06-11-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இத்திரைப்படத்தை A.P.K. பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மேகனா நடித்துள்ளார். மற்றும் ‘காளி’ வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம், இசை – ஜூட் வினிகர், படத் தொகுப்பு – எம்.ஜே.பி., பாடல்கள் – மணி அமுதன், சண்டை பயிற்சி – டேஞ்சர் மணி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எஸ்.ஸ்ரீதர், தயாரிப்பு – பி.அய்யப்பன், சி.பழனி, எழுத்து, இயக்கம் – R.அய்யனார். இவர் இயக்குநர் கிருஷ்ணாவிடம் ‘நெடுஞ்சாலை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர்.
பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது. சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல், பருவ மாற்றம் ஏற்படுகிற காலக்கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சிதானே தவிர… அது காதல் இல்லை. காதலன் கூப்பிடும் இடங்களுக்கெல்லாம் தகுந்த பாதுகாப்பில்லாமல் பெண்கள் போகக் கூடாது. அப்படிப் போனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற விஷயத்தை காதல், மோதல், செண்டிமெண்ட் கலந்து இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் கதைக் களம் செஞ்சி அருகேயிருக்கும் கிராமம். தென்னவன், மதுரை சர்மிளாவின் மகனான நாயகன் கிஷோர் பிளஸ் டூ படிக்கிறார். கடைசி ரேன்க். படிப்பில் ஆர்வமில்லை. அதே பள்ளியில் கிஷோரின் தங்கையும் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தத் தங்கையின் வகுப்பிலேயே நாயகி மேக்னாவும் படிக்கிறார். மேக்னா படிப்பில் முதல் மாணவி.
பிளஸ் டூவுக்கும், பத்தாம் வகுப்புக்கும் இடையில் காதல் பிறக்கிறது. இதையறியும் மேக்னாவின் தந்தை கிஷோரை கூப்பிட்டு கண்டிக்கிறார். மேக்னா நன்றாக படிக்கும் மாணவி என்பதால் அவள் வழியில் குறுக்கே வர வேண்டாம் என்று எச்சரிக்கிறார்.
கிஷோரின் தங்கையும் அதே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் கிஷோரின் பரம விரோதியான இன்னொரு பையனை காதலிக்கிறார். இந்தக் காதலும் கிஷோருக்கு தெரிய வருகிறது.
பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றால்தான் காதல் அடுத்தக் கட்டத்துக்கு நகரும் என்கிற நிலைமை. இதனால் பரீட்சையில் பிட் அடித்தாவது பாஸ் செய்ய நினைக்கிறார் ஹீரோ. இதற்காக தனது நண்பர் காளி வெங்கட் துணையோடு பிட் அடிக்க முயல்கிறார். ஆனால் முடியாமல் மாட்டிக் கொள்கிறார். இதனால் தேர்வு எழுத முடியாமல் வீட்டுக்கு வருகிறார் கிஷோர்.
இதைத் தொடர்ந்து வீட்டில் அப்பாவால் கிடைக்க திட்டுக்கள், பேச்சுக்களால் மனம் வெறுத்து ஊதாரியாய் ஊர் சுற்றுகிறார். அடிதடியில் சிக்கி ஜெயிலுக்கும் போகிறார். ஆனாலும் நாயகி மனம் மாறாமல் இவரையே சுற்றிச் சுற்றி வருகிறார்.
செஞ்சியில் இருக்கும் புகழ் பெற்ற கோட்டையைச் சுற்றிப் பார்க்க வரும் காதலர்களை கத்தி முனையில் மிரட்டி பணத்தை பிடுங்கி, காதலியையும் சூறையாடுகிறது ஒரு கும்பல். இதனால் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஒருவன் போலீஸில் பிடிபட்டு ஜெயிலுக்கும் போகிறான்.
இந்த நேரத்தில் கிராமத்தில் நடக்கும் ஒரு திருவிழாவின்போது நாயகியும், கிஷோரின் தங்கையும் திடீரென்று காணாமல் போகிறார்கள். அவர்களைத் தேடியலைகிறார் கிஷோர். காதலியும், தங்கையும் கிடைத்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.
குருவி தலையில் பனங்காயை வைத்த்துபோல ‘கோலி சோடா’வில் சிறுவனாக இருந்த கிஷோருக்கு இந்தப் படத்தில் வாலிப பையனாக்கி ஹீரோவாகவும் பிரமோஷன் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
பிளஸ் டூ படிக்கும் மாணவனுக்கேற்ற தோற்றத்தில் இருக்கிறார் என்பதாலேயே அதுவே போதும் என்று நினைத்துவிட்டார் போலும். அதற்கு மேலும் நடிப்பை வரவழைக்காமல் விட்டுவிட்டார். கிஷோரும் ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்.
நாயகி மேக்னாவைவிடவும், கிஷோரின் தங்கையாக நடித்த பெண்ணுக்குத்தான் நடிப்புக்கான நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அவரும் கச்சிதமாகவே நடித்திருக்கிறார்.
கிஷோரின் நண்பனாக வரும் குண்டு பையன், அப்பா தென்னவன், அம்மா மதுரை சர்மிளா என்று யாரும் குறை வைக்கவில்லை. ஆனால் என்ன..? எல்லாருமே ஏதோ மேடை நாடகத்தில் நடிப்பதுபோல கத்திக் குவித்திருக்கிறார்கள். அதிலும் அந்த கண்ணாடி போட்ட டீச்சர் பேசும் பேச்சு இருக்கே..?!
சவுண்ட் என்ஜீனியருக்கு தயாரிப்பாளர் சம்பளத்துடன் போனஸையும் சேர்த்து கொடுத்துவிட்டார் போலிருக்கிறது. வசனங்களை உச்சபட்ச ஒலியில் பதிவு செய்திருக்கிறார். இதனாலேயே படத்தில் அனைவரும் ஏன் இப்படி கத்துகிறார்கள் என்றே கேட்க வேண்டியிருக்கிறது.
ஒளிப்பதிவை பார்த்தாலே படம் மீடியம் பட்ஜெட் படம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் தரமாக படமாக்கியிருக்கலாம். செஞ்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களையும், செஞ்சி கோட்டையையும் அழகாக காண்பித்திருக்கிறார்கள். இதற்காகவே ஒளிப்பதிவாளருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
ஜூட் வினிகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஆனால் பாடல்களை படமாக்கியவிதம்தான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. நாயகியின் அழகை காண்பித்தவர்கள், பாடலையும் கொஞ்சம் அழகாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.
பள்ளிப் பருவத்தின் காலக்கட்டங்களை கொஞ்சம் ஞாபகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். “எவண்டா அது என் சிலேட்டுல எழுதியிருந்ததை அழிச்சது..? அவங்கம்மாதாண்டா ஊருக்கே சிலுக்கு…” என்கிற வசனம் அக்மார்க் கிராமத்து டயலாக்குதான்.
அதேபோல் சின்னப் பையனின் குஞ்சில் மீன் மாட்டிக் கொண்டு கடிப்பதும், அதற்காக அந்தப் பையன்கள் பேசும் பேச்சும் ‘ஏ’ ரகம். ஆனால் ரசனையானது.
மார்க் ஷீட்டை வாங்குவதற்காக காளி வெங்கட் கிஷோருக்கு அண்ணன் வேஷம் போட்டு தலைமை ஆசிரியரிடம் பேசும் காட்சி, இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு சான்றாக இருக்கிறது.
தேர்வு அறையில் நடக்கும் ரகளையும், அது தொடர்பான சில காட்சிகளும் நகைச்சுவையை தெளித்திருக்கின்றன. அதிலும் காளி வெங்கட் நடு ரோட்டில் நின்று கொண்டு கேள்விகளுக்கான பதில்களை சொல்வது செம காமெடி.
ஆனால் மிகப் பெரிய லாஜிக் மீறலாக பிளஸ் டூ தேர்வு நடக்கும்போது அருகிலேயே பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுவதாகவும், இரண்டு மாணவர்களும் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதுவது போலவும் வைத்திருக்கிறார்கள். இயக்குநரின் உதவியாளர்கள் இந்த அளவுக்கு திறமைசாலிகளா என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. முற்றிலும் ஏற்க முடியாத தவறான காட்சியல்லவா இது..?
காதலன் அழைத்தால் அது எந்த இடமாக இருந்தாலும் காதலியாக இருப்பவர்கள் உடனே சம்மதிப்பதும், உடன் செல்வதும் மிக ஆபத்தானது என்று சொல்லிய இயக்குநர், படிக்கின்ற வயதில் காதல் தேவையில்லாதது, தவறானது என்பதை மட்டும் எந்தவொரு வசனத்திலும் சொல்லாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.
கிளைமாக்ஸில் கிஷோரின் காலின் கீழ்ப் பகுதி அரிவாளால் வெட்டப்பட்டு துண்டான பின்பும் உடனேயே அந்த இடத்தில் லேசாக கட்டுப் போட்டுவிட்டு அனைவருடனும் அன்பாக நடந்து செல்லும் காட்சியைப் பார்த்தால் நமக்கே திகைப்பாக இருக்கிறது. கிஷோரை ஏதோ சூப்பர் மேன் லெவலுக்கு காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
படிக்கின்ற வயதில் மாணவ, மாணவிகள் படிக்கும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்பதைத்தான் இயக்குநர் சொல்ல வந்திருக்கிறார். ஆனால் இதனை அழுத்தமாகவும், தரமாகவும், உறுதியாகவும் சொல்லாமல் விட்டிருக்கிறார்.
|
Tweet |
0 comments:
Post a Comment