13-11-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கோடப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கிறார்.
படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் ராம்ஸ், சுனுலட்சுமி, கிட்டி, ‘வழக்கு எண்’ முத்துராமன், வேல ராமமூர்த்தி, ஈ.ராமதாஸ், வினோதினி வைத்தியநாதன், விக்னேஷ், ராமச்சந்திரன் துரைராஜ், பி.வி.அனந்தகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, ரூபன், ஒலி வடிவமைப்பு – அருண் எஸ்.மணி, பி.சி.விஷ்ணு, கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, சண்டை பயிற்சி – பீட்டர் ஹெயின், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, நிர்வாகத் தயாரிப்பு – செளந்தர் பைரவி, எழுத்து, இயக்கம் – ந.கோபி நயினார்.
கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை, மாநில அரசுகளின் அசட்டை, அரசியல்வாதிகளின் அக்கிரமம், அதிகார வர்க்கத்தின் திமிர்.. இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது இப்படம்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிட்டி தன் எதிரில் அமர்ந்திருக்கும் சஸ்பெண்ட்டான ஐ.ஏ.எஸ். அதிகாரியான மதிவதனியை அவருடைய சஸ்பெண்ட்டான குற்றச்சாட்டுக்களுக்காக விசாரிக்கிறார். இதிலிருந்துதான் படம் துவங்குகிறது.
தமிழக ஆந்திர எல்லையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவும் தளத்தின் அருகில் இருக்கும் தமிழக கிராமம் காட்டூர். வங்காள விரிகுடாவின் கடல் ஓரத்தில் இருந்தாலும் அந்த உப்புத் தண்ணியைத் தவிர வேறு தண்ணி ஊருக்குள் இல்லை. குடிநீருக்காக இன்னமும் மக்கள் அலைந்து திரியும் அக்மார்க் சின்ன கிராமம்.
ஊரில் பெயிண்ட் அடிக்கும் வேலையைச் செய்யும் புலேந்திரன் என்னும் ராம்ஸ் தனது மனைவியான சுமதி மற்றும் 5 வயது பெண் குழந்தை தன்ஷிகாவுடன் அதே ஊரில் வசிக்கிறார்.
மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்கிறார் சுமதி. உடன் செல்லும் குழந்தை தன்ஷிகா அதே ஊரில் கிராமத்து கவுன்சிலருக்கு சொந்தமான நிலத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
தண்ணீர் இல்லாத காரணத்தால் போர்வெல் போட தோண்டப்பட ஒரு குழியில் எதிர்பாராதவிதமாக குழந்தை தன்ஷிகா விழுந்து விடுகிறாள். விளையாட போன புள்ளையை காணாமல் தவிக்கும் சுமதி கடைசியாக அந்தப் புதைக்குழிக்குள் மகள் இருப்பதை அறிந்து மூர்ச்சையாகிறாள்.
தீயணைப்புத் துறைக்கும், காவல்துறைக்கும், உயர் அரசு அதிகாரிகளுக்கும் தகவல் பறக்கிறது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரான மதிவதனி என்னும் நயன்தாரா வேறொரு ஊரின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்துவிட்டு, திரும்பி வரும் வழியில் இந்தத் தகவலை அறிந்து ஸ்பாட்டுக்கு விரைந்து வருகிறார்.
இவருக்கு முன்பாகவே வந்த தீயணைப்புத் துறையின் வாகனம் அரசு வாகனத்துக்கே உரித்தான லட்சணத்தோடு பாதியில் நின்றுவிடுகிறது. இதற்குப் பின்னர்தான் வி.ஏ.ஓ, ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசில்தார், போலீஸ் டி.எஸ்.பி. கடைசியாக கலெக்டரும் வந்த பின்புதான் தீயணைப்புத் துறை வண்டி வருகிறது.
குழந்தை குழிக்குள்தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் தீயணைப்புத் துறை அதிகாரி, மருத்துவ அதிகாரிகளையும் வரவழைக்கச் சொல்கிறார். அவர்களும் வந்தவுடன் குழந்தை சுவாசிக்க வேண்டி ஆக்சிஜனை குழாய் மூலமாக குழிக்குள் பரவச் செய்கிறார்கள்.
அதே சமயம் ஊர் ஜனங்களெல்லாம் ஒன்று திரண்டு அந்த போர்வெல் குழியை மூடாமல் அசட்டையாக இருந்த கவுன்சிலரை கைது செய்யச் சொல்கிறார்கள். இதற்கான உத்தரவை கலெக்டர் மதிவதனி உத்தரவிடுகிறார். கவுன்சிலர் விஷயம் தெரிந்து தலைமறைவாகிறார்.
இந்த பரிதாபச் செய்தி மீடியாக்கள் உதவியுடன் நாடு முழுவதும் பரவுகிறது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்து கவுன்சிலரை கைது செய்ய வேண்டாம் என்று கலெக்டரை மிரட்டுகிறார். ஆனால் இதனை கலெக்டர் ஏற்காமல் அவரை உதாசீனப்படுத்துகிறார்.
குழந்தையை மீட்கும் முயற்சியில் முதல் கட்டமாக கயிறை குழிக்குள் இறக்கி அதனைப் பிடித்து மேலே வரும்படி சொல்கிறார்கள். பாதி தூரம் வந்த நிலையில் வலி தாங்காமல் தன்ஷிகா கயிறை விட்டுவிட.. இன்னும் ஆழமான பகுதிக்கு போய்விடுகிறாள் தன்ஷிகா.
அடுத்தக் கட்ட முயற்சியாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வருகிறார்கள். அவர்கள் யோசித்துப் பார்த்துவிட்டு பக்கத்திலேயே ஒரு குழியைத் தோண்டி குழந்தையை மீட்டுவிடலாம் என்கிறார்கள். இதற்கான பணிகள் நடைபெறும்போதே அந்தப் பகுதி தரைப்பகுதி இரண்டாக பிளக்கிறது. இதனால் அந்த முயற்சியை கைவிடுகிறார்கள்.
மூன்றாவதாக யாராவது ஒரு சிறுவனை குழிக்குள் அனுப்பி தன்ஷிகாவை மீட்கலாம் என்றெண்ணுகிறார்கள். இதற்காக தன்ஷிகாவின் அண்ணனையே தேர்வு செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் இதனைக் கடுமையாக எதிர்த்தாலும் கலெக்டர் மதிவதனி தன் முயற்சியில் உறுதியாய் இருந்து குழந்தையை மீட்டெடுக்கிறார்.
ஆனாலும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், போலீஸார், அரசு உயரதிகாரிகள் அனைவரையுமே இந்தக் குழந்தை மீட்பு விஷயத்தில் கலெக்டர் மதிவதனி பகைத்துக் கொண்டதால் விவகாரம் சுமூகமாக முடிந்த பின்பு மாநில அரசு அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.
கலெக்டர் மதிவதனி மீதான சஸ்பெண்ட் உத்தரவு என்ன ஆனது..? துறை ரீதியிலான விசாரணை என்ன ஆனது…? என்பதுதான் படத்தின் டிவிஸ்ட்டான கிளைமாக்ஸ்.
வெகு நாட்களுக்கு பிறகு திரையரங்கத்திலேயே பார்ப்போரின் கண்களை கலங்க வைத்திருக்கிறது இந்தப் படம். படத்தின் தன்மையினால் சலிப்பாக செல்போன் தேடும் சம்பவங்கள் பல முறை நடந்திருக்கும் நிலையில். இந்தப் படத்திலோ காட்சிகளை பார்க்க மனமில்லாமல் தலையைக் குனிந்து கொண்ட சம்பவங்களைத்தான் பட்டியலிடுகிறார்கள் ரசிகர்கள்.
சிறுமி தன்ஷிகாவின் பெற்றோரின் தவிப்பையும், ஊர் மக்களின் கோபத்தையும், அரசு அதிகாரிகளின் தப்பிக்கும் மனோபாவத்தையும், போலீஸ்காரர்களின் அதிகாரத் திமிரையும், பவர் பாலிடிக்ஸ் எனப்படும் இந்த அதிகார வர்க்கங்களின் ஒத்துழையாமை எந்த அளவுக்கு ஒரு சாதாரண ஒரு குடிமகனின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை இந்தப் படத்தில் இயக்குநர் கோபி நயினார் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அந்தக் குழந்தையைத் காப்பாற்றி விடுவார்களா..? இல்லையா..? ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள் என்றெல்லாம் படம் பார்ப்போரையும் பெரிதும் தவிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதில்தான் இவரது திறமை பளிச்சிடுகிறது.
தன்ஷிகாவின் தாய், தந்தையின் பின்னணி, அவர்களது குடும்ப வாழ்க்கை முறை, உறவுகளின் கலாய்ப்பு. குடிதண்ணிக்காக ஊரே குடத்தைத் தூக்கிக் கொண்டு நாயாய் அலைவது.. அவ்வளவு பெரிய கடல் அருகே அந்த ஊர் இருந்தென்ன பயன் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு பக்கம் ஊர் மக்களின் கிண்டல்கள், கேலிகள்.. மறுபக்கம் போலீஸாரின் ஆத்திரம்.. அரசியல்வாதியின் குறுக்கீடு.. அதிகாரிகளின் ஒத்துழையாமை.. இது எல்லாவற்றையும் தாண்டி அந்தக் குழந்தையை மீட்டாகத் துடிக்கும் மதிவதனி என்னும் மாவட்ட ஆட்சித் தலைவர் அசத்தலாக நடித்திருக்கிறார் நயன்தாரா.
இதுகாறும் அவருடைய திரையுலக வரலாற்றில் ‘பில்லா-2’-வில்தான் ஒரு கெத்தான கேரக்டரை ஏற்றிருந்தார். ஆனால் இந்த மதிவதனி ஐ.ஏ.எஸ். போல் ஒருவரை உருவாக்கக் கூடாதா என்பதுபோல அமைந்திருக்கிறது இந்தப் படத்தில் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்.
எல்லாம் முடிந்த பின்பு குழிக்கு அருகிலேயே வாய் விட்டு அழுகிறார் பாருங்கள். தியேட்டரில் ரசிகர்களின் மெளனமான அழுகையும் அப்போது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கனத்த மனதோடு தியேட்டரைவிட்டு வெளியில் அனுப்பியிருக்கிறார் நாயகி நயன்தாரா.
குழந்தையின் அப்பாவான ராம்ஸ் பல படங்களில் வில்லனாகவும், வில்லனுக்கு அடியாளாகவும் நடித்தவர். ஆனால் இந்தப் படத்தில் மென்மையான அப்பாவாகவும், பொறுப்பான தந்தையாகவும் நடித்திருக்கிறார். மகனின் நீச்சல் ஆர்வத்தைக் கண்டறிந்தாலும் படித்தால் மேலே, மேலே வளரலாமே..? இப்படியே தன்னைப் போலவே தன் மகனும் நிரந்தரமில்லாத வருவாய் தொழிலில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்கிற பதைபதைப்பில் மனைவியிடம் பேசுகின்ற காட்சியில் யதார்த்தம் கொட்டுகிறது.
அவருடைய கரகரத்த குரலும், ரவுடி போன்ற முகமும்கூட இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. இவருடைய மனைவியான சுமதி என்னும் சுனு லட்சுமிதான் படத்தின் பிற்பாதியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறார். குழந்தைக்காக இவர் படும்பாடும், கதறலும், அரற்றலும் அத்தனையும் நிஜமான நடிப்பு. பார்ப்போரையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.
பழனி பட்டாளம் என்ற புதுமுக நடிகர் படத்தில் பட்டாசு வசனங்களை பெருமளவில் பேசி உண்மைத்தனத்தை தோலுரித்திருக்கிறார். தீயணைப்புத் துறை அதிகாரியான வழக்கு எண் முத்துராமனும், மருத்துவர் ஜீவா ரவியும் அவர்களின் கேரக்டர்களுக்கேற்றவாறு பொறுமையான அரசு அதிகாரிகளாக நடிப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
தலைமைச் செயலாளரான கிட்டி மேல்தட்டு வர்க்க மனோபாவத்தை வசனத்திலும், உடல் மொழியிலும் காண்பித்திருக்கிறார். கிட்டி-நயன்தாரா இடையிலான பேச்சுக்களில் ஒலிக்கும் வசனங்கள் அனைத்துமே கடைசித்தட்டு மக்களுக்கும், அரசுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் காட்டுகிறது.
அதிகார வர்க்கம் ஒரு போதும் அப்பாவி மக்களின் பிரச்சினையை காது கொடுத்துக் கேட்காது என்பதைத்தான் கிட்டி பேசும் வசனங்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். இரண்டு காட்சிகள் என்றாலும் சட்டமன்ற உறுப்பினரின் திமிரை முகத்திலும், பேசும் வசனத்திலும் தெறிக்க விடுகிறார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி.
தாசில்தாரான ஈ.ராம்தாஸும், நயன்தாராவும் பேசும் முதல் காட்சியும், கலெக்டர் கேட்டதை ஈ.ராம்தாஸ், வி.ஏ.ஓ.விடம் அப்படியே திருப்பிக் கேட்பதும் ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தின் புகழ் பெற்ற டயலாக்கை சட்டென்று நினைவுபடுத்தியது.
ஊர் மக்களில் ஒன்றிரண்டு பேரை தவிர மற்ற அனைவருமே அந்தப் பகுதி மக்கள்தான். அத்தனை பேரையும் ஒன்றிணைத்து ஒரு இயல்பான மக்களாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
தன்னைத் தேடி வந்து சமாதானம் செய்யும் கலெக்டரிடம் “முதல்முறையா எங்களைத் தேடி வந்து சமாதானம் செய்றீங்க பாருங்க. இது ஒண்ணே போதும்மா…” என்று அந்த மக்கள் அன்போடு சொல்வதும், கலெக்டருக்கு தண்ணீர் கொடுத்து தங்களது ஊர் தண்ணீர் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை சொல்லுவதும் டச்சிங்கான காட்சிகள்.
வெறும் திரைக்கதையில் மட்டுமல்ல.. வசனத்திலும் இந்திய அரசாங்கத்தையும், மாநில அரசையும் கழுவி கழுவி ஊற்றியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.
“கயிற தவிர இவனுங்ககிட்ட ஒண்ணுமே இல்லடா…”
“இந்த நாட்ல ஒரு பெண் கலெக்டராகிறது பெரிய விஷயமில்லை… ஆனா அவ பெண்ணாகவே, அத்தனை பேருக்கு மத்தியில் வாழ்றது எவ்வளவு கஷ்டமுன்னு நான் கலெக்டரானதுக்கப்புறம்தான் தெரிஞ்சுகிட்டேன்.”
“மக்கள் தங்கள் தேவைகளுக்கு அதிகாரிகளை தேடி வர்றாங்க. ஆனா ஓட்டுப் போட்டு அரசியல்வாதிங்ககிட்ட அதிகாரத்தை குடுத்திடறாங்க.”
“நம்மள பாத்து எந்த பெரிய மனுஷனாவது பயந்துருக்கானா…? அதுக்காக நீங்க கோவப்பட்டு இருக்கீங்களா..?”
“மக்களை ஏமாற்றி ஊரை கொள்ளையடிக்கிற அரசியல்வாதிங்கதான் முதல்ல மூடப்பட வேண்டிய சாக்கடைகள்…”
“மக்களை எப்பவும் நான் குற்றம் சொல்ல மாட்டேன்.. அவங்களை அறியாமையிலேயே வெச்சிருக்கிறது அதிகாரிகளாகிய நம்முடைய குற்றமில்லையா..?”
“ஒரு மீன் துடிப்பதை பார்க்கும் இன்னொரு மீன், அது உயிருடன் இருப்பதாவே நினைக்குது. ஆனால், அதுதான் அந்த மீனின் கடைசி துள்ளல்ன்னு அதுக்கு தெரியாது…”
“கொஞ்ச நேரத்துக்கு நாமெல்லாம் அதிகாரிங்கங்கிறதை மறந்திட்டு, மனுசங்களா யோசிப்போமே..?”
“மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கணும். சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக் கூடாது ஸார்..”
“ஒரு அடிமை எப்படி ஸார் இன்னொரு அடிமைக்கு அடிமையா இருக்க முடியும்..?”
“இங்க விவசாயமே இல்ல. அப்பறம் எதுக்கு விவசாயியின் மகள்னு சொல்றீங்க..”
“இந்த மாதிரி அரசியல்வாதிங்க ஒழிஞ்சாத்தான் இந்த நாடு உருப்படும்..”
என்று சிவப்பு மை பூசி எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் தீயாய் சுடுகின்றன.
ஜனநாயகம் என்கிற போர்வையில் மறைமுகமாக சர்வாதிகார முறையில ஆட்சி செய்து கொண்டிருக்கும் இன்றைய மத்திய, மாநில அரசுகளை ஒருசேர இப்படி கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.
அவருடைய உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் “ராக்கெட்டுல போறவன் நமக்கு முக்கியமில்லை. போர்வெலுக்குள்ள இறங்கி காப்பாத்துறவன்தான் நமக்கு முக்கியம்..” என்கிற வசனம்.
அருகிலேயே சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட இருக்கும் சில மணித் துளிகளில் இந்தச் சோகக் கதை நடந்தேறுகிறது என்பதுதான் சுவையான விஷயம்.
“ராக்கெட்டுகளை பறக்கவிடும் அரசுகள், போர்வெலுக்குள் விழுந்துவிட்ட குழந்தைகளை காப்பாற்ற இதுவரையிலும் எந்தவொரு வழியையும் கண்டறியவில்லையே…” என்கிறார் இயக்குநர். உண்மைதானே..?
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பல மாநிலங்களில் இது போன்ற போர்வெல் குழிகளில் குழந்தைகள் சிக்கிக் கொள்வதும், பின்பு உயிரற்ற சடலமாக மீட்டெடுப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. ஆனால் இதன் தீர்வுக்கான எளிய வழிகள் எதையும் அரசுகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.
திரும்பிய பக்கமெல்லாம் முட்மரங்களாக காட்சியளிக்கும் அந்த வறண்ட பகுதியின் பொட்டல் வெளிப் பகுதியில் மொட்டை வெயிலில் மிகுந்த சிரமத்திற்கிடையில் படப்பிடிப்பை நடித்தியிருக்கிறார் இயக்குநர். இதற்கு ஒத்துழைத்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமிராவின் பணி சிறப்பானது. இயக்குநரும், நடிகர்களும் எந்த அளவுக்கு உழைத்தார்களோ, அதே அளவுக்கு ஒளிப்பதிவாளரும் டென்ஷனை கூட்டும் அளவுக்கு கடின உழைப்பை உழைத்திருக்கிறார். வாகனங்களின் அணிவகுப்பையும், கூடாரத்தில் நிலவும் டென்ஷனையும், குழிக்கும் இருக்கும் தன்ஷிகாவின் களங்கமில்லாத முகத்தையும், அப்பாவித்தனமான நடிப்பையும் அழகாக பதிவு செய்திருக்கிறார்.
தேவையான இடங்களில் மட்டுமே இசையை ஒலிக்க வைத்ததுடன் இல்லாமல் பதைபதைக்கும் காட்சிகளுடன் கூடிய பாடலையும் மிக இலகுவாக மனதில் உட்காரக் கூடிய அளவுக்கு இசையமைத்திருக்கும் ஜிப்ரானுக்கும் பாராட்டுக்குரியவர்.
தன்ஷிகாவின் அண்ணனும், மாமனும் கடலில் குதித்து அறிமுகமாகும் அந்த முதல் காட்சியில் ஆரம்பிக்கும் ஜிப்ரானின் அமர்க்களமான பின்னணி இசை கடைசிவரையிலும் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே ஒலித்து படத்திற்கு வலு கூட்டியிருக்கிறது.
படம் பார்க்கிறோம் என்ற உணர்வு வராத அளவுக்கு, நம் கண் முன்னே நடக்கும் ஒரு நிகழ்வாக நினைக்கும் அளவுக்கு படத்தின் பார்வையை மாற்றியிருக்கிறார் படத் தொகுப்பாளர் ரூபன்.
அந்தப் பகுதி மக்களின் எதார்த்த நிலைமையையும், இன்றைய அரசியலின் நிலைமையையும் திரைக்கதையில் அழுத்தமாக காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
குடும்பத்தோடு குடங்களைத் தூக்கிக் கொண்டு அலையும் மக்கள்.. போலியோ சொட்டு மருந்து போடும் டாக்டர்கூட அரசியலுக்கு பயந்து புகைப்படத்தை மாற்றச் சொல்வது.. கணவன் தன் தம்பியை திட்டுவதை சுனுலட்சுமி கண்டிப்பது.. மகனின் நீச்சல் திறமையை ஊக்குவிக்க நினைப்பது.. மகனின் காது வலிக்காக மருத்துவரிடம் சென்றால் பணம் செலவாகுமே என்றெண்ணி மெடிக்கல் ஷாப்பிலேயே மருந்து கேட்டு வாங்குவது.. ஆனால் குழந்தை தன்ஷிகாவின் பிறந்த நாளுக்காக கேக் ஆர்டர் செய்வது.. 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை பார்ப்பது.. சுமதி சீட்டுப் பிடிக்கும் முறையில் தள்ளுபடியில் நியாயம் கேட்பது.. என்று பதைபதைப்பு போர்ஷன் துவங்குவதற்கு முன்பாக மிக இயல்பானதொரு குடும்ப வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இதேபோல் பதைபதைப்பு காட்சிகளில் தன்ஷிகாவை கேமிராவில் பார்த்துவிட்டு அவருடன் நயன்தாரா பேசுவதும், சுனுலட்சமி கதறி அழுவதும், தனக்கு ஒண்ணுக்கு வருவதாகச் சொல்லும் தன்ஷிகா, “வெளியிடத்துல ஜட்டியை கழட்டினா அம்மா திட்டுமே…” என்று அந்த நிலைமையிலும் வருத்தப்படுவது.. இதைக் கேட்டு சுனுலட்சுமி “ஐயோ.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்..” என்று கதறும் காட்சியில் நம்மையும் சேர்த்தே கதற வைத்திருக்கிறார் இயக்குநர்.
‘ஜாரே ஜகான் ஹி அச்சா’ பாடலை பாடியிருக்கும் சிச்சுவேஷனும், பாடலை பாடியவிதமும் சூப்பர்.. அவ்வளவு டென்ஷனிலும் அந்த நேரத்தில் ஒலிக்கும் இந்தக் கிண்டலுக்காக தியேட்டரே அதிர்கிறது..!
சென்ற ஆண்டில் இதே நேரம் ‘கத்தி’ படத்தின் கதை என்னுடையது என்றும், ‘கருப்பர் நகரம்’ என்ற என்னுடைய படமே ‘மெட்ராஸ்’ என்கிற ரஞ்சித்தின் படமாக உருமாறியது என்றும், ‘அட்டக்கத்தி’ படத்தின் பல காட்சிகள் என்னுடைய ‘கருப்பர் நகரம்’ படத்தின் திரைக்கதையில் இருந்து உருவப்பட்டது என்றும் மனம் குமைந்து பல நேரடி பேட்டிகளிலும், வீடியோ பேட்டிகளிலும் சொல்லியிருந்தார் இந்தப் படத்தின் நாயகனான இயக்குநர் கோபி நயினார்.
இதையெல்லாம் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் இருவருமே மறுத்த கையோடு அது பற்றி பேசவும் மறுத்துவிட்டார்கள். அப்போது கள்ள மெளனம் சாதித்த அவர்கள் இருவரின் செயல்பாட்டை, இன்றைக்கு இந்த ‘அறம்’ படத்தின் மூலமாக உண்மை என்றே நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.
திறமைசாலிகளை எத்தனை பெரிய அணை போட்டுத் தடுத்து வைத்தாலும் வெள்ளம் வரும்போது தடுக்க முடியாது என்பதை போல இயக்குநர் கோபியின் இந்த வெற்றியே அவரது திறமைக்கு உதாரணமாகிவிட்டது.
சமூக அக்கறையை மனதில் கொண்டு வாழும் ஒரு தீவிர படைப்பாளிகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இயக்குநர் கோபி நயனாரின் அடுத்தடுத்த படைப்புகள் இன்னும் வீரியம் கொண்டு எழ மனதார வாழ்த்துகிறோம். பாராட்டுகிறோம்.
கடைசியாக…
1987-ம் ஆண்டு. இந்திய அமைதி காப்புப் படை தமிழ் ஈழத்தில் முகாமிட்டிருந்த காலம்.
அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று பருத்தித்துறை கடல் பகுதியில் லெப்டினென்ட் கர்னல் குமரப்பா, லெப்டினென்ட் கர்னல் புலேந்திரன் உட்பட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 17 போராளிகள், இலங்கை அரசு கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்திய கடற் படையால் மறிக்கப்பட்டு பிடிபட்டனர்.
பலாலி ராணுவ முகாமில் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் மிக முக்கியத் தளபதிகள் என்பதால் இலங்கை அரசு இவர்களை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு கொழும்புக்கு கொண்டு செல்ல நினைத்தது.
அந்த நேரத்தில் இவர்களை விடுதலை செய்ய இந்தியாவிடம் புலிகள் அமைப்பு போராடியும், அது முடியாமல் போனது. அதேபோல் இந்தியாவும் இலங்கை அரசிடம் இவர்களது விடுதலைக்காக பேசியும் முடியவில்லை.
இலங்கை அரசு இவர்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்த, வேறு வழியில்லாமல் இலங்கை அரசின் உத்தரவுக்கு பணிந்து, இந்தப் போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்க முனைந்தது இந்திய அரசு.
இந்த நேரத்தில் அக்டோபர் 5-ம் தேதி இவர்களின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தைக்காக பலாலி ராணுவ முகாமுக்கு சென்றிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் துணைத் தலைவரான மாத்தையாவும், தகவல் தொடர்பாளரான அன்ட்ரன் பாலசிங்கமும் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த சயனைடு குப்பிகளை காவலில் இருந்த போராளிகளிடம் ரகசியமாகக் கொடுத்துவிட்டு போக.. அதனை உட்கொண்டு குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள் அங்கேயே வீர மரணம் அடைந்தார்கள்.
இந்திய அமைதி காப்புப் படைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு போரைத் துவக்குவதற்கு முதல் காரணியாக அமைந்தது இவர்களின் வீர மரணம்தான். 5 நாட்கள் கழித்து 1987 அக்டோபர் 11-ம் தேதியன்று விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும், இந்திய அமைதி காப்புப் படையினருக்கும் இடையேயான அதிகாரப்பூர்வமான யுத்தம் துவங்கியது.
அன்றைக்கு அப்படி வீர மரணமடைந்த வீர தமிழர்களில் ஒருவரான புலேந்திரனின் பெயரை தன்ஷிகாவின் அப்பாவாக நடித்த ராம்ஸுக்கு சூட்டியிருக்கும் இயக்குநர் கோபி நயினார், படத்தில் ஹீரோயிஸம் செய்திருக்கும் நாயகியான நயன்தாராவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மனைவி மதிவதனியின் பெயரைச் சூட்டியிருப்பதும் நிச்சயமாக தற்செயலாக இருக்கவே முடியாது. ஆனால் இதுவும் ஒரு அறமான விஷயம்தான்..!
அறத்தை இப்படி அறத்தால்தான் வெல்ல முடியும்..! இதற்கு இத்திரைப்படமும் ஒரு சான்று..!
|
Tweet |
0 comments:
Post a Comment