அவள் - சினிமா விமர்சனம்

05-11-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இத்திரைப்படத்தை ‘Viacom18 Motion Pictures’ நிறுவனமும் ‘Etaki Entertainment’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை ஆண்ட்ரியா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சுரேஷ், அதுல் குல்கர்னி, அனிஷா விக்டர், அவினாஷ் ரகுதேவன், பிரகாஷ் பெலவாடி, பாவனா அனேஜா, குஷி ஹஜாரே, யூசுப் ஹூசைன், மந்தாகினி கோஸ்வாமி, ஆஞ்சலின் கான்கேம்பம், பீட்டர் வோங், ஜோயான் சாங் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இயக்கம் – மிலிண்ட் ராவ், எழுத்து – சித்தார்த், மிலிண்ட் ராவ், ஒளிப்பதிவு –  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை – கிரீஷ், பாடல்கள் – முத்தமிழ், கிரீஷ், படத் தொகுப்பு – லாரென்ஸ் கிஷோர், கலை – சிவசங்கர், சண்டை பயிற்சி – ஆர்.சக்தி சரவணன், பிராஜெக்ட் டிஸைனர் – ப்ரீத்திஷீல் சிங், ஒலி வடிவமைப்பு – விஷ்ணு கோவிந்த், ஸ்ரீசங்கர், விஜய் ரத்தினம், ரீ ரெக்கார்டிங் – விஷ்ணு கோவிந்த், ஏ.எம்.ரஹமத்துல்லா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, நிழற்படங்கள் – அசோக், கேஸ்டிங் இயக்குநர் – ஹனி ட்ரேஹான், தயாரிப்பு நிர்வாகம் – லினீஷ் பிரசாத், தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.ரகு, கிராபிக்ஸ் – ஆக்செல் மீடியா, கலரிஸ்ட் – சுரேஷ் ரவி, ஒப்பனை – ஷிவா மல்லேஸ்வர ராவ், ஆடை வடிவமைப்பு – அசோக்குமார், டிஸைன்ஸ் – ரெட் டாட் பவன்.

இந்த ஆண்டின் மிகச் சிறந்த பேய்ப் படம் இதுதான் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சியமைப்புகளுடனும், திரைக்கதையுடனும், ஒலியமைப்புடனும் வெளிவந்திருக்கிறது இந்தப் படம்.
இப்படம் ஒரு உண்மைச் சம்பவம் என்று துவக்கத்திலேயே எழுத்தில் காட்டுகிறார்கள். தொடர்ந்து கருப்பு வெள்ளையில் ஒரு கதையும் காட்டப்படுகிறது. சீன அடையாளத்துடன் இருக்கும் ஒரு பெண்ணுக்கும், அந்தப் பெண்ணின் குழந்தைக்கும் இடையிலான பாசமான காட்சிகள் திரையில் தெரிகின்றன.
இமாலய மலைப் பகுதியில் உள்ள சைலண்ட் வேலி என்ற இடம்தான் படத்தின் கதைக் களம். அங்கேயிருக்கும் ஒரு மருத்துவமனையில் மூளை நரம்பியல் மருத்துவராக பணியாற்றுகிறார் கிரீஷ் என்னும் சித்தார்த். அவருடைய மனைவி லட்சுமி என்னும் ஆண்ட்ரியா.
இவர்களது பக்கத்து வீட்டுக்கு குடி வருகிறார் அதுல் குல்கர்னி. அவர் அந்த மலைப்பகுதியின் மின் திட்டத்தை செயல்படுத்த வந்திருக்கும் பொறியாளர். முதல் மனைவிக்கு பிறந்த ஜென்னி என்னும் இளம் வயது பெண்ணுடனும், தன்னுடைய இரண்டாவது மனைவி, மற்றும் சிறு வயது மகள், தனது தந்தை ஆகியோருடன் அந்த வீட்டில் குடியேறுகிறார் அதுல் குல்கர்னி.
இரு குடும்பங்களும் அறிமுகமாகிக் கொள்ள.. ஜெனியின் பிறந்த நாள் பார்ட்டிக்காக சித்தார்த்தும், லட்சுமியும் அவர்களது வீட்டிற்குச் செல்கிறார்கள். அங்கே அமானுஷ்யமான சம்பவங்களையும், காட்சிகளையும் பார்க்கிறார் சித்தார்த்.
தொடர்ந்து ஜெனி வீட்டில் வெளிப்புறத்தில் இருக்கும் கிணற்றில் குதிப்பதைப் பார்த்து அவசரமாக ஓடிச் சென்று அவளைக் காப்பாற்றி மேலே கொண்டு வருகிறார். ஜெனி எதற்காக கிணற்றில் குதித்தாள் என்பதே யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் ஜெனிக்கு தேவையான அனைத்துவிதமான மருத்துவ உதவிகளையும் தான் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார் சித்தார்த்.
தொடர்ந்து ஜெனிக்கு வலிப்பு நோயும் வருகிறது. இதிலிருந்தும் ஜெனியை காப்பாற்றும் சித்தார்த் அவளை தனது மருத்துவமனையில் இருக்கும் மனநல மருத்துவரான சுரேஷிடம் அழைத்து வருகிறார். அங்கே அவளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
இடையில் ஜெனி சித்தார்த் மீது ஒருவித ஈர்ப்பில் இருக்கிறாள். இது தெரிந்து லட்சுமி சித்தார்த் மீது கோபப்படுகிறாள். ஆனாலும் ஜெனிக்கு சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதால் தான் அவளுடன் பழக வேண்டியிருக்கிறது என்று சமாதானம் சொல்கிறார் சித்தார்த்.
ஜெனி தன் வீட்டில் ஒரு உருவத்தைப் பார்த்து பயப்படுகிறாள். அந்த வீட்டில் ஏதோ ஒன்று இருப்பதை அதுல் குல்கர்னியும் உணர்கிறார். ஜெனி தனது தங்கையை அழைத்துக் கொண்டு மலைப்பகுதிக்குச் சென்று அங்கிருந்து குதிக்கப் பார்க்கிறாள். நல்லவேளையாக சித்தார்த்தும், அதுலும் அவளை பின் தொடர்ந்து சென்று குழந்தையையும், அவளையும் காப்பாற்றுகிறார்கள்.
மனோதத்துவ மருத்துவரான சுரேஷ் ஜெனியை பரிசோதிக்கிறார். சுரேஷ் விசாரிக்க, விசாரிக்க ஜெனி தன் வீட்டில் இருக்கும் லேண்ட்லைன் போனில் இருந்து தனது மொபைல் போனுக்கு அழைப்பு வருகிறது என்கிறாள். யாரோ தன்னைப் பின் தொடர்வதாகவும் சொல்கிறாள். கடைசியாக “வீட்டைவிட்டு போய் விடுங்கள்..” என்று யாரோ காதோரம் சொல்வதாகச் சொல்கிறாள் ஜெனி.
அதுலின் தந்தை ஒரு மாந்தரீகரை அழைத்து வந்து வீட்டில் இருக்கும் பேயை விரட்ட முயல்கிறார். இதனை நம்ப மறுக்கும் அதுல் அவரை அனுப்பி வைக்கிறார்.
டாக்டர் சுரேஷ் ஜெனியிடம் வந்து அவளது ஆழ்மனசுக்குள் இருக்கும் இன்னொரு ஜென்மத்தை வெளிக்கொணர முயற்சிக்கிறார். இந்த நேரத்தில்தான் பேய் பிடித்த தனது முகத்தைக் காட்டுகிறாள் ஜெனி. தன் அடி வயிற்றில் ரத்தம் வழிவதை போல பிடித்துக் கொண்டு சீன மொழியில் அழுகிறாள்.
அந்த வீட்டில் ஏதோ நடந்திருக்கிறது என்பதை ஊகித்த டாக்டர் சுரேஷ் அந்த ஊரின் கிறித்துவ பாதிரியாரிடம் சென்று இதனைச் சொல்லி அவரது உதவியை நாடுகிறார். பாதிரியாரும் வந்து ஜெனியிடம் பேச.. இப்போது பேய் உக்கிரம் கொண்டு அனைவரையும் தாக்கி வீசுகிறது.
அதோடு அந்தப் பேயின் பூர்வாசிரம கதையை சீன மொழியிலேயே சொல்கிறது அந்தப் பேய்.
1935-ம் வருடம். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் அந்தப் பகுதி இருந்திருக்கிறது. அப்போது அந்த வீட்டில் இரண்டு கொலைகளும், ஒரு தற்கொலையும் நடந்திருப்பது தெரிகிறது. இது பற்றி மேலும் விசாரிக்க நினைக்கிறார் டாக்டர் சுரேஷ்.
அன்றைக்கு நடந்த அந்தச் சம்பவத்திற்கு சாட்சியாய் இருந்த ஒரேயொரு சிறுமி இப்போது பக்கத்து கிராமத்தில் இருப்பதையறிந்து அங்கே சென்று அவரிடம் நடந்ததை கேட்கிறார்கள் சித்தார்த்தும், டாக்டர் சுரேஷும்.
தற்போது மூப்பெய்திய வயதில் இருக்கும் அந்த பாட்டி, அந்த பேய் பங்களாவில் நடந்த கதையைச் சொல்கிறார்.
என்னுடைய சிறு வயதில் அந்த சீனக்காரரின் வீட்டில் இருக்கும் செடியில் பூக்கும் பூக்களை பறிக்கச் செல்வேன். அப்படியொரு நாள் பூப்பறிக்க சென்றபோது அந்த சீனக்காரர் என்னை வீட்டுக்குள் தூக்கிச் சென்று கட்டிப் போட்டார்.
மேலும் என்னை கொலை செய்யவும் முயற்சித்தார். அப்போது அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். அவர்களுக்கு ஒரு மகளும் இருந்தார்.
அன்றைய தினம் சூரிய கிரகணம் என்பதால் அன்றைக்கு ஒரு பெண்ணை பலி கொடுத்தால் அந்த வீட்டில் அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என்று அந்த சீனக்காரர் தனது மனைவியிடம் சொல்கிறார்.
இதனை மறுக்கும் அந்த சீனரின் மனைவி ஒரு பெண்ணை பலி கொடுத்துவிட்டு நான் ஆண் மகனை பெற்றெடுக்க மாட்டேன் என்று சொல்லி தன் வயிற்றில் தானே கத்தியால் குத்திக் கொண்டு சாகிறாள்.
இதனால் கோபமடையும் சீனக்காரர் தனது மகளை படுகொலை செய்தார். கூடவே தானும் அந்தக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதான் அன்றைக்கு நடந்த கதை…” என்கிறார் அந்த மூதாட்டி.
இப்போது அந்த வீட்டில் மூன்று பேய்கள் நடமாடி வருவதாகவும், அதில் ஒரு பேய்தான் அதுல் குடும்பத்தினரை “வீட்டைவிட்டு வெளியே போங்கள்…” என்று சொல்கிறது. இன்னொரு பேய் அவர்களை வீட்டிலிருந்து வெளியேறுவதை தடுப்பதாகவும் டாக்டர் சுரேஷ் சித்தார்த்திடம் சொல்கிறார்.
இந்த நேரத்தில் பேயால் அடிபடும் ஆண்ட்ரியா மருத்துவனையில் அனுமதிக்கப்படுகிறார். கர்ப்பிணியான ஆண்ட்ரியாவை மருத்துவமனைக்கும் வந்து பேய்கள் மிரட்டுகின்றன. இதனால் அவற்றிடமிருந்து தப்பிக்க ஓடுகிறார் ஆண்ட்ரியா.
இந்த நேரத்தில்தான் கதையில் ஒரு மிகப் பெரிய டிவிஸ்ட்டாக சித்தார்த்தின் உடலுக்குள் அந்த சீனக்காரரின் பேய் நுழைந்திருப்பதாகவும் இப்போது அதுதான் சித்தார்த்தை தொடர்ச்சியாய் ஆட்டுவிப்பதாகவும் டாக்டர் சுரேஷ், ஆண்ட்ரியாவிடம் சொல்கிறார்.
அன்றைய தினம் சூரிய கிரகணம் வர.. அன்றைய இரவுக்குள் சித்தார்த் அந்த வீட்டில் யாரையாவது பலி கொடுக்க முனைவார் என்பதால் சித்தார்த்தை ஒரு அறைக்குள் வைத்து பூட்டி வைக்க நினைக்கிறார் ஆண்ட்ரியா.
ஆனால் தனக்குள் இருக்கும் பேயின் ஆக்ரோஷத்தால் வெளியில் வரும் சித்தார்த் அனைவரிடமும் மல்லுக் கட்டுகிறார். அவருக்குள் இருக்கும் பேய், அவரை பேயாய் ஆட்டி வைக்க.. ஜெனி மற்றும் அவளது குழந்தையைக் காப்பாற்றி ஒளித்து வைக்கிறார்கள் குடும்பத்தினர்.
இதற்கிடையில் கிரகணம் கொஞ்சம், கொஞ்சமாக மறையத் துவங்கிய நேரம், அதே வீட்டில் இருக்கும் சீனக்காரனின் மனைவி பேயும், மகள் பேயும் சீனக்காரனின் பேயுடன் சண்டையிட்டு அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றன. வீட்டினர் அனைவரும் மூச்சுவிட நேரம் கொடுக்க.. கிரகணமும் முழுமையாக மறைய.. பேய்கள் தங்களது ஆத்மாவை சாந்தியடைய வைத்துவிட்டு மேலுலகம் செல்கின்றன.
இந்தச் சம்பவம் நடந்து சில வருடங்கள் கழித்து இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் சந்திக்கிறார்கள். இப்போது சித்தார்த்-ஆண்ட்ரியாவின் மகன் எங்கே என்று அதுல் குல்கர்னி கேட்க.. கேமிராவின் ஓட்டத்தின் மாடியறையில் தனியே வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அவரது மகன் காட்டப்படுகிறான்.
சித்தார்த்தின் மகன் சீனக்காரரின் பேய் சித்தார்த்தின் உடலில் புகுந்திருந்த நேரத்தில் ஏற்பட்ட சம்போகத்தால் பிறந்தவன் என்பதால், அவன் இப்போது சீனக்கார பேயின் மகனாகவே இருப்பதாகவே காட்டப்படுகிறான்.
வழக்கமான பேய் படங்கள் என்றால் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் திகில், கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் நடிப்பு என்று ஒரு மசாலா கலவை போல கொடுப்பார்கள். ஆனால் இந்தப் படம் அந்த பார்முலாவை அடித்து நொறுக்கிவிட்டு ஒரு ஆங்கிலப் படத்துக்கு நிகராக உருவாக்கப்பட்டிருக்கிறது.
சித்தார்த் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிவரையிலும் சாதாரணமான ஒரு மருத்துவராகவும், பாசமிக்க கணவராகவும் வலம் வந்தவர், பேய் பிடித்தவுடன் காட்டும் நடிப்பில் பிரமிக்க வைத்திருக்கிறார்.
ஆண்ட்ரியாவுடன்  இவர் அடிக்கும் ரொமான்ஸ் லூட்டிகளை பார்த்தால் நிச்சயமாக கோடம்பாக்கத்து ஹீரோக்கள் பொறாமைப்பட்டே சாவார்கள். அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்..! படத்தின் முற்பாதியில் காட்சிக்கு காட்சி ஆண்ட்ரியாவுடன் முத்தக் காட்சியிலும், உறவுக் காட்சியிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் சித்தார்த்.
ஆண்ட்ரியாவும் அப்படியே..! இந்தக் கேரக்டருக்கு இன்றைய நிலைமையில் ஆண்ட்ரியாவை தவிர வேறு யாருமே நடிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் மட்டுமே நடிக்கக் கூடிய வகையிலான கேரக்டர் ஸ்கெட்ச். ரசிகர்களை ஏமாற்றாத அளவுக்கு ரொமான்ஸில் விளையாடியிருக்கிறார் ஆண்ட்ரியா.
கணவருடன் போடும் சண்டையிலும், ஜெனி டைனிங் டேபிளின் கீழாக காலை நுழைத்து சித்தார்த்தை காலை சுரண்டுவதை பார்த்துவிட்டு கோபத்துடன் சித்தார்த்தின் தலையைத் தட்டிவிட்டு அதை இட்ஸ் ஓகே என்று தாண்டிச் செல்வதும், இதையே பின்னாளில் கேள்வியாய் கேட்பதுமாய் ஒரு சராசரி மனைவிக்கான கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் ஆண்ட்ரியா. இறுதிக் காட்சியில் அத்தனை அற்புதமான இயக்கத்தில் ஆண்ட்ரியாவும் ஒரு அங்கமாய் இருக்கிறார் என்பது சிறப்பானது.
ஜெனியாய் நடித்திருக்கும் அனிஷாவின் நடிப்பும் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். பேய் அவரது உடம்பில் ஏறிக் கொண்டு செய்யும் அட்டூழியங்களும், அதற்காக அனிஷா படும்பாடும், அவருடைய நடிப்பும் அப்பப்பா என்று ரசிகர்களை சொல்ல வைத்திருக்கிறது.
தன் தலையை ஒரு சைடாக மாற்றுவதில் துவங்கி, நொடிப் பொழுதில் முகத்தில் பாவங்களை மாற்றி அடுத்த்து என்ன செய்யப் போகிறாரோ என்கிற பதைபதைப்பை உருவாக்கி படத்தின் மீதான ஈர்ப்பு முழுவதையும் தன் மீது சுமந்திருக்கிறார் அனிஷா விக்டர்,  மிகப் பெரிய பாராட்டுக்கள் இவருக்கு உரித்தாகட்டும்..!
‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ் மிக அமைதியான, மனநல மருத்துவராக நடித்திருக்கிறார். சித்தார்த்துதான் பேயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை யூகித்து அதனை ஒரு கேள்வியாகவும் சித்தார்த்திடம் கேட்கும்போதுதான் படத்தின் ஒட்டு மொத்த கலரும் மாறுகிறது. மாந்தரீகராக நடித்திருக்கும் அவினாஷின் அலட்டல் இல்லாத நடிப்பும் கவர்ந்திழுக்கிறது.
நட்சத்திரங்களின் நடிப்புக்கு இணையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஷ் கிருஷ்ணா. வீட்டுக்குள் நடக்கும் அக்கப்போர்கள், கிளைமாக்ஸ் காட்சிகள், ஜெனிக்குள் பேய் புகுந்து ஆடும் ஆட்டம், மலை உச்சியில் நடக்கும் காட்சிகள் என்று அனைத்திலும் ஒளிப்பதிவாளர் தனிக்காட்டு ராஜாவாக ஆட்டம் காட்டியிருக்கிறார். அற்புதம் என்றே சொல்லலாம். வீடு, மருத்துவமனை, மலை என பல்வேறு இடங்களிலும் ஒளிப்பதிவாளரின் உழைப்பைப் பார்க்க முடிகிறது.
பேய்ப் படங்களுக்கு மிக முக்கியமான தேவை அழுத்தமான பின்னணி இசை. அதனை இந்தப் படத்தில் அழகாக, அதே சமயம் பயமுறுத்தும்விதத்தில் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் கிரீஷ். முதல் பாடல் காட்சியிலேயே சித்தார்த்-ஆண்ட்ரியா காதல் டூ கல்யாணத்தைக் காட்டிவிடுவதால் படத்தின் நேரத்தை ரொம்பவே மிச்சம் செய்திருக்கிறார் இயக்குநர்.
இன்னொரு பக்கம் படத் தொகுப்பாளர்  லாரன்ஸ் கிஷோர் தனது திறமையால் படத்தினை கச்சிதமாக நறுக்கி எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டுவிடாமல் காப்பாற்றியிருக்கிறார். ஜெனி செய்யும் அட்டகாசம், சித்தார்த் செய்யும் குழப்பங்கள், கிளைமாக்ஸ் ஆட்டங்கள் அனைத்திலும் ஒரு சின்ன நெருடல்கூட இல்லாமல் அழகாக கத்திரி போட்டு தொகுத்து வழங்கியிருக்கிறார் படத் தொகுப்பாளர். அவரது சிறப்பான தொகுப்பும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
கதையென்னவோ கேட்டுக் கேட்டு சலித்துப் போன கதைதான். ஆனால் தொழில் நுட்ப ரீதியாகவும், இயக்கத்தினாலும் படத்தை ஹாலிவுட் ரேஞ்சில் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
நிறைய முத்தக் காட்சிகளும், பயப்படும்படியான காட்சிகளும் இருப்பதால் ‘ஏ’ சர்டிபிகேட்டை விரும்பிக் கேட்டு வாங்கி நேர்மையாகவே படத்தைத் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காக இந்தப் படக் குழுவினருக்கும் நமது பாராட்டுக்கள்..!
நேர்த்தியான திரைக்கதை, எளிமையான வசனங்கள், லாஜிக் எல்லை மீறாத காட்சியமைப்புகள், சிறப்பான நடிகர்கள், பயமுறுத்தும் இசை, புத்திசாலித்தனமான படத் தொகுப்பு, சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவின் நெருக்கமான காட்சிகள், ஜெனியின் அசர வைக்கும் பேய் நடிப்பு, எதிர்பார்க்காத பல கதைத் திருப்பங்கள் என்று ஒரு பேய்ப் படத்துக்குரிய அனைத்து அம்சங்களையும் தனக்குள் உள்ளடக்கிய படம் இது என்பதால் நிச்சயமாக அனைத்து வகையான சினிமா ரசிகர்களும் பார்த்தே தீர வேண்டிய கட்டாயத்தை இந்தப் படம் பெற்றிருக்கிறது.
பணமில்லை என்று சொல்லி சின்ன தியேட்டர்களில் பார்க்காமல் இந்த ஒரு படத்தையாவது, இதன் தன்மை கருதி சிறந்த ஒலி, ஒளியமைப்பு கொண்ட தியேட்டர்களில் சென்று பாருங்கள்.. ஒரு புதிய அனுபவத்தை நிச்சயமாக பெறுவீர்கள்..!
இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

0 comments: