Showing posts with label போலி. Show all posts
Showing posts with label போலி. Show all posts

சைபர் கிரைம்-செந்தழல் ரவிக்கு எனது பதில்..!

ரவி..

என்னை என்ன கேணையன்னு நினைச்சியா..? கோயம்புத்தூர் மீட்டிங்ல வைச்சு என் பதிவுக்கு வர்ற அனானி கமெண்ட்டை பத்தியும், என்னோட போலி பிளாக் பத்தியும் புலம்பினப்ப.. அண்ணே.. இது லக்கியோட வேலையாத்தான் இருக்கும். அவன் இப்ப மூர்த்தியோட ஆள்.. அவன்கிட்ட ஜாக்கிரதையா இருண்ணேன்னு நீதானடா சொன்ன.

நீ சொன்ன அனானி கமெண்ட் அடையாளமெல்லாம் யுவகிருஷ்ணா கமெண்ட்டோட ஒத்துப் போன பின்னாடிதான், நான் சுத்தமா அவன்கிட்டேயிருந்து ஒதுங்கினேன்.

இந்த அருண்குமாரை பத்தியும் நீதான என்கிட்ட முதல்முதல்லா சொன்ன.. அருண் போன் பண்ணி பேசும்போதெல்லாம் அவன் யுவகிருஷ்ணாவை பத்தி சொன்னதையெல்லாம் உன்கிட்ட திருப்பி சொன்னனே.. நீயும் கேட்டுட்டு ஆமாண்ணே.. ஆமாண்ணேன்னு தலையாட்டுன.

அருண்குமாரோட ஏதோ ஒரு சைட் பாஸ்வேர்டை லக்கி மூர்த்திக்கு பார்வர்டு பண்ணியிருக்கான்.. மூர்த்தி அதை யூஸ் பண்ணி அருண்குமாரோட அம்மா, அப்பா போட்டோவையெல்லாம் போலி டோண்டு பதிவுல எடுத்துப் போட்டு கதையெழுதிட்டான்.. பாவம்ணே அருண்.. அப்படீன்னு வெண்ணை நீதானடா சொன்ன..

அதுக்கப்புறம்தான அருண்கிட்ட ஆதாரத்தை அனுப்புடான்னு கேட்டு வாங்கி உனக்கும் அனுப்பி வைச்சனே.. அப்போ தெரியலையா.. உன் பிரெண்டு நல்லவன்னு..

நீ புகார் கொடுக்க வந்தப்பவே இதுக்கு பாலபாரதியையும், யுவகிருஷ்ணாவையும் கூப்பிட வேண்டாம்.. நாமளே பார்த்துக்கலாம்னு சொன்னதுக்கு சரி.. சரின்னு தலையாட்டிட்டு கடைசில உன் மாப்ளை வரவனையானை பார்த்தவுடனே உல்டா அடிச்சுட்ட.. பாலபாரதி மீடியாவை கூப்பிட உதவுவாருன்னு சொல்லி என் வாயை அடைச்ச.. உன் பிரெண்டு யுவகிருஷ்ணாவை கடைசி நிமிஷத்துல கூப்பிட்டுத் தொலைச்சீங்க. அதுக்கு நானா பொறுப்பு..? செய்றதையெல்லாம செஞ்சுட்டு கடைசி நிமிஷத்துல அவன் நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு அஸிஸ்டெண்ட் கமிஷனர் ரூமுக்குள்ளேயும் வந்து உக்காந்து சிரிச்சுட்டுப் போயிட்டான்.. கடைசியா நானும் காசியும், டோண்டுவும்தான் முட்டாளாயிட்டோம்..

யுவகிருஷ்ணாதான் முன்னாடியே ஒரு பதிவுல நான் போலியுடன் இருந்தேன். அது ஒரு காலம்.. கனவு மாதிரி மறந்திட்டேன்னு ஓப்பன் டாக்ல எழுதி வைச்சானே. படிச்சு பார்த்துட்டு நான் உனக்கு போன் அடிச்சு சொல்லலை.. இப்ப அவன் ரொம்ப ஜாக்கிரதையா பழைய பதிவு எல்லாத்தையும் அழிச்சிட்டான். நான் எங்கேயிருந்து ஆதாரம் காட்டுறது..?

எனக்கென்ன அவன்கூட வாய்க்கா, வரப்பு சண்டையா..? இல்ல பங்காளி சண்டையா..? நான் எதுக்கு அவன்கூட வீணா சண்டைக்குப் போகணும்..? பொழுதன்னிக்கும் அவனைப் பத்தி பேசுறதுதான் என் வேலைன்னு நினைச்சியா..? என்னை அனானியா திட்டி கமெண்ட்டும், மறைமுகமா திட்டி பதிவும் போட்டதுனாலதான் நான் அவன் மேல கோபமானேன்..

இப்பக்கூட எங்களுக்குள்ள என்னடா சண்டை..? நீதான் சொன்ன.. அண்ணே பாவம்ணே.. இப்பத்தாண்ணே எழுத ஆரம்பிச்சிருக்கான்.. விட்ருங்கண்ணே.. நல்லா வர வேண்டிய பையன்ணேன்.. நல்லா எழுத்தாளரா வருவாண்ணேன்னு நீ சாட்டிங்ல சொன்ன.. அப்பவும் நான் சொன்னது.. அவன் போலி டோண்டு மேட்டரை பத்தி எழுதினா மட்டும்தான் நான் பதிலுக்கு என்கிட்ட இருக்குறதை வைச்சு எழுதுவேன்னு சொன்னேன். அவ்ளோதான..

ஆனா அவன் சாரு மேட்டரை எழுதுவான்னு எனக்கென்ன தெரியும்..? அதுல நான் ஒரு பக்கம் இன்வால்வ் ஆயிருக்கேன்னு அவனுக்கும், உனக்கும் நல்லாத் தெரியும்.. தெரிஞ்சும் அப்படி பட்டும்படாம எழுதிட்டான்னு கோபம் வந்துச்சு. அதான் போஸ்ட் போட்டேன்.. அதுலேயும் எப்பவோ போலியோட தொடர்புன்னு ஒத்துக்கிட்டு எழுதிட்டானே.. அதோட நாம சொல்லித்தான் பல பேருக்குத் தெரிய வேண்டியதில்லை. இங்க நிறைய பேருக்கும் தெரியுமே.. கேஷூவலா எடுத்துக்குவான்னு நினைச்சுத்தான் சாரு பதிவுல அவனுடைய முன்னாள் நண்பர்ன்னுதான் குறிப்பிட்டேன்.. திரும்பி படிச்சுப் பாரு.. முன்னாள் நண்பர்ன்னுதான் சொல்லித் தொலைஞ்சிருக்கேன்.

உன் பிரெண்டு என்னடான்னா அப்படியே உல்டா அடிச்சு எதோ ஒரு வலைப்பதிவொன்றில் அப்படீன்னு என் பேர் போடாம மூஞ்சில அடிக்கிறாப்புல ஒரு விட்ஜெட்டை உருவாக்கி வைச்சுட்டான்.. அதைப் படிக்கிறவன் என்ன நினைப்பான்..? நான்தான் ஏதோ பைத்தியம் மாதிரி விடியற்காலை எந்திரிச்சதுல இருந்து ராத்திரி தூங்குவறைவரைக்கும் பொழப்பில்லாம உன் பிரெண்ட்டை பின்னாடியே விரட்டிருக்கேன்னு நினைச்சுக்க மாட்டானா..? இப்ப நான் என்ன செய்யறது..? அதான் அருண்குமாரை அனத்தி அந்த பதிவை போட வைச்சேன்.. அவனும் பாவம்.. அவன் அப்பாவை ஆஸ்பத்திரில சேர்த்துட்டு நாயா அலைஞ்சிட்டிருந்தவன் எனக்காக இருக்குற வேலைகளுக்கு நடுவுல இதையும் போட்டுத் தொலைஞ்சான்..

இதுக்கு நீ என்ன பதில் போடுற..? என்னடா நினைச்சுக்கிட்டிருக்க நீ..? இந்த மூர்த்தி விஷயத்துல மட்டும் எல்லாம் நீ சொல்ற மாதிரி.. சொன்ன மாதிரிதான நடந்துக்கிட்டேன்.. இந்த விஷயத்தைத் தவிர.. உன் பிரெண்டு விஷயத்துல மட்டும் மாட்டேன்னு நான் சொன்னதுக்குக் காரணம் உனக்கே தெரியும்.. தனிப்பட்ட முறையில உன் பிரெண்டு எத்தனை தடவை அனானி பேர்ல என்னைத் தாக்கி என் பதிவுலேயே கமெண்ட்டு போட்டிருக்கான்னு தெரியும்ல.

இவனை அனானியா வந்து திட்டிட்டு இவனே வலைப்பதிவர் சந்திப்பு வாண்ணே கூப்பிடுறானேன்னுதான் எனக்குக் கோபம்.. சோ பத்தி எழுதின பதிவுல போய் பாரு.. ஒரே நிமிஷத்துல அண்ணேன்னு போட்டுட்டு அடுத்த செகண்ட்டுல அனானியா முட்டாத்தமிழன்.. உட்டாலக்கடி தமிழன். அப்படி இப்படின்னு போட்டு வைச்சான்.. ஒரு செகண்ட்டுல எவனாவது அனானி கமெண்ட்டை அப்ரூவ் பண்ண முடியுமாடா..? இதையும்தான உன்கிட்ட சொல்லி வைச்சேன்.. அவன் அந்த விட்ஜெட்டை போடாம இருந்து தொலைஞ்சிருந்தா நானும் விட்டதுடா சனியன்னு என் வேலையை பார்த்துட்டுப் போயிருப்பேன்.. அவன் போட்டு வைச்சா அதுக்கு நான் எங்க போய் எவன் மயித்தப் புடுங்குறது..?

ஏதோ உன் பிரெண்ட்டு.. பிரெண்ட்டுன்னு சொல்லி கொஞ்சிக் குலாவுறியே.. நேர்ல பார்த்தா செருப்பால அடிப்பேன்னு சொன்னியே.. அந்த கருத்து கந்தசாமியும், மகேந்திரனும் உன் பிரெண்டுகூட இன்னிக்கு சேர்ந்து நின்னு மும்மூர்த்திகளா போஸ் கொடுத்திருக்காங்க.. இதுக்கு என்ன செய்யப் போற..?

விடாது கருப்பு டீம்ல ஆபாசப் பதிவு எழுதின லிஸ்ட்ல மகேந்திரன் பேரும் இருக்கு. அவரையும் சேர்த்துதான் மூர்த்தி கைப்பட எழுதிக் கொடுத்திருக்கான். லைவ் டெலிகாஸ்ட் மாதிரி விசாரணை நடக்கும்போதே உன்கிட்ட போன்ல இதை சொன்னனே.. ஞாபகமிருக்கா..? இப்போ உன் பிரெண்டுதான் அவன்கூட ஜோடியா கோல்கேட் விளம்பரம் போஸ் கொடுத்திருக்கான்.. என்னத்த புடுங்கப் போற..?

ரெண்டு நாளைக்கு முன்னாடி திபிசிதியை கண்டிச்சு ஒரு பதிவு போட்டியே.. என்ன மயித்துக்கு..? அவர் விடாது கருப்புவோட லின்க்கை வைச்சிருக்காருன்னு சொல்லித்தான.. ங்கொய்யால.. இங்க விடாது கருப்பு தளத்துல பதிவு எழுதினவர்கூடத்தாண்டா உன் பிரெண்டு சிரிச்சுக்கிட்டு நிக்குறான்.. இப்ப எங்கடா போய் நாண்டுக்கிட்டு சாவ..? இனிமே திபிசிதியையும், கோவியையும் எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு மூர்த்தியோட தோஸ்த்துக, அல்லக்கைகள்ன்னு சொல்லுவ..?

இந்த எழவுக்காகத்தான் அப்பவே மூர்த்தியோட யார், யார் இருக்காங்கன்னு தெரிஞ்சு அவங்ககிட்டேயிருந்து நான் ஒதுங்கினேன்.. திபிசிதி, கோவி, யுவகிருஷ்ணா, மகேந்திரன்னு இவங்க பதிவு பக்கம் போகாம ஒதுங்கி ஒரு வருஷமாச்சுடா.. என் கமெண்ட்டை இவங்க பதிவுல பாத்திருக்கியா..? ஒரு கொள்கைன்னு இருந்தா ஒரே மாதிரி இருந்திரணும்.. இல்லைன்னா ஆட்டைக்கு வரலைன்னு சொல்லிட்டு கூட்டத்தோட கூட்டமா சேர்ந்து கோவிந்தா போட்டுட்டு போயிரணும்..

டோண்டு இருக்கிறவரைக்கும் போலி டோண்டு இருப்பாண்ணே.. என்னால ஒண்ணும் செய்ய முடியாதுண்ணேன்னு பாலபாரதி சொன்ன பின்னாடிதான் நான் எந்தப் பதிவர் கூட்டத்துக்கும் போகாம ஒதுங்கியிருக்கேன்.. ஒண்ணு பதிவர்கள் மேல ஒரு அக்கறை இருக்கணும். அவனுக்கு ஒண்ணுன்னா உதவணும்.. அதில்லாம அவனை அடிச்சு விரட்டணும்னு நினைச்சு எதிர்க்கிறவனுக்கு மறைமுகமாக ஆதரவையும் கொடுத்துப்புட்டு பதிவர் சந்திப்புக்கு வாங்கன்னா கேக்குறவன்லாம் கேணையனா..? எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு நான் அங்க போய் செவிட்டு எழவுன்னு என்னைக் கூப்பிட்டவன்கிட்டபோய் இளிச்சுக்கிட்டு நிக்குறது..?

போதுண்டா சாமிகளா.. ஆளாளுக்கு தேவைன்னா ஓடி வருவீங்க.. நாங்களும் இருக்குற பொழைப்பையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக ஓடி வரணும்.. கடைசியா நீங்கள்லாம் ஒண்ணு சேர்ந்துக்குவீங்க. நாங்க விரலைச் சூப்பிக்கிட்டு நடுரோட்டுல தனியா பைத்தியக்காரன் மாதிரி நிக்கணும்.. எனக்கென்ன தலையெழுத்தா..?

உங்களுக்குள்ள சண்டைன்னா நீங்களே முட்டி, மோதிக்கிட்டு சாவ வேண்டியதுதானடா.. என்னை மாதிரி ஆளுகளை என்ன எழவுக்குடா இழுத்துவிடுறீங்க.. இந்த பிரச்சனை ஆரம்பிச்சதுல இருந்து எனக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியும் போச்சு.. இதுக்காக உழைச்ச நேரத்துக்கு எங்கிட்டாச்சும் போய் பிச்சையாவது எடுத்திருந்தா, எனக்கு இன்னிக்கு சோத்துக்காச்சும் உதவும்.. எவ்ளோ உழைப்பு வேஸ்ட்டு.. ஏண்டா இந்த பிளாக் சனியனைத் தொட்டோம்னு இருக்கு எனக்கு..

இவ்ளோ தூரம் நாய்படாதபாடா அலைஞ்சிருக்கேன்.. கூலா கொரியால உக்காந்துக்கிட்டு அவரும் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்ன்னு பீலா வுடுறே.. அப்ப இத்தனை நாளா என்கிட்ட விட்டதென்ன உல்டாவா..?

கடைசியா அதென்ன எவனோ ஒரு எழுத்தாளனின் சதியா..? எந்த கேப்மாரி, சொமாறி அந்த எழுத்தாளன். அவன் யாருன்னாவது சொல்லித் தொலையேன்.. அவன் மூஞ்சியையாவது பார்த்துத் தொலையறேன்.. படிக்கிற அத்தனை பேரும் இப்ப என்ன நினைப்பான்..? ஏதோ உண்மைத்தமிழன் யார் என்ன சொன்னாலும் கேப்பான்.. சுய அறிவே இல்லாதவன்.. கேணப்பய.. எடுப்பார் கைப்பிள்ளைன்னு நினைச்சு இருக்குற மரியாதையும் போயிருச்சு.. ஏண்டா எழுதும்போது முன்ன பின்ன யோசிச்சு எழுத மாட்டியா..? அந்த பிரபல எழுத்தாளன் யாருன்னாவது சொல்லேன்.. நானும் தெரிஞ்சுக்குறேன்..

எனக்குத் தேவைதான்.. ஒழுங்கு மரியாதையா டோண்டு ஒழிக.. பெரியார் வாழ்க.. திராவிடம் வளர்கன்னு அன்னிக்கே உங்களை மாதிரி சொல்லிட்டுப் போயிருந்தா எனக்கு இன்னிக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. நான்தான் படிக்காத முட்டாளாச்சே. இன்னிக்குத் தெரியுது.. உனக்காகவும், உன் பிரெண்டுக்காகவும் நூத்தியெட்டு தடவை சொல்றேன்னு நினைச்சுக்க டோண்டு ஒழிக.. பெரியார் வாழ்க.. திராவிடம் வளர்க.. போதுமா..?

ஐயா சாமி.. எனக்கு இன்னும் என்னென்னவோ வாய்ல வருது.. முடியலை.. போதும்டா கண்ணு.. நீ நினைக்கிற மாதிரி ரப்பர் மாதிரி வளைஞ்சு கொடுக்குற ஆளும்.. கட்சிக்காரன் மாதிரி கால்ல விழுந்துகிடக்குற ஆளும் நான் இல்ல ராசா..

மெட்ராஸ் வந்தப்ப ஹோட்டலுக்கு கூப்பிட்டு நல்லா சோறு போட்ட.. சைபர் கிரைம் ஆபீஸுக்கு அலையறதுக்கு கொஞ்சம் காசு கொடுத்த.. தம்பி முருகன் சத்தியமா சொல்றேன்.. திரும்பி உன்னை பார்க்குறப்ப மருவாதையா அந்தக் காசை திருப்பிக் கொடுத்துர்றேன். இல்லேன்னா இப்ப உடம்புல இருக்குற ஒத்தை எலும்பும் நிக்காது.. சத்தியமா சொல்றேன்.. திருப்பிக் கொடுத்துர்றேன்..

இந்த மட்டுக்கும்போதும்பா..

நீயும் நல்லா இரு.. உன் பிரெண்ட்டும் நல்லா இருப்பான்.. அவன் நல்ல பெரிய எழுத்தாளனா வரட்டும்.. வாழ்த்துறேன்.. அந்த மூர்த்தியும் குடும்பத்தோட நல்லாயிருக்கட்டும்.. அல்லக்கைகளும் நல்லா வாழட்டும்..

சைபர் கிரைம்ல என் கேஸ் மட்டும்தான நிக்குது.. இனிமே நானே அதை பார்த்துக்குறேன். எவன் தயவும் எனக்குத் தேவையில்லை..

குட்பை..

பதிவு முழுக்க எப்பவும்போல டா போட்டுட்டேன்.. மன்னிச்சுக்க தம்பி.. கோச்சுக்காத.. திருப்பி திருத்த உக்காந்தா என் பொழப்பு கெட்டிரும்.. அதுனால நேர்ல என்னை பார்க்கும்போது உன் செருப்பை கழட்டி என்னை எவ்ளோ அடிக்கணுமோ அவ்ளோ அடிச்சுக்க..

நல்லாயிருப்பா ராசா..

சைபர் கிரைம்-பதில்..!

09-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அருமைத் தம்பி லக்கிலுக் என்னும் யுவகிருஷ்ணாவின் சைபர் கிரைம் இது..

இதற்கு பதில் அளித்து எழுதியிருக்கும் தம்பி பெங்களூர் அருண்குமாரின் சைபர் கிரைம் இது.

அருண்குமார் தமிழ்மணத்தில் இன்னமும் சேரவில்லை. பல திரட்டிகளிலும் இணையவில்லை. ஆகவேதான் எனது தளத்தில் இந்த லின்க் கொடுக்கும் பதிவு.

வேறொன்றுமில்லை..

நன்றி..

சாருநிவேதிதா-இ-மெயில் ஹேக்கிங்-குமுதம் ரிப்போர்ட்டர்-சைபர் கிரைம் தொடர்-சில உண்மைகள்..!

02-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நமது அரசியல்வாதிகள் நீதி, நேர்மை, நியாயம், இவைகளைப் பற்றி பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தால் எந்த அளவுக்கு வேடிக்கையாக இருக்குமோ, அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு 'குமுதம் ரிப்போர்ட்டர்' என்கிற வாரப் பத்திரிகையில் தம்பி யுவகிருஷ்ணா என்னும் லக்கிலுக், 'சைபர் கிரைம்' பற்றி தொடர் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறார். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தமைக்கும், அதை பயன்படுத்திக் கொள்ளும் அவருடைய முனைப்பான உழைப்புக்கும் எனது பாராட்டுக்கள். வந்தனங்கள்..

சில வாரங்களுக்கு முன்பு அந்தத் தொடர் கட்டுரையில் எழுத்தாளர் சாருநிவேதிதாவின் இ-மெயில் ஹாக்கிங் செய்யப்பட்டது பற்றி எழுதியிருந்தார் தம்பி. அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் ஊடாக மேலும் சில விஷயங்களை நான் இந்தப் பதிவில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்.

அன்றைய பகல் 12 மணியளவில்தான் சாருவின் ஈ-மெயில் ஹேக்கிங் பற்றியச் செய்திகள் தமிழ்மணத்தில் பதிவாக வெளி வந்தன. அதைப் படித்துவிட்டு உடனடியாக நான் சாருவுக்கு போன் செய்து பேசினேன். "சரவணன்.. நீங்க நூத்தியொண்ணாவது ஆள்.. நான் மெட்ராஸ்லதான் இருக்கேன். மலேசியாவுக்குப் போகலை.. எவனோ ஒருத்தன் செஞ்சிருக்கான். யாருன்னு தெரியலை. இது பொய். யாரும் நம்ப வேண்டாம்னு சொல்லி நீங்க ஒரு பதிவா உங்க பிளாக்ல போட்டிருங்களேன்.." என்றார் சாரு.

தொடர்ந்து நானும் சாருவிடம் பேசியதையும், அவர் சொன்ன விஷயத்தையும் அந்த எச்சரிக்கை பதிவில் பின்னூட்டமாக இட்டேன். அடுத்து யார் அந்த வேலையைச் செய்திருப்பார் என்று தேடுவதில் எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் இப்படி சாருவுக்கு எதிரான ஒரு வினையை நான் அப்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், சாருவின் 'மம்மி ரிட்டர்ன்ஸ்' கடிதம். அந்தக் கடிதத்தின் ஒரு பாராவில் 'போலி டோண்டு'வை ஜெயமோகனுடன் சம்பந்தப்படுத்தி, சாரு எழுதியிருந்ததை படித்ததில் இருந்தே இப்படியொரு எண்ணம் எனக்குள் இருந்தது.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக தமிழ் வலையுலகத்தை தனது தீந்தமிழால் மிரட்டிக் கொண்டிருந்த 'முத்தமிழ்மன்ற மூர்த்தி' என்ற அந்த 'போலி டோண்டு' தன்னை எதிர்ப்பவர்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் எதிர்ப்பான் என்பது நமக்கும் தெரியும்தானே.. ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடந்தேறும் என்றுதான் நான் நினைக்கவில்லை.

தன்னை எதிர்ப்பவர்களின் வலைத்தளங்களை பறிப்பது.. மெயில் முகவரிகளை ஹேக்கிங் செய்வது, அந்தப் பதிவர்கள் பெயரில் போலித்தளங்களை உருவாக்குவது.. அத்தளங்களில் பதிவர்களின் புகைப்படங்களை வைத்து காமக்கதைகளை எழுதி நிரப்புவது.. என்கின்ற அத்தனை நல்ல வேலைகளையும் செவ்வனே செய்து வந்த உத்தமத் தமிழனான மூர்த்திதான் இதையும் செய்திருப்பான் என்பதை அன்றைக்கே, தொலைபேசியில் சாருவிடம் சொன்னேன்.

இது மாதிரி மொத்தமாக ஆட்டையைப் போடும் அளவுக்கான புத்திசாலி அவன் ஒருவனே என்ற எனது அதீத நம்பிக்கை, இரண்டு நாட்களில் நிஜமாகவே உண்மையாக மாறியிருந்தது.

சிங்கையில் இருக்கும் நமது சக பதிவர் குழலியும் என்னைப் போலவே மூர்த்திதான் இதை செய்திருப்பானோ என்று சிந்தித்திருக்கிறார். என்னைவிடவும் மூர்த்தி பற்றி நன்கு அறிந்தவர் அவர்தான். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் தனக்குத் தெரிந்த ஒரு வழிமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

சாருவின் ஹேக் செய்யப்பட்ட இ-மெயில் முகவரியான charunivedita@hotmail.com-க்கு Read notify Software-ஐ பயன்படுத்தி தனது இ-மெயில் முகவரியில் இருந்து "What happened..?" என்று கேட்டு ஒரு மெயிலைத் தட்டிவிட்டிருக்கிறார் குழலி.

அது எங்கே ஓப்பன் செய்யப்பட்டது என்கிற தகவல் குழலிக்கு உடனேயே திரும்பக் கிடைத்திருக்கிறது. மலேசியாதான் என்றவுடன் உடனேயே குழலி எனக்குத் தகவல் கொடுத்தார். எனது சந்தேகம் நூறு சதவிகிதம் உறுதியானது மூர்த்திதான் என்று..!

அடுத்து உடனேயே மூர்த்தியின் சொந்த மெயிலுக்கு மெயில் அனுப்பினால் சந்தேகத்தில் திறக்காமல் விட்டுவிட வாய்ப்பு உண்டு என்பதால், மறுநாள் மூர்த்தி பயன்படுத்தும் ஒரு மெயில் முகவரியான unmaisolli@gmail.com-ற்கு "டேய் மாப்புள்ள" என்று பாசத்தைக் கொட்டி ஒரு மெயிலை அனுப்பியிருக்கிறார் குழலி.

அந்த மெயிலும் ஓப்பன் செய்யப்பட்டதற்கான அத்தாட்சியை Read Notify அனுப்பியது. இதுவும் எதிர்பார்த்ததைப் போலவே மலேசியாவில்தான் திறக்கப்பட்டிருந்தது.

ஒரு வேளை 'உண்மைசொல்லி' தான் இல்லை என்று சொல்லிவிடுவானோ என்று நினைத்த குழலி, மீண்டும் அவனுடைய நீண்ட நாளைய மெயில் முகவரியான mmoorthee@gmail.comற்கு ஒரு மெயிலை தட்டிவிட்டுள்ளார். இந்த மெயிலும் அதே ஐ.பி.எண்ணில், மலேசியா கோலாலாம்பூரில்தான் திறக்கப்பட்டுள்ளது.

இங்கே இன்னுமொரு விஷயம்.. குழலி அனுப்பியிருந்த 'உண்மைசொல்லி' என்கிற மெயிலுக்குச் சொந்தக்காரனான 'உண்மைசொல்லி' என்னும் ஒருவர் அப்போதைய காலக்கட்டங்களில் சாருவைப் பற்றி கன்னாபின்னாவென்று ஆபாசமாகத் திட்டித் தீர்த்து பின்னூட்டங்களை பல இடங்களிலும் தெளித்துக் கொண்டிருந்தார். பதிவர்கள் பலருக்கும் இது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த ஜிமெயிலும், மூர்த்தியின் நிஜமான ஜிமெயிலும் ஒரே ஐ.பி.எண்ணில் இருந்துதான் ஓப்பன் செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் அவன் மீதான எனது சந்தேகத்தை பல மடங்கு உயர்த்தியது.

குழலி உடனடியாக என்னைத் தொடர்பு கொண்டு இந்தத் தகவலைச் சொல்லி சாருவிடம் இதனைத் தெரிவித்து மூர்த்தி மீது சைபர் கிரைம் போலீஸில் புகார் தரச்சொல்லும்படி கூறினார்.

நானும் உடனடியாக சாருவைத் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினேன். சாருவோ, "நான் ஏற்கெனவே கம்ப்ளையிண்ட் பண்ணிட்டேன்.. விசாரிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்..?" என்றார். "ஏற்கெனவே புகார் கொடுத்துவிட்டதால் திரும்பவும் போக விருப்பமில்லை.(உண்மையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே அதற்குக் காரணம்) இதுவும் இருக்கட்டும். தேவைப்பட்டால் பின்பு பயன்படுத்துவோம்.." என்றார் சாரு.

என்னுடைய இந்த அவசரத்திற்கும், ஆதங்கத்திற்கும் காரணம், இதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் நானும், செந்தழல் ரவியும் இணைந்து சென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மூர்த்தி பற்றி புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தோம். இந்த நேரத்தில் சாருவின் இந்தப் புகாரும் சேர்ந்தால், எங்களுக்கு ஒரு கூடுதல் வலு கிடைக்கும் என்று நான் நினைத்தேன்.

இதனால் சாருவிடம் "கேஸ் என்னாச்சு..?" என்று வற்புறுத்தத் தொடங்கினேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நான் அவரிடம் இது விஷயமாக அனத்தியபடியே இருந்தேன்.

இந்த நேரத்தில்தான் எனது வழக்குக்காக 'போலி டோண்டு'வான மூர்த்தியின் ஆதி, அந்தங்களை அவனுடைய சொந்தத் தளமான முத்தமிழ்மன்றம்.காம்-ல் தோண்டித் துருவிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு க்ளூ கிடைத்தது.

'போலி டோண்டு' என்பது இந்த 'முத்தமிழ்மன்ற மூர்த்தி'தான் என்று வருடக்கணக்காக நமது டோண்டு ஸார் சொல்லி வந்ததால், மூர்த்தி ஒரு கட்டத்தில் 'முத்தமிழ்மன்ற'த்தில் தனது பெயரை 'முருகா' என்று மாற்றி வைத்துக் கொண்டான். இதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

அப்படி அந்த 'முருகா' என்கிற பெயரில் எழுதப்பட்ட பல செய்திகளை ஒன்று திரட்டிப் படித்துக் கொண்டிருந்தபோதுதான், இந்த செய்தி என் கண்ணில்பட்டது.

சாருவின் பெயரைச் சொல்லி பணம் பறிக்க முயன்ற கதைதான் இது. 'மங்கை' என்ற ஒரு பெண் தனக்கு அனுப்பிய மெயிலில் இது பற்றி சொல்லியிருப்பதாகவும், இதனால் இதனைப் படிக்கின்ற முத்தமிழ்மன்ற வாசகர்கள் ஏமாறாமல் இருக்கும்படி இந்த ஒழுக்கசீலரான 'முருகா' என்கிற 'மூர்த்தி' அறிவுரையே நிகழ்த்தியிருக்கிறார். இதனை எழுதியிருப்பது 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி.

அந்த ஆங்கில கடிதத்தைப் படித்துப் பாருங்கள். இதுவும், சாருவுக்காக எழுதப்பட்ட ஆங்கில கடிதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பெயர் மற்றும் இடங்கள் மட்டுமே வேறு வேறாக மாற்றப்பட்டுள்ளன. இதனைப் படித்த பின்பு மூர்த்தி மீது இருந்த எனது சந்தேகம் மிக, மிக உறுதியானது, இவனைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்திருக்க முடியாது என்று.. உடனே இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சாருவுக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தேன்.

கேஸ் எந்த நிலைமையில் இருக்கிறது என்பது தெரியாத சூழல் இருந்ததால், சாருவிடம் அவ்வப்போது நான் இது தொடர்பாக விசாரித்தபடியே இருந்தேன். அப்படி ஒரு முறை நான் சாருவைத் தொடர்பு கொண்டபோது, "சரவணன்.. நான் மலையாள பத்திரிகைக்காக மும்முரமாக எழுதிக்கிட்டிருக்கேன். இப்ப பேசவே எனக்கு நேரமில்லை. நாளைக்கு பேசுவோம். விட்ருங்க.." என்றார் கண்டிப்பான குரலில்.

நான் அன்றைக்கு மாலை சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், அது தொடர்பாக மீண்டும் வற்புறுத்தினேன். சாரு ரொம்பவே டென்ஷனாகிவிட்டது அவரது வார்த்தைகளில் இருந்து தெரிய வர.. "ஓகே ஸார்.." என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.

மூர்த்தி பற்றி சைபர் கிரைம் அலுவலகத்தில் நான் புகார் கொடுத்ததில் இருந்து நாள்தோறும் விசாரணைக்காக என்னை அழைத்தபடியே இருந்தார்கள். அப்படி என் வழக்கு தொடர்பாக சென்ற நேரத்தில் நண்பர் குழலி அனுப்பியிருந்த ஆதாரங்களையும், நான் முத்தமிழ்மன்றம்.காம்-ல் தேடியெடுத்த பழைய கடித நகலையும் விசாரணை செய்த அதிகாரிகளிடம் ஒப்படைத்து, "சாருவின் இ-மெயிலை ஹாக் செய்ததும் இந்த மூர்த்திதான்.." என்ற தகவலைத் தெரிவித்தேன்.

அங்கே வழக்குகளை எல்லாம் பிரித்து, பிரித்து விசாரிப்பதால் சாருவின் வழக்கை சைபர் கிரைம் பிரிவின் இன்ஸ்பெக்டரே நேரடியாக விசாரிப்பதாகவும், "மேற்கொண்டு இது பற்றி நீங்கள் இன்ஸ்பெக்டரிடம்தான் சொல்ல வேண்டும்.." என்றும் சொன்னார்கள். நான் இன்ஸ்பெக்டரை சந்திக்க முயற்சித்தபோது அப்போது பார்த்து அவர் வெளியில் போய்விட்டார்.. மறுநாள் வந்து சந்திப்பதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

மறுநாள் மாலை சைபர் கிரைம் அலுவலகத்திற்குச் செல்வதற்குள் சாருவிற்கு ஒரு போன் செய்து சொல்லிவிடலாம் என்று நினைத்து அவருக்கு போன் செய்தால், மனுஷன் ஒரு அணுகுண்டையே தூக்கிப் போட்டார்.

"நான் கேஸை வாபஸ் வாங்கிட்டேன் சரவணன்.." என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் எனது வழக்கு, தம்பி ரவியின் வழக்கை விடவும் சாருவைத்தான் நான் அதிகம் நம்பியிருந்தேன். சாரு பெரிய எழுத்தாளர் என்பதாலும், கனிமொழியின் தீவிர சிபாரிசினால் வழக்கு பதியப்பட்டு இருந்ததினாலும் போலீஸார் தீவிரமாக விசாரிக்கத் துவங்கியிருந்தார்கள். எனவே 'எந்த வகையிலும் மூர்த்தி தப்பிக்க முடியாது. நிச்சயம் அவனை பிடித்துவிடுவார்கள்' என்று கலர், கலராக நான் கொண்டிருந்த கனவை, ஒரு லாரி தண்ணீரை ஊற்றிக் கலைத்தார் சாரு.

"அவங்க இஷ்டத்துக்கு கூப்பிடுறாங்க.. 'அந்த நேரம் வாங்க'. 'இந்த நேரம் வாங்க'ன்றாங்க.. எனக்கு வேலையிருக்கு சரவணன்.. நான் புகார் கொடுத்தாச்சு.. அதுலயே டீடெயிலா எழுதிட்டேன்.. அப்புறம் எதுக்கு 'வா.. வா'ன்றாங்க.. நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா..? அதான் 'வர முடியாது'ன்னு சொன்னேன். 'அப்ப நேர்ல வந்து கேஸை வாபஸ் வாங்கிட்டுப் போங்க'ன்னு சொன்னாங்க.. நானும் போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..” என்றார்.

நான் அதற்குப் பிறகு அவரிடம் எவ்வளவோ கெஞ்சியும், சாரு பிடிவாதமாக மறுத்துவிட்டார். "எனக்கு வேணாம் சரவணன்.. அது எவனா வேண்ணாலும் இருந்துட்டு போகட்டும்.. எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. ப்ளீஸ்.. விட்ருங்க..." என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

இதன் பின் நான் சைபர் கிரைம் பிரிவின் இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து பேசினேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். "உங்க எழுத்தாளர்தான் அவசரப்பட்டு கேஸை வாபஸ் வாங்கிட்டாரே..!? இப்ப என்ன ஸார் பண்றது..? இது விஷயமா மேல எதுவும் பேசவும் முடியாது. செய்யவும் முடியாது. வேணும்னா உங்க கேஸ் விஷயமா பேசுங்க.. நிச்சயமா செய்யலாம்.." என்று நழுவலான பதிலைச் சொன்னார் அந்த இன்ஸ்பெக்டர்.

இதையும் சாருவிடம் சொன்னேன். தான் ஒரு எழுத்தாளர் என்ற அக்கறையே இல்லாமல், தன்னை நினைத்த நேரத்திற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக அப்போதும் சொன்னார் சாரு. "போலீஸ் விசாரணையில் இது சகஜம்தான ஸார்..?" என்றேன். "இல்லை.. இல்லை.. அப்படியொண்ணும் அவனைப் புடிச்சு 'உள்ள' வைக்குறதால, எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அப்புறம் நான் எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும்..?" என்று அதையே திருப்பிச் சொன்னார்.

எனக்குள் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவேயில்லை. ஆனாலும் ஜீரணிக்கத்தானே வேண்டும். இதனையும் முழுங்கித் தொலைவோம் என்று நினைத்து மறந்தேன்.

பின்னாளில் வலையுலகம் வலைவீசித் தேடிக் கொண்டிருந்த அந்த 'போலி டோண்டு' என்னும் மூர்த்தியை அதே சைபர் கிரைம் அலுவலகத்தில் சந்தித்தபோது, இந்த ஒரு கேள்வியையும் கேட்டுத் தொலைத்தேன். "சாரு இமெயிலை ஏன்யா ஹேக் செஞ்ச..? அவர் உனக்கு என்ன பாவம் செஞ்சாரு..?" என்றேன். கேட்டவுடன் அந்த ஐந்து நாட்கள் போலீஸ் விசாரணையில் அவர் செய்துகொண்டிருந்த அதே ஆக்ஷனை.. சினிமா ஹீரோயின்களைப் போல தலையைக் குனிந்து கொண்டு, காலால் கோலம் போட்டுக் கொண்டு வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்தார். வாயைத் தொறக்கணுமே.. ம்ஹும்.. எல்லாம் எங்க நேரம்..?

சாருவுக்கும் போலி டோண்டு மேட்டர் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும்.. எனதருமை வாத்தியார் சுஜாதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தபோது, நான் சாருவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது டோண்டுவும் எங்களிடம் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.

அவர் அந்தப் பக்கம் போனவுடன் சாரு என்னிடம் டோண்டுவைக் காட்டி, "இவர்தான் போலி டோண்டுவா..?" என்றார். அந்த இடம் மரண வீடாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நான் நிச்சயம் சிரித்திருப்பேன். அவ்வளவு அதிர்ச்சியாகிப் போனேன். சாரு கேட்டது சாதாரணமாகத்தான் என்றாலும், அவருக்கு வலையுலக அரசியல் அவ்வளவுதான் தெரியும். மேற்கொண்டு நான்தான் அன்றைக்கு கிடைத்த நேரத்தில், எனக்குத் தெரிந்த அளவுக்கான டோண்டு-போலி டோண்டு விஷயங்களை அவரிடம் விளக்கிச் சொன்னேன்.

சாரு மீது இந்த விஷயத்தில் எனக்கு பலத்த அதிருப்தியும், வருத்தமும் இன்றளவும் உண்டு. அவர் மட்டும் சிரமம் பார்க்காமல், காவல்துறையுடன் கொஞ்சம் இணங்கிப் போயிருந்தால், இந்நேரம் மூர்த்தி கைது செய்யப்பட்டு வலையுலகத்திற்கு ஒரு பெரும் உதவி செய்த பெயரும் அவருக்குக் கிடைத்திருக்கும்.

இப்போது பாருங்கள்.. சாருவின் புகாருக்குக் கிடைத்த ஆதாரங்களைவிடவும், பல மடங்கு ஆதாரங்களை சுமார் 200 பக்கங்கள் அளவிற்கு எனது புகாருக்காகவும், ரவியின் புகாருக்காகவும் திரட்டிக் கொடுத்துள்ளபோதிலும், இன்னமும் நமது சைபர் கிரைம் போலீஸ் மூர்த்தியை கைது செய்யவில்லை. வரவழைத்து, வரவழைத்து, பேசி பேசியே திருப்பி அனுப்பினார்கள். பாஸ்போர்ட்டை மட்டும் முடக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். (ஆனால் நான் இதனை நம்பவில்லை)

"இன்னும் என்னதான் ஆதாரங்கள் வேண்டும்..?" என்றுகூட கேட்டுப் பார்த்துவிட்டேன். இன்றுவரை பலனில்லை. நாங்கள் அவ்வளவு முக்கியஸ்தர்களா இல்லையோ என்னவோ..! அல்லது எங்களுக்குப் பின்புலமாக அரசியல், பண பலம் இல்லையோ.. தெரியவில்லை..

எத்தனையோ நல்ல, நல்ல வலையுலக எழுத்தாளர்களை வீட்டுக்கு துரத்தியடித்து, பல பதிவர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் வருடக்கணக்காக மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி துன்புறுத்திய சேடிஸ்ட்டான இந்த மகராசனை இப்படியே விட்டுவைத்தால் எப்படி?

சரி.. போய்த் தொலையட்டும்..!!!

மீண்டும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு வருவோம்.

இந்த 'போலி டோண்டு' என்னும் மூர்த்திதான் சாருவின் இ-மெயிலை ஹேக் செய்தவன் என்கிற தகவலை, அன்றைய நிலைமையில் என்னுடன் தினமும் போனில் பேசிக் கொண்டிருந்த அத்தனை வலைப்பதிவர்களுக்கும் நான் தெரிவித்திருந்தேன்.

செந்தழல் ரவி, வரவனையான், ஓசை செல்லா, மற்றும் மூர்த்தி மீது அசைக்க முடியாத ஒரு ஆதாரத்தைக் கொடுத்த பெங்களூர் அருண் என்று பலரிடமும் நான் சொல்லியிருந்தேன். இவர்கள் மூலமாக பலருக்கும் இந்தத் தகவல் சென்றடைந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

தம்பி யுவகிருஷ்ணாவுக்கும் இந்தத் தகவல் நிச்சயம் கிடைத்திருக்கும். தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியிருக்க யாரோ ஒரு 'சைபர் கிரிமினல்' என்றே பொத்தாம் பொதுவாக பெயரிட்டு அழைத்து, அது தனது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாக காட்ட முனைந்திருப்பது கேலிக்குரிய செயல்.

ஒருவன் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் சொல்லப்படாதவரையிலும் அவன் நிரபராதிதான் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. அதே சமயம் நம் மனசாட்சிக்கு ஏற்றவகையில், ஆதாரங்கள் கிடைத்திருக்கும் நிலையில் அவன் மீதான நமது சந்தேகத்தை முன் வைக்கலாமே..!?

ஒரு வேளை 'குமுதம் ரிப்போர்ட்டர்' பத்திரிகை இதனை ஏற்றுக் கொள்ளாது என்று தம்பி சப்பைக் கட்டுக் கட்டலாம். ஆனால் இதற்கு முந்தைய பகுதிகளில் எல்லாம் வெளிநாடுகளில் ஏமாற்றிய, ஆட்டைய போட்ட கிரிமினல்கள், கேப்மாறிகள், மொள்ளமாறிகள், சோமாறிகள், முடிச்சவிக்கிகள் என்று பல பெயர்களை வெளிப்படையாக எழுதியிருக்கிறாரே.. அதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வது..?

உண்மையாகவே இவருக்கு சாருவின் இ-மெயில் ஹேக்கிங் விஷயத்தில் நடந்தவைகள் முழுமையாகத் தெரியாது எனில், எதற்காக இதனை எழுத வேண்டும்..?

நம் அருகில், நமது அண்டை வீட்டில் நடந்த ஒரு விஷயத்திலேயே இத்தனை விளக்கங்கள் வெளியில் தெரியாமல் காத்திருக்கும்போது அது எதனையும் விசாரிக்காமல் பொத்தாம் பொதுவாக, “நீங்கள் ஜாக்கிரதையா இருங்கள்.. திருடன் வர்றான்.. திருடன் வர்றான்..” என்று பூச்சாண்டி காட்டி பக்கத்தை நிரப்புவது தேவைதானா..?

அவருடைய அன்னியோன்ய நண்பர்களான வரவனையானுக்கும், செந்தழல் ரவிக்கும் இந்த அக்கப்போர்கள் நன்கு தெரியுமே. எழுதுவதற்கு முன் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்களே..?

சரி இவர்கள் வேண்டாம்.. சாருதான் இவருக்கு பெஸ்ட் பிரண்ட்டாச்சே..? ஏன்.. இந்த விஷயத்தை எழுதப் போகிறேன் என்று சாருவிடமே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அவரும் நடந்ததையெல்லாம் சொல்லியிருப்பாரே..!?

சாருவின் இ-மெயில் திருட்டு பற்றிச் சொன்னவர், அது பற்றிய மேல்விவரங்கள், வழக்கு பதிவு, சந்தேகங்கள், வழக்கு வாபஸான கதையையும் சேர்த்து சொல்லியிருந்தால், அது முழுமையான ரிப்போர்ட்டாக இருந்திருக்குமே.

ஆக.. சாருவிடமும் கேட்காமல் அவரை மையமாக வைத்தே ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் எனில், தம்பியின் இந்த 'சாதனை'யை மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்.

இதுவுமில்லாமல் 'கிழக்குப் பதிப்பக'த்தின் தூண்களான நண்பர் பத்ரிக்கும், திருவாளர் பா.ராகவன் அண்ணாச்சிக்கும் மூர்த்தி செய்த இந்த தில்லாலங்கடி வேலையைப் பற்றி நன்கு தெரியும். அவர்களிடம் சொன்னது, சாட்சாத் நானேதான். சந்தேகம் இருந்தால் அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இதனை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், நாளை இந்தக் கட்டுரை புத்தக வடிவில் 'கிழக்குப் பதிப்பகம்' மூலமாக வெளிவர வாய்ப்பு உண்டு என்பதால்தான்..

சரி.. எழுதுவது நான்.. யாரிடமும் இது பற்றி பேசுவதில்லை என்றால், விசாரிக்ககூடவா முடியாது..? ஒரு விஷயத்தை முழுமையாக நடந்தது என்ன என்று விசாரிக்காமல் ஒப்புக்குச் சப்பாணியாக எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதுவது தப்பிக்க நினைக்கும் மனப்பான்மைக்கு ஒப்பானது.

இந்த 'தப்பிக்க நினைக்கும்' என்கிற வார்த்தையின் அர்த்தம், எழுதுகின்ற அந்தத் தம்பிக்கே தெரியும், என்பதால் அவரது மனசாட்சிக்கே அதனை விட்டுவிடுகிறேன். தம்பியின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, முழுக்கத் தெரிந்திருந்தும் தன்னுடைய முன்னாள் நண்பரான மூர்த்தியைக் காட்டிக்கொடுக்க விரும்பாமல், அவர் நழுவியிருக்கிறார் என்றுதான் என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது.

இதனால்தான் முதல் பாராவில் இந்தப் பதிவின் முகவுரையை நான் அப்படித் துவக்கியிருக்கிறேன்.

மலேசியாவில் இருந்து என்றால், அவன் ஒருவன்தான் அங்கே இருக்கிறானா? வேறு யாரும் இல்லையா? வேறு ஒருத்தரும் இருக்கலாமில்லையா..? என்ற கேள்விகள் பலருக்கும் எழக்கூடும்.

அப்பாவி பதிவர்களின் பெயர்களில் இருந்த காமத்தளங்களைத் துவக்கியது போலி டோண்டு என்னும் இந்த முத்தமிழ்மன்ற மூர்த்திதான் என்று டோண்டுவும், தெரிந்தவர்கள் பலரும் கரடியாய் கத்தியபோது, பதிவர்கள் சிலர் இது போலத்தான் "எதற்கெடுத்தாலும் மூர்த்தியா..? அவன்தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்..? வேற யாராவது இருக்கலாமில்லையா..?" என்றெல்லாம் குதர்க்கமாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

ஆனால் சைபர் கிரைம் விசாரணையின்போது மூர்த்தி எழுதிக் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பின், ஒரே நாளில் அந்த அனைத்து காமத்தளங்களும் காணாமல் போனதே.. இது எப்படி என்பதையும் அவர்கள் இந்த நேரத்தில் யோசித்துப் பார்க்கட்டும்.

மேற்கொண்டு அந்த வாரத்திய சைபர் கிரைம் கட்டுரையில் இருக்கின்ற சில வரிகளை வாசிக்கின்றபோது செம காமெடியாக இருந்தன.

"இ-மெயில் திருடப்பட்டால் போயே போச்சு.. ஒட்டு மொத்தமாக டவுசரை உருவிவிடுவார்கள்.."

"உங்கள் இ-மெயில் பாஸ்வேர்டை திருடுபவன், உடனடியாக வெளிப்பட்டுவிட மாட்டான்.. தக்க சமயம் வந்துவிட்டால் டக்கராக கும்மியடித்துவிட்டுப் போய்விடுவான்.."

"ஒருவர் மற்றொருவர் பற்றிய தகவல்களை எடுத்துக் கொண்டு அந்தத் தகவல்களைக் கொண்டு பொருளாதார ஆதாயம் பெற உபயோகப்படுத்தினால், அது அடையாளத் திருட்டாக எடுத்துக் கொள்ளப்படும்.."

"உங்களது தனி நபர் தகவல்கள் தவறாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக நீங்கள் கேள்விப்படும் பட்சத்தில் சோம்பேறித்தனப்படாமல் சைபர் கிரைமை அணுகுங்கள்.. இதனால் குற்றவாளி பிடிபடுவதற்கான வாய்ப்பு மட்டுமன்றி உங்கள் நற்பெயரும் காப்பாற்றப்படும்.."

இது மாதிரியான உண்மையான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் நானும், அருண் என்கிற பெங்களூரில் இருக்கும் நமது சக வலைப்பதிவரும் கடந்த இரண்டாண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தோம்.

என்ன கொடுமை பாருங்க..?

இப்போது இந்த 'குமுதம் ரிப்போர்ட்டர்' 'சைபர் கிரைம்' கட்டுரையின் மூலம்தான், இதுவெல்லாம் எங்களுக்குத் தெரிய வருகிறது.. இந்த மட்டுக்கும் அந்த எழுத்தாளர் தம்பிக்கு எங்களது கோடானு கோடி நன்றிகள்..

என்ன செய்வது..? எங்கள் தலையெழுத்து இப்படி..? அவர் தலையெழுத்து அப்படி? சைபர் கிரைம் தலையெழுத்துதான் மேற்படி..

பொறுமையுடன் படித்து முடித்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள்..!!!

சுகுணா திவாகருக்கு இறுதியாய்ச் சில வார்த்தைகள்

மானமிகு சுகுணா ஐயா அவர்களுக்கு,


போலி டோண்டு பற்றி இறுதியாகச் சில வார்த்தைகள் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறீர்கள். வழமைபோல் உங்களது மேலாண்மையான அறிவுத்திறமை அதில் பளிச்சென வெளிப்படுகிறது.


எல்லாரும் செல்வது ஒரு பாதையெனில் நாம் வேறு பாதையில் சென்றால் அதில்தான் நமது அறிவுத்திறன் வெளிப்படும் என்கின்ற பொதுவான பகுத்தறிவின் காரணமாக எந்த ஒரு விஷயத்திலும் உங்களுடைய கருத்துக்கள் வலையுலகில் அவசியம் கோரப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.


நீங்களும் வஞ்சகமில்லாமல் எங்களுக்கு தேவாலய அப்பத்தைப் போல் அவ்வப்போது பிட்டு பிட்டுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். நாங்களும் கேட்டுக் கொண்டுதான்.. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. நன்றி..


முதலில் போலி டோண்டுவைப் போலவே நாமும் ஒரு மனநோயாளி என்றீர்கள். மெளனமாக அனைவரும் ஒத்துக் கொண்டோம். காரணம் உலக ஜீவராசிகளில் பேசக்கூடிய அனைவருக்கும் மனதில் ஒரு ஆற்றாமை இருக்கும். இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. அந்த அடைய முடியாத ஆற்றாமையை நீங்கள் மன நோய் என்ற நோக்கில் பார்க்கிறீர்கள் எனில் சந்தேகமேயில்லை. நாம் அனைவரும் மனநோயாளிகள்தான். ஒத்துக் கொள்கிறோம்.


ஆனாலும் மனநோயால் ஒருவனைத் திட்டுவதற்கும், கொலை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதே சுகுணா.. ஒருவரைத் திட்டினால், "பாவம் நோய் முத்திருச்சு. திட்டிட்டுப் போறான்.." என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் கொலையே செய்துவிட்டால்.. கத்தியை உருவி நாமே துடைத்து அவரிடம் கொடுத்து திருப்பி அனுப்ப முடியுமா?


இதில் திட்டுவது என்பது நமது வலையுலக மாற்றுக் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதாக எடுத்துக் கொள்ளுங்கள். கொலை என்பது திருவாளர் போலி டோண்டு இப்போது செய்து கொண்டிருப்பது.


//நான் போலியை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.//


சுயநினைவோடுதான் இதை எழுதினீர்களா சுகுணா.. மாற்றுக் கருத்தை ஏற்கப் பிடிக்காமல் அவரை அவமானப்படுத்தி, அதன் மூலம் அவர் துன்புறுவதை நேரில் பார்த்து அனுபவிக்கும் சாடிஸ்ட் மனப்பான்மையை நீங்கள் ஆதிக்கச் சாதி வெறி என்று வழமை போல் உங்களது பகுத்தறிவு கட்சியின் தாக்கத்தினால் சாதி சாயம் பூசிவிட்டீர்கள்.


இந்த சாடிஸ்ட் மனப்பான்மையுள்ள மனிதர்கள் நிறைய பேர். அவர்களுடைய எண்ண அளவுகோல்தான் ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும். தாங்கள் அறியாததல்ல. அப்படியிருந்தும் கண் முன்னே தெரிந்த ஒரு கற்பழிப்புக்கு சாதி சாயம் பூசி, கற்பழிப்பின் நோக்கமான மாற்றுக் கருத்தை ஏற்க முடியாமை என்கிற தனி மனித எண்ணக் குறைபாட்டை நீங்கள் போலியிடமிருந்து அப்புறப்படுத்த நினைப்பது எந்த வகையில் நியாயம்?


ஆணாதிக்க பாசிஸ்ட் என்று இன்னொரு வரி.. இதற்கு என்ன அர்த்தம் என்று என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆணாதிக்கம் நிறைந்தவர்கள்தான் மற்றவர்கள் வீட்டுப் பெண்களையும் தாங்களே பெண்டாள நினைப்பார்கள் என்று நினைத்தீர்களோ..? இங்கே நீங்கள் போலியாரை ஆணாதிக்கவாதி என்று சொன்னால் 'உண்மை'யானவர் ஆணாதிக்கத்தை மீறி திமிருபவர் என்று அர்த்தமாகி.. அது அவருக்கே அனர்த்தமாகிவிடும். 'உண்மை' அப்படியா எழுதுகிறார்..?


//மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில் திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.//


இதை எப்படி ஸார் இவ்வளவு தைரியமாக எழுதுகிறீர்கள்? ஆச்சரியம்தான் போங்க.. போலியார் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் கெட்ட வார்த்தைகள் என்று நீங்கள் ஒத்துக் கொண்டாலும் அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்கிறீர்கள்.. இது என்ன லாஜிக்..? பிறகு எதற்கு அந்த 'கெட்ட வார்த்தை' என்கின்ற இரண்டு வார்த்தைகள். "கெட்ட வார்த்தைகள் என்று ஏதுமில்லை.. எல்லாமே ஒன்றுதான்.." என்று எழுதிவிட்டுப் போய் விடலாமே.. ஏன் உங்களுக்கே 'அது போன்ற நிறைய மெயில்கள் வந்தும் பப்ளிஷ் செய்யவில்லை..' என்றும் சொன்னீர்களே.. பேசாமல் அவற்றையும் பப்ளிஷ் செய்திருக்கலாமே நல்ல வார்த்தைகள்தான் எனில்..


"யாரை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம். இதில் நல்ல வார்த்தையோ, கெட்ட வார்த்தையோ இல்லை.. எல்லாமே தமிழ் வார்த்தைகள்தான்.." என்ற உங்களது புதிய சூத்திரம் எனக்குப் புதிய பகுத்தறிவைப் புகட்டுகிறது.. "என் வீட்டில் உள்ள பெண்களைத் திட்டினால்கூட எனக்கு கோபம் வராது.." என்ற ரீதியில் எழுதியிருக்கிறீர்களே.. இது என்ன விளையாட்டா? உங்களைப் போலவே மற்றவர்களும் "அவைகள் அனைத்தும் நல்ல வார்த்தைகள்தான்.." என்று சொல்லி ஆளுக்கொரு நாலு பக்கம் பிரிண்ட் எடுத்து வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து மனப்பாடம் செய்து மற்றவர்களிடம் சொல்லிக் கொடுங்கள் என்று அட்வைஸ் செய்கிறீர்களா?


//இப்போது போலியை எதிர்ப்பவர்களுக்கும் சரி இதற்கு முன்னால் போலியை எதிர்ப்பவர்களுகும் சரி இப்படியான நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது.//


போலியை எதிர்ப்பவர்கள் எதற்கு ஸார் எதிர்க்கிறார்கள்..? அவரென்ன தாவூத் இப்ராஹிமா நாட்டு நலனை முன்னிட்டு எதிர்ப்பதற்கு..? இந்த போலி விஷயத்தில் நிலைப்பாடு என்ற ஒன்றை எதற்கு எதிர்பார்க்கிறீர்கள் என்பது புரியவில்லீங்கோ..


எதிர்ப்பாளர்கள் அனைவருமே ஏதோ கொள்கை குன்றுகளோ அல்லது கொள்கைக்காக வலையுலகில் வலம் வருபவர்களோ அல்ல.. தன்னுடைய எண்ணங்களை(எண்ணங்கள்தான்; கொள்கைகள் அல்ல. நாளையே சூழ்நிலை மாறும்போது அவர்கள் மாறித்தான் ஆவார்கள்) வெளிப்படுத்தி எதிர்வினையின் மூலம் கிடைக்கும் தகவல்களைப் படித்துத் தெரிந்து கொள்கிறார்கள். இதுதானே வலைப்பூக்களின் நோக்கம். இதில் வருபவர்கள் அனைவரும் ஒரு கட்சியின் தொண்டனைப் போல.. கொள்கைக் குன்றின் மீது பளிச்சிடும் நட்சத்திரத்தைப் போல் தெரிய வேண்டும் என்றால் எப்படிங்கோ ஐயா..?


//போலியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் சித்தாந்தம், அறம் என ஒரு புண்ணாக்கும் கிடையாது. தன்முனைப்பு, தனிமனித அரிப்பு, அப்போது யாரை எதிரியாய் வரித்துக்கொண்டோமோ அந்த எதிரியை ஒழித்துக்கட்டும் வெறி இது மட்டும்தான் இரண்டுதரப்பிற்குமான அடிப்படை.//


எதற்கு இங்கே அறமும், சிந்தாந்தமும் தேவை? திருடனையும், கொலைகாரனையும் பிடிக்கச் சொன்னால் எந்த சிந்தாந்தத்தின் அடிப்படையில் அவன் திருடன், கொலைகாரன் என்று கேட்பீர்களோ..?

போலியாரை யாரும் எதிரியாக நினைக்கவில்லை.. தெருவில் குடியிருக்கும் ஒருவன் குடித்துவிட்டு அம்மணமாக தினமும் ரகளை செய்து வருகிறான் என்றால், அவனைக் கண்டால் ஓரமாக ஒதுங்கித்தான் போவார்கள் மற்றவர்கள். அவனை அந்தத் தெருவிலிருந்து அப்புறப்படுத்தினால் நாம் நிம்மதியாக இருக்கலாம் என்றுதான் நினைப்பார்கள்.
இதை எதிரி என்று நினைத்து என்னை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று குடிகாரன் புலம்பினால் நீங்களும் அதற்கு ஒத்து ஊதுறீகளே சாமி..?


அசுத்தமான ரத்தம் யார் உடம்பில் ஓடினாலும் ஆஸ்பத்திரிக்கு ஓடித்தான் ஆக வேண்டும்.. உடனுக்குடன் அதை நீக்கித்தான் ஆக வேண்டும்..
நல்ல ரத்தம் அசுத்தமானது எப்படி என்பதை அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, அதன் பின் அந்தக் காரணகர்த்தாவை கண்டுபிடித்து.. சிரச்சேதம் செய்துவிட்டு, அதன் பின்தான் ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும் என்றால்..


எந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தினால் இவையெல்லாம் எங்கள் புத்தியில் ஏறி, எங்கள் மனது சாந்தியாகும் என்பதை முதலில் சொல்லுங்கள்.. கற்றுக் கொள்ள முயல்கிறோம்..

விடாதுகருப்பு-நான்-மூர்த்தி-போலியார்

01-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அவ்வப்போது பதிவுகள் போடுவது வழக்கமென்றாலும், இந்த விஷயத்தில் நான் முன்பே பதிவு போட்டிருக்க வேண்டும். முடியவில்லை. காரணம், என் அப்பன் முருகன் எனக்குத் தொடர்ந்து கொடுத்த சோதனைகள், இந்த முறை 4 நாட்களுக்குத் தொடர்ந்துவிட்டதால் சற்றே பெரிய தாமதம்.. மன்னிக்கவும்.

வாந்தியும், பேதியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். அப்படித்தான் டோண்டு ஸாருக்கு வந்த நோய்கள், இன்று தமிழ்மணத்தின் கோபக்கார இளைஞர்களுக்குத் தொற்றியவுடன் அவர்களின் கோபக் கனலில் தமிழ்மணம் எரிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இது மிக, மிகத் தாமதமான கோபக் குரல் என்றே நான் கருதுகிறேன். எப்பொழுதே ஒட்டு மொத்தக் குரலாக ஒலித்திருக்க வேண்டும். கொள்கை, கோட்பாடு, ஒரே தலைவர் என்கின்ற பத்தாம்பசலி அடையாளங்களை முன் வைத்து, இந்த சைக்கோவுக்கு வலையுலக நண்பர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் அடையாளம் கொடுத்ததன் விளைவுதான், இன்றைக்கு அவரவர் வீடுகளில் தீ பற்றிக் கொண்டுள்ளது.

ஒரு மனநோயாளியை நம் உடன் வைத்திருக்கும்போது நம் முழு கவனமும் அவர் மீதுதான் இருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும்.. எந்த நேரத்தில் என்ன செய்வார்? என்ன நடக்கும்? என்பது யாருக்கும் தெரியாது அல்லவா.. சில நிகழ்வுகள் நிகழ்ந்த பிறகு அது யாரால் நடந்தது என்று நோண்டிப் பார்த்து அது கடைசியில் மனநோயாளியை நோக்கிச் செல்லும்போது நம்மால் தார்மீக ரீதியாக அவரைக் குற்றம் சொல்ல முடியாதே.. அவர்தான் மனநோயாளியாச்சே..

விடாது கருப்புதான் மூர்த்தி. இந்த மூர்த்திதான் முத்தமிழ் மன்றத்தை நடத்துபவர். இவர்தான் ஆபாசக் களஞ்சியம் எழுதும் போலியார் என்பதை முதலில் பாதிக்கப்பட்ட டோண்டு ஸாரும், வரிசையாக பாதிக்கப்பட்ட பல தோழர்களும் ஆதாரத்தோடு எடுத்து வைத்திருந்தும் அவன் இல்லை.. அவனாக இருக்க முடியாது.. என்றெல்லாம் தங்களுக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு அந்த சைக்கோவுக்கு அடையாளம் கொடுத்தவர்களே இன்றைக்கு பக்கம் பக்கமாக டைப் செய்து கொண்டிருக்கிறார்கள்..

கூடவே வலையுலகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவரிடமே சமாதானப் பேச்சும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு சமாதானம் என்கின்ற வார்த்தைக்கு மதிப்பேது..?

இந்த சைக்கோ மேட்டரில் நானும் சிக்கிக் கொண்ட பிறகு நண்பர் செல்லாவிடம் பேசும் போதெல்லாம் தவறாமல் நான் கேட்ட கேள்வி, "விடாது கருப்புவிற்கு ஏன் நீங்கள் லின்க் கொடுத்திருக்கிறீர்கள்..?" என்று.. "இல்ல தலைவா.. அவர் பெரியாரோட தொண்டர்.. அவரா இருக்காதுன்னு நான் நினைக்கிறேன்.. ஏன்னா பெரியார் தொண்டர் எவரும் இப்படி எழுத மாட்டாங்க.." என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டேயிருந்தார்.

"டோண்டு ஸார் சொல்றாரே.." என்றால் "அவர் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டுமா? எனக்கு நம்பிக்கை இருக்கு.. விடாது கருப்பு, போலி இல்லை என்று.. அதனால்தான் லின்க் கொடுத்திருக்கிறேன்.." என்றார்.

ஆனால் எனது துவக்கக் காலத்திலேயே இந்த சைக்கோ விடாது கருப்புவாகத்தான் இருக்க வேண்டும் நான் நம்பினேன்.. அதற்கான நம்பிக்கை விதைகளையும் அந்த சைக்கோவே என்னிடம் விதைத்துவிட்டுச் சென்றார்.

சைக்கோ திடீரென்று வந்து, 'விடாது கருப்பு' வேஷத்தில் கூகில் டாக்கில் என்னோடு பேசுவார். அவர் பேசி முடித்துவிட்டுப் போன அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், போலியார் தனது ஆபாச கமெண்ட்டுகளை எனக்குப் போடுவார்.. நான் அதை ஒதுக்கித் தள்ளுவேன். இது தொடர் கதையாகவே இருந்தது. இது தொடர்ந்து நாள் கணக்கில் தொடரவே அன்றைக்கு யோசிக்கத் துவங்கினேன்..

ஒரு நாள் 'விடாது கருப்பு' கூகிள் டாக்கில் பேசி முடித்துவிட்டு 'பை' சொல்லிவிட்டுப் போன பிறகு தொடர்ந்து 5 முறை ஆபாச அர்ச்சனைகள் வந்தன. அவை எதையும் நான் தொடாமல் வைத்திருந்தேன். 6-வதாக வந்த அர்ச்சனையில் கூடுதலாக சில வரிகள்.. அவை "கூகிள் டாக்கை தொறந்து வைச்சுட்டு வெண்ணை.. என்னத்தடா புடுங்குற..? வந்த மெயிலை செக் பண்ணுடா புடுங்கி.." என்று முடிந்திருந்தது. இப்போது எனது கூகிள் டாக்கில் விடாது கருப்புவைத் தவிர வேறு யாரும் online-ல் இல்லை. இதுவும் எனது நம்பிக்கையை அதிகரித்தது.

தொடர்ந்து மறுநாளிலிருந்து விடாது கருப்பு கூகிள் டாக்கில் வரும்போது வேண்டுமென்றே "இப்போ குளோஸ் பண்றேன்.. வேலையிருக்கு.. ஒரு மணி நேரம் கழித்து வர்றேன்.." என்று சொல்லி கட் செய்வேன்.. சரியாக ஒரு மணி நேரம் கழித்து inbox-ஐ ஓப்பன் செய்தால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆபாச அர்ச்சனைகள் வரும்.

ஆனாலும் எனக்கு இருந்த பிடிவாதத்திற்கு, "நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது..?" என்ற நியாயமான கோபத்தில் தொடர்ந்து டோண்டு ஸாருக்கு கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டேயிருந்தேன்.

இப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்து போய்க் கொண்டிருக்கும்போதுதான் எனக்கு கண்ணில் கண்ணீர் வரக்கூடிய அளவுக்கு போலியாரைவிட அதிகமாகத் தண்ணி காட்டிக் கொண்டிருந்த போலி உண்மைத்தமிழன் மேட்டர் வெளியானது.

மிகச் சரியாக அன்றைக்குத்தான் சைக்கோ மூர்த்தி, என் பெயரிலும் ஒரு ஆபாசத் தளத்தை(unmaithamizan.blogspot.com) உருவாக்கி வெளியிட்டு அதன் திறப்பு விழாவுக்கு என்னையும் இன்வைட் செய்திருந்தார். நானும் அவர் மனம் நோகக்கூடாது என்பதற்காக அந்தச் செய்தியை எனது தளத்தில் வெளியிட்டு, வெளியீட்டு விழாவிற்கும் நேரில் சென்று ஆஜர் கொடுத்துவிட்டு வந்தேன்.

அப்போது நண்பர் செல்லாவிடம் கேட்டபோது இப்போதுதான் அவருக்கும் ஓரளவுக்கு சந்தேகம் வந்திருந்தது.. ஆனாலும் அப்போதும் தனது 'தோழரை' விட்டுக் கொடுக்காமல்தான் பேசினார்.

இதற்கு முன் தம்பி செந்தழல் ரவி கோவை வலைப்பதிவர் கூட்டத்திலேயே என்னிடம் இந்த சைக்கோவைப் பற்றி புட்டு புட்டு வைத்தார். இவ்வளவும் ரவிக்கு மட்டும்தான் தெரியும் என்று நான் நினைத்தது என்னுடைய மடத்தனம்தான்.

வலைத்தளத்தின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களுக்கும் முத்தமிழ் மன்ற மூர்த்திதான் போலியார் மற்றும் விடாது கருப்பு என்பது தெரியும். ஆனாலும் சிலருக்கு, 'கொள்கை பாசம்' கண்ணை மறைக்க அமைதி காக்கின்றனர் என்பதும் எனக்குப் புரிந்தது.

இந்த நேரத்தில்தான் நானும் வேண்டுமென்றே ஒரு நல்ல செயலை செய்தேன். வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு தொலைபேசி தகவலின்படி, மூர்த்தியின் தளத்திற்குள் சென்று பார்த்தேன்.

முத்தமிழ் மன்றம் நடத்தும் மூர்த்திதான் விடாது கருப்பு என்னும் மூர்த்தி என்னும் போலியார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அந்த தளத்தில் இருந்த ஒரு ஆன்மிகச் செய்தியை எடுத்து எனது பதிவில் போட்டுக் கொண்டேன்.

மூர்த்தியின் பெயரைச் சொல்லாமல் "அந்தப் பதிவருக்கு எனது நன்றி" என்று சொல்லி எழுதியிருந்தேன். அதற்கு வந்த பின்னூட்டங்களையும் அனுமதித்திருந்தேன்.

அடுத்த நாளே எனது ஜிமெயில் முகவரிக்கு மூர்த்தியிடமிருந்து ஒரு மெயில் வந்தது. அந்தப் பதிவு தன்னுடையது என்றும், பின்னூட்டத்தில் தனது மனைவியின் பெயர் இருப்பதாகவும் அதை நீக்கி விடும்படியும் எழுதியிருந்தார். (அவருடைய மனைவியின் பெயர் அன்றுவரையில் எனக்குத் தெரியாது. யாரோ போலி பெயரில் அனானி கமெண்ட் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துத்தான் நானும் அதை அனுமதித்திருந்தேன்.)

நானும் அதற்கு வருத்தம் தெரிவித்து மெயில் அனுப்பிவிட்டு அந்த பின்னூட்டத்தை நீக்கினாலும், எனக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகத்தையும் துடைத்தெறிந்தது இந்த மெயில்தான்.

காரணம், என்னுடைய ஜிமெயில் முகவரியை நான் இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே மறைத்துவிட்டேன். எனது ஜிமெயில் முகவரியை அறிந்து சாட்டிங் செய்ய வருபவர்களில் விடாது கருப்பு உட்பட 10 பேர்கள்தான்.. வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒன்று, தெரிந்தவர்கள் மூர்த்தியிடம் சொல்லியிருக்க வேண்டும். அல்லது விடாது கருப்புதான் இந்த மூர்த்தியாக இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இந்த உறுதியை உறுதி செய்வதைப் போல் மறுநாளிலிருந்து மூர்த்தி மெயில் மூலம் ஆபாச மொழியில் அர்ச்சனை மழை பொழிந்தார்.

எனக்கிருந்த சந்தேகங்கள் முழுவதையும் அவருடனான கூகிள் டாக்கிலேயே கேட்டுத் தெளிந்து கொண்டேன்.

உங்களுக்கும் சந்தேகங்கள் தீர வேண்டுமெனில் இந்தத் (http://www.zshare.net/download/3416645f499902) தளத்திற்குச் சென்று டவுன்லோட் செய்து படித்துத் தெளிந்து கொள்ளுங்கள்.

இன்றைக்கு மோதல் என்பது வெட்ட வெளிச்சமானவுடன், இத்தனை நாட்கள் தெரிந்து வைத்திருந்த செய்திகளெல்லாம் தேர்ந்த திரைக்கதையுடன் உங்கள் முன் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் என்னுடைய ஆதங்கம் ஒரே வரியில்..

"இதை முன்னாடியே செஞ்சு தொலைஞ்சிருக்கலாமே.."