தீரன் அதிகாரம் ஒன்று - சினிமா விமர்சனம்

20-11-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
மேலும் மனோபாலா, சத்யன், போஸ் வெங்கட், வர்கீஸ் மேத்யூ, ரோஹித் பதக், நர சீனிவாஸ், அபிமன்யு சிங், சுரேந்தர் தாக்கூர், பிரயாஸ் மான், கிஷோர் கண்டம், ஜமால் கான், ஸ்கேர்லெட் மெல்லிஸ் வில்சன், கல்யாணி நடராஜன், சோனியா போஸ், பிரவீணா, அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – ஹெச்.வினோத், இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – சத்யன் சூரியன், பாடல்கள் – தாமரை, விவேக், ராஜு முருகன், உமா தேவி, உதய்குமார், செளந்தர்ராஜன், படத் தொகுப்பு – டி.சிவா நந்தீஸ்வரன், தயாரிப்பு வடிவம் – கே.கதிர், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், உடை வடிவமைப்பு – பெருமாள் செல்வம், ஒலி வடிவமைப்பு – எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன், சின்க் சினிமா, நடனம் – பிருந்தா, ஒப்பனை – முருகன், உடை அலங்காரம் – பூர்ணிமா ராமசாமி, நீரஜா கோனா, ஸ்டில்ஸ் – சுரேந்தர், தயாரிப்பு நிர்வாகம் – அரவிந்த்ராஜ் பாஸ்கரன், தயாரிப்பு மேனேஜர் – எஸ்.எம்.சிராஜூதின், ராஜாராமன், தயாரிப்பு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு.
2015-ம் ஆண்டின் சூப்பர் ஹிட் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தின் இயக்குநரான ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவருக்கு இரண்டாவது படம்.

1995-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டுவரையிலுமான காலக்கட்டத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தனது முதல் படமான ‘சதுரங்க வேட்டை’யில் சில புத்திசாலி கோட், சூட் திருடர்கள் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொன்ன இயக்குநர் வினோத், தனது அடுத்த படமான இந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் கொள்ளையர்களை எப்படியெல்லாம் புலனாய்வு செய்து பிடிக்கலாம் என்பதைச் சொல்லியிருக்கிறார்.
காலமான போலீஸ் அதிகாரியின் மகனான தீரன் திருமாறன் என்னும் கார்த்தி டி.எஸ்.பி. ரேன்க் அதிகாரியாகத் தேர்வு பெற்று, பயிற்சியும் பெற்று வேலையில் சேர்கிறார்.
இடையில் தனது வீட்டுக்கு எதிர்வீட்டில் இருக்கும் ப்ரியா என்னும் பிளஸ் டூ பெயில் ஆனால் சிறந்த பெயிண்ட்டரான ரகுல் ப்ரீத்தியிடம் காதல் வயப்பட… அது கல்யாணத்தில் முடிகிறது.
கார்த்தி துடிப்பான இளைஞராகவும், நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாலும் மேலதிகாரிகளால் அடிக்கடி ஊர்விட்டு ஊர் டிரான்ஸ்பர் ஆகிக் கொண்டேயிருக்கிறார். கடைசியாக இப்போது வட மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி பகுதிக்கு டிரான்ஸ்பராகி வந்து சேர்கிறார்.
அதே நேரம் அங்கே ஒரு கொலை, கொள்ளைச் சம்பவம். ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்காட்டுக்குள் இருக்கும் வீட்டில் நடந்திருக்கிறது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே பல கொலை, கொள்ளைகள் இதே பாணியில், இதே பகுதியில் நடந்திருக்கிறது என்றும், அப்போது கொலையாளிகள் பற்றி ஒரு சின்ன க்ளூகூட கிடைக்காததால் அவைகளின் விசாரணை மேலும் நகரவில்லை என்பதையும் அறிகிறார் கார்த்தி.
இப்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்திருப்பது கொலையாளிகள் பயன்படுத்திய பான்பராக் பாக்கெட், ஒரு செருப்பு, ஒரேயொரு துப்பாக்கி குண்டு, கை ரேகை. இவைகளை வைத்துதான் விசாரிக்க வேண்டிய நிலைமை.
இது பற்றி மேலும், மேலும் விசாரிக்கிறார் கார்த்தி. உயரதிகாரிகளின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்கிறார். கொலை செய்தவர்கள் பயன்படுத்தியிருக்கும் ஆயுதத்தைக் கவனித்தால், நிச்சயம் இது வட மாநில கொலையாளிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று கார்த்தி நினைக்கிறார்.
“இது பற்றி மேலும் விசாரிக்க வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டும்…” என்று போலீஸ் துறையின் மேலிடத்தில் அனுமதி கேட்கிறார் கார்த்தி. அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும்போது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. இதே பாணியில் அவரது வீட்டில் படுகொலை செய்யப்படுகிறார். இதையடுத்து முதலமைச்சரே நேரில் வந்து விசாரிக்கிறார். வட இந்திய கொலைகாரர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதை அறிந்து துணிந்து நடவடிக்கை எடுக்கும்படி சொல்கிறார் முதலமைச்சர்.
விசாரணையைத் துவக்கிய நிலையிலேயே அடுத்தத் தாக்குதலாக இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டின் வீட்டிலேயே கொலையும், கொள்ளையும் நடக்கிறது. இந்தத் தாக்குதலில் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டின் மனைவி பரிதாபமாக உயிரிழக்கிறார். இதனைத் தடுக்கப் போன கார்த்தியின் மனைவி ராகுலின் தலையில் அடிபட்டு அவர் கோமாவில் ஆழ்கிறார்.
இந்தச் சோகத்தையும் தாங்கிய கார்த்திக்கு கொலையாளிகளை பிடித்தே தீர வேண்டும் என்ற வெறியே வருகிறது.
வட மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களின் எல்லை பகுதியான ஆரவல்லி மலைப் பகுதியில் வசிக்கும் பவேரியர் என்னும் கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருக்கும் ஒரு இனத்தவர்தான் இந்தப் படுபாதகச் செயலைச் செய்கிறார்கள் என்பதையறியும் கார்த்தி, அவர்களைத் தேடி பிடிக்க நினைக்கிறார். இதற்காக போலீஸ் உயரதிகாரிகளின் அனுமதியோடு கார்த்தி தலைமையில் ஒரு டீம் வட மாநிலங்களுக்கு கிளம்புகிறது.
அவர்களில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த கை ரேகையை வைத்து நாடு முழுவதிலும் இருக்கும் சிறைச்சாலைகளின் பதிவேடுகளில் இருக்கும் கை ரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
அனைத்து மாநிலங்களிலும் அலைந்து, திரிந்து பார்த்தும், ‘எங்குமே ஒத்துப் போகவில்லை’ என்றிருக்கும் நிலையில் பஞ்சாப்பில் அம்பாலா சிறை பதிவேட்டில் இருந்த ஒரு கைரேகை ஒத்துப் போகிறது. இந்த ரேகைக்குச் சொந்தக்காரன் பனேசிங் பவேரியன் என்பதையறியும் கார்த்தி அவனைத் தேடி அவனது ஊருக்கே போகிறார்.
லோக்கல் போஸீலின் உதவியோடு அந்த ஊருக்குள் போனாலும் இவர்கள் உயிர் தப்பிப்பதே பெரிய விஷயமாகி திரும்பி வருகிறார்கள். ஆனாலும், இந்தக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளனை திட்டம் போட்டுத் தூக்குகிறது கார்த்தி தலைமையிலான போலீஸ் படை. அவனை சென்னைக்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள்.
இதன் பின்பு பனேசிங் பவேரியனை லோக்கலில் துப்புக் கொடுக்கும் ஆளின் மூலமாக கஷ்டப்பட்டு பிடித்து, சென்னைக்கு கொண்டு வருகிறார்கள். இவர்களை விசாரித்ததில் செகந்திராபாத் ஜெயிலில் இவர்கள் மூன்றாண்டு காலம் சிறைபட்டுக் கிடந்தது தெரிய வர..
உடனடியாக செகந்திராபாத் ஜெயிலை தொடர்பு கொண்டு, அவர்கள் மூலமாக இந்தக் கொலைகார கூட்டாளிகள் அனைவரின் பெயர்களும், புகைப்படங்களும் கார்த்திக்கு கிடைக்கிறது. இதை வைத்து இந்தக் கூட்டத்தைத் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார் கார்த்தி.
இந்தக் கூட்டத்தின் தலைவான ஓமா என்பவனை பிடித்தால்தான் இந்த வழக்கு நிறைவு பெறும் என்பதால் தனது சிறப்பு புலனாய்வுக் குழுவுடன் திரும்பவும் வட மாநிலங்களுக்குச்  செல்கிறார் கார்த்தி.  ஓமாவையும், அவனது கூட்டாளிகளையும் கார்த்தி எப்படி பிடித்தார் என்பதுதான் இதற்குப் பின்னான சுவையான திரைக்கதை.
தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவின் எல்லையோரம் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பர்கூர், திருவள்ளூர், திருப்பெரும்புதூர், வாலாஜாபாத், நாட்ராம்பள்ளி, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில்தான் இந்த பவேரியர் கும்பல் அதிகமாக அழிச்சாட்டியம் செய்து வந்திருக்கிறது.
2005-ம் ஆண்டில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சருமான கே.சுதர்சனத்தின் வீட்டில் கொள்ளையடிக்கப் போய் அவரையே படுகொலை செய்தார்கள் பவேரியர்கள். இதன் பின்புதான் மாநில காவல்துறை பெரிய அளவுக்கு ரியாக்ட்  செய்து இவர்களைக் கைது செய்ய தனிப்படையை அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஜாங்கிட்டின் தலைமையில் அமைத்தது..! 
தற்போது போலீஸ் டி.ஜி.பி.யாக இருக்கும் ஜாங்கட்டின் தலைமையில் கீழ் ஒரு டீம் ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களுக்குச் சென்று கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மிகவும் கஷ்டப்பட்டு இந்தக் கும்பலை கண்டுபிடித்துக் கொண்டு வந்தது.
இந்தக் கொலைகார குழுவில் இருந்த 13 பேரில் இரண்டு பேர் மீரட் நகரில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மீதமிருந்தவர்களில் இரண்டு பெண்கள் உட்பட அனைவருமே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.
இதில் கூட்டத்தின் தலைவனான ஓமாவுக்கும், அடுத்தத் தலைவனாக இருந்த பனேசிங்கிற்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனை சென்னை உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் ஓமா சிறையிலேயே உடல்நலக் குறைவால் இறந்தவிட, மற்ற அனைவருமே இன்னமும் தமிழகத்தின் சிறைகளில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். 
இத்திரைப்படம் வெறுமனே ஒரு கொலை, கொள்ளை, போலீஸ் – திருடன் விளையாட்டு, பிடித்தது, கோர்ட், தண்டனை என்று சொல்லவில்லை. மாறாக இந்தக் கொள்ளையர்களின் பூர்வீகம், அவர்களது வரலாற்றையும் சேர்த்தே சொல்லியிருப்பதால் இத்திரைப்படம் தமிழ்ச் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவெடுத்திருக்கிறது.
‘பவேரியர்கள்’ என்ற இனத்தவர்கள் வட இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் வாழ்ந்தவர்கள். சிறு, சிறு குழுக்களாக ஆங்காங்கே இருந்தவர்கள். அப்போதைய ராஜபுத்திரர் ஆட்சியின் கீழ் வாழ்ந்தவர்கள்.
கி.பி. 16-ம் நூற்றாண்டில் முகலாயர்களுக்கும், ராஜபுத்திரர்களுக்கும் இடையில் போர் மூண்டது. இதில் பவேரியர்கள் ராஜபுத்திர வீரர்களுக்கு உதவி செய்தனர். ஆனால் அந்தப் போரில் ராஜபுத்திரர் படை தோல்வியடைந்து, முகலாயப் படை வெற்றி பெற்றிருக்கிறது.
அந்தப் போரின் துவக்கத்தின்போது ராஜபுத்திர வீரர்களின் குல தெய்வமான பெளலி அம்மனுக்கு வேண்டுதல் நிகழ்வும் நடந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியின்போது பவேரியர்களால் பலி கொடுக்கப்பட்ட பசு மாட்டின் ரத்தம், பெளலி அம்மன் சிலை மீது பட்டதுதான் தங்களது தோல்விக்குக் காரணம் என்று அந்த ராஜபுத்திர ராஜ பரம்பரையினர் கருதியிருக்கின்றனர்.
அதனால் அப்போதுவரையிலும் தங்களது குடிமக்களாக அங்கீகரித்திருந்த பவேரியர்கள் மீது, ராஜபுத்திர ராஜாக்கள் கோபம் கொண்டனர். “இனிமேல் நீங்கள் எங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கக் கூடாது…” என்று பவேரியர்களை விரட்டத் துவங்கினர் ராஜபுத்திர ராஜாக்கள்.
இதனால் ராஜ்ஜியம்விட்டு ராஜ்ஜியம் நகர்ந்த பவேரியர்கள் உணவுக்காகவும், உடைக்காகவும், தங்குமிடத்திற்காகவும் நிறையவே சிரமப்பட்டுள்ளார்கள். இந்த நேரத்தில் ஆடு, மாடு மேய்த்து பிழைத்து வந்த அவர்களால், ஒரு கட்டத்திற்கு மேல் வாழ்க்கைச் சூழலை தொடர முடியாததால், வழிப்பறியில் இறங்கியிருக்கிறார்கள்.
இந்த வழிப்பறி துவக்கம்தான் பவேரியர் இனத்தவரை பரம்பரை, பரம்பரையாக கொள்ளையடிக்கும் இனத்தவராக உருமாற்றியிருக்கிறது. கொள்ளையடிப்பது அப்படியே மேலே போய், கொலை செய்வதிலும் வந்து நின்றிருக்கிறது. இந்தக் குழுவினர் சமீப காலமாக ஹரியானாவின் பல்வல் மாவட்டத்திலும் ராஜஸ்தானின் பரத்பூரிலும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
ஆனால், இதில் இந்த பவேரியர்கள் மட்டுமல்லாது இந்தியாவின் மத்தியப் பகுதியில் வசித்து வந்த பாரதீஸ் இனத்தவர், பஞ்சாப், ஹரியானா, பீகார் பகுதிகளில் வசித்து வந்த ஷேக் பங்களாஸ் இனத்தவர்,  மத்திய மற்றும் வடக்கு இந்தியாவில் வாழ்ந்த சான்சிஸ் இனத்தவர், மத்திய இந்தியாவில் வாழ்ந்த கஞ்சர்ஸ் இனத்தவர், மத்திய இந்தியாவில் வாழ்ந்த சபேராஸ் போன்ற இனத்தவர்களும் இதே போன்று கொலை, கொள்ளைகளை செய்து வருவதையே தொழிலாக செய்து வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ஒரு குலத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.
இந்தக் கொலை, கொள்ளைக் கூட்டத்தை இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் ‘தக்கிகள்’ என்றே குறிப்பிட்டுள்ளனர். முகலாய வம்சத்திற்கு பின்பு 1800-களில் வட இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பிரிட்டிஷாருக்கு, இந்த கொலைகார கும்பல்தான் பெரும் தலைவலியாக இருந்து வந்துள்ளனர்.
நாடோடிகளை போல இடம் விட்டு இடம் ஓடிக் கொண்டேயிருந்த இவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க முடியாமல் தவித்திருக்கிறது பிரிட்டிஷ் அரசு. இவர்களின் இச்செயலுக்கு காரணங்களைக் கண்டு பிடிக்க முனைந்த பிரிட்டிஷ் அரசு, இவர்களின் குலத் தொழிலே இதுதான் என்பதையும், பரம்பரை பரம்பரையாக இவர்கள் இதைத்தான் செய்து வருகிறார்கள் என்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறது.
இதனால் இவர்களை ஒடுக்குவதற்காகவே 1871-ல் குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தது அன்றைய ஆங்கிலேய அரசு. வட இந்தியாவில் மட்டுமல்ல.. வங்காளத்திலும் இதே போன்ற கொலை, கொள்ளை குழுக்கள் இருந்ததையொட்டி இந்தக் குற்றப் பரம்பரைச் சட்டம், வங்க மாகாணத்திலும் 1876-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது,
கடைசியாக 1911-ம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தொடர் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவதாகச் சொல்லி பல சாதிகளின் பெயர்களைச் சொல்லி அந்தந்த சாதிகள் அனைவரையும் குற்றப் பரம்பரச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து சென்னை மாகாணத்திலும் அந்தச் சட்டத்தை அமல்படுத்தியது பிரிட்டிஷ் அரசு.
உண்மையாகவே இந்த பவேரியர் கொள்ளைக்காரர்கள் கொடூரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். கொள்ளையடித்தாலும் எதிர்ப்பவர்களை தயவு தாட்சண்யமே பார்க்காமல், இரக்கமே கொள்ளாமல் இரும்பு ராடுகளால் தாக்கிக் கொலை செய்தும், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தும் தப்பியோடியிருக்கிறார்கள்.
பகலில் பிச்சையெடுப்பது போலவும், தரை விரிப்புகளை விற்பனை செய்வதுபோலவும் அவர்களது ஆட்களை அனுப்பி வேவு பார்க்கும் அந்தக் குழுவினர், நடமாட்டமே இல்லாத வீடுகளாக பார்த்துதான் இந்தக் கொடூரத்தில் இறங்குகிறார்கள்.
இவர்களால் தமிழகத்தில் மட்டும் 24 கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவர்கள் 16 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் கை, கால்களை இழந்து ஊனமுற்றும் நடைப் பிணங்களாயினர். 2 கோடி ரூபாய்க்கும் மேலான பொருட்கள் கொள்ளை போயிருக்கின்றன. இவர்களைக் கண்டுபிடித்து ஜெயிலில் அடைத்த பிறகு இது போன்ற குற்றங்கள் தமிழகத்தில் அதிகமாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி அப்போதைய தமிழக போலீஸ் குழுவுக்குத் தலைமை வகித்த டி.ஜி.பி. ஜாங்கிட் இந்த பவேரிய கொள்ளையர்களை எப்படி ஸ்கெட்ச் போட்டு பிடித்தோம் என்பது பற்றி தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார்.
இப்படியொரு ரத்தமும், சதையுமான கதையை அந்த வீரியம் கெடாமலும், உண்மைத்தனம் மாறாமலும் படமாக எடுத்திருக்கும் இயக்குநர் வினோத்தை மிகவும் பாராட்டத்தான் வேண்டும்.
இதுவரையிலும் எந்தவொரு போலீஸ் படத்திலும் சொல்லப்படாத விஷயமாக நேரடி பயிற்சி டி.எஸ்.பி.யாக வேலைக்கு சேர்பவர்கள் எப்படி டிபார்ட்மெண்ட்டில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பதை விலாவாரியாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
முதல் ஒரு வாரம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தூப்பாக்கியை கையில் பிடித்தபடியே பாரா டூட்டி பார்க்க வேண்டும். அடுத்த வாரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் தபால்களை கையாள வேண்டும். அதற்கும் அடுத்த வாரம் புகார் மனு எழுதிப் பழக வேண்டும். அதற்கும் அடுத்த வாரம் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை கேட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்.. எப்படி எடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.. இப்படித்தான் தமிழக போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் நேரடி டி.எஸ்.பி.க்கள் தங்களது பணியைத் துவக்குகிறார்கள் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!
கொஞ்சமும் போராடிக்காத வகையில் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். எந்தவொரு ஷாட்டும் 2 நிமிடங்களுக்கு மேல் இல்லை. பரபரவென ஓடிக் கொண்டேயிருப்பது போல காட்சிகள் தொடர்ச்சியாக பறந்து கொண்டேயிருக்கின்றன. காட்சிகளின் தன்மையில் அதிகமாக உண்மைத்தன்மை இருப்பது போல வைத்திருப்பதுதான், படம் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்தியிருக்கிறது.
ராஜஸ்தானில் போலீஸ் எஸ்.பி.யை பார்க்க காத்திருக்கும் நேரத்தில் தான் ஒரு எஸ்.பி. என்று தெரிந்தும் ஸ்டூலில் அமந்திருக்கும் அந்த மாநில போலீஸ் கான்ஸ்டபிளின் செயலைப் பார்த்து குறை சொல்லும் போஸ் வெங்கட்டிடம் “தமிழ்நாடு மாதிரியில்ல. இங்க இவங்களுக்கு போலீஸ் யூனியன்லாம் இருக்கு. இங்க இப்படித்தான்…” என்று சொல்லும் கார்த்தியின் வசனமே இதற்கு சாட்சி.
இதேபோல் “வெளி மாநில லாரிகளை 100 ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு தமிழக போலீஸார் அனுமதித்துவிடுவார்கள்” என்று கொள்ளையர்கள் சொல்வதையும் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்தியா முழுவதுமே லஞ்சமும், ஊழலும் கேன்சரை போல பரவியிருப்பதை படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். பவேரியர்கள் கொடுக்கும் தங்க நகைகளுக்காக அவர்களுக்கு உதவிகளை செய்யும் அந்த மாநில லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர், மேலதிகாரிகள், அரசு அதிகாரிகள், வக்கீல்கள் என்று பலரையும் தோலுரித்திருக்கிறார் இயக்குநர்.
போஸ் வெங்கட்டின் வீட்டில் கொள்ளையர்கள் நுழையும் தருணத்தில் அவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கும் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளும், இடைவேளைக்கு முன்னான இந்த அரை மணி நேர பரபரப்பில் தியேட்டரே அமைதி காக்கிறது.
இதே போன்ற பரபரப்புதான் ஓமாவை கண்டறிய முனையும் தருணமும், அந்த நள்ளிரவில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையும்..! ஓநாய் வேட்டையை நினைவுபடுத்தும் அவர்களின் போர்த் தந்திரமும், அதை முறியடிக்க கார்த்தி செய்யும் சின்ன தந்திரமும் அந்த நேரத்திலும் ரசனையானது.
முதல் முறையாக ஊருக்குள் போய் அவர்களைப் பிடிக்க நினைத்து அது தோல்வியடைந்து கடும் சண்டையில் வெளியில் வரும் காட்சியில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர்கள் அனைவருமே கடுமையாக போட்டி போட்டிருக்கிறார்கள். அற்புதமான சண்டை களம் அது.
இதேபோல் பேருந்தில் பயணிக்கும் பனேசிங் பவேரியனை பிடிக்க கார்த்தி போடும் திட்டமும் அந்த சேஸிங்கும் அபாரம்.. அந்த அளவுக்கு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்துவிட்டார் இயக்குநர். அற்புதமான இயக்கம்..!
நடிகர் கார்த்திக்கு இது நிச்சயமாக பெயர் சொல்லும் படம்தான். ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மெட்ராஸ்’, ‘காஷ்மோரா’வுக்கு பின்பு அவருடைய நடிப்புக்கென்றே சொல்லி வைத்தாற்போல் கிடைத்திருக்கிறது இந்த ‘தீரன்’ வேடம்.
காதல் போர்ஷன்களில் வழக்கமான காதலனாகவும் இல்லாமல் ஒரு மெச்சூரிட்டியான போலீஸ் அதிகாரியின் காதல் கதை என்பதோடு அளவாக வைத்திருப்பதால் கார்த்தியை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.
இதே கார்த்திதான் உயரதிகாரிகளிடத்தில் கோபமாக பேசும்போதும், குற்றவாளிகளை பிடித்தே தீர வேண்டும் என்று பதைபதைப்புடன் ஓடுவதும், அலைவதுமாக எஸ்.பி. ‘தீரனை’ நம் கண் முன்னே கொண்டு வந்துவிட்டார்.
இவர் மட்டுமல்ல.. அந்த டீமில் இருந்த அனைவரையுமே சூப்பர்மேன் அளவுக்குக் காட்டாமல் அவர்களும் அடி வாங்குவது போலவும், வெளிமாநில சீதோஷ்ண நிலை தாங்காமல் சிரமத்தில் கஷ்டப்படுவது போலவும் காண்பித்து எத்தனை துயர்களைத் தாங்கி இவர்கள் குற்றவாளிகளை பிடித்திருக்கிறார்கள் என்கிற சிம்பதியை உருவாக்குவதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர்.
ராகுல் பிரீத் சீங் மைதா மாவு கணக்காக கொள்ளை அழகில் ஜொலிக்கிறார். அவரது அழகை அங்குலம் அங்குலமாக தானும் ரசித்து, நாமும் ரசிக்க… அதே ரசனையோடு படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தின் காதல் போர்ஷன்களை மட்டும் தனியே எடுத்தால் இன்னொரு சினிமாவாக உருவாக்கலாம். அந்த அளவுக்கு மிக அழகாக நரேஷன் செய்திருக்கிறார் இயக்குநர் வினோத்.
இவருடைய அறிமுகக் காட்சியே ரசனையானது. இவருக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் காட்சிகளும், “அப்பாகிட்ட சொல்லிரவா…” என்று அவர் மிரட்டுவதும், மனோபாலாவை கார்த்தி சமாளிப்பதும் படம் எப்படிப்பட்டது என்பதை யூகிக்கவே முடியாத அளவுக்கு ரசிகனை தள்ளியிருந்தது.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் போஸ் வெங்கட்டுக்கு ‘கவண்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பெயர் சொல்லும் படம். மனைவியை இழந்த பின்பு அவருடைய பிள்ளைகளுக்காக அவரைக் காப்பாற்ற நினைக்கும் கார்த்தியிடம், கார்த்திக்கு தான் ஒரு பிரச்சனையாக இருக்க விரும்பவில்லை என்று போஸ் வெங்கட் சொல்லும் காட்சியிலும் ஒரு போலீஸ்காரனின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை பட்டவர்த்தனமாய் காட்டியிருக்கிறார். வெல்டன் ஸார்..!
ஓமாவாக நடித்திருக்கும் அபிமன்யூ சிங்கின் வில்லத்தனமும், பனேசிங் பவேரியனாக நடித்திருக்கும் ரோஹித் பதக்கின் வட இந்திய முகம் காட்டும் கொலைத் தாண்டவமும், வில்லத்தனத்தை உயர்த்தியிருக்கின்றன.
அந்த ராஜஸ்தானத்து பாலைவனத்தில் எப்படித்தான் இத்தனை கடும் வெயிலையும் தாண்டி படமெடுத்தார்களோ தெரியவில்லை. இவர்கள் பட்ட கஷ்டம்.. உழைத்த உழைப்பு… அத்தனையும் முதல் தரமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், சண்டை பயிற்சியாளர், இசையமைப்பாளர்.. என்று நான்கு முக்கிய படைப்பாளிகளும் தங்களது பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ராஜஸ்தான் பாலைவனப் பகுதிகள், செங்கல் உதிர்ந்து போயிருக்கும் வீடுகள், ஆரவல்லி, சூரவல்லி மலைத் தொடர்கள், ஐந்து மாநில எல்லைகள் சந்திக்கும் இடங்கள்.. பேருந்து சேஸிங் காட்சிகள்.. போஸ் வெங்கட் வீட்டில் நடக்கும் கொலைச் சம்பவம், படுகொலைகள் நடக்கும் காட்சிகள் என்று அத்தனைக்கும் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு இயக்குநருக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.
காதல் காட்சிகளில் மிக, மிக அதிகமான குளோஸப்புகளில் கார்த்தியையும், ராகுலையும் பார்க்க பார்க்க அழகாக இருக்கிறது. திகட்ட, திகட்ட காதலை படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் பிரம்மாண்டம் என்பதே காட்சிகளை எடுத்திருப்பதில்தான் என்பதால் அதற்கேற்றாற்போன்று பின்னணி இசையை அமைத்திருக்கிறார் ஜிப்ரான். ‘செவத்த புள்ள’ பாடலும், ‘டிங்கா டிங்கா’ பாடலும் ஹிட்டடித்திருக்கின்றன. இதில் ‘டிங்கா டிங்கா’ பாடல் தேவையே இல்லாதது. அதை நீக்கியிருந்தால் படம் இன்னமும் கிரிப்பாகவே இருந்திருக்கும். மீதமான பாடல்கள் சின்னச் சின்ன அளவோடு நிறுத்தப்பட்டு சில காட்சிகளோடு நகர்த்தப்பட்டிருப்பதால் படத்தை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.
படுகொலைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றவாளிகள் அவர்கள்தான் என்று இனங்காணப்பட்டிருக்கிறார்கள். இதற்காக போலீஸ் விசாரணை எப்படியிருக்கும் என்பதை தயக்கமே இல்லாமல் கார்த்தியின் மூலமாக காட்டியிருப்பது.. பவேரியர்களின் ஒருங்கிணைப்பாளரை போலீஸ் பாணியில் புரட்டியெடுப்பது.. என்கவுண்ட்டரை ஆதரிப்பதுபோல காட்சிகளை வைத்திருப்பது.. இதெல்லாம் நேர்மையான செயல் அல்ல என்றாலும், படத்தின் துவக்கத்திலேயே ரசிகர்களை ‘ஐயோ பாவம்’ என்று சொல்ல வைத்துவிட்டதால் இதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஆனாலும் இது தவறுதான்.
கொள்ளையர்களின் வன்முறையைவிடவும் போலீஸாரின் வன்முறைதான் மிகப் பெரிய கொடூரம். இதைத்தான் ‘விசாரணை’ திரைப்படம் தெளிவுபடுத்தியது. ஆனால் இந்தப் படம் நிஜத்தில் நடந்த விஷயத்தை மேற்கோள்காட்டி எடுக்கப்பட்டுள்ளதால், இயக்குநரின் கருத்தாக இதை எடுத்துக் கொள்ளாமல், நடத்தியவர்களின் செயலாக எடுத்துக் கொள்வோம்.
காவல் துறையில் எவ்வளவுதான் நேர்மையாக உழைத்து, கடுமையாக பணியாற்றினாலும் ஆட்சி மாறி வேறு ஆட்சி வந்தால் தகுதியுள்ள அதிகாரிகளை தகுதியே இல்லாத இடத்திற்கும், பனிஷ்மெண்ட் ஏரியா போன்ற பகுதிகளுக்கும் தூக்கியடிப்பார்கள்.
அப்படித்தான் இந்தத் தீரனும் தனது மனைவியை இழந்த துக்கத்திலும் கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து தனது கடமையை சரியாகச் செய்து சாதனையாற்றியிருந்தாலும்..
அடுத்து வந்த ஆட்சியினர் கன்னியாகுமரியின் ஒரு மூலையில் இருக்கும் போக்குவரத்துக் கழகத்தின் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி.யாக அவரை இட மாற்றம் செய்திருப்பதைக் காட்டி ‘இதுதாண்டா அரசுகள்’ என்று பட்டவர்த்தனமாய் சொல்லியமைக்காக இயக்குநர் வினோத்துக்கு, ஒரு மிகப் பெரிய மலர்க் கொத்தை பரிசாக அளிக்கிறோம்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ அவசியம் பார்க்க வேண்டிய படம்தான். ஆனால் குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு..!

0 comments: