அம்மாவுக்குமான பாசப் போராட்டம். 

சாப்பிடு.. தூங்கு என்ற இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் என்னிடம் சொல்ல விரும்பாத ஒரு தாயை நான் அப்போதைக்கு விரும்பாதவன்.. ஆனால் இப்போது..?

இன்று நீண்ட நாட்கள் கழித்து எனது தாயோடு நெருங்கிப் பழகிய ஒரு புண்ணிய ஆத்மாவிடம் சிறிது நேரம் பேசினேன்..! எனது அம்மாவைப் பற்றிச் சொன்ன அவர், “பாவம்டா உங்கம்மா.. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது.. உலகமே தெரியாது.. பாசக்காரி.. நீங்கதான் அவளைப் புரிஞ்சுக்கலை..” என்றார்..

அந்த வார்த்தைகள் என் நெஞ்சில் முள்ளாய் குத்தியது.. வீடு வந்து சேரும்வரையில் நான் என் நினைவில் இல்லை.. இப்போதுதான் கொஞ்சம் கூடுதலாக நினைத்துப் பார்க்கிறேன்.. எத்தனை பாசம்..? எத்தனை அன்பு..? எத்தனை ஈர்ப்பு..? எத்தனை கனிவு..? அத்தனையையும் கலந்து கொடுத்த ஒரு தெய்வத்தையே நான் மதிக்காமல்தான் வளர்ந்திருக்கிறேன்.. வந்திருக்கிறேன்..! புரிந்து கொள்ளாமல்தான் இருந்திருக்கிறேன்..!

பெற்றவர்களின் ஆசி எல்லாவற்றுக்கும் வேண்டும் என்பார்கள். நான் எல்லாவிதத்திலும் அவர்களை உதாசீனப்படுத்தியவன்.. கஷ்டப்படுத்தியவன்.. மரணத் தருவாயில் இருந்த எனது தாய், தந்தையர் இருவரிடமும் இரு வேறு சந்தர்ப்பங்களில் நேருக்கு நேராகவே கேட்டிருக்கிறேன்.. “செத்துத் தொலையக் கூடாதா..?” என்று..! 

அவர்களுடைய இறுதிக் கட்டத்தில்தான் அவர்களுடன் நெருக்கமாகி, அவர்கள் இருக்கப் போவதே கொஞ்ச நாள்தான்.. பாவம் என்று பலரும் சொன்ன பின்புதான் தாய், தந்தையர் என்பதையும் தாண்டி ஒரு உயிர் என்ற பிற்போக்குத்தனமான பார்வையுடன் பார்த்திருந்த எனது கேடுகெட்டத்தனத்தை இன்றைக்கு நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக்கிறது..!

அத்தனைக்கும் இப்போது படுகிறேன்..! நினைத்துப் பார்த்தால் இங்கேதான் ஜெயிக்கிறான் இறைவன்..! பட்டுத் திருந்து.. படாமல் போனால் கிடைக்காது புத்தி என்கிறான் இறைவன்..!  இருக்கும்போது அதன் அருமை தெரியவில்லை. இல்லாதபோதுதான் புரிகிறது..! இன்றைக்கு ஒரு வேளை.. ஒரு வாய் சாப்பிட்டியா என்று கேட்கவே எனக்கு நாதியில்லை..! “தூங்குனியா..? உடம்பு சரியில்லையா..?” என்று அன்பை கொட்டவும் ஆளில்லை..! செத்துப் போனால்கூட தூக்கிப் போடவும் ஆளில்லை.. எத்தனை, எத்தனை விஷத்தைக் வார்த்தைகளில் தோய்த்து வீசியிருக்கிறேன் எனது தாயை நோக்கி.. அத்தனைக்குமான பதிலடிகளை இப்போது வட்டியும் முதலுமாக வாங்கிக் கொண்டிருக்கிறேன்..! எத்தனையோ முறைகள்.. எப்படியெப்படியோ திட்டமிட்டும் எதுவும், எதிலும் ஜெயிக்க முடியவில்லை. தோற்றுக் கொண்டேயிருக்கிறேன் ஒவ்வொரு விஷயத்திலும்..! தாயின் ஆசிகளே இல்லையே.. கிடைத்திருக்காதே.. பின்பு எப்படி வரும் நல்ல வாழ்க்கை..?

ஆண்டவனின் விளையாட்டில் எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.. அத்தனை பேருக்கும் அவன் அளந்துதான் கொடுத்திருக்கிறான்.. கொடுக்கிறான் என்பது இப்போது யோசித்துப் பார்த்தாலும் புரிகிறது.. நான் யார், யாரையோ இப்படி சொன்னேன்.. அப்போது நான் சொன்னது, இப்போது எனக்கே திருப்பியடிக்கிறது..! 

வேறு வழியில்லை.. மனதை சாந்தப்படுத்த யாரிடமாவது பேச வேண்டும்போல் உள்ளது. நான் பேசுவதையும், மன்றாடுவதையும், மன்னிப்பு கேட்பதையும் தெரிந்து கொள்ளவும் ஆள் இல்லையே.. அதனால்தான் இந்த எழுத்து..! 

தாயே.. கடைசி முறையாகக் கேட்கிறேன்.. மன்னித்து விடு..!



நலம் தரும் நவராத்திரி..!

08-10-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வருடாந்திர நவராத்திரி விழா இன்று தொடங்கி விட்டது. மைலாப்பூர், மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் அநேகமாக வீடடுக்கு வீடு, பிளாட்டு பிளாட் கொலு, மண்டகப்படிகள்தான்.
இந்த 9 நாட்களும் எங்க வீட்டு மண்டகப்படிக்கு வாங்க.. வாங்க.. என்று அக்கம்பக்கம் பெண்களுக்கு அழைப்புகள் அமர்க்களமாக பறக்கும். அதிலும் கல்யாணமான சுமங்கலிப் பெண்களுக்கு கொஞ்சம் கூடுதலாக மரியாதை கிடைக்கும். கல்யாணமாகாத தாவணிகள் “ராகவனே ரமணா ரகுநாதா” என்று பாட வேண்டியதுதான்.

ஆண்களுக்கு ஒரு ராத்திரியான `சிவன் ராத்திரி'யைப் போல், பெண்களுக்கு புரட்டாசி மாதத்தில் இந்த 9 நாட்கள் நவராத்திரியாக சிறப்புப் பெற்றுள்ளது. தென் மாநிலங்களில், குறிப்பாக கர்நாடகாவில் தசரா என்றும், வட மாநிலங்களில் துர்கா பூஜை என்றும் கொண்டாடப்படும் இந்த நேரத்தில்தான் சமூகத்தின் கடைக்கோடி நபர் வரையிலும் சில்லரை புழங்கும்.. மும்பையில் இது காசு அள்ளும் நேரம்..!.

கொலு பொம்மையை அடுக்கி வைப்பதற்குள்ளேயும் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. சில வீடுகளில் இட நெருக்கடியால் 4 படிகளும், பிரம்மாண்டமான வீடுகளில் படிகளை பெரிதாகவும், எண்ணிக்கையை கூட்டியும் வைத்து கிடைக்கின்ற அத்தனை கடவுளர் பொம்மைகளையும் படையலாக வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்று எனதருமை பாலபாட வாத்தியார் பாலகுமாரன் ஒரு தடவை எழுதி நான் படித்திருக்கிறேன். இப்போது மறந்துபோய் விட்டது. இந்த மாதிரியான கொண்டாட்டங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் பக்திக்கு அர்த்தம் இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்..!

திண்டுக்கல்லில் இருந்தபோது எனது நண்பன் கெளரிசங்கரின் வீட்டில் நடந்த நவராத்திரி விழாவின் 9 நாட்களும் ஆர்வமாகக் கலந்து கொண்டேன். காரணம் சுண்டல்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

மாலை 7 ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் பாட்டுக் கச்சேரி எட்டே கால் அல்லது எட்டரை வரைக்கும் நீடிக்கும். அதன் பின்புதான் எங்களை மாதிரியான பையன்களை உள்ளே விடுவார்கள். அதுவரைக்கும் பாட்டு பாடிய தாவணியின் முகத்தை கண் முன்னே கொண்டு வந்து மணிரத்னம் எபெக்ட்டில் வீட்டு வாசலில் கொட்டப்பட்டிருந்த மணலில் படுத்தபடியே கனவு கண்டு கொண்டிருந்தது ஒரு சுவையான அனுபவம். (பின்ன எப்படி அறிவு வளரும்..? அப்பவே இப்படி்ததான்..!)
 
வீட்டு வாசலில் கெளரியின் தோப்பனார் மிஸ்டர் கல்யாணம் கவனமாக காவல் காத்து வருவார். என்னை மாதிரியான பசங்க யாரும் தப்பித் தவறி ஆத்துக்குள்ள போயிரக் கூடாதுன்றதுல குறியா இருப்பார். அப்படியும் நாங்க ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்வோம். வேணும்னே போய் தண்ணி கேக்குறது..! "பசிக்குது மாமா.. சாப்பிடா ஏதாவது கொடுங்க"ன்னு அவர் மண்டைய காய வைக்கிறதுன்னு செஞ்சு பார்த்தோம். 

மனுஷன் அசைஞ்சு கொடுக்கலை. வீட்டுக்குப் பின்னாடி எங்களைக் கூட்டிட்டுப் போயி தண்ணி எடுத்துக் குடுப்பாரு. அங்கேயே சாப்பிடறதுக்கு முறுக்கு, அதிரசத்தை தட்டுல வைச்சுத் திணிச்சு நம்ம தோள்ல கை போட்டு பாதுகாப்பா கொண்டாந்து வீட்டு வாசல்ல இருக்குற மண்ணுல உக்கார வைச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு.. மனுஷன் கடுப்பைக் கிளப்பிட்டாருப்பா..!

அடுத்த நாள் பார்த்தா வீட்டு வாசல்லேயே ஒரு தண்ணிக் குடத்தை வைச்சுட்டாரு. பக்கத்துல ஒரு டேபிள்ல சாப்பிடறதுக்காக  முறுக்கு, அதிரசம், பொரிகடலையை கொட்டி வைச்சிட்டாரு. தப்பித் தவறிகூட எங்க பார்வை வீட்டுக்குள்ள போயிரக் கூடாதுன்றதுல குறியா இருந்த இந்த மனுஷன் ரயில்வேல கார்டு வேலை பார்த்து ரிட்டையர்டு ஆனவரு..! வருஷா வருஷம் நவராத்திரியை நினைக்கும்போது அம்பாளைவிட இந்த கல்யாணம் ஸார் நினைப்புதான் வந்து தொலையுது..!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்தி புத்தகங்களில் இருந்து பாடல்களை பாடுவார்கள். சில நேரங்களில் கர்நாடக சங்கீதமாக பாடல் பரி்ணமிக்கும்போதுதான் துக்கம் தொண்டையை அடைக்கும். பாட்டு பாடும்போது நாமும் கூடவே பாடலாம். இதுக்கெப்படி?

கெளரிசங்கரின் தோப்பனார் மிஸ்டர் கல்யாணம், தேவி புராணம், தேவி பாகவதம் என்ற இரண்டு கட்டைப் புத்தகங்களை வைத்துக் கொண்டு பகல் முழுவதும் ஆராய்ச்சி செய்வார். அதில் “இன்னிக்கு ராத்திரி இந்தப் பாட்டுதான் பாடணும்” என்று குறித்து வைத்திருப்பார்.

சில நாட்களில் அந்தப் பாடல் பாடாமல் வேறு பாடலை பாடத் துவங்கும்போது “என்னடி.. என்னென்னமோ பாடுறேள்..? நான் பத்தாம் பக்கம் நோட் பண்ணி வைச்சிருக்கேன்.. பாருங்கடி” என்று வாசலில் இருந்தே குரல் கொடுப்பார்.. ஆனாலும் கெளரியின் அம்மா.. “அதெல்லாம் பாட முடியாதுண்ணா. ரொம்பக் கஷ்டமா இருக்கு. புள்ளைகளால முடியாது. நீங்க வாசலைப் பாருங்கோ..” என்று சொல்லிவிட்டு பாட்டை பாடுவார்கள்.

மனிதர் மிக பாவமாக எங்களை பார்ப்பார். நாங்களோ மனுஷன் எப்போ கொஞ்சம் தள்ளுவார். உள்ள இருக்குற நிஜ பொம்மைகளையும், தாவணி பொம்மைகளையும் பார்க்கலாம் என்று அலையாய் அலைவோம்.

அதென்னவோ எல்லா அப்பனுகளும் நம்ம மனசை ஸ்கேன் பண்ணி கண்டுபிடிச்ச மாதிரியே இருக்கானுக.. "வர்றேன் மன்னி.." "வர்றேன் மாமா..." என்று சொல்லிவிட்டு தாவணிகள் படியிறங்கும்போது கேட் அருகே அட்டென்ஷனில் நிற்கும் எங்களையெல்லாம் ஒரு மனுஷனாக்கூட மதிக்காமல் மிஸ்டர் கல்யாணம் தான் மட்டும் அந்தப் பொண்ணுககூட போயி அவுங்க வீடுவரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வருவாரு. என்ன ஹிட்லர்தனம் பாருங்க..?

நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்னு நாங்க கோபத்துல இருக்கும்போது.. வேஷ்டி மடிப்புல இருந்து 5 ரூபாயை எடுத்துக் கொடுத்து “கெளரி. இவாளை கூட்டிட்டுப் போய் கடைல கலர் சோடா குடிச்சிட்டு வா” என்று சொல்லிவிட்டுப் போவார்..

ராத்திரில எவனாவது கலர் சோடா குடிப்பானா? அறிவு வேணாம். ஆனாலும் மனுஷன் சலிக்கணுமே..? அந்த ஒன்பது நாளும் கண் கொத்திப் பாம்பா இருப்பாரு..! “டேய் உங்கப்பாவை இதுக்காகவே ஒரு வழி பண்ணணும்டா..” என்று கெளரியிடம் சொன்னாலும் அவனே சிரிப்பான்..! எல்லாம் ஒரு காலம்..! போயே போச்சு.. என் பொழப்பு இப்போ இப்படி நாரிப் போய்க் கெடக்குறதுக்கு, என்ன காரணம்ன்னு இப்பத் தெரியுதா உங்களுக்கு..?

சரி.. நவராத்திரிக்கு வருவோம்.. இந்த புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய நவராத்திரி விழா, பெண்களுக்கே உரித்தான, சக்தி வழிபாட்டுக்கு உரியது என்கிறார்கள்.

சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சமயம் சந்திரனும், சூரியனும் சேரும் சமயத்திலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. கன்னி என்றாலே பெண் என்பார்கள். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் சவிதாஷரம் என்றும் சவிதா என்றால் சூரியன் சூரிய சக்தியின் பலம் என்றும் ஆசாரம் என்றால் புதன். புரட்டாசி மாதத்துக்கு பெருமை சேர்க்கும் நவராத்திரி விழாவாகும். நவ என்றால் 9. ஒன்பது இரவுகள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பதே பக்திக்கும், அம்பாளுக்கும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த வருடம்  நவராத்திரி விழா அதிர்ஷ்டவசமாக வெள்ளிக்கிழமையன்று துவங்கியிருக்கிறது. 

நவராத்திரியில், தேவி பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை ஆகியவற்றை சிறப்பாக செய்ய வேண்டுமாம். கல்வி, செல்வம், வீரம், சுகம், போகம், ஞானம், மோட்சம் ஆகிய ஏழும் ஈரேழு லோகங்களும் கிட்டக் கூடிய அம்மன் வழிபாடுதான் இந்த நவராத்திரி விழாவாக அமைந்துள்ளது.

வீட்டுக்கு வரக் கூடிய கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள் ஆகியோருக்கு ரவிக்கை, புடவையுடன், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றையும் தாம்பூலமாக வழங்க வேண்டும் என்கிறார்கள். நண்பன் கெளரியின் வீட்டில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ தருவார்கள். ரவிக்கை. புடவை கொடுத்து நான் பார்த்ததில்லை. அதெல்லாம் பெரிய பணக்காரர்களின் வீடுகளில் செய்வார்கள் என்று கேள்விப்பட்டேன்.

இந்த நாட்களில் அம்பாளுக்கு தினசரி ஒவ்வொரு பட்சணம் செய்து பூஜை செய்ய வேண்டுமாம்.

நவராத்திரி விழாவின், முதல் நாள் நிவேதனமாக, சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை சுண்டல் வைக்க வேண்டும்.

2-வது நாள் எள்ளு பாயசம், எள்ளு சாதம், காராமணி சுண்டல் நிவேதனம் செய்யலாம்.

3-வது நாள் கோதுமை பாயசம், கற்பூரவாழை, மாதுளம் பழம்.

4-வது நாள் பால் பாயசம், பால் இனிப்பு வகைகள்,  மிளகு சாதம், ராஜ்மா சுண்டல், தேங்காய் சாதம்.

5-வது நாள் நெய் பாயசம், சாம்பார் சாதம், வேர்க்கடலை சுண்டல், செவ்வாழைப்பழம்.

6-வது நாள் சிறு பயறு பாயசம், வெண்பொங்கல், பயிறு சுண்டல், பச்சை வாழைப்பழம், அன்னாசிப் பழம்.

7-வது நாள் தயிர் சாதம், இனிப்பு வகைகள், புட்டு, தேன்மாவு, கொண்டக் கடலை சுண்டல்.

8-வது நாள் சர்க்கரைப் பொங்கல், கேசரி, மொச்சை சுண்டல், கொய்யாபழம்.

9-வது நாள் எள்ளு பாயசம், எள்ளு சாதம், மொச்சை சுண்டல், பேரிக்காய், ஆரஞ்சுப்பழம்.

இப்படியொரு கணக்கையும் சொல்கிறார்கள். இப்படி எந்த வீட்டில் தயார் செய்து கொடுக்கிறார்கள்..? யாராவது சொன்னால் நாள் தவறாமல் அவர்களது வீட்டில் நான் ஆஜராகிவிடுகிறேன்..!

இப்படி கலந்து கட்டி அம்பாளை வழிபடும் ஆன்மிக பக்தர்களே.. படைத்தவற்றை வீட்டுக்கு வருபவர்களுக்கு மிச்சம் வைக்காமல் அள்ளிக் கொடுத்தும், நேரில் வராத என்னைப் போன்ற பிச்சைக்காரர்களுக்கு தேடிச் சென்று வழங்கியும் வந்தால் அம்பாள் உங்களுக்கு நிச்சயமாக அருள் பாலிப்பார்..!

நமது வலையுலக டீச்சர் துளசியம்மா வருடா வருடம் எந்த ஊரில் இருந்தாலும் அங்கே கொலு வைத்து விடுகிறார். இந்த வருடம் சண்டிகரில் சண்டிராணியாக வீற்றிருக்கும் நமது துளசி டீச்சர், தனது வீட்டுக் கொலுவைப் பற்றி இங்கே விரிவாக சொல்லியிருக்கிறார்.

சுண்டல் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.. அவர் வீட்டுக் கொலு எப்படி இருக்கிறது என்பதை இங்கே சென்று பார்த்துவிட்டு வாருங்கள்..!

அம்பாள் நமக்கெல்லாம் அருள் பாலிக்கட்டும்..!



உங்களுக்காக நவராத்திரி கொலு காட்சியில் மறக்க முடியாத 'இளமைக் காலங்கள்' படத்தின் பாடல்..!



நெஞ்சம் மறப்பதில்லை - இயக்குநர் ஸ்ரீதர்

21-10-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்னுடைய சிறிய வயதில் நான் பார்த்த பிரம்மாண்டமான திரைப்படங்களே திரையுலகம் பற்றிய ஒரு மாயையை எனக்குள் தோற்றுவித்திருந்தது.
லவகுசா, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், அடிமைப்பெண், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், என்ற திரைப்படங்களையெல்லாம் நான் காணும்போது அதனுடைய கதையைவிட அதைப் பெரிதாக உருவாக்கிய சித்திரம்தான் எனது மனக்கண்ணில் ஆழ்ந்திருந்தது.

அந்த வரிசையில் ஒரு மதியானப் பொழுதில் திண்டுக்கல் சென்ட்ரல் திரையரங்கில் நான் பார்த்த “சிவந்த மண்” என்கின்ற திரைப்படம் எனக்குள் ஏனோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றது.. எப்படி இத்தனை நாடுகளுக்குப் போய், இவ்வளவு செலவு செய்து, இத்தனை ஜோடனைகள் செய்து, அரங்குகள் அமைத்து செலவு செய்து படத்தை எடுத்தார்கள் என்ற சிந்தனை, திரைப்படம் பற்றிய அறிவு எனக்குள் விளைந்த நாளிலிருந்தே தோன்றியிருந்த ஒன்று.

அப்போது ஸ்ரீதர் என்கிற இயக்குநர் மிகப் பிரம்மாண்டமான இயக்குநர் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னாளில் எனது அம்மாவுடன் ஒரு நாள் அதே சென்ட்ரல் திரையரங்கில் “போலீஸ்காரன் மகள்” திரைப்படத்தைக் காண நேர்ந்தபோது ஸ்ரீதரின் பெயர் மறுபடியும் வீட்டில் உச்சரிக்கப்பட்டபோது அந்த இயக்குநர்தான் இவர் என்பதும் எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திரையுலகம் எனக்குள் வண்ணமயமான கனவுகளைக் கலைத்துப் போட்டுக் கொண்டிருந்தபோதுதான் ஸ்ரீதர் பற்றி மேலும் அறிந்தேன்.
திரையில் மின்னிய அலங்காரத் தோரணங்களையும், படோபடமான காட்சியமைப்புகளையும்,. கதாநாயகனின் கையில் இருக்கும் வாள் காட்டும் வீச்சில் தெறிக்கும் வீரத்தையும், நாயகியின் தலைகுனிவில் தெரியும் வெட்கத்தையும் மட்டுமே வைத்து திரைக்கதைகள் பின்னப்பட்டுக் கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் வசனங்களைத் துருப்புச் சீட்டுக்களாக வைத்து திரையில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியவர் ஸ்ரீதர்.

டி.கே.சண்முகம் அண்ணாச்சியால் “ரத்தபாசம்” என்கிற திரைப்படத்தின் வசனகர்த்தாவாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஸ்ரீதர் அடுத்தத் தலைமுறையின் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழப் போகிறார் என்று சண்முகம் அண்ணாச்சிக்கே நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
“அவர் வசனம் மட்டுமே எழுதியத் திரைப்படங்களிலும் தனித்தன்மை வாய்ந்தவராகத்தான் தெரிந்தார்” என்று அப்போதே பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் மனதாரப் பாராட்டியிருந்தார்.

அவர் திரைப்படங்கள் இயக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் ஒரு புதுமையைச் சேர்க்க விரும்பித்தான் செட் பிராப்பர்ட்டீஸ் என்றழைக்கப்படும் பொருட்களையே ஒரு குறியீடாக, கதாபாத்திரங்களாக பயன்படுத்தத் தொடங்கினார்.

“கல்யாணப் பரிசு” திரைப்படத்தில் அவர் காதலர்களுக்காக ஆரம்பித்து வைத்த ஒற்றை வரி வசனம் காலம் கடந்தும் இன்றைக்கும் காதலர்களால் மறக்க முடியாத வசனமாக உள்ளது. “அம்மா நான் காலேஜ்க்கு போயிட்டு வரேன்..” என்று சரோஜாதேவி தனது காதலருக்காக ஊருக்கே கேட்கும் அளவுக்குச் சொல்லிவிட்டுச் செல்லும் காட்சி இன்றைக்கும் “கல்யாணப் பரிசு” படத்தின் மையமான காட்சியாக உள்ளது.

வெறும் வாய் வார்த்தைகளால் சிரிக்க வைத்துவிட்டு திரையரங்கைவிட்டு வெளியில் வந்தவுடன் மறந்துவிடக் கூடியதல்ல இவருடைய திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள். அனைத்தும் மீண்டும், மீண்டும் அசைபோட வைக்கும் ரகங்கள்.

இன்றைக்கும் குப்பை கொட்டுபவரிலிருந்து, கடைசியாக ஆட்குறைப்பால் வெளியேற்றப்படும் ஐ.டி. அலுவலக ஊழியர்கள் வரை அனைவராலும் உச்சரிக்கப்படும் “மன்னார் அண்ட் மன்னார் கம்பெனி” இவருக்கு மட்டுமே சொந்தம்..

அந்த “பைரவர்” கேரக்டரில் வாழ்ந்து காட்டிய தங்கவேலுவையும், அவர் தம் துணையையும் இன்றைக்கும் நம் ஊரில், நம் தெருவில், நம் வீட்டில் என்றைக்காவது ஒரு நாள் நாம் நிச்சயம் காண முடியும். காலம் கடந்து நிற்கிறதே “கல்யாணப் பரிசின்” காட்சிகள்..

அத்திரைப்படத்தின் இறுதிக் காட்சியைப் பலவாறாக யோசித்து வைத்து ஒரு துன்பவியல் நாடகம்போல் ஆக்கியிருந்தார் ஸ்ரீதர். அதனை பல இயக்குநர்கள் பார்த்தும், விநியோகஸ்தர்கள் பார்த்தும் முடிவை மாற்றும்படி சொல்லியும் “முடியாது.. பரீட்சித்துப் பார்ப்போம்” என்று சொல்லி அதனையே வைத்து வெற்றியும் கண்டார். அந்த முடிவு தமிழ்ச் சினிமாவின் வழக்கமான வெற்றி, அல்லது இணைதல் என்பதற்கு மாற்றாக முதல் எடுத்துக்காட்டாக அமைந்தது.

“வெளில எங்கேயும் போக வேண்டாம்.. ஒரேயொரு செட்டுதான் படமே..” என்று முடிவெடுத்து 17 நாட்களில் படத்தை எடுத்து முடித்தார் “நெஞ்சில் ஓர் ஆலயத்தை”..

மறக்கக் கூடிய திரைப்படமா இது..? கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, பாடல்கள் என அனைத்திலும் ஒரு சதவிகிதம்கூட சோடை போகாமல் தமிழ்ச் சினிமாவுக்கு இந்தியா முழுவதிலும் பெருமை சேர்த்தது இத்திரைப்படம்.

“சொன்னது நீதானா..” பாடல் காட்சியில் கேமிரா டாப் ஆங்கிளில் இருந்து இறங்கி முத்துராமன் அமர்ந்திருக்கும் கட்டிலுக்கு அடியில் சென்று அந்தப் புறமாக எழுந்து மேலே செல்கின்ற வித்தையை இன்றைக்கும் ஒளிப்பதிவாளர்கள் வியந்து பார்க்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வின்சென்ட் செய்த அந்த டெக்னிக்கை பாராட்டாதவர்களே இல்லை. இன்றைக்கும் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் இந்தப் பாடல் காட்சியும் ஒரு பாடமாக அடிக்கடி காட்டப்படுவது இதனுடைய தனிச்சிறப்புதான்.

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”, “எங்கிருந்தாலும் வாழ்க” என்கின்ற காவியப் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் படைப்பதற்கு முதல் காரணமாகத் திகழ்ந்துள்ளார் என்பதே இயக்குநர் ஸ்ரீதருக்கு பெருமை சேர்க்கக் கூடிய விஷயம்.

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து எடுத்த “நெஞ்சம் மறப்பதில்லை” ஒரு தோல்விப் படமாக அமைந்துவிட்ட போதிலும் அதிலும் பாடல்கள் மிக, மிக பிரபலம். தேவிகாவின் நடிப்பில் ஒரு எல்லைக் கல் இந்தப் படமே என்று சொல்லலாம்.

வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே செல்பவர்களுக்காக ஒரு பொன்னான ஊக்க வரிகளை கவியரசரின் மூலமாக எழுத வைத்த ஸ்ரீதரை நாம் என்றென்றைக்கும் மறக்கவே கூடாது.. என்ன ஒரு பாடம் அந்தப் பாடல்.. “மயக்கமா கலக்கமா? மனதிலே கலக்கமா? வாழ்க்கையில் நடுக்கமா?” என்றென்றைக்கும் ஊக்க சக்தியை அளிக்கிறது இப்பாடல். “சுமைதாங்கி” படத்தில் ஜெமினி கணேசன் காட்டிய உருக்கத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எந்தவிடத்திலும் பின்னணி இசையை அநியாயத்திற்கு உயர்த்தி செலவிடாமல் அளவாகக் காட்டி சோகத்தின் முகமூடியைக் கழட்டிக் காண்பித்தத் திரைப்படம் இது.

முற்றிலும் புதுமுகங்களை வைத்து அவர் உருவாக்கிய “வெண்ணிற ஆடை”யில் நடித்த அனைவரும் இன்றைக்கும் ஏதோ ஒருவகையில் பேசப்பட்டவர்களாக உருமாறிவிட்டார்கள். ஸ்ரீகாந்த், நிர்மலா, ஜெயலலிதா, மூர்த்தி என்கிற இந்த இளைய பட்டாளத்தை வைத்து ஒரு சோதனை முயற்சியாக எடுத்த அத்திரைப்படம் பெரும் வெற்றியடைந்து நல்ல கதையும், இயக்குநரும் கிடைத்தாலே போதும்.. புதுமுகங்களை வைத்து திரைப்படம் துவக்கலாம் என்று தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய தைரியத்தையும் முன் உதாரணத்தையும் தந்தது.

தமிழ்ச் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு விதமாகத் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், ஒவ்வொருவரும் தத்தமது திரைப் பயணத்திலும் நீண்ட முடிவுறாத தனித்தன்மை வாய்ந்த ஒரு சாதனையை உருவாக்கிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீதர் கொடுத்த மறக்க முடியாத இன்னொரு சினிமா “காதலிக்க நேரமில்லை.”

“உண்மையாகவே இதுதான் சினிமா” என்று அப்போதே ‘கல்கண்டு’ பத்திரிகையில் விமர்சனம் எழுதப்பட்டிருந்தது. எது சினிமா? ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும்? அது பொழுது போக்குக்காகவா அல்லது பிரச்சாரத்திற்காவா என்றெல்லாம் கேள்விகள் எழக்கூட இடம் தராமல் முற்றிலும் புதியதொரு அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்குக் கொடுத்தது அத்திரைப்படம்.

இயக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. ஒரு நடிகரை அழைத்து வந்து, “இந்த டயலாக்கை உங்க பாணில பேசிருங்க. அவ்ளோதான்..” என்று சொல்லிவிட்டு “ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன்” என்று சொல்வதல்ல இயக்கம். அந்த நடிகரிடம் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு வெளியாகுமா என்று முழுமையாகத் தெரிந்து வைத்திருந்து அதன் பின் அவர்களிடமிருந்து நடிப்பை வரவழைப்பதே இயக்கம்.

முற்றிலுமாக இதனை இத்திரைப்படத்தில் சாதித்திருந்தார் ஸ்ரீதர். முதலில் ரவிச்சந்திரன் வேடத்தில் ஜெய்சங்கரைத்தான் நினைத்திருந்தாராம். பின்புதான் திடீரென்று மனம் மாறி ரவிச்சந்திரனை புக் செய்திருக்கிறார். இதில் இவருடைய கனகச்சிதமான தேர்வுகள் பாலையாவும், நாகேஷ¤ம்.
இப்போதும் மறக்க முடியவில்லை. எப்போதும் முடியாத அளவுக்கு ஒரு 5 நிமிட காட்சியை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஸ்ரீதர்.
நாகேஷ் கதை சொல்கின்ற காட்சியில், அவர் சொல்கின்ற விதத்தைவிட என்னை அதிகம் கவர்ந்தது அதற்கு பாலையா காட்டிய ரியாக்ஷன்தான். அதுதான் முக்கியம். எப்போதும் காமெடியில் எதிர் நபர் காட்டுகின்ற ரியாக்ஷன்தான் அது காமெடியா இல்லையா என்பதைக் காட்டும். இப்போதும் பாருங்கள்.. பாலையாவின் நடிப்பசைவில் அவர் காட்டுகின்ற நவரசங்களால்தான் காமெடியே உருவாகியிருக்கிறது. ஸ்ரீதரின் இயக்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு இந்தப் படத்தில் இந்த ஒரு காட்சிக்கே கிடைத்துவிட்டது என்று சொல்லலாம்.

ஒரு விடுதலைப் போராட்டத்தைக் காட்ட வேண்டி அவர் எடுத்த “சிவந்தமண்” திரைப்படம் அவருடைய திரைப்பட வாழ்க்கையில் ஒரு மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். இத்திரைப்பட உருவாகிய காலக்கட்டம்தான் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக கஷ்டமான காலமாகிவிட்டது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அரசியலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வெளிநாடுகளில் ஷ¥ட்டிங் என்று திட்டம் தீட்டிவிட்டு கால்ஷீட் கிடைக்காமல் தவியாய் தவித்துப் போனார். அப்போது அத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகள் சூழ்ந்து ஒரு கட்டத்தில் படம் நகருமா, நகராதா என்கிற அளவுக்குப் பிரச்சினைகள் வந்தபோதும் மனம் தளராமல் நான் எடுத்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எடுத்துக் காட்டிய திரைப்படம் இது.

இத்திரைப்படத்திற்காக சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தபோது அவருடைய தாயாரின் மரணச் செய்தி அவருக்குக் கிடைத்தது. இருந்தும் தனக்கு இந்தப் படத்தை முடிப்பதுதான் முதல் வேலை என்று கருதி தாயாரின் முகத்தைக் கூடப் பார்க்க வராமல் விட்டுவிட்டார். இந்த ஒரு நிகழ்வு அவருடைய வாழ்க்கையில் பிற்காலத்தில் அவரால் பல முறை பல பேரிடம் சொல்லிச் சொல்லி அழுக வைத்த நிகழ்வாகப் போய்விட்டது.

“சிவந்தமண்” சிவாஜிக்கும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது நிச்சயம் பொய்யில்லை.. ஸ்ரீதரின் திரைப்பட வரிசையில் இத்திரைப்படம் எந்த இடத்தைப் பிடித்திருந்தாலும் சரி.. தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் மிக முக்கியமானத் திரைப்படத்தை இத்திரைப்படம் பிடித்திருக்கிறது. காரணம் படத்தின் கதையும், களமும்தான்..

மிகப் பெரிய பட்ஜெட் என்றில்லாமல் “ஊட்டி வரை உறவு” என்கின்ற நகைச்சுவையை மையமாக வைத்து ஒரு சிறிய படத்தையும் அவரால் எடுக்க முடிந்தது. “இத்திரைப்படத்தில் தன் அழகை வெளிப்படுத்தியதுபோல் வேறு எந்தத் திரைப்படத்திலும் வேறு யாரும் காட்டவில்லை” என்று திருமதி கே.ஆர்.விஜயாவே பிற்காலத்தில் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

திரைப்பட உலகம் எப்போதுமே ஒரு மாய வலைதான்.. யாரை, எப்போது, எங்கே, எப்படி உச்சாணிக் கொம்பிற்குக் கொண்டு செல்லும் என்பதும், யாரை எங்கே எப்படி குப்புறக் கவிழ்க்கும் என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த இரண்டு வித வாழ்க்கைச் சக்கரத்தில் திரையுலகப் புள்ளிகள் பலரை உருட்டி விளையாடிவிட்டது திரையுலகம்.

30 ஆண்டு காலமாக திரையுலகில் நீடித்திருந்தும் தோல்விப் படங்களால் கடன் சுமையை ஸ்ரீதரின் மேல் ஏற்றி விட்டிருந்தது இத்திரையுலகம். அப்போதுதான் அவர் தனது திரையுலகப் பயணத்தைச் சற்று நிறுத்தியிருந்த நேரம்.
அவருடைய கட்டாய ஓய்வு அப்போதைய சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரின் கவனத்திற்குச் சென்றபோது ஸ்ரீதரை வரவேற்றுப் பேசினார் எம்.ஜி.ஆர். தன்னை வைத்து இதுவரையிலும் திரைப்படம் எதையும் இயக்காமலிருந்த இவருக்கு படம் தயாரிக்கவும், இயக்கவும் வாய்ப்பு தந்தார் எம்.ஜி.ஆர். அது “உரிமைக்குரல்”. முதல் ஷெட்யூலிலேயே ஸ்ரீதரின் கடனை அடைக்கும் அளவுக்கு விநியோகஸ்தர்களிடமிருந்து பண வசூல் குவிந்துவிட்டது.

படம் வெளிவந்து எம்.ஜி.ஆருக்கு பெயர் கிடைத்ததோ இல்லையோ.. ஸ்ரீதரின் பெயர் கெட்டது என்னவோ மறுக்க முடியாத உண்மை. கிட்டத்தட்ட அப்போதைய தமிழ்த் திரைப்பட உலகை ஆட்டிப் படைத்த கிளாமர் மோகத்தில், நடிகை லதா காட்டிய அதீத கவர்ச்சியில் ஸ்ரீதரின் பெயரும் ஆட்டம் கண்டு போனது. ஆனாலும் எம்.ஜி.ஆருக்காக மீண்டும் “மீனவ நண்பன்” படத்தினை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே அவருடைய புகழ் பெற்ற படங்களின் பட்டியலில் வராதது சோகம்தான்.

எம்.ஜி.ஆரை வைத்து எத்தனையோ இயக்குநர்கள் படங்களை இயக்கியிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. 1977-ல் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பதவியேற்கும் சூழல் உருவானபோது அப்போது உருவாக்கத்தில் இருந்த “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” படத்தின் சில காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது.

கிடைத்த 10 நாட்கள் இடைவெளியில் எம்.ஜி.ஆர். மீதமிருந்த தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் பதவியேற்றார். அப்போது அந்தப் படத்தினை இயக்கிக் கொண்டிருந்தது ஸ்ரீதர்தான். பதவியேற்பு விழாவுக்கு முதல் நாள்தான் அவருடைய ஷ¥ட்டிங் முடிந்தது. அந்தக் காட்சியை முடித்து வைத்தவர் ஸ்ரீதர் என்பது அவருக்குப் பெருமை சேர்க்கின்ற விஷயம்தான்.

திரைப்படத் துறை மேலும், மேலும் வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருந்த காலத்தில்கூட சிவாஜி என்னும் நடிகன் மேலிருந்த தாபத்திலும், ஆர்வத்திலும், அவருடைய புகழையே மங்கச் செய்யும் அளவுக்கு மிக மிக சாதாரணமான திரைப்படங்களை பலரும் இயக்கிக் கொண்டிருந்த காலக்கட்டத்திலும் ஸ்ரீதர் தன்னுடைய பழைய பாணி இயக்கத்திலிருந்து மாறவும் தைரியம் கொண்டிருந்தார்.

சிவாஜி-எம்.ஜி.ஆர். என்ற இரட்டைச் சக்கரவர்த்திகளைப் போல் தமிழ்த் திரையுலகம் கமல்-ரஜினி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் வசீகர வளையத்தில் சிக்கத் தொடங்கியபோது அதனையும் தனது பாணியில் பயன்படுத்தத் தவறவில்லை ஸ்ரீதர்.
“இளமை ஊஞ்சலாடுகிறது” ஸ்ரீதரின் இளமையைச் சோதிக்க அவர் எடுத்தத் திரைப்படம் என்று சொல்லலாம். பாடலுக்கும், இசைக்கும் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டத் திரைப்படம்.
அவருடைய பேவரைட்டான முக்கோணக் காதலை அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல் தேன் தடவி அவர் கொடுத்த மருந்துதான் இப்படம்.
எனக்கு கமலஹாசனைவிடவும் இப்படத்தில் ரஜினிதான் மிகவும் கவர்ந்தார். அந்த சோடாபுட்டி கண்ணாடி அவர் ஒரு மதிப்புற்குரிய கனவான் என்ற தோற்றத்தைக் கொடுத்தது. படம் நெடுகிலும் அவருடைய நடிப்பும் அப்படியே இருந்தது என்னவோ உண்மைதான்.
எப்படி இவரால் இப்படியொரு திரைப்படம் எடுக்க முடிந்தது என்பதைவிட எப்படி இவரால் எம்.எஸ்.விஸ்வநாதனைவிட்டு விலக முடிந்தது என்றுதான் அப்போதைக்கு பத்திரிகைகளில் கிசுகிசு பரவியது. தனது நீண்ட நாள் நெருங்கிய நண்பர்களான சித்ராலயா கோபு, மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் பாஸ்கர் ஆகியோரின் ஆலோசனையில் காலத்திற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளவும் தயங்கவில்லை இயக்குநர் ஸ்ரீதர்.

“தென்றலே என்னைத் தொடு” படத்தின் வெளியிட்டீன்போது “யாரோ ஸ்ரீதராம்ல.. மோகனை வைச்சுப் பண்றாராம்..” என்று அப்போதுதான் பரவலாகப் பரவியிருந்த புத்தம்புது மஞ்சள் வியாபார விநியோகஸ்தர்களிடையே பேச்சு இருந்தது. இளையராஜாவின் இன்னிசையால் படம் வழக்கம்போல பிய்த்துக் கொண்டு போன போதுதான் ஸ்ரீதரின் பழைய ஜாதகமும் தோண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டது.

‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’.. ‘ஒரு ஓடை நதியாகிறது’.. இந்த இரண்டு திரைப்படங்களின் பாடல்களை மட்டுமே நான் கேட்டுள்ளேன்.. அசத்தல் பாடல்கள். ஸ்ரீதர் ஆரம்பக் காலத்திலிருந்தே தனது திரைப்படங்களின் இன்னொரு கதாபாத்திரமாக உருவாக்கி வைத்திருந்தது திரையிசைதான்..
பாடலுக்கும், இசைக்கும் இவர் கொடுக்கின்ற முக்கியத்துவம் ரசிகர்களின் மனநிலையை அறிந்து வைத்திருந்த இவரது தனித்தன்மையைக் காட்டுகிறது.

‘கல்யாணப் பரிசு’ தொடங்கி ‘தந்து விட்டேன் என்னை’ வரையிலுமான இவரது திரைப்பயணத்தில் அற்புதமானத் திரைப்படப் பாடல்களை ஸ்ரீதர் தொகுத்து வழங்கியிருப்பது, தமிழ்த் திரைப்படத் துறைக்கு இவர் செய்திருக்கும் மிகப் பெரிய உதவியும்கூடத்தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

ஸ்ரீதரின் இயக்கத்தில் நான் பார்த்து பிரமித்த திரைப்படங்களைத்தான் இங்கே பட்டியலிட்டுள்ளேன். பார்த்தும் விரும்பாத படமும் ஒன்று உண்டு. அது ‘நானும் ஒரு தொழிலாளி’.

முதல் இரண்டு ரீல்களில் அம்பிகா எல்.கே.ஜி. மாணவிபோல் இருப்பார். அதே போலத்தான் கமலஹாசனும். அடுத்த நான்கு ரீலுக்கு யு.கே.ஜி. பின்பு ஒன்றாம் வகுப்பு என்று காலம் கடந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு ரீலாக எடுக்கப்பட்ட படம் என்பதனை மேக்கப்பே காட்டிக் கொடுத்தது என்றாலும், இத்திரைப்படத்தின் பாடல்களும் தேனிசை. மறக்க முடியாத பாடல்கள்.

கடைசியாக அவர் எடுத்த ‘தந்து விட்டேன் என்னை’ என்கிற திரைப்படத்தில்தான் விக்ரம் அறிமுகமானதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. “விக்ரமை வைத்து தான் மீண்டும் ஒரு திரைப்படம் செய்வேன்” என்று அவ்வப்போது பத்திரிகையாளர்களிடமும், பார்க்க வருபவர்களிடமும் சொல்லிக் கொண்டுதான் இருந்தார் ஸ்ரீதர். ஆனால் விக்ரம் இதுவரையில் ஸ்ரீதரைப் பற்றி எந்த வார்த்தையும் சொல்லாமல் இருப்பது(ஒரு வேளை எனக்குத் தெரியாமல் இருக்கலாம்) ஏன் என்பதுதான் புரியவில்லை.

இயக்குநர் ஸ்ரீதருக்கு திரையுலகிலும் பலமான வாரிசுகள் உண்டு. முதலிடம் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சில ஆண்டுகள் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அடுத்து குறிப்பிடத்தக்கவர்கள் வாசுவும், சந்தானபாரதியும்.

திடீரென்று ஒரு நாள் பக்கவாதம் தாக்கி அவரை முடக்கிப் போட்டது. அந்த ஒரு நாளில் அவருடைய அனைத்துமே முடங்கிப் போனது. அன்றிலிருந்து நேற்றுவரையிலும் அவர் மரணத்தை எதிர்கொண்டபடியேதான் இருந்தார். மருத்துவமனையில் அவர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்து மருத்துவர்கள், எந்தவொரு முக்கியப் பிரமுகர்கள் அவரைப் பார்க்கச் சென்றாலும், அவரிடம் பழைய கதைகளை சிறிது நேரமாவது பேசும்படி பணிக்கப்பட்டார்கள்.

அப்படித்தான் கொஞ்சம், கொஞ்சமாக அவர் மறுபடியும் இயக்குநர் ஸ்ரீதராக உருவெடுக்கப்பட்டார். பெற்ற தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்தக்கூட வர முடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டதை, இந்தக் காலக்கட்டத்தில்தான் தன்னைச் சந்திக்க வந்த அத்தனை பேரிடமும் சொல்ல முற்பட்டதை கண் கலங்கச் சொல்கிறார்கள் அவருடைய நேசிப்பாளர்கள்.

குடும்பம், மனைவி, மக்கள் ஏன்? எதற்கு? என்று கேட்பவர்களுக்கு மிகப் பெரிய உதாரணத்தை உருவாக்கித் தந்திருக்கிறார் ஸ்ரீதர்.
இவருடைய மனைவி தேவசேனா அம்மாவின் உறுதுணையும், அன்பும், பரிவும், பாசமும்தான் இவரை இத்தனை வருடங்கள்(கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்) நீண்டு வாழ வைத்துள்ளது என்றால் அதில் கொஞ்சமும் மிகையில்லை.

எத்தனையோ பணக்காரர்கள் வீட்டில், வயதான பெரியவர்களை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு நர்ஸ்களை சம்பளத்திற்கு வேலைக்கு வைத்துவிட்டு அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போகும் சூழல் உள்ள நிலையில்(விஜயா-வாஹினி ஸ்டூடியோ அதிபர் திரு.நாகிரெட்டி தனது கடைசிக் காலங்களில் தான் உருவாக்கிய விஜயா மருத்துவமனையிலேயே ஒரு அறையில் இப்படித்தான் முடங்கிப் போய் கிடந்தார்) தன் கண்ணின் மணி போல கணவரை கடைசி வரையில் தனது இல்லத்தில் பாதுகாத்து வந்தவர் தேவசேனா. இதனால்தான் சமீப காலமாக நடிகர் சிவக்குமாரும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் “பெண்மையின் அடையாளமாகத் திகழ்கிறார் தேவசேனா” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்தப் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவரை குழந்தை போல பாவித்து வந்தது முதல், மருந்து, மாத்திரை கொடுத்து கவனித்து வந்து, சொல்வதே புரியாத நிலையில் அவர் சொல்வதைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்றும், அவர் பார்க்க விரும்புகிறவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ஸார் பார்க்கணும்கிறார்.. கொஞ்சம் வர முடியுமா?” என்று கேட்டு அவர்களை வரவழைத்து, கணவரின் சிறிது நிமிட சந்தோஷத்தையும் அந்த நேரத்தில் பூர்த்தி செய்த அவருடைய மனைவி தேவசேனாவை தெய்வம் என்றே சொல்லலாம்.

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதி நிலைக்கும்”

என்ற வரிகளை ஸ்ரீதர்தான் தனது “சுமைதாங்கி” திரைப்படத்திற்காக கவியரசர் கண்ணதாசனிடம் கேட்டு வாங்கியவர்.
இருப்பதில் பலர் உதாரணமாக இருப்பார்கள்.. இறந்தும் சிலரே உதாரணமாகத் திகழ்வார்கள். அந்த வகையில் திரைப்பட சாதனைகளையும் தாண்டி, தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்தினரோடு இணைந்து உதாரணமாகிவிட்டார் இயக்குநர் ஸ்ரீதர்.

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..

எனது ஆகாசக் கனவு!

11-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



சிறு வயதுக் கனவுகள் பெரும்பாலும் நிச்சயம் பலித்துவிடும். அது ‘பொய் சொல்லாத பிரதி’ என்பார்கள். அதில் ஒரு பிரதி எனக்கு மட்டும் இன்றுவரை நிறைவேறாமலேயே இருக்கிறது.

நிலாச் சோறு ஊட்டி வளர்ந்த பிள்ளைகளில் நானும் ஒருவனாக இருந்தும், நிலாவைவிட ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு முறையாக வீட்டின் மீது பறந்து செல்லும் விமானங்களின் மீதான கவனம் என்னை அதிக அளவில் ஈர்த்திருந்தது.

என்னுடைய வீட்டில் எனது அண்ணனுக்காக வாங்கிய விளையாட்டு பொருட்கள், எனது அக்காக்கள் இருவரிடமும் சென்று, விளையாடப்பட்டு நசுங்கி அடையாளமே தெரியாத நிலையில் இருந்தபோதும் மறக்காமல் என்னையும் வந்தடைந்தது. அந்தக் கூட்டத்தில் ஒரு சிறிய இறக்கைகளைக் கொண்ட சிவப்பு கலர் விமானம் ஒன்றும் இருந்தது.

என்னை மிகவும் கவர்ந்திருந்த அந்த விமானத்தின் ஸ்பெஷலே அதனுடைய சைஸ்தான். இரண்டு கரப்பான் பூச்சி சைஸில் மட்டுமே இருந்த அந்த விமானம் எனது இணை பிரியாத் தோழனாக இருந்து வந்தது. அந்த விமானத்தின் இரண்டு கருப்பு கலர் சக்கரங்களும் உடைந்து போய் மொன்னையாகத்தான் இருந்தது. ஆனாலும் அதனைத் தரையில் தேய், தேய் என்று தேய்த்து எடுத்துக் கொண்டிருந்தேன். இரவு தூங்கும்பொழுது பொம்மைக்கு பதிலாக அந்த விமானம் எனது கைகளுக்குள் சிறைபட்டுக் கிடந்தது.

கொஞ்சம் வளர்ந்ததும் விமானத்தின் மீதான ஆசையும், பரபரப்பும் அதிகமானது எனக்குள். முதன்முதலாக நான் விமானத்தைப் பார்த்தது எந்த வயதில், எந்தத் திரைப்படத்தில் என்பது தெரியாவிட்டாலும், சிவாஜி நடித்த ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் செளகார் ஜானகி ஒரு குழந்தையுடன் விமானத்தில் இருந்து இறங்கி வருவார். திருச்சி விமான நிலையம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் விமானம் என்னும் பூதம் எனக்குள் ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியதாக எனது மூளையின் நினைவகம் தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கே உரித்தான குணத்தோடு வீடு திரும்பி எனது அப்பாவிடம் “அவ்ளோ பெரிசா இருந்துச்சு.. பெரிய படிக்கட்டு வைச்சு இறங்குனாங்கப்பா..” என்று என் அப்பாவிடம் திக்கித் திணறி சொன்னதையும், வீட்டு வாசப்படியில் அமர்ந்து நகம் வெட்டிக் கொண்டிருந்த எனது தந்தை அதனை அவ்வளவு சிரிப்போடு கேட்டதையும் இப்போதும் நினைத்துப் பார்க்க முடிகிறது.

அதன் பின் விமானம் பற்றிய பலவித செய்திகளும் என்னை பரவசமாக்கிக் கொண்டிருந்தன. பேப்பரில், புத்தகத்தில் என்று எந்த இடத்திலும் விமானம் என்ற பெயருடன் புகைப்படம் இருந்தால் அடுத்த நிமிடம் கிழித்துவிடுவேன். கிழித்தவைகளை பத்திரமாக வைப்பதற்காக எழுதி மக்கிப் போயிருந்த ஒரு நோட்டைத் தேர்ந்தெடுத்து அதனுள் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தேன்.

பள்ளியில் விமானம் பற்றி மாணவர்களுடன் பேசப் பேச அதன் உருவத்தைப் போலவே எனது கனவும் பிரம்மாண்டமாகிக் கொண்டே போனது.

வீட்டிற்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று வானத்தில் விமானத்தின் சப்தம் கேட்ட உடனேயே அப்படியே தாவிக் குதித்து வாசலுக்கு ஓடி வந்து தலையை 360 டிகிரியிலும் திருப்பி எங்கோ தூரத்தில் பின்புறத்தில் புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் எனது கனவைப் பார்த்துவிட்டுத்தான் வருவேன். பால்ய பருவத்தில் இதைவிட வேறு என்ன ஆச்சரியம் இருக்கக் கூடும்?

திண்டுக்கல் அருகே ஒரு முறை வெள்ளம் சூழ்ந்து நல்லமனார்கோட்டை என்னும் ஊர் அழிந்தபோது அதனைப் பார்ப்பதற்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். வந்தார்.

அன்றைய பத்திரிகைகளில் எம்.ஜி.ஆர் வருவதைப் பற்றி ஏற்கெனவே படித்திருந்த தெரு மக்களோடு நானும் எனது அம்மாவும் வீட்டு வாசலில் ஏறக்குறைய 4 மணி நேரம் காத்திருந்தது மறக்க முடியாதது.. மதியவாக்கில் 3 மணியிருக்கும்.. வானத்தில் சிறிய அளவு சப்தத்தோடு ஆரம்பித்த அந்த விமானத்தின் அழைப்பால் தெருவே பரபரத்தது.

எனது தெருவில் குடியிருந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளர் மூக்கம்மா என்பவர் தனது வீட்டு முன்பாக திரளாக பெண்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஒட்டு மொத்தத் தாய்க்குலங்களின் கூட்டமும் விமானத்தைப் பார்த்து கைதட்டலைத் துவக்க..

விமானம் வீட்டு மேலேயே பறந்து வந்து கொண்டிருந்தது. கழுத்தை அங்கிட்டும், இங்கிட்டுமாகத் திருப்பி ஒட்டு மொத்தக் கூட்டமும் அந்த விமானம் தங்களது விழிப்பார்வையில் இருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தது. இதுதான் அந்த கனவை நேரில் பார்த்த முதல் அனுபவம்.

“சின்னதா இருக்கு.. கருப்பா இருக்கு.. எங்க போகுது? திரும்பி வருமா? எப்ப வரும்?” என்றெல்லாம் நான் கேட்டுத் துளைத்த கேள்விகளுக்கு பொறுமையாகப் பதிலளித்த எனது அப்பாவின் நினைவு இப்போதும் எந்த ரூபத்தில் விமானத்தைப் பற்றி யோசிக்கும்போதும் உடன் துணைக்கு வரத்தான் செய்கிறது.

விமானம் படம் போட்ட நோட்டுக்கள்தான் வேண்டும் என்று சொல்லி ஆறாம் வகுப்பில் சேரும்போது எனது அண்ணனிடம் போட்ட சண்டையும், அந்த பாழாய்ப் போன கனவினால்தான் வந்தது.. என்னைச் சமாளிக்கவேண்டி எனது அண்ணன் லைப்ரரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அதில் இருந்த ஒரு விமானப் புகைப்படத்தை கிழித்து எனது நோட்டில் ஒட்டி “இதை மட்டும் தமிழ் நோட்டுக்கு வைச்சுக்க..” என்று சொல்லிக் கொடுத்தது எனக்கு இன்றும் நினைவிற்கு வருகிறது.

தொடர்ந்து நான் பார்த்தத் திரைப்படங்களும் இந்த விமானம் என்னும் பூதத்தை பூதாகாரமாக்கிக் கொண்டே சென்றது. ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் கமலஹாசனும், ஜெயப்பிரதாவும் விமானத்திற்குள் பேசிக் கொள்ளும் காட்சியில் விமானம் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்ற எனது எண்ணத்தில் முதல் பிள்ளையார் சுழி போட்டது.

எனக்கு அப்போது புரியாத ஒரே விஷயம், விமானம் தரையிறங்குவதும், புறப்படுவதும்தான். இது விஷயமாக எனது சக மாணவர்களுடன் நான் நடத்திய சண்டைகளும், சச்சரவுகளும் இப்போதும் சிரிப்பை வரவழைக்கிறது.

விமானத்தின் சக்கரங்கள் விமானம் புறப்பட்டதும் உட்புறம் மறைந்து போகும் என்ற வாதத்தையே அப்போதைய எனது வகுப்பு மாணவர்கள் பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது அப்படியேதான் இருக்கும் என்று ஒரு சிலரும், “இறங்கும்போது அந்தச் சக்கரத்தை வைச்சுத்தான் பிளைட்டு உருண்டு வருமாம்.. இல்லாட்டி நம்ம சைக்கிள் மாதிரி குப்புறடிச்சு விழுந்திரும். அதுனால சக்கரம் அப்படியே நீட்டிக்கிட்டுத்தான் இருக்கும்.” என்றெல்லாம் வாதங்கள் எழும்.

ஆனாலும் எனக்கு இதில் நம்பிக்கையில்லை. விமானத்தை பஸ் மாதிரி ஸ்டார்ட் செய்து ஓட்டுவார்கள்.. கொஞ்ச தூரம் ஓடியதும் ஒரு கம்பியை வைச்சு இழுப்பாங்க. அவுங்க இழுக்க, இழுக்க அது அப்படியே மேல உயர ஆரம்பிச்சிரும். அப்புறம் எந்தப் பக்கம் போகணுமோ அந்தப் பக்கமா ஸ்டியரிங்கை பிடிச்சு வளைப்பாங்க.. பிளைட் போக ஆரம்பிச்சிரும்..” என்றெல்லாம் என் தரப்பு வாதப்பிரதிவாதங்களைத் தயங்காமல் அள்ளி வீசியிருக்கிறேன்.

இதையெல்லாம் அப்போது வேறுவழியில்லாமல் பொறுமையாகக் கேட்டு, என்னையும் சமாளித்து, இன்றும் என்னுடன் நட்புடன் இருக்கும் நண்பன் ஜன்னல்கார முத்தையாவிற்கும் எனக்குமான இன்றைய நட்பில் சிரிப்பை வாரி வழங்குவது இதுதான்.

“அதெப்படி.. அப்படியே மேல எந்திரிச்சு ஸ்டியரிங்கை திருப்பி அப்படியே போயிருமாக்கும்.. மவனே.. இதையெல்லாம் இப்ப எழுதினேன்னு வைச்சுக்க, உன் பொழப்பு நாறிப் போயிரும்..” என்று அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறான். சொல்லவிருப்பவன் சொல்வதற்குள் நாம் முந்திக் கொள்வது நல்லது என்பதால்தான் நான் இங்கே சொல்லிவிட்டேன்.

இப்படி, நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எனது விமானக் கனவு எனது எண்ணத்தை ஊத்திவிட்டுக் கொண்டிருக்க.. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த விடுமுறை நாளில் அந்த அதிசயம் ஒன்று நடந்தது.

அன்றைய காலைப் பொழுதொன்றில் எம்.எஸ்.பி. பள்ளியின் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு விமானம் மிகத் தாழ்வாக பறந்து வந்து கொண்டிருந்தது.. ஆட்டத்தைக்கூடக் கவனிக்காமல் விமானத்தையே ஆச்சரியத்துடன் பார்த்து பிரமித்துப் போனேன்.

நண்பர்களிடம் மிட்டாய்க் கடையை முறைத்துப் பார்த்த கதையாகச் சொன்னபோது “ஆமடா.. இந்த ரோட்டுல கடைசில திருமலைக்கேணி பக்கத்துல ஒரு ஏர்போர்ட் இருக்காம்.. எங்கப்பா சொன்னாரு. அங்கதான் இந்த பிளைட் இறங்கப் போகுதாம்..” என்றார்கள்.

ஆஹா.. எனது நீண்ட நாள் கனவு நனவாகும்போல இருக்கே என்றெண்ணி அப்போதே எனது நண்பர்களுடன் பேசினேன். “விமானத்தை நேரில் போய் பார்க்க வேண்டும். வருகிறீர்களா..?” என்று.. சிலர் ஒத்துக் கொள்ள.. வாடகை சைக்கிளில் போய் வருவது என்று முடிவு செய்து கொண்டோம்.

வீட்டில் சொன்னால் விடமாட்டார்கள் என்பதால் “நாளைக்கு செமிபைனல் மேட்ச் இருக்கு..” என்று பொய் சொல்லிவிட்டு இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தேன். அந்த விமானம் என்னும் பேய் எப்படியிருக்கும்? பெரிசா? சிறிசா? உள்ள விடுவானா? மாட்டானா? பக்கத்துல போய் பார்க்க முடியுமா? முடியாதா என்றெல்லாம் கனவு கண்ட நிலையில்தான் உறங்கிப் போனேன்.

விடிந்தது. YMR-பட்டிக்கு வந்து அங்கிருந்த எங்களது சந்திப்பு சென்டரான தாஸ் டீக்கடையில் ஆளுக்கொரு டீ அடித்துவிட்டு அருகில் இருந்த சண்முகம் சைக்கிள் கடையில் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

மொத்தம் எட்டு பேர். எட்டு சைக்கிள்கள்.. வண்டிகள் பறந்தன. எங்கும் நிற்காமல் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் சைக்கிளை அலுத்த ஆரம்பித்திருந்தோம். கிட்டத்தட்ட 13 கிலோ மீட்டர் தூரம். அந்த சிறிய ரக விமானத்திற்கான விமான நிலையத்தை தூரத்திலிருந்து பார்த்தபடியே “வந்திருச்சு டோய்..” என்ற சந்தோஷக் கூச்சலுடன் சைக்கிளை மிதி, மிதி என்று மிதித்தோம்.

மூச்சு வாங்கி சைக்கிளை கேட் அருகே போட்டுவிட்டு பார்த்தபோது எனது 15 ஆண்டு கால கனவு ஒன்று, பிரம்மாண்டமான தனது உருவத்துடன் எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

இதைத்தானே சரவணா பார்க்கத் துடித்தாய்..? இதுதானே உனக்குள் ஒரு களவாட்டம் ஆடிக் கொண்டிருந்தது..? என்ற ஆசையில் கேட்டைப் பிடித்துத் தொங்கியபடியே பேச்சு மூச்சில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது உடன் வந்திருந்த நண்பன் கெளரிசங்கர் ஒரே ஜம்ப்பில் கேட்டின் மீதேறி தாண்டிக் குதித்தான்.. அருகில் இருந்த ஒரு சிறிய கொட்டகையில் கட்டில் போட்டு வாட்ச்மேன் அமர்ந்திருந்ததை அவனும் கவனிக்கவில்லை. நாங்களும் கவனிக்கவில்லை.

எங்களையும் “வாங்கடா..” என்று அவன் சொல்லும்போதே வாட்ச்மேன் அரக்கப் பரக்க ஓடி வந்தான்.. அவனைப் பார்த்து நாங்கள் கெளரியை எச்சரிக்க மீண்டும் ஒரே ஜம்ப்பில் ஏறி எங்கள் பக்கம் வந்திறங்கினான்.
வாட்ச்மேன் “யாரும் உள்ளே வரக்கூடாது” என்று எச்சரித்தார்.

இவ்ளோ பெரிசை பக்கத்தில் போய் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும் என்கிற அப்போதைய வயதின் காரணமாக அந்த வாட்ச்மேனிடம் எவ்வளவோ கெஞ்சினோம்.. ம்.. பலனில்லை. “முடியவே முடியாது..” என்றார். இன்னொரு நண்பன் விளையாட்டாக தன்னிடமிருந்த கடலை மிட்டாயை லஞ்சமாக கொடுக்க நீட்ட.. அதை அவர் வாங்காமல் முறைத்துக் கொண்டார்.

உள்ளே போக வழியில்லை என்பதால் ஆளுக்கொரு திசையாக சென்று ஒவ்வொரு கோணத்திலும் பார்க்க ஆரம்பித்தோம். எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் அதன் பிரம்மாண்டமும், வடிவமும் எங்களுக்கு யானையை ஒத்த அதிசயத்தை அளித்தன.

மொட்டை வெயிலில், வியர்வை பொங்கி வழியும் நிலையில் நின்றிருந்த எனக்கு அந்தக் கணம் கொடுத்த பரவசத்தை, மீண்டும் பல ஆண்டுகள் கழித்து சென்னையில் முதன் முதலாக மெரீனா பீச்சில் கணக்கிலடங்கா தண்ணீருடன் வங்காளவிரிகுடாவைப் பார்த்து “ஆத்தாடி.. எம்புட்டு தண்ணி..” என்று வாய்விட்டுச் சொன்னபோதுதான் மீண்டும் கிடைத்தது.

பார்த்துக் கொண்டேயிருந்துவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவராக தங்களது சைக்கிளை எடுத்துக் கொண்டு நிழல் தேடி போய் அமர்ந்த பின்பும் கீழே கிடந்த சைக்கிளை எடுக்கக்கூட மனமில்லாமல் கேட்டை பிடித்துத் தொங்கியபடியே நின்றிருந்தது மிக, மிக இனிமையான அனுபவம்.

கால் சோர்ந்து போய் தளர, அந்த கேட்டின் அருகிலேயே தரையில் அமர்ந்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கிறுக்குத்தனமும் தொடர்ந்தது. சாயந்தரம்வரையிலும் உட்கார்ந்து, உட்கார்ந்து பேசி முடித்து மாலை 5 மணியானவுடன் சண்முகம் அண்ணனை நினைத்து பயந்து போய் அங்கிருந்து கிளம்பினோம்.

மீண்டும் ஒரு முறை எனது கனவுலகின் நாயகனை கேட் அருகே சென்று ஆசை தீரப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது 26 கிலோ மீட்டர்கள் சைக்கிளை அழுத்திய கால்வலியைக்கூட மறக்கடித்தது அந்த கனவின் அழகும், பிரம்மாண்டமும்.

நீண்ட நாட்கள் கழித்து ஊர் விஷயங்களையும், உலக விஷயங்களையும் நண்பர்களுடன் பெட்டிக் கடைகளிலும், சினிமா தியேட்டர்களிலும் விவாதித்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்த விமான நிலையம் எனது ஊருக்கு வந்ததின் பின்னணியில் இருந்த 'உண்மைக் கதை' என்று சொல்லி ஒரு ‘கதை’ எனக்குச் சொல்லப்பட்டது.

அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு 'நடிப்புத் தாரகை'க்காகவே அந்த விமான நிலையம் கட்டப்பட்டு, விமானமும் வாங்கப்பட்டதாக எனது நண்பர்கள் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மையா, பொய்யா என்றுகூட இன்றுவரையிலும் என்னால் சொல்ல முடியவில்லை.

அந்த ‘நடிப்புத் தாரகை’ வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து திண்டுக்கலுக்கு வருவாராம். அப்போதைய திண்டுக்கல் நகரின் மிகப் பெரிய செல்வந்தரின் வீட்டில் தங்கிவிட்டு, திங்கட்கிழமை காலை மீண்டும் சென்றுவிடுவார் என்று மேலதிகத் தகவல்களைக் கொட்டினார்கள். நம்புவதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்தேன் நான்.

எனது வீட்டில் கேட்டேன். சிரித்தார்கள். அக்கம்பக்கம் வீடுகளில் கேட்டேன். “அதுதான் ஊருக்கே தெரியுமே?” என்றார்கள். ஆனால் உண்மைதானா என்பதைத்தான் யாரும் சொல்லவில்லை. அனைவரும் சொல்கிறார்கள். ஆகவே நாங்கள் நம்புகிறோம் என்றனர். திண்டுக்கல்வாழ் மக்கள் வழி, வழியாகத் தங்களது பரம்பரையினரின் காதில் இடும் ஒரு அற்புதச் செய்தி இது ஒன்றுதான்..

காதலுக்காக எதை, எதையோ அடைந்தார்கள் அல்லது இழந்தார்கள் என்பதெல்லாம் காற்றோடுபோய், ஒரு விமான நிலையமே கட்டினார்கள் என்கிற கதைதான் திண்டுக்கல் நகர மாந்தர்களின் மிகப் பெரிய பெருமூச்சு.

உண்மையோ, பொய்யோ எப்படியோ எங்களது ஊரில் ஒரு விமான நிலையம் இருக்கிறதே என்கிற பெருமை திண்டுக்கல் மக்களின் மிகப் பெரிய சொத்து. மறுப்பதற்கில்லை.

இந்த பால்ய வயது கனவுக்குத்தான் எவ்வளவு வலிமை..? சுலபத்தில் மனதை விட்டு இறங்க மறுக்கிறது. இந்த வயதிலும் இன்னும்கூட ஊருக்குப் போகும்போதும் சரி. வரும்போதும் சரி.. மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தவுடன் உடல் தானாக எழும்பி கண்கள் விமானங்களைத் தேடுகிறது. இது ஒரு அனிச்சை செயலாக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க.. அந்த கனவை ஒரு நாள் அடையும்வரையிலும் இப்படித்தான் இருக்கும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டே வருகிறேன்.

எந்தத் ‘தாரகை’ எனக்கு உதவுவாரோ தெரியவில்லை.. காத்திருக்கிறேன்..!