02-07-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பிரபல குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதி, இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.
இப்படத்தின் மூலம் தெலுங்கில் வளர்ந்து வரும் கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் தமிழில் அறிமுகமாகிறார். நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் கருணாகரன் படம் முழுக்க வருகிறார். பாண்டிராஜன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, யோக்ஜேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ‘அட்டக்கத்தி’ மற்றும் ‘குக்கூ’ படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.மதன் படத் தொகுப்பு செய்திருக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ர.இன்பசேகர். சில்வர் ஸ்க்ரின் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக சிவ ரமேஷ்குமார் தயாரித்துள்ளார்.
ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்த்தால் பெரிய கிடாரிஸ்ட்டாக வேண்டும் என்கிற கொள்கையில் இருப்பவர் ஹீரோ உமாபதி. அவருடைய தந்தையான பாண்டியராஜன், தன் மகன் உமாபதிக்கு ஒரு கிடாரை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த கிடாரிலேயே உமாபதியின் பெயர், முகவரி, போன் நம்பரையும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
உமாபதியின் நண்பன் ஒருவன் பெரிய தொழிலதிபரான ஆடுகளம் நரேனின் வீட்டில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறார். அன்றைய நாள் இரவில் அந்த நண்பனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக அவனது குடும்பத்தினர் போனில் தெரிவிக்கின்றனர். அப்போது அவன் டூட்டியில் இருப்பதால் சொல்லிவிட்டுப் போக முடியாதே என்று தவிக்கிறான்.
அப்போது உமாபதி அவனை பார்க்க வர.. உமாபதியை கொஞ்ச நேரத்துக்கு வாட்ச்மேன் வேலை பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போகிறான் நண்பன். அந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு கொள்ளை கூட்டம் அந்த வீட்டுக்குள் நுழைகிறது. அவர்களது தாக்குதலில் உமாபதி மயங்கி விழுகிறார்.
எழுந்து பார்த்தபோது விஷயம் அறிந்து குழம்புகிறார். நண்பனுக்கு போனை போட்டு வரச் சொல்கிறார். அவனும் வந்தவுடன் வீட்டுக்குள் சென்று பார்க்க அங்கே குடும்பத்தினர் அனைவருமே மயக்கம் போட்டு விழுந்து கிடக்கின்றனர்.
உமாபதியை காப்பாற்ற நினைக்கும் நண்பன் உமாபதியை ஓடும்படி சொல்ல.. உமாபதியும் எஸ்கேப்பாகுகிறார். போலீஸுக்கு நண்பன் போன் போட்டுச் சொல்ல.. வந்து பார்த்தவர்கள் சந்தேக கேஸில் நண்பனை பிடித்துச் செல்கிறார்கள்.
இந்த நேரத்தில்தான் தன்னுடைய கிடாரை அங்கேயே விட்டுவிட்டது உமாபதிக்கு தெரிய வர.. திரும்பிச் சென்று பார்க்கிறார். அது அங்கே இல்லை. அதில் முழு முகவரியும் இருப்பதால் தான் போலீஸில் அல்லது கொள்ளையர்களிடம் சிக்கிக் கொள்வோம் என்று பயப்படுகிறார் உமாபதி.
இதற்காக தனது நண்பன் கருணாகரனிடம் உதவி கேட்கிறார். கருணாகரனின் பில்டப்பால் சில இடங்களுக்கு வாலண்டியராக சென்று ரவுடிகளில் தனது கிடாரை கேட்டு கருணாகரனுக்கு தர்ம அடி வாங்கிக் கொடுக்கிறார் உமாபதி.
இந்த நேரத்தில் ஆடுகளம் நரேனின் மகளான ரேஷ்மா ரத்தோரை தெருவில் பார்த்தவுடன் லவ்வாகிறார் உமாபதி. அதே ரேஷ்மாவின் தாத்தாவுக்கு கிடார் கற்றுக் கொடுக்க ஒரு ஆள் வேண்டும் என்று தெரிந்தவுடன் வாலண்டியராக தானே சென்று ஆஜராகிறார் உமாபதி.
“வீட்டிற்குள் இருந்தால் காதலையும் வளர்க்கலாம்.. காணாமல் போன தனது கிடாரையும் மீட்டுவிடலாம்…” என்று பிளான் செய்கிறார் உமாபதி. இதெல்லாம் நடந்ததா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
ஹீரோ உமாபதி இந்தக் கதைக்குப் பொருத்தமான ஹீரோவாகத்தான் இருக்கிறார். ஆனால் தமிழ்ச் சினிமாவில் தாக்குப் பிடிக்க்க் கூடிய ஹீரோவாக வலம் வருவாரா என்பதை அவரது அடுத்தடுத்த படங்கள்தான் சொல்ல வேண்டும்.
நடனமும், காமெடிசென்ஸும், டயலாக் டெலிவரியும் அவரது அப்பாவின் ஜீனிலிருந்து கிடைத்த்து போலிருக்கிறது. சுலபமாக வந்திருக்கிறது உமாபதிக்கு. ஆனால் நடிப்பு..? சில இடங்களில் நாடகத் தன்மையுடனும், பல இடங்களில் செயற்கையாகவும் அமைந்திருக்கிறது. இது இயக்குநரின் தவறாகவும்கூட இருக்கலாம்.
ஹீரோயின் ரேஷ்மா ரத்தோருக்கு பெரிதாக வேலையில்லை. நடிப்புக்கும் ஸ்கோப் இல்லை. ஆனால் இவருக்கு சண்டை கலையும் தெரியும் என்பது தெரிய வரும் இடத்தில் அசத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் அழகு தெரிகிறது.. நடனக் காட்சிகளில் நளினம் புரிகிறது.. எல்லாம் இருந்தும் இவரும் ஒரு ஹீரோயின் அவ்வளவுதான் என்பதாகவே முடிந்துவிட்டது.
ஆடுகளம் நரேன் குழப்பமான ஒரு தொழிலபதிராக தனது நடிப்பைக் காட்டியிருக்கிறார். தனது நண்பர்கள்தான் தான் தேடும் குற்றவாளியா என்று குழம்பிப் போனவர்.. கடைசியில் அது தனது பி.ஏ. மனோபாலாதான் என்பதையறியும்போதுதான் தெளிவாகிறார்.
“நானும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி காமெடியனாவே இருக்கிறது..? ஏன் ஒரு காமெடியன் வில்லனாகக் கூடாதா..?” என்று கேட்டபடியே வில்லனாகியிருக்கும் மனோபாலாவுக்கு ஒரு ஷொட்டு.
சில காட்சிகள் மட்டுமே வரும் பாண்டியராஜனுக்கு பெரிய அளவுக்கான நடிப்புக்கான ஸ்கோப் இல்லை. ஆனால் ஹீரோவுடனேயே வலம் வந்திருக்கும் கருணாகரனும் கொஞ்சம் படத்தின் சுமையை சுமந்திருக்கிறார்.
தான் எப்போதே பில்டப்பாக விட்ட கதையை நம்பி தன்னிடம் உதவி கேட்டு வந்த நண்பனை ஏமாற்ற விரும்பாமல் நான்கு இடங்களுக்கு அழைத்துச் சென்று அனைவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டு நண்பனுக்காக தனது உடலைப் புண்ணாக்கிக் கொள்ளும் உத்தம நண்பனாக நடித்திருக்கிறார் கருணாகரன். படத்தை கொஞ்சமேனும் ரசிக்க வைத்தமைக்கு கருணாகரனுக்கு நமது நன்றிகள்..!
போலீஸ் இன்ஸ்பெக்டர் யோக்ஜேபிக்கு வேலையே இல்லை. வெயிட்டே இல்லாத கேரக்டரில் அழுத்தமே இல்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் குறையும் இல்லை. நிறையும் இல்லை. அவருடைய திறமை பாடல் காட்சிகளில் மட்டுமே தெரிகிறது. டி.இமானின் இசையில் அனைத்து பாடல்களுமே நெஞ்சைத் தொடும் ரகம். கூடவே பாடும் அளவுக்கு தெளிவாக பாடல் வரிகள் நம் காதைத் துளைக்கின்றன. இது ஒன்றுக்காகவே இசையமைப்பாளர் இமானை மனதாரப் பாராட்டுகிறோம்.
யுகபாரதியின் வைர வரிகளில் ‘டபுள் ஓகே’, ‘ஏண்டி நீ என்னை இப்படி ஆக்கின’, ‘அந்தப் புள்ள மனசை’, ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டேன்’ ஆகிய பாடல்கும், இவைகளை படமாக்கியவிதமும், தேடிப் பிடிக்கப்பட்ட லொகேஷன்களும் அசத்தல்..!
ஒரே வசனத்தை மூன்று தடவை சொல்வது.. அரதப் பழசான காட்சியமைப்பிற்கான வசனங்களை பேசுவது.. கொஞ்சம் நீளமான காட்சிகளைக் கொண்டது.. சப்பையான திரைக்கதை என்பதற்கேற்ற குற்றவாளியை கண்டறியும் திரைக்கதை என்று பலவீனமான விஷயங்கள் நிறையவே இந்தப் படத்தில் உண்டு.
இருந்தும் ஒட்டு மொத்தமாய் படத்தைப் பார்க்கும்போது ஒரு முழு நீள எண்ட்டர்டெயின்மெண்ட்டுக்கு உத்தரவாதம் தருகிறது. சில இடங்களில் விட்டுவிட்டு ஒலிக்கும் மெல்லிய நகைச்சுவை துணுக்குகளே படத்தை நகர்த்த உதவியிருக்கின்றன.
இயக்குநர் ர.இன்பசேகர் அடுத்தடுத்த படங்களில் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறோம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment