04-07-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்தை பெப்பி சினிமாஸ் சார்பில் சோபியா ஜெரோம், பெப்பிட்டா ஜெரோம் இருவரும் தயாரித்துள்ளனர்.
படத்தில் ஹீரோவாக அஸ்வின் ஜெரோம் அறிமுகமாகியிருக்கிறார். நாயகியாக வர்ஷா பொல்லப்பா நடித்திருக்கிறார்.
மேலும் ராஜூ சுந்தரம், பொன்வண்ணன், வி.டி.வி. கணேஷ், சந்தானபாரதி, அருண்ராஜா காமராஜ், மதுமிதா, மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை – அச்சு ராஜாமணி, படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, பாடல்கள் – கபிலன், மணி அமுதவன், சண்டை பயிற்சி – ராம்போ விமல், மக்கள் தொடர்பு – நிகில், நடனம் – பிருந்தா, புகைப்படம் – ஜி.ஆனந்த்குமார், உடை வடிவமைப்பு – பூர்த்தி பிரவின், தயாரிப்பு நிர்வாகம் – கே.குமார், இணை தயாரிப்பு – எஸ்.பிரபாகரன், எழுத்து, இயக்கம் – பிரசாந்த் ஜி.சேகர்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மிருகம் ஒளிந்திருக்கிறது. அது சமயம் பார்த்துக் காத்திருக்கிறது. அதற்கான வாய்ப்பை அந்த மனிதன் ஏற்படுத்திக் கொடுக்கும்போது, அந்த மிருகம் வெளிப்படும். பின்பு நடப்பவைக்கு அந்த மனிதன் பொறுப்பேற்க முடியாது என்பார்கள். இதுதான் இந்தப் படத்தின் அடிப்படை கரு.
ஹீரோ அஸ்வினும், ஹீரோயின் வர்ஷாவும் கல்லூரி காதலர்கள். இருவர் வீட்டிலும் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. வர்ஷாவின் வீட்டில் அவரை அமெரிக்காவிற்கு படிக்க வைக்க அனுப்புகிறார்கள். அப்படியே அங்கே இருக்கும் மாமா வீட்டில் தங்கி, மாமா பையனையே வர்ஷாவுக்கு கல்யாணமும் செய்து வைக்க நினைக்கிறார் வர்ஷாவின் அப்பா.
இதையறிந்த ஹீரோ அஸ்வின் விமான நிலையத்தில் இருந்து வர்ஷாவை கூட்டிக் கொண்டு எஸ்கேப்பாகுகிறார். தங்களுடைய நண்பியின் வீட்டில் தங்குகிறார்கள் இருவரும். நண்பியான மதுமிதாவின் மாமாவான வக்கீல் வி.டி.வி. கணேஷ் இவர்களுக்கு பதிவுத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்.
இரண்டு வீட்டாருக்கும் இது தெரிய வர கல்யாணத்தை தடுத்து நிறுத்த பெரும்பாடுபடுகிறார் வர்ஷாவின் அப்பா. ஆனால் அவர்கள் வருவதற்குள்ளாக பதிவுத் திருமணம் முடிந்துவிடுகிறது. இரண்டு பெற்றோர்களுமே காதலர்களுக்கு சாபம்விட்டுவிட்டு போகிறார்கள்.
தம்பதிகள் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டுமே என்று தேடும்போது நண்பன் ஒரு வீட்டை அடையாளம் காட்டுகிறான். ஒதுக்குப்புறமான அந்த வீட்டின் மாடியில் தங்கிக் கொள்கிறார்கள் புதுமணத் தம்பதிகள்.
இந்த நேரத்தில் அதே வீட்டில் கீழ்த்தளத்தில் அந்த ஊரின் மிகப் பெரிய தாதாவான ராஜூ சுந்தரத்தின் செட்டப்பும் வசித்து வருகிறார். ராஜூ சுந்தரத்திற்கும், ஹீரோவுக்கும் இடையே முன் விரோதம் உண்டு.
காதல் மயக்கத்தில் ஒரு நாள் இரவில் அஸ்வினும், வர்ஷாவும் பீச்சில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, ராஜூ சுந்தரத்தின் ஆட்கள் இவர்களிடம் வம்பு சண்டைக்கு வருகிறார்கள். வர்ஷாவை கேவலமாக கிண்டல் செய்கிறார்கள்.
இதனால் கோபப்படும் அஸ்வின் வர்ஷாவை வீட்டில் கொண்டுபோய்விட்டுவிட்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்து ராஜூ சுந்தரத்தின் ஆட்களை அடித்து உதைத்துவிட்டுப் போகிறார். அந்தக் களேபரத்தில் அஸ்வினின் கார் நம்பரை மட்டும் மனதில் வைத்துக் கொள்கிறார் ராஜூ சுந்தரம்.
கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் ராஜூ சுந்தரம். லோக்கல் மந்திரியான சந்தானபாரதியின் அடியாள் படையின் தளபதி என்பதால் போலீஸ் இவரை நெருங்காமல் இருக்கிறது.
லோக்கல் இன்ஸ்பெக்டர் ஒருவரை ராஜூ சுந்தரம் கொலை செய்ய இந்தத் தகவல் மந்திரிக்கு பாஸாகிறது. அவர் ராஜூ சுந்தரத்தை அழைத்து டோஸ்விடுகிறார். ஆனால் ராஜூ சுந்தரமோ மந்திரியையே பகைத்துக் கொள்ள முடிவெடுக்கிறார்.
இதனால் இத்தனை நாட்களாக ராஜூ சுந்தரத்தை விட்டுப் பிடித்த போலீஸுக்கு ராஜூ சுந்தரத்தை காலி செய்ய உத்தரவிடுகிறார் மந்திரி. போலீஸும் என்கவுண்ட்டர் செய்ய தயாராகிறது. இதையும் ராஜூ சுந்தரத்திற்கு போன் செய்து சொல்லும் மந்திரி, அவரை பத்திரமாக இருக்கும்படி எச்சரிக்கை செய்கிறார்.
இதனால் மறைந்திருக்க இடம் தேடிய ராஜூ சுந்தரம், அஸ்வின்-வர்ஷா தம்பதிகள் வாழ்ந்த அந்த வீட்டுக்கே வருகிறார்கள். வந்த நேரத்தில் அங்கேயிருந்த பெண்ணுக்கும், ராஜூ சுந்தரத்திற்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட இதனால் கோபம் கொண்ட ராஜூ, அந்தப் பெண்ணை கொலை செய்கிறார்.
இதனை மேலேயிருந்து வர்ஷா பார்த்துவிடுகிறார். அப்போதுதான் பெங்களூருக்கு சென்று திரும்பும் ஹீரோவும் கீழே வந்திருப்பது ராஜூ சுந்தரம் என்று தெரிந்து அங்கேயிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால் ஹீரோவின் கார் ராஜூ சுந்தரத்திற்கு இவர்கள் யார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.
அஸ்வினையும், வர்ஷாவையும் வன்முறையோடு கடத்துகிறார்கள் ராஜூ சுந்தரம் கோஷ்டியினர். இதனை மோப்பம் பிடித்த போலீஸும் ராஜூவை வலைவீசித் தேடுகிறது. ஒருவித சைக்கோவான ராஜூ சுந்தரம் இருவரையும் சித்ரவதை செய்கிறார்.
அவரிடமிருந்து காதல் தம்பதிகள் தப்பித்தார்களா..? போலீஸார் ராஜூ சுந்தரத்தை என்கவுண்ட்டர் செய்தார்களா என்பதுதான் மீதமான திரைக்கதை.
திருடன்-போலீஸ்-அப்பாவி இப்படி மூன்றுவித கேரக்டர்களையும் முன்னிறுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். அப்பாவிக்கும், திருடனுக்குமான விரோதம் எப்படி ஏற்படுகிறது என்பதையும், இதில் போலீஸ் அப்பாவியுடன் எப்படி லின்க் ஆகிறது என்பதையும் சிக்கலில்லாமல், லாஜில் எல்லை மீறல் இல்லாமல் இணைத்திருக்கிறார்கள். நன்று.
ஹீரோ அஸ்வினுக்கு இது முதல் படம் என்பதால் அவரால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இயக்குநர் இன்னும் கொஞ்சம் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தால் இவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்.
நடிப்பு, நடனம், சண்டை காட்சிகளில் சண்டையில்தான் ஹீரோ ஜொலிக்கிறார். ஆக்சன் ஹீரோவாக வருவதற்க தோதாத உடற்கட்டும், வேகமும் இவரிடம் இருக்கிறது. இதனை பயன்படுத்தி முன்னேறினால் இவருக்கு நலமாகத்தான் இருக்கும்.
ஹீரோயின் வர்ஷா ஏற்கெனவே 2 தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதால் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அலட்சியமாக நடிப்பைக் காண்பித்திருக்கிறார். கொலையைப் பார்த்து பயப்படுவது.. தப்பிக்க நினைப்பது.. கணவன் அடிபடுவதை பார்த்து கதறி அழுவது என்று இவரது நடிப்பில் பொய்யில்லை. அதே சமயம் மிகையும் இல்லை.
இதுவரையில் நடன இயக்குநராகவும், சாதாரண நடிகராகவும் வலம் வந்து கொண்டிருந்த ராஜூ சுந்தரம் முதல் முறையாக வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார். அதே தோற்றம்தான்.. ஆனால் வசன உச்சரிப்பும், மேனரிஸமும், உடல் மொழியும் கொஞ்சம் வில்லத்தனத்தைக் காட்டுகிறது.
ஓய்வு பெறப் போகும் நேரத்தில் ராஜூ சுந்தரத்தின் கதையை முடித்து அவருடைய பைலை குளோஸ் செய்துவிட்டுப் போக நினைக்கும் பொன்வண்ணன் தனது குணச்சித்திர நடிப்பை காண்பித்திருக்கிறார். நாயகியின் அப்பா பாய்ஸ் ராஜன், நாயகனின் அப்பா, அம்மா, போலீஸ் கமிஷனரான ராஜா என்று இருக்கின்ற கதாபாத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.
ஆனால் ஒட்டு மொத்தமாய் படத்தை மிக அழகாக காட்டியிருக்க வேண்டிய ஒளிப்பதிவு மிக, மிக மந்தமாக இருப்பதால் அனைத்துமே வீணாகிப் போய்விட்டது. இப்போதெல்லாம் இதைவிட பட்ஜெட் குறைவாக எடுக்கப்பட்டிருக்கும் படங்களில்கூட ஒளிப்பதிவு நன்றாக இருந்திருக்கும். இந்தப் படத்தில் மெல்லிய வெளிச்சத்திலேயே அனைத்தையும் படமாக்கியிருப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
ராஜூ சுந்தரம் சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும், வர்ஷா, அஸ்வினை கடத்தல் கும்பல் தாக்குகின்ற காட்சியையும் ஏனோ தானாவென்று படமாக்கியிருக்கிறார்கள். இதனால் அழுத்தமான “ஐயோ பாவம்” என்ற பீலிங் ரசிகர்களுக்கு வரவில்லை. கொல்லப்பட்ட உடலை எரிக்க பயன்படுத்தும் முறையைக்கூட எங்கோ அரையிருட்டில் இருந்து கொண்டு சொல்கிறார் ராஜூ சுந்தரம். அப்புறம் எப்படி அது மனதில் உட்காரும்..?
இசையில் மூன்று பாடல்கள் திரையில் ஒலித்தன. டூயட்டும், கல்லூரி பாட்டும் கேட்கும்படியிருந்தது. இடைவேளைக்கு முன்பு ஒருவித திரில்லர் டைப்பில் படம் நகர, நகர அடுத்தது என்ன என்று ஏங்க வைத்தது.. ஆனால் இடைவேளைக்கு பின்பு படத்தை நகர்த்துவதே பெரும்பாடாய் இருக்கிறது.
புதுமுகங்களை வரவேற்கலாம்தான். ஆனால் நல்லதொரு படைப்பில் இருந்திருந்தால் தைரியமாக மாலை போட்டு வரவேற்கலாம். ஆனால் இதில் அப்படியொன்றும் இல்லையே என்பதால்தான் தயக்கம். இருந்தும் ஹீரோ அஸ்வினை வரவேற்கிறோம். அடுத்தடுத்த படங்களில் அவர் தனது திறமையை வெளிக்காட்டட்டும்.
பெரிதும் வாழ்த்துகிறோம்.
|
Tweet |
0 comments:
Post a Comment