12-12-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சிறு வயதில் இருந்தே லட்சத்தில் ஒருவருக்கு இருக்கும் விநோதமான நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர் அதர்வா. அவரது உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் கொட்டும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவரின் உயிருக்கே ஆபத்தாகும். இதை அதர்வாவின் சிறு வயதிலேயே தெரிந்துகொண்ட போலீஸ் ஏட்டுவான அவரது அப்பா ஜெயப்பிரகாஷ், அதர்வாவை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.
விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் அதர்வாவின் உடல் நலப் பிரச்சினையை ஓரளவு சரி செய்யலாம் என்று நினைத்து அவரை விளையாட்டில் ஈடுபடுத்துகிறார் ஜெயப்பிரகாஷ். கல்லூரியில் படிக்கும் அதர்வா, டிரெயினர் நரேனின் தீவிர பயிற்சியால் சிறந்த தடகள வீரராக உருவெடுக்கிறார். ஓட்டப் பந்தயத்தில் மாநில அளவில் முதல்வராக வரும் அதர்வா அடுத்து நேஷனல் லெவலுக்கு தேர்வாகுவதற்காக பயிற்சியெடுத்து வருகிறார்.
இந்த நேரத்தில் ஒரு ராங்கால் மூலமாக ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. முதலில் ஹீரோயினை மிரட்டி அவ்வப்போது தனக்கும், தனது நண்பர்களின் மொபைல்களுக்கும் டாப் அப் செய்து கொள்ளும் அதர்வா.. இன்னொரு கட்டத்தில் முகமே பார்க்காமல், யாரென்றே தெரியாமல் காதல் உணர்வில் சிக்குகிறார். ஹீரோயினும் அப்படியே..!
இதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனான திருமுருகனுக்கும் சென்னையில் புகழ் பெற்ற கள்ள நோட்டு கும்பலுக்குமிடையில் விரோதம் ஏற்படுகிறது. கள்ள நோட்டுக் கும்பலை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார் திருமுருகன். அதனால் இவர் மீது கொலை வெறியாகும் கள்ள நோட்டுக் கும்பலின் தலைவன் ஆர்.என்.ஆர்.மனோகர்.. திருமுருகனை கொலை செய்ய நேரம் பார்த்துக் காத்திருக்கிறார்.
இந்த நேரத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள சென்னைக்கு வருகிறார் அதர்வா. இப்போது திருமுருகனை கொலை செய்ய கள்ள நோட்டுக் கும்பல் முயலும்போது எதிர்பாராதவிதமாக அதர்வா இடையில் நுழைந்து திருமுருகனுக்கு உதவி செய்ய அந்த்த் திருட்டுக் கும்பலுடன் மோத வேண்டிய சூழலாகிறது அதர்வாவுக்கு.. மோதுகிறார்.
இதனால் இன்னும் கோபமாகும் அவர்கள், திருமுருகனை கொலை செய்கிறார்கள். மேலும் டிரெயினர் நரேனையும் அடித்துக் காயப்படுத்துகிறார்கள். நாளை காலை ஓட்டப் பந்தயம் என்றிருக்கும் நிலையில் அதர்வாவையும் கொலை செய்ய முயல்கிறார்கள். என்ன ஆகிறார் அதர்வா..? ஓடினாரா..? இல்லையா என்பதுதான் இந்த ஈட்டியின் திரைக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வாவுக்கு நிச்சயம் இது பெயர் சொல்லும் படம்தான். ‘பரதேசி’க்கு பின்பு கதைக்களனை உணர்ந்து அதற்காகவே தன்னை வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார்.
தடகள வீரருக்கு இருக்க வேண்டிய உடலமைப்புக்காக அதர்வா அளவுக்கு அதிகமாக உழைத்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. இவருடைய உழைப்புக்கு விமர்சனங்களால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ஸ்ரீதிவ்யாவை கலாய்ப்பதில் இருந்து நண்பர்களுடன் போங்கு காட்டுவது.. வீட்டில் அப்பாவின் குடி அட்வைஸுக்கு தள்ளாடியபடியே தலையாட்டுவது என்று சிற்சில இடங்களில் மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார். அடிதடி காட்சிகளில் ஒரு ஆக்சன் ஹீரோவுக்குரிய லட்சணம் இவருக்குக் கிடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இது போதுமா..?
நாயகியான ஸ்ரீதிவ்யா ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கொஞ்சம் அழகு.. அதிகம் நடிப்பு.. அந்த வயதுப் பெண்களுக்கே உரித்தான சின்னச் சின்ன முகபாவனைகளில் ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
அடுத்து பாராட்டைப் பெறுபவர் உடற்பயிற்சி இயக்குநர் நரேன். எப்பவும்போல அந்தக் கேரக்டருக்காகவே நேர்ந்துவிட்டதை போலவே 99 சதவிகித முழுமையான நடிப்பையும் காட்டிவிட்டார். சின்ன கேரக்டர் என்றாலும் வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் ஜெயப்பிரகாஷை மிஞ்சிவிட்டார் அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் சோனியா போஸ். பொறுப்பான அப்பாவாக ஜெயப்பிரகாஷ்.. சிரித்தபடியே எதுவாக இருந்தாலும் சமாளிக்கிறார். வில்லனான மனோகரின் கண்களே அவருக்கு மிகப் பெரிய பலம்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பின்னணி இசையைவிட சிறப்பாக இருந்தது.. ஆனாலும் வழக்கம்போல ஒரு முறை மட்டுமே கேட்கும்படியாகத்தான் இருக்கின்றன. சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு குறையொன்றுமில்லை என்று சொல்ல வைக்கிறது.
விளையாட்டை மையப்படுத்தி இதற்கு முன்பேயே பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக திரைக்கதையும் அமைத்திருக்கிறார் இயக்குநர் ரவி அரசு. இடைவேளை பிளாக் சூப்பரோ சூப்பர்.
முதற்பாதியில் நீளும் அதர்வா அவரது நண்பர்கள், ஸ்ரீதிவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். இத்தனை வருடங்களாக கள்ள நோட்டு தொழிலை செய்து வருபவர்களை இதுவரையிலும் போலீஸார் கண்டு கொள்ளாமலேயே விட்டுவைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வது..?
இதேபோல் கிளைமாக்ஸில் அந்த லேசான காயம்.. ரத்தம் சொட்டுவது.. அதர்வா ஓடுவது என்பதெல்லாம் அக்மார்க் சினிமாத்தனமான காட்சிகள். வேறு யோசித்திருக்கலாம்..! அல்லது வில்லன் கோஷ்டியை போட்டுத் தள்ளியவுடனேயே படத்தையே முடித்திருக்கலாம்.. மறுபடியும் ஒரு சண்டையை கொண்டு வந்து.. அதையும் டென்ஷனாக இழுத்து.. ‘என்னப்பா இப்படி..?’ என்றும் சொல்ல வைத்திருக்கிறார்கள்.
சினிமாட்டிக்காகத்தான் படத்தை முடிக்க வேண்டும் என்றில்லை. மிக இயல்பாக போலீஸ் டிரெஸ்ஸுடன் வீட்டுக்கு வருவதுபோல இருந்திருக்கலாம். இங்கேயும் அப்பா ஏட்டாக இருக்கும் ஸ்டேஷனிலேயே இன்ஸ்பெக்டராவது போலல்லாம் காட்டுவது இயக்குநரின் ஓவர் சிந்தனையைத்தான் காட்டுகிறது..!
ஹீரோ ஈட்டியாக பாய்வான் என்பதற்கு பொருத்தமாகத்தான் ‘ஈட்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படமும் அப்படித்தான் பாய்ந்திருக்கிறது என்று நம்புகிறோம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment