மீசைய முறுக்கு - சினிமா விமர்சனம்

23-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.
இதில் ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக ஆத்மிகா நடித்திருக்கிறார். மற்றும் விவேக், விஜயலட்சுமி, கஜராஜ், விக்னேஷ் காந்த், ம.கா.பா.ஆனந்த், மாளவிகா, சாரா, குகன், முத்து, ஆனந்த், ஹரிஹரன் கிருஷ்ணா, பென்னி, வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு – ஜான்சன், ஒப்பனை – செல்லத்துரை, உடைகள் – ராஜேந்திரன், கலை இயக்கம் – குருராஜ், ஸ்டில்ஸ் – வி.ராஜன், போஸ்டர் டிஸைன் – சிந்து கிராபிக்ஸ் பவன், ஒலிப்பதிவு – தபஸ் நாயக், விஷூவல் எபெக்ட்ஸ் – சனத், நடனம் – சிவா, ராக் சங்கர், ஒளிப்பதிவு – கீர்த்திவாசன், யு.கே.செந்தில்குமார், சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், படத் தொகுப்பு – பென்னி ஓலிவர், தயாரிப்பு நிர்வாகம் – அன்புராஜா, தயாரிப்பு – அவ்னி மூவிஸ், தயாரிப்பாளர் – சுந்தர்.சி. இசை, பாடல்கள், எழுத்து, இயக்கம் – ‘ஹிப்ஹாப்’ தமிழா.

ஹிப்ஹாப் தமிழா என்கிற பெயரில் தமிழ்ப் பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வெளியிட்டு தமிழகத்தில் முதன்முதலில் பெயர் பெற்ற ஆதி, தன்னுடைய வாழ்க்கைக் கதையை சில, பல உண்மைச் சம்பவங்கள் மற்றும் கொஞ்சம் கற்பனை கலந்து இந்தப் படத்தை உருவாக்கி, இயக்கியிருக்கிறார்.
இவருடைய ஆல்பத்தை கேட்டுத்தான் இயக்குநர் சுந்தர்.சி முதன்முதலாக ஆம்பள படத்தில் இவருக்கு இசையமைப்பாளர் அந்தஸ்தை கொடுத்தார். அப்போதே சுந்தர்.சி.யை கவர்ந்துவிட்ட ஆதியை தானே தனது சொந்த பேனரில் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைப்பேன் என்றார் சுந்தர்.சி. அதை இன்றைக்கு இந்தப் படத்தின் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய அவருக்கு நமது நன்றிகள்..!
வாழ்க்கைக் கதை என்று சொல்லிவிட்டதால் படத்தின் கதையைப் பற்றி பெரிதாக நாம் எதையும் சொல்லிவிட முடியாது. சாதாரண குடும்பத்தில் பிறந்து வளரும் ஆதிக்கு இளம் வயதிலேயே இசையில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசை. அவரது அப்பாவுக்கோ ஆதி நன்கு படித்து பெரிய வேலைக்கு போக வேண்டும் என்று ஆசை.
அடிதடிக்கு அஞ்சாத தம்பியுடன் பிறந்திருக்கும் ஆதிக்கு ஆதியில் இருந்தே அவரது தம்பிதான் துணை. இவர்களுடன் பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸில் படித்த ஆத்மிகா மீது அந்த வயதுக்கேற்ற குணத்துடன் காதல் வருகிறது.
காதலுக்குண்டான விஷயங்கள், லோக்கல் தெரு பசங்களின் எதிர்ப்பு இவற்றுக்கிடையே இந்த ஒரு தலைக் காதலும் வளர்ந்து வருகிறது. ஆதியும், அவரது நண்பர்களும் பிளஸ் டூ முடிக்கிறார்கள்.
வேலூர் வி.ஐ.டி.யில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங்கில் சேர்கிறார் ஆதி. அதே கல்லூரியில் படிக்க வருகிறார் ஆத்மிகா. இங்கே அவர்களது காதல் வளர்கிறது. இது ஆத்மிகாவின் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அவர் குறுக்கே வருகிறார். காதலைத் தடுக்கிறார்.
கல்லூரி படிப்பு முடியும் நேரத்திலும் காதலியை பிரிய முடியாமல் பிரிகிறார் ஆதி. தான் வாழ்க்கையில் பெரிய ஆளாக ஆகிவிட்டால் தாராளமாக காதலியை பெண் கேட்டுச் செல்ல முடியும் என்பதால் உடனடியாக தனக்கு மிகவும் பிடித்த இசைத் துறையில் பெரிய ஆளாக நினைக்கிறார் ஆதி. இதற்காக சென்னைக்கு செல்ல முடிவெடுக்கிறார்.
ஆதியின் அப்பா மகனின் ஆசைக்குக் குறுக்கே வரவில்லை. ஒரு வருடம் வாய்ப்பு தருகிறார். அந்த ஒரு வருடத்தில் சுய முயற்சியில் ஆதி முன்னேறிவிட்டால் அதற்கடுத்து அவர் வழியில் தான் தலையிட மாட்டேன். இல்லையென்றால் அவர் படித்த படிப்புக்கேற்ற வேலைக்கு போய்தான் தீர வேண்டும் என்கிறார்.
இதை ஒத்துக் கொண்டு சென்னைக்கு செல்லும் ஆதி இசையமைப்பாளர் வேலை தேடி அலைகிறார். தான் இசையமைத்து பாடிய தமிழ் பாடல்களை ஆல்பமாக வெளியிட்டு அதன் மூலமாகவும் வாய்ப்பு தேடுகிறார். கிடைக்கவில்லை. ஒரு வருட காலம் போராடி பார்த்து கோவைக்கு திரும்புகிறார் ஆதி.
அங்கே அவரது காதலியின் வீட்டில் அவருக்கு மும்முரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். இங்கே ஆதி தன் வாழ்க்கையில் தோல்வியடைந்து வீட்டில் இருக்கிறார். இனி என்ன ஆனது என்பதுதான் இந்த ‘மீசைய முறுக்கு’ படத்தின் கதை.
தோக்குறமோ, ஜெயிக்குறமோ எது நடந்தாலும் சரி.. ‘மீசைய முறுக்கணும்’ என்று விவேக் சொல்லித் தரும் தைரியம்தான் படத்தின் கதைக் கரு. இது ஒன்றுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.
முதல் படம் என்றாலும் அது தெரியாத அளவுக்குத்தான் நடித்திருக்கிறார் ஆதி. பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், இசைத்துறையில் நுழையத் துடிக்கும் வேட்கை கொண்ட வாலிபனாக மூன்று கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார்.
தனது சொந்த வாழ்க்கையையே படம் பிரதிபலித்திருப்பதால் அதற்கான நடிப்பை கஷ்டப்படாமல் கொடுத்திருக்கிறார். காதலைச் சொல்லத் தயக்கம்.. தெரு ரவுடிகளிடம் பேசுவதற்கு பயம்.. ராகிங்கின்போது ஏற்படும் சங்கடங்கள்.. தனது இசைத் திறமையை வெளிப்படுத்த முயலும்போது ஏற்படும் சிறு தயக்கத்தினால் அவமானத்தைச் சந்திப்பது என்று அனைத்துவிதத்திலும் நடிப்பில் குறையில்லாமல் நடித்திருக்கிறார் ஆதி.
எதையாவது இழந்தால்தான் பெரிய இடத்தைப் பிடிக்க முடியும் என்கிற வாழ்க்கைக் கோட்பாட்டை ஆதி உணர்ந்து கொள்வதோடு படம் முடிவடைவது மிகச் சிறந்த கிளைமாக்ஸ்.
கேரக்டர் ஸ்கெட்ச்சில் முதலிடத்தில் இருப்பவர் விவேக்தான். தமிழ் மொழியின் அருமை, பெருமைகளை ஸ்கூல் பாதிரியாரிடம் போய் உணர்த்தும் காட்சி டிராமாதான் என்றாலும் இப்போதைய நிலைமையில் தமிழ்நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பிள்ளைகளுக்கும், அப்பாக்களுக்குமான நட்பை மகனிடம் எடுத்துரைக்கும்போது அனைத்து அப்பாக்களும் விவேக்கிற்கு ஜே போடுகிறார்கள். மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்காக அப்பாக்களை புரிந்து கொள்ளும் மகன்களை, தனது வசனங்களின் மூலமாக திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் விவேக்.
ஆத்மிகா என்னும் புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். தமிழ் ஹீரோயின்களுக்கேற்ற அனாடமி இல்லையென்றாலும் நடிப்பை வைத்து கொஞ்சம் சமாளித்திருக்கிறார்.
ஆதியின் நண்பர்களாக நடித்தவர்களில் கல்லூரியில் ஹெச்.ஆராக அமர்ந்திருக்கும் நபரின் அறிமுகமும், அவருடைய அடுத்தடுத்த காட்சிகளும் சிரிப்பை வரவழைத்திருக்கிறது.
படத்தின் இறுதிக் காட்சியில் சரணமென்றால் என்ன..? பல்லவியென்றால் என்ன..? என்று அப்பாவியாய் ஆதி கேட்கும் கேள்விக்கு ஹீரோவும், இயக்குநரும் அதிர்ச்சியாகும் காட்சிதான் படத்தின் குறியீடு..!
இந்தப் படம் சொல்ல வந்த விஷயம்தான் என்ன என்பதற்கான கேள்விதான் பார்வையாளர்களுக்குள் வந்திருக்கிறது.
தொடர்ச்சியாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லி அதையும் போரடிக்கும்விதமாக திரைக்கதையில் நகர்த்தியிருப்பதும் படத்தின் தன்மையை பாதித்திருக்கிறது.
பாடல்கள் எல்லாம் ஒரே ராகம்தான். சாதாரணமாக பாடினாலே நினைவில் நிற்காது. இதில் அடுக்கு மொழியில் அடுத்தடுத்து அள்ளிவிட்டால் எப்படி வாயில் நுழையும், நினைவில் நிற்கும்..? அனைத்து பாடல்களுமே பாடல் முடிந்தவுடனேயே மறந்துவிட்டன. இது இந்தக் கால யூத்துகளுக்கான பாடல் என்று சொன்னாலும், இந்த மாதத்திற்கான பாடல்கள் என்று மட்டுமே சொல்ல முடியும்..!
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு ஏன் இத்தனை டல்லடிக்குது என்று தெரியவில்லை. கல்லூரி காட்சிகளில் ஏரியல் வியூ காட்சிகள் மட்டுமே அவருடைய திறமையைக் காட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் கேமிராவின் உழைப்பு கடுமையாக இருந்தும் அழகில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது..
இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு தனது வாழ்க்கை வரலாறு தெரிய வேண்டும் என்று நினைத்திருக்கிறார் ஆதி. ஆனால் அதனை இத்தனை சீக்கிரமாகவாக தர வேண்டும் என்று எதிர் கேள்விதான் வருகிறது. ஏதாவது சாதனை படைத்த பின்பு இதனை நிகழ்த்தியிருக்கலாம். புள்ளிகூட வைக்காத இடத்தில் கோலம் போட்ட திருப்தியை ஆதிக்கு இந்தப் படம் கொடுத்திருக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு..?!
விஜய் ஆண்டனி போல்.. ஜி.வி.பிரகாஷ்போல் இனிமேல் வரும் படங்களில் தனக்கான கதையைப் பொருத்தமாக தேர்வு செய்து நடித்தால் ஆதிக்கு வெற்றி கிட்டும்..!

0 comments: